September 30, 2015

வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம் என்ற பெயரை முதன் முதலில் கேள்விப்பட்டது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1985 உலக தொடர் கோப்பையின் போதுதான். இந்து பேப்பரில் ஒரு பத்தி அளவு மட்டுமே அப்போது அந்த போட்டிகளைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். ஸ்கோர்கார்டில் தென்பட்ட புதுப்பெயரான வாசிம் அக்ரம் அப்போது அவ்வளவாக ஈர்க்கவில்லை. ரவி சாஸ்திரியும் அசாருதீனும் என்ன செய்தார்கள் எனப்பார்ப்பதில் தான் ஆர்வம்.   முதன் முதலில் வாசிம் அக்ரத்தின் பந்துவீச்சைப் பார்த்தது 86 ஷார்ஜா கோப்பை போட்டிகளில் தான்.

ஸ்கோர்கார்ட் என்பது ஒரு பிளேயர் களத்தில் என்ன செய்தார் என்பதை அப்படியே பிரதிபலிக்காது என்பார்கள். அது வாசிம் அக்ரம் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. 86ல் நடைபெற்ற அந்த ஷார்ஜா கோப்பை போட்டியானது ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட போட்டி. இந்தியா,பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு கோப்பை. தனியே பைனல் எல்லாம் கிடையாது. இதன் கடைசிப் போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வைத்திருந்தார்கள். ஆனால் அதற்கு முன்னரே மேற்கிந்திய தீவுகள் மூன்று போட்டிகளையும் வென்று சாம்பியன் ஆகியிருந்தார்கள்.

வெற்றி பெறும் அணிக்கு இரண்டாம் இடம் என்ற இலக்குடன் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்கின. இந்தியா முதல் பேட்டிங். அக்ரம் பந்து வீசுவதைப் பார்த்த எங்கள் தெரு அண்ணன்கள் இவன் என்னடா ஒரு டைப்பா போடுறான் என கமெண்ட் அடித்தார்கள். அப்போதெல்லாம் பாகிஸ்தான் மீது பெரும் வன்மம் இருந்த காலம். ”எறியுறாண்டா அதான் அடிக்க முடியலை” என்ற ஒற்றை வரியில் அக்ரத்தை கடந்து விட்டோம்.

ஆனால் அடுத்து வந்த பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வாசிம் அக்ரம் யார் எனப் புரிய வைத்தது. மிகக்குறைந்த ரன் – அப். ஆனால் பந்தின் வேகம் சராசரியாக மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேல்.
ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் வேகமாக பந்து வீச அதிக தொலைவு ஓடி வந்து, அதன் மூலம் கையில் வேகமான அசைவை ஏற்படுத்துவார்கள். ஆனால் வாசிம் அக்ரமின் தோள்பட்டை வலிமையானது. அவரது குறைந்த ரன் அப்பிலேயே அந்த வேகத்தை கொண்டுவந்து விடுவார். அவருடைய மணிக்கட்டும் அந்த அசைவுக்கு அபாரமாக ஒத்துழைக்கும். அந்த ரிஸ்ட் ஆக்சனின் மூலம் அவர் பந்து ஸ்விங் ஆகும் திசையை எளிதில் மாற்றிவிடுவார்.

பெரும்பாலான பந்துகள் குட்-லெந்த்தில், மிடில் அண்ட் ஆப்ஸ்டெம்ப் லைனில் விழும். அதே இடத்தில் அதே வேகத்தில் விழுந்த பந்து எந்த திசையை நோக்கித் திரும்பும் என பேட்ஸ்மென்களால் கணிக்க முடியவில்லை. ஷார்ட் பிட்ச்சாக போடப்பட்ட பந்துகள் இந்திய ஆடுகளங்களிலேயே நெஞ்சுக்கு மேல் எழும்பின. அதில் ஒன்று ஸ்ரீகாந்தின் மண்டையை பிளந்தது. 14 தையல்கள் போட்டார்கள். இது போக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து விழும் யார்க்கர் வேறு. பத்தும் பத்தாததிற்கு ரிவர்ஸ் ஸ்விங்.

பந்து புதிதாக இருந்தாலும் பிரச்சினை, பழசாகி விட்டாலும் பிரச்சினை என்று பேட்ஸ்மென்கள் அலுத்துக் கொண்டார்கள். அந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரையும் டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது.
அதன்பின் வாசிம் அக்ரமின் புகழ் எந்தக் காலத்திலும் குறையவில்லை. ஹெர்குலிஸே வந்து பந்தை எறிந்தாலும் முட்டிக்கு மேலே பவுன்ஸ் ஆகாத ஆசிய ஆடுகளங்கில் வித்தை பழகியவருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் உற்சாகத்தைக் கொடுத்தன.
ஒரு சிறந்த பேட்ஸ்மென் நம்மை எதிர்த்து ஆடுகிறார் என்றால் அவருக்கு ஏற்ப வியூகங்கள் வகுப்போம். பந்து வீச்சாளர்களை மாற்றி பயன்படுத்துவோம். அப்போது ஆட்டமானது அந்த பேட்ஸ்மென் சார்ந்ததாக இருக்கும். ஆனால் அக்ரம் தனது பிரைம் பார்மில் இருக்கும் போது, அவர் பந்து வீசும் போது ஆட்டமானது பவுலர் சார்ந்ததாக இருக்கும். பேட்ஸ்மென்கள் தான் தங்கள் ஆட்டத்திற்கு வியூகம் அமைப்பார்கள். இந்த பேட்ஸ்மென் இவருக்கு இப்படி போட வேண்டும் என்ற வியூகமெல்லாம் அக்ரம் அப்போது பயன்படுத்தியதில்லை.
நான் பாட்டிற்கு ஓடி வந்து அப்போது என் மனநிலை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றபடி பந்தை வீசுவேன். களத்தின் நிலை, பருவ நிலை, பந்தின் நிலை தான் என் கணக்கு. அதற்கேற்ற படி ஸ்விங்கோ, ரிவர்ஸ் ஸ்விங்கோ. நீ ஆடு பார்ப்போம் என்று தான் வீசுவார். சச்சின், லாரா, ஸ்டீவ் வாவ்வாக இருந்தாலும் சரி, மெக்ராத்,ஸ்ரீநாத்,வால்ஸ் ஆக இருந்தாலும் சரி ஒரே எஃபர்ட்தான்.
.
நினைத்துப் பாருங்கள். நன்றாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருக்கும் பேட்ஸ்மென்களே அக்ரமின் குட் லெந்த் அவிட் ஸ்விங்கர்களுக்கும், இன் ஸ்விங்கிங் யார்க்கர்களுக்கும் திணறுவார்கள். டெயில் எண்டர்கள் என்ன ஆவார்கள்?.

