தமிழ் சினிமாவில்
எதிர்நாயகனாக நடிப்பவர்கள், ஒரு புள்ளியில் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நாயகனாக மாறுவார்கள்.
ரஜினிகாந்த்,சத்யராஜ்,சரத்குமார், நெப்போலியன் என பல உதாரணங்கள் உண்டு. எவ்வளவு கொடூர
வில்லனாக நடித்தாலும், அதில் மக்களைக் கவரும்படி அவர்களுக்கென்று ஒரு பாணியை பின்பற்றி
இருந்தால், எளிதில் ஹீரோவாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அப்படி ஏதும் பிரத்யேக பாணி
இல்லாவிட்டால், ஏதாவது ஒரு ராபின்ஹூட் டைப்பிலான கதையில், திருடனாகவோ அல்லது கொலைகாரனாகவோ
இருந்து மக்களுக்கு நன்மை செய்யும் வேடத்தில் நடித்துவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் முழுமனதாக
நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள்.
ரஜினிகாந்த், சத்யராஜ்
எல்லாம் வில்லனாக இருக்கும்போதே நாயகன் ரேஞ்சுக்கு ரசிக்கப்பட்டவர்கள். சரத்குமார்
அவருடைய தோற்றப்பொலிவு காரணமாக ஓரிரு படங்களில் நல்லமனிதர் கேரக்டர் பண்ணியவுடன் நாயகனாக
பிரமோட் ஆகிவிட்டார். நெப்போலியனுக்கு நிறைய படங்களுக்குப் பின்னரே அந்த திருப்புமுனை
ஏற்பட்டது. சீவலப்பேரி பாண்டி எனும் மக்களுக்கு உதவும்படியான கேரக்டர் அமைந்து நாயகனாக
மாறினார்.
தியாகராஜனும் இப்படித்தான்.
1981ல் “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் நாயகியின் அண்ணனாக ஒரு நெகட்டிவ் ரோலில் தன் திரைப்பயணத்தை
துவக்கினார். பின்னர் டிக் டிக் டிக், நேரம் வந்தாச்சு, கல்யாண காலம், நெஞ்சங்கள்,
பாயும்புலி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பெரும்பாலும் நெகடிவ் கேரக்டர்கள்
தான்.
இந்த நேரத்தில்
தான் ராஜசேகர் இயக்கத்தில் “மலையூர் மம்பட்டியான்”
படத்தில் நடித்தார். யாருமே எதிர்பாராத வெற்றியைப் பெற்றது இந்தப்படம். அதற்கு முன்னால்
ராஜசேகர் தமிழில் இயக்கிய கண்ணீர் பூக்கள், அம்மா இரண்டுமே தோல்விப்படங்கள். ஆனால்
கதையிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் கவனிக்கப்பட்ட படங்கள். மலையூர் மம்பட்டியான்
இந்த இரண்டு படங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட படம். ஊர் பெரியமனிதரால் பாதிக்கப்பட்ட
இளைஞன் அவரை பழிவாங்கி, பணம் உள்ளவர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் கதை. இளையாராஜா
கொடுத்திருந்த பாடல்களில் சின்னப் பொண்ணு சேலையும், காட்டு வழி போற பொண்ணே பாடலும்
மிகப்பெரிய ஹிட் ஆகியது. அந்த காலகட்டத்தில் இந்தப் படம் பி மற்றும் சி செண்டர்களில்
எம்ஜியார் படங்களுக்கு இணையாக வசூலித்ததாகக் கூறுவார்கள். ஒரு படம் பெற்ற வெற்றியை
அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு அடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் இருந்தே அறிந்து
கொள்ளலாம்.
எப்படி நாட்டாமை
படத்தின் வெற்றிக்குப் பின்னர் கே எஸ் ரவிகுமாருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை
தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல ராஜசேகருக்கு மலையூர் மம்பட்டியான்
வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, கமல் படங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தன.
