July 18, 2011

கட்ட பொம்மன் வீதியும் கறுப்பு மாருதியும்

என்னடா காசை இப்படி இறைக்கிறாய்ங்க? இதுதான் பத்தாம் வகுப்பு முடிந்ததும் ஒரு அரசு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்து, கோவையில் உள்ள ஒரு பம்ப் உற்பத்தி கம்பெனியில் சப் காண்டிராக்டர்களை மேய்க்கும் பணியில் சேர்ந்த செந்திலுக்கு அடிக்கடி மனதில் எழுந்த கேள்வி.

ஒரு சதுர கிலோமீட்டரில் அதிகப்படியான பேச்சிலர்கள் வாழும் இடம் திருவல்லிக்கேணி என்றால் அதிகப்படியான கஞ்சர்கள் வாழும் இடம் செந்தில் பிறந்த ஊர். அங்கே பிறந்து, வளர்ந்து விட்டு அப்படி கேள்வி எழாவிட்டால் தான் ஆச்சரியம்.

இங்கே ஹோட்டலே இல்லையே! ஆரம்பிச்சா அள்ளிடலாம் என கனவுகளோடு கடை வைத்த பல ராஜகோபால்களை வெறும் கோப்பால் ஆக்கிய ஊர்க்காரனுக்கு ஆரியாஸிலும் அன்னபூர்ணாவிலும் அம்மும் கூட்டம் அதிர்ச்சியளிக்காமல் என்ன செய்யும்?

வேறு வழியில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஒரே தியேட்டரிலும் டைட்டில் போடும் போதுதான் கீழ்வகுப்பு டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பார்கள். கட்டுக்கோப்பாய் காத்திருந்து அந்த டிக்கெட்டை மட்டுமே வாங்குபவனுக்கு மேல் வகுப்பு டிக்கெட் முதலில் நிறையும் ஊர் ஆச்சரியமளிக்காதா? என்ன?

திருவிழாக்காலங்களில் பிரசாதமாக கிடைக்கும் வாழைப்பழத்தை மட்டுமே பழமாகப் பார்த்த ஒருவனுக்கு, பழமுதிர்ச்சோலையில் குடிக்கப்படும் மாப்பிள்ளை ஜூசைப் பார்த்தால் மயக்கம் வராமல் என்ன செய்யும்?

காப்பிக்கலர்ல எடுடா அழுக்குத்தெரியாம இருக்கும், பெரிசா தைங்க, வளர்ற பிள்ளை போன்ற உரையாடல்களை மட்டுமே கேட்ட காதுகளுக்கு அலன் சாலியும், லூயி பிலிப்பும் செவ்வாய் கிரக மொழியாய்த்தானே தெரியும்?

உடன் பணிபுரிவோர், சப் காண்டிராக்டர்கள், தங்கும் இடத்தில் உள்ளோர் என பார்க்கும் நபர்கள் எல்லாம் தாராளவாதிகளாய்த்தான் தெரிந்தார்கள் செந்திலுக்கு எல்லோரும் பெருமைக்கு எருமை மேய்ப்பதாய் தோன்றியது அவனுக்கு.

அவனின் ஒரே ஆறுதல் புரடக்‌ஷன் யூனிட்டில் இருந்த மணிண்ணா. சுப்பிரமணி என்ற அவர் இயற்பெயர் மணிண்ணா என்றே திரிந்து விட்டிருந்தது. இரண்டு ஏக்கர் நிலம் கோவை புற நகரில். அதில் விவசாயம். இங்கே சி என் சி ஆப்பரேட்டர், வருவது போவது எல்லாம் சைக்கிளில்தான். 15 வருட அனுபவம். வாய்ப்புகள் பல கிடைத்தும் வெளியில் செல்லாமல் கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக் கொண்டிருப்பவர்.

அவரிடம் தான் தன் ஆதங்கத்தை அவன் கொட்டிக்கொள்வான். அவரும் தன் பங்கிற்க்கு ஆறுதல் படுத்துவார்.
“நீ இப்போ அடிக்கடி போவயேப்பா, கட்ட பொம்மன் தெரு, சப் காண்டிராக்டரா இருப்பாங்களே, அங்க ரெண்டு ஆர்டர் அதிகமா வந்தாப் போதும் ஒரு வெள்ளை மாருதி வாங்குவாங்க.ஆறே மாசம் தான் கடன் கட்ட முடியாம சாணிப் பவுடரை குடிச்சிட்டு கறுப்பு மாருதியில போவாங்க”
இங்க எல்லாம் ஆடம்பரம் தாம்ப்பா என்று முடிப்பார்.

