April 26, 2016

பிரசாந்த்

வைகாசி பொறந்தாச்சுவில் பிரசாந்த் அறிமுகமான போது அவருக்கு 50,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இது எந்த அறிமுக நாயகருக்கும் கொடுக்கப்படாத சம்பளம் என்று இண்டஸ்டிரியில் பேசிக்கொண்டார்கள். அலைகள் ஓய்வதில்லையின் இன்னொரு வடிவமான இந்தப் படம் தேவாவின் பாடல்கள், ஜனகராஜின் காமெடி துணை நிற்க பல தியேட்டர்களில் 200 நாட்களைக் கண்டது. அதன்பின்னர் தொடர்ந்து அவருடைய தலைமுறை நடிகர்களில் பல முதல்களை பிரசாந்த் கண்டு கொண்டே வந்தார்.

மணிரத்னம்,பாலுமகேந்திரா,ஷங்கர் என பெரிய இயக்குநர்களின் படங்களில் முதலில் நடித்த இளைய தலைமுறை நடிகர், உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த முதல் தமிழ் நடிகர் (இன்று வரைக்கும் பார்த்தால் கூட மூன்றோ நான்கோ பேர்தான் வருவார்கள்), இணைய தளத்தை பயன்படுத்தி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்த நடிகர், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்திய நடிகர் என்று 90ல் அறிமுகமான பிரசாந்த் 2000 வரை செய்திகளில் இருந்து வந்தார்.

செம்பருத்தி படம் வெளியான நேரத்தில் எல்லாம் பிரசாந்துக்கு பெரிய கிரேஸ் ரசிகர்,ரசிகைகளிடம் இருந்தது. பாலுமகேந்திராவின் வண்ண வண்ன பூக்கள் படத்திலும் செம்பருத்தியிலும் பிரசாந்த் அணிந்து நடித்திருந்த டி சர்ட்கள் இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலம். 90களில் ஆசை,காதல் கோட்டை மூலம் அஜீத்தும் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை மூலம் விஜய்யும் தலையெடுக்கும் வரை அரவிந்த்சாமி,பிரபுதேவா மற்றும் பிரசாந்த் தான் இளைய தலைமுறையின் நாயகர்களாக இருந்து வந்தார்கள். அதில் அரவிந்த்சாமியை ஒரு மேனேஜர் போலவே பார்த்தது ரசிகர் சமூகம். பிரபுதேவாவை ஒரு நாயகனாக பார்த்ததை விட டான்ஸராகத்தான் ரசிகர்கள் பார்த்தார்கள். எனவே அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டாராகும் வாய்ப்பு ஒரு கட்டத்தில் பிரசாந்துக்கும் இருந்தது.

நடனமும் ஆடக்கூடியவர், சண்டைக் காட்சிகளும், நாலு பேரை அடித்தால் நம்பும்படி இருக்கும். நிறம், முக அமைப்பு ஒக்கே என இருந்தாலும், ஒரு ஆங்கிரி யங் மேன் என இளைஞர்களுக்கு பிடிக்கக் கூடிய நடிகராய் பிரசாந்தால் மாறமுடியவில்லை. இளைஞர்களைக் கவரும் பாடி லாங்குவேஜும், குரலும் அவரிடம் இல்லை. ஆணழகன் படத்தில் பெண்வேடம் போட்டது போல் சவாலான வேடங்களை அவர் ஏற்று நடித்தாலும், மற்ற வேடங்களில் அவரால் பெரிய வித்தியாசம் காட்ட முடியவில்லை.

ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர் என அவ்வப்போது ஹிட்டுகளை கொடுத்து வந்தாலும் பிரசாந்துக்கு என ஒரு ஓப்பனிங் அமையவேயில்லை. இயக்குநர்களைப் பொருத்தே அவருடைய ஓப்பனிங் அமைந்தது. அஜீத், விஜய்க்கு அடுத்து மூன்றாவது பிரசாந்த் என்று ஒரு வரிசை வந்தது. அதுவும் சூர்யாவின் வெற்றிக்குப் பின்னால் இல்லாமல் போனது.

