January 03, 2014

சிவகாசி

பல ஆண்டுகளுக்கு முன்னர் குமுதம் இதழில் மாலன் அவர்கள் எழுதிய “தமிழ்ச்செல்வன் நடத்திய மெஸ்” சிறுகதை இன்னும் என் மனதில் இருந்து அழியாத ஒன்று. அதில் அரசை எதிர்க்கும் கம்யூனிச சிந்தனை உள்ள ஒருவன் தான் கதை நாயகன். அவனது காதலி, எப்போதும் அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டே இருக்கிறாயே? குண்டூசியில் இருந்து விமானம் வரை எல்லோமே பலர் உழைப்பின் காரணமாகவே உன்னை வந்து அடைகிறது.  ஒரு இரண்டாண்டு காலம் ஏதாவது ஒரு தொழிலை நடத்திப் பார். பின்னர் குறை கூற ஆரம்பிக்கலாம் என்கிறாள்.

அவனும் சவாலை ஏற்று, ஒரு சிறு உணவகத்தைத் துவக்குகிறான். முதல் ஆண்டு பலத்த அடி. பின்னர் சிறிது சிறிதாக லாபம் வர ஆரம்பிக்கிறது. இரண்டாண்டு காலம் கழித்து அவனது காதலியிடம் சொல்கிறான், ”அரசாங்கத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? அரசாங்கத்துடன் சிறு சிறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் எல்லோரும் நன்றாக வாழலாமே? என்று.”

எப்படி ஒரு தொழிலை நடத்தினால்,  நம் சிந்தனைகள் சிறிது சிறிதாக மாறுமோ, அதைப் போலத்தான் சிவகாசி என்னும் ஊருக்குச் செல்வதும். சில காலம் அங்கே தங்கினால் போதும். நமது சிந்தனைகள், பணம் சம்பாதிக்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என்று மாறிவிடும். திருப்பூரும் கிட்டத்தட்ட இதைப் போலத்தான் என்கிறார்கள். நான் திருப்பூருக்கு இதுவரை சென்றதேயில்லை. ஏன் முப்பதாண்டு காலம் மதுரையைச் சுற்றியே வாழ்ந்தும் கூட சென்ற மூன்று மாதமாகத்தான் சிவகாசிக்குப் போய் வருகிறேன்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசிக்கு சமமாக ஏன் அதற்கு அதிகமாகக் கூட பணம் கொழிக்கும் ஊர் விருதுநகர். அங்கே நான்காண்டுகள் இருந்திருக்கிறேன். அந்த ஊர் சிவகாசி போல உழைக்கும் சிந்தனையைத் தராமல் பணக்காரர்கள் மீதான ஒரு எரிச்சலையே தரவல்லது. ஏனென்றால் அது ஒரு வியாபார ஸ்தலம். தொழில் நகரமல்ல. பரம்பரையாகத் தொழில் செய்பவர்களே அங்கு நிறைய சம்பாதிக்க முடியும். ஆனால் சிவகாசி அப்படியல்ல. உழைக்கும் மனதுடன் செல்பவர்களை அது கைவிடாது.

மதுரை, திண்டுக்கல் பகுதி டீக்கடைகளில் ஒன்றைக் கவனிக்கலாம். ஸ்டாலில் சிறிது வடை, பஜ்ஜி இருந்தாலும் அடுத்த ஈடு போடுகிறார்களா என பார்த்துக் கொண்டேயிருந்து, சூடாக எண்ணெய் சட்டியில் இருந்து எடுக்கும் போதுதான், ”மாஸ்டர் எனக்கு ரெண்டு வடை” என்று ஆர்டர் செய்வார்கள். சாப்பிட்டு கை கழுவி விட்டு, சிறுது தண்ணீர் குடித்து விட்டுத்தான் டீ ஆர்டர் செய்வார்கள். டீயை சூடாக உள்ளே இறக்குவதற்காக. ஆனால் சிவகாசியில் பேக்கரியிலோ/டீக்கடையிலோ நுழையும் போதே, டீ வரை ஆர்டரை சொல்லி விடுவார்கள், வந்த உடன் சாப்பிட்டு விட்டு கிளம்பி விடுவார்கள். நேர சிக்கனம்.

