July 01, 2015

கமலின் ஓப்பனிங்

கமலின் தீவிர ரசிகர்களின் வயது இப்போது 40ல் இருந்து 50க்குள் இருக்கிறது. குறைந்த பட்சம் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் கமலின் விசிறிகளாக உள்ளனர். 50க்கு மேலும் கூட ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் 35க்கு கீழ் உள்ளவர்கள் பெரும்பான்மை அஜீத்,விஜய்,ரஜினிக்கு இருக்கிறார்கள். ஆனால் 18-25ல் உள்ளவர்களில் ரஜினிக்கு கூட பெரிய அளவில் மாஸ் இல்லை.
ஒரு படம் வெள்ளியன்று ரிலீஸ் ஆகும் போது, காலை காட்சிக்கு அந்த நடிகரின் தீவிர ரசிகர்களும், கல்லூரி மாணவர்களும், வேலை இல்லாதவர்களும், விடுமுறையாக இருந்தால் விடுப்பில் இருப்பவர்களும் தான் பெரும்பான்மையாக வருவார்கள். 40 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு இந்தக் காலத்தில் இருக்கும் கமிட்மெண்ட் அனைவரும் அறிந்ததே. அவர்கள் எல்லாம் மாலைக் காட்சிக்கு அதுவும் சனி,ஞாயிறுகளில் தான் வருவார்கள்.
கல்லூரி மாணவர்களிடம் கமல் மேல் ஒரு நல்ல நடிகன் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்களை முதல் நாளே வரிசையில் நிற்க வைக்கும் வசீகரம் அவரிடம் இப்போது இல்லை. டாக் வந்தால் பார்ப்பார்கள் அல்லது விஸ்வரூபம் போல் ஹைப் எழுந்து, அந்தப் படம் பார்ப்பது அரசுக்கு/அமைப்புக்கு எதிரானது என்ற எண்ணம் ஏற்பட்டால் வலுக்கட்டாயமாக போய் பார்ப்பார்கள்.
குணா, சிங்கார வேலன் படங்களுக்கு எல்லாம் காலை 4 மணி ஷோ போடப்பட்டது. மகாநதியில் இருந்தே கமலுக்கு புது ரசிகர்கள் வருவது குறையத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டில் இந்தியன், அவ்வை சண்முகி என்ற இரண்டு பிளாக்பஸ்டர்களில் கமல் நடித்த போது, இதே போல் கமல் தொடர்ந்து சில படங்கள் கொடுத்தால் நிச்சயம் புது ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தேன்.
ஆனால் கமல், அவ்வை சண்முகியின் இந்தி ரீமேக், தொடர்ந்து மருதநாயகம் என இரண்டு ஆண்டுகள் தமிழில் படம் கொடுக்கவில்லை. பெப்ஸி தொழிலாளர் பிரச்சினை வந்ததால் அப்போது “காதலா காதலா” படத்தை வலுக்கட்டாயமாக எடுத்தார். அதில் கூட கே எஸ் ரவிகுமார் இயக்குநர் அமைப்புக்கு ஆதரவாக ஒதுங்கிக் கொள்ள சிங்கீதம் சீனிவாச ராவை இயக்க வைத்தார். அந்த சமயத்தில் விஜய் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்து விட்டிருந்தார். காதலா காதலாவோடு இணைந்து வெளியான விஜய்யின் நினைத்தேன் வந்தாய்க்கும் நல்ல கூட்டம் இருந்தது. பெரும்பாலான கல்லூரி மாணவ/மாணவிகள் நினைத்தேன் வந்தாய்க்கே போனார்கள்.
பின் ஹேராம் எடுக்கத் தொடங்கினார். அந்த இடைவேளையில் அஜீத் வாலிக்குப் பின் சில வெற்றிகளை கொடுத்து அவர் பங்குக்கு ரசிகர்களை ஈர்த்தார். 2000ல் ஹேராம் வெளியாகி வணிக ரீதியாக படு தோல்வி அடைந்தது. அதன்பின் கமல் நடித்த தெனாலிக்கு இணையாக விஜய்யின் பிரியமானவளேயும் வியாபாரம் ஆகியது. அதன்பின் வெளியான ஆளவந்தானை விட ஷாஜஹான் வசூல் அதிகம் பெற்றது.
இந்த காலகட்டத்தில் கமலுக்கு புது ரசிகர்கள் அதாவது கமலை முதலிடத்தில் வைத்துப் பார்க்கும் ரசிகர்கள் உருவாகவில்லை. இளைஞர்களால் அவரை தங்கள் பிம்பமாக உருவகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதன்பின் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், விருமாண்டி,வசூல் ராஜா என வெற்றிப் படங்களில் நடித்தாலும் அவரின் பழைய ரசிகர்களைத்தான் திருப்தி செய்து தக்க வைக்க முடிந்தது.