பிரசாந்துக்கு இருந்த தலையாய பிரச்சினைகளில் ஒன்று பப்ளியாக இருப்பது. சாக்லேட் பாய் ஹீரோவை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. ரசிகைகளுக்குப் பிடித்தாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மாறிவிடுவார்கள். ஒடுக்கு கன்னம், கறுப்பு அல்லது மாநிறம், மீசை இவையெல்லாம் தமிழ் ரசிகர்கள் ஒருவரை ஹீரோவாக ஆராதிக்க தேவை. எம்ஜியார் கூட முதலில் கறுப்பு வெள்ளைப் படங்களில் நடித்து ஓரளவு மக்கள் மனதில் செட்டில் ஆன பின்னர்தான் கலர் படங்களில் நடித்தார். அவர் சின்ன வயதில் கலர் படத்தில் நடித்திருந்தால் இவ்வளவு பெரிய ஹீரோவாக ஆகியிருக்க மாட்டார் எனச் சொல்வார்கள். எவ்வளவோ திறமைகள் இருந்தும் கமல்ஹாசன் இன்றுவரை போராட வேண்டி இருக்கிறது. சிவப்பாக இருந்து ரசிகர் மனம் கவர்ந்த இன்னொருவரான அஜீத்தை எடுத்துக் கொண்டால், அவரும் கூட அழகாயிருந்த போது கூட இவ்வளவு கிரேஸ் இல்லை. சற்று குண்டாகி, நரை விழுந்து அழகு சற்று குறைந்த பின்னால் தான் அவர் பின்னால் பெரும் கூட்டம் கூடியது.

அதனால் பிரசாந்தால் நிறைய ரசிகர்களை கவர முடியவில்லை. மேலும் ஏற்று நடிக்கும் வேடங்களும், ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் வரும் வரை ஏழைப் பங்காளன் ரோல்களாக இருக்க வேண்டும். பணக்கார ரோல்களில் நடித்தால் சட்டென்று ரசிகர்களிடம் இருந்து அன்னியப்பட்டு போய்விடுவார்கள். பிரசாந்த் தன் பெரும்பாலான படங்களில் மல்டி மில்லியனராக நடித்ததும் ரசிகர்களிடம் இருந்து அவர் அன்னியப்பட ஒரு காரணம்.

மக்கள் தொடர்பிலும் பெரிதாக கோட்டை விட்டனர் பிரசாந்தும் அவர் தந்தை தியாகராஜனும். பிரசாந்த் மட்டுமல்ல அரவிந்த்சாமி,பிரபுதேவா போன்றோரும் கூட. ஆரம்ப காலத்தில் பிரசாந்துக்கு கிடைத்த தொலைக்காட்சி பேட்டி வாய்ப்பையெல்லாம் படு செயற்கையாகப் பேசி இமேஜைக் குறைத்துக்கொண்டார். ஆனால் இவர்களுக்குப் பின் வந்த விஜய், தன் தந்தையின் வழிகாட்டுதல் படி அரிசி மூட்டை வழங்குதல், ரிக்ஷா காரர்களுக்கு உடை வழங்குதல் என ஏழைப்பங்காளன் இமேஜை திட்டமிட்டு வளர்த்தார். தொடக்கத்தில் இதில் தவறு செய்து கொண்டிருந்த அஜீத்தும் பின்னர் பக்காவான பி ஆர் ஓ டீமுடன் களமிறங்கினார். ஆனால் பிரசாந்த் தன் திருமணம் தோல்வி அடைந்ததைக் கூட மீடியாவில் சரிவர ஹேண்டில் செய்யாமல் தோல்வி அடைந்தார்.

இன்னொரு விஷயம் ஜாதி. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவரை தமிழகம் முழுவதும் சேர்ந்து ஆராதிக்க அவர் இந்த மாநிலத்தைச் சாராதவராக இருக்க வேண்டும் அல்லது சிறுபான்மை மதமாய்/ஜாதியாய் இருக்க வேண்டும். முக்கியமாக என்ன ஜாதி என்றே தெரியாமல் இருத்தல் சிறப்பு. ஆதிக்க ஜாதியாய் இருந்தாலும் முழு ஆதரவு கிட்டாது, தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்தால் இன்னும் மோசம். எப்படித்தான் அந்த செய்தி பரவுமோ எனத் தெரியாது, சுத்தமாக ஒதுக்கி விடுவார்கள் ஆதிக்க ஜாதி ரசிகர்கள். எனவே ஓப்பனிங் என்பது மிகக் குறைவாகவே இருக்கும். படம் நன்றாக இருந்தால்தான் அவர்கள் படம் பிழைக்கும்.

