September 21, 2015

நாராயணன்

எங்கள் நான்கு தலைக்கட்டு வீட்டுப் பங்காளிகள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு கூட அவ்வளவு முன் தயாரிப்புகளில் ஈடுபடமாட்டார்கள். ஏன்? திருமணத்தின் அன்று கூட எந்த பரபரப்புமின்றி இயல்பாக இருப்பார்கள். ஆனால் ஆடி மாதம் துவங்க ஒரு வாரம் இருக்கும் போதே பரபரப்பாகிவிடுவார்கள். ஊரின் எல்லையில் இருந்த கருப்பணசாமி கோவில் தான் எங்கள் குலதெய்வம். கோவிலில் உள்ள பித்தளை அண்டாக்கள், திருவாச்சி, வெண்கல பாத்திரங்கள், ஈய வட்டைகள், பூஜை சாமான்கள் போன்றவற்றை எலுமிச்சம் பழம், புளி இவற்றைக் கொண்டு பளபளவென விளக்க ஆரம்பித்து விடுவார்கள். அரை அடியில் இருந்து ஆளுயுரம் வரை இருக்கும் அரிவாள்களை பட்டை தீட்ட அதற்குரிய நிபுணர்கள் வந்துவிடுவார்கள். ஒரு குழு கோவில், அதில் இருந்து 100 மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆடுகள் அடைக்கப்படும் சாமியறை ஆகியவற்றை வெள்ளை அடிக்க ஆரம்பித்து விடும்.

ஆடி ஒன்றாம் தேதி காலை பூஜை முடிந்ததும் நோன்பு ஆரம்பித்து விடும். பங்காளிகளின் வீட்டைத் தவிர மற்ற வீடுகளில் அன்னம், தண்ணீர் புழங்க மாட்டார்கள். இரவில் திருமணமான ஆண்கள் அனைவரும் கோவிலில் வந்து படுக்க வேண்டும். வீட்டுப் பெண்கள் மாதவிலக்கானால் சம்பந்தி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ஆடி 11 ஆம் தேதி பெரிய பூசாரிக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெறும். அதனுடன் சேர்த்து  தலைக்கட்டுக்கு மூவர் வீதம் 12 பேர் சாமியாடிகளாக தேர்வு செய்யப்படுவர். பெரிய விதிமுறைகள் எல்லாம் இல்லை. தலைக்கட்டில் பெரியவர், நல்ல இளந்தாரிகளாக இருவரையும், நாற்பதுக்கு மேற்பட்டோரில் ஒருவரையும் தேர்வு செய்வார். பெரிய பூசாரிக்கு வெள்ளிக் காப்பும், சாமியாடிகளுக்கு தாமிர காப்பும் அணிவிக்கப்படும்.

காப்புக் கட்டு முடிந்ததும் பூஜை சாமான்கள் வாங்க இரண்டு மூன்று குழுக்கள் களத்தில் இறங்கும். முக்கிய பூஜை சாமான் வெள்ளாட்டு குட்டிதான். செம்மறி ஆடெல்லாம் கருப்பணசாமிக்கு ஆகாது. ஆண் குட்டியாய் இருக்க வேண்டும்.ஒற்றை வெள்ளை முடி கூட இல்லாத,கறுப்பு ஆடாய் இருக்க வேண்டும். ஒச்சம் இருக்கக்கூடாது, ஏன் மச்சம் கூட இருக்கக்கூடாது. ஐந்து ஆறு கிலோ எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும். மூன்று கிலோ இருக்கும் குட்டிகள் சிறப்பு.

