எவ்வளவோ படங்கள் வந்தாலும் சில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களாலும்
ரசிக்கப்பட்டு இருக்கும். மேலும் ரீப்பீட்டட் ஆடியன்ஸும் அதிகமாக இருக்கும்.
உதாரணத்திற்கு சகலகலா வல்லவன், கரகாட்டக்காரன், பாட்ஷா, உள்ளத்தை அள்ளி தா மற்றும்
கில்லி போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் இடம்பெற்ற படம்தான்
சின்னதம்பி. அதுவும் இப்படம் வெளியான போது 60 ஆண்டுகால தமிழ் சினிமா வசூல் சாதனையை
இது உடைத்து விட்டதாகவே பேசிக்கொண்டார்கள்.
இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக இருந்த சந்தான பாரதியும் வாசுவும் அவரிடம்
இருந்து வெளிவந்து, இணைந்து இயக்கிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படாமல் (பன்னீர் புஷ்பங்கள் தவிர) போக, அவர்களின் பிரிவு தவிர்க்க முடியாமல் ஆனது.
பி வாசு தனித்து இயக்கிய முதல் தமிழ்படம் என் தங்கச்சி படிச்சவ. இந்தப் படத்தின்
வெற்றி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சத்யா மூவிஸ் வீரப்பன், தான் ரஜினியை
வைத்து அடுத்து தயாரிக்க இருந்த பணக்காரன் திரைப்படத்திற்கு வாசுவை ஒப்பந்தம்
செய்தார். வாசுவின் தந்தை பீதாம்பரம் எம்ஜியாரின் ஆஸ்தான ஒப்பனைக் கலைஞர் என்பது
அவருக்கு மிகப்பெரிய விசிட்டிங் கார்டாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1990ல் பணக்காரன்
மட்டுமில்லாமல் வேலை கிடைச்சுடுச்சு மற்றும் நடிகன் ஆகிய படங்களை சத்யராஜை வைத்து
இயக்கினார்.
வேலை கிடைச்சுடுச்சு படமே கதாநாயகனாக சத்யராஜுக்கு ஒரு திருப்புமுனைப் படம்.
அதற்கு முன் வந்த படங்களில் எல்லாம் அவரை முழு ஹீரோவாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட
இந்தப் படத்தில் ஏற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து வந்த நடிகன் படம் சத்யராஜின்
மார்க்கெட்டையே உயர்த்தியது.
இந்த நிலையில் தான் பி வாசு சின்னதம்பி பட வேலைகளை ஆரம்பித்தார். அவருக்கு
இப்படி ஒரு கதை எப்படி தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் படம் வெளிவந்த
பின் பல பத்திரிக்கைகள் ப்ரெட்டி வுமன் என்னும் ஆங்கிலப் படத்தை சுட்டுத்தான்
இந்தப் படம் எடுக்கப்பட்டது என்று பேசிக்கொண்டார்கள். படகோட்டியைப் பார்த்து
டைட்டானிக் எடுக்கப்பட்டது என்பதற்கு இணையான கம்பேரிசனே இது என பின்னாளில்
விளங்கியது.
சின்னதம்பி படம் ஆரம்பிக்க நினைத்த உடனேயே அவர் கால்ஷீட் கேட்டது
சத்யராஜிடமும், கௌதமியிடமும். சத்யராஜ் கதையைக்கேட்டு இதுக்கு நான் சரிப்பட
மாட்டேன். பிரபு செட்டாவார் என்று சொன்னாராம் (இது ஜூனியர் விகடன் பாணி சொன்னாராம்
இல்லை. பி வாசுவே ஒரு பேட்டியில் சொன்னது).
சத்யராஜ் தன்னை நன்றாகவே எடை போட்டுத்தான் வைத்திருந்திருக்கிறார். பின்னாளில்
அவர் அழகேசன் படத்தில் அறியாதவன் வேஷம் போட்டதால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட
சேதங்களை சினிமா உலகம் அறியும்.
ஆமாம். கவுண்டமணிக்கு ஜென் துறவி வேஷம் கொடுத்தால் கூட அதில் ஒரு வில்லங்க மனிதர்
தெரிவார். செந்திலுக்கு மாபியா லீடர் வேடம் கொடுத்தாலும் மஞ்ச மாக்கான் தான் நம்
கண்ணுக்கு தெரிவார். அதுபோலத்தான் சத்யராஜும்.