சிவப்பு நிறம், பணக்கார களை, தவறான மக்கள் தொடர்பு, ஜாதி மட்டுமே பிரசாந்தின் வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் கிடையாது. அவை ஒரு சில காரணிகளே. அவர் ஏற்று நடித்த வேடங்களில் நல்ல நடிப்புத்திறமையைக் காட்டி தன்னை ஒரு நல்ல நடிகனாக நிலைப்படுத்தி இருந்தால் நல்ல உயரங்களுக்குச் சென்றிருப்பார்.

April 24, 2016

வெயில் பிரச்சாரம் தேவையா?

டி என் சேஷன் கொண்டுவந்த தேர்தல் சீர் திருத்தங்களில் முக்கியமானது தேர்தல் பிரச்சாரத்தை இரவு 10 மணிக்கு மேல் செய்யக்கூடாது என்பதும் ஒன்று. ஏனென்றால் இரவு பிரச்சாரத்தை அனுமதிக்கும் போது, ஓட்டுக்கு பணம் கொடுத்தல், கட்சி ரீதியான மோதல்கள், உள்ளடங்கிய கிராமங்களில் ஏற்படும் ஜாதி ரீதியான மோதல்கள் போன்றவற்றை கண்காணிப்பது கடினம். அது போக வாக்காளர்களுக்கு பிரச்சார ஒலிபெருக்கிகளால் ஏற்படும் அசௌகர்யம், முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதீத சத்தத்தால் ஏற்படும் தொல்லை இவற்றைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கு முன்னர் தேர்தல் காலங்களில் விடிய விடிய மேடைப்பிரச்சாரம் நடக்கும். அண்ணாதுரை, எம்ஜியார், கருணாநிதி போன்றவர்கள் காலை ஆறு மணி வரை கூட பிரச்சாரம் செய்வார்கள். பிரச்சாரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சியாய் இருந்தால் சர்க்யூட் ஹவுஸிலோ அல்லது ட்ராவலர்ஸ் பங்களாவிலோ தங்குவார்கள். எதிர்க்கட்சியாய் இருந்தால் கட்சி பிரமுகர் வீட்டிலோ அல்லது லாட்ஜிலோ தங்குவார்கள். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு அன்று மாலை பேசப்போகும் இடங்களில் எது பற்றிப்பேச வேண்டும் என்று கட்சிக்காரர்களுடன் விவாதித்து விட்டு, மற்ற ஏரியா நிலவரங்களை விசாரித்து, தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு மதியம் அந்த ஏரியாவில் புகழ்பெற்றிருக்கும் அசைவ சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு கண்ணயர்வார்கள். மாலை 5 மணி அளவில் எழுந்து டச்சப் செய்து கொண்டு பிரச்சாரத்துக்கு கிளம்புவார்கள். தொடர்ந்து காலை வரை பிரச்சாரம் இருக்கும். இது தேர்தல் காலம் முழுவதும் மாறாமல் நடக்கும். இதனை சூறாவளி பிரச்சாரம் என்று அப்போது குறிப்பிடுவார்கள்.

அன்றைய நாள் பேசப்போகும் பிரச்சார இடங்களுக்கு உத்தேசமாக ஒரு நேரம் குறித்து அதை விளம்பரப்படுத்தி இருப்பார்கள். மாலை 6 மணி என்றால் நிச்சயம் 10 மணிக்காவது அந்த நட்சத்திரப் பேச்சாளர் வந்துவிடுவார். அதிகபட்சம் இரவு 9 மணி என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த இடத்திற்கு வரும்போது குறைந்தபட்சம் 2 மணியாவது ஆகியிருக்கும். இப்போது போல பொழுதுபோக்கு வசதிகள் இல்லாத காலம். ஆண்களுக்கு பிரச்சாரக் கூட்டம் கேட்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்த காலகட்டம் அது. பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு சக நண்பர்களுடன் வந்து தற்காலிக கடைகளில் பொரி, வறுத்த கடலை போன்ற அயிட்டங்களை சாப்பிட்டுக்கொண்டு, சுக்கு மல்லி காபி குடித்துக் கொண்டு, பீடி,சிகரெட் புகைத்துக் கொண்டு வெட்டி அரட்டை அடித்துக் கொண்டு நிற்பார்கள்.

