July 27, 2013

சகலகலா வல்லவன் – சில நினைவுகள்

நான் நான்காவது படிக்கும் போது வந்த படம் இது. ஒரு சிறுவனின் மனதில் நீங்காமல் தங்கிவிட்ட திரைப்படத்தினைப் பற்றிய பதிவே இது.

ஒரு படத்தின் உண்மையான வெற்றி தெரிய நான்கு வாரங்கள் கூட ஆகிய காலம் அது. 40 பிரிண்ட் போடுவதெல்லாம் பெரிய விஷயமாக, பத்திரிக்கைகளில் துணுக்குச் செய்தியாக வரும். ஓல்ட் எம் ஆர் என்று அழைக்கப்பட்ட பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆறு அல்லது எட்டு பிரிண்ட்தான் வரும்.

படம் வெளியாகி 50 நாட்களுக்குள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டால், அது சுமாரான படம். 100 நாட்கள் கழித்து வந்தால் வெற்றிப்படம், 175 நாள் கழித்து வந்தால் தான் சில்வர் ஜூப்ளி.

ஆனால் எங்கள் ஊரில் அந்தந்த காலகட்டத்தில் இளவட்டமாக இருப்பவர்கள் மதுரைக்கோ திண்டுக்கலுக்கோ சென்று படம் பார்த்து விட்டு வந்து படத்தைப் பற்றி சொல்லிவிடுவார்கள். படம் எப்படா வருமென மற்றவர்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். சில படங்களை எதிர்பார்த்து பசலையே வந்திருக்கிறது.

எதிர் வீட்டு ஞானசெல்வம், கமலின் விசிறி. அவர் திண்டுக்கலுக்கு போய் படம் பார்த்து விட்டு அதை விவரித்த விதத்தில், உடனேயே படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்கள் தெருவுக்கே ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் என்விஜிபி திரையரங்கில் படம் திரையிடப்பட்டு இருந்தது. ஏழு பேர் உட்காரும் பேக் பெஞ்சில் பத்துப்பேருக்கு மேல் நெருக்கியடித்து உட்கார்ந்து படம் பார்த்தார்களாம். மதியக்காட்சிக்கு கதவை மூடமுடியாதபடி மக்கள் நின்று கொண்டு படம் பார்த்தார்களாம். மாலைக் காட்சிக்கு வெளியில் நின்ற வரிசையை போலிஸாலேயே கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

அவர் சொன்னதில் சகதி சண்டை, கம்பு சண்டை, கார் சேஸிங், நியூ இயர் பாட்டு இவைதான் அந்தப் பிராயத்தில் என்னை கவர்வதாய் இருந்தது,
மதுரையில் என் சித்தப்பா இருந்தார். சென்ட்ரல் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே சைக்கிள் பார்க் செய்து டோக்கன் வாங்குபவர்களுக்கு டிக்கட்டில் முதல் மரியாதை. அவரிடம் அடம் பிடித்து, தியேட்டருக்கு கூட்டிப் போய்விட்டேன். தியேட்டர் வாசலையே நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம். திரும்பி வந்து விட்டோம்.

பின் ஒரு திருமணத்துக்கு திண்டுக்கலுக்கு குடும்பத்தோடு சென்று இருந்தோம். மண்டபத்தில் ராத்தங்கல். அங்கு இருந்த உறவினர்களை தாஜா செய்து அந்த படத்துக்கு போன குழுவோடு இணைந்து கொண்டேன். அப்போது படம் வந்து 50 நாளாயிருக்கும். ஆனாலும் டிக்கட் கிடைக்கவில்லை.