இரண்டு, மூன்று நாட்களுக்குள் எப்படியும் 40 குட்டிகளாகவது அமைந்து விடும். ”கருப்பு துடியான சாமிப்பே. நாம ஒண்ணு ரெண்டு கொடுத்தா வருசம் பூரா பார்த்துக்கிடுவாப்புல” என்ற நம்பிக்கை சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்தது. அதனால் சற்று விலை குறைத்து கூட கொடுப்பார்கள். எளிதில் கிடைத்து விடும். சில ஆடு வளர்ப்பவர்கள், இந்த வருசம் நமக்கு குடுப்பினை இல்லைய்யா என்று கூட வருத்தப்பட்டுக் கொள்வார்கள். ஊரில் உள்ள சிலர் நேர்த்திக் கடனாகவும் ஆடு வாங்கிக் கொடுப்பார்கள். அவர்கள் ஆடு வளர்ப்பவர்களிடம் கருப்பணசாமிக்கு என்றாலே போதும், சரியான குட்டியை தேர்ந்தெடுத்து கொடுத்துவிடுவார்கள்.


ஆடி 18ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு மேல் கோவில் நிர்வாகத்தால் வாங்கப்பட்ட ஆடுகளும், நேர்த்திக் கடன் ஆடுகளும் வர ஆரம்பிக்கும்.அவை சாமியறையில் அடைத்து வைக்கப்படும். இரவு உணவை முடித்து அங்காளி பங்காளிகள், சம்பந்தகாரர்கள், ஊரார், சுற்றுப்புற கிராம மக்கள் எல்லாரும் சாரி சாரியாக வர ஆரம்பிப்பார்கள். குறைந்த பட்சம் மூவாயிரம் பேராவது வருவார்கள். கோவிலின் முன் சாமியாடுவதற்காக பரப்பப்பட்டிருக்கும் ஆற்று மணலைச் சுற்றி ஆங்காங்கே குழுமி அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள்.


10 மணி அளவில் பதினோறு சேவல்களை அடித்து சமைக்கப்பட்ட உணவை கருப்பணசாமியின் பிரகாரத்தில் வைத்துப் படைத்து பூஜை நடைபெறும். அது முடியவே 11 ஆகிவிடும். அப்போது சாமியாடிகளுக்கான சிவப்பு வேட்டி முறைப்படி வழங்கப்படும். அதன்பின் பூசாரியும், கோவிலும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். 11 மணிக்கு பெரிய பூசாரிக்கான அலங்காரம் நடைபெறத் தொடங்கும். தலைமுடி தவிர ஏனைய ரோமங்கள் மழிக்கப்பட்ட, லங்கோடு மட்டும் கட்டிய உடம்பில் சந்தனம் பூசப்படும். பின் மஞ்சள் பட்டி வைத்த பட்டு டிராயரை அணிவித்து அதை இறுக்குவதற்காக சிறு நுணுக்கமான வெள்ளி சலங்கைகள் கோர்க்கப்பட்ட பெல்டை அணிவிப்பார்கள். கால்களில் சலங்கை. முகத்தில் லேசாக சந்தன பவுடர் ஒரு கோட்டிங் கொடுத்து, கண்மை இட்டு, நெற்றிக்கு செந்திலகம்  அணிவிப்பர்.

அப்போது தான் கோடாங்கிகள் தன் பாட்டைத் தொடங்க வேண்டும். டுடுடுடு டுண்டுண்டுண்டுண் டுடுடுடு டுண்டுண்டுண்டுண் என தொடர்ச்சியான தாளக்கட்டில் ஒருவர் வாசிக்க மற்றொருவர் ஏலா கருப்பா என பாடத் தொடங்குவார். சில நிமிடங்களில் பூசாரிக்கு அருள் வந்துவிடும். ஹாங் என பெரும் குரல் எழுப்பியவுடன் அவருக்கு 16 கிலோ எடை அளவுள்ள செவ்வரளியால் கட்டப்பட்ட மாலையை இருவர் தூக்கி  அணிவிப்பர். இரவு 12 மணி அளவில் இந்த அலங்காரம் முடிந்து, கோடாங்கி இடியென முழங்க பிரகாரத்தை விட்டு சாமியாடும் திடலுக்கு, செவ்வாடை அணிந்த 12 பேருடன் களமிறங்குவார் கருப்பணசாமி சாமியாடி.


