December 03, 2014

ஏ ஆர் ரஹ்மான்

இரண்டாம் ஆண்டில் கேரளா அல்லது கர்நாடகாவிற்கு ஒரு ஒரு வார டூர் நான்காம் ஆண்டில் ஒரு 15 நாள் ஆல் இந்தியா டூர் என்பது 90களில் பொறியியல் கல்லூரிகளில் எழுதப்படாத விதியாக இருந்த காலம். இரண்டாம் ஆண்டில் நுழைந்த உடனேயே முதலில் சிலபஸ் பார்க்கிறார்களோ இல்லையோ டூர் புரோகிராம் பிளான் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் கேரளா செல்வது என்று முடிவானது. பேருந்தில் கேட்பதற்காக பாடல் கேசட் ரெடி செய்யும் பொறுப்பு என்னிடம் வந்தது. காலையில பிளசண்டா இருக்கணும், மதியம் குத்து சாயங்காலம் சோக மெலடி இந்த டைப்புல நாலஞ்சு கேசட் ரெடி பண்ணு என்று டூர் கோ ஆர்டினேட்டர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள்.

அதன்படி செலக்ட் செய்து பதியக் கொடுத்திருந்த கேசட்டுகளை வாங்கப் போன போது, மணிரத்னத்தோட ரோஜா பாட்டு கேசட் வந்திருச்சு. நல்லா இருக்கு, வாங்கிக்குங்க என்றார் கடைக்காரர். இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் அதிகாரி துரைச்சாமி கடத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட படம். தளபதியின் கலெக்டர் நாயகனாக நடிக்கிறார், புது இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார் என்ற அளவில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த நேரம். மணிரத்னமுடைய படம் என்பதால் நம்பி வாங்கினேன்.

டூரில் முதல் நாள் பிரியாணி சாப்பிட்டவர்கள் மூன்றாம் நாளில் மீல்ஸுக்கும் ஐந்தாம் நாளில் தயிர்சாதத்துக்கும் மாறியிருந்த நேரம். மலம்புழா டேம் செல்லும் வழியில் மதிய நேரம் ஒரு ஆற்றின் கரையில் வண்டியை ஹால்ட் செய்தோம். ஆகஸ்ட் மாத கேரள ஜிலீர் கிளைமேட், குளிக்க பதமாக ஓடும் ஆறு, அருகிலிருந்த ஓலை வேய்ந்த நாயர் மெஸ்ஸில் சுடச்சுட சாப்பாடு. 5 மணிக்கு கிளம்புவதாக பிளான் என்பதால் அவரவர் செட்டுடன் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருந்தார்கள். எங்கள் குரூப் பஸ்ஸில் ரம்மி விளையாடத் துவங்கினோம். வேற கேசட்டே இல்லையாடா என்ற நண்பனின் வேண்டுகோளுக்காக ஒலிக்க விடப்பட்டது ரோஜா படப் பாடல்.

வாழ்வின் இனிமையான தருணங்களில் ஒன்றாகிப் போன நிகழ்வு அது. அந்த கிளைமேட்டிற்கும், நட்பு அரட்டைக்கும் பிண்ணனியாக ரோஜா பாடல்கள். நல்லா இருக்கில்ல என்று பேசிக் கொண்டோம். அதன்பின் சில நாட்களில் ஆகஸ்ட் 15 அன்று படம் ரிலீஸானது. ஏ சைடு பூராம் ரோஜா பாட்டு பதிஞ்சு வச்சிருக்கோம். பி சைடுல பெரும்பாலும் சூரியன், அண்ணாமலை, தெய்வவாக்கு இல்லையின்னா செம்பருத்தி போட்டு கொடுத்திடுவோம் என்பார் கேசட் கடைக்காரர். கல்லூரி விழாக்கள், விசேஷ வீடுகள் என ரோஜா பாடல்கள் மெல்ல ஊடுருவி ரஹ்மானின் பெயர் பரிச்சயமாகத் தொடங்கியது.

