சத்யஜோதி பிலிம்ஸ்
தயாரிப்பில், ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கார்த்திக்,குஷ்பூ,
ரேவதி நடிப்பில் ”கிழக்கு வாசல்” என்று கேள்விப்பட்ட போது உதயகுமாரின் வழக்கமான ஆக்ஷன்
திரில்லர் வகைப் படமாகவே இதுவும் இருக்கும் என்றே தோன்றியது. பாடல்கள் வெளியானபோது,
என்ன இது முந்தைய உதயகுமார் படங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது போலயே என்ற
எண்ணம் ஏற்பட்டது.
ஏனென்றால் திரைப்பட
கல்லூரி மாணவரான ஆர் வி உதயகுமாரின் முதல் படமான உரிமை கீதம் ஒரு நல்ல ஆக்ஷன் திரில்லர்.
பிரபு, கார்த்திக் காம்பினேஷன். பத்திரிக்கை விமர்சனங்களால், படத்திற்கான பார்வையாளர்களை
அதிகரிக்கவோ, குறைக்கவோ முடிந்த காலம். பெரும்பாலான பத்திரிக்கைகளில் நேர்மறையான விமர்சனங்கள்
வர படம் வெற்றி பெற்றது. அதையடுத்து சிவாஜி கணேசன், சத்யராஜ், ரூபிணி,கௌதமி என்ற நட்சத்திர
பட்டாளத்துடன் இணைந்து செய்த ”புதிய வானம்” பெரிய அளவில் அளவில் பேசப்படவில்லை. தொடர்ந்து
அவர் பிரபு, சிவக்குமாரை வைத்து இயக்கிய “உறுதி மொழி” ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்த நிலையில்
தான் கிழக்கு வாசல் வெளியானது. பொதுவாக திரைப்பட கல்லூரி மாணவர்கள் கிராமிய கதைகளை
எடுக்க மாட்டார்கள் என்ற சூழல் நிலவிய நேரம். உழவன் மகன், செந்தூரப் பூவே போன்ற படங்களை
அவர்கள் எடுத்திருந்தாலும், அவையெல்லாம் கிராமத்தை பிண்ணனியாகக் கொண்ட வழக்கமான பழிவாங்கும்
கதைகள் தானே ஒழிய, கிராமிய மனிதர்களை, அவர்களின் உணர்வுகளைச் சித்தரித்த படங்கள் அல்ல.
கிழக்கு வாசலும் அப்படித்தான் ஆரம்பித்தது. ஆனால் அதில் ரேவதி கேரக்டர் எண்டரி ஆனவுடன்
படத்தின் நிறமே மாறியது.
படம் முடிந்து
வெளியே வந்தபோது, தாயம்மாவும், வள்ளியூரானும், சின்ன புள்ளயும், பெரிய கருப்பத் தேவரும்தான்
மனதில் இருந்தார்கள். எம் எஸ் மதுவின் கதையை தான் பழகிய சூழலின் மாந்தர்களால் சிறப்புப்
படுத்தி இருந்தார். நிர்ப்பந்தத்தால் ஊர் பெரிய மனிதருக்கு சின்ன வீடாக வரும் இளம்
பெண், ஊரில் உள்ள கூத்துக் கலைஞனுடன் அவளுக்கு வரும் காதல்,அதைத் தொடர்ந்து எழும் பிரச்சினைகள்
என ஒரு நிறைவான அனுபவத்தை கொடுத்த படம்.
அடுத்ததாக உதயகுமார்
இயக்கிய “சின்ன கவுண்டர்” தமிழ்சினிமாவில் ஜாதியை அப்பட்டமாக, பெருமையோடு காண்பிக்கும்
ட்ரெண்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம். அதற்கு முன்னால் வந்த நட்சத்திர நடிகர்கள்
நடித்த கிராமியப் படங்களை எடுத்துக் கொண்டால், இலை மறை காயாகவே ஜாதி சொல்லப்பட்டிருக்கும்.
