மஹாபாரதத்தில்
தனக்கு, எந்த இடத்திலும் இரண்டாம் இடமே வாய்த்திருக்கிறது என பீமன் வருத்தப்பட்டு இருப்பானோ
என்னவோ? ஆனால் அவன் தமிழ்சினிமாவில் இருந்திருந்தால் நிச்சயம் இரண்டாம் இடத்திற்கு
அகமகிழ்ந்து இருப்பான். ஏனென்றால், தமிழ்சினிமாவில் மூன்றாம் இடம் தான் பாவப்பட்டது.
அந்த அந்தக் காலத்தில்
மட்டும் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களைப் பற்றிய பேச்சுகள் இருக்கும். அடுத்த தலைமுறை
வந்ததும் அந்தப் பெயர் தமிழக மக்களின் வக்காபுலரியில் இருந்து விடுபட்டுவிடும். சில
ஆர்வலர்கள் மட்டுமே அந்தப் பெயர்களைப் பற்றி தொங்கிக்கொண்டு இருப்பார்கள்.
பத்திரிக்கைகள்
, இணையத்தில் சினிமா பற்றி எழுதுபவர்கள், சினிமா விவாதங்கள் எல்லாவற்றிலும் முதல் இரண்டு
இடங்களில் இருந்த நாயகர்களைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
எப்போது பார்த்தாலும்
எம்கேடி-பியுசி, எம்ஜியார்-சிவாஜி, ரஜினி-கமல், அஜீத்-விஜய், தனுஷ்-சிம்பு.
எம் கே தியாகராஜபாகவதர்-பி
யு சின்னப்பா காலத்தில் மூன்றாவதாக ஒரு நடிகர் இல்லவே இல்லையா? அவர் அந்தக்காலத்துக்கு
மட்டுமே செல்லுபடியா? அதை மற்ற தலைமுறைகளுக்கு கடத்தும் பணியை செய்யவேண்டிய ஊடகங்கள்
ஏன் இரண்டு இடங்களுடன் நிறுத்தி விடுகின்றன? டி ஆர் மகாலிங்கம் பற்றியோ செருகளத்தூர்
சாமா பற்றியோ ஏன் அவர்கள் பேசுவதேயில்லை?
எம்ஜியார்-சிவாஜி
காலத்திலும் ஜெமினி கணேசன் என்பவர் இருந்தார். அவருக்கும் மூன்றாம் இடம் வாய்த்திருந்தது.
ஆனால் அவரது இடத்தை இப்போதைய தனுஷ்-சிம்பு கால மக்கள் ஊடகங்கள் வழி அறிய வாய்ப்பில்லை.
ரவிசந்திரன் என்பவர் கூட வெள்ளி விழா நடிகர் என எம்ஜியார்-சிவாஜி காலத்தில் அறியப்பட்டார்.
அவர் கூட சில காலம் மூன்றாமிடத்தில் இருந்திருக்கலாம்.
ரஜினி-கமல் காலத்தில்
மூன்றாமிடத்தில் இருந்த விஜயகாந்த் இப்போதைய தலைமுறையால் கிண்டல் தொனியிலேயே பார்க்கப்படுகிறார்.
அவரால் பல தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், இரண்டாம் நிலை தியேட்டர் உரிமையாளர்கள்
பலர் வாழ்ந்தார்கள். கார்த்திக், ராமராஜன் ஏன் சரத்குமார் கூட சூரியன், சாமுண்டி, நாட்டாமை
காலத்தில் மூன்றாமிடத்தில் சில காலம் சஞ்சரித்து இருக்கிறார்.
இவர்கள் அடுத்த
தலைமுறையின் போது டி ஆர் மகாலிங்கம் போல மறக்கப்பட்டு விடக்கூடும்.
அஜீத்-விஜய் காலகட்டத்தில்
விக்ரம், சூர்யா ஆகியோர் மூன்றாம் இடத்துக்கு முக்கியமான போட்டியாளர்களாக இருந்தவர்கள்.
இப்போதே விக்ரம் பெயர் சிறிது சிறிதாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் அப்பாஸ்,மாதவன்
கூட ஏதோ ஒரு நாளிலாவது மூன்றாமிடத்தில் இருந்தவர்கள் தானே?
தனுஷ்-சிம்பு காலத்தில்
விஷால், ஜீவா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் மூன்றாமிடத்தில் அவ்வப்போது
இருக்க வாய்ப்பிருக்கிறது.
