ஓல்ட் எம் ஆர்
என்று தமிழ்சினிமா வினியோக வட்டாரங்களில் அழைக்கப்படும் பழைய மதுரை,ராமநாதபுரம் மாவட்டங்கள்
இன்று மதுரை,திண்டுக்கல்,தேனி,ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் என ஆறு மாவட்டங்களாக
பிரிக்கப்பட்டுவிட்டன. விருதுநகர் மாவட்டத்தைத் தவிர மற்ற ஐந்து மாவட்டக்காரர்களும்
விருதுநகர் என்னும் ஊருக்குள் நுழைந்தாலே சற்று அன்னியமாகத்தான் உணர்வார்கள். அவ்வளவு
ஏன் விருதுநகர் மாவட்டத்திலேயே விருதுநகரைத் தவிர மற்ற ஊர்க்காரர்களும் கூட அவ்வூருக்குள்
நுழைந்தாலே சற்று அன்னியமாகத்தான் உணர்வார்கள்.
முக்கியமாக மதுரை,திண்டுக்கல்
பகுதிகளில் தங்கள் இளமைக்காலத்தை கழித்தவர்கள் விருதுநகருக்கு முதன்முதலாக வந்தால்
பல வித்தியாசங்களை உணர்வார்கள்.91 ஆம் ஆண்டு நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்
கொண்டு இருந்தபோது,என் தந்தை பணியிடமாறுதல் காரணமாக விருதுநகருக்கு குடிபுகுந்தோம்.
இரண்டு நாட்கள் கழித்து இரவு உணவு பார்சல் வாங்க சற்று தொலைவில் இருந்த கடைக்குப் போனேன்.
வாங்கும் போது, கடை கல்லாவில் இருந்தவர், புதுசா குடிவந்திருக்கீங்களா? என்று கேட்டார்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏதாவது சின்ன ஊரில் ஒரு கடைக்காரர் அப்படிக் கேட்டால்
பரவாயில்லை. ஆனால் ஒரு மாவட்டத்தலைநகரில், தமிழ்நாட்டில் பருப்பு, எண்ணெய் விலையை நிர்ணயிக்கும்
கேந்திரங்களில் ஒன்றான விருதுநகரில் எப்படி கண்டுபிடித்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.
வீட்டிற்கு வந்து
பொட்டலத்தைப் பிரித்ததும் வீட்டிலுள்ளவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னடா புரோட்டா
வாங்கிட்டு வரச் சொன்னா வரிக்கி வாங்கிட்டு வந்திருக்க என்றார்கள். நான் முழிக்க, பின்னர்
தான் தெரிந்தது இங்கே புரோட்டா என்றாலே எண்ணையில் முக்குளிப்பாட்டிய புரோட்டாதான் என்றும்,
சாதா புரோட்டா கிடைப்பது அரிது என்றும். அடுத்த நாள் காலை காட்சிக்கு மன்னன் திரைப்படத்திற்கு
போனேன். அதற்கு முதல்நாள் மதுரையில் பயங்கர கூட்டம் இருந்ததை பஸ்ஸில் வரும்போது பார்த்திருந்தேன்.
ஆனால் இங்கே ஓரிருவர்தான் தென்பட்டார்கள். இத்தனைக்கும் படம் வெளியான முதல் வாரம்.ஆனால் படம் பார்க்கும் போது பாடல் காட்சிகள் வரும்போதெல்லாம்
திரையைச் சுற்றி வண்ண விளக்குகளை ஒளிரவிட்டார்கள். படம் முடிந்து வெளியே வந்து பார்த்தால்
சனி,ஞாயிறு 5 காட்சிகள் என்று போஸ்டரில் துண்டு போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். எங்கள்
வீட்டில் உள்ளவர்கள், சனிக்கிழமை படத்துக்கு போய்விட்டு வந்து எவ்வளோ கூட்டம் என அலுத்துக்
கொண்டார்கள்.
பின்னர் தான் தெரியவந்தது,
அங்கே எந்தப் படம் என்றாலும், சனி ஞாயிறு 5 காட்சிகளும், மற்ற நாட்களில் 4 காட்சிகளும்
என்று. எல்லோருமே சனி, ஞாயிறுகளில் தான் படத்துக்கு வருவார்கள், அந்த ஊரின் ஒரே பொழுதுபோக்கு
அதுதான். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். திங்கட் கிழமை காலைக் காட்சி
புல் ஆனால் அந்தப் படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டராக விநியோக வட்டாரத்தால் கருதப்படும்.