வாழ்க்கையில் முதன் முதலில் சந்தித்த ஏமாற்றம் இதுதான் என நினைக்கிறேன். எனக்குத்தெரிந்தவர்கள் எல்லாம் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று சொல்ல என்னுள் ஆர்வம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

டீக்கடை ஸ்பீக்கர்கள், திருமண, சாமி கும்பிடு விழா ஒலிபெருக்கிகள் என எங்கும் சகலகலா வல்லவன் பாடல்கள் தான். பற்றாக்குறைக்கு சினிமாவைப் பற்றி தங்களுக்கு அதிகம் தெரியும் என பறைசாற்றிக்கொள்ளும் கல்லூரி மாணவர்கள் வேறு, நியூ இயர் சாங்குக்கு செட்டுக்கு ஒன்றரை லட்சம், கமல் அதில் ஆட ஒரு லட்சம் என்றெல்லாம், கிளப்பி விட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

ஒரு வழியாக பெட்டி, பெரியகுளம் அருளில் ஓடிவிட்டு, உசிலம்பட்டி மலையாண்டிக்கு வந்து விட்டது. அடுத்து வத்தலகுண்டு கோவிந்தசாமிக்குத்தான் என விவரமறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்திவிட்டன.

யோசித்துப் பார்த்தால், என்னுடைய திருமணத்துக்கு கூட அவ்வளவு எக்ஸைட்மெண்டுடன் காத்துக் கொண்டிருந்ததில்லை. வீட்டில் கூட அடுத்த வாரம் கோவிந்தசாமியில சகலகலா வல்லவன் வருதாம் என புலம்ப ஆரம்பித்து இருந்தேன்.

என்னுடைய தந்தை சாரதா, துலாபாரம், சுமைதாங்கி போன்ற படங்களையெல்லாம் பார்த்து விட்டு அழுதுகொண்டேதான் வீட்டுக்கு வருவாராம். அதனால் அவரும் என்னை இந்த விஷயங்களில் கண்டிக்க மாட்டார்.

அந்த நாள் மிக நெருங்கி விட்டது. நாளை முதல் நான்கு காட்சிகளாக, என குதிரை வண்டியில் வந்து தெருவெங்கும் அனவுன்ஸ் செய்துவிட்டுப் போனார்கள். ஊரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையெல்லாம் குழாமாகப் போய் பார்த்து விட்டு வந்தோம். எங்கு தட்டி வைப்பது என்று பார்ப்பதற்காக ஒரு தியேட்டர் விசிட் வேறு. கூட்டத்தைக் கட்டுப்படுத்த, வழக்கமான கவுண்டரின் நீளப் போதாது, என சவுக்குக் கட்டைகளைக் கொண்டு நீளமான கவுண்டர்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

சேட் ஆர்ட்ஸில் சொல்லி எங்கள் தெரு கமல் ரசிகர்கள் பெரிய தட்டி ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார்கள். பழைய சைக்கிள் டயர்களின் இடையே கம்புகளை எக்ஸ் வடிவில் வைத்து, அதன்மீது பேப்பர் ஒட்டி தயாரிக்கப்படும் ரவுண்டு தட்டிகளும் ஏற்பாடாகிக் கொண்டிருந்தன. களைப்புத் தெரியாமல் மக்கள் வேலை செய்ய படுக்கை வசத்தில் இருக்கும் டெல்லி செட்டில் திரும்பத் திரும்ப சகலகலா வல்லவன் பாடல்கள்.

”படத்தைக் காண வரும் அன்பு உள்ளங்களை வருக வருக என வரவேற்கும் சிகப்பு ரோஜா கமல் ரசிகர் மன்றம்” என எழுதி வரிசையாக பெயர்களை எழுதிக் கொண்டே வந்தார்கள். ஞான செல்வம் அண்ணன் “இவன் பெயரையும் எழுதுங்க” என்று சொன்னார். நோபல் பரிசு பட்டியலில் என் பெயர் இருந்தால் கூட அவ்வளவு சந்தோஷம் வருமா என்று தெரியாது. அன்று வந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.  
அன்று எனக்கு கமல் ரசிகனாக வழங்கப்பட்ட ஞானஸ்நானம் இன்று வரை என்னை செலுத்திக் கொண்டேயிருக்கிறது. இண்டர்வியூவை விட இந்தியன் முக்கியம் என்று சொன்னது, தலை தீபாவளி அன்று காலை 5 மணிக்கு ஆளவந்தான் கியூவில் நிற்கச் சொன்னது, விஸ்வரூபத்துக்கு பார்டர் தாண்ட வைத்தது.

