பத்த வைத்த, பாலிஷ் போட்ட, திருகாணி போட்ட உருப்படிகளை எல்லாம் மீண்டும் எடை
போட்டு, சிட்டையில் எழுதிவிட்டு நிமிர்ந்தபோது மணி பத்தரை ஆகி இருந்தது. கருநீல
சபாரி அணிந்த சூப்பர்வைசர் முத்தண்ணனிடம் கொடுத்து பேரேட்டில் ஏற்றும் போது
பதினொன்னைத் தொட்டுவிட்டது மணி.
“சண்முகம், நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வந்திருப்பா. முகூர்த்த நாளு. பழைய
நகை எல்லாம் நிறைய வரும். சாயங்காலத்துக்கு மேல ரிப்பேர் வேலை பார்த்துக்கிடலாம்” என்றார் முத்தண்ணன்.
ஆடி தொடங்கி தீபாவளி வரையிலான இந்த சீசன் நகைக்கடைகளுக்கு அருமையான சீசன். தள்ளுபடியில்
தொடங்கி, சுபமுகூர்த்தங்களுக்கு வாங்க, நல்ல நாளுக்கு வாங்க என தீபாவளி வரை
வியாபாரம் அனல் பறக்கும்.
என்னுடைய பிரச்சினைகளும் இந்த தீபாவளிக்குள் தீர்ந்துவிடும். 35 வயதிலும்
தனிமை, கொடுமை. முன்னெல்லாம் வேலையில் மட்டுமே இருக்கும் கவனம் இப்போது
சுற்றுப்புறத்தையும் நோட்ட மிட வைக்கிறது. மாநகர கலாச்சாரம் பெண்களின் அழகை
வெளிச்சமிடவைக்கிறது. அவர்கள் தி நகர் மாதிரி ஏரியாவிற்கு வரும்போது மினுமினுக்க
வைக்கிறது. அந்த மினுமினுப்பு உள்ளச் சூட்டை உமி போட்ட தணலாய் தகிக்க வைக்கிறது. வயிற்றுப்பசி
தீர்ப்பதற்கு இந்தத் தொழில் இருக்கிறது. ஆனால் இந்தப் பசி தீர்க்க? அவமானங்களுக்கு பயந்து ஒழுக்கமாய் இருக்க வேண்டியிருக்கிறது.
இரண்டு லட்ச ரூபாய் சீட்டின் கடைசித் தவணை நேற்றோடு முடிந்தது. கசர், கமிசன்
பிடித்துக் கொண்டு நாளை கொடுப்பதாகச்
சொல்லியிருக்கிறார்கள். வாங்கிக் கொண்டு ஊருக்குப் போய் பெரியகுளத்தம்மா கடனை
அடைக்க வேண்டும். அதோடு முடிந்துவிடும். பின் தீபாவளி வரை பார்க்கும் வேலை, ஓட்டி,
போனஸ் எல்லாம் சேர்த்து ஒரு ரூபாய் வரும். அப்பாவுக்கு புதுச் சட்டை, வேட்டி
எடுத்துக் கொடுத்து பெண்பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும்.
பாருங்க, நான் பாட்டுக்கு மனசுல வர்றத சொல்லிக்கிட்டே போறேன். நான் யாரு
என்னன்னு சொல்லாமலேயே!.
நான் ஒரு பொற்கொல்லர். பரம்பரையாக புகழ்பெற்ற குடும்பம். நிலக்கோட்டை ஆசாரி
என்றால் சுத்தி இருக்குற நாலஞ்சு தாலுகாவுக்கும் தெரியும். தாத்தா கல்யாண நகை
ஆர்டர் மட்டும்தான் செய்வாராம். கைராசிக்காரர்ன்னு கூட்டம் அலைமோதும். நல்ல
முறையில சம்பாதிச்சவங்களுக்கு மட்டும்தான் செய்வாராம்.அவர் செஞ்சு கொடுத்த நகை பரம்பரை பரம்பரையா அந்தக் குடும்பத்தில இருக்குமே தவிர, அடகுக்கடை வாசலைக் கூட மிதிக்காது என்பார்கள். அப்பா தலை எடுத்த பின்னாடி தொழிலை நல்லா விரிவுபடுத்தினார். மதுரைக்கு ஜாகையை மாத்தினார். பத்து வருசத்துக்கு
முன்னாடி நடந்த ஒரு திருட்டு எங்க வாழ்க்கையையே பொரட்டி போட்டிருச்சு.
