மூன்று வாரங்களுக்கு
முன் விகடன் 3டி எஃபெக்டில் படங்களைப் பிரசுரித்து, அதைக் காண கண்ணாடியும் கொடுத்த
போது, மகிழ்ச்சியாகவே இருந்தது. இரண்டாவது இதழ் வந்தபோது, இதற்கு என்ன அவசியம்? எனத்
தோன்றியது. மூன்றாவது இதழ் எரிச்சலே ஊட்டியது எனலாம்.
முதல் காரணம்,
கண்ணாடி அணிந்து பார்த்தால் எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. எழுத்துக்களை மட்டும்
படிக்கலாம் என்று பார்த்தால் அருகில் 3டி எஃபெக்டுக்காக பிரிண்ட் செய்யப்பட்ட படம் உறுத்துகிறது. ஒரு வேளை இதழ் முழுக்க முழுக்க
3டி எஃபெக்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்னவோ?
இரண்டாவது, படங்கள்
அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் கண்டெண்ட் குறைவாக உள்ளது. இரண்டு வரி ஜோக்கிற்காக
ஒரு பக்கம், ஏன் இரண்டு பக்கம் கூட ஒதுக்கியுள்ளார்கள். சினிமா பிரபலங்களின் பேட்டியிலும்
படங்களே பெரிதும் ஆக்ரமித்துள்ளன. நான்கு ரூபாய் கொடுத்து வாங்கும் தி இந்து தினசரியை
படித்து முடிக்கும் நேரத்தை விட, 20 ரூபாய் விகடனை விரைவில் வாசித்து முடித்து விட
முடிகிறது.
மூன்றாவது கண்டெண்ட்
குவாலிட்டி :
இதுதான் மிக கவலையூட்டும்
அம்சமாக இருக்கிறது. பொக்கிஷம் என கொஞ்சம் பக்கம் போய்விடுகிறது. வலைபாயுதே, இன்பாக்ஸ்
என இணையத்தில் இருந்து சில பக்கம், ஐம்பது கிலோ அஸ்கா, குழைந்து விட்ட குஸ்கா என நாயகிகளை
வர்ணித்து டெம்பிளேட் சினிமா செய்திகள் என பாதி பக்கத்துக்கு மேல் ஃபில் அப் செய்கிறார்கள்.
முன்பெல்லாம் விகடனைப் படித்தால் நமக்கு ஏதாவது, தகவல் கிடைக்க வரும். ஆனால் இப்போதோ
தகவல் பிழைகள் தான் கண்ணுக்குத் தெரிகின்றன.
நான் வழக்கமாக
விகடன் வாங்கும் கடைக்காரரிடம் விசாரித்த போது, இதனால் ஒரு புத்தகம் கூட அதிகம் விற்கவில்லை
என்று சொன்னார். புது வாசகர்கள் வேண்டாம். இருக்கிற வாசகர்களையாவது தக்க வைத்துக் கொள்ளுங்கள்
விகடனாரே.
இப்போது உயிர்
வாழ்ந்து கொண்டிருக்கும், 1950ல் இருந்து 1990 வரை பிறந்தவர்கள் தான் விகடனை வாங்கிப்
படிக்கிறார்கள். 90க்குப் பின் பிறந்த யாரும் புத்தகம் அதுவும் விகடன் வாங்கிப் படிப்பது
மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்னும் ரயிலில், பஸ்ஸில் படிக்கும் நடுத்தர வர்க்கமே
விகடனை தாங்கிப் பிடிக்கிறது. இளைஞர்கள் கைபேசியைத்தான் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் படிக்க வைக்க என்ன வழி? விகடனை கையில் வைத்திருந்தால் பெருமை என அவர்களை
உங்களால் எண்ண வைக்க முடியுமா?
ஒரு நல்ல கதையோ,
கட்டுரையோ கொடுக்கும் வாசிப்பின்பத்தை இந்த 3டி ஜில்லாக்கி வேலை கொடுத்து விடுமா? என்ன?.
6 comments:
2 வாரங்களுக்கு முன் பொக்கிஷத்தில் ஸ்ரீ பிரியா கணவருடன் இருக்கும் படத்தை போட்டு கீழே சகோதரருடன் ஸ்ரீ பிரியா என்று போட்டு ஒரு குழப்பம்
ஆமாம் சங்கர். நிறைய தகவல் பிழைகள் இப்போதெல்லாம்.
உண்மை! விகடனை 25 ஆண்டுகளாக வாசித்துவந்த நான் தற்போது வாராவாரம் வாங்குவது இல்லை! 3டி விகடன் ஒன்றுகூட வாங்கவில்லை! இணையத்தில் தரவிறக்கி சில சமயம் படிக்கிறேன்! பாலசுப்ரமணியன் ஆசிரியர் பொருப்பில் இருந்து விலகியதும் விகடனும் வாசகர்களை விட்டு விலகி வருகிறது! குறிப்பாக பெண் வாசகர்களை அதிகம் இழந்துவிட்டது.
கண்டிப்பாக தேவை இல்லை தான்... இதே உத்தியை சில ஆண்டுகளுக்கு முன் விகடன் பின்பக்க அட்டையில், 3D படம் ஒன்றை வாரவாரம் வெளியிட்டார்கள்... 3D கண்ணாடியும் கொடுத்தார்கள். அதை தான் இப்போது சற்று விரிவாக செய்கிறார்கள்...
ஒன்றிரண்டு படங்கள் 3D -யில் போட்டால் பரவாவில்லை... எல்லாம் படங்களும் என்றால், கொஞ்சம் தலைவலி தான் வருகிறது...
நன்றி சுரேஷ். பாலசுப்ரமணியன் விலகியது விகடனுக்கு சற்று சரிவே.
நன்றி விமல்ராஜ்.அப்போது கண்ணாடி கொடுக்கவில்லையென நினைக்கிறேன். கண்களை ஒரு புள்ளியில் குவித்து பார்க்கும்படி (மூக்கின் நுனியைப் பார்க்குமாறு வைத்து) படத்தைப் பார்க்கச் சொன்னதாக ஞாபகம்.
விகடன் 3டி அவசியமா என்பதற்கு பதிலாக விகடன் அவசியமா என்று எழுதி இருக்கலாமே?
Post a Comment