அது என்னவோ தெரியவில்லை எனக்கு ஒரு வியாதி. நாங்கல்லாம் அப்பவே அப்படி என்று
ஸ்டேட்மெண்ட் கொடுப்பதில் ஒரு அல்ப சந்தோஷம். சும்மாவா, கல் தோன்றி மண் தோன்றா
முன் தோன்றிய மூத்தகுடியில் பிறந்துவிட்டு இந்த பகட்டு கூட இல்லாவிட்டால் எப்படி?
இப்போது கூட பெசண்ட் நகர் பக்கம் போகும் போதெல்லாம் உடன் வருபவர்களிடம், நாங்க
இங்க 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்தப்ப எல்லாம் இந்த ஏரியா எப்படி இருக்கும்
தெரியுமா என்று சிலாகிப்பது உண்டு.
நோ நோ நீங்க உடனே அங்க நாங்க வீடு கட்டி குடியிருந்தோம் அப்படின்னு எல்லாம்
கற்பனை பண்ணிடாதீங்க. அவ்ளோ ஒர்த் எல்லாம் நான் இல்லை. 92ல் வேலை தேடி சென்னை வந்த
போது உறவினர் ஒருவரின் தயவால் பேச்சிலர்களாக ஒன்று சேர்ந்து தங்கியிருந்த ஒரு
வீட்டில் அடைக்கலமானேன்.
அப்போது பெசண்ட் நகருக்குள் நுழைந்தால் ஏதோ டெல்லி செக்கரட்ரியேட்
குவாட்டர்ஸில் நுழைந்தது போல் இருக்கும். 33 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழர்களும்
அப்போது அங்கே வாழ்ந்து வந்தார்கள். யு டி ஐ குவாட்டர்ஸ், நேவி குவாட்டர்ஸ்
மற்றும் ஹெச் ஐ ஜி வகை குடியிருப்புகள் என அனைத்து சமையல் கட்டுகளிலும்
சப்பாத்தியே சுடப்பட்டது.
அரிதாக தென்படும் ஆப்டெக், என் ஐ ஐ டி வகையறா போஸ்டர்களும், விடாது
இம்சிக்கும் ஷிகான் உசைனியின் போஸ்டர்களுமே இது தமிழ்நாடு என்பதை ஞாபகப்படுத்தும்.
சாலையோரங்களில் அடிக்கடி தென்படும் கலாசேத்ரா பிகர்களை நான் பார்த்ததேயில்லை என
என் மனைவிக்குப் பயந்து இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
ஒரு ஹெச் ஐ ஜி டைப் சொந்த வீட்டில் இருந்தவர் டெல்லிக்கு மாற்றலாகிச்
சென்றதால் அதைத் தன்னுடன் பணிபுரிந்த பேச்சிலர்க்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
அவர் இன்னும் தன் நாலு நண்பர்களுடன் அதில் குடியிருந்தார். ஒருவர் கேஸ் கனெக்ஷன்
வாங்கினார். இன்னொருவர் பாத்திர பண்டங்கள் வாங்கிப்போட்டார். பின் அந்த கூட்டணியில்
ஒவ்வொருவராக திருமணமாகிச் செல்வதும் அதற்குப் பதிலாக தன் பங்குக்கு ஒருவரை அங்கே
நுழைப்பதும் தொடர்ந்து வந்தது.
நான் அங்கு சென்றது 3ஜியாக. அப்போது அங்கே சீனியராக இருந்தவர் கமலேஷ். டிப்ளமோ
படித்துவிட்டு கம்ப்யூட்டர் சர்வீஸ் எஞ்சினியராக பணியாற்றிவர். அப்போது அவர்க்கு
இருந்த டிமாண்ட் இப்போது ராஜமவுலிக்கு கூட இல்லை. கம்ப்யூட்டர் வைத்திருந்தவர்கள்
அதைக் கழட்டிப் பார்க்க வெகுவாக தயங்கிய காலம். அதனால் எதுவானாலும் சர்வீஸ்
இஞ்சினியர்தான் பார்க்க வேண்டும். ஏ எம் சி எடுத்தவர்கள் பணத்தில் கொழித்த நேரமானதால்
சர்வீஸ் இஞ்சினியருக்கு பைக், இன்செண்டிவ்
என அள்ளி விடுவார்கள்.
அந்த வீட்டின் மற்ற உறுப்பினர்களின் பொருளாதாரம் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.
