ஆரம்பம் வெளியாகி
இருவாரங்கள் கழித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்கச்
சென்றிருந்தேன். வாரத்தின் முதல் வேலை நாள். மதியக் காட்சி. டிக்கட் வாங்கிக்கொண்டு
அரங்கில் நுழைந்த எனக்கு ஆச்சரியம். ஏறத்தாழ 50% சதவிகித இருக்கைகள் நிரம்பியிருந்தன.
தெருவுக்கு தெரு படம் ரிலீஸாகும் இந்நாட்களில் இவ்வளவு கூட்டமா என நினைத்துக் கொண்டிருக்கும்
போதே படம் போடத் தொடங்கினார்கள். அதைவிட ஆச்சரியம், அஜீத்தின் அறிமுக காட்சியின் போது, ஐந்து நிமிடங்களுக்கு
இடைவிடாமல் கைதட்டலும், விசிலும் தூள் பறந்தது.
அஜீத் அறிமுகமான
அமராவதி, சோழா பொன்னுரங்கத்திற்காக பார்த்த படம். ஏனென்றால் அவர் தயாரிப்பில் ஏற்கனவே
வெளியாகி இருந்த தலைவாசல். கிட்டத்தட்ட அதே டெக்னிக்கல் டீமுடன் அவர் களமிறங்கிய படம்
என்பதால் போய் பார்த்த படம். அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலான அஜீத் படங்களைப்
பார்த்தாயிற்று. அவர் படங்களில் 25% அளவிற்கே வெற்றிப்படங்கள். மீதம் அனைத்தும் தோல்விதான்.
சில படங்களை எல்லாம் ஆயிரம் ரூபாயும் அனாசினும் கொடுத்தால் கூட பார்க்க முடியாது. ஆனாலும்
இப்படி ஒரு மாஸ் எப்படி சாத்தியமாயிற்று?
அமராவதிக்குப்
பின் பவித்ரா, பாசமலர்கள் போன்ற படங்களில் அஜீத் நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு
வண்ணத்திரை கொடுத்த பட்டம் “ஏழைகளின் அரவிந்தசாமி”. ஆசை படம்தான் கேரியரில் குறிப்பிடத்தக்க
முதல் படம் என்றாலும், அவருக்கு இளம் ரசிகர்களை பெற்றுத்தந்த படம் அகத்தியனின் வான்மதி
தான். அதில் ஏற்றிருந்த கேஸுவலான இளைஞன் கேரக்டர் கல்லூரி மாணவ ரசிகர்களை பெற்றுத்தந்தது.
பின் அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை. அப்பட வெற்றிக்குப் பின்னரும் சுமாரான படங்களிலேயே
அஜீத் நடித்து வந்தார்.
விஜய்,பிரசாந்த்,
விக்ரம்,கார்த்திக், ரஞ்சித்,சத்யராஜ்,பார்த்திபன்,அப்பாஸ் என அப்போது ஹீரோவாய் நடித்துக்
கொண்டிருந்த நடிகர்களுடன் எல்லாம் சேர்ந்து நடித்தார்.
99ல் வெளியான வாலி,
நல்ல திருப்புமுனை. அந்தப் படத்திற்குப் பின்னால் தான் எல்லா நகரங்களிலும் அஜீத் ரசிகர்
மன்றங்கள் பெருமளவில் துவங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் அஜீத் கொடுத்த சில பேட்டிகளால்
“வாய்க் கொழுப்பு நடிகர்” என்ற கிசுகிசு அடைமொழி அவருக்கு கிடைத்தது. அமர்க்களம் படம்
மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜ் மெல்ல மெல்ல உருவானது. முகவரி, கண்டு கொண்டேன் கண்டு
கொண்டேன் மூலம் பேமிலி ஆடியன்ஸிடம் ரீச் கிடைத்தது.
2001ல் வெளியான
தீனா தான் மிகப் பெரும் திருப்புமுனை ஆனது. ஏராளமான ரசிகர்களை அஜீத்துக்கு தந்து, தலை
என்னும் பட்டத்தையும் தந்தது. அதன்பின்னரும் அவருக்கு ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை
தான் வெற்றிப்படம் கிடைத்தது. விஜய்யின் வெற்றிப்படங்களுடன் ஒப்பிட்டால் அஜீத், அதில்
40% தான் வெற்றி கொடுத்திருப்பார். அஜீத் தலையைக் காட்டினாலே போதும் படம் எப்படி இருந்தாலும்
பரவாயில்லை, பார்க்க நாங்கள் ரெடி என்னும் ஒரு கூட்டமே இப்போது உருவாகியிருக்கிறது.