ஒருவழியாக படத்தைப் பார்த்துவிட்டேன். அதன்பின் சுமார் பத்து வருடங்களுக்கு எங்கள் ஏரியாவில் நடைபெற்ற கோவில் விழாக்களின் போது, சிறப்புத் திரைப்படமாக  சகலகலா வல்லவன் திரையிடப்பட்டுக்கொண்டேயிருந்தது. நானும் சளைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
படம் வெளியாகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளும் ஆங்கில புத்தாண்டு, இளமை இதோ இதோ பாடல் கேட்டுத்தான் விடிகிறது.

சிறு பத்திரிக்கையாளர்கள்/ இலக்கியவாதிகள்/ திரைப்பட ஆய்வாளர்கள் இந்தப் படம் தமிழ் சினிமா வளர்ச்சியில் ஏற்படுத்திய தடைக்கற்களைப் பற்றி புலம்பியே ஓய்ந்து விட்டார்கள்.

இப்போது இந்தப் படத்தை, இந்தத் தலைமுறையினர்  பார்த்தால், வி கே ராமசாமியின் காமெடி ரசிக்கும் படி இருக்கும். டைட்டில் பாட்டுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று விழிப்பார்கள். நல்ல மசாலா பேக்கேஜ் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள்.


என்னுடைய ஒரே சந்தேகமெல்லாம், இப்படத்தில் வரும் நிலாக் காயுது பாடலில்தான். மிக பட்டவர்த்தனமாக உறவின் ஓசை இந்தப் பாடலில் வருகிறது. இதை எப்படி 30 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகம் ஏற்றுக்கொண்டது? இப்படத்தின் பாடல்களை வீட்டில் உள்ள எல்லோரும் வேறு சேர்ந்து கேட்பார்கள். பூக்கட்டும்/தீப்பெட்டி ஒட்டும்/ பல்பொடி பாக்கட் போடும் வீடுகளில் எல்லாம், டேப் ரிக்கார்டர் நடு நாயகமாக இருக்கும். சுற்றி அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பார்கள். கேசட்டில் நிலாக்காயுது பாடல், இரண்டு முறை வேறு வரும். எப்படி இதை ஏற்றுக் கொண்டார்கள்? என்பதே?.

27 comments:

King Viswa said...

அட்டகாசமான பின்னணி.

இதையெல்லாம் படிக்கும்போதுதான் என்னுடைய இளமையை தமிழ்நாட்டில் கழிக்காதது என்னை வாட்டுகிறது.

பிரம்மாதம் சார்.

கண்டிப்பாக வாரம் ஒருமுறையாவது ஒரு பதிவு இடுங்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி விஸ்வா.

சரவணகுமரன் said...

Super...

இல்யாஸ்.மு said...

Super write up..took me to my young age..:)

இல்யாஸ்.மு said...

Super write up..took me to my young age..:)

திண்டுக்கல் தனபாலன் said...

மூட்டைப்பூச்சி தியேட்டரில்...!

கமலின் "ஹீரோ + மசாலா" சகலகலா வல்லவனோடு முடிந்து விட்டது...

உலக சினிமா ரசிகன் said...

உங்கள் சந்தேகத்துக்கான விடை அல்ல...
அதையொட்டிய பிளாஷ்பேக்.

படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நேரம்...
பிரபல நடிகர் ஒருவர் எஸ்.ஜானகியிடம் கேட்டார்.
“எப்படி பாட்டுக்கு நடுவில் ‘ஸ்பெஷல் எபெக்ட்ஸ்’ கொடுக்கிறீர்கள்...அக்கா?”

நடிகர் எந்த பாடலை குறித்து கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு...
“நீங்க நடிக்கும் போது முகத்தில் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை நான் குரலில் கொண்டு வருகிறேன்.அவ்வளவுதான்” என்றார்.

முரளிகண்ணன் said...