இவனும் தன் பங்கிற்க்கு ஆசுவாசப் பட்டுக்கொண்டு, ஆமா தொண்ணூறு நாள் கிரடிட்ல ஆர்டர் கொடுக்கிறாங்க. ஆனா ஜவ்வா இழுத்து பேமெண்ட் செட்டில் செய்யுறாங்க. இதை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி தொழில் வேணா செய்யலாம், வண்டி வாங்கலாமா? என்று நினைத்துக் கொள்வான்.

ஒரு ஆயுத பூஜை அன்று பொரி சாப்பிட்டுக் கொண்டு ரிலாக்ஸாக அமர்ந்திருந்தார்கள் ட்ரைனிகள் எல்லோரும். அப்போது அங்கே வந்தார் பர்சேஸ் டிபார்ட்மெண்ட் திவாகர். அங்கே அவர் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ. ஆட்டைத் தூக்கி மாட்டில் போடும் தடலாடி பேர்வழி. அவர் செந்திலிடம், என்னப்பா இப்படியே இருக்கப் போறியா? என்று கேட்டார்.

செந்தில் விழித்தான். தொடர்ந்த அவர், லோன் போட்டு ஒரு டூ வீலர் வாங்கு. பார்ட் டைம் பிஇ எக்ஸாம் எழுத கோச்சிங் கிளாஸ் போ. இப்படியே இருக்காதப்பா என்றார்.

சைக்கிள் செயினுக்கு கவர் போட்டாலே கதறி விடும் வீட்டைச் சேர்ந்தவன், லோன் போட்டு டூ வீலரா என்று அதிசயித்தான். அவன் முகக்குறிப்பை வைத்து எண்ணத்தை கணித்த திவாகர் தொடர்ந்தார்.

இந்த மாருதி இருக்கு பாரு, ஆள் போகுறதுக்காக தயாரானது. இப்போ ஸ்கூல் பிள்ளைங்களை கூப்பிட, லாட்டரி விக்க, விளம்பரம் பண்ண, ஆம்புலன்ஸ் ஏன் மார்ச்சுவரி வண்டியாக்கூட உருவம் எடுத்து களத்துலயே இருக்கு. மாறிக்கிட்டே இருக்கணும். மேல எப்படிப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கணும். இப்படியே இருக்காதய்யா என்று அறிவுறுத்தினார்.

செந்திலால் அப்படியே இருக்கவும் முடியவில்லை, துணிந்து இறங்கவும் முடியவில்லை. கோவையுடனும் அவனால் ஒட்ட முடியவில்லை. 98 குண்டு வெடிப்புக்கான மந்த நிலைக்குப் பின் சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டான்.

இப்போது ஏ டி எம் களில் ஐந்து ட்ரான்சாக்‌ஷன்களுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதி வந்திருக்கிறதே. அதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்?. செந்திலின் ஊர்க்காரர்கள் தான். அட்டையை நுழைப்பார்கள். பேலன்ஸ் பார்ப்பார்கள். நோட்டில் குறித்து வைத்திருக்கும் அமவுண்ட் உடன் சரி பார்ப்பார்கள். பின்னர் ஒரு நூறு ரூபாய் எடுப்பார்கள். அதன்பின்னர் ஒரு முறை பேலன்ஸ் சரி பார்ப்பார்கள். இதனால் ரேஷன் கடை மண்ணெண்ணெய் க்யூ போல எப்போதும் ஏ டி எம் நிரம்பி வழியும். ட்ரான்சாக்‌ஷனை மட்டும் கணக்கில் எடுத்து அடிசனல் ஏ டி எம்மை நிறுவி பேங்க்காரர்கள் மூக்கறு பட்டுக்கொண்டார்கள். இது அவர்கள் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டே மேற்கூரிய விதி அமலுக்கு வந்தது.

