வீட்டின் உள்ளே நுழைந்ததும் கூடத்தில் அமர்ந்திருந்த மாமனார் தலையை கீழ்நோக்கி
அசைத்து வெற்றுப் பார்வை பார்த்தார். மைத்துனன் உதடு பிரியாமல் புன்னகை போன்ற
ஒன்றால் வரவேற்றான். சென்று அவனருகில் உட்கார்ந்து
“வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சா? எதுவும் வாங்கி வரணுமா? என பேச்சைத்
தொடங்கினேன்.
இல்ல மாமா. எல்லாம் வாங்கியாச்சு. நாளைக்கு எட்டு மணிக்கு அய்யர்
வர்றேன்றிருக்கார் என்றான். பேச்சு சப்தம் கேட்டு ஐந்து நிமிடம் கழித்து இறுகிய
முகத்துடன் காப்பிக் குவளையுடன் வந்தார் மாமியார்.
பாவம் அவரும் என்ன செய்வார்?. மகளின் முதல் திவசத்துக்கு வந்திருக்கும்
மாப்பிள்ளையை எப்படி வரவேற்க வேண்டும் என்ற முறை சாஸ்திரத்தில் இல்லையே.
காப்பியைக் குடித்தவாறே பிளாஸ்டிக் மாலை அணிவித்திரிந்த பிரேமுக்குள் சிரித்த
முகத்துடன் இருந்த பிரியாவைப் பார்த்தேன். சில நிமிடங்களில் ஒரு சங்கடமான மௌனம்
எங்களுக்குள் நிலவியது.
கல்யாணமாகி ஒரே ஆண்டில் விபத்தில் செத்துவிட்ட பிரியா எனக்கும் அவர்கள்
வீட்டிற்கும் இருந்த தொடர்பையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டாளோ எனத் தோன்றியது. இதே வீட்டிற்கு மறு வீட்டிற்கு வந்த
நேரம் எப்படி இருந்தது?. குழைந்து பேசும் மைத்துனன், மருமகனுக்கு சமைப்பதற்காகவே
இத்தனை ஆண்டுகள் பயிற்சி செய்தவளைப் போல இயங்கிய மாமியார், அவர் மேலதிகாரிக்கு
கொடுத்த மரியாதையை விட அதிக மரியாதை கொடுத்த மாமனார்.
இப்போது, கொடுத்த கடனை திருப்பி கேட்க வந்தவனுக்கு செய்வதைப் போன்ற சம்பிரதாய
உபசரிப்புகள்.
“கடை வீதி வரை போய் விட்டு வருகிறேன்” என
சொல்லிவிட்டு கிளம்பினேன், அப்படியாவது மனப்புழுக்கம் குறையுமா, என்று. போன முறை
இங்கு வந்தது தலை தீபாவளி மாப்பிள்ளையாக. இதே தெருவில்தான் பிரியா ஓடி ஓடி
அலங்காரப் பொருட்களை அன்று வாங்கினாள். எதிலும் ஓட்டம் தான் அவளுக்கு. படிப்பு
முடித்து வேலை, அதில் உயர்வு பின்
கல்யாணம் என. பிறந்ததில் இருந்தே ஓடிக் கொண்டுதான் இருந்திருப்பாள் போல. போதும் என
ஒரு நாள் நிறுத்திக் கொண்டாள்.
அவள் எங்கே நிறுத்தினாள். விடுமுறைக்கு இங்கே வந்தவள், ஒரு விசேஷத்துக்கு
சித்தி மகனுடன் பைக்கில் போனாள். அவள் தான் வேகமாக போகச் சொன்னதாக கேள்வி. இருக்கும். அவன் சிறு காயங்களுடன் தப்பித்துக்
கொள்ள, இங்கே நான் பெரும் மனக் காயத்துடன் நிற்கிறேன்.
29 வருடம். யாரிடமும் பகிராத காதலை அவள் மீது கொட்டினேன். அவளுக்குத்தான் அதை
வாங்கிக்கொள்ள நேரமே இல்லை. ஹனிமூன்? வேண்டாம். இந்த பிராஜக்ட் முடியும் லெவலில்
இருக்கிறது. திருப்பதி? வேண்டாம். பி எம் ஆகிட்டு போலாம். மகாபலிபுரம்? முன்னமே
பார்த்தாச்சு.