ஒரு மாதம் கழித்து,
பக்கத்து வீட்டுக்காரரின் பெண் திருமணத்திற்கு அழைத்தார்கள். காலை மண்டபத்திற்கு போனோம்.
தேவையற்ற சடங்குகள் இன்றி, சமுதாயப் பெரியவர் ஒருவர் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன்
தாலி கட்டினார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மண்டபம் பாதி காலியானது. காலை உணவு முடிந்ததும்
மண்டபத்தில் மணமக்கள் உட்பட பத்துப் பேர்தான் இருந்தோம். பெண் வீட்டிற்கு, மாப்பிள்ளை
வீட்டிற்கு என்று தனித்தனியாக மண்டபம், சாப்பாடு எனத் தெரியவந்தது. அப்படி பிரிந்து
சென்ற பின்னும் சாப்பிட்டுவிட்டு உடனே கிளம்பி விடுவார்கள்,மதிய சாப்பாட்டிற்கு என்று
தனியாக வீட்டில் போய் அழைத்தால்தான் வருவார்கள் என்று கேள்விப்பட்டபோது, அதிர்ச்சியாக
இருந்தது.
திருமண விழாக்களை
எல்லாம் கொண்டாட்டமாக அனுபவித்த மதுரை மாவட்டத்துக்காரனுக்கு இது ஜீரணிக்க முடியாததுதான்.
ஓரளவு பழக்கமானவர்களாக இருந்தால் கூட முதல் நாளே மண்டபத்திற்கு சென்று, கூடமாட ஒத்தாசையாக
இருந்து, பந்தி பரிமாறி, சேரை இழுத்துப் போட்டு வட்ட சேர் மாநாடு கூட்டி, பாடல்களைக்
கேட்டுக் கொண்டே வம்பு வளர்த்து, மண்டபத்தை ஒரு சேர காலி செய்து கிளம்பும் கலாச்சாரம்
எங்கே? மணமக்கள் வீட்டார் தனித்தனியாக சாப்பிடும் கலாச்சாரம் எங்கே?. நல்ல வேளை மணமக்களாவது
ஒரே மண்டபத்தில் சாப்பிட்டுக்கொள்கிறார்களே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளத்தான் முடிந்தது.
அதற்கடுத்த மாதத்தில் பங்குனி பொங்கல் என்னும் விருதுநகரின் பிரசித்தி பெற்ற திருவிழா
வந்தது. நாங்கள் குடியிருந்த தெருவில் இருந்த இரண்டு திருமணமாகாத பெண்கள் சர்வ அலங்காரத்துடன்
கழுத்து நிறைய நகையுடன் குடும்பத்தார் சூழ
கிளம்பினார்கள். நம்ம பக்கமும் இப்படித்தானே பொண்ணுங்க, திருவிழான்னாலே புல் கோட்டிங்கோட
கிளம்புவாங்க, ஆனா இங்க இவ்ளோ நகையை போட்டுகிட்டு போறாங்களே என லேசாக சந்தேகம் வந்தது.
பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்த போது, இங்க பொண்ணு பார்க்க வீட்டுக்கு வர மாட்டாங்கப்பா,
இன்ன தேதிக்கு கோவிலுக்கு இல்லாட்டி திருவிழாக்கு கூட்டிட்டு வாங்க, நாங்க பார்க்குறோம்னு
பேசி வச்சிக்குவாங்க. அங்க வச்சு பொண்ண பார்த்திட்டு பின்னர் முடிவு சொல்லுவாங்கப்பா
என்றார். பெண்ணுக்கு எவ்வளவு நகை போட உத்தேசித்திருக்கிறார்களோ, அந்த அளவு நகையை பெண்
அணிந்து திருவிழாவுக்குச் செல்வார் என்றும்,வியாபாரத்தில் ஈடுபடும் மாப்பிள்ளைக்கு
100 பவுன் என்றால், அரசு அல்லது தனியார் வேலையில் இருப்பவருக்கு 50 பவுனுக்கு குறைவாகத்தான்
போடுவார்கள் என்றும் சொன்னார்.
அடுத்த நாள் திருவிழாவுக்குச்
சென்ற போது, ஜமுக்காளத்தை விரித்து, சுற்றத்தார் நடுவே பெண் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்
போது, என்னையறியாமல் மெல்லிய புன்முறுவல் ஏற்பட்டது.
