December 24, 2011

திருமங்கலமும் முல்லை பெரியாறும்

மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு மாங்கல்யம் செய்த ஊர் அதனால் திருமாங்கல்ய ஊர் என வழங்கப்பட்டு திருமங்கலம் எனத் திரிந்ததாக ஒரு கதை இந்தப் பக்கம் உண்டு. இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் பன்னிக்குண்டு. ஆதி காலத்தில் பன்னீர் மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் பன்னீர் குண்டு எனப் பெயர் பெற்று இப்போது பன்னிக்குண்டாக மாறிவிட்டது என்ற செய்தியால் திருமாங்கல்ய கதையையும் நம்பத் தொடங்கி இருந்தேன்.

அந்த பன்னிக்குண்டின் இளைய தலைமுறை தங்கள் ஊர் பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஆதி பெயரான பன்னீர்குண்டையே நிறுவிவிட வேண்டும் என பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். ஊரில் உள்ள சைக்கிள், பைக், கார், ட்ராக்டர் முதல் கொண்டு மாட்டு வண்டி வரை உரிமையாளர் பெயரை சிறிதாக எழுதி பன்னீர் குண்டு என்பதை முரட்டாக எழுதி வருகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு.

திருமாங்கல்யத்துக்கு சாட்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆவணம் கிடைத்தது. அப்போது பெய்த பெரு மழையால் மக்கள் ஆக்ரமித்த பகுதிகளில் பெரு வாரியாக தண்ணீர் தேங்கி, அரசின் கவனத்துக்கு வந்தது. ஆக்ரமிப்பை அகற்ற சகல துறையினரும் சேர்ந்து வந்த போது மக்கள் தங்களுக்குரிய ஆவணங்களை கொண்டு அதை தடுக்க முயன்றனர். அதில் ஒருவர் கொண்டு வந்த செப்பு பட்டயத்தை பார்த்து அனைவரும் மூர்ச்சை ஆனார்கள். அதில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானைகளை குளிப்பாட்ட ஏற்பாடு செய்யப்பட்ட வாய்க்காலே இப்போது ஆக்ரமிக்கப்பட்ட ஓடை என்னும் செய்தி இருந்தது. எங்கள் முன்னோர்கள் தான் யானையை குளிப்பாட்டினார்கள், அதனால் இதை ஒட்டி தங்கிக் கொள்ள எங்களுக்கு திருமலை நாயக்கர் அனுமதி கொடுத்தார் என்று வாதிட்டார் அந்த பட்டய உரிமையாளர்.
ஆனால் இன்றைய திருமங்கலம் நடுத்தர வர்க்கத்தின் அப்பட்டமான பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு சிறு நகரம். சென்ற தலைமுறையினர் பெரும்பாலும் ஈடுபட்டது ஆசிரியர் பணி. இடம் வாங்கி வீடு கட்டி, மகனை சாப்ட் வேரில் தள்ளிவிட்டு சீரியல் பார்த்து பொழுதைக் கழிக்கும் சராசரிகள் நிறைந்த ஊர். பொறியியலுக்கு இணையாக பி எட், டீச்சர் ட்ரைனிங் படிக்கும் ஊர் இது. தற்போது அம்மா டீச்சர் எலிஜிபிலிடி டெஸ்ட் என்று அறிவித்த உடனேயே பல ட்ரைனிங் செண்டர்கள் ஆரம்பிக்கப் பட்டு விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


30,000 ஓட்டுக்கள் உள்ள இந்த ஊரில் சராசரி மாத வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் குடும்பங்கள் மட்டும் 5000க்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு டிசைனர் ஷோ ரூமோ, நல்ல திரையரங்குகளோ இல்லாத ஊர் என்பதில் இருந்தே எந்தளவுக்கு சிக்கனமானவர்கள் இங்கு இருப்பார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த இடைத்தேர்தல் ஒரு துன்பியல் சம்பவம்.

மக்கள் இங்கே அடிதடி அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. ஒரு உதாரணம். சென்ற திமுக ஆட்சியில், கருணாநிதி குடும்பத்தை கிழி கிழி யென்று அதிமுக பேச்சாளர் கிழித்தார். அதனால் அப்போதைய நகரச் செயலாளருக்கு சம்மன் அனுப்பிய அழகிரி, ”ஏன் அவன் பேச ஆரம்பிக்கும் போதே அடிச்சு நிப்பாட்டலை?” என்று கேட்டார். பதில் அளித்த நகரம், அண்ணே இந்த ஊர்ல அடிதடி பண்ணுனா ஓட்டே போட மாட்டங்கண்ணே என்று பதில் அளித்தார். கோபப்பட்ட அழகிரி, அவரை மாற்றிவிடுமாறு தலைமைக்கு ஓலை அனுப்பினார்.

அடுத்து வந்தவரும் சரி. அதே போல் சம்பவங்கள் நடந்தபோது அமைதி காக்கவே முடிந்தது.

இரண்டு ஆண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளினால் இந்த ஊர் யார் குடியையும் கெடுக்காத சுயநல ஆசாமிகள் கொண்ட ஊர் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.

ஆனால் முல்லை பெரியாறு என் மனதை மாற்றிவிட்டது. பல சங்கங்கள் தாங்களாகவே முன் வந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக ஒரு ராணுவ ஒழுங்குடன் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த சங்கம் போராடுகிறதோ அவர்கள் 100% ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள். பொது மக்களின் ஆதரவும் அமோகம்.

பெருமையாக இருக்கிறது இங்கே இருக்க.

6 comments:

♠ ராஜு ♠ said...

மத்தவங்களுக்கு எப்பிடின்னு தெரியல..ஆனா, எனக்கு படிக்கும்போது புல்லரிக்குதுண்ணே..!

வாழ்க நீர் எம்மான்.
:-)

முரளிகண்ணன் said...

Raju :-)))

N.H.பிரசாத் said...

அருமையான பதிவு. உங்கள் ஊரை பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்களே? பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

முரளிகண்ணன் said...

Thanks Prasad

Rajesh V Ravanappan said...

திருமங்கலத்துக்கு பக்கத்தில் - T புதுப்பட்டி அருகே S கோபாலபுரம் என் சொந்த ஊர். நம்ம ஊரின் பெருமையை பற்றி சொன்னதில் ஆனந்தம். இதில் T stands for திருமங்கலம். (திருமங்கலம் புதுப்பட்டி)
அடுத்த மாதம் பொங்கல், அப்படியே நம்ம ஊர் பக்கம் எவ்வளவு விசேஷமாய் பொங்கலையும், மாட்டுப் பொங்கலையும் கொண்டாடுவார்கள் என்று எழுதினால் மிக பொருத்தமாக இருக்கும். ( சன் TV ஜன 19 2011 - நிஜம் நிகழ்ச்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக இடம் பெற்ற பெருமை எங்கள் ஊர் கோபாலபுரத்துக்கு உண்டு )

முரளிகண்ணன் said...

Thanks Rajesh