சிவாஜி கணேசன், கார்த்திக் நடித்த சில படங்களில் அவர்கள் தேவர் பிரிவைச் சேர்ந்தவர்களாக
பெயரோடு சேர்த்து சொல்லப்படும். ஆனால், அவர்கள் சாமானியர்களாகவே காட்சிப் படுத்தப்பட்டிருப்பார்கள்.
ஊர்ப் பெரியவர், மரியாதைக்காரர் என பெரிய சிலாகிப்புகள் இருக்காது. ஊர்ப் பெரிய மனிதர்/நிலச்
சுவான் தாரராக மூக்கையாத் தேவர் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்த “பட்டிக்காடா
பட்டணமா”வில் கூட அவர் மனைவியுடன் தோற்றுப் போகும், சண்டையிடும் ஆசாபாசம் கொண்டவராகவே
இருப்பார்.
எம்ஜியாரோ, சமூகப்
படங்களில் ஊர்ப் பெரிய மனிதராகவோ, ஏதாவது ஜாதிக்காரராகவோ நடித்ததில்லை. அவர் படங்களில்
பண்ணையார்களை, ஊர்ப் பெரிய மனிதர்களை மோசமானவர்களாகத்தான் கட்டமைப்பார். சங்கிலி முருகன்
தயாரித்த படங்களில் நாயகனின் ஜாதியைச் சொன்னாலும், அந்த நாயகன் பெரும் தலைவனாக எல்லாம்
காட்சிப்படுத்தி இருக்க மாட்டார்கள்.
முதன் முதலில்
ஒரு ஆதிக்க ஜாதி, ஊர் பெரிய மனிதராக,நல்லவர், வல்லவராக ஒரு பெரிய ஹீரோ நடித்து வந்த
படமென்றால் தயங்காமல் சின்ன கவுண்டரைச் சொல்லலாம். இந்தப் படத்திற்கு தமிழர்கள் கொடுத்த
வெற்றி, தாராளமாக ஜாதியின் பெயரில், ஜாதிக்காரர்களின் பெருமையை தூக்கிப் பிடிக்கும்
வகையில் படமெடுக்கலாம் என பலருக்கும் தைரியம் தந்தது. இந்தக் கால கட்டத்தில் டப்பின்
படங்களின் ராணியாக விளங்கிய விஜயசாந்தி கூட, தான் நடித்த ஒரு தெலுங்குப்படத்தை “கவுண்டர்
பொண்ணா கொக்கா” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.
”புதிய பாதை” படத்தைப்
பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் பார்த்திபனிடம் இப்படிச் சொன்னாராம் “எங்களுக்கு 40 படத்துக்கு
அப்புறம் கிடைத்த ஆக்ஷன் ஹீரோ இமேஜ்” உங்களுக்கு முதல் படத்திலேயே கிடைத்து விட்டது
என்று. அது போல விஜயகாந்துக்கு இப்படத்தின் மூலம் கிடைத்த இமேஜ் அளவிட முடியாதது. எப்படி
“நாடோடி மன்னன்” படத்திற்குப் பின்னர் இவரால் நாட்டை ஆளமுடியும் என்ற நம்பிக்கை தமிழக
மக்களுக்கு வந்ததோ, அதைப் போல ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே இருந்த விஜயகாந்துக்கு தலைவன்
என்ற இமேஜைக் கொடுத்தது சின்ன கவுண்டர்.