தியாகராஜன், வில்லனாக
இருந்து நாயகனாக மாறியவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று முக வசீகரம் குறைந்தவர். அம்மைத்
தழும்புகள் கொண்ட முகம் கொண்டவர். அவர் அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படமானது தமிழகத்தின்
மூலை முடுக்கெல்லாம் வெற்றிகரமாக ஓடிய படம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல பரிட்சியமானவராக
இருந்தார். தங்கையின் காதலுக்கு எதிரானவராக, வேறொரு பெண் தொடர்பு கொண்டவராக, மதப்பித்து
கொண்டவராக அப்படத்தில் சித்தரிக்கப்பட்டு, கிராம மக்களிடம் திட்டு வாங்கியவர். இருந்தாலும் மக்களால் நாயகனாக இரண்டே ஆண்டுகளால்
ஏற்றுக்கொள்ளப் பட்டார் என்றால் அதுதான் மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தின் வெற்றி.
இப்படி நாயகனாக
மாறுபவர்கள், சில சமயம் தங்களுக்கு சற்றும் பொருந்தாத கதைகளில் நடித்து அகலக்கால் வைப்பார்கள்.
ஆனால் தியாகராஜன் சற்று தெளிவானவர். எந்த மாதிரி படங்கள் தன் உடல் மற்றும் முக அமைப்புக்கு
ஏற்றதாக இருக்குமோ, அந்த மாதிரி கதைகளாகவே தேர்ந்தெடுத்து நடித்தார். பெரும்பாலும்
ஆக்ஷன் கதைகளாக இருந்தாலும், சில நல்ல கதை அம்சம் உள்ள படங்களிலும் அவர் நடித்தார்.
ஜெயகாந்தனின் கதையில் பி லெனின் இயக்கத்தில் உருவான “எத்தனை கோணம் எத்தனை பார்வை” யில்
சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ள கதாபாத்திரத்தில் நடித்தார். பாலுமகேந்திராவின் இயக்கத்தில்
நடித்த ”நீங்கள் கேட்டவை” அவருக்கு அவ்வளவு பொருந்தாத படமென்றாலும், பாலுமகேந்திராவின்
இயக்கம் அதை சரிசெய்து விட்டது.
தியாகராஜனுக்கு
ஆக்ஷன் கதைகள் மட்டுமே பொருத்தமாய் இருக்கும். ஆக்ரோஷம், கோபம் ஆகியவற்றை வெளிக்காட்டும்
சிறிய கண்களோடு கூடிய இறுக்கமான முகம், மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம். எனவே
அவருக்கு காவல்துறை அதிகாரி, ராணுவ அதிகாரி அல்லது சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு பழிவாங்கும்
இளைஞன் போன்ற ரோல்கள் நன்கு பொருந்தும். அவர் ஏற்று நடித்த திரைப்படங்களின் பெயரே பாதி
கதையை சொல்லிவிடும். கொம்பேறி மூக்கன், எரிமலை, கருப்பு சட்டைக்காரன், நெருப்புக்குள்
ஈரம், சேலம் விஷ்ணு, தீச்சட்டி கோவிந்தன் என.
இந்த காலகட்டத்தில்
தியாகராஜன் நடித்த முக்கியமான படம் “காவல்”. 1983 ஆம் ஆண்டு கோவிந்த் நிஹ்லானி இயக்கத்தில்
ஓம்பூரி நடித்து, நடிப்புக்காக தேசிய விருது பெற்ற “அர்த் சத்யா” வின் ரீமேக். நேர்மையாக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் துறையில் இருப்பவர்களால்
சிரமத்துக்கு உள்ளாவதும், பின் சூழல் காரணமாக குற்றம் சாட்டப்படுபவராக கதையமைப்பு கொண்ட
படம். இந்தப் படம் தமிழில் நன்றாக போகவில்லை என்றாலும், தியாகராஜனுக்கு நல்ல மதிப்பைக்
கொடுத்த படம்.