கௌதமிக்கு கால்சீட் பிரச்சனையோ என்னவோ? தெரியவில்லை. குஷ்புவுக்கு அந்த வேடம்
வந்தது. முதலில் வாசு இரு மனநிலையில் இருந்தாராம். ஏனென்றால் அதற்கு முன் தான்
மைடியர் மார்த்தாண்டன் திரைப்படம் வெளிவந்திருந்தது. ரோமன் ஹாலிடே பட கதையை
தட்டி உல்டா செய்திருந்த அந்தப் படத்தில் பிரபு விவரம் தெரியா ராஜகுமாரனாகவும்,
குஷ்பு நவ நாகரீக மங்கையாகவும் நடித்திருந்தார்கள். மேலும் குஷ்பு கவர்ச்சியின் எல்லையை
அந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் தொட்டிருந்தார். பின் ஒரு வழியாக சமாதானமாகி
பிரபு-குஷ்பு-கவுண்டமணி-மனோரமா-ராதாரவி என படையுடன் அவுட்டோருக்கு கிளம்பினார்.
அப்போது மூன்று முக்கியமான சினிமா பத்திரிக்கைகள் இருந்தன. சினிமா எக்ஸ்பிரஸ்,
பிலிமாலயா மற்றும் வண்ணத்திரை. இதில் பிலிமாலயாவும், வண்ணத்திரையும் கிளிவேஜ்
தெரியும் படங்களைத்தான் அட்டைப்படமாகப் போட வேண்டும் என்ற கொள்கையில் இயங்கி
வந்ததால் அவை பேட் புக்ஸ் கேட்டகிரியில் இருந்தன. சினிமா எக்ஸ்பிரஸ் மட்டும் ஓரிரு
வண்ணப்பக்கங்களுடன் வெளிவரும். அதில் சின்னதம்பி பட அவுட்டோரை கவர்
செய்திருந்தார்கள். குஷ்புவின் கன்னங்களில் சந்தனம் தடவி மொக்கையான ஸ்டில்களுடன்
அது வெளிவந்தது. படம் பார்க்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பையும் தூண்டாத
ஆவரேஜ் கவரேஜ்.
ஆனால் அதே நேரத்தில் விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் பற்றி
பரபரப்பு செய்திகள் வந்து கொண்டிருந்தன. 91 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு இரண்டு
படங்களும் ரிலீஸ். அப்போது மதுரையின் முக்கிய தியேட்டரான நடனாவில் கேப்டன்
பிரபாகரன் ரிலீஸ். சின்னதம்பி சக்தி தியேட்டரிலும் அப்போது அவுட்டரில் இருந்த
பத்மா என்னும் தியேட்டரிலும் ரிலீஸ் ஆனது. மதுரை ராமநாதபுரம் வினியோக ஏரியா
முழுவதும் ஆவரேஜ் தியேட்டர்களிலேயே சின்னதம்பி ரிலீஸானது.
போஸ்டர் டிசைனும் குப்பையாக இருந்தது. ஒரு உருட்டுக்கட்டையோடு பிரபு நிற்க,
ஓரத்தில் குஷ்பூ, கவுண்டமணியின் தலையளவு புகைப்படம் மட்டும். என் நண்பர்களுடன்
சேர்ந்து கேப்டன் பிரபாகரனை மட்டும் பார்த்து ரசித்துவிட்டு ஊர்
திரும்பியாகிவிட்டது.
ஒரு வாரம் இருக்கும். சின்னதம்பி படம் நல்லாயிருக்குடா . என்றான் ஒரு நண்பன்.
அவன் அக்காவை தேனியில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அங்கு சென்ற போது அங்கே
சுந்தரம் தியேட்டரில் பார்த்திருக்கிறான்.
“படம் முடிஞ்சு வெளியே வர்றோம்டா, தெருவில இருக்குற கடை, வீடு எல்லாமே அந்தப்
பட பாட்டுத்தாண்டா” என்று சிலாகித்தான்.
(அங்கு அந்தப் படம் 100 நாள் ஓடி சாதனை படைத்தது). நாங்கள் உடனே அந்தப் படம்
பார்க்க கிளம்பினோம். அருகில் இருந்த திண்டுக்கல்லில் படம் அப்போது ரிலீஸாகவில்லை.