இவ்வளவு ரசிகர்களை
அஜீத் பெற்றிருப்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தோன்றிய சில காரணங்கள்.
இயல்பாகவே ஒரு
நடிகர் மீது பார்வையாளர்களுக்கு வரும் ஈர்ப்பு. இதற்கு காரணங்கள் தேவையேயில்லை. ஆனால்
அந்த ஈர்ப்பு காலாவதி ஆகாமல் அந்த நடிகன் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த 20 ஆண்டுகளில்
அஜீத்துக்கு தன் பர்சனாலிட்டி மூலமும், ஏற்ற வேடங்கள் மூலமும் புதிது புதிதாய் ரசிகர்கள்
கிடைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
தானே கையூன்றி,
சுற்றத்தார் ஆதரவு இல்லாமல் வாழ்க்கையில் எழுந்தவர்களுக்கு அஜீத் தங்களைப் போல என்னும்
ஓர் எண்ணம் இருக்கும். பல போராட்டங்களை/அவமதிப்புகளை வாழ்க்கையில் சந்தித்து எழுந்தவர்களுக்கு
அஜீத் இடைக்காலத்தில் திரைஉலகம்/மீடியா மூலம் பட்ட கஷ்டம் ஒரு சார்பைக் கொடுத்திருக்கலாம்.
எந்த இடத்திலும்
எதிர் அரசியல் என்று ஒன்று இருக்கும். திமுக பிடிக்காதவர்கள் எல்லாம் அதிமுகவிற்கு
ஓட்டுப்போடுவது போல, விஜய்யைப் பிடிக்காதவர்கள் எல்லாம் அஜீத்தின் பக்கம் சாய்வது.
மசாலா படம் தான் கொடுப்பேன்னு திமிரா சொல்லி நடிக்கிறான், டான்ஸைத்தவிர ஒண்ணும் இல்லை-
அடுத்த சூப்பர் ஸ்டாருன்னு சொல்லுறாங்களேன்னு எரிச்சல் அடைபவர்கள் அஜீத்தை ஆதரிக்க
தலைப்படுகிறார்கள். இதற்கிடையே என் பையன் தான் அடுத்த சி எம் என்னும் ரேஞ்சுக்கு விஜய்யின்
தந்தையார் முன்னாட்களில் கொடுத்த ஸ்டேட்மெண்டுகள் பலருக்கும் கடுப்பைக் கிளப்பியிருக்கும்.
தென் மாவட்டங்களில்
ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அஜீத்துக்கு தங்களது போஸ்டர்கள், பிளக்ஸ்களில் தொடர்ந்து
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் எதிர் அரசியலே.
நாங்கள் யாருக்கும்
அடிபணிய மாட்டோம், தலை நிமிர்ந்து இருப்போம், எங்களுக்கு யார் தயவும் தேவையில்லை. என
சிலர் இருப்பார்கள். அதுபோன்ற கெத்தை திரையிலும் ஓரளவு நிஜ வாழ்விலும் பிரதிபலிப்பவர்
அஜீத். அதனால் அந்த வகையறாவும் அஜீத்துக்கு ரசிகராக இருக்கிறார்கள்.
இப்போது வரும்
விளம்பரங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னராக வந்த விளம்பரங்களுக்கும் ஒரு வித்தியாசத்தைக்
கவனிக்கலாம். ஆக்ஸ் எஃபெக்ட், உள்ளாடை, ஆயத்த ஆடை வகையறா விளம்பரங்களைத் தவிர மற்ற
விளம்பரங்களில் வரும் ஆண்கள் முன் வழுக்கையுடன், லேசான தொந்தியுடன் இருப்பதைக் கவனிக்கலாம்.
முகம் மட்டும் சிகப்பாக, ஓரளவு களையுடன் இருக்கும் (பற்கள் துருத்தாமல், கன்னம் டொக்கு
விடாமல்). பல விளம்பரங்களில் ஆண்கள் கண்ணாடியுடனும் இருப்பார்கள். ஆனால் முன்னர் வந்த
விளம்பரங்களில் எல்லாம் ஆண்கள் நல்ல சுருள் முடியுடன், தட்டை வயிறுடன் இருப்பார்கள்.
தற்போது ஆணுக்கு
பார்க்க சகிக்கிற முகமும், நல்ல வேலையுமே ஒரு அடிப்படைத் தகுதியாக பார்க்கப்படுகிறது
(திருமண மார்க்கட்டிலும்) முன் வழுக்கை, இளம் தொந்தி, இள நரை, பித்த நரை, சாளேசுவர
கண்ணாடி யெல்லாம் அவன் உழைப்பின் அடையாளமாகப் பார்க்கப் படுகிறது.