நன்றி சரவணகுமரன்

நன்றி இல்யாஸ்

நன்றி தனபாலன்

நன்றி உலக சினிமா ரசிகன். ஜானகி சரியான பதிலடிதான் கொடுத்திருக்கிறார்.

Anonymous said...

அருமையான பதிவு, நன்றி முரளி

காரிகன் said...

முரளி கண்ணன்,
நேர்மையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்தப் படத்தில் நடித்த கமலஹாசனே இப்போது பேட்டிகளில் இந்தப் படத்தை தவிர்க்க சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவின் தரத்தை வெகுவாக சீரழித்த திரைப்படம் இது. இளமை இதோ என்னும் புத்தாண்டு பாடலைத் தவிர இதில் எந்த சிறப்பும் இல்லை.உங்களின் இறுதி பத்தியில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி மிகச் சரியானது. நான் இளையராஜாவை காட்டமாக விமர்சிப்பதாக சிலர் குறை கூறுவதுண்டு. அதற்கு காரணமே இந்த நிலாகாயுது பாடல்தான். இளையராஜா தமிழ்த் திரையிசையை வேறு திசைக்கு இழுத்துச் சென்றது மட்டுமில்லாது விடலைப் பருவத்து காமங்களை இசையாக மாற்றி,இன்றைக்கு அதிக அளவில் கேடுகெட்ட பாடல்கள் வருவதற்கு பாதை அமைத்துக் கொடுத்தார். இந்தப் பாடல் தமிழ் வானொலிகளில் தடை செய்யப்பட்டது. எத்தனை சிறப்பான பாடல்களை ஜானகி பாடியிருந்தாலும் இந்த ஒரு பாடல் அவரின் இசை அத்தியாயத்தில் ஒரு கரும் புள்ளி. இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பது எனக்கும் உங்களைப் போலவே திகைப்பாக இருக்கிறது. அதை விட இப்படி ஒரு ஆபாசமான சிந்தனை எப்படி அந்த "ஞானி" யின் மனதில் தோன்றியிருக்கும் என்பதை நினைக்கும் போது "இவனுக எதையும் கேப்பானுக" என்று நம் ரசனையை அவர் கீழ்த்தரமாக எண்ணிவிட்டாரோ என்று தோன்றுகிறது.

ராஜ் said...

சான்ஸ்சே இல்ல பாஸ்... அட்டகாசமா விவரிச்சு இருக்கீங்க. என்னோட ஊர் தியேட்டர்ல படம் பார்த்தது எனக்கு ஞாபகம் வந்துடிச்சு.

முரளிகண்ணன் said...

நன்றி ஆருர் மூனா செந்தில்

நன்றி காரிகன்

நன்றி ராஜ்

தி.தமிழ் இளங்கோ said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். முக்கியமாக, கடைசி பாராவில் சொன்ன வரிகள். கிராமத்து மினி பஸ்களில் இந்த பாடலை சர்வ சாதாரணமாக எல்லோரும் கேட்டார்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Nice sakalakala vallavan nnu en photo pottirukkalaam :)

முரளிகண்ணன் said...

நன்றி தமிழ் இளங்கோ

நன்றி ரமேஷ்

”தளிர் சுரேஷ்” said...

சுவையான நினைவுகள்! சகலகலா வல்லவன் வந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது உண்மைதான்! நிலாகாயுது பாடல் குறித்த தங்கள் சந்தேகம் எனக்கும் உண்டு! பகிர்வுக்கு நன்றி!

ராவணன் said...

ஆஹா...மலரும் நினைவுகள்......

எங்க மாமா சொல்வதைக் கேட்டால்...

15-08-1982-ல் இந்தப் படம் ரிலீஸ்.
மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில். தெற்கு வாசல் வழியாக மீனாட்சிய பாக்கப் போவதைவிட சென்ட்ரலில் படம் பாக்கப் போவதே அதிகம்.

வேட்டி சட்டையில் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றேன். சென்றது காலைக்காட்சிக்கு....டிக்கெட்டு கெடைக்குமா? மேட்னி ஷோவிற்குக்கூட டிக்கெட் கெடைக்கவில்லை. விடுவனா....?