எனவே அடுத்த நாள் மதுரைக்கே வண்டி ஏறினோம். சக்தி தியேட்டர் இருப்பதே ஒரு பிஸியான வணிகத் தெரு. இந்தப் பட கூட்டமும்
சேர்ந்து கொள்ள தெருவே திணறியது. பின் பத்மா திரையரங்குக்கு போனோம் (இப்போது இது
மதுரையில் ரிலையன்ஸ் பிரெஷ் கடையாக மாறிவிட்டது).
இப்படி ஒரு கூட்டத்தை அந்த தியேட்டர் அதற்கு முன்னும் கண்டதில்லை. பின்னரும்
கண்டதில்லை. அருகில் இருந்த டீக்கடையில் அந்த வாரம் மட்டும் தினமும் 400 லிட்டர்
பால் எடை கட்டி அடித்ததாக கடைக்காரர் நண்பரிடம் பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.
படம் பார்த்தாகி விட்டது. எந்த அம்சம் கவர்ந்தது எனத் தெரியவில்லை. இளையராஜாவின் இசையா,
குஷ்புவின் இளமையா, கவுண்டமணியின் காமெடியா என பிரித்தறியத் தெரியவில்லை. ஆனால்
படத்தை மட்டும் பல தடவை பார்த்தாகி விட்டது. திண்டுக்கல் சோலைஹால், பெரியகுளம்
அருள், விருதுநகர்- செண்ட்ரல்,வத்தலக்குண்டு பரிமளம் என அப்படம் திரையிட்ட
இடங்களில் எல்லாம் அட்டெண்டென்ஸ் போட்டாகி விட்டது. அப்போதைய கால கட்டத்திற்கு நல்ல
ஆக்ஷன் படமான கேப்டன் பிரபாகரனையே கான்ஸ்டபிள் ஆக்கியது இந்தப் படம்.
இன்னும் கூட எனக்கு ஏன் இந்தப் படத்தை இத்தனை முறை பார்த்தேன் என்ற கேள்விக்கு
விடை இல்லை. பத்திரிக்கைகளில் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனம் இல்லை. தீப்பொறி
ஆறுமுகம் கூட இந்தப் படத்தை வைத்துத்தான் சிவாஜி குடும்பத்தை நக்கலடிப்பார்.
“அவங்கப்பா ஏன் பிறந்தாய் மகனே? ந்னு பாட்டுப் பாடுவார். மகனுக்கு தாலி
தெரியல. என லாஜிக் இல்லா மேஜிக்காய் அடித்து விடுவார்.
முன்னர் குறிப்பிட்ட மற்றும் பெரும்பாலான வசூல் சாதனை படங்களையெல்லாம்
பார்த்தால் அவற்றின் மேஜிக் சில ஆண்டுகளுக்காவது நிலைத்திருக்கும். ஆனால் இந்தப்
படத்தின் மேஜிக் ஆறு மாதங்களுக்குள் காலாவதியாகி விட்டது. ஒரு படத்தின் வெற்றியை
ரீ ரிலிஸ் மற்றும் திருவிழா காலங்களில் உபயதாரர் மூலம் திரையிடல் போன்றவற்றின்
வழியாக கணக்கிடலாம். ஆனால் இந்தப் படம் அந்த ஆறுமாதத்துக்குப் பின் அவுட் டேட்டட்
ஆகி விட்டது.
அப்படியென்றால் எந்த அம்சம் இந்தப் படத்தை மக்கள் கூட்டமாக வந்து பார்க்கும்
படி தூண்டியது? இந்தப் படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன் என் ராசாவின் மனசிலே படம் வந்து
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. உடன் வெளியான கேப்டன் பிரபாகரனும் நல்ல படம்.
ஒருவேளை தமிழ் ஆண்களுக்கு நல்ல வசதியான குடும்பத்தில் கொப்பும் குலையுமான
பெண்ணைக் கைபிடிக்க வேண்டும் என்ற ஆழ் மன ஆசை காரணமாக இருக்குமா?
எது எப்படியோ? இந்தப் படம் திமுகவுக்கு ஒரு ஸ்டார் பேச்சாளரைக் கொடுக்கும்
என்று தீப்பொறி ஆறுமுகம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
28 comments:
எனக்கும் இந்த படத்தின் வெற்றி குறித்தான கேள்வி இன்னமும் இருக்கிறது.. மறுப்பில்லாமல் பாடல்களும் வெற்றிக்கு ஒரு காரணிதான்.