ஹாங் என்ற குரல் எழுப்பிய உடன் சாமியறையில் இருந்து இருப்பதிலேயே இளங்குட்டியை எடுத்துக் கொண்டு ஓடி வருவார் ஒரு சிவப்பு வேட்டி. அதை இன்னொருவர் வாங்கி வாகாக தலை அறுத்து சாமியாடிக்கு கொடுப்பார். அதை அப்படியே வாயில் வைத்து ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பிப்பார் சாமி. படாத பாடுபட்டு அவரிடம் இருந்து அதை பிடுங்குவார்கள் சிவப்பு வேட்டிகள். குறைந்த பட்சம் 40 குட்டிகளாவது இருக்கும். எனவே இரண்டு மணிநேரமாவது இது நடைபெறும். எடை கூடிய குட்டியாக இருந்தால் அதன் ரத்தத்தை  மட்டும் சிறு வெண்கல செம்பில் பிடித்து சாமியாடி வாயில் புகட்டுவார்கள். சாமியாடி முடிந்ததும் பூசாரி பிரகாரத்திற்குள் சென்று விட,  சிகப்பு வேட்டிக்காரகள் மக்களுக்கு விபூதி வழங்குவார்கள்.

பெரிய பூசாரி பதவி என்பது அவர் முடியாமல் போகும் வரை யாருக்கும் மாறாது. இந்த சிவப்பு வேட்டிக்குத் தான் பங்காளிகள் மிகவும் ஆசைப்படுவார்கள். அது ஊர் மக்களிடம் தங்களுக்கு ஒரு ஹீரோ அந்தஸ்தைக் கொடுக்கும் என நம்பினார்கள். எனக்கெல்லாம் அதில் அவ்வளவு நம்பிக்கையில்லை. ஆனால் என் பெரியப்பா மகன் நாராயனனுக்கு சிவப்பு வேட்டி கட்டி சாமியாட வேண்டும் என்பது ஒரு கனவு. அவனுக்கு நரம்புத்தளர்ச்சி இருந்ததால், அவனுக்கு அது மறுக்கப்பட்டுக் கொண்டு வந்தது.


அந்த நரம்புத்தளர்ச்சிக்கு காரணம் என் பாட்டிதான் என அடித்துச் சொல்வேன். என் பெரியப்பா போஸ்ட் ஆபிஸ் கிளார்க். ஓரளவு வசதியான குடும்பத்தில் இருந்து பெண்ணெடுத்தார்கள். என் பெரியம்மாவுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டாரும் அடுத்த கல்யாணம், சொத்து பிரிப்பு, வியாபார நஷ்டம் என சிறிது நொடித்து விட்டார்கள். அதனால் என் பாட்டி எப்போதும் பெரியம்மாவை திட்டிக் கொண்டே இருப்பார். இந்நிலையில் என் தந்தை, அக்கா மகளையே திருமணம் செய்து நானும் பிறந்துவிட்டேன். என் அம்மா, பேத்தி என்பதால் பாட்டியிடம் இருந்து தப்பித்துவிட்டார். ஆனால் பெரியம்மா நரக வேதனைப்பட்டார்.  50 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் மாமியார் திட்டினால் மருமகள் என்ன செய்ய முடியும்? ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் தள்ளி வைத்து விட்டு என் பெரியப்பாவிற்கு வேறு திருமணம் செய்ய முடிவெடுத்தார் என் பாட்டி. அரசுப் பணியில் அவர் இருந்ததால்  நேக்காகச் செய்ய வேண்டும் என அவர்கள் யோசித்தார்கள். சரியாக அந்த நிலைமையில் தான் பெரியம்மாவுக்கு நாராயணன் உண்டானான். வளைகாப்பு வரை கரித்துக் கொட்டிக் கொண்டேதான் இருந்தார் என் பாட்டி. பயத்திலேயே குறுகி உட்கார்ந்திருப்பார் பெரியம்மா.