எனவே அவர் வைத்ததே அங்கு சட்டமாக இருந்தது. சர்வாதிகாரி இல்லை என்றாலும் தன்
முடிவுகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார். வாடகை டிடியை
டெல்லிக்கு அனுப்புவது, பலசரக்கு சாமான்களை வாங்கிப்போடுவது, வீட்டு பணி செய்ய
அமர்த்தப் பட்டிருந்த பெண்மணிக்கு முதல் தேதி சம்பளம் கொடுப்பது என அனைத்தும் அவர்
பொறுப்பு என்பதால் எங்களால் மூச்சு விட முடிந்தது. பத்து தேதிக்குள் அனைத்தையும்
செட்டில் செய்வோம்.
அவருக்கு கம்பெனி கொடுத்த டிவிஎஸ் மேக்ஸ் 100 ஆர் புளூ கலரை அவர் தன்னை விட
அதிகமாக நேசித்தார். காலை ஆறு மணிக்கு எழுந்து அரைமணி நேரம் துடைப்பார். பின்னர்
அவர் வைத்திருந்த நேஷனல் போனோசேனிக்கில் பாடல்களைப் போட்டு எங்களை எழுப்புவார்.
பின்னர் அவர் போகும் ஏரியாவில் யார் வேலை செய்கிறார்களோ அவர்களை ஏற்றிக் கொள்வார்.
வேலை இல்லாதவர்களுக்கு ரெஸ்யூம் டைப் பண்ணி பிரிண்ட் எடுத்துக் கொடுப்பதும் அவரே.
இதுதான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வீடு, இது விஸ்வநாதன் ஆனந்த் வீடு, அப்புறம்
மீரால நடிச்சானே விக்ரம் அவன் இந்த கட்தான் என்று பைக்கில் போகும் போதே கைடாக மாறி
விடுவார். அப்போது அங்கு இருந்த இரண்டே இரண்டு சூப்பர் மார்க்கட்களான
மகராஜாவிலும். காமதேனுவிலும் கூட அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. ஞாயிறு
நாங்கள் சத்யத்தில் பர்க்கப் போகும் படமும் அவர் சாய்ஸே. ஒரு நூறு ரூபாய் நோட்டை
அசால்டாக கவுண்டரில் நீட்டி ஸ்டைலாக பைவ் டிக்கட்ஸ் என்பார்.
ஆறு மாதம் அலைந்து வேலை கிடைக்காத விரக்தியில் நான் இருந்தபோது என்னை
தேற்றியவர் அவர்தான். அருகேயிருந்த
அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்துச் சென்று ஒரு கதை சொன்னார்.
ஒரு ராஜா நல்லாட்சி நடத்தாமல் இருந்ததால் அங்கிருந்த அஷ்டலட்சுமிகளும் கோபம்
கொண்டார்களாம். தினமும் ஒருவராக அந்நாட்டை விட்டு வெளியேறினார்களாம். கடைசியாக தைரியலட்சுமி
வெளியேறும் போது அவர் குறுக்கே விழுந்து தடுத்தாராம். நீ ஒருத்தி மட்டும் இருந்தால்
போதும். மற்றவர்கள் எல்லாம் தன்னால் வருவார்கள் என்று சொன்னாராம். அதன்படியே பின்
எல்லா லட்சுமிகளும் நாட்டுக்குள் திரும்பி வந்து விட்டார்களாம். எனவே தைரியமாய்
இரு என்றார்.
அதன்பின் எனக்கு வேலை கிடைத்தது. மெட்ரோ பிரியாவும் சூப்பர் ஹிட் முகாப்லாவும்
எங்கள் மாலை நேரத்தை ஆக்ரமித்துக் கொண்டன. இரவு உணவுக்குப்பின் எலியட்ஸ் பீச்சில்
அரட்டை என சந்தோசமாக கழிந்தன நாட்கள்.
இந்தச் சூழ்நிலையில் தான் ராஜேஷ் எங்கள் வீட்டுக்கு 4ஜியாக வந்தான். வந்த
அன்றைக்கே நீங்க டிப்ளமாதானா என்று கமலேஷை சிறுமைப்படுத்தி விட்டான். கமலேஷ் சில
விஷயங்களில் பொசசிவ்வாக இருப்பார். அவருடைய தட்டு, டம்ளர், டேப் ரிக்கார்டர் என
எதையும் மற்றவர்கள் உபயோகப் படுத்துவதை விரும்பமாட்டார். படுக்கும் இடம் கூட அவர்
இல்லாவிட்டால் காலியாக இருக்க வேண்டுமே தவிர அங்கு யாரும் படுத்ததாக
கேள்விப்பட்டால் கூட கோபம் கொள்வார்.