ஒருவர் ஆக்சன்
ஹீரோவாக பரிமளித்துவிட்டார் என்பதற்கு இன்னொரு அளவுகோல் இரட்டை வேடம் கொண்ட கதை அம்சப்படங்களில்
நடிப்பது. தியாகராஜனுக்கு எரிமலை படத்தில் மூன்று வேடங்கள். கொத்தடிமையான தந்தை கொல்லப்பட,
பழிவாங்கும் இரண்டு மகன்களாகவும் தியாகராஜனே நடித்தார். கொம்பேறி மூக்கனில் தந்தை கொல்லப்பட,
கொன்றவர்களைப் பழிவாங்க, மகனுக்கு சண்டைப் பயிற்சிகள் கொடுத்து அம்மாவே வல்லவனாக உருவாக்குவார்.
அந்த அம்மா கேரக்டரில் சரிதா நடித்தார். கொம்பேறி மூக்கன் பாம்பு போல பகையை மறக்காமல்
பழிவாங்குபவராக தியாகராஜன் நடித்தார். மேலும் அவர் நடித்த கறுப்பு சட்டைக்காரன், ராஜா
யுவராஜா, நெருப்புக்குள் ஈரம், மச்சக்காரன், ஊமைத்துரை போன்ற திரைப்படங்களும் இதே மாதிரியான
ஆக்ஷன் மசாலாக்கள்தான். ராஜசேகர் இயக்கத்திலேயே செவன் சாமுராய், ஷோலே போன்ற படங்களின்
பாணியில் எடுக்கப்பட்ட முரட்டுக்கரங்கள் என்ற படத்திலும் நாயகனாக நடித்தார். பின்னர்
பூவுக்கள் பூகம்பம் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்தார்.
தியாகராஜன் அவ்வப்போது
மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார். மலையாளத்தில் அவர் நடித்ததில்
ஒரு முக்கியமான படம் ”நியூ டெல்லி”. ஜோஷி இயக்கத்தில் மம்முட்டி, சுரேஷ் கோபி நடித்த
இப்படத்தில் “சேலம் விஷ்ணு” என்னும் கொலைகாரன் வேடத்தில் தியாகராஜன் நடித்தார். மலையாளத்தில்
பெரும் வெற்றி பெற்ற படம் இது. இந்தப் படத்தில் வரும் சேலம் விஷ்ணு கேரக்டர் எப்படி
வந்தது என இதன் பிரிக்வெல்லாக “சேலம் விஷ்ணு” படத்தை தமிழில் தானே இயக்கி நடித்தார்.
அஜித் நடித்த பிரிக்வெல்லான பில்லா 2 வுக்கு தியாகராஜன் தான் முன்னோடி. தொடர்ந்து அதோலோகம்,
மனு அங்கிள், அப்காரி போன்ற படங்களில் நடித்தார். பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு முத்தசி
கதா மற்றும் ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடித்த நம்பர் 20 மெட்ராஸ் மெயில் ஆகிய படங்களில்
நடித்தார். ஆனால் நாயகனாக எதிலும் நடிக்கவில்லை. எல்லாமே சிறிய கதாபாத்திரங்கள்தான்.
தெலுங்கில் சிரஞ்சீவியுடன்
ஸ்டேட் ரவுடி என்ற படத்தில் நடித்தார். இதே ஆண்டில் சில்க் நாயகியாக நடித்த “மிஸ் பமீலா”
என்ற படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தார்.
தியாகராஜன் நாயகனாக
நடித்துக் கொண்டிருந்தபோது அவர் விஜயகாந்த், அர்ஜூன் போல ஒரு மினிமம் கியாரண்டி ஆக்ஷன்
ஹீரோவாக இருந்தார். அந்த காலகட்டத்தில் படங்கள் அதிகபட்சமாக 60 பிரிண்டுகள் தான் போடப்படும்.