வீட்டுக்குப் போய் கைலி..பனியனில் திரும்பவும் சென்றேன். 6 மணி ஷோவிற்கு டிக்கெட் கிடைத்தது.

எங்க மாமா அப்பப்ப பழச கூறுபோடுவார். அதுவும் அந்தக் கிணத்தடியில் பாடும் நிலாக்காயுதே என்ற பாட்டைக் கேட்டு.......

கோபிநாத் said...

//என்னுடைய தந்தை சாரதா, துலாபாரம், சுமைதாங்கி போன்ற படங்களையெல்லாம் பார்த்து விட்டு அழுதுகொண்டேதான் வீட்டுக்கு வருவாராம். அதனால் அவரும் என்னை இந்த விஷயங்களில் கண்டிக்க மாட்டார்.//

எங்க வுட்டுளையும் இதே கதை தான்...பிதாமகன் படத்துக்கு ஈவினிங் ஷோ படம் பார்த்துட்டு நைட் ஷோவுக்கு அப்பாவுக்கு டிக்கெட் வாங்கிட்டு போயி கொடுத்தேன் ;))

Nat Sriram said...

As usual, செமத்தியான ரைட்டப் முரளிகண்ணன். உங்கள் கடைசிப்பத்திக்கு பாரலலாய் என்னிடம் ஒரு தியரி உண்டு. சினிமாவில் கவர்ச்சி அந்தக்காலக்கட்டத்துடன் பார்க்கையில் உண்மையில் கம்மியாகிவிட்டது. ஒரு சைன் கர்வ் போல் கவர்ச்சி அந்த காலக்கட்டத்தில் ஏறி,இன்று குறைந்துவிட்டது. யோசித்துப்பாருங்கள்,ஒரு முன்னணி ஹீரோயின், டிக்டிக்டிக் மாதவி போன்று 2 பீசில் இப்போது வருகிறாரா? அக்காலக்கட்டதுக்கான கவர்ச்சி tolerance ரொம்பவும் அதிகமாக இருந்திருக்கிறது..

முரளிகண்ணன் said...

நன்றி சுரேஷ்

நன்றி ராவணன். அந்தக் காலத்தில் காலைக்காட்சி வரிசையில் நின்று மாலை, இரவு காட்சிகள் பார்ப்பார்கள். அந்த கியூவில் நிற்கும் போது சில விஷயங்களைப் பற்றி பேசும்போது, நண்பர்களும் கிடைப்பார்கள்.



முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்.

நன்றி நட்ராஜ். சைன் கர்வ் உண்மைதான். இகாரஸ் பிரகாஷ் அவர்கள் சொன்னது “ அப்போது நிறைய நியூ வேவ் சினிமாக்கள் வந்தன” அதன் நீட்சியாக மற்ற பட கவர்ச்சியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போ குறைந்துவிட்டது :-(((

swejeni said...

அந்த கால கட்டத்தில் சினிமாவின் வெற்றி பெரும்பாலும் கிராம மற்றும் எளிய மக்களால் நிர்ணயிக்கப்பட்டது . அவர்கள் பாசாங்கில்லாமல் எதையும் ரசிக்க கூ டியவர்கள். வள்ளி திருமணம் என்ற பெயரில் நடத்தப்படும் நாடகம் ஒரு உதாரணம். நெல்லை பார்வதி தியேட்டரில் இந்த படத்தை 4 முறை பார்த்திருக்கிறேன். அந்த பாடல் உறுத்தாமல்தான் கடந்து சென்றதாக ஞாபகம்.

முரளிகண்ணன் said...

நன்றி Swegeni

Unknown said...

murali sir, why are you delay for every posting

சார்லஸ் said...