ஆனாலும் கேப்டன் பிராபகரன் தான் என்னை மிகவும் கவர்ந்தது. தாளம் போட வைத்த பாடல்கள், போலிஸ் ஸ்டேஷன் ஃபைட், சரத்தின் சிறு ரோல், அட்டகாசமான லொகேஷன், கண்ணை அள்ளும் ஒளிப்பதிவு, மன்சூரலிகானின் அனாயச நடிப்பு, லியாகத் அலிகான் வசனங்கள் என செல்வமனியின் பேக்கேஜ் மிரட்டியது..
சிறப்பான அலசல்! நான் பிளஸ் ஒன் படிக்கும் சமயம் என்று நினைக்கிறேன்! எங்கும் இதே பேச்சாக இருந்தது!
இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html
//படகோட்டியைப் பார்த்து டைட்டானிக் எடுக்கப்பட்டது என்பதற்கு இணையான கம்பேரிசனே இது//
//இதில் பிலிமாலயாவும், வண்ணத்திரையும் கிளிவேஜ் தெரியும் படங்களைத்தான் அட்டைப்படமாகப் போட வேண்டும் என்ற கொள்கையில் இயங்கி வந்ததால்//
இப்படி இக் கட்டுரை முழுக்க செமையாக எழுதி இருக்கிறீர்கள்! மிக ரசித்து வாசித்தேன். அப்படியே உங்கள் பகுப்பாய்வும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும்படிதான் இருக்கிறது.
திரைக்கதையில், முதலில் ஒரு ஜோசியத்தைச் சொல்லி நம்மை அதில் உறுதியாக உட்கார வைத்து விட்டு, முரட்டு அண்ணன்களை வைத்துக் கதையைப் படபடப்பில் விரட்டுவார் இல்லையா, அதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்பது என் கருத்து.
நன்றி இல்யாஸ்
நன்றி சுரேஷ்
நன்றி ராஜசுந்தர்ராஜன் சார்
\\திரைக்கதையில், முதலில் ஒரு ஜோசியத்தைச் சொல்லி நம்மை அதில் உறுதியாக உட்கார வைத்து விட்டு, முரட்டு அண்ணன்களை வைத்துக் கதையைப் படபடப்பில் விரட்டுவார் இல்லையா, அதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்பது என் கருத்து\\
உண்மை சார். நல்ல திரைக்கதை அமைப்பு.
பி.வாசுவின் படங்களை கிடைக்கிற கேப்பிலெல்ல்லாம் ஓட்டுவது என் வழக்கம்.இருப்பினும் சின்னத்தம்பியைப் பற்றி மட்டும் எதுவும் சொல்வதில்லை.இவ்வளவுக்கும் நிறைய அபத்தமான காட்சிகள் நிறைந்த படம். ஏனோ இந்த படமும்,இது நம்ம பூமியும் எப்போதுமே எனக்கு பிடித்தவையாகவே இருக்கின்றன.
Rasithten
முரளி,
என்னைக் கேட்டால் பாடல்கள் சிறப்பாக இருந்தன. கவுண்டமணி காமெடி ஒரு ப்ள்ஸ். ஆபாசம் என்பது படத்தில் இல்லை, அதனால் பெண்கள் கூட்டம் படத்திற்கு அதிகம் சென்றது. அந்த படத்திற்குப் பிறகு குஷ்புவிற்கு பெண் ரசிகைகள் அதிகமாகினார்கள். எப்போதுமே ஒரு படம் அதிகபட்சம் வெற்றிபெற லேடிஸ் ஆடியன்ஸ் தான் முக்கியம்.
எங்க ஊரில் படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. 350வது நாள் சிறப்பு விழாவில் வாசு, பிரபு வந்திருந்தார்கள்.
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி கானாபிரபா
நன்றி குட்டிபிசாசு (ஊர், தியேட்டர் பெயர் குறிப்பிட்டிக்கலாமே?)
ஊர்: குடியாத்தம்
தியேட்டர் பெயர்: கங்கா
//இந்தப் படம் திமுகவுக்கு ஒரு ஸ்டார் பேச்சாளரைக் கொடுக்கும் என்று தீப்பொறி ஆறுமுகம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.//
ஹா ஹா.., எல்லாம் அம்மா தயவுதான்.,
same feeling.The reason behind the huge sucess of this film is maily ladies...thnx remembering those old days..
இந்தப் படம் திமுகவுக்கு ஒரு ஸ்டார் பேச்சாளரைக் கொடுக்கும் என்று தீப்பொறி ஆறுமுகம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.//////
எப்படி?