தியாகராஜன் படங்கள் அதைவிட குறைவான பிரிண்டுகளே போடப்படும். வெளியாகும் செண்டர்களில்
படம் நாலு வாரங்கள் ஓடி, பின்னர் அடுத்தடுத்த செண்டர்களில் ஒரு வாரம் ஓடினாலே தயாரிப்பாளர்
தப்பித்து விடுவார். ஒரளவு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தியாகராஜன் படங்கள் ஆக்சன்
படங்களாக இருந்ததால், மக்களால் பெரிதும் சிலாகிக்கப் படாமல் இருந்தாலும், தயாரிப்பாளர்களைக்
காப்பாற்றியதால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றார். இதில் புரியாத விஷயம் என்னவென்றால்,
தமிழில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, ஏன் அதைவிட சம்பளம் குறைவாக கிடைக்கக்கூடிய
கேரள திரையுலகில், அதுவும் முக்கியமில்லாத ரோல்களில் நடித்தார் என்பது. தெலுங்கிலும்
அப்போதைய காலகட்டத்தில் எந்த நிர்ப்பந்தத்தில் வில்லனாக நடித்தார் என்று தெரியவில்லை.
இத்தனைக்கும் தெலுங்கில் நடிகர்,இயக்குநராக இருந்த பெக்கட்டி சிவராம் இவரது மாமனார்.
இப்படி ஓரளவுக்கு
செட்டான ஒரு நடிகர், திடீரென திரையுலகில் இருந்து ஒதுங்கி பிண்ணனிக்கு போகக் காரணம்,
அவரது மகன் பிரசாந்தின் அறிமுகமே. தியாகராஜன் மகன் பிரசாந்த் அறிமுகமான “வைகாசி பொறந்தாச்சு”
வெள்ளி விழா படமாக அமையவும், பிரசாந்தின் கேரியருக்கு உறுதுணையாக தன்னுடைய திரைப் பங்களிப்பை
குறைத்துக் கொண்டார்.
சத்யராஜ் போன்றவர்கள்
தங்கள் மகன் நாயகனாக நடித்த போதும், விடாமல் படங்களில் நாயகனாக நடித்து வந்தார்கள்.
தியாகராஜனும் தொடர்ந்திருந்தால் இன்னும் சில வருடங்கள் நாயகனாக இருந்திருக்கலாம். ஏனென்றால்
1995 வரை அவர் மாதிரியான ஹீரோக்களுக்கு தமிழ்சினிமாவில் இடம் இருந்தது.
பொதுவாக ஹீரோவாக
நடிப்பவர்கள், தங்கள் மார்க்கெட் தொய்வுறுவது போல் தெரிந்தால், சொந்தப்படம் எடுத்து
தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்வார்கள். அர்ஜூன் தன் வாய்ப்புகள் குறைந்த போது, சேவகன்
என்னும் படத்தை எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதுபோல தன்னை நிலைநிறுத்தும்
அளவுக்கு படமெடுக்கவும் தியாகராஜனால் முடிந்த ஒன்றுதான்.
1991ல் அறிமுகமான
பிரசாந்தும், 2000 ஆவது ஆண்டு வரை, குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அஜீத் ஒரு முக்கிய
நாயகனாக மாறும் வரை, லைம்லைட்டில் இருந்தார். அதன் பின்புலமாக தியாகராஜனின் உழைப்பும்
இருந்தது.
பின்னர் பிரசாந்தின்
கேரியரை புதுப்பிப்பதற்காக ஷாக், ஜெய், பொன்னர் சங்கர், மம்பட்டியான் ஆகிய படங்களை
இயக்கினார். ஆனால் எதிலும் வெற்றி கிட்டவில்லை.
சமீபத்தில் நடந்த
விழா ஒன்றில் “பெஸ்ட் டாட் ஆஃப் மில்லினியம்” என்னும் விருதை தியாகராஜனுக்கு ஒரு நிறுவனம்
கொடுத்தது. தன் மகனின் வளர்ச்சிக்காக தன் கேரியரை பாதியில் நிறுத்திய ஒருவருக்கு கிடைத்த
சிறப்பு அது.
4 comments:
காட்சிப்பிழை ஆசிரியர் குழுவினருக்கு மிக்க நன்றி.
யாரு இது டீ கிளாஸ்? முரளிக்கண்ணன் blog-ஐ ஆட்டையப் போட்டது?
நாந்தான் நாந்தான்.
எப்பவும் போலவே அருமை. இதென்ன புதுசாக டீ கிளாஸ் ?
Post a Comment