டெஸ்ட் மேட்சுகளில் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் அக்ரமின் முதல் ஸ்பெல்லை கடத்திவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே உள்ளே வருவார்கள். ஓவருக்கு ஒரு அப்பீலாவது இருக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஸ்லிப் பீல்டர்கள் ஏன் விக்கெட் கீப்பர்கள் கூட அக்ரமின் பந்து வீச்சில் பல கேட்சுகளை தவற விட்டுவிடுவார்கள். பார்க்கும் போது நமக்கே வயிற்றெரிச்சலாக இருக்கும். என்னடா ஒருத்தன் உயிரைக்கொடுத்து போட்டுக்கிட்டு இருக்கான். இவுங்க இப்படி பண்ணுறாங்க என்று அலுத்துக் கொள்வோம்,

ஒரு போட்டியின் நேரலையின் போது வக்கார் யூனுஸ் மிகக்குறைந்த டெஸ்டுகளிலேயே 200 விக்கெட் எடுத்தார் எனச் சொல்லி அது சம்பந்தமாக ஒரு அனாலிசிஸ் போட்டார்கள். அந்த 200 விக்கெட்டுகளில் 85 போல்டு, 85 எல்பிடபிள்யூ. இதைப் போலவே தான் வாசிம் அக்ரமும். அவரின் பெரும்பாலான விக்கெட்டுகள் போல்டு மற்றும் எல்பிடபிள்யூதான்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க ஸ்லிப் பீல்டர்கள் பத்து நாள் பட்டினி கிடந்த ராஜபாளையம் நாயைப் போன்றவர்கள். பத்துநாள் கழித்து வீசப்படும் எலும்புத்துண்டை எப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் கவ்வுமோ அதைப் போல பந்தை கேட்ச் செய்வார்கள். விக்கெட் விழுவதற்கான அரை சந்தர்பத்தைக்கூட முழுதாக மாற்றி விடுவார்கள்.  ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு ருசியான சாப்பாட்டை கொடுத்தாலும் தட்டி விடும் பணக்கார குழந்தைகள் போல, கையில் விழும் பந்தை தட்டி விடுபவர்கள். அவர்கள் மட்டும் ஒழுங்காக பீல்டிங் செய்திருந்தால் அக்ரமின் விக்கெட் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கும்.

89 நேரு கோப்பை வெற்றி, பல ஷார்ஜா கோப்பைகள், 92 உலக கோப்பை, நிறைய டெஸ்ட் வெற்றிகள் என வாசிம் அக்ரம் பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம். 92ல் உலக கோப்பையை வென்றபின்னர் இம்ரான் கான் ஓய்வு பெறவும்,கேப்டன் பதவி மியாண்டாட், ரமீஸ்ராஜா, சலிம் மாலிக் என பல கை மாறியது. அது அக்ரமின் கைக்கும் வந்தது. கேப்டனாகவும் நிறைய போட்டிகளை வென்று கொடுத்தார். ஆனால் அவரை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்ல முடியாது. அவரின் திறமையாலும் சக வீரர்களின் திறமையாலுமே போட்டிகள் வெல்லப்பட்டன. வியூகங்கள் அமைத்து அதன் மூலம் பெறப்பெற்ற வெற்றிகள் மிகக்குறைவு.

அந்த விஷயத்தில் இம்ரான்கான் தான் கிரேட். எம்ஜியாரைப் போலவே அவரைப் பற்றியும் பல மித்துகள் அப்போது உலவியது. கல்லூரிகளுக்கு இடையிலேயான போட்டியை காணச்சென்ற இம்ரான், அக்ரமின் பந்து வீச்சைக் கண்டு உடனே தேசிய அணிக்கு அவரைத் தேர்வு செய்தார் என்பார்கள். ஒரு உள்நாட்டுப் போட்டியில் மியாண்டாட்டே திணறும்படி ஒருவர் பந்து வீசியதைக் கண்டு அவரைத் தேர்வு செய்தார். அவர்தான் வக்கார் யூனிஸ் என்பார்கள். வக்கார் யூனிஸின் பந்து வீச்சை அனாயசமாக சமாளித்து ஆடியதற்காகவே இன்சமாம் உல் ஹக்கை தேர்வு செய்தார் என்பார்கள். அவருடைய தேர்வுகள் எதுவுமே பொய்த்துப் போனதில்லை.

தர்மபுரியில் நக்சலைட்கள் தலை தூக்கியபோது அதை அடக்கியவர் வால்டேர் தேவாரம். ஆனால் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது அப்போதைய ஐ.ஜி ஸ்ரீபால். அதே தேவாரம் காவல்துறை தலைவராக இருக்கும் போது வீரப்பனை பிடிக்க களமிறங்கி தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் அவருக்கு திட்டங்கள் வகுத்துக் கொடுக்க ஆள் இல்லை. விஜயகுமார் வீரப்பனை வீழ்த்திய போது கூட அவருக்கு திட்டங்களை தீட்டிக் கொடுக்க அதிகார்களின் வலுவான துணை இருந்தது. இதே போலத்தான் வாசிம் அக்ரமமும்.  அர்ஜுனனைப் போல களத்தில் வாழ்பவர். பிரம்மாஸ்திரங்களும், நாகாஸ்திரங்களும் அவரிடம் ஏராளம் உண்டு.  அவரைத் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும். இம்ரான் கேப்டனாக இருந்த வரையில் அவரை பேட்டிங் ஆர்டரில் மேலேற்றி விடுவார். பின்ச் ஹிட்டராக பயன்படுத்துவார். பந்து வீச்சின் போது முதலில் நான்கு ஓவர், பின்னர் ஓய்வு பின்னர் நான்கு ஓவர் எனப் பயன்படுத்துவார். பேட்ஸ்மென் அன்கம்பர்டபிளாக இருப்பது போல தோன்றினால் உடனே அக்ரத்திடம் தான் பந்தைக் கொடுப்பார். ஆனால் வாசிம் அக்ரமே கேப்டனாக இருக்கும் போது இவை நடக்க வாய்ப்பில்லாமல் போனது. இம்ரானைத் தவிர மற்ற கேப்டன்கள் அவரை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் எல்லாக் கேப்டன்களும் (இங்கிலாந்து கவுண்டி கேப்டன்கள் உட்பட) செய்த விஷயம் ஒன்றுதான். அதுதான் டெயில் எண்டர்கள் வரும்போது அக்ரத்திடம் பந்தைக் கொடுப்பது. பாகிஸ்தானின் முஷ்டாக் அகமது கூட சொல்வார் “மிடில் ஆர்டர் விக்கெட் இரண்டு, மூன்று எடுத்திருப்பேன், பந்து நான் நினைத்த இடத்தில் விழுந்து, நினைத்த படி சுழலத் தொடங்கி இருக்கும். ஆனால் ஆறாவது விக்கெட் விழுந்து பவுலர்கள் வந்து விட்டால் எந்த கேப்டனும் அக்ரமிடம் பந்தை தூக்கி தந்துவிடுவார்கள்” என்று.