இப்போது போல தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாத காலம். எனவே போலிசாரின் வாக்கி டாக்கி தான் தலைவர்கள் எந்த பாயிண்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள உதவும் சாதனமாக இருந்தது. இந்த சுக்கு மல்லி காபி விற்பவர்கள், பேச்சாளர் வரும் நேரத்தை போலிசாருக்கு ஒரு காபி கொடுத்து கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஏனென்றால் பேச்சாளர் வந்த பிறகு ஓட்டம் குறைந்து விடும். அதற்கேற்ப காபி தயாரித்துக்கொள்ள இந்த விபரம் தெரிந்து கொள்வார்கள்.

84க்குப் பிறகு 90 வரை ஜெயலலிதா, காளிமுத்து, வைகோ, டி ராஜேந்தர் போன்ற மேல் மட்ட தலைவர்களுக்கும், வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நெல்லை பாலாஜி போன்ற விரசம் கலந்து பேசும் பேச்சாளர்களுக்கும் இதுபோல ஒரு டிமாண்ட் இருந்தது. இவர்கள் பேசுவதாக இருந்தால் தன்னிச்சையாகவே கூட்டம் கூடிவிடும். ஆனால் இந்தக் கூட்டத்தை வைத்து வெற்றியைக் கணிக்க முடியாது.

கருணாநிதி அடிக்கடி சொல்லுவார், “நம் கூட்டத்துக்கு வருகிறவர்கள் எல்லாம் உதயசூரியனுக்கு வாக்களித்தால் போதும் நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம்” என்று. எல்லாத் தரப்பினரும் பேச்சைக் கேட்க வருவார்கள். ஒருமுறை டி. ராஜேந்தர் பேச்சைக் கேட்க எங்கள் ஊரில் காலை மூன்று மணிவரை கூட கூட்டம் கலையாமல் இருந்தது.

கிராமங்களில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு தலைவர்கள் வருகை இல்லாவிட்டால் அருகில் இருக்கும் முக்கிய பிரச்சார இடங்களுக்குச் சென்று பேச்சைக் கேட்பார்கள். அவர்கள் இரவில் திரும்ப வாகன வசதி இல்லாமல் அந்த திடலிலேயே படுத்துக் கொள்வதும் உண்டு. எம்ஜியார் இந்த மாதிரி தங்குபவர்களுக்கு ஏரியா பொறுப்பாளர்கள் மூலம் காலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்து விட்டுப் போவார். பெரும்பாலும் வெண்பொங்கல். அதைச் சாப்பிடும் வேற்று கட்சிக்காரர்கள் கூட எம்ஜியார் மீது அபிமானம் கொண்டு விடுவார்கள்.
டி என் சேஷன் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் நீட்டிப்பதை நிறுத்திய பின்னர் மதியம் மூன்று மணி அளவில் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. தொலைக்காட்சி முதலான பொழுது போக்குகளும் 90ல் கிடைக்க ஆரம்பித்த உடன் பிரச்சாரம் பொழுது போக்கு அம்சத்தில் இருந்து விடுபட்டது. கட்சிக்காரர்கள் மட்டுமே பிரச்சார இடங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். ஊரிலேயே நெரிசல் மிகுந்த இடத்தில் பிரச்சாரம் செய்தால் தான் பொதுமக்கள் பேச்சைக் கேட்பார்கள் என்னும் நிலை ஏற்பட்டது. கட்சித் தலைவர்கள் வந்தால் கூட நேரில் பார்க்கும் ஆவல் குறைந்தது.

எனவே கூட்டம் சேர்க்க வேண்டுமானால் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து கூட்டி வரவேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, பிரேமலதா, திருமா வளவன் போன்றவர்கள் சாலை பிரச்சாரம் மேற்கொள்ளுவதால் கட்சிக்காரர்கள், இயல்பாக அங்கே இருப்பவர்கள் என ஓரளவு கூட்டம் சேர்ந்து விடுகிறது. ஆனால் ஜெயலலிதா போக்குவரத்து வசதி இல்லாத பொட்டல் காடுகளில் பிரச்சாரம் செய்வதால், ஆட்களை அங்கே கொண்டு போய் இறக்கி பிரச்சாரம் கேட்க வைக்கப் படுகிறது.