இன்சூரன்ஸ் மாதிரி யெல்லாம் பண்ணாம கூட இருக்குற ஆளுங்களையும், இரும்பு
லாக்கரையும் நம்பி இருந்தார் அப்பா. ரெண்டுமே அடிக்கிற மாதிரி அடிச்சா
வளையறதுதானே. அட்வான்ஸ் வாங்கி, செஞ்சு வச்சிருந்த நகை, தங்கம் எல்லாம்
போயிடிச்சு. சொத்தை வித்து எல்லோருக்கும் திருப்பி கொடுத்தார் அப்பா. அப்படியும்
பத்தலை. தாத்தா எடுத்து வச்சிருந்த நல்ல பெயர்னால யாரும் நெருக்கலை. ஆனா அம்மா அந்த அதிர்ச்சியிலேயே கொஞ்ச நாள்ல போயி சேர்ந்துட்டா. நான் பத்து
வருஷமா இங்க வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைச்சுக்கிட்டு வர்றேன். கடன் அடையிறவரைக்கும்
புதுத்துணி எடுக்கக்கூடாது, நல்ல சாப்பாடு சாப்பிடக்கூடாது அப்படின்னு அப்பாவுக்கு ஒரு வைராக்கியம்.
இந்த கடன கட்டிட்டாப் போதும். அப்பா முகத்துல ஒரு நிம்மதியப்
பார்த்துடலாம். என்னோட தாபமும் தீரும். எந்த கெட்ட வழிக்கும் என்னைய கொண்டு போயிராதன்னு
தினமும் தாத்தாவத்தான் வேண்டிக்கிருவேன்.
என் கூட வேலை பார்க்கிற ஆளுங்க எல்லாம் சேர்ந்து ரூம் எடுத்து தங்கியிருந்த
இடத்துக்கு வந்து சேர்ந்த போது மணி பதினொன்னறை. அந்த நேரத்துலயும் ஹவுஸ் ஓனர்
முழிச்சுக்கிட்டுத்தான் இருந்தார். ரெண்டு விரல்லயும் நல்ல உருட்டா ஒண்ணரைப்
பவுனுக்கு மோதிரம், அஞ்சு பவுன் பிரேஸ்லட், ஏழு பவுன் சங்கிலி போட்ட வாட்ச், பத்து
பவுனுக்கு எட்டுப் பிடியில் மைனர் செயின் அப்படின்னு ஆளு ஜம்முனு இருந்தார். 25
பவுன் நகை போட்டும் அது தெரியாத மாதிரி ஆகிருதியான பாடி.
”சண்முகம்” எனக் கூப்பிட்டு வீட்டிற்குள்ளே வருமாறு சைகை
காட்டினார். உள்ளே போனதும்,
என்னோட இன்னொரு காம்பவுண்ட்ல குடியிருக்கிறவர் ஒருத்தர் இருக்காரு. நல்ல
மனுசன். பணமுடை. நகை ஒண்ணை விக்கணும்னாரு. போயிப் பாரேன் என்றார்.
”சரிங்க” என தலையசைத்து விலாசம் கேட்டுக் கொண்டேன்.
காலையில் அங்கு போய் விவரம் சொன்னதும், உள்ளே கூப்பிட்டு போய், விசாலாட்சி
காப்பி போடும்மா என்று சமையல்கட்டு பார்த்து குரல் கொடுத்தார். அவர் கையிலும்,
விரலிலும் நகை அணிந்திருந்த அடையாளங்கள் மிச்சம் இருந்தன. காப்பியோடு வந்த
அம்மாளைப் பார்த்தேன். எண்ணெய் ஏறிய கல் மூக்குத்தி, பவுனைவிட அரக்கு அதிகமாய்
இருந்த அரைப்பவுன் தோடு, கவரிங் வளையல், மஞ்சக் கயிற்றில் கோர்த்திருந்த தாலி.
அவர் செருமிக் கொண்டே, பேரனுக்கு ஒரு ஆப்பரேஷன் பண்ணவேண்டியிருக்கு. அதான்.
