வடக்கே வன்னியர்,
தெற்கே தேவர், மேற்கே கவுண்டர் போன்ற சாதியினரே சுய சாதி அபிமானம் மிகக் கொண்டுள்ளார்கள்
என ஊடகங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. நாயுடு, வேளாளர், நாடார்,யாதவர் என
எந்த சாதியை எடுத்தாலும் அவர்கள் சுய சாதி மோகம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள்
தாங்கள் எங்கே பெரும்பான்மையாக அல்லது குழுவாக வசிக்கிறார்களோ அங்கேதான் தங்கள் சாதிக்குரிய
கர்வத்துடன் இருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கள் சாதிக்காரர் அருகில்
இல்லா சூழ்நிலையில்/ ஆதரவு தர இயலா சூழலில் தான், ”யார் சார் இப்போல்லாம் சாதி பார்க்குறாங்க?”
என்று சொல்லிக்கொள்வார்கள்.
காதல் ஒன்றுதான்
ஜாதி வேறுபாடுகளை களையவல்ல மருந்து என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். வசதி வாய்ப்பும்
ஜாதி வேறுபாடுகளை குறைக்கவல்லது என்பது என் அனுபவம்.
என்னுடைய நெருங்கிய
உறவினர்கள் இருவர். அவர்களில் மூத்தவர் சென்னையிலும், தம்பி கிராமத்திலும் இருக்கிறார்.
இருவருமே நல்ல வசதியானவர்கள். அண்ணனின் பெண் வேற்று சாதி பையனை காதலித்தார். அந்தஸ்து
சமமாக இருக்கவும் ஒக்கே சொல்லிவிட்டார். தம்பியின் மகளும் அதே போலத்தான். அந்தஸ்தும்
பிரச்சினையில்லை. ஆனால் தம்பியின் வீட்டைச்சுற்றி முழுவதும் உறவுக்காரர்கள். அதனால்
என்னவோ வீண் ஜம்பத்திற்காக தம்பி அந்தக் காதலை ஒப்புக்கொள்ளவில்லை. ஜோடி எஸ்கேப். உறவுக்காரர்கள்
படை திரண்டு போய் ஜோடியை கண்டுபிடித்து பிரித்து விட்டுத்தான் மறு வேலை பார்த்தார்கள்.
நாங்கள் குடியிருக்கும்
பகுதியில் எல்லா சாதிக்காரர்களும் இருக்கிறார்கள். பல காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெற்றோர்கள் அந்தஸ்தை மட்டும்தான் பார்க்கிறார்கள். ஆனால் எங்கே ஒரே ஜாதிக்காரர்கள்
பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அங்கேதான் கௌரவம், அது இதுவென வெட்டியாக காதலை எதிர்க்கிறார்கள். அதேபோல் நாலு பேர் மதிக்க அந்தஸ்தான பதவி/வசதியில்
இருப்பவர்களும் அப்படியே.
கோவை புறநகர் ஒன்றில்
வசிக்கும் சைவ பிள்ளைமாரோ, திண்டிவனத்தில் வசிக்கும் தேவரோ, சிவகங்கையில் இருக்கும்
வன்னியரோ தங்கள் பிள்ளை காதலித்தால் வசதியை மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள்
முறையே நெல்லை, சிவகங்கை, திண்டிவனத்தில் இருந்தால் அதை ஒத்துக்கொள்வார்களா என்பது
சந்தேகம்.
ஏதோ, அப்படி வெளியூரில்
வசிப்பவர்களாவது காதலை அவ்வளவாக எதிர்ப்பதில்லை என்று பார்த்தால், சில திரைப்படங்கள்
வந்து அதைக் கெடுத்து விடுகின்றன.
சமீபகாலமாக மதுரை
ஏரியாவைச் சுற்றி எடுக்கப்பட்ட படங்கள் பெரும்பாலும் சாதிப்பெருமை பேசும் திரைப்படங்களாகவே
எடுக்கப்பட்டன. சுந்தரபாண்டியன் திரைப்படம் தொடங்கும் போதே, தங்கள் ஜாதிப் பெண்களை
காதலிப்பவர்களை எப்படி கொல்வோம் எனத்தான் ஆரம்பிக்கும். இப்போது குட்டிப்புலியிலும்
அப்படித்தான். தங்கள் தெரு/ஜாதி பெண்ணை கையை பிடித்து இழுத்தால் என்ன நடக்கும்? என்ன
செய்வோம்? என ஒரே பெருமை பீற்றல்கள்.