குழந்தை பிறந்ததும் அவர்கள் வீட்டில் சரியாகச் செய்யவில்லையென ஒரு சண்டை. ”பாப்பாத்தி உப்புக் கண்டத்துக்கு ஆசைப்பட்டது போல 15 பவுனுக்கு ஆசப்பட்டு உன்னைய என் மகனுக்கு கட்டி வச்சுட்டனே” என திட்டித்தீர்ப்பார். பெரியம்மா மடியில் படுத்திருக்கும் நாராயணன் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருப்பான்.


சிறு வயதில் அவனுக்கு முதலில் பேச்சே சரியாக வரவில்லை. திக்கித் திக்கித்தான் பேசுவான். எல்லாக் குழந்தைகளுமே அவனை கிண்டல் செய்வார்கள். ஆடி 18ல் அவன் தந்தை சிவப்பு வேட்டி கட்டி ஆடு தூக்கும் போதெல்லாம் கண்கள் விரியப் பார்ப்பான். பெரியம்மா வீட்டு உறவினர்கள் வந்து அவனிடம் என்ன வேண்டும்? என்று கேட்டால்  ”ஆட்டுக்குட்டி வாங்கித் தாங்க” என்பான்.


பெரியம்மா அடைந்த வேதனைகளுக்கெல்லாம் உச்சமாக பெரியப்பா ஒரு விபத்தில் திடீரென இறந்து போனார். வீடே அவரை கரித்துக் கொட்ட தொடங்கியது. வாரிசு அடிப்படையில், அவருக்கு அட்டெண்டர் வேலை எங்கள் ஊர் போஸ்ட் ஆபிசிலேயே கிடைக்க, நாராயணனுடன் அவர் ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டுக்கு குடி போனார். அப்போது நாராயணன் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான். அடிக்கடி நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்படுவதாலும், திக்கு வாயாலும் பலரின் கேலிக்கு உள்ளானான். அதனால் கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டான்.


பெரியம்மாவுக்கு சமையலில் உதவுவது, கடைக்குப் போவது, பாத்திரம் விளக்குவது, துவைப்பது என எல்லா வேலைகளும் செய்வான். அவர் வேலை முடிந்து திரும்பும்போது டீயோடு  நிற்பான். நான் தான் பொறுக்க மாட்டாமல் என் நண்பனின் துணிக்கடையில் கேஷியர் வேலைக்குச் சேர்த்து விட்டேன். பணி நேரம் போகவும் வீட்டு வேலைகள் எல்லாம் செய்வான். ஆடி மாதம் முழுவதும் பெரும்பாலும் கோவில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வான். ஒவ்வொறு ஆண்டும் சிவப்பு வேட்டியை எதிர்பார்ப்பான். நான் கூட என் தந்தையிடம், நீங்க சொல்லி அவனுக்கு வாங்கிக் கொடுங்கப்பா என்றேன். அவரோ சாமியாடும் போது ஏதாச்சும் எசகு பிசகா ஆகிட்டா எல்லாப் பங்காளி குடும்பமும் பாதிக்கும்டா. வேண்டாம். என மறுத்து விட்டார்.


நாட்கள் ஓடியது. எனக்கு வேறு ஊரில் வேலை கிடைத்தது. திருமணம் ஆனது. ஒரு நாள் பெரியம்மா காய்ச்சலாய் இருப்பதாக கேள்விப்பட்டு பார்க்கப் போனேன். நாராயணன் கஞ்சி காய்ச்சி அவருக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ஏம்பா, என் சம்பளமும் கொஞ்சம் சேர்த்திருக்கேன், இவனும் வேலைக்குப் போறான், உங்கப்பா வீட்டை அவர் எடுத்துக்கிட்டு எங்க பங்குக்கு ஈடா பணம் தர்றேன்கிறார். இவனுக்கு ஒரு கல்யாணம் என ஆரம்பித்தார்.


உடனே நாராயணன் திக்கியவாறே அதை ஆவேசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய் சொன்னான். பெரியம்மா உடைந்து அழத் தொடங்கினார். இவன் மனசு யாருக்கும் வராதுடா என்றார்.