ஒரு ஊரில் இருந்து
இன்னோரு ஊருக்குச் செல்லும் போது, வீட்டுப் பெண்களுக்கு எளிதில் சிநேகிதம் அக்கம் பக்கத்தில்
கிடைத்துவிடும். பள்ளி,கல்லூரி பையன்களுக்கும் அப்படியே. 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத்தலைவர்களுக்கு
பணியிடத்தில் சிநேகிதம் கிடைத்தால்தான். மற்றபடி வெளியிடங்களில் ஆத்மார்த்த நட்பு கிடைப்பது
கடினம். கல்லூரி மாணவனான எனக்கே எங்கள் தெருவிலும், சுற்றுவட்டாரத்திலும் நட்பு கிடைக்கவில்லை.
பெரும்பாலும் பையன்கள் குழுவாகவே இயங்கினார்கள். அந்தக் குழுவில் இடம்பிடிப்பது மிகக்
கடினமாக இருந்தது. மிகவும் கன்சர்வேடிவ்வாக இருப்பார்கள். எனக்கே இப்படியென்றால், என்
தந்தையின் நிலையோ படு மோசம். விருதுநகர் சம்சாரிகளின் சொற்கோவையில் அதிகபட்சம் ஐம்பது
வார்த்தைகள் தான் இருக்கும். அதிலும் சரக்கு, கொள்முதல்,டிடி கமிசன், கலெக்ஷன், சிட்டை,
செக் ரிட்டர்ன் போன்ற சில வார்த்தைகளே அதிகப்படியாக உச்சரிக்கப்படும். அப்போது சாட்டிலைட்
தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வராத காலம் வேறு. வேறு வழியில்லாமல் என்னுடன் அவர் நெருக்கமாக
நண்பனைப் போல் உரையாட ஆரம்பித்தார். நாங்கள் விருதுநகர் சென்றதால் எனக்கு கிடைத்த போனஸ்
அது.
தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை சென்னை, கோவை,திருப்பூர்,சிவகாசி ஆகிய இடங்கள் பிழைக்கச் செல்லும் இடங்களில்
முதலிடம் வகிப்பவை. மற்ற மாவட்ட தலைநகரங்களுக்கு ஓரளவுக்கு மக்கள் இடம் பெயருவார்கள்.
ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு வர்த்தகம் நடக்கும் விருதுநகருக்கு யாரும் பிழைப்பு
தேடி வருவதில்லை. மத்திய, மாநில அரசு பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் போன்றோர்கள் இட
மாறுதலுக்கு உட்பட்டு வருவார்கள். அதனால்தான் புதிதாக குடிவரும் ஆட்களை உள்ளூர்க்காரர்களால்
அப்போது எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது.
விருதுநகரைப் பொறுத்த
வரையில் பெரும்பாலும் கமிஷன் வியாபாரம்தான். பல எண்ணெய் தொழிற்சாலைகளும், சில நூற்பாலைகளும்
உண்டு. கமிஷன் கடைக்கு பத்துக்கு பத்தடி இடமும், ஒரு டேபிளும், போனும் போதும். பெரும்பாலும்
உள்ளூர்காரர்களே குமாஸ்தா மற்றும் குடோனுக்கான லோடு மேனாக இருப்பார்கள். தொழிற்சாலைகளிலும்
பெரும்பாலும் உள்ளூர் ஆட்கள்தான் இருப்பார்கள். அந்தமாதிரி வேலைகளுக்கு வெளியூரில்
இருந்து வந்து, வீடுபார்த்து குடித்தனம் இருக்கும் படி சம்பளம் இருக்காது. அவ்வளவு
பெரிய ஊரில் நல்ல டேபிள் போட்டு சாப்பிடும்படி ஒரே ஒரு சைவ ஹோட்டல்தான் இன்னும் இருக்கிறது
என்பதில் இருந்தே அந்த ஊருக்கு ஒரு நாளில் உத்தியோக பூர்வமாக வரும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.