எங்கள் தெருவில் இருந்து இரண்டு பெண்களை இப்படி அழைத்துச் சென்று வந்தார்கள். ஆளுக்கு 300 ரூபாய் கிடைத்தது என்றார்கள். ஆனால் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வெயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த்தால் அடுத்து 2 நாட்கள் அவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டார்கள். இந்த ஏரியா பொறுப்பாளர்கள் தங்கள் கட்சி பிரச்சாரம் கேட்க தங்கள் மனைவி, சகோதரி, மகள், மருமகள்களை இப்படி ஐந்து மணி நேர வெயிலில் அடைத்து வைப்பார்களா?

ஜெயலலிதா ஓரிடத்தில் பிரச்சாரம் செய்வதற்கு முன்னால் மூன்று நாட்கள் முன்னதாகவே அந்த ஏரியாவில் காவலர்கள் குவிக்கப்படுகிறார்கள். அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. ஜெயலலிதா இப்போது சட்டப்படி ஒரு காபந்து அரசின் முதல்வர்தான். அவரின் பிரச்சாரத்திற்கு அரசாங்கம் இவ்வளவு மனித சக்தியையும், வாகனம், எரிபொருள் என பொருட் செலவு செய்யலாமா?
அதைவிட கொடுமையானது பிரச்சாரத்துக்கு அழைத்து வரப்படும் மக்களை போலிசார் அதட்டி உருட்டி உட்காரவைப்பது. யார் தந்த அதிகாரம் இது? அதிமுக உறுப்பினர்கள் கூட பரவாயில்லை எனும்படி இவர்கள் சில சமயங்களில் அடித்தே விடுகிறார்கள். ஜெயலலிதாவிற்குத்தான் இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கிறது. அவரைப் பாதுகாருங்கள் அது உங்கள் கடமை. பிரச்சாரம் கேட்க வந்தவர்களை நகர விடாமல் அடிப்பது?

மனித உரிமை அமைப்புகள் இம்மாதிரி பிரச்சாரத்திற்கு தடை கோரலாம். ஒருவரின் தனிப்பட்ட வசதிக்காக பல்லாயிரக்கணக்கான மக்களை வெயிலில் வதைப்பது இந்த ஜனநாயக நாட்டில் நடக்க விடலாமா? அப்படி ஜெயித்து ஜெயலலிதா எதை சாதிக்கப்போகிறார்?

April 18, 2016

மொஹிந்தர் அமர்நாத்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கு இப்போது கடுமையான போட்டி. ஒரு முறை அணியில் இடம்பிடித்து விட்டால் போதும், ஐபிஎல் ஏலத்தில் நல்ல தொகை கிடைக்கும். அவர்களின் சொந்த மாநிலத்தில் ஏராளமான விளம்பர வாய்ப்புகள் கிட்டும். ஏதாவது ஒரு மேட்சில் குறிப்பிடும்படி ஆடிவிட்டால் அரசியல் காரணங்களுக்காக அந்தந்த மாநில அரசுகள் வீட்டு மனை ஒதுக்கும். பின்னர் அகடமி ஏதாவது ஆரம்பிக்கலாம். அவ்வளவு ஏன் இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி,பள்ளி ஆண்டு/விளையாட்டு விழாக்களில் கலந்து கொண்டாலே ஒரு வசதியான வாழ்வை எட்டி விடலாம்.

ஆனால் 1970களில் இப்படி இல்லை. பட்டோடி,கவாஸ்கர் போன்ற சிலருக்கே விளம்பர வாய்ப்பு கிடைக்கும். 83 உலக்கோப்பையை வென்று கொடுத்த பின்னர் ஆனானப்பட்ட கபில்தேவுக்கே பாமோலிவ் ஷேவிங் கிரீம் விளம்பரம் தான் கிடைத்தது. பூஸ்ட் விளம்பரம்தான் கபில்தேவுக்கு விளம்பர உலகில் கிடைத்த அதிகபட்ச அங்கீகாரம். மிகவும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிக்காட்டினால் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட வாய்ப்புக்கிடைக்கும். இப்போது ஐபிஎல்லில் விளையாடவரும் வெளிநாட்டு ஆட்டக்காரர்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவது போல் எல்லாம் தாங்கமாட்டார்கள். ஓரளவு சம்பளம்தான். இனப் பாகுபாடு வேறு வீர்ர்களின் ஓய்வறையில் இருக்கும்.

