மகனின் ஸ்கூல்
அப்ளிகேஷனை சரசரவென நிரப்பிக் கொண்டே வந்தேன். பெர்மனெண்ட் அட்ரஸ் என்பதை கண் கண்டுகொண்டதும்
கையின் வேகம் குறைந்தது. திருமணமாகி ஆண்டுகள் கழிந்தவர்கள், ஏதாவது அப்ளிகேஷனை பில்
செய்ய நேர்கையில் சில்ரன்ஸ் என்ற கேள்வியைப் பார்த்ததும் வருத்தப்படுவார்களே அதற்கு
ஈடானதுதான் இதுவும்.
என் 40 ஆண்டுகால
வாழ்க்கையில் இதுவரை சொந்த வீட்டில் இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே வாடகை வீடுதான்.
என் தந்தை, தாத்தாவும் சொந்த வீட்டில் இருந்ததே இல்லையாம். நான் கூட கிண்டலாகச் சொல்வதுண்டு,
நம் முன்னோர்கள் குகை மனிதர்களாக இருந்தபோது கூட குகைக்கூலி கொடுத்துத்தான் தங்கியிருப்பார்கள்
என.
என் தாத்தா ஒரு
கடையில் சிப்பந்தியாய் இருந்து நான்கைந்து வீடுகள் மட்டும் மாறி தன் வாழ்க்கையை முடித்துக்
கொண்டவர். என் தந்தை அரசு அலுவலராய் இருந்தும் 20 வீடுகளுக்கு மேல் பார்த்தவர். அவர்
இருந்தது நல்ல மேல் வரும்படி உடைய டிபார்ட்மெண்ட்தான். அவரும் சபலப்படக்கூடியவர்தான்.
ஆனால் சபலத்தை அவரின் பயம் வென்றுவிட்டது. சஸ்பெண்ட் ஆனாலோ, வேலை போய்விட்டாலோ என்ன
செய்வது என்ற அச்சத்திலேயே அவர் நல்லவராக நடந்து கொண்டார். அவரின் இருப்பு மற்றவர்களுக்கு
இடைஞ்சலாய் இருந்தது. அந்த இடத்திற்கு போட்டி போடுபவர்களால் அதிகபட்சம் இரண்டாண்டுகளுக்கு
மேல் ஓரிடத்தில் அவரால் இருக்க முடியவில்லை.
எங்கள் வீட்டில்
எந்தப் பொருள் வாங்கினாலும், இதை எளிதாக, உடையாமல் எடுத்துச் செல்ல முடியுமா என்றுதான்
பார்த்து வாங்குவோம். கட்டிலை பிரித்து எடுத்துச் சென்று விடலாம், ஆனால் பீரோவை அப்படி
சுலபமாக தூக்கமுடியாது என்பதற்காகவே அதை வாங்குவதைத் தவிர்த்தோம். இல்லையென்றாலும்
அதில் வைக்கும் அளவுக்கு எங்களிடம் மதிப்பான பொருள் எதுவும் இல்லை. என்னையும், என்
அண்ணனையும் படிக்க வைப்பதற்கே என் தந்தை கரணம் அடிக்க வேண்டி வந்தது.
அண்டை அசலில் யாராவது
நீங்கள் டூர் போயிருக்கீங்களா என்று கேட்டால், என் அம்மா விரக்தியுடன் சொல்லுவார்.
நாங்க ரெண்டு வருசத்துக்கு மொத்தமா புதுப் புது இடத்துக்கு டூர் போவோம் என.
என் அண்ணனுக்கு
சொந்தத்தில் ஒரு பெண் அமைந்து தப்பித்தான். எனக்கு அப்படி எதுவும் இல்லாததால் வீடில்லாத
கொடுமை முகத்தில் அறைந்தது. வேலை சுமார்தான் அது பரவாயில்லை. ஆனா சொந்தமா கையலக நிலம்
கூட இல்லை. எங்க பொண்ணுலாம் சொந்த வீட்டுல வசதியா இருந்தவ. எப்படிக் கொடுக்கிறது? என
தரகரிடம் கேட்டார்கள். சரி, பிறந்ததில் இருந்தே காம்பவுண்டு, ஒண்டிக்குடித்தனங்களில்
காலம் தள்ளிய பெண்ணைப் பிடிக்கலாம் என்றால், இவ்ளோ காலம் கஷ்டப்பட்டுட்டா, எலி வளையா
இருந்தாலும் தனி வளையா கிடச்சா பரவாயில்லை என்றார்கள்.