90களின் மத்தியில் அப்போது ஆக்டிவ்வாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆட்டக்காரர்கள் எல்லோருக்குமே அக்ரம் மீது பெரிய மரியாதை இருந்தது. அரவிந்த் டி சில்வா ஒரு பேட்டியில் சொன்னார் “ நான் அக்ரம் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்த பின்னால் தான் என்னை சிறந்த பேட்ஸ்மெனாக எங்கள் அணி வீரர்கள் ஒத்துக் கொண்டார்கள்” என. 

கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்ல, தெரு கிரிக்கெட் விளையாடியவர்கள், பார்க்க மட்டும் செய்தவர்களுக்கு கூட அக்ரமின் மீது ஒரு தனிப்பிரியம் இருந்தது. அப்போது இந்தியாவில் கல்லூரி விடுதிச் சுவர்களில் சச்சின் புளோ அப் அதிகமாக ஒட்டப்பட்டிருக்கும். நான் பார்த்த பல அறைகளில் வாசிம் அக்ரமின் புளோ அப்பும் இடம் பிடித்திருக்கும். என்னுடன் தங்கியிருந்த வட இந்திய நண்பர் ஒருவர், அக்ரம் மட்டும் நம்ம நாட்டில் பிறந்திருந்தால் எப்படி கொண்டாடி இருப்போம் என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார். நான் என்ன நினைப்பேன் என்றால், நாமளே இவ்வளோ கிரேஸா இருக்கிறோமே, பாகிஸ்தான்காரர்கள் எவ்வளவு கிரேஸாய் இருப்பார்கள் என நினைத்துக் கொள்வேன்.
94ல் ஹம் ஆப்கே ஹெயின் கோன் வெளியாகி இங்கே மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படம்  பாகிஸ்தானிலும் பெரிய ரசிகர்களைப் பெற்றது. முக்கியமாக மாதுரி தீட்சித்துக்கு. அந்தப் படத்தில் வரும் ஜூட்டே தோ பைசே லோ பாடலை (செருப்பைக் கொடுத்து பணத்தை வாங்கு) உல்டா செய்து மாதுரியை எங்களுக்கு கொடு அக்ரமை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பாடுவார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் விலை மதிக்க முடியாததாக கருதியது அக்ரமைத்தான்.

வாழ்வில் காட்சி இன்பமாக ஏராளமானவற்றை அனுபவித்து உள்ளேன். சினிமா மற்றும் கிரிக்கெட்டுக்கு அதில் தனி இடமுண்டு. கிரிக்கெட்டில் நான் மிகவும் ரசித்தவைகளில் வாசிம் அக்ரமின் பவுலிங்கிற்கு முக்கிய இடமுண்டு. 92 உலக் கோப்பை பைனலில் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் ஆலன் லாம்ப்பையும், கிறிஸ் லீவிஸையும் வீழ்த்தியது, ராகுல் ட்ராவிட்டை ஒரு டெஸ்ட் மேட்சில் கதகளி ஆடவிட்டது, நேரு கோப்பை பைனலில் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸர், சேப்பாக்கத்தில் அடித்த 5 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் அடித்த 53 ரன்கள், கணுக்காலில் இறங்கும் இன்சுவிங் யார்க்கர், ரிவர்ஸ் ஸ்விங்னா அது இப்படித்தான் இருக்கணும் என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் படி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கடைசி ஓவர்களில் போடும் பவுலிங் என சொல்லிக் கொண்டே போகலாம்.


கிரிக்கெட் உலக முக்கியஸ்தர்கள் எல்லோருமே, இதுவரை தோன்றிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிலேயே அக்ரம்தான் சிறந்தவர் என்று நேரிடையாகவும் மறைமுகவாகவும் ஒத்துக் கொண்டார்கள். எப்படி கிரிக்கெட் சமுதாயம் புதிதாக ஒரு பேட்ஸ்மென் சிறப்பாக ஆடினால் அவரை பிராட்மெனுடன் கம்பேர் செய்கிறதோ அதுபோல உலகில் எந்த மூலையில் ஒரு இடதுகை பந்து வீச்சாளர் நன்றாகப் பந்து வீசினாலும் அவரை வாசிம் அக்ரமுடன் தான் கம்பேர் செய்கிறார்கள். இதைவிட என்ன சாதிக்க வேண்டும் அவர்?.      

September 27, 2015

காப்புரிமை ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும்

காப்புரிமை பெறுவது பற்றிய விழிப்புணர்வு கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. காப்புரிமை அல்லது புதிய பொருட்கள்களை உருவாக்குவது என்பது நிலச் சொந்தக்காரர்களாய் இருப்பது போன்றது. அந்த தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பது என்பது விவசாயக் கூலிகளாய் வேலைபார்ப்பது போன்றது. கூலிகளுக்கு எவ்வளவு அனுபவம் இருந்தாலும் அதைப் பொறுத்து சம்பளம் கிடையாது. மேலும் வயதாக ஆக அவர்களுக்குரிய வாய்ப்பும் குறையும். ஆனால் நிலச் சொந்தக்காரருக்கு அப்படியில்லை. நாம் நம்மைச்சுற்றி கவனித்துப் பார்த்தாலே தெரியும், நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு காப்புரிமை வேறு நாட்டினரிடம் தான் இருக்கும். அந்தப் பொருட்களை இங்கே தயாரித்தாலும் நாம் அவர்களுக்கு கப்பம் கட்டவேண்டி இருக்கும்.

எனவே நாம் எந்தளவுக்கு காப்புரிமை பெறுகிறோமோ அந்த அளவுக்கு நாமும் நம் நாடும் பொருளாதார வளர்ச்சி அடையலாம்.

காப்புரிமை (PATENT) என்பது என்ன?
காப்புரிமை என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவருக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் அறிவுசார் சொத்துரிமை ஆகும். இதன்மூலம் அந்த குறிப்பிட்ட கண்டுபிடிப்பை உருவாக்க, விற்க அவருக்கு பிரத்யேக உரிமை அளிக்கப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பதற்கும், அதன்மூலம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்தமுறை உதவுகிறது. இந்த முறையால் அவர்களின் உழைப்பு பாதுக்காக்கப் படுகிறது. தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்த காப்புரிமை மூலம் நல்ல பொருளாதாரப் பயன்களைப் பெறமுடியும். பொதுவாக காப்புரிமையானது ஒரு நாட்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றொரு நாட்டிலும் காப்புரிமை பெற வேண்டுமானால் அந்த நாட்டில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

எவையெல்லாம் காப்புரிமை பெற தகுதியான கண்டுபிடிப்புகள்?
காப்புரிமை விதிகளின் படி, ஒரு கண்டுபிடிப்பானது, “ஒரு புதுமையை உள்ளடக்கிய, தொழில் துறைக்கு பயன்படும் சாதனம் அல்லது தொழில்நுட்பம்”. எனவே கண்டுபிடிப்பானது இயல்பாகவே தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும்
(i)       புதுமை : கண்டுபிடிப்பில் சொல்லப்படும் புது விஷயமானது நாம் காப்புரிமைக்கு விண்ணப்பித்த நாளுக்கு முன்னதாக இந்தியாவிலோ அல்லது வேறொங்கிலுமோ வெளியிடப்பட்டு இருக்கக்கூடாது.
(ii)      கண்டுபிடிப்பின் புது நுட்பம் : கண்டுபிடிப்பின் புது நுட்பமானது, குறிப்பிட்ட அந்த தொழில்துறையில் இருப்பவரால் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்
(iii)      தொழில்துறை பயன்பாடு : புது கண்டுபிடிப்பானது தொழில்துறையில் பயன்படும் படி இருக்க வேண்டும்.