அப்பாவிற்கு போன் செய்தேன். நாளைக்கு எட்டு மணிக்கு என்றேன். சிரத்தை
இல்லாமல், நாளைக்கு அவனுக்கு லீவ் இல்லடா. கைலாஷுக்கு ஸ்கூல்ல ஏதோ மீட்டிங்காம்.
நான் தான் போறேன். என்றார்.
என் மனைவியின் முதல் திவசம் இவர்களுக்கு பைசா பெறாத விஷயம் ஆகி
விட்டிருக்கிறது. கல்யாணத்துக்கு முன் என் சின்ன பையன் சின்ன பையன் என என்னைத்
தூக்கி வைத்து ஆடியவர், கல்யாணத்துக்குப் பின் அப்படி இல்லை. பிரியாவின்
மறைவுக்குப் பிறகு இன்னும் சுத்தம். பிரியா வீட்டாரே என்னை அன்னியனாய் நினைக்கத்
துவங்கி விட்ட பின் மாமனரா மருமகள் திவசத்துக்கு வருவார்?
இரவு ஆனதும் மாமனார் வீட்டிற்கு திரும்பினேன். நாளை திவசம் முடிந்ததும் கோவையிலுள்ள
எங்கள் வீட்டிற்குப் போய், ஒரு நாள் தங்கி விட்டு சென்னைக்கு புறப்படுவதாக
ஏற்பாடு.
காலையில் இயந்திர தனமாக எல்லா நிகழ்வுகளும் நடந்து முடிந்தது. அய்யர் கிளம்பிய
உடன் விரதம் முடித்து சாப்பிட்டேன். அடுத்து என்ன? என்பது போலவே அனைவர் பார்வையும்
இருந்தது. அதை சகிக்க முடியாமல் உடனே கிளம்பினேன்.
பஸ் ஸ்டாண்ட் வந்து கோவை பஸ்ஸுக்காக காத்திருந்த போது, அக்காவிடம் பேசலாம்
எனத் தோன்றியது. எடுத்தவள் இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன்
என்று வைத்து விட்டாள்.
போன மாதம் அவள் பையன் பத்தாவது பரிட்சை நன்கு எழுத, யோக ஹயகிரீவரிடம் சென்று
அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது, அவள் செய்த போன் கால்கள் அத்தனையும்
ஞாபகத்துக்கு வந்தன. ஒவ்வொரு மணி நேரமும் விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். அவள்
காரியம் என்றால் மட்டும் தான் இந்த சில ஆண்டுகளில் பேசுகிறாள்.
கோவை பஸ் வர ஏறிக் கொண்டேன். இந்த
ஒராண்டில் எத்தனை புறக்கணிப்புகள்? அவள்
விதி அவள் போய்ச் சேர்ந்து விட்டாள். நானென்ன செய்வது? அபார்ட் மெண்டில் நடந்த
குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்கள், வெட்டிங் டே பார்ட்டிகள் எதற்கும்
அழைப்பில்லை.
அவர்களை விடுங்கள். அலுவலகத்தில் மாதம் ஒரு முறை குடும்பத்துடன் கெட் டு கெதர்
போபவர்கள் என்னை புறக்கணித்து விட்டுப் போகிறார்கள். பேச்சிலர்களும் அவர்கள்
ஜமாவில் என்னை சேர்ப்பதில்லை. சமீபத்தில் கல்யாணம் நிச்சயமான நண்பன் அவன்
உட்பியிடம் இருந்து போன் வந்தால் எனக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறான். ”கண்ணு வச்சிடுவான்” என்று இன்னொருவனிடம் கமெண்ட் வேறு.
கோவை வந்தது. இறங்கி அன்னபூரணாவில் காபி குடிக்கும் போதுதான் நினைவுக்கு
வந்தது. நேற்று நான் பேசியபிறகு, ஒரு போன் கூட இன்னும் வீட்டில் இருந்து வரவில்லை.
இன்று வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். என்ன என்று கேட்க கூட நாதியில்லை. சரி
என்னதான் செய்கிறார்கள் பார்ப்போம் என மனதில் கறுவிக் கொண்டு, மாலைக் காட்சிக்கு
ராகம் தியேட்டருக்கு பேக்குடன் கிளம்பினேன்.
படம் முடிந்தும் போன் வரவில்லை. ஆட்டோ பிடித்து, ஆம்னி பஸ் நிறுத்தத்துக்கு
வந்தேன். சென்னை பஸ் கிடைத்தது.
வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, காலை 7 மணி. பல் துலக்கிவிட்டு, காலண்டரில்
தேதி கிழித்தேன். நல்ல நேரம் ஏழரையில் இருந்து ஒன்பது என அது சொன்னது.
லேப்டாப்பை ஓப்பன் செய்து, கூகுளுக்குள் போனேன். கை அனிச்சையாக மேட்ரிமோனி என
டைப்பத் தொடங்கியது.
32 comments:
ஆரம்பம் முதலே ஒரு கனமான மனதுடன் படிக்கவைத்துவிட்டீர்கள் முரளி
ப்ப்பாஆஆ..என்ன எழுத்துடா..யாராவது இது மௌனியின் கதை இல்லை வேறு பெரிய எழுத்தாளரின் கதை என்றால் சத்தியமாக நம்பியிருப்பேன். களமும் கனம். சொன்னவிதமும் கனம்.
அமர்க்களம் முரளி..
புது களம்..
அருமை..
தலை இது நிஜமாவே நீங்க எழுதுன கதையா?
எப்படி இன்னும் பிரபலமாகாம இருக்கிங்க?
மனசு கனத்து போய் லேசாச்சு
நன்றி மன்சூர் ராஜா
நன்றி நட்ராஜ்
நன்றி இளா
நன்றி கதிர்
அருமை. ஏனோ கணவனை இழந்த ஒரு பெண் அப்படி மேட்ரிமொனியில் தேடியிருப்பாளா என யோசிக்க தோன்றுகிறது இறுதியில்
அண்ணே...ஆரம்பிச்சி....கால்வாசி தூரத்துலேயே...மனசு பாரம் கூடுரத உணர்ந்து நேரா...கமெண்ட் பாக்ஸுக்கு வந்துட்டேன். சாரி...முழிசாப் படிக்கலை...
நன்றி மோகன் குமார்
நன்றி ஜெய்.
Good Sir ...
நன்றி Palay King
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
(மௌனத்தை மட்டுமே பின்னூட்டமாகத் தருகிறேன்
அடி தூள் முரளி..
எழுதப்பட்ட விதம் நன்றாக இருந்தது.
//மாலைக் காட்சிக்கு ராகம் தியேட்டருக்கு பேக்குடன் கிளம்பினேன்.//
யாருங்க அந்த பேக்கு.:)))
மிக மிக அருமை.. ஆனால் சற்றே மிகைப்படுத்தப்பட்ட நெகேடிவிட்டி.. இந்த கதையில் 'அம்மா' வை கொண்டுவராமல் விட்ட( அம்மா இல்ல என்பதை எங்கள் அனுமானத்திற்கு விட்ட) உங்கள் சாமர்த்தியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!
ஒரு ஆண் திருமணம் ஆனால் தான் முழுமனிதன் ஆகிறான்! இணை இழந்த பிறகு தனி மரம் ஆகும் அவனின் நிலையை வெகுச்சிறப்பாய் எழுதி இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
நன்றி பாஸ்டனார்
நன்றி கேபிள்ஜி
நன்றி குட்டிபிசாசு
நன்றி விக்னா
நன்றி பொன் மா மகன்
கலக்கல் மு.க.
Thanks Balarajan Geetha Sir
மு.க வின் இன்னோரு முத்து...
Thanks Ganesh
Super...
Thanks RAvichandiran
Success of the story is to make the reader feel the pain/happy.... i really felt....
wonderful writing... All the best.
அருமை. தொடருங்கள்,
நன்றி பெருமாள்
நன்றி கா கண்ணன்
யார் நீங்கள்? சூப்பரா எழுதுகிறீர்கள் :-)Must follow you :-)
amas32
வாழ்க்கை என்னவென்று புரிய வைக்ககிறீர்கள்...நன்றிகள் பல
நன்றி அமாஸ்
தொடரப்போவதுக்கு முன்கூட்டிய நன்றிகள் அமாஸ்.
நன்றி அரவிந்த்.
பெரிசுகள் கணவனை இழந்த பெண்டீரைத்தான் பார்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். புதுமனைவியை இழந்தவரையுமா?.. என்னெத்த சொல்றது ?...த்சொ..த்சோ..(சோகம் சார்)
அட்டகாசம்
அட்டகாசம் சார். மனது கனக்கிறது.
I also feel like manjooraja.
Post a Comment