மிஸ்டர் முரளி

உங்களின் பதிவு என் நினைவுகளையும் தூசி தட்டி எழுப்பி விட்டது. இளமைக் காலத்து நினைவுகள் பசுமையாய் கண் முன் விரிகிறது . சகல கலா வல்லவன் காரம் மணம் தூக்கிய சரியான மசாலா படம் . ஏறக்குறைய பெரிய இடத்து பெண் எம். ஜி. ஆர் கதைதான் . மக்கள் ரசனைகளை புரிந்து கொள்ள முடியாது . ஆனால் கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் படம் ஜாலியாக சென்றதால் வெற்றி அடைந்தது . நானும் சென்ரல் தியேட்டரின் வாசலில் மணிக்கணக்கில் தவம் கிடந்து உள்ளே புகுந்தவன். நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சம் இனிக்கிறது .

இளையராஜாவின் இசைதான் அவ்வளவு பெரிய வெற்றிக்கு மிக முக்கிய காரணம் . நியூ இயர் பாட்டை அடிக்க இன்னொரு பாடல் பிறக்கவில்லை என்பது மிகச் சரியான கூற்று. ஆனால் நிலா காயுது பாட்டைப் பற்றி தவறான சிந்தனையை எழுப்பி இருக்கிறீர்கள். பாலுணர்வு பாடல்கள் பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது . ஆச்சரியம் என்னவெனில் அவை எல்லாம் சூப்பர் ஹிட் ! உதாரணம் எழந்த பயம் பாட்டு . அதில் இல்லாத அசிங்கமா என்ன!? எத்தனை அழகு கொட்டி கிடக்குது என்ற பாட்டு கேட்டு இருக்கீங்களா? இதழே இதழே தேன் வேண்டும் எம். ஜி. ஆர் பாட்டு கேட்டுருக்கீங்களா ? எல்லாம் 'அந்த ' மாதிரி பாடல்கள்தான் . இதில் இளையராஜாவை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை . காரிகன் புது கதை விடுகிறார் . அந்தப் பாட்டு வந்ததில் இருந்துதான் தமிழிசை கெட்டுப் போச்சாம் !

சார்லஸ் said...

மிஸ்டர் முரளி

உங்களின் பதிவு என் நினைவுகளையும் தூசி தட்டி எழுப்பி விட்டது. இளமைக் காலத்து நினைவுகள் பசுமையாய் கண் முன் விரிகிறது . சகல கலா வல்லவன் காரம் மணம் தூக்கிய சரியான மசாலா படம் . ஏறக்குறைய பெரிய இடத்து பெண் எம். ஜி. ஆர் கதைதான் . மக்கள் ரசனைகளை புரிந்து கொள்ள முடியாது . ஆனால் கொடுத்த காசுக்கு குறைவில்லாமல் படம் ஜாலியாக சென்றதால் வெற்றி அடைந்தது . நானும் சென்ரல் தியேட்டரின் வாசலில் மணிக்கணக்கில் தவம் கிடந்து உள்ளே புகுந்தவன். நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சம் இனிக்கிறது .

இளையராஜாவின் இசைதான் அவ்வளவு பெரிய வெற்றிக்கு மிக முக்கிய காரணம் . நியூ இயர் பாட்டை அடிக்க இன்னொரு பாடல் பிறக்கவில்லை என்பது மிகச் சரியான கூற்று. ஆனால் நிலா காயுது பாட்டைப் பற்றி தவறான சிந்தனையை எழுப்பி இருக்கிறீர்கள். பாலுணர்வு பாடல்கள் பழங்காலத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது . ஆச்சரியம் என்னவெனில் அவை எல்லாம் சூப்பர் ஹிட் ! உதாரணம் எழந்த பயம் பாட்டு . அதில் இல்லாத அசிங்கமா என்ன!? எத்தனை அழகு கொட்டி கிடக்குது என்ற பாட்டு கேட்டு இருக்கீங்களா? இதழே இதழே தேன் வேண்டும் எம். ஜி. ஆர் பாட்டு கேட்டுருக்கீங்களா ? எல்லாம் 'அந்த ' மாதிரி பாடல்கள்தான் . இதில் இளையராஜாவை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை . காரிகன் புது கதை விடுகிறார் . அந்தப் பாட்டு வந்ததில் இருந்துதான் தமிழிசை கெட்டுப் போச்சாம் !

முரளிகண்ணன் said...

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சார்லஸ்.