ராஜேஷ் கலகக்காரன். இதை எல்லாம் மீறுவதுதான் அவனின் வேலையாக ஆகிப் போனது.
பின்னர் அவன் யமஹா ஒன்றை ஊரிலிருந்து இறக்கினான். ஒரு மியூசிக் சிஸ்டம், கலர் டிவி
என அது தொடர்ந்தது. மற்ற இருவரும் ராஜேஷ் அணிக்கு தாவி விட்டார்கள்.
இப்போது கமலேஷின் கை தாழத் தொடங்கியது. அவரது மேனேஜராக வந்தவருக்கும்
அவருக்கும் செட்டாகவில்லை. வேலையை ரிசைன் செய்தார். அவருக்கு கொடுத்திருந்த பைக்கை
மேனேஜர் உடனே விற்று விட்டார். அதைத்தான் கமலேஷால் தாங்க முடியவில்லை.
புதுப்பேட்டை முழுவதும் அலைந்து அதே பைக்கை கூடுதல் விலை கொடுத்து வாங்கினார்.
ராஜேஷுக்கு இந்த விஷயம் அல்வா சாப்பிட்டது போல் ஆனது. ஜாடை மாடையாக இதை
கிண்டல் அடிக்க ஆரம்பித்தான். கமலேஷுக்கு உடனே வேறு வேலை கிடைத்தாலும் முன்
கிடைத்த சம்பளம் கிடைக்கவில்லை.
துன்பம் வந்தால் தொடர்ந்து வந்து கொண்டுதானே இருக்கும். கமலேஷ்க்கு கல்யாண
வயது தாண்ட துவங்கி இருந்தது. அவர்கள் ஜாதியில் அப்போது அரசாங்க
மாப்பிள்ளைகளுக்குத்தான் மதிப்பு இருந்தது. அதிலும் மனரீதியாக பாதிக்கப்பட்டார்.
ஒருவழியாக பெண் கிடைத்ததும் வேறு வீடு பார்க்கத் தொடங்கினார்.
அந்த நேரத்தில் ராஜேஷ் செய்திருந்த குளறுபடிகளால் வீட்டில் சமையல் செய்வது
நின்றிருந்தது. எனவே கமலேஷ் தனக்கு அந்த ஸ்டவ் மற்றும் சிலிண்டரைக் கேட்டார்.
ராஜேஷ் ஒரே அடியாக மறுத்துவிட்டான். மற்ற
இருவரும் ராஜேஷ் பக்கம். அவனது தாராள அணுகுமுறை அவர்களை கவர்ந்திருந்தது. அதனால்
என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பொசசிவ்னெஸ் இருக்கலாம். அதுக்காக இவ்வளவா?
என்றார்கள்.
அவர் பைக் நிறுத்தும் இடத்தில் ராஜேஷின் பைக் நின்றதற்கு ஒருமுறை அவர்
சண்டையிட்டதை அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.
கனத்த மனத்துடன் என்னிடம் இருந்து விடைபெற்றார் கமலேஷ். திருமணத்துக்கு கூட என்னால்
போகமுடியவில்லை. பின் நானும் அங்கிருந்து சில மாதங்களில் கழன்று கொண்டேன். பின்னர்
அந்த வீட்டுடன் தொடர்பு அறுந்து போனது.
அது நடந்து ஏழெட்டு ஆண்டுகள் கழித்து நான் ஆர் பி ஜி கனெக்ஷனில் சோனி
எரிக்சன் போன் வாங்கியிருந்த நேரம் (பார்த்தீங்களா பீத்தாம எழுதவே முடியலை). புது
நம்பரில் இருந்து அழைப்பு. கமலேஷ்தான். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் அடுத்த
ஞாயிறன்று அவர் பையனின் பிறந்த நாள் பார்ட்டி இருப்பதாகவும், பழைய நண்பர்கள்
அனைவரையும் தேடிப்பிடித்து அழைப்பதாகவும் கூறினார். தற்போது அவரே ஒரு கம்பெனியை
நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரியப்படுத்தினார்.