தற்போது 30+ ஆண்கள்
பெரும்பாலும் மேற்கூறிய டிராபேக்குகளுடன் தான் இருக்கிறார்கள். தொப்பை, நரை இவற்றுடன்
பெரும் கமர்சியல் ஸ்டாராக பிரகாசிக்கும் அஜீத்தை அவர்களுக்கு ஆதர்சமாக பிடித்துப் போகிறது.
தமிழ்நாட்டில்
பலர், நாங்கள் கஞ்சனாக இருப்போம், சுயநலமாக இருப்போம்,அடுத்தவனை மதிக்க மாட்டோம் ஆனால்
நாங்கள் ஆதரிக்கும்/ரசிக்கும் நபர் கொடை வள்ளலாக, அடுத்தவர் துன்பத்தைக் கண்டு இரங்குபவராக,
மனிதனுக்கு மதிப்பளிப்பவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள்.
எம்ஜியார் இதை
சரியாக புரிந்து வைத்து, மக்களை ஈர்த்தார். அவரின் சினிமா போட்டியாளரான சிவாஜி கணேசனும்,
அரசியல் போட்டியாளரான கருணாநிதியும் இந்த விஷயத்தில் அவரிடம் தோற்றுப் போனார்கள். ரஜினிகாந்த்
இந்த விஷயத்தில் எம்ஜியார் பார்முலாவை பின்பற்றினார். ஆரம்பத்தில் விஜய் இந்த பார்முலாவை
பின்பற்றினாலும், பின்னர் அவரது சாயம் அவ்வப்போது வெளுத்தது.
ஆனால் அஜீத்துக்கு
கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த விஷயத்தில் நல்ல மைலேஜ் கிடைக்கிறது. பல பத்திரிக்கைகளில்
அவர் செய்த உதவிகள் அடிக்கடி வெளிவருகின்றன. 15 நாட்களுக்கு ஒருமுறை அவர் யாருக்காவது
பிரியாணி செய்து போட்டு விடுகிறார். படம் வெளியாகும் சில வாரம் முன்பு “எனக்கு விளம்பரம்
பிடிக்காது/ பேட்டியெல்லாம் எதுக்கு” என்ற தொனியில் முண்ணனி பத்திரிக்கைகளில் பேட்டி
வருகிறது. நலிவடைந்த தயாரிப்பாளர் பயன் பெற்றார் போன்ற செய்திகளும் எல்லா ஊடகங்களிலும்
பிளாஷ் ஆகிறது. இதன் மூலமும் குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் அவருக்கு உருவாகிறார்கள்.
ரேஸ் ஓட்டுவது,
பொம்மை விமானம் பறக்க விடுவது போன்ற சில செயல்களும் அஜீத்துக்கு நடிகரைத் தாண்டிய ஒரு
இமேஜைக் கொடுத்துள்ளது. வேல்யூ ஆடட் கோர்ஸ் என்பதைப் போல இந்த தகுதிகளும், ரசிகர்கள்
அஜீத்தைப் பின் தொடர, மற்றவர்களுடன் வாதிட ஒரு வாய்ப்பைத் தருகின்றன.
ஆரம்பத்தில் பக்க
பலமாக இருந்து பின் உபத்திரமாக மாறிய நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் பிடியில் இருந்து
அஜீத் வெளியேறியபின் அதிகப்படியான உயர்வு அஜீத்துக்கு. நிக் ஆர்ட்ஸ்க்காக அஜீத் நிறைய கஷ்டப்பட்டதால், நண்பர்களுக்காக
எதையும் செய்பவர், நட்பைப் பேணுவதில் வல்லவர் என்ற பிம்பம் அஜீத்துக்கு நன்கு உருவாகியிருந்தது.
இதுவும் தம்ழ்நாட்டு மக்களுக்கு மிகப் பிடித்த பிம்பம். விஜய்க்கு செல்பிஷ் ஆனவர் என்ற
பிம்பமே இப்போது இருக்கிறது (புவர் மார்க்கெட்டிங் டெக்னிக்ஸ்).
எனவே இயல்பாக உருவான
ரசிகர் கூட்டம், மற்றும் இது போன்ற காரணங்களால் ஆதரிக்க தலைப்பட்ட கூட்டமும் சேர்ந்து
அஜீத்தை மிகப் பெரும் கமர்சியல் ஸ்டார் ஆகிவிட்டார். தொடர்ந்து இதுபோல கவனமாக இருந்து
வந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் ரஜினி இப்போது இருக்குமிடத்தில் அஜீத் இருப்பார்.