ஒரு மனிதனின் வெயில் தாங்கும் திறமையை சோதிக்கும் பரிசோதனை களங்களில் ஒன்றான விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டு விசேஷம். 20 பேர் பிரயாணிக்கும் வசதி கொண்ட மெட்டடார் வேனில் நண்டு சிண்டுகளோடு முப்பதுக்கும் அதிகமானோர் மத்தியான உச்சி வெயிலில் வறண்ட கந்தகபூமியின் வழியே திரும்பி வந்து கொண்டிருக்கிறோம். இரவில்  ராட்சஷர்கள் பல்லாங்குழி  விளையாடுவார்களோ என்று நினைக்கும் அளவில் குழியும் சரளைக்கற்களும் நிறைந்த சாலை. ஆரத்திக்காக முன் யோசனையில் ஒரு குளிர்பான பாட்டிலில் மஞ்சள் குங்குமம் கரைத்து வைத்திருந்தார்கள். அதை குளிர்பானம் என்று நினைத்து ஒரு வாண்டு குடித்து, தான் காலையில் வெஜிடபிள் பிரியாணிதான் சாப்பிட்டேன் என்பதை வேனில் அனைவருக்கும் சந்தேகமின்றி நிரூபித்திருந்தான். சுற்றிலும் அவுங்க விசேஷத்துக்கு 101 ரூபாய் எழுதியிருந்தேன். இன்னைக்கு 51 ஓவாதான் எழுதியிருக்காங்க என்ற புலம்பல்கள் என ஐம்புலன்களும் சோதனைக்குள்ளான நேரம். அப்போது, வேன் ட்ரைவர் ஒரு பாடல் கேசட்டை ஒலிக்க விட்டார். அத்தனை சிரமங்களும் குறைந்தாற்போல ஒரு உணர்வு. வேனில் இருந்த பலரும் அதை அனுபவித்தனர். அதுதான் ஜெண்டில்மேன்.

அதன்பின் ஒரு மூன்று மாதங்கள் எல்லாப் பக்கமும் ஜெண்டில்மேன் பாடல்கள் தான். அந்தக்காலம் சிடி பிளேயர்களின் வருகைக்கு சற்றே சற்று முன்னாலான காலம். பிலிப்ஸ் நிறுவனம் டைனமிக் பேஸ் பூஸ்ட் அது இது என பல மாடல்களை இறக்கியிருந்த நேரம். அந்த டேப் ரிக்காடர்களின் டெமோவுக்கு எல்லாம் ஜெண்டில்மேன் ஒரிஜினல் காசட்டைத்தான் கடைக்காரர்கள் உபயோகப் படுத்துவார்கள். உசிலம்பட்டி பெண்குட்டியும், ஒட்டகத்தை கட்டிக்கோ பாடலும் ஒலிக்காத விழாக்கள் எதுவுமேயில்லை.

அதே ஆண்டு தீபாவளிக்கு மணிரத்னத்தின் திருடா திருடாவும், பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலேவும். ரோஜா, ஜெண்டில்மேன் வரிசையில் திருடா திருடா எதிர்பார்த்த மெகா ஹிட். ஆனால் கிழக்கு சீமையிலே? டெண்டுல்கர் அறிமுகமாகி பலரையும் விளாசி பெயர் பெற்ற நேரத்தில் அவரை இன்னும் வெகுவாக நம்பலாம் என்ற மாற்றத்தை ஏற்படுத்தியது 92ல் பெர்த் டெஸ்டில் அவர் அடித்த சதம். எகிறும் பிட்ச்சில் ஆஸ்திரேலிய வேகங்களை அவர் ஆடிய விதத்தைக் கண்டபின்னர் அவரை சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதுபோலத்தான் கிழக்குச்சீமையிலே ரஹ்மானுக்கு. மானுத்து மந்தையிலேதான் இன்னும் மதுரையில் காதுகுத்துக்கு தாய் மாமன் சீர் பாடல். இது மாற வெகு காலமாகும். தென்கிழக்கு சீமையிலேவும், எதுக்கு பொண்டாட்டியும் இவன் இருப்பான்யா இருப்பான் என எல்லோர் மனதிலும் ஓர் எண்ணத்தை ஏற்படுத்தியது.

அடுத்த ஆண்டில் டூயட், கருத்தம்மா மற்றும் காதலன். ரெக்கார்ட் எழுதணும்டா அந்த டூயட் கேசட்டைக் குடுடா, அலுப்பில்லாம எழுதலாம் என்று சகஜமாக ஹாஸ்டல் அறையில் பேச்சு கேட்கும். கருத்தம்மா அந்த அளவுக்கு இளைஞர்களை வசீகரிக்கவில்லையென்றாலும் போறாளே பொன்னுத்தாயியும், அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆம்பிளையா நீ பிறந்தா பூமியிலே இடமிருக்கும் போய்வாடி அன்னக்கிளியேவும் உலுக்கத்தான் செய்தது.