எவையெல்லாம் காப்புரிமை பெற முடியாதவை?
(i)       நன்கு அறியப்பட்ட இயற்கை விதிகளுக்கு முரணான கண்டுபிடிப்புகள்
(ii)       பொதுமக்களின் உணர்வை காயப்படுத்தும், மற்றும் மக்கள், விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கண்டுபிடிப்புகள்
(iii)      இயற்கையிலேயே இருந்த, ஆனால் மற்றவர்கள் அறியாமல் இருந்த அறிவியல் கொள்கைகளை கண்டுபிடித்தல் (Discovery)
(iv)      ஏற்கனவே இருக்கும் ஒரு சாதனத்துக்கு/பொருளுக்கு புதிய உபயோகத்தை கண்டுபிடித்தல்.
(v)       சில பொருட்களை கலந்து, ஒரு புதிய பொருளை உருவாக்கினாலும், அந்த பொருளின் பண்புகள், அதில் உள்ள பொருட்களின் பண்புகளின் சேர்க்கையாக இருப்பது.
(vi)      ஏற்கனவே இருக்கும் சாதனங்களை இணைத்தோ, வரிசைப்படுத்தியோ புதிய சாதனம் உருவாக்குவது.
(vii)     விவசாயம் அல்லது தோட்டக்கலையில் புதுமுறையை உருவாக்குவது
(viii)     மருத்துவத்தில் புது முறையை கண்டுபிடிப்பது
(ix)      நுண்ணுயிரிகளைத் தவிர ஏற்கனவே இருக்கும் விதை அல்லது இனங்களைக் கொண்டு புது தாவரம் மற்றும் விலங்குகளை உருவாக்குவது.
(x)       புதிய வியாபார முறை அல்லது கணினி நிரல் (computer programme)
(xi)      இலக்கியம், நாடகம், இசை, ஓவியம் மற்றும் அழகுணர்வுடன் கூடிய கலை உருவாக்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிப்பதிவுகள்.
(xii)     ஒரு குறிப்பிட்ட திட்டம் அல்லது விதியை உருவாக்கி விளையாட்டுகள் விளையாடுவது.
(xiii)     தகவல்களை தெளிவாக தெரிவித்தல்
(xiv)     வழிவழியாக வந்த அறிவை மேம்படுத்தி சாதனங்கள்/தொழில்நுட்ப முறைகள் உருவாக்கல்
(xv)     அணுசக்தி சம்பந்தமான மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் கண்டுபிடிப்புகள்.
(xvi)     உருவாக்கப்பட்ட பொருட்களுக்கு காப்புரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால் உருவாக்கும் முறைகளுக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு மருந்து பொருளுக்கு காப்புரிமை கொடுக்கப்பட மாட்டாது, ஆனால் அந்த மருந்து தயாரிக்கும் முறைக்கு காப்புரிமை கொடுக்கப்படும். 

காப்புரிமை பெற்றவர்களின் உரிமைகள்
ஒரு சாதனத்துக்கான காப்பீடை ஒருவர் பெற்றிருந்தால், அவரது அனுமதியன்றி வேறு யாரும் அந்தப் பொருளை தயாரிக்கக் கூடாது.
ஒரு தொழில்நுட்ப முறைக்கான காப்பீடை பெற்றிருந்தால், அவரது அனுமதியன்றி வேறு யாரும் அந்த முறையில் பொருளை தயாரிக்கக் கூடாது.
காப்புரிமைக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் படிவங்கள்
(i)       விண்ணப்பம் (நகலுடன்)
(ii)      கண்டுபிடிப்பு பற்றிய தற்போதைய மற்றும் முழுமையான விபரம்
(iii)      தேவையான வரைபடங்கள்
(iv)      கண்டுபிடிப்பு பற்றிய சுருக்கமான குறிப்பு (Abstract)
(v)       விண்ணப்பிக்கும் நாள் மற்றும் வெளிநாடுகளில் இந்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலை
(vi)      முன்னுரிமை படிவம்
(vii)     தேவையான கட்டணம்

கண்டுபிடிப்பு பற்றிய முழுமையான விபரத்தில் இடம் பெற வேண்டியவை :

(i)       கண்டுபிடிப்பின் தலைப்பு
(ii)      கண்டுபிடிப்பின் துறை
(iii)      முந்தைய கண்டுபிடிப்புகளின் குறைபாடுகள்
(iv)      கண்டுபிடிப்பின் நோக்கம்
(v)       கண்டுபிடிப்பு பற்றிய சொற்குறிப்பு
(vi)      கண்டுபிடிப்பு பற்றிய முழுகுறிப்பு
(vii)     இணைக்கப்பட்டுள்ள வரைபடம் பற்றிய சிறு குறிப்பு
(viii)    உதாரணங்களுடன் கண்டுபிடிப்பு பற்றிய விளக்கம்
(ix)      நாம் உரிமை கோரும் விஷயங்கள்
(x)       சுருக்கக் குறிப்பு (abstract)

கண்டுபிடிப்பு பற்றிய விளக்கம் (Description)
கண்டுபிடிப்பு பற்றிய விளக்கமானது (Description) நல்ல ஆங்கிலம் அல்லது இந்தியில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட கண்டுபிடுப்பு சிறப்பாக செயல்பட என்னென்ன தொழில்நுட்பங்கள் தேவை மற்றும் எந்தெந்த சிறப்புகளை (Features) நாம் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது நீக்கிவிடலாம் (Choice) என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட துறையில் ஏற்கனவே பணியாற்றியவர்களால், இந்த கண்டுபிடிப்பை செயல்படுத்தும்படி தெளிவான விபரங்கள் இந்த விளக்கத்தில் (Description) கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. மேலும் இந்த கண்டுபிடிப்பு சிறப்பாக செயல்பட என்னென்ன தேவை?, எவற்றிற்கெல்லாம் இந்தக் கண்டுபிடிப்பை உபயோகிக்கலாம்? எப்படி உபயோகித்தால் சிறப்பாக செயல்படும் போன்ற விபரங்களும் இருக்க வேண்டும். உயிரியல் சம்பந்தமான கண்டுபிடிப்பு என்றால், எதன் மூலம் (Source) அல்லது, எவ்விடத்தில் இருந்து (Geographical location) உயிரியல் பொருட்கள் கிடைத்தன என்பது பற்றிய விபரம் இருக்கவேண்டும்.