விருதுநகர் மக்கள்
பணத்தைச் செலவு செய்வதில் மிகச் சிக்கனமாக இருப்பார்கள். நகை வாங்கினால் கூட நல்ல உருட்டாக,
பெரிய நகையாக, அதிக சேதாரம் வராத டிசைனாக வாங்குவார்கள். லைட் வெயிட் கலெக்ஷன் அவர்களிடம்
இருக்காது. வீட்டிலும் கூட ஆடம்பரப் பொருட்கள் இருக்காது. பர்னிச்சர்கள் கூட நல்ல ரீ
சேல் வேல்யூ உள்ள மர பர்னிச்சர்களாகத்தான் வாங்குவார்கள். மதுரை, திண்டுக்கல் பகுதிகளில்
சாதாரணமாகக் கிடைக்கும் காஸ்மெட்டிக் அயிட்டங்கள், பிஸ்கட் வகைகள் கூட விருதுநகரில்
அரிதாகத்தான் கிடைக்கும். பணம் ஒரு குறிப்பிட்ட சாராரிடமே சுற்றி வருவதால் மற்றவர்கள்
திடீரென உள்ளே வந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியாத நிலை இருந்தது.
மூன்றாண்டுகள்
கழித்து என் தந்தைக்கு மீண்டும் பணியிட மாறுதல். மற்ற ஊர்களில் எல்லாம் வீடு மாற்றும்
போது, கூடவே வண்டியில் வரும்வரை நண்பர்களைக் கொண்டிருந்த எனக்கு கையைசைத்து வழியனுப்பக்
கூட யாருமில்லாத நிலை.
அடுத்து பத்தாண்டுகள்
கழித்து, சில மாதங்கள் விருதுநகரில் தங்கும் சூழல். பெரிய அளவில் மாற்றத்தை உணரமுடியவில்லை.
சுற்றிலும் உருவாகியிருந்த பொறியியல் கல்லூரிகளால் கல்லூரி ஆசிரியர்கள் புதிதாக குடிவர
ஆரம்பித்து இருந்தார்கள். தாவணி அணிந்த பெண்கள் குறைந்து சுடிதார், நைட்டி அதிகம் தென்பட்டது.
ஆனால் ஒரு நல்ல துணிகளுக்கான ஷோ ரூமோ, ஸ்டைலான சலுனோ தென்படவில்லை.
சில வாரங்களுக்கு
முன்பும் விருதுநகரில் ஒருநாள் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சனி, ஞாயிறு 5 காட்சிகளுக்குப் பதிலாக ஞாயிறு மட்டும்
5 காட்சிகள்,ஒன்றிரண்டு புதிய பேக்கரிகள், விருதுநகரின் பிரதான அசைவ உணவு கடையான பர்மா
ஹோட்டலுக்கு புதிய பிராஞ்ச் என சில மாற்றங்கள் தான். உத்தியோக பூர்வமாக நட்பாகியிருந்த
விருதுநகர்காரரிடம் “இப்பவும் முன்ன மாதிரி வெளி ஆட்கள் வர்றதில்லையா” ? என கேட்டேன்.
நீங்க வேற, வியாபாரத்துல
இருக்குறவங்க தவிர மத்த ஆளுகள்ல நிறைய பேரு ஐடி இண்டஸ்ட்ரிக்கு போயிட்டாங்க என்றார். அப்படியும்
இன்னும் ஊர் மார்டன் ஆகலையேப்பா என்றேன். விருதுநகர்ல பிறந்து வளர்ந்தவன் விருதுநகர்காரனாத்தான்
எங்கயுமே இருப்பான். எந்த மெண்டாலிட்டியில இங்க இருந்து கிளம்பி போனானோ அதே மெண்டாலிட்டிலதான்
இங்க பொங்கலுக்கு வருவான் என்றார்.
இப்போதும் கூட
வீட்டில் தந்தை-மகன் சுமுக உறவு இல்லாதவர்கள், அண்ணன் – தம்பிக்கு இடையே சுமுக உறவு
இல்லாதவர்கள் விருதுநகர் சென்று குடியேறலாம். ஆறு மாதத்தில் அவர்கள் நண்பர்களாகிவிடும்
வாய்ப்பு மிக அதிகம்.
(”தமிழ்” மின்னிதழில் வெளியான என்னுடைய கட்டுரை. நன்றி தமிழ் மின்னிதழ்)
(”தமிழ்” மின்னிதழில் வெளியான என்னுடைய கட்டுரை. நன்றி தமிழ் மின்னிதழ்)
4 comments:
எனக்கு பக்கத்து ஊர் விருதுநகர். அங்குள்ள நடைமுறைகளை அருமையாக தொகுத்து எழுதியுள்ளீர்கள். நன்றி.
நன்றி
யாரு இது டீ கிளாஸ்? முரளிக்கண்ணனா?
நாந்தான்.
Post a Comment