June 08, 2013

ரஜினியின் கடந்த 20 வருடங்களும் கோச்சடையானும்

தங்கையை நம்பி விட்டுச் செல்லலாம் போன்ற முகம் – சுஜாதா 80களில் ரஜினி பற்றி

பி சி செண்டர்களின் முடி சூடா ராஜா ரஜினியும் ஏ செண்டரின் ஹாட் மணிரத்னமும் இணையும் படம் இது. – தளபதி படம் பற்றிய ”மார்டன் மகாபாரதம்” என்ற விகடன் கட்டுரை.

என்னடா பெரிய ஹைகிளாசு. ரஜினி தங்கச்சி சாகிறப்போ அழுதாக்கூட முறைக்கிறாங்க. வாடா நாம கீழ போயியே உட்கார்ந்துக்கலாம். -குமுதத்தில் 80களின் ஆரம்பத்தில் வந்த ஒரு சிறுகதையில் இருந்து.

இக்கதையில் கூலி அதிகம் கிடைத்துவிட்ட இரு தொழிலாளர்கள், ரஜினி படத்தை பால்கனியில் உட்கார்ந்து பார்க்கச் செல்வார்கள். அவர்கள் படத்தை ரசிப்பதை பால்கனியில் உள்ளவர்கள் அசூசையாக பார்ப்பார்கள். அதனால் இடைவேளையில் அவர்கள் தரைக்கு சென்றுவிடுவார்கள்.

இன்றைய நிலையில் இருக்கும் ரஜினியின் இமேஜோடு மேற்கூறியவற்றை பொருத்திப்பாருங்கள். ஏ செண்டர் என்ன?, ஏ++ ஆன அமெரிக்கா வரை ரஜினி தான் முடிசூடா மன்னர்.
அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ரஜினிக்கு கிடைத்திருக்கும் இமேஜ் மேக் ஓவரானது அசாத்தியமானது. எப்படி ஆங்கிரி யங் மேன் இமேஜ் வேலைக்காகாது என அமிதாப் 2000ல் மாறினாரோ, அதையும் தாண்டியது ரஜினியின் மேக் ஓவர்.
முதலில் ரஜினி பி சி ரசிகர்களை வசீகரித்தது பாட்டாளிகளின் காவலன், ஏழைகளின் தோழன் போன்ற கேரக்டர்களில் நடித்து தான். ஊர்காவலன், மனிதன்,சிவா, மன்னன், என பெரும்பாலான படங்களில் அவர் ஏழைப் பங்காளனாகவே இருப்பார்.

ஆனால் கடந்த 20 வருடங்களில் வெளியான பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களில் அவர் பெரும் பணக்காரராகத்தான் நடித்திருப்பார். பாட்ஷாவில் ஆட்டோ ஓட்டினாலும் அவர் டான். நன்றாக கவனித்துப் பார்த்தால், இந்தப்படங்களில் ஏழைப்பங்காளன், பாட்டாளி என்ற வசனங்களே இருக்காது.

இந்து மதத்துக்கும் அதிக முக்கியத்துவம் இந்தப் படங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். நாயகன் கடவுள் நம்பிக்கையுடைய, பெரியோர்களை மதிக்கும் பணக்காரனாகவே இருப்பான். சனாதான தர்மங்களில் நம்பிக்கை உடையவனாக இருப்பான். எந்திரனில் ரோபோவுக்கு ஆயுத பூஜை, சிவாஜியில் ”தமிழ்க் கலாச்சாரப் பெண் வேண்டும்”, சந்திரமுகியில் ”ஐயப்பன் கோவிலுக்கு போய்விட்டு வந்தேன்”, பாபா பற்றி சொல்லவே வேண்டாம். படையப்பாவில் “பொம்பளை கோபப் படக் கூடாது, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரில் ஒருத்தர் படிச்சிருந்தா போதும்”, அருணாசலத்தில் ருத்ராட்சம், என எல்லாப்படங்களிலும் இது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.