முதல் இரண்டு இடத்தில்
இருப்பவர்கள் எவ்வளவு தோல்விகள் கொடுத்தாலும், அவர்களை அந்த இடத்தில் இருந்து இறக்க
மிக யோசிக்கும் தமிழகம், மூன்றாமிடத்தில் இருப்பவர்களின் சிறு சறுக்கலையும் பெரிதாக்கி
விடுகிறது.
தனுஷின் கடைசி
11 படங்களில் 10 படங்கள் தோல்வி. சிம்பு நடித்த படங்களைவிட, அவரை வைத்து பூஜை போட்ட
படங்கள் அதிகமாயிருக்கும் போல. ஆனால் இன்னும் இவர்களுக்கு லட்டு லட்டான ஆபர்கள் வந்து
கொண்டேயிருக்கின்றன. அதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டால் இவர்கள் 50 ஆண்டுகள் கடந்தாலும்
ரெபர் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
இந்த மூன்றாமிடத்தைப்
பிடித்த நாயகர்களை பார்த்தோமென்றால், அப்போடைய வெகுஜன ரசனை நன்கு விளங்கும். டி ஆர்
மகாலிங்கம் காலத்தில் இசையும்,கதையும் மக்களின் தேர்வாய் இருந்தது.
ஜெமினி கணேசன்
காலத்தில் குடும்ப வாழ்க்கை கதைகள், மிதமான காதல் கதைகள் மக்களின் தேர்வாய் இருந்திருக்கிறது.
விஜயகாந்த் காலத்தில் ஆங்கிரி யங் மேன் கதைகளுக்கு வரவேற்பு.
சூர்யா, விக்ரம்
காலத்தில் முதல் இரண்டு இடத்தைத் தவிர மற்றவர்கள் நன்கு பெர்பார்மன்ஸ் கொடுக்கவேண்டுமேன்பது
மக்களின் எதிர்பார்ப்பு.
தனுஷ்-சிம்பு காலத்தில்,
யதார்த்தப் படங்களில் நடிப்பவர்களுக்கு மூன்றாமிடம் தகைய வாய்ப்பிருக்கிறது.
இந்த மூன்றாமிடக்காரர்களுக்கு
என்றே சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அந்தந்த காலகட்டத்தில் இருப்பார்கள்.
அதைப் போலவே ரசிகர்களும்.
இதில் அந்த ரசிகர்களின்
நிலைதான் பாவம். மூன்றாமிடக்காரரின் ரசிகரை மட்டும் முதலிரண்டு இடக்காரர்களின் ரசிகர்கள்
சேர்ந்து கும்மி விடுவார்கள்.
ஜெமினிகணேசன் ரசிகர்களை
சாம்பார் ஆளுடா என கலாய்த்தார்கள் எம்ஜியார்-சிவாஜி ரசிகர்கள். எங்களுடன் விடுதியில்
தங்கிப்படித்த,ஒரு விஜயகாந்த் ரசிகன் தன்னை கடைசி வரை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.
ரகசியமாய் அவனது பெட்டியில் ஒரு விஜய்காந்த் புளோ அப்பை வைத்திருந்தான். ஹாஸ்டலில்
நடந்த ஒரு திருட்டின் காரணமாக எல்லோரது பெட்டியையும் சோதனை செய்த போது, இதைக் கண்டுபிடித்தோம்.
பின்னர் அந்த திருடனை விட இவன் தான் அதிகம் பாதிக்கப்பட்டான்.
இப்போது கூட சூர்யாவை,
சூர்யா ரசிகர்களை நன்கு கலாய்க்கிறார்கள்.
அந்தளவுக்கு பாவப்பட்ட
இடமாக இருக்கிறது இந்த மூன்றாமிடம்.
நீ ஏன் இவ்வளவு
பொங்குகிறாய் என்கிறீர்களா?
பள்ளிக்கூடத்தில்
படித்த போது, கல்லூரியில் படித்த போது முதல் இரண்டு இடங்களுக்குள் வராதவன் நான். அந்தக்
கால ஆசிரியர்கள் முதல், வகுப்புத் தோழர்கள், சீனியர், ஜூனியர்கள் எல்லாம் முதல் இரண்டு
இடத்தில் இருந்த மாணவர்களையே ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அவன் செட்டா நீ எனத்தான்
எல்லோரும் கேட்கிறார்கள்.
அய்யா, திரையுலகம்
சார்ந்த எழுத்தாளர்களே, விமர்சகர்களே நீங்கள் இனி எழுதும் போது மூன்று இடங்கள் வரை
எழுதி வாருங்களேன். மூன்றாம் இடம் வாங்கும் பலர் சந்தோஷப்படுவார்கள்.