நாராயணன் நான்கு வயதாய் இருக்கும் போது, பாட்டி பெருங்கோபத்தில் எதற்கோ கத்திக்கொண்டே இருந்தாராம். பெரியம்மா சுவரோரம் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டேயிருந்தாராம். நாராயணனும் அவரின் சேலையைப் பிடித்துக் கொண்டே ஒட்டி நின்று கண்கலங்கிக் கொண்டே இருந்தானாம். பாட்டி போனவுடன், திக்கியவாறே “ அம்மா, அழாதம்மா, நீ முறுக்கு சுட்டுக் கொடு நான் தெருவில போயி வித்து நிறைய காசு கொண்டு வாரேன், அழாதம்மா” என ஆறுதல் படுத்தினானாம். அந்த ஆறுதல்தான் நான் உயிரோடு இருப்பதற்கே காரணம் எனச் சொன்னார் பெரியம்மா.

நான் பெரியம்மாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இவன் இங்கேயே இருந்தா மனசு கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்பான், எனக்குத் தெரிஞ்ச மெஸ் ஓனர் ஒருத்தர், ஒரு இஞ்சினியரிங் காலேஜ்ல ஹாஸ்டல்ல மெஸ் காண்டிராக்ட் எடுத்துருக்கார். அங்க கொஞ்சநாள் இவன் இருக்கட்டும் எனச் சொல்லி அங்கு வேலைக்குச் சேர்த்துவிட்டேன். நம்பிக்கைக்குரிய ஆள் என்பதால் அவர், அவனை சூப்பர்வைசர் ஆக்கிக் கொண்டார்.


சில மாதங்களிலேயே அவர் நாராயணன் நல்ல பையன்பா, நம்பி விட்டுட்டுப்போக முடியுது என்று சொல்ல எனக்கு மகிழ்ச்சி. மாதம் ஒருமுறை அவன் அம்மாவிற்கு சேலை முதல் செருப்பு வரை, மிக்ஸர் முதல் மருந்து வரை வாங்கிக் கொண்டுபோய் பார்த்து விட்டு வருவான். ஒரு முறை நான் அவனைப் பார்க்க காலேஜ் ஹாஸ்டலுக்கு போன போது பையன்களுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தான். என்னடா இதெல்லாம் செய்யுற எனத் தனியே கேட்டதற்கு, இவங்கல்லாம் ஸ்போர்ட்ஸ் பசங்கடா, லேட்டா சாப்பிட வருவாங்க. சர்வர்களும் டயர்டாகி இருப்பாங்க, அதான் என்றான்.
அதன்பின் அந்த ஹாஸ்டல் மெஸ் காண்ட்ராக்ட் மூன்று முறை மாறியது.ஒரு முறை கல்லூரி நிர்வாகமே நடத்தியது. ஆனால் நாரயணனை யாரும் மாற்றவில்லை. எல்லோருக்கும் அவன் மேல் அப்படி ஒரு நம்பிக்கை.


மாணவர்கள் யாருக்காவது காய்ச்சல் என்றால் கஞ்சி வைத்துக் கொடுப்பானாம். ஸ்டோரில் இருந்து அத்தியாவசிய மாத்திரைகளை வாங்கி வைத்து அகால வேளைகளில் யாருக்காவது முடியவில்லை என்றால் கைவைத்தியம் பார்ப்பானாம்.

பெரியம்மாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என என்        தம்பியிடம் தகவல் வந்ததும் ஊருக்குப் போயிருந்தேன். நாராயணனைப் பற்றிய கவலை அவரை அரித்துக் கொண்டிருந்தது. பெரியம்மாவிடம் “அவனை என் தம்பிக்கும் மேல வச்சிருக்கேம்மா” நான் அவனைப் பார்த்துக்கிறேன் என உறுதி அளித்தேன். அவர் என்னிடம் “ என் அப்பா, என் அண்ணன் தம்பிகள், என் வீட்டுக்காரர் யாருமே என்னை பெரிசா எடுத்துக்கிட்டதில்ல” எல்லாப் பாசத்தையும் இவன் ஒத்த ஆளா என் மேல காமிச்சிருக்கான். வீட்டு வாசப்படி இறங்க விடாம அப்ப இருந்து இப்ப வசதி பன்ணி வச்சிருக்கான்.