ஒரு அலை போல அப்போதைய கல்லூரி,பள்ளி மாணவர்களை கிறங்கடித்தது காதலன் தான். இரண்டாம் மாடி கடைக்கோடி ரூமில் இருந்து கிரவுண்ட் புளோர் மெஸ்ஸுக்கு வந்து சேர்வதற்குள் காதலன் படத்தின் எல்லாப் பாடல்களும் காதில் விழுந்துவிடும். என்னவளேவும் முக்காப்புலாவும் கேட்டிராத காது கேட்காத காது மட்டும்தான். எந்த கல்லூரி கல்சுரலுக்கு போனாலும் சோலோவுக்கு என்னவளே பாடுவார்கள், வெஸ்டன் டான்ஸுக்கு முக்காப்புலா, போக் டான்ஸுக்கு கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா. டேக் இட் ஈஸி ஊர்வசி எல்லாம் ஆத்திச்சூடி போல அனைவருக்கும் மனப்பாடம்.

ஊசி மூலம்
உடலில் பச்சை குத்துவது போல்
காது மூலம்
மனதில் பாட்டு குத்தும்
மாயக்காரன் நீ

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
உன் இசையோ
செவிப் பழக்கம்

என்று திடீர்க்கவிஞர்கள் உருவாகும் அளவுக்கு அந்த ஆண்டு முழுவதும் ரஹ்மானின் இசை கொடிகட்டிப் பறந்தது.


95ல் பம்பாய். பாஸ்கட் பால் விளையாட்டில் அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் ஐந்து பத்து பாயிண்ட்களுக்குள் இருந்தால் அது நிலையான முண்ணனி கிடையாது. ஒரு தம் பிடித்தால் எளிதில் அதை எட்டிப்பிடித்து விடலாம். இருபத்தைந்து, முப்பது பாயிண்ட் முண்ணனி என்றால் துரத்திப் பிடிப்பது கடினம். இதை துண்டாகப் போய்விடுவது என்று சொல்வார்கள். திரைக்கலைஞர்களின் புகழும் அப்படித்தான். மக்களின் ரசனைக்கு கொஞ்சம் மேலே இருப்பவர்கள் எல்லாம் கால வெள்ளத்தில் துரத்தி பிடிக்கப்பட்டு அமிழ்ந்து விடுவார்கள். தொடர்ச்சியாக சிறப்புகளை தருபவர்கள் தமிழ் சமுதாயத்தால் மறக்க முடியாதவர்கள் ஆவார்கள். ரஹ்மான் பம்பாய் பாடல்களின் வெற்றிக்கு பின்னால் துரத்தி பிடிக்க முடியாத அளவுக்கு சென்று தமிழர்களால் மறக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டார்.

7 comments:

காரிகன் said...

முரளி கண்ணன்,

நீங்கள் சொல்வது உண்மைதான். ரஹ்மானின் இசை அடித்த வேகம் தொண்ணூறுகளின் இசை வடிவத்தையே முற்றிலும் மாற்றிப்போட்டுவிட்டது.

முரளிகண்ணன் said...

நன்றி காரிகன்

தமிழ் பையன் said...

அருமை. ஏன் பம்பாயோட நிறுத்தீட்டீங்க? தொடரவும்.

முரளிகண்ணன் said...

ரஹ்மானின் ஆரம்ப கால கட்டம் பற்றி மட்டும் எழுதலாம் என்று நினைத்தேன்.

காரிகன் said...

முரளி கண்ணன்,

ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களை விவரித்து எழுதுங்களேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்து. பாணி. உங்கள் எழுத்தும் படிப்பதற்கு ஒரு தனிச் சுவை.

shunmugam123 said...

தொழிலுக்கு துரோகம் செய்யும் A.R.Rahman

Read more at: http://tamil.filmibeat.com/news/an-open-letter-director-vasantha-balan-a-critic-032153.html http://tamil.filmibeat.com/news/an-open-letter-director-vasantha-balan-a-critic-032153.html

SIV said...

ரஹ்மான் படங்களில் வரும் கிராமத்து இசையை எந்த கிராம நிகழ்விலும் கேட்டதில்லை. ஆனாலும் அவரின் கிழக்கு சீமையிலே, உழவன், கருத்தம்மா போன்ற படங்ககளின் பாடல்கலை கேட்கையில் ஒரு கிராமத்து இசை போன்ற feel வந்துவிடுகிறது. அதுதான் எப்படி என்று புரியவில்லை. வைரமுத்துவின் பாடல்வரிகள் தான் காரணமோ?