இப்போது சென்னையில் செந்தில் ஓரளவுக்கு காலூன்றி விட்டான். அலுவலக விஷயமாக நீண்ட இடைவேளைக்குப் பின் கோவை வந்தான். ஓய்வு நேரம் கிடைக்க, தன் முந்தைய பம்ப் கம்பெனிக்கு ஒரு விசிட் அடித்தான். பெரும்பாலும் புதிய முகங்கள். திவாகர் இப்போது தனியாக ஒரு இண்ட்ஸ்ட்ரி வைத்து பெரிய ஆளாகி விட்டதாக கேள்விப்பட்டான்.

ஆனால் அவன் தேடி வந்த்து மணிண்ணாவைப் பற்றி கேட்கத்தான். அக்கவுண்ட்ஸில் இருந்த பழைய ஆள் ஒருவரை பிடித்து விசாரித்தான்.
“அவருக்கென்னப்பா! சாதாரணமாத்தான் இருந்தாரு. திடீர்னு ரியல் எஸ்டேட்டெல்லாம் எகிறுச்சுல்ல, அப்ப அவர் பூமியும் தங்கமாயிடுச்சு. ரெண்டு ஏக்கரும் கிட்டத்தட்ட நாப்பது, அம்பது கோடிகிட்ட போச்சுன்னு பேசிக்கிட்டாங்க. இப்போ ரொம்ப நல்லா இருக்கார்”
என்று பதில் வந்தது.

நீங்கள் ஆம்னி பஸ்ஸிலோ, ரயிலில் இரண்டாம் வகுப்பிலோ பயணம் செய்யும் போது “ஒண்ணு அப்படியே இருங்க, இல்லையின்னா கண்ண மூடிக்கிட்டு எதிலயாச்சும் முழுசா இறங்குங்க, இடையில நிக்காதீங்க” என்பது போன்ற தத்துவ முத்துக்களை கேட்க நேர்ந்தால் சொல்பவர் பெயர் செந்திலாகவும் இருக்கக்கூடும்.

10 comments:

Indian said...

புனைவாகவும் இருக்க வாய்ப்பு உண்டு :)

Indian said...

//இப்போது ஏ டி எம் களில் ஐந்து ட்ரான்சாக்‌ஷன்களுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதி வந்திருக்கிறதே. அதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள்?. செந்திலின் ஊர்க்காரர்கள் தான். அட்டையை நுழைப்பார்கள். பேலன்ஸ் பார்ப்பார்கள். நோட்டில் குறித்து வைத்திருக்கும் அமவுண்ட் உடன் சரி பார்ப்பார்கள். பின்னர் ஒரு நூறு ரூபாய் எடுப்பார்கள். அதன்பின்னர் ஒரு முறை பேலன்ஸ் சரி பார்ப்பார்கள். இதனால் ரேஷன் கடை மண்ணெண்ணெய் க்யூ போல எப்போதும் ஏ டி எம் நிரம்பி வழியும். ட்ரான்சாக்‌ஷனை மட்டும் கணக்கில் எடுத்து அடிசனல் ஏ டி எம்மை நிறுவி பேங்க்காரர்கள் மூக்கறு பட்டுக்கொண்டார்கள். இது அவர்கள் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டே மேற்கூரிய விதி அமலுக்கு வந்தது.//

மெய்யாலுமா?

Balakumar Vijayaraman said...

நல்லா இருக்குண்ணே ! :)

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி இந்தியன்

புனைவு என்ற லேபிள் இருக்கே. எப்படி மெய்யாலுமா? வரும்.

நன்றி பாலகுமார்

Balakumar Vijayaraman said...

//புனைவு என்ற லேபிள் இருக்கே. எப்படி மெய்யாலுமா? வரும்.//

அப்போ, மெய்யாலுமாவே இது புனைவா தான் இருக்கும். :)

மணிஜி said...

நல்லாயிருக்குமுரளி...ரசிக்க வைக்கும் நடை...

முரளிகண்ணன் said...

நன்றி மணிஜி

King Viswa said...

நம்ம ஏரியாவில் நெறைய செந்தில் இருக்காங்க தல.

முரளிகண்ணன் said...

வாங்க விஸ்வா

Shaik,SIT said...

your story is nature and super sir. It shows commom man life