உரிமை கோரும் விஷயங்கள் (Claim)
நம்முடைய கண்டுபிடிப்பில் எவற்றையெல்லாம் நம்முடையது என உரிமை கோருகிறோம் (Claim) என்பதை நாம் தெளிவாக வரையறுத்து விண்ணப்பிக்க வேண்டும். எந்த கண்டுபிடிப்பிற்கும் குறைந்தது ஒன்றுமுதல் பல உரிமைகளை நாம் கோரலாம். முதல் உரிமையானது (first claim) முக்கிய உரிமை (Main claim) எனப்படும். அடுத்தடுத்த உரிமைகளானவை (subsidiary claims) முதல் உரிமையை தொடர்பு படுத்தி, என்னென்ன சிறப்புகளை சேர்க்கலாம் (optional features) என்பது பற்றி இருக்கலாம். அல்லது தனிப்பட்டும் உரிமை கோரலாம். எத்தனை உரிமைகள் கோரப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரு கண்டுபிடிப்பைச் சார்ந்தே விண்ணப்பிக்கப் படவேண்டும். முக்கியமாக இந்த உரிமையானது, சட்டபூர்வமாக, எந்த அம்சம் நம்முடைய கண்டுபிடிப்பில் பாதுக்காக்கப்பட்டு, அதனால் கிடைக்கும் பொருளாதாரப் பயன்கள் அனைத்தும் நமக்கே கிட்டுமாறு தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் (Statement)

சுருக்கக் குறிப்பு (Abstatract)
நம்முடைய கண்டுபிடிப்பைப் பற்றிய சுருக்கக் குறிப்பானது (Abstratct) நம் கண்டுபிடிப்பின் பெயருடன் (Title) 150 வார்த்தைகளுக்குள் நம்முடைய கண்டுபிடிப்பைப் பற்றி தெளிவாக கூறுமாறு இருக்க வேண்டும். எந்தப் பிரச்சினையை இது அணுகி இருக்கிறது, அதற்கான தீர்வை எப்படிச் சொல்லி இருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.  மேலும் இதில் என்ன தொழில்நுட்பம் புதிதாக இருக்கிறது, இதன் உபயோகம் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளும்படியும் இருக்க வேண்டும். இயந்திரவியல் சம்பந்தமான கண்டுபிடிப்பு என்றால் வரைபடங்களையும் இணைக்கலாம். வேதியியல் சம்பந்தமான கண்டுபிடிப்புகளுக்கு வேதியியல் சமன்பாடுகளையும் இணைக்கலாம். ஆனால் அதன் மூலம் மற்றவர்கள் நம் கண்டுபிடிப்பு முழுவதையும் அறிந்து அவர்கள் உபயோகிக்கா வண்ணம் நாம் கொடுக்க வேண்டும்.

வரைபடங்கள் (Drawings)

நம்முடைய கண்டுபிடிப்பை விளக்க நாம் சமர்ப்பிக்கும் வரைபடமானது (Drawing) A4 தாளில் தெளிவாக நகலுடன் இருக்க வேண்டும். A4 தாளின் இடப்பக்கமும், மேற்புறமும் நான்கு செண்டி மீட்டர் (4 cm) இடமும், வலப்பக்கமும் கீழ்ப்புறமும் மூன்று செண்டி மீட்டர் (3 cm) விடப்பட்டிருக்க வேண்டும். படமானது எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மேலிருந்து கீழாக வரையப்பட்டிருக்க வேண்டும். போதுமான அளவில் பெரிதுபடுத்தப்பட்டோ அல்லது சுருக்கப்பட்டோ (Appropriate Scale) படம் வரையப் பட்டிருக்க வேண்டும். தாளின் இடது மேல்மூலையில் விண்ணப்பிப்பவரின் பெயரும், விண்ணப்ப எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எத்தனை பக்கங்கள் மற்றும் பக்க எண்ணும் வலது மேல் மூலையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தாளின் வலது கீழ் மூலையில் விண்ணப்பிப்பவரின் கையொப்பமும், பெயரும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விளக்கக்குறிப்பில் (Description) எவ்வாறு இந்த பாகம் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதோ அதே போல (Reference) அந்த குறிப்பிட்ட எண் வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். வரைபடத்தில் விளக்கமாக நம் கண்டுபிடிப்பைப் பற்றி எதுவும் எழுதி இருக்கக்கூடாது. ஆனால் வேதி சமன்பாடுகள் (Chemical Equations), படி நிலை வரைபடம் (Flow chart) ஆகியவை குறிப்பிடப் பட்டிருக்கலாம்.

September 21, 2015

நாராயணன்

எங்கள் நான்கு தலைக்கட்டு வீட்டுப் பங்காளிகள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு கூட அவ்வளவு முன் தயாரிப்புகளில் ஈடுபடமாட்டார்கள். ஏன்? திருமணத்தின் அன்று கூட எந்த பரபரப்புமின்றி இயல்பாக இருப்பார்கள். ஆனால் ஆடி மாதம் துவங்க ஒரு வாரம் இருக்கும் போதே பரபரப்பாகிவிடுவார்கள். ஊரின் எல்லையில் இருந்த கருப்பணசாமி கோவில் தான் எங்கள் குலதெய்வம். கோவிலில் உள்ள பித்தளை அண்டாக்கள், திருவாச்சி, வெண்கல பாத்திரங்கள், ஈய வட்டைகள், பூஜை சாமான்கள் போன்றவற்றை எலுமிச்சம் பழம், புளி இவற்றைக் கொண்டு பளபளவென விளக்க ஆரம்பித்து விடுவார்கள். அரை அடியில் இருந்து ஆளுயுரம் வரை இருக்கும் அரிவாள்களை பட்டை தீட்ட அதற்குரிய நிபுணர்கள் வந்துவிடுவார்கள். ஒரு குழு கோவில், அதில் இருந்து 100 மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆடுகள் அடைக்கப்படும் சாமியறை ஆகியவற்றை வெள்ளை அடிக்க ஆரம்பித்து விடும்.

ஆடி ஒன்றாம் தேதி காலை பூஜை முடிந்ததும் நோன்பு ஆரம்பித்து விடும். பங்காளிகளின் வீட்டைத் தவிர மற்ற வீடுகளில் அன்னம், தண்ணீர் புழங்க மாட்டார்கள். இரவில் திருமணமான ஆண்கள் அனைவரும் கோவிலில் வந்து படுக்க வேண்டும். வீட்டுப் பெண்கள் மாதவிலக்கானால் சம்பந்தி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ஆடி 11 ஆம் தேதி பெரிய பூசாரிக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெறும். அதனுடன் சேர்த்து  தலைக்கட்டுக்கு மூவர் வீதம் 12 பேர் சாமியாடிகளாக தேர்வு செய்யப்படுவர். பெரிய விதிமுறைகள் எல்லாம் இல்லை. தலைக்கட்டில் பெரியவர், நல்ல இளந்தாரிகளாக இருவரையும், நாற்பதுக்கு மேற்பட்டோரில் ஒருவரையும் தேர்வு செய்வார். பெரிய பூசாரிக்கு வெள்ளிக் காப்பும், சாமியாடிகளுக்கு தாமிர காப்பும் அணிவிக்கப்படும்.