அந்த ஞாயிறும் வந்தது. பெசண்ட் நகரில்தான் குடியிருந்தார். அவர் மனைவியின்
அலுவலக நண்பர்களும் பெருமளவு வந்திருந்தார்கள். கமலேஷ் மனைவியிடம் அவரது நண்பர்கள் உரிமை எடுத்து சகஜமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். கமலேஷும் மற்றவர்களை உபசரித்துக் கொண்டே அவ்வப்போது அந்த ஜமாவிலும் இயல்பாக கலந்து கொண்டார். எனக்கு அவரின் பொசசிவ் நேச்சர் ஞாபகத்துக்கு வந்து போனது.
சிறப்பு உணவு முடிந்த பின் பழைய நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்று விட்டு
வருவதாக கமலேஷிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். திடீரென ராஜேஷ் ஞாபகம்
வந்தது. உடன் வந்தவர்களிடம் அவன் எப்படி இருக்கான்? என வினவினேன்.
அத ஏண்டா கேட்குறே. ரெண்டு வருஷம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. போன வருஷம் அந்தப்
பொண்ணை டைவர்ஸ் பண்ணிட்டான். ரெண்டு மாசம் முன்னாடி இன்னொரு பொண்ண நிச்சயம்
பண்ணுனான். அப்புறம் அதுவும் கேன்சல் ஆகிடுச்சு என்றார்கள்.
ஏன்? என்றேன்
முதப் பொண்னு சாப்ட்வேர்ல வேலை பார்த்துச்சு. கொலீக்ஸோட எல்லாம் சோசியலா
பழகியிருக்கு. இவனுக்கு பொறுக்கலை. ஒரே சண்டை. போடான்னு போயிடுச்சு. ரெண்டாவது
பொண்ண இவன் வேவு பார்த்தான். அது தெரிஞ்சு அதுவும் கழண்டுகிடுச்சு என்றார்கள்.
திரும்பி வந்து கமலேஷிடம் சொல்லிவிட்டு அவரவர் வாகனங்களை எடுக்கும் போதுதான்
கவனித்தேன். டிவிஎஸ் மேக்ஸ் 100 ஆர் புளு கலர் பள பள வென நின்றுகொண்டிருந்தது.
20 comments:
ஜூப்பர் ஜ்டோரி :)
நன்றிண்ணே
நல்லாருக்கு:)
கண்ணன் யார்:-) கமலேஷ் தான் கண்ணனா?
மணிஜி
முதலில் அந்தக் கேரக்டருக்கு கண்ணன் என்றுதான் பெயர்.
பின்னர் கமலேஷ் என்று மாற்றினேன். அதில் வந்த குழப்பம் இது. திருத்தி விட்டேன். நன்றி
நன்றி வானம்பாடிகள்
Super...
அருமை சைண்டீஸ்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//நன்கு எடுப்பாக இருந்த கமலேஷ் மனைவியிடம் அவரது அலுவலகத் தோழர்கள் வலுவாக கடலை வறுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர் அதை சகஜமாக எடுத்துக் கொண்டு வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்.//
இந்த மாதிரி எழுத உங்களுக்குதான் தைரியம் இருக்கும், சாரு நிவேதித கூட இப்படி எழுத முடியாது :-)
attagAsam
நல்லா இருக்கு தலைவ்ஸ்
கோகுல்
தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
எடுப்பாக இருப்பது
என்றால் மதுரை பக்க வட்டார வழக்கில்
பத்துப் பேர் இருக்கும் இடத்திலும் பளிச்சென தெரியும் படி உடல் அமைப்பு, மூக்கும் முழியுமாக இருப்பது அத்துடன் நல்ல பாடி லாங்குவேஜுடனும் இருப்பது என்று பொருள்.
கடலை வறுப்பது என்பது சகஜமாக
ஜோவியலாக பேசிக் கொள்வது
என்பதே.
நன்றி இகாரஸ் பிரகாஷ்.
நன்றி முத்துகுமரன்
அருமை.... அருமை..
நன்றி கேபிள்ஜி
//நேஷனல் போனோசேனிக்கில் //
சூப்பர்.. நான் நிறைய இது போல ப்ராடக்ட்ஸ் பார்த்திருக்கேன். SONI, MYNOLTA :))
கலக்கல் சைண்டிஸ்ட் அண்ணே..
Simply superb..Very nice story..hats off boss..
நன்றி திணேஷ்
நன்றி எல் கே
நன்றி ராஜ்
இதனால் நீங்க சொல்ல வருவது ...?
Post a Comment