அதே போல் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஏரியாக்களில் பொது இடங்களில் அரசியல் பேச்சுகள் தூள் பறக்கும். ஆனால் சிவகாசி பகுதியில், பேருந்து, டீக்கடைகள், உணவகங்களில் டபுள் டெம்மி, கிரவுன், 170 ஜி எஸ் எம் ஆர்ட் பேப்பர், பிளேட், அஞ்சாம் நம்பர் கேக் போன்ற வார்த்தைகளே நம் காதில் விழும். போனால் போகிறது என்று, அரசின் திட்டங்கள் சார்பான அரசியல் பேச்சுக்கள் ஆங்காங்கே காதில் விழும்.
ஏ0, ஏ3, ஏ4 என ஐ எஸ் ஓ அளவீடுகளாலே பேப்பரைப் பார்ப்பவர்களுக்கு, இந்த டபுள் டெம்மி, கிரவுன், இம்பீரியல் எல்லாம் கிரீக் அண்ட் லத்தீனாகத்தான் முதலில் தெரியும். என்னதான் ஐ எஸ் ஓ, எஸ் ஐ அளவீடுகளில் ஒரு வாகனம் தயாராகி வந்தாலும் அதற்கு காற்று பிடிக்கும் போது நீங்கள் இன்னும் பி எஸ் ஐ யில் தானே பிடிக்க முடிகிறது. இம்பீரியல் அளவைகளின் தாக்கம் இந்த உலகில் அப்படி. பிரிண்டிங் தொழிலில் இந்த அளவீடுகள் மாற வெகு காலமாகும்.

தீபாவளி முடிந்த முதல் வாரம், சிவகாசி சோம்பல் முறிப்பது போல் தெரியும். ஆனால் அது அடுத்த கட்ட பாய்ச்சலுக்காக தூரம் கணக்கிடும் காலம் அது. மந்த்லி/டெய்லி காலண்டர், டைரி, டேபிள் டாப் காலெண்டர் ஆர்டர், டிசைன் என சூடுபிடிக்கும். புத்தாண்டு முடிந்ததும் பள்ளி/கல்லூரி நோட் புக் சீசன். ஜூனுக்கு அப்புறம் தான் பட்டாசு சீசன்.
இது தவிர எப்போதும் இருக்கும் சீசன் தீப்பெட்டி, பொதுவான/மத சம்பந்த புத்தகங்கள், திருமண பத்திரிக்கைகள், சினிமா/அரசியல் போஸ்டர்கள், வார/மாத இதழ்கள், வணிக ஸ்தாபனங்களுக்கான லேபிள்கள் தயாரிக்கும் பணி.

எனவே ஆஃப் சீசன் என்ற ஒன்றே இங்கு கிடையாது. குடும்பத்தில் உள்ள எல்லோரும் வேலை பார்ப்பதால், இரவு சாப்பாடு தயாரிக்கும் பணியில் சுணக்கம் ஏற்படும். ஒரு காலத்தில் பால் சோறு பக்கோடா என்ற கான்செப்ட் இருந்தது. சாதம் மட்டும் வடித்து வைத்து விட்டு, பாலை அதில் ஊற்றி சாப்பிடுவார்கள். அதற்கு தொட்டுக் கொள்ள பக்கோடா. தினமும் மாலையில் சுடச்சுட பக்கோடா ஏராளமாக தயாராகும். அம்மாதிரி தயாரித்து தட்டில் வைத்து விற்கும் ஒரு கடைக்கு தட்டு கடை என்றே பெயர். இப்போதும் (வேலாயுத நாடார் ஸ்வீட் ஸ்டால்) அது தட்டு கடை என்றே அழைக்கப்படுகிறது.

கடந்த 20 வருடங்களில் சிவகாசியில் புரோட்டா கடைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கவும் இதே காரணம்தான்.  தினமும் அதிக அளவில் ஏஜெண்டுகள், லாரி போன்றவை அதிக அளவில் வந்து போவதால் சுமாரான ஹோட்டல்களில் கூட கூட்டம் அம்முகிறது.
90களில் சொல்வார்கள். உலகத்தில் ஒரு சதுர கிமீ பரப்பளவில் அதிக ஆண் பிரம்மச்சாரிகள் வசிக்கும் இடம் திருவல்லிக்கேணி என்று. அதுபோல் ஒரு சதுர கிமீ பரப்பளவில் உலகிலேயே அதிக புரோட்டா உற்பத்தி ஆகும் இடம் சந்தேகத்துக்கே இடமில்லாமல் சிவகாசிதான். எட்டு மணி அளவில் சிவகாசி சாலைகளின் வழியே போனால் பார்க்கலாம். உணவு உண்ண நாலு பேரும், பார்சல் வாங்க 40 பேரும் எல்லாக்கடைகளிலும் நின்று கொண்டிருப்பார்கள்.