இந்தப் படத்தின்
மாபெரும் வெற்றி, இளையராஜாவின் தயாரிப்பில், கமல்ஹாசன் நடித்த ”சிங்காரவேலன்” பட வாய்ப்பைப்
பெற்றுத் தந்தது. இது அவர் இயக்கிய முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட முழு நீள நகைச்சுவைத்
திரைப்படம். அடுத்ததாக ஏவிஎம் தயாரிப்பில், ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
படம் ஏவிஎம்மின் பிரத்யேக விளம்பரங்களால் சில திரையரங்குகளில் நீண்ட நாள் ஓடியது. நிலப்பிரபுத்துவத்தை
தூக்கிப் பிடிக்கும் ஏராளமான காட்சிகள் இந்தப் படத்தில் இருந்தது. அதில், பண்ணையார்
நடந்துபோன பாதையில் இருந்து மண்ணை அள்ளி நெற்றியில் பூசிக் கொள்வது, அவர் காலடித் தடத்தைக்
கூட மற்றவர்கள் மிதிக்காமல் இருப்பது போன்ற காட்சிகளை வைத்திருந்தார்.
ரஜினிகாந்த், விஜயகாந்த்
போன்ற ஏராளமான ரசிகர் கூட்டம் உடைய, ஒரு தலைமுறையை கவர்திழுக்கக் கூடிய அளவுக்கு சக்தி
உள்ள நடிகர்கள் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பது, மக்களின் மனதில் நிலப்பிரபுத்துவச்
சினதனையை மங்காமல் வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.
அடுத்து உதயகுமார்
இயக்கிய பொன்னுமணியிலும் முதலாளியின் மீதான விசுவாசம் பிரதான பங்கு வகித்தது. அடுத்து,
பிரபுவின் 100வது படமான “ராஜகுமாரன்”. பெயரே சொல்லிவிடும். இந்தப் படத்திலும் மீண்டும்
பண்ணையார், பொய் சொல்லாதவர், ஊர்ப் பெரிய மனிதர், பகை என காட்சிகள். போலிஸ் கதை அல்லது
வில்லன்களை பழிவாங்கும் கதை என்பது ஒன்றுதான், ஆனால் அதை ஒரே நடிகரே செய்து கொண்டிருந்தால்
மக்கள் அலுப்படைந்து விடுவார்கள். வேறு வேறு நடிகர்கள் அடுத்தடுத்த தலைமுறையில் அந்த
வேடங்களில் நடிக்கும் போது மக்கள் அதை ரசிப்பார்கள் என்று சொல்வார்கள். காதல் படங்களும்
கூட அப்படித்தான். உதயகுமார் தன்னிடம் இருந்த நல்லவரான ஊர்ப் பெரிய மனிதர் கதையை வெவ்வேறு
நடிகர்களை வைத்து எடுத்தார். மக்களுக்கு அந்த சட்டகத்தில் அலுப்பேற்பட்டதும் அவரின்
இடம் பறிபோனது. ராஜகுமாரனின் தோல்வியால் உதயகுமார்
மீண்டும் பாதை மாறினார். கார்த்திக் நடிப்பில் நந்தவன தேரு, அர்ஜூனுடன் இணைந்து சுபாஷ்
ஆகிய படங்களை இயக்கினார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் கற்க கசடற என்னும் படத்தை
இயக்கினார்.
உதயகுமாரின் சினிமா
வாழ்க்கை ஆச்சரியமானது. குறைந்த படங்களே இயக்கியிருந்தாலும் அதில் சிவாஜி கணேசன்,ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,
விஜய்காந்த், கார்த்திக்,பிரபு, அர்ஜூன் என நட்சத்திர நடிகர்களை இயக்கி இருக்கிறார்.
அவர் இயக்கத்தில் வெளியான கற்க கசடற மட்டுமே அன்றைய தேதிக்கு மார்க்கட் மதிப்பு இல்லாத
நாயகனைக் கொண்டு எடுக்கப்பட்டது.
மேலும் முதல் மூன்று
படங்கள் ஆக்சன், திரில்லர் வகையில் கொடுத்துவிட்டு எல்லோராலும் ரசிக்கும் படியான கிராமத்து
கதைக்களன் கொண்ட படங்களை அடுத்தடுத்து கொடுக்க முடிந்தவர் இவர். உதயகுமார் தன்னுடைய
படங்களில் பல பாடல்களை எழுதியுள்ளார். இளையராஜாவின் இசையில் பல நல்ல பாடல்களை தன் படத்துக்கு
வாங்கினார்.