நான் சாமி கும்புடும் போது, அடுத்த எல்லாப் பிறவியிலயும் நாராயணன் தான் எனக்கு மகனாப் பொறக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்யா” நீயும் அப்படியே எனக்காக கும்புடுய்யா என்றார். மேலும் இந்தப் பிறவில அவனுக்கு நான் எதுவும் செய்யல, அடுத்தடுத்த பிறவியில அவன ராசகுமாரனாட்டம் நான் வச்சுப் பார்க்கணும்யா என கண்ணீர் விட்டு அழுதார்.
பெரியம்மாவின் இறப்புக்குப் பின் மாதம் இருமுறையாவது நாராயணனிடம் பேசி விடுவேன்.பெரிய ஆசையெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணே, ஒரு தடவையாச்சும் சிவப்பு வேட்டி கட்டி சாமியாடணும், நானுமொரு ஆள் தான்னு ஊருல நாலு பேரு நினைக்கணும்னு ஆசை என்பான்.

திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, நாராயணன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. ஊரில் இருந்த தம்பிக்கு போன் செய்து ” விபரத்தைச் சொல்லி டேய், கோவில்ல இருந்து ஒரு சிவப்பு வேட்டி எடுத்துட்டு வாடா, எவன் கேட்டாலும் நான் பேசிக்கிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினேன். ஹாஸ்டலை நெருங்க நெருங்க ஏராளமான கூட்டம் இருந்தது. அலங்காரத் தேர், தாரை தப்பட்டை என பலமான ஏற்பாடுகள். படுக்க வைக்கப்பட்டிருந்த நாராயணன் மீது சிவப்பு வேட்டியை போர்த்திவிட்டு, அப்போதைய காண்ட்ராக்டரை அணுகினேன்.

எனக்கு ஆறு மாசமாத்தாங்க பழக்கம். இவர் இறந்த உடனே பசங்க வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டு விட்டிருக்காங்க. 20 வருசமா இந்த ஹாஸ்டல்ல இருந்த பையங்கள்ளாம் முடிஞ்ச அளவுக்கு வந்துட்டாங்க. வெளிநாட்டு பசங்கள்ளாம் அவங்க சொந்தம்,பிரண்ட்ஸ் மூலமா வேட்டி, மாலை.காசுன்னு கொடுத்து விட்டிருக்காங்க. சர்வரா இருந்த பழைய ஆளுங்க,ஸ்வீப்பர்ஸ்னு எல்லாம் கேள்விப்பட்டு வந்துட்டாங்க. பழைய லெக்சரர்கள் கூட நிறைய வந்துட்டாங்கப்பா. காலையில காலேஜ் சேர்மன் மகன் வந்து மரியாதை செஞ்சுட்டு நல்ல படியா எடுக்கச் சொல்லிட்டுப் போயிட்டாருங்க என்றார்.
யார் மனசும் கோணாம நல்லது செஞ்சிருக்கார்ப்பா, தங்கமான மனுஷன் என்றார், அடக்கம் முடிந்து ஹாஸ்டலுக்கு திரும்பினோம். ஏராளமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட்டி ஒரு குப்பையைப் போல் இருந்தது.

தமிழ்-மின்னிதழ் சுதந்திரம் 2015ல் வெளியான என்னுடைய சிறுகதை.

8 comments:

மலரின் நினைவுகள் said...

வாவ்...!!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் சிறுகதைஅருமையாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

முரளிகண்ணன் said...

நன்றி மலரின் நினைவுகள்

நன்றி ரூபன்

Deiva said...

arumaiyana kathai! Ithu unmai sambavama?

Unknown said...

kannula thanni vandhuvittadhu! beautiful

க கந்தசாமி said...

அருமை.

Unknown said...

your way of writing is amazing .

Karthik said...

மனதை நெகிழ வைத்துவிட்டது..வாழ்க!