காப்புக் கட்டு முடிந்ததும் பூஜை சாமான்கள் வாங்க இரண்டு மூன்று குழுக்கள் களத்தில் இறங்கும். முக்கிய பூஜை சாமான் வெள்ளாட்டு குட்டிதான். செம்மறி ஆடெல்லாம் கருப்பணசாமிக்கு ஆகாது. ஆண் குட்டியாய் இருக்க வேண்டும்.ஒற்றை வெள்ளை முடி கூட இல்லாத,கறுப்பு ஆடாய் இருக்க வேண்டும். ஒச்சம் இருக்கக்கூடாது, ஏன் மச்சம் கூட இருக்கக்கூடாது. ஐந்து ஆறு கிலோ எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும். மூன்று கிலோ இருக்கும் குட்டிகள் சிறப்பு.

இரண்டு, மூன்று நாட்களுக்குள் எப்படியும் 40 குட்டிகளாகவது அமைந்து விடும். ”கருப்பு துடியான சாமிப்பே. நாம ஒண்ணு ரெண்டு கொடுத்தா வருசம் பூரா பார்த்துக்கிடுவாப்புல” என்ற நம்பிக்கை சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்தது. அதனால் சற்று விலை குறைத்து கூட கொடுப்பார்கள். எளிதில் கிடைத்து விடும். சில ஆடு வளர்ப்பவர்கள், இந்த வருசம் நமக்கு குடுப்பினை இல்லைய்யா என்று கூட வருத்தப்பட்டுக் கொள்வார்கள். ஊரில் உள்ள சிலர் நேர்த்திக் கடனாகவும் ஆடு வாங்கிக் கொடுப்பார்கள். அவர்கள் ஆடு வளர்ப்பவர்களிடம் கருப்பணசாமிக்கு என்றாலே போதும், சரியான குட்டியை தேர்ந்தெடுத்து கொடுத்துவிடுவார்கள்.


ஆடி 18ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு மேல் கோவில் நிர்வாகத்தால் வாங்கப்பட்ட ஆடுகளும், நேர்த்திக் கடன் ஆடுகளும் வர ஆரம்பிக்கும்.அவை சாமியறையில் அடைத்து வைக்கப்படும். இரவு உணவை முடித்து அங்காளி பங்காளிகள், சம்பந்தகாரர்கள், ஊரார், சுற்றுப்புற கிராம மக்கள் எல்லாரும் சாரி சாரியாக வர ஆரம்பிப்பார்கள். குறைந்த பட்சம் மூவாயிரம் பேராவது வருவார்கள். கோவிலின் முன் சாமியாடுவதற்காக பரப்பப்பட்டிருக்கும் ஆற்று மணலைச் சுற்றி ஆங்காங்கே குழுமி அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள்.


10 மணி அளவில் பதினோறு சேவல்களை அடித்து சமைக்கப்பட்ட உணவை கருப்பணசாமியின் பிரகாரத்தில் வைத்துப் படைத்து பூஜை நடைபெறும். அது முடியவே 11 ஆகிவிடும். அப்போது சாமியாடிகளுக்கான சிவப்பு வேட்டி முறைப்படி வழங்கப்படும். அதன்பின் பூசாரியும், கோவிலும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். 11 மணிக்கு பெரிய பூசாரிக்கான அலங்காரம் நடைபெறத் தொடங்கும். தலைமுடி தவிர ஏனைய ரோமங்கள் மழிக்கப்பட்ட, லங்கோடு மட்டும் கட்டிய உடம்பில் சந்தனம் பூசப்படும். பின் மஞ்சள் பட்டி வைத்த பட்டு டிராயரை அணிவித்து அதை இறுக்குவதற்காக சிறு நுணுக்கமான வெள்ளி சலங்கைகள் கோர்க்கப்பட்ட பெல்டை அணிவிப்பார்கள். கால்களில் சலங்கை. முகத்தில் லேசாக சந்தன பவுடர் ஒரு கோட்டிங் கொடுத்து, கண்மை இட்டு, நெற்றிக்கு செந்திலகம்  அணிவிப்பர்.

அப்போது தான் கோடாங்கிகள் தன் பாட்டைத் தொடங்க வேண்டும். டுடுடுடு டுண்டுண்டுண்டுண் டுடுடுடு டுண்டுண்டுண்டுண் என தொடர்ச்சியான தாளக்கட்டில் ஒருவர் வாசிக்க மற்றொருவர் ஏலா கருப்பா என பாடத் தொடங்குவார். சில நிமிடங்களில் பூசாரிக்கு அருள் வந்துவிடும். ஹாங் என பெரும் குரல் எழுப்பியவுடன் அவருக்கு 16 கிலோ எடை அளவுள்ள செவ்வரளியால் கட்டப்பட்ட மாலையை இருவர் தூக்கி  அணிவிப்பர். இரவு 12 மணி அளவில் இந்த அலங்காரம் முடிந்து, கோடாங்கி இடியென முழங்க பிரகாரத்தை விட்டு சாமியாடும் திடலுக்கு, செவ்வாடை அணிந்த 12 பேருடன் களமிறங்குவார் கருப்பணசாமி சாமியாடி.


ஹாங் என்ற குரல் எழுப்பிய உடன் சாமியறையில் இருந்து இருப்பதிலேயே இளங்குட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார் ஒரு சிவப்பு வேட்டி. அதை இன்னொருவர் வாங்கி வாகாக தலை அறுத்து சாமியாடிக்கு கொடுப்பார். அதை அப்படியே வாயில் வைத்து ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பிப்பார் சாமி. படாத பாடுபட்டு அவரிடம் இருந்து அதை பிடுங்குவார்கள் சிவப்பு வேட்டிகள். குறைந்த பட்சம் 40 குட்டிகளாவது இருக்கும். எனவே இரண்டு மணிநேரமாவது இது நடைபெறும். எடை கூடிய குட்டியாக இருந்தால் அதன் ரத்தத்தை  மட்டும் சிறு வெண்கல செம்பில் பிடித்து சாமியாடி வாயில் புகட்டுவார்கள். சாமியாடி முடிந்ததும் பூசாரி பிரகாரத்திற்குள் சென்று விட,  சிகப்பு வேட்டிக்காரகள் மக்களுக்கு விபூதி வழங்குவார்கள்.