உதயகுமாரிடம்,
நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தாங்கிப் பிடிக்கும் மனம் இருந்தது. அது முதலில் வெளிப்படாவிட்டாலும்,
சமயம் கிடைக்கும் போது வெளிப்பட்டது. பின்னர் பெரிய அளவிலான தோல்வி அடையும் வரை அதை
அவர் கைவிடவில்லை. தன் முதல் படமான, உரிமை கீதத்தில் பிரபு பணத்திற்காக ரத்ததானம் செய்வார்.
அப்போது சலவைத் தொழிலாளியான ஜனகராஜ் ”என் ரத்தத்துக்கு எல்லாம் கொஞ்சம் பணம் தான் கொடுத்தாங்க.
ஆனா உன்னது ராஜ பரம்பரை ரத்தம், நிறைய கொடுத்தாங்க” என்பார். கிழக்கு வாசலில் பண்ணையாரின்
சின்ன வீடாக இருந்தாலும், அவள் கற்போடுதான் இருக்கிறாள், கன்னி கழியவில்லை எனவே அவளை
நீ திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பொருளில் “தாயம்மா கறந்த பால விட சுத்தமானவ” என்னும்
வசனம் வரும். சின்ன கவுண்டர், எஜமான் எல்லாம் படம் முழுவதுமே ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ
சிந்தனை உடைய காட்சிகள் தான்.
பொன்னு மணியில்,
பன்ணையாரிடம் வேலை செய்யும் வேலையாள் அவருக்காக உயிரை விடும் தருவாயில் கூட, தன் மகனிடம்
(சிறுவன்) பண்ணையாரின் கையைப் பிடித்துக் கொடுத்து,அவரை பத்திரமாக பார்த்துக் கொள்
என்பார்.
ஆர் வி உதயகுமார்
சின்ன கவுண்டர், எஜமான் மூலம் செய்ததை கே எஸ் ரவிகுமார் நாட்டாமை, முத்து, நட்புக்காக
என்று தொடர்ந்தார். பெயரிலேயே ஜாதிப் பெயரை அப்பட்டமாக வைக்கும் வழக்கம் சின்ன கவுண்டரில்
ஆரம்பித்து, தேவர் மகனில் வலுவடைந்து இன்று சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, கொம்பன்
என வலுவடைந்து நிற்கிறது. இந்த போக்கிற்கு ஆரம்பம் கொடுத்தவர் ஒரு திரைப்பட கல்லூரி
மாணவர் என்பதுதான் நெருடலான விஷயம்.
2 comments:
அருமையான பதிவு. இவரது ஒரு சில காட்சிகள் மறக்க முடியாதவை.. சின்னக் கவுண்டரில் இலைக்கு அடியில் தாலியை வைப்பது போன்றவை. ஒரு கதையை மட்டுமே வைத்து பல படங்கள் செய்யக் காரணம் இவரது காட்சியமைப்பு திறமையே. ஒரு இயக்குனைரைப் பற்றி எழுதும்போது அவரது உதவி இயக்குனர்கள் பற்றியும் எழுதலாம்.
நல்ல அலசல்.. சாதிப்பெயர் சூட்டி,சாதிப்பெருமிதம் பேசும் திரைப்படங்களை எடுத்து தமிழ்த் திரைப்படத்துறையில் சீரழிவுப் பாதைக்கு வழி உருவாக்கிக் கொடுத்தப் பெருமை இயக்குனர் மனோஜ்குமார் அவர்களையேச் சாரும். அவர் உருவாக்கிய பாதையில் பயணித்து தமிழ் சினிமாவை இன்னும் அதல பாதாளத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஆர்.வி.உதயகுமாரும், கே.எஸ் ரவிக்குமாரும்.
Post a Comment