//ஒருவேளை தமிழ் ஆண்களுக்கு நல்ல வசதியான குடும்பத்தில் கொப்பும் குலையுமான பெண்ணைக் கைபிடிக்க வேண்டும் என்ற ஆழ் மன ஆசை காரணமாக இருக்குமா?//
I don't think so! இன்னோசன்ட் (மற்ற திரைப்படங்களில் நேர்மையான) ஹீரோவைப் போட்டு அடித்தல், அவனது அம்மாவை (அல்லது குடும்பத்தை)துன்புறுத்துதல், பிறகு அவன் பொங்கி எழுதல் என்ற தமிழ்மக்களுக்குப் பிடித்த ஃபார்முலா!
ஜனரஞ்சகமான எல்லாத் தரப்பினரையும் கவரும் திரைப்படம், குஷ்பூ, சென்டிமென்ட், போக பாடல்களும் ஹிட்.
ஆனால்! 'இப்படி நம்ம மேல உசுரையே வைச்சிருக்கும் பேக்கு புருஸன் கிடைச்சா நல்லா இருக்கும்' என்ற பெண்களின் ஆழ்மன ஆசை கூடக் காரணமாக இருக்கலாம் :-)
பெரியப்பா வீட்டுல வீடியோ எடுத்து போட்டாங்க...நல்ல பகிர்வு ;-)
நன்றி சுரேஷ்
நன்றி செங்கதிரோன்
நன்றி விஷ்வா
நம்ம குஷ்புதான்
நன்றி தணல்
உங்கள் வியூ சூப்பர் தணல் சார்
நன்றி கோபிநாத்
//இந்தப் படம் திமுகவுக்கு ஒரு ஸ்டார் பேச்சாளரைக் கொடுக்கும் என்று தீப்பொறி ஆறுமுகம் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.//
Super....
@விஸ்வா,
He meant Kushboo..... :-)
நன்றி சத்யபிரியன்
உங்கள் சுவாரஸ்யமான எழுத்து நடை அசத்தலா இருக்கு.சின்னத்தம்பியின் வெற்றியை தனியொருவர் பங்கு போட முடியாது.பிரபுவின் குழிவிழும் கண்ண சிரிப்பு,அத்தனையும் சூப்பர் ஹிட்டான இசைஞானியின் பாட்டு,வரம்பு மீறாத செண்டிமெண்ட்,குஷ்பூவின் கவர்ச்சி,கவுண்டர் காமடி,அழகான திரைக்கதை,...இப்படி நிறைய விசயங்கள் இருக்கு...
நன்றி மணிமாறன்
தெரியாத பல தகவல்களை தெரிந்துகொண்டேன்,
பதிவை சிரித்துகொண்டே படித்தேன், மிக அருமை.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html
சின்னத்தம்பி ஒடியதற்கு...மிக முக்கிய காரணம்...ரசிகனை சிந்திக்க விடாதது.
தியேட்டருக்கு வெளியே போய் என்ன வேணா சிந்திக்கலாம்...
உள்ளே வாய்ப்பே இல்லை.
அந்தளவுக்கு அதன் எளிய திரைக்கதை...அதனை நம்மிடம் கடத்திய தொழில் நுட்ப வல்லுனர்கள்.
நன்றி தோகா டாக்கீஸ்
நன்றி உலக சினிமா ரசிகன்
கேப்டன் பிரபாகரன் - சின்னதம்பி. இரண்டு பிளாக்பஸ்டர் படங்கள் ஒரே நாளில் வெளிவந்ததா? ஆச்சர்யம் தான். இது போன்ற ஒரு சம்பவம் இன்றைய நாளில் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என் எண்ணுகிறேன்
நன்றி எஸ் ஐ வி.
சமீபத்தில் பருத்திவீரனும் மொழியும் இதே போல் வெளிவந்து வெற்றி பெற்றன. இனி அதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவுதான்.
பட்டிக்காடா பட்டணமா ஏன் அப்பாக்காரருக்கு வெற்றியா அமைஞ்சிதுன்னு யாருக்கும் தெரியாது. அது மாதிரி மகனுக்கு இந்தப் படம் ஓடுச்சு. ஏன்? யாருக்கும் தெரியாது.
பன்னீர் புஷ்பங்கள் சந்தான் பாரதி மட்டுமில்லையா?
தருமி ஐயா
பன்னீர் புஷ்பங்கள் பி வாசுவும் சந்தான பாரதியும் சேர்ந்து இயக்கிய படம். (முதல் படம்)
Post a Comment