டெக்னாலஜி அப்டேட் என்பதும் சிவகாசியில் நான் பார்த்து வியந்த ஒன்று. பிரிண்டிங் சம்பந்தமான எந்த தொழில்நுட்பமும் கண்டுபிடித்த உடனேயே சிவகாசிக்குத்தான் வருகிறதோ என அதிசயிக்கும் படி இருக்கிறது அங்கு இருக்கும் சில பிரஸ்கள். சிலர் தாங்கள் ஈடுபட்டிக்கொண்டிருந்த டெக்னாலஜி அவுட் டேட் ஆனாலும் கூட (புது டெக்னாலஜியை அப்டேட் செய்து கொள்ள முடியாத திறமை/வயதில்) ஏஜெண்ட் ஆக மாறி பீல்டில் நின்று கொண்டே இருக்கிறார்கள். ஒரு பேப்பரின் அடர்த்தியை (கிராம்ஸ் பெர் ஸ்கொயர் மீட்டர்) கையால் தடவிப்பார்த்தே 170ஆ 180ஆ என சொல்லும் வல்லுநர்கள் இங்கே சாதாரணம். நமக்கு தெரிந்ததெல்லாம் பாடப்புத்தகம் அடிக்கப்படும் 60 ஜி எஸ் எம் தாள் தான்.

சொந்தமாக ஒரு ஆபிஸ் போடுவது என்பது அங்குள்ளவர்களின் கனவாக இருக்கும் ஒன்று. தமிழ்நாடு முழுவதும் செண்ட் கணக்கில் வசிக்கும் இடம் விற்கப்பட்டால் இங்கே குழி அளவை. 9 சதுர அடி ஒரு குழி என்ற கணக்கில் பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றால் ஊகித்துக் கொள்ளுங்கள்.  

சிவகாசி மக்களிடையே நான் கண்ட இன்னொரு விஷயம் வேகம். மெதுவாக மசை போல நடப்பவர்கள் அங்கே அரிது. சென்னையில் கூட அந்த வேகத்தை பலரிடம் பார்க்கலாம். ஆனால் குறிப்பிட்ட வயதுக்குப் பின் தளர்ந்து விடுவார்கள். இங்கே இயல்பாகவே ஒரு வேகத்துடனே பேச்சும் செயலும் இருக்கும். அண்ணாச்சி நாளைக்கு டெலிவரி, கிரடிட் ஆயிடும்ல என்றபடியே நேரடியான பேச்சுக்கள் இருக்கும். பேச்சில் நரித்தனம் குறைவு. பார்ட்டியை ஏமாத்தினா நாளைக்கு எப்படி வருவான் என்ற சுதாரிப்பில் தான் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். ஏனென்றால் அங்கே ஒருவர் நீண்ட நாள் மோனோபோலியாக இருப்பது கடினம்.

ஒரு விஷயத்தில் தான் இன்னும் சிவகாசி தன்னிறைவு அடையவில்லை. புரபொஷனல் டிசைனர்கள். சல்லடை போட்டு தேட வேண்டும். கோரல் ட்ரா தெரிந்த மூன்றாண்டு அனுபவமுள்ள டிசைனர்கள் தேவை என வால் போஸ்டர் அடித்து தேடும் அளவுக்கு டிசைனிங் துறையில் வறட்சி. எல்லா டெலிவரி செட்யூல்களும் டிசைனரின் அவைலபிலிட்டியைப் பொறுத்தே மாறுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


நான் முன்பெல்லாம் என்னுடைய வேலை பற்றிய பயத்துடனே இருப்பேன். வேலை போய்விட்டால், அடுத்த வேலை கிடைக்கும் வரை எப்படி பணத்தேவையை சமாளிப்பது? அக்கம் பக்கம் உறவினர் பேச்சுக்கள், குழந்தைகளில் கல்வி என பல யோசனைகள் ஓடும். ஆனால் இந்த மூன்று மாத சிவகாசி அனுபவம் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உழைக்கும் மனத்துடன் சென்றால் எப்படியும் சிவகாசியில் சர்வைவ் ஆகிவிடலாம் என்று.