2005ல் சந்திரமுகி, சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ் மூன்றும் ஒரே நாளில் வெளியானது. முதல் இரண்டுக்கு இருந்த ஓப்பனிங்கில் 30% கூட கமலுக்கு இல்லை. ஆனால் அதற்கடுத்த வெளியான வேட்டையாடு விளையாடுவிற்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங் இருந்தது. காரணம் கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ். தசாவதார ஓப்பனிங்குக்காக ஜாக்கி சானை வைத்தெல்லாம் பல்டி அடிக்க வேண்டி இருந்தது. அதன்பின் உன்னை போல் ஒருவன், மன்மதன் அம்பு என ஓப்பனிங் கிடைக்கவில்லை. விஸ்வரூபம் கதை நாம் அனைவரும் அறிந்ததே. உத்தம வில்லனுக்கு வந்த கொஞ்ச நஞ்சமும் பட வெளியீட்டு சிக்கலால் கடுப்பானதுதான் மிச்சம்.
இந்த சூழலில் பாபநாசத்துக்கு ஓப்பனிங்கை யெல்லாம் எதிர்பார்க்கும் மனநிலை இல்லை. இந்தக் காலத்தில் முதல் மூன்று நாளில் தியேட்டரை நிறைக்கப் போகும் இளைஞனை இழுக்கும் அம்சம் இப்போதைய கமல் படங்களில் இல்லை. உத்தம் வில்லன் வர்றீங்களா? என அலுவலகத்தில் கேட்ட போது, யார் ஹீரோயின்? என கேட்டார்கள். ஊர்வசி,பூஜா குமார் என்றதும் பல்டி அடித்து விட்டார்கள். வேட்டையாடு விளையாடுக்குப் பிறகு இளைஞர்கள் கேட்கும் பாடல் எதுவும் அவர் படங்களில் இல்லை. எடுக்கும் களங்களும் 40+ க்கு உரித்ததாக எடுத்தாளுகிறார்.
இந்த 40+ மக்கள் மனைவி, குழந்தைகள் இல்லாமல் படம் பார்க்க முடியாது. மனைவிக்கு ஒக்கே கண்மணியும், பிள்ளைகளுக்கு காஞ்சனாவும் தான் சாய்ஸ். அடுத்து தியேட்டர்ல பார்த்தா புலி தான் என்பது என் மகன்களின் நிலையாக இருக்கிறது.
இந்த நிலையில் 4 மணி ஸ்பெஷல் காட்சியெல்லாம் போட்டால் ஆப்பரேட்டர் மட்டும் தான் பார்க்க வேண்டி இருக்கும்.
கமலுக்கு இருப்பது இரண்டு சாய்ஸ்கள் தான். ஒன்று பாபநாசம் போல மொத்த செலவும் 30 கோடிக்குள் அடங்கும் படம் எடுப்பது. சாட்டிலைட் ரைட்ஸ், தியேட்டர் வசூல், வெளிநாடு, டெண்ட் கொட்டா என எளிதாய் கவர் பண்ணிவிடும்.
இல்லையெனில் ஷங்கர்.முருகதாஸ் போன்ற இயக்குநர்கள், ஏ ஆர் ரஹ்மான், அநிருத் போன்ற இசை அமைப்பாளர்களுடன் இணைந்து யூத் ஆடியன்ஸை கவரும்படி பெரிய பொருட் செலவில் நடித்து, ஹைப் கிரியேட் செய்தால் கூட்டம் வரும்.
பார்ப்போம்.

6 comments:

karthick writes said...

Well analysed... Its a mistake OK kamal only..

karthick writes said...

Well analysed... Its a mistake OK kamal only..

கருத்து கந்தசாமி said...

அண்ணே.. நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க. ரஜினிக்கும், மணிரத்னம் போன்றோருக்கும் இதே பிரச்சனைகள் உண்டு. என்ன.. ரஜினிக்கு ஷங்கர் கிடைக்கிறார். கமலுடைய பாணிக்கு பெரிய டாமி கிடைக்காது, கிடைத்தாலும் நிலைக்காது.

காரிகன் said...

மற்ற நடிகர்களை வளர விடாமல் செய்த கமல் ரஜினி போன்றோர் இப்போது புதியவர்களின் வரவாலும் புதிய சிந்தனைகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டு வருகிறார்கள். இது தமிழ்த் திரைக்கு நல்லதே.
"ஆடிய ஆட்டமென்ன தேடிய செல்வமென்ன?" போதும்.

ravikumar said...

First & Foremost Let him become Producer & Director friendly

கருத்து கந்தசாமி said...

டாமி அல்ல. Team