கல்லூரி செல்லும்
வயதில் இம்மாதிரிப் படங்களைப் பார்க்கும் இளைஞனுக்கு, சாதிப்பற்றை ஊட்டும் வகையில்தான்
இது இருக்கின்றது. எங்கள் ஏரியாவில் புதனன்று நடந்த காதணி வைபவத்தில் “குட்டிப்புலி
குரூப்ஸ்” என்று ஒரு பிளக்ஸ். ”சாதி விட்டு சாதி காதலித்தால் சங்கறுப்போம்” என கேப்ஷன்
வேறு. இதற்குப் பின்னால் நான்கு கல்லூரி மாணவர்கள்
மட்டும். அவர்களிடம் நான் பலமுறை பேசியிருக்கிறேன். இதற்கு முன்னால் அவர்கள் இப்படி
இருந்தது இல்லை. இந்தப் போஸ்டர் பார்த்துவிட்டு இன்னொரு குரூப் மன்னர் திருமலை நாயக்கர்
பேரவை என இன்று ஒரு நிகழ்வுக்கு பிளக்ஸ் வைத்துள்ளார்கள். இதிலும் கல்லூரி மாணவர்களே
சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆறாம் ஏழாம் வகுப்பு
படிக்கும் மாணவன் மனதில் கூட ஒரே ஜாதி பொண்ணதான் லவ் பண்ணனும்போல என்ற செய்தி இதனால்
கடத்தப்படுகிறது.
மொக்கைப்படங்களை
இப்படி ஒரு கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டுமா? என்ற ஒரு கேள்வியும்
எழலாம். இரானிய திரைப்படங்களையோ அல்லது மற்ற உலக திரைப்படங்களையோ தமிழகத்தில் 15 வயதுக்கு
உட்பட்டோர் பார்ப்பதில்லையே? அவர்கள் சுந்தர பாண்டியனையும், குட்டிப்புலியையும் தானே
பார்க்கிறார்கள்? தனக்கான நாயக பிம்பத்தையும் அவற்றில் இருந்து தானே வரித்துக் கொள்கிறார்கள்?.
14 comments:
நல்ல இடுகை..நிறைய பாயிண்ஸோடு ஒத்துப்போகிறேன் முரளி.
to the point..
ம்ம்ம்... அருமையான பதிவு
மிகத் தெளிவான அலசல் அண்ணா
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக மக்கள் சமூகத்திலேயே நம் தமிழ் சமூகம் மட்டுமே சினிமாவையும் ,வாழ்வியலையும் பிரித்தறிய முடியாமலோ அல்லது பிரிக்க விரும்பாமலோ கற்பனையில் உழன்று கொண்டிருக்கிறது .காதுகுத்தல் ,கல்யாணம் ,பூப்பெய்திய ,சாவு மற்றும் கருமாதி வரை தொடரும் .இவ்வளவு ஏன் லாரி மற்றும் டிப்பர் வண்டிகளில் சமீபத்தில் வெளியான படப்பெயர் எழுதி இருந்தால் அது FC முடித்ததாக கருதப்படுகிறது
சயிண்டீஸ்ட் ஒரு முக்கியமான பாயிண்டை விட்டுட்டீங்க.
நீங்க சொல்றது மாதிரி ஊர் விட்டு ஊர் வந்தவர்கள், ஜாதிவிட்டு ஜாதி லவ் பண்ணுவதை ஒத்துக் கொண்டாலும், அந்த இன்னொரு ஜாதி தங்களை விட தாழ்ந்த ஜாதியாக நினைக்கும் பட்சத்தில் அந்தஸ்தை இரண்டாம் பட்சமாக்கி எதிர்க்கவே செய்கிறார்கள்.
முகிலன்
சொல்ல சங்கடமாத்தான் இருக்கு. ஆனாலும் பரவாயில்லை.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரை மட்டுமே அத்தராசில் பெரும்பாலும் வைக்கிறார்கள். அதைத் தவிர எந்த சாதி என்றாலும் ஒத்துக்கொள்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு போலிஸ் ஸ்டேஷனில் நடந்த பஞ்சாயத்துக்கு சென்றிருந்தேன். அங்கே பெண்ணின் தகப்பனார், வேற யாராயிருந்தாலும் பரவாயில்லை. சரின்னு சொல்லியிருப்பேன். என்று கொந்தளித்தார். மனதுக்கு மிக கஷ்டமாய் இருந்தது.
Natchu..Dot...
Natchu..Dot...
அருமையான பதிவு, இப்போது தவறான படம் எடுக்கும் கூட்டத்திற்கும், சாதி அரசியல் செய்வோருக்கும் தேவையான ஒன்றும் கூட
அவசியமான பதிவு. அருமை முரளி.
Nalla pathivu.
Good post
Post a Comment