ஒருவகையில் பார்த்தால், தங்கள் பிள்ளைகள் ரஜினி ரசிகராய் இருப்பதை பெற்றோர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதைவிட தற்போது 35+ல் இருப்பவர்கள் அனைவரும் திருமணத்துக்குப் பின் ரஜினி இப்போது காட்டும் வழியே சிறந்தது என நினைக்கிறார்கள். சிவாஜியில் தன் லட்சியம் நிறைவேறுவதற்காக கூட்டிக் கொடுப்பதைப் போல (வேண்டா வெறுப்பாக) ஒரு காட்சி இருக்கும். இன்றைய 35+ மக்களை கேளுங்கள். பெரும்பாலோனோர் (நான் உட்பட) காரியம் ஆக அதுமாதிரி செய்வதில் தவறில்லை என்ற கருத்தையே சொல்வார்கள். தற்போதைய 20+ இளைஞர்களும் பணம் சம்பாதித்தால் போதும், அதில் எதிக்ஸ் பார்க்கத்தேவையில்லை என்ற கருத்தோடுதான் இருக்கிறார்கள். அதனால் தான் மங்காத்தா போன்ற படங்கள் வெற்றி பெறுகின்றன.


ரஜினி, இந்த சமூகத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர். (அல்லது அவர் இயக்குநர்கள்) அதனால் தான் மக்களின் மனவோட்டத்திற்கு ஏற்ப தன் பாத்திரங்களை செலக்ட் செய்துகொள்கிறார்.


இதே எந்திரனை 20 ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்திருந்தால், ரஜினி ஏழை பெற்றோருக்கு பிறந்து, படித்து முன்னேறிய விஞ்ஞானியாக காட்டப்பட்டிருப்பார். பெரும் கோடீஸ்வரராக நிச்சயம் காட்டப்பட்டிருக்க மாட்டார். (சிவாஜியில் கதை அமைப்பு அப்படி. பிறப்பிலேயே பெரும் பணக்காரர் என்றால், திரைக்கதை சுவராசியப்பட்டிருக்காது.)
ஒவ்வொரு காலகட்டத்திலும், நடிகர்கள் புதிதாக படம் பார்க்க வரும் ரசிகர்களை தக்க வைக்க சிரமப்படுவார்கள். கமல்ஹாசனை 80களில் படம் பார்க்க வந்தவர்களில் 40 சதவிகிதம் பிடித்தது என்றால், 90களில் 30 சதவிகிதத்திற்கும், 2000ல் 20% க்கும், 2010ல் 10%க்கும்  குறைவான பேருக்கே பிடித்திருக்கிறது. ஆனால் ரஜினி இப்போது படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் ஏற்றபடி படம் கொடுக்கிறார். அவர் புகழ், பழைய ரசிகர்களோடு, புதியவர்களும் அதிக அளவில் கூடுவதால் எக்ஸ்பொனென்சியலாக கூடுகிறது.


மேலும் ரஜினியாவனவர் பத்திரிக்கைகளுக்கும், டிவி மீடியாக்களுக்கும், , இந்து மதத்தவர்க்கும், பரம்பரை பணக்காரர்களுக்கும், புதுப் பணக்காரர்களுக்கும், குடும்ப அமைப்பு கலையாமல் இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கும் வசதியான ஐகானாக இருக்கிறார். இந்த அமைப்புகளுக்கு எதிரான சங்கடப்படுத்தும் கருத்துகளை அவர் சொல்லுவதில்லை. எனவே இவர்கள் யாவரும் அவரை புரமோட் செய்வதில் பலன் அடைகிறார்கள். இப்படி எல்லாப் பக்கமும் அவர் முன்னிறுத்தப்படுவதால் புதிதாக உலகைப் பார்ப்பவர்களுக்கு அவரின் மேல் கிரேஸ் வருகிறது.


மேலும் அவர் வில்லங்கமான கருத்துகளைக் கூறினாலும், அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஒரு விழாவில், “விவேக் நல்ல அறிவாளி, அவர் தேவர் இனத்தைச் சேர்ந்தவர் என்றதும் ஆச்சரியப்பட்டேன்” என்றார். இதே ஸ்டேட்மெண்டை வேறு யாராவது கொடுத்திருந்தால் தென் மாவட்டமே கொதித்தெழுந்திருக்கும். ஆனால் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல்தான் கோச்சடையானை நான் எதிர்பார்க்கிறேன். முதலில் அனிமேஷன் படம் என்றதும், இந்தப் படம் எப்படி ஓடும்? என நினைத்தேன். ஆனால் இக்கால நடுத்தர வர்க்க குழந்தைகள் பெரும்பாலும் சோட்டா பீமையும், நிஞ்சா ஹட்டோரியையும் ஆதர்சமாக கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு வேகமாக அசையும் படங்களே மிகப் பிடிக்கின்றன. இசையும் வேகமாக துள்ளலுடன் இருக்க வேண்டியிருக்கிறது. சாதாரண படங்களை விட அனிமேசனை மிகவும் விரும்புகிறார்கள்.


