மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஜாதிக் கட்சித் தலைவர்கள் என்றாலே அது முக்குலத்தோர் அல்லது தலித்களை முன்னிறுத்தியே இருக்கும். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும் சுவர்கள் மற்றும் பிளக்ஸ் மூலம் முக்குலத்தோரில் யார் லைம் லைட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். சேதுராமன் (மீனாட்சி மிஷன்), சேதுராமத் தேவர், வாண்டையார், முருகன்ஜி, பி டி அரச குமார் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள். தலித்களில் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், சாத்தை பாக்யராஜ், கிருஷ்ணசாமி, முருக வேல் ராஜன், திருமா வளவன் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள்.
ஆனால் பொதுவாக மற்ற சமுதாயங்களில் இருந்து குறிப்பிட்ட நபரை முன்னிறுத்தி ஆராதிப்பது குறைவாகவே இருக்கும். கரிக்கோல் ராஜ், சவுந்திர பாண்டியன், பாபு நாயுடு என பெயர்கள் அடிபடுமே தவிர தொடர் பிரச்சாரம் குறைவாகவே இருக்கும்.
ஆனால் இப்போது இருவர் அடிக்கடி போஸ்டர்களிலும், பேனர்களிலும் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தனியரசு (கொங்கு வேளாள இளைஞர் பேரவை, மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்), மற்றொருவர் பெரிஸ் மகேந்திரவேல் (நாடார் மஹாஜன சங்கம்).
மதுரை மாவட்டத்தில் இதுவரை கொங்கு வேளாளர்கள் மிக ஆக்டிவ்வாக அரசியலில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை. இப்போது தனியரசின் மூலம் ஒருங்கிணைக்கப் படுகிறார்கள். “எங்களின் தனி அரசே” போன்ற பஞ்ச் வசனங்களுடன் திருமணங்களுக்கும், கோயில் விழாக்களுக்கும் பிளக்ஸ், போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன. அவர் மாநிலம் தழுவிய அரசியல் சக்தியாக மாற நினைக்கிறாரோ என்னவோ?
மற்றொருவரான பெரிஸ் மகேந்திரவேல், தொழிலதிபர். உசிலம்பட்டியில் இருக்கும் பெரிஸ் பிஸ்கட் தொழிற்சாலை இவருடைய குடும்பத்தைச் சார்ந்த்துதான். முதன் முதலில் மடிட்சியாவின் (மதுரை மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு) உசிலை வட்டார இணைச் செயலாளராக இருந்தார். மெதுவாக வளர்ச்சி பெற்று அதில் முக்கியப் பொறுப்புக்கு வந்தார். பின்னர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகக்குழு பொறுப்பு, பின்னர் செயலாளர் என அதிலும் முக்கியப் பொறுப்பு. எனவே ஓரளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புள்ள பதவிகளில் இவர் இருக்கிறார்.
தற்போது இவரை வாழ்த்தியும் மதுரையில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அரசியல் ஆசை இவருக்கும் துளிர் விடுவதையே இது காட்டுகிறது.
எதிர்காலத்தில் இவர்கள் நல்ல முறையில் சமுதாயப் பணி ஆற்ற வாழ்த்துக்கள்
7 comments:
எல்லாஞ்சரி!
கடைசி வரியை எழுதும்ப்போது உங்களுக்கே சிரிப்பு வரலையாண்ணே..?
:-)
நம்பிக்கையே வாழ்க்கை ராஜு
//எதிர்காலத்தில் இவர்கள் நல்ல முறையில் சமுதாயப் பணி ஆற்ற வாழ்த்துக்கள்//
நானும் இதை நம்புகிறேன் :))
இதையெல்லாம் எழுதி நீங்களும் சமுதாயப்பணியை தொடங்கிட்டீங்கள்ள...
Me the 151.
ஆத்துவாங்க ஆத்துவாங்க!
மற்ற ஜாதி தலைவர்களை குறிப்பிடும் பொது, அவர் சார்ந்த ஜாதியை குறிப்பிடும் போது, தேவேந்திர குல வேளாளர்களை மட்டும் தலித் என குறிப்பிடுவது நல்லவர்க்கு அழகல்ல.
Post a Comment