பெரிய பூசாரி பதவி என்பது அவர் முடியாமல் போகும் வரை யாருக்கும் மாறாது. இந்த சிவப்பு வேட்டிக்குத் தான் பங்காளிகள் மிகவும் ஆசைப்படுவார்கள். அது ஊர் மக்களிடம் தங்களுக்கு ஒரு ஹீரோ அந்தஸ்தைக் கொடுக்கும் என நம்பினார்கள். எனக்கெல்லாம் அதில் அவ்வளவு நம்பிக்கையில்லை. ஆனால் என் பெரியப்பா மகன் நாராயனனுக்கு சிவப்பு வேட்டி கட்டி சாமியாட வேண்டும் என்பது ஒரு கனவு. அவனுக்கு நரம்புத்தளர்ச்சி இருந்ததால், அவனுக்கு அது மறுக்கப்பட்டுக் கொண்டு வந்தது.


அந்த நரம்புத்தளர்ச்சிக்கு காரணம் என் பாட்டிதான் என அடித்துச் சொல்வேன். என் பெரியப்பா போஸ்ட் ஆபிஸ் கிளார்க். ஓரளவு வசதியான குடும்பத்தில் இருந்து பெண்ணெடுத்தார்கள். என் பெரியம்மாவுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டாரும் அடுத்த கல்யாணம், சொத்து பிரிப்பு, வியாபார நஷ்டம் என சிறிது நொடித்து விட்டார்கள். அதனால் என் பாட்டி எப்போதும் பெரியம்மாவை திட்டிக் கொண்டே இருப்பார். இந்நிலையில் என் தந்தை, அக்கா மகளையே திருமணம் செய்து நானும் பிறந்துவிட்டேன். என் அம்மா, பேத்தி என்பதால் பாட்டியிடம் இருந்து தப்பித்துவிட்டார். ஆனால் பெரியம்மா நரக வேதனைப்பட்டார்.  50 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் மாமியார் திட்டினால் மருமகள் என்ன செய்ய முடியும்? ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் தள்ளி வைத்து விட்டு என் பெரியப்பாவிற்கு வேறு திருமணம் செய்ய முடிவெடுத்தார் என் பாட்டி. அரசுப் பணியில் அவர் இருந்ததால்  நேக்காகச் செய்ய வேண்டும் என அவர்கள் யோசித்தார்கள். சரியாக அந்த நிலைமையில் தான் பெரியம்மாவுக்கு நாராயணன் உண்டானான். வளைகாப்பு வரை கரித்துக் கொட்டிக் கொண்டேதான் இருந்தார் என் பாட்டி. பயத்திலேயே குறுகி உட்கார்ந்திருப்பார் பெரியம்மா.


குழந்தை பிறந்ததும் அவர்கள் வீட்டில் சரியாகச் செய்யவில்லையென ஒரு சண்டை. ”பாப்பாத்தி உப்புக் கண்டத்துக்கு ஆசைப்பட்டது போல 15 பவுனுக்கு ஆசப்பட்டு உன்னைய என் மகனுக்கு கட்டி வச்சுட்டனே” என திட்டித்தீர்ப்பார். பெரியம்மா மடியில் படுத்திருக்கும் நாராயணன் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருப்பான்.


சிறு வயதில் அவனுக்கு முதலில் பேச்சே சரியாக வரவில்லை. திக்கித் திக்கித்தான் பேசுவான். எல்லாக் குழந்தைகளுமே அவனை கிண்டல் செய்வார்கள். ஆடி 18ல் அவன் தந்தை சிவப்பு வேட்டி கட்டி ஆடு தூக்கும் போதெல்லாம் கண்கள் விரியப் பார்ப்பான். பெரியம்மா வீட்டு உறவினர்கள் வந்து அவனிடம் என்ன வேண்டும்? என்று கேட்டால்  ”ஆட்டுக்குட்டி வாங்கித் தாங்க” என்பான்.


பெரியம்மா அடைந்த வேதனைகளுக்கெல்லாம் உச்சமாக பெரியப்பா ஒரு விபத்தில் திடீரென இறந்து போனார். வீடே அவரை கரித்துக் கொட்ட தொடங்கியது. வாரிசு அடிப்படையில், அவருக்கு அட்டெண்டர் வேலை எங்கள் ஊர் போஸ்ட் ஆபிசிலேயே கிடைக்க, நாராயணனுடன் அவர் ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டுக்கு குடி போனார். அப்போது நாராயணன் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான். அடிக்கடி நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்படுவதாலும், திக்கு வாயாலும் பலரின் கேலிக்கு உள்ளானான். அதனால் கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டான்.


பெரியம்மாவுக்கு சமையலில் உதவுவது, கடைக்குப் போவது, பாத்திரம் விளக்குவது, துவைப்பது என எல்லா வேலைகளும் செய்வான். அவர் வேலை முடிந்து திரும்பும்போது டீயோடு  நிற்பான். நான் தான் பொறுக்க மாட்டாமல் என் நண்பனின் துணிக்கடையில் கேஷியர் வேலைக்குச் சேர்த்து விட்டேன். பணி நேரம் போகவும் வீட்டு வேலைகள் எல்லாம் செய்வான். ஆடி மாதம் முழுவதும் பெரும்பாலும் கோவில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வான். ஒவ்வொறு ஆண்டும் சிவப்பு வேட்டியை எதிர்பார்ப்பான். நான் கூட என் தந்தையிடம், நீங்க சொல்லி அவனுக்கு வாங்கிக் கொடுங்கப்பா என்றேன். அவரோ சாமியாடும் போது ஏதாச்சும் எசகு பிசகா ஆகிட்டா எல்லாப் பங்காளி குடும்பமும் பாதிக்கும்டா. வேண்டாம். என மறுத்து விட்டார்.


நாட்கள் ஓடியது. எனக்கு வேறு ஊரில் வேலை கிடைத்தது. திருமணம் ஆனது. ஒரு நாள் பெரியம்மா காய்ச்சலாய் இருப்பதாக கேள்விப்பட்டு பார்க்கப் போனேன். நாராயணன் கஞ்சி காய்ச்சி அவருக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ஏம்பா, என் சம்பளமும் கொஞ்சம் சேர்த்திருக்கேன், இவனும் வேலைக்குப் போறான், உங்கப்பா வீட்டை அவர் எடுத்துக்கிட்டு எங்க பங்குக்கு ஈடா பணம் தர்றேன்கிறார். இவனுக்கு ஒரு கல்யாணம் என ஆரம்பித்தார்.


உடனே நாராயணன் திக்கியவாறே அதை ஆவேசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய் சொன்னான். பெரியம்மா உடைந்து அழத் தொடங்கினார். இவன் மனசு யாருக்கும் வராதுடா என்றார்.

நாராயணன் நான்கு வயதாய் இருக்கும் போது, பாட்டி பெருங்கோபத்தில் எதற்கோ கத்திக்கொண்டே இருந்தாராம். பெரியம்மா சுவரோரம் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டேயிருந்தாராம். நாராயணனும் அவரின் சேலையைப் பிடித்துக் கொண்டே ஒட்டி நின்று கண்கலங்கிக் கொண்டே இருந்தானாம். பாட்டி போனவுடன், திக்கியவாறே “ அம்மா, அழாதம்மா, நீ முறுக்கு சுட்டுக் கொடு நான் தெருவில போயி வித்து நிறைய காசு கொண்டு வாரேன், அழாதம்மா” என ஆறுதல் படுத்தினானாம். அந்த ஆறுதல்தான் நான் உயிரோடு இருப்பதற்கே காரணம் எனச் சொன்னார் பெரியம்மா.