என்று சொல்லி நகையை எடுத்து வரச் சொன்னார். இரண்டு அன்னப்பட்சிகள் கொண்ட கல் நெக்லஸ். அன்னப்பட்சியின் பொருத்தமான
இடங்களில் சின்ன சைஸ் வெள்ளை, சிகப்பு, பச்சைக் கற்கள் வைத்து உயிரோட்டமாய்
இருந்தது. அவை காதலுடன் ஒன்றையொன்று பார்ப்பதாகவே தோன்றியது. பட்சியின் பின்புறம்
நல்ல முறுக்கான செயின். அதில் முக்கால் இஞ்சு இடைவெளியில் அரை இஞ்சு விட்டமுள்ள
கல் பதக்கம். பக்கத்துக்கு ஆறாய் பன்னிரண்டு கல் பதக்கங்கள். அருமையான் பெரிய சைஸ்
வெள்ளைக்கல் பதக்கங்களில் பதிக்கப்படு இருந்தது.
சூழ்நிலை மறந்து அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்.
“நாங்க வசதியா இருந்தப்ப, எங்க தெருவில பொண்ணு பார்க்க ஆள் வந்தாங்கண்ணா,
பொண்ணு வீட்டுகாரவுங்க இந்த நெக்லஸ் வாங்கிட்டு போயி, அவங்க பொண்ணுக்கு போட்டு
விடுவாங்க. ராசியானதுன்னு அப்ப பேரு. புள்ளைத் தாச்சி பொண்ணுங்கல்லாம் வளைகாப்பு
அன்னைக்கு இதப் போட்டுக்கிட்டு போயித்தான் போட்டோ பிடிக்கும்க.”
பின்ன பையன் ஒரு ஆட்டம் ஆடி, ஓஞ்சு போயி, காதலிச்சு, அதுல ஒரு பிரச்சினையாகி ஏகப்பட்ட விரயம் தம்பி.
எந்தப் புண்ணியமோ தெரியலை. இப்ப நாலு வருஷமா திருந்தி தொழில் பண்ணிக்கிட்டு
இருக்கான். ரெண்டு வருசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. பொண்ணு வசதியில்லாத குடும்பம், ஆனா நல்லவங்க. போன வருசம் பேரன் பொறந்தான். ஹார்ட் பிராப்ளமாம், ஒரு பைபாஸ் சர்ஜரி பண்ணனும். ரெண்டு லட்சம் அவசரமா தேவைப்படுது அதான் என்று முடித்தார்.
இப்போது எங்கு செய்தது என்ற முத்திரையைப் பார்க்க லேசாக திருப்பிப்
பார்த்தேன்.
அந்த அம்மாள் வருததமான குரலில் சொல்லத் தொடங்கினார்,
“அந்தக் காலத்துல நிலக்கோட்டை ஆசாரின்னு ஒருத்தர் செஞ்சது. ரொம்ப கைராசிக்காரராம். எங்க அப்பா
அடிக்கடி சொல்லுவார். அவர் கையால செஞ்சு கொடுக்கிற நகை லட்சுமிகரமானதும்மா. இது இருக்க வரைக்கும் லட்சுமி உன்னைய
விட்டு போகமாட்டா அப்படின்னு.” அதனால தான் இதை மட்டும் எந்த கஷ்டம் வந்தப்பவும் விக்காம இருந்தேன். இப்ப பேரனுக்காகத்தான் இதை வெளியவே எடுக்கிறேன் என்றார்.
நகையின் பின்புறத்தில் பதிந்திருந்த என் தாத்தாவின் முத்திரை என்னைப் பார்த்து ஏதோ சொல்வது போல் இருந்தது.
”இந்த நெக்லஸ் இங்கேயே
இருக்கட்டும், இது எந்தக் காலத்துக்கும் அடகுக்கோ, விக்கவோ போக வேணாம். நான் சாயங்காலம் ரெண்டு
லட்ச ரூபா கொண்டு வந்து கடனா தர்றேன்” கொஞ்சம் கொஞ்சமா அடச்சாப் போதும் என்று சொல்லியபடி கிளம்பிய என்னை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
அவர்கள்.