என் தந்தையின்
தரகரிடம், முதல் தாரத்துப் பொண்ணு, இப்போ ரெண்டாம் தாரத்துக்கிட்ட கஷ்டப்படுற மாதிரி
இருந்தா, தள்ளி விட்டாப் போதும்னு கொடுத்துடுவாங்க, அது மாதிரிப் பாருங்க என்றார்.
இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனது. திருமணத்தின் போது என் அண்ணனின் மாமனார், “உங்க அப்பன்
இப்ப காமிச்ச விவரத்த அந்தக் காலத்துல காமிச்சு ஒரு வீட்டக் கட்டியிருந்திருக்கலாம்”
என்று கமெண்ட் அடித்தார்.
இது போன்ற குத்தல்களை
அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால், திருமணத்திற்கு முன்னர் இடம் வாங்கி விட வேண்டும்
என நினைத்திருந்தேன். திருமண செலவுகள், வைத்திய செலவு என அது கைகூடாமல் போனது. குழந்தை
பிறப்பதற்குள், அவன் ஸ்கூலில் சேர்வதற்குள் என அந்த நினைப்பு நினைப்பாகவே தள்ளி தள்ளிப்
போய்க் கொண்டிருக்கிறது.
தனியாரில் வேலை
செய்தாலும் வேலை இழப்பு, வேலை மாற்றம், பொருளாதார நெருக்கடி என நானும் இப்போதே நாலைந்து
வீடுகள் மாறிவிட்டேன். கடைசியாய் ஒரு ஹால் மற்றும் கிச்சன் உடைய வீட்டில் இருக்கிறேன்.
நான் சிறு வயதாய் இருந்த போது, தெரு அண்ணன்களுடன் செகண்ட் ஷோ போக ஏன் தாராளமாய் அனுமதித்தார்,
ஞாயிறு மதியம் விளையாடப் போக ஏன் ஊக்கப்படுத்தினார் தந்தை என இப்போது புரிந்தது.
மனதில் ஓடிய எண்ணங்களை
கட்டுப்படுத்திக் கொண்டு, என்னடா, பிரண்ட்ஸ விட்டுட்டு வர்றது கஷ்டமா இருக்கா? என பையனிடம்
கேட்டேன். அதுனால என்னப்பா? புதுப்புது பிரண்ட்ஸ் கிடைச்சிட்டே இருக்காங்களே? என்றான்
வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியுடன்.
யோசித்துப் பார்த்தால்
அவனை குழந்தையாகவே இருக்க விட வில்லை நானிருந்த வாடகை வீடுகள். இரவில் ஒரு பூச்சி கடித்து,
அவன் அழுதால் கூட அருகாமை வீடுகளில் இருந்து கேட்கும் உச் உச் ஒலிகளுக்கு பயந்து அவன்
வாயை மூடி வெளியில் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறேன். சுவரில் கிறுக்கக் கூடாது என்பதற்காக
கையை துண்டால் கட்டிப் போட்டிருக்கிறேன். ஒருமுறை காலில் சூடான பால் கொட்டி, இரவில்
அவன் அழுவானே என்பதற்காக இருமல் மருந்து நாலு மூடி ஊற்றி தூங்க வைத்திருக்கிறேன். ஒரு
முறை மாடியில் இருந்த போது எந்நேரமும் டங் டங் என சத்தம் கேட்கிறது என சலித்துக் கொண்ட
வீட்டு உரிமையாளருக்காக அவனை பிளாஸ்டிக் சேரை விட்டு இறங்க விடாமல் செய்திருக்கிறேன்.
இதெல்லாம் போய்த்
தொலையட்டும். விவரமில்லா வயதில் அவன் அனுபவித்த வேதனைகள். திருமணத்திற்குப் பிறகாவது,
அவன் மன சாந்தியுடன் வாழவேண்டும். எங்கே மகன் விழித்து விடுவானோ என பயந்து கொண்டே தாம்பத்யம்
அனுபவிக்கும் கொடுமை வேண்டாம், அவன் குழந்தையை
பிறந்த உடனேயே பெரியவனாக வளர்க்க வேண்டாம்.
மனதில் சொல்லிக்
கொண்டேன். மகனே இன்னும் கடுமையாக உழைப்பேன், 15 வருடம் ஊண்,உறக்கம் இல்லாமல் உழைப்பேன்
என்று.
1 comment:
உண்மை சுடுகிறது. இன்று பலரும் சொந்தங்களை இழந்தாலும் பரவாயில்லை.. சொந்த வீடு வேண்டும் என்று நினைப்பதன் நியாயத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
Post a Comment