21 comments:

Anonymous said...

நச் கட்டுரை. இது சம்பிரதாயத்துக்காக சொன்ன விஷயமில்லை. உண்மையிலேயே நச். தங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. நன்றி.

முரளிகண்ணன் said...

நன்றி நண்பரே.

கும்மாச்சி said...

அதனால்தான் சிவகாசியை ஒரு குட்டி ஜப்பான் என்றார் நேரு.

Avargal Unmaigal said...

பதிவு அருமை.... மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நகரமும் ஏதாவது ஒரு விதத்தில் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. அதை மிக சரியான வழியில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாம் உலக அளவில் பேசப்படுவோம் என்பது உறுதி ஆனால் நமக்கு வாய்த்த தலைவர்களோ சுயநலத்தோடு இருப்பதால் நாம் ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கிறோம் என்பது வேதனையைத்தான் தருகிறது

முரளிகண்ணன் said...

நன்றி கும்மாச்சி

நன்றி அவர்கள் உண்மைகள்

வினோத் கெளதம் said...

கலக்கல் டீடேயீலிங் தல..

முரளிகண்ணன் said...

நன்றி வினோத் கௌதம்

புதுராஜா said...

அருமை....உண்மை உண்மையிலும் உண்மை

Kasthuri Rengan said...

நல்ல பதிவு
சிவகாசிக்காரர்கள் மகிழக்கூடிய பதிவு...
பால்சோறு பக்கடோ தகவல் நேரம் சிக்கனம்
நல்ல பதிவு தோழர்..

வாழ்த்துக்கள்

Kasthuri Rengan said...

நல்ல பதிவு
சிவகாசிக்காரர்கள் மகிழக்கூடிய பதிவு...
பால்சோறு பக்கடோ தகவல் நேரம் சிக்கனம்
நல்ல பதிவு தோழர்..

வாழ்த்துக்கள்

Raj Chandra said...

Nicely written. You have very good observations. Please write more about Sivakasi.

Raj Chandra said...

Nicely written. You have very good observations. Please write more about Sivakasi.

nsundar said...

மிகவும் அருமையான கட்டுரை.சிவகாசி வெற்றியின் அம்சம்தான்.
அன்புடன்
சுந்தர்.

Bruno said...

அருமை !

மதன் சிந்தாமணி said...

Congrats murali..

Unknown said...

well written sir

மரா said...

சைண்டிஸா கொக்கா. ஏகப்பட்ட தகவல்கள்.சீக்கிரமே ஒரு தடவை பரோட்டா சாப்பிடவாச்சிம் வரணும் தலைவரே.

மரா said...

சைண்டிஸா கொக்கா. ஏகப்பட்ட தகவல்கள்.சீக்கிரமே ஒரு தடவை பரோட்டா சாப்பிடவாச்சிம் வரணும் தலைவரே.

சேது.சுந்தரராமன் said...

Superbly written and captures true spirit of Sivakasi.

சேது.சுந்தரராமன் said...

Superbly written and captures true spirit of Sivakasi.

SIVAKUMAR said...

நான் விரும்பி படிக்கும் தமிழ்காமிக்ஸ்கள் தயாரிக்கும் இடம் என்பதால் சிவகாசி என்றாலே ஒரு தனி மகிழ்ச்சி உள்ளத்தில் ஏற்படும் எனக்கு! அந்த காமிக்ஸ் ஆசிரியரும் தனது தொழில்முறை சிரமங்களை,சாதனைகளை விறுவிறுப்பான தொடர்கதை போல தன் வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறார் அதில் அவ்வபோது அவருடைய சிவகாசி வாழ்மக்களின் விசித்திரமான குணங்களை கூறி சுவாரஸ்யம் கூட்டுவார். இப்போது உங்களின் இந்த கட்டுரை சிவகாசியின் மேல் இன்னும் ஈர்ப்பு ஏற்படுத்திவிட்டது. உங்கள் எழுத்துநடை வாசகனுக்கும் உங்கள் பயண அனுபவத்தை சிறிது உணர வாய்ப்பு ஏற்படுத்துகிறது. மேலும் பல பயணகட்டுரைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு நண்பன். வாழ்த்துக்கள்! :)