24 மணி நேரம் சோட்டா பீம் டிவியில் இருந்தாலும், சமீபத்தில் வெளியான “சோட்டா பீம் : த தோர்ன் ஆஃப் பாலி” க்கு மல்டிபிளக்ஸ்களில் விடுமுறை நாட்களில் நல்ல கூட்டம்.கோச்சடையானை, வழக்கமான ரஜினி ரசிகர்கள் எப்படியும் பார்ப்பார்கள். சிவன் போன்ற போஸ் எல்லாம் ஃபர்ஸ்ட் லுக்கில் இருப்பதால் கொஞ்சம் ஆன்மீகமும் இதில் தூவப்பட்டிருக்கும். அடிசனலாக, மூன்று வயது முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகள் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கும். ரஜினியின் அடுத்த பத்தாண்டுக்கான புது ரசிகர்களை உருவாக்கும் படமாக இது அமையும். 

9 comments:

எல் கே said...

super

வி.பாலகுமார் said...

எனக்கென்னவோ சரியான கலவையாக வராத ராணாவையும், கோச்சடையானையும் சேர்த்து மாற்றி மாற்றி வெவ்வேறு காம்போ இணைத்து பிசைந்து கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எப்படியும் ரஜினி ப்ராண்ட் நேம் வைத்து கல்லா கட்டி விடுவார்கள். முழுக்க குழந்தைகளுக்கான படமா இல்லை ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமானதா இல்லை எல்லோருக்குமான காக்டெயில் மசாலாவா.... சரக்கு எப்படி வரும்னு தெரியவில்லை.. பார்க்கலாம் :)

Chef Ramu said...

Arumai Murali saar

நவீன் said...

ஒரு விதத்துல நீங்க சொல்றது சரியாய் இருக்க வாய்ப்பு இருக்கு... ஆனா கோச்சடையான் வரலாற்று பின் புலத்துல தயாராவதா செய்தி ... ஆனா வரலாற்று படம் ஜெயிக்குமா...? இந்த ஜெனரேஷனுக்கு அந்த தமிழ் புடிக்குமாங்கறதே சந்தேகம் தான்.... எந்திரன் படத்தோட கடைசி இருபது நிமிஷத்துக்கு இந்த தலைமுறை கிட்ட இருந்து எவ்ளோ கடுமையான விமர்சனம் வந்துச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் .... இந்த முறை ரஜினிய வச்சு எடுத்த மோஷன் கேப்ச்சரிங் இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு அவங்க குடும்பத்துக்கு வேணா உபயோகமா இருக்கலாமே ஒழிய இந்த படம் ஒரு டிரென்ட் செட்டரா ஆகறதுக்கு வழி இல்லை.....வலுவான திரைக்கதை இருக்கணும் .... அட்வான்ஸ்ட் கிராபிக்ஸ் இருக்கணும்.... அந்த அளவுக்கு கிராபிக்ஸ் இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி....

butterfly Surya said...

செம அலசல்..

Welcome back..

Cheers..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கடந்த 20 வருடங்களில் வெளியான பாட்ஷா, முத்து, அருணாசலம்,// அந்தக்காலத்துல நாங்கெல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்......,

தருமி said...

எம்.ஜி.ஆர்., ரஜனி, விஜய் .. இவங்க எல்லோரின் பாப்புலாரிட்டி எனக்கு எப்பவுமே ஒரு பெரிய்ய்ய்ய்ய கேள்விக்குறிதானுங்க ..!

கும்மாச்சி said...

முரளி ரஜனியப்பற்றிய அலசல் கட்டுரை அற்புதம், உண்மையில் பெற்றோர்கள் தங்கள் குழைந்தைகள் ரஜனியைப்போல் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவது உண்மை.

முரளிகண்ணன் said...

நன்றி எல் கே

நன்றி பாலகுமார்

நன்றி ராமு

நன்றி நவீன்

நன்றி சூர்யா

நன்றி சுரேஷ்

நன்றி தருமி

நன்றி கும்மாச்சி