91ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட சுற்றுப்பயனம் கிளம்பிய போது, நிச்சயம் வெல்வோம் என்று அசார் நம்பியிருப்பாரோ இல்லையோ நான் நம்பினேன். மஞ்ச்ரேக்கர், டெண்டுல்கர் ஆகியோரின் மீது அப்படியொரு அபார நம்பிக்கை. ஆனால் ஆஸி அணியினர், சிட்னியைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நம்மை சட்னியாக்கினார்கள். பிரிவுத்துயர் எங்களை வாட்டுகிறது என அசாருதீன் காலம் எழுதும் அளவுக்கு கும்மாங்குத்து குத்தினார்கள்.
பின்னர் சச்சின் தலைமையில் அணி செல்லும் போது அவர்களே ஐந்து நிச்சயம், நான்கு லட்சியம் என்று தான் கிளம்பினார்கள். பின்னர் கங்குலி தலைமையில் செல்லும் போது சச்சின்,ட்ராவிட், லட்சுமண் மற்றும் சேவாக்கின் பேட்டிங்கால் தொடர் வெற்றிக்கு அருகில் சென்றோம். ஆனால் ஸ்டீவ் வாக்கின் கடைசிப் போட்டி, ஓய்வு என்று செண்டிமெண்ட் அலை அதை நமக்கு மறுதலித்தது.
கும்பிளேவின் தலைமையில் செல்லும் போது முந்தைய அனுபவங்களால் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கோட்டையான பெர்த்தில் வெற்றி பெற்ற போது எனக்குக் கிடைத்த மகிழ்சிக்கு அளவேயில்லை. 20-20 கோப்பையை அணி வென்ற போது கூட அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்ததில்லை.
தற்போது மீண்டும் நாம் அங்கே. இப்போது அணியின் மீது காரண காரியத்தோடு நம்பிக்கை வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள். அதில் முக்கிய காரணம் துவக்க ஆட்டக்காரர்கள்.
எந்த அணி உலக டெஸ்ட் அரங்கில் கோலோச்சும் போதும் அந்த அணியில் வலுவான துவக்க ஆட்டக்காரர்கள் இருப்பார்கள், இருக்க வேண்டும். துவக்க ஆட்டக்காரர்கள் உள்ளே நுழையும் போது பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். பந்தும் வித்தை காட்ட தயாராக இருக்கும். முதலில் பேட் செய்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவித்திருந்தால் இன்னும் கடினம். பீல்ட் செய்த களைப்போடு உள்ளே வரவேண்டும். எதிர் அணியோ குதூகல மனநிலையில் உள்ளே வருவார்கள். தம் அணியினருக்கும் போதிய ஓய்வு கொடுக்க வேண்டும், எதிர் அணியினரையும் களைப்படைய வைக்க வேண்டும் என துவக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பு அதிகம்.
மேற்கிந்திய தீவு அணியினருக்கு கிரினீட்ஜும், ஹெய்ன்ஸும் இருந்த வரையில் சரிவு ஆரம்பிக்கவில்லை. கிரினீட்ஜுக்குப் பின் பில் சிம்மன்ஸ் உள்ளே வந்தபோதுதான் செங்கல் உருவப்பட்டது. ஏன் நம் அணியினரே சேவாக் காம்பிர் இணை அபாரமாக ஆடிய பின்னர்தானே நம்பர் 1 நிலையை அடைந்தார்கள்.
86ல் இருந்தே ஆஸி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் விஷயத்தில் யோகம்தான். டேவிட் பூன் – ஜெஃப் மார்ஸ், மார்க் டெய்லர்-மைக்கேல் ஸ்லாடர், மேத்யூ ஹைடென் – ஜஸ்டின் லாங்கர் என எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடுபவர்கள் வாய்த்தார்கள். இவர்களால் தான் ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் மஞ்சள் குளித்து வந்தார்கள்.
தற்போதைய ஆஸி அணி சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. ஷேன் வாட்சன் அவ்வளவு சிறப்பான டெக்னிக் கொண்டவரல்ல மேலும் காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார். பிலிப் ஹுயுஸ், நியூஸிக்கு எதிரே ஆடிய ஆட்டத்தைப் பார்த்த பின்னர் அவர் உள்ளே வர வாய்ப்பே இல்லை எனத் தோன்றுகிறது. வார்னர் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். ஆள் கிடைக்காத காரணத்தால் சிமன் கடிச்சைப் பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். நல்ல துவக்க ஜோடி அமையவில்லையென்றால் ஆஸி அணியின் பேட்டிங் ஆர்டரை நம்மாட்கள் கலகலக்க வைத்து விடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. (ஜாகிர், இஷாந்த புல் பிட்னஸ்ஸில் இருந்தால்).
நமது துவக்க ஜோடி தற்போது சரியான பார்மில் உள்ளது. சேவக்கை வீழ்த்த மைக் ஆர்தர் பல வியூகங்கள் அமைக்கிறாராம். அவருக்கு தெரியாது சேவாக்குக்கு வியூகங்கள் தேவை இல்லை என்பது. உலக பேட்ஸ்மென்களிலேயே எளிதாக அவுட்டாக்க முடிபவரும் அவர்தான், எளிதாய் அடக்க முடியாதவரும் அவர்தான் என்பது. மூன்றாவது முச்சதம் ஆஸி மண்ணில்தான் என்று முடிவாகிவிட்டது. (ரொம்பத்தான் ஆசைப்படுறமோ?) . கவுதமும் கைகொடுத்தால் இம்முறை ஜெயம் நமக்கே.
5 comments:
நட்சத்திர வாழ்த்துகள்...
சச்சினை பத்தி ரெண்டு வரி சொல்லியிருக்கலாம்
வாங்க டாக்டர் சார். பழைய கிரிக்கெட் கதை செம கரக்டு. எல்லாம் மறந்து போச்சு. நீங்கள் சொன்னதும் நியாபகம் வருது
நட்சத்திர வாழ்த்துகள் (இது சொல்லாட்டா தப்பாம்)
"சேவக்கை வீழ்த்த மைக் ஆர்தர் பல வியூகங்கள் அமைக்கிறாராம். அவருக்கு தெரியாது சேவாக்குக்கு வியூகங்கள் தேவை இல்லை என்பது. உலக பேட்ஸ்மென்களிலேயே எளிதாக அவுட்டாக்க முடிபவரும் அவர்தான், எளிதாய் அடக்க முடியாதவரும் அவர்தான் என்பது. "
உண்மை தான்
நன்றி வித்யா
நன்றி மின்னல்.
நன்றி மோகன்குமார்
நன்றி ஹாஜா ஷெரிப்
Post a Comment