நான் பெரியம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இவன் இங்கேயே இருந்தா மனசு கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பான், எனக்குத் தெரிஞ்ச மெஸ் ஓனர் ஒருத்தர், ஒரு இஞ்சினியரிங் காலேஜ்ல ஹாஸ்டல்ல மெஸ் காண்டிராக்ட் எடுத்துருக்கார். அங்க கொஞ்சநாள் இவன் இருக்கட்டும் எனச் சொல்லி அங்கு வேலைக்குச் சேர்த்துவிட்டேன். நம்பிக்கைக்குரிய ஆள் என்பதால் அவர், அவனை சூப்பர்வைசர் ஆக்கிக் கொண்டார்.


சில மாதங்களிலேயே அவர் நாராயணன் நல்ல பையன்பா, நம்பி விட்டுட்டுப்போக முடியுது என்று சொல்ல எனக்கு மகிழ்ச்சி. மாதம் ஒருமுறை அவன் அம்மாவிற்கு சேலை முதல் செருப்பு வரை, மிக்ஸர் முதல் மருந்து வரை வாங்கிக் கொண்டுபோய் பார்த்து விட்டு வருவான். ஒரு முறை நான் அவனைப் பார்க்க காலேஜ் ஹாஸ்டலுக்கு போன போது பையன்களுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தான். என்னடா இதெல்லாம் செய்யுற எனத் தனியே கேட்டதற்கு, இவங்கல்லாம் ஸ்போர்ட்ஸ் பசங்கடா, லேட்டா சாப்பிட வருவாங்க. சர்வர்களும் டயர்டாகி இருப்பாங்க, அதான் என்றான்.
அதன்பின் அந்த ஹாஸ்டல் மெஸ் காண்ட்ராக்ட் மூன்று முறை மாறியது.ஒரு முறை கல்லூரி நிர்வாகமே நடத்தியது. ஆனால் நாரயணனை யாரும் மாற்றவில்லை. எல்லோருக்கும் அவன் மேல் அப்படி ஒரு நம்பிக்கை.


மாணவர்கள் யாருக்காவது காய்ச்சல் என்றால் கஞ்சி வைத்துக் கொடுப்பானாம். ஸ்டோரில் இருந்து அத்தியாவசிய மாத்திரைகளை வாங்கி வைத்து அகால வேளைகளில் யாருக்காவது முடியவில்லை என்றால் கைவைத்தியம் பார்ப்பானாம்.

பெரியம்மாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என என்        தம்பியிடம் தகவல் வந்ததும் ஊருக்குப் போயிருந்தேன். நாராயணனைப் பற்றிய கவலை அவரை அரித்துக் கொண்டிருந்தது. பெரியம்மாவிடம் “அவனை என் தம்பிக்கும் மேல வச்சிருக்கேம்மா” நான் அவனைப் பார்த்துக்கிறேன் என உறுதி அளித்தேன். அவர் என்னிடம் “ என் அப்பா, என் அண்ணன் தம்பிகள், என் வீட்டுக்காரர் யாருமே என்னை பெரிசா எடுத்துக்கிட்டதில்ல” எல்லாப் பாசத்தையும் இவன் ஒத்த ஆளா என் மேல காமிச்சிருக்கான். வீட்டு வாசப்படி இறங்க விடாம அப்ப இருந்து இப்ப வசதி பன்ணி வச்சிருக்கான்.

நான் சாமி கும்புடும் போது, அடுத்த எல்லாப் பிறவியிலயும் நாராயணன் தான் எனக்கு மகனாப் பொறக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்யா” நீயும் அப்படியே எனக்காக கும்புடுய்யா என்றார். மேலும் இந்தப் பிறவில அவனுக்கு நான் எதுவும் செய்யல, அடுத்தடுத்த பிறவியில அவன ராசகுமாரனாட்டம் நான் வச்சுப் பார்க்கணும்யா என கண்ணீர் விட்டு அழுதார்.
பெரியம்மாவின் இறப்புக்குப் பின் மாதம் இருமுறையாவது நாராயணனிடம் பேசி விடுவேன்.பெரிய ஆசையெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணே, ஒரு தடவையாச்சும் சிவப்பு வேட்டி கட்டி சாமியாடணும், நானுமொரு ஆள் தான்னு ஊருல நாலு பேரு நினைக்கணும்னு ஆசை என்பான்.

திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, நாராயணன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. ஊரில் இருந்த தம்பிக்கு போன் செய்து ” விபரத்தைச் சொல்லி டேய், கோவில்ல இருந்து ஒரு சிவப்பு வேட்டி எடுத்துட்டு வாடா, எவன் கேட்டாலும் நான் பேசிக்கிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினேன். ஹாஸ்டலை நெருங்க நெருங்க ஏராளமான கூட்டம் இருந்தது. அலங்காரத் தேர், தாரை தப்பட்டை என பலமான ஏற்பாடுகள். படுக்க வைக்கப்பட்டிருந்த நாராயணன் மீது சிவப்பு வேட்டியை போர்த்திவிட்டு, அப்போதைய காண்ட்ராக்டரை அணுகினேன்.

எனக்கு ஆறு மாசமாத்தாங்க பழக்கம். இவர் இறந்த உடனே பசங்க வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டு விட்டிருக்காங்க. 20 வருசமா இந்த ஹாஸ்டல்ல இருந்த பையங்கள்ளாம் முடிஞ்ச அளவுக்கு வந்துட்டாங்க. வெளிநாட்டு பசங்கள்ளாம் அவங்க சொந்தம்,பிரண்ட்ஸ் மூலமா வேட்டி, மாலை.காசுன்னு கொடுத்து விட்டிருக்காங்க. சர்வரா இருந்த பழைய ஆளுங்க,ஸ்வீப்பர்ஸ்னு எல்லாம் கேள்விப்பட்டு வந்துட்டாங்க. பழைய லெக்சரர்கள் கூட நிறைய வந்துட்டாங்கப்பா. காலையில காலேஜ் சேர்மன் மகன் வந்து மரியாதை செஞ்சுட்டு நல்ல படியா எடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டாருங்க என்றார்.
யார் மனசும் கோணாம நல்லது செஞ்சிருக்கார்ப்பா, தங்கமான மனுஷன் என்றார், அடக்கம் முடிந்து ஹாஸ்டலுக்கு திரும்பினோம். ஏராளமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட்டி ஒரு குப்பையைப் போல் இருந்தது.

தமிழ்-மின்னிதழ் சுதந்திரம் 2015ல் வெளியான என்னுடைய சிறுகதை.