எனவே ஒரு கிரிக்கெட் வீரருக்கு கிரிக்கெட் வாரியம் நிர்ணயிக்கும் சம்பளம் மட்டுமே கிடைக்கும். அதுவும் போட்டிகளில் விளையாடும் நாட்களுக்கு மட்டும்தான். ஆண்டுக்கு அதிகபட்சம் 12 டெஸ்ட் போட்டிகள் நடந்த காலம் அது. 80க்குப் பின்னரே ஒருநாள் போட்டிகள் அதிகரித்தன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளும், இந்தியன் ரயில்வே மற்றும் சில தொழிற்சாலைகளும் யாராவது ஒரு வீரரை தங்கள் நிறுவனத்தில் கௌரவ வேலை கொடுத்து குறிப்பிட்ட சம்பளம் கொடுப்பார்கள்.

எனவே வசதியான பின்புலத்தில் இருந்து வராத கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றதும், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பார்கள். அதனால் தான் கிரிக்கெட் வீரர் நலநிதி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கிடைக்கும் டிக்கெட் மற்றும் விளம்பர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவிகித தொகையைக் கொடுத்து போய் வா ராசா என்று அனுப்பிவிடுவார்கள்.

இது ஊடகங்களின் காலம். இப்போது ஒரு வீரர் ஏதாவது ஒரு மேட்சில் நன்றாக விளையாடிவிட்டாலே ஊடகங்களின் மூலம் எப்படியாவது பொதுமக்கள் வரை சென்று சேர்ந்து விடுகிறார். ஆனால் அப்போது டெஸ்ட் மேட்சுகளை எலைட் ஆடியன்ஸ் மட்டும் பார்ப்பார்கள். ரஞ்சி,துலிப் கோப்பை போட்டிகளை எல்லாம் ஸ்கோரர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள். பெரிய ஆட்டக்காரர்கள் ஆடினால் மட்டும் சுமாராக கூட்டம் வரும். அம்பயர்களுக்கு கொத்தனார்களுக்கு கொடுக்கும் அளவுக்குத்தான் சம்பளம் இருக்கும். அம்பயர்கள் பெரும்பாலும் ஆட்டோவில்தான் மேட்சுகளுக்கு வந்து இறங்குவார்கள். ஒருமுறை மும்பையில் போக்குவரத்து நெரிசலால் ஆட்டோ கிடைக்காமல் ஒரு அம்பயர் தாமதமாக வந்து அரைமணி நேரம் ஆட்டம் தாமதமாக ஆரம்பித்தது எல்லாம் உண்டு.

1970களில் இந்திய அணித்தேர்வு என்பது வெளிப்படையாக இருக்காது. ஒருவர் உயிரைக்கொடுத்து அபாரமாக ஒரு போட்டியில் ஆடினாலும் கூட அது கவனிக்கப்படாமல் போக ஏராளமான சாத்தியங்கள் உண்டு. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு மட்டும்தான் இந்தியா முழுவதும் யார் யார் நன்றாக தற்போது விளையாடுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் அவர்கள் தங்களின் நலனுக்கு ஏற்பத்தான் அணியை தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை பேர் என்ற கோட்டா சிஸ்டம் இருக்கும் (இப்பொழுதும்!!!!). கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இருக்கும் மாநிலத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் இருக்கும். சென்ற தொடரில் ஆடிய விதம், ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை போட்டிகளில் ஆடியவிதம் போன்ற காரணிகள் தான் தேர்வுக்கு அடிப்படை என மக்கள் நம்புவார்கள். ஆனால் கிரிக்கெட் வாரியத்தில் வலுவான பிண்ணனி கொண்ட மாநிலத்தில் இருத்தல், தேர்வாளர்களுடனான தொடர்பு போன்ற காரணிகள்தான் தேர்வுக்கு முக்கிய அடிப்படையாக அங்கே இருக்கும்.

கிரிக்கெட் அணி அறிவித்தால் பொதுமக்கள் ஓஹோ இவர்கள்தான் நல்ல ஆட்டக்காரகள் போல என நம்பிக்கொள்வார்கள். அடுத்து வரப்போகும் ஆட்டங்களுக்கான அணித்தேர்வானது ஓரிரு வாரம் முன்னதாக ஒரு சுபயோக சுபதினத்தில் ராகுகாலம்,எமகண்டம் இல்லா காலை வேளையில் நடக்கும். இப்போது போல உடனே தொலைக்காட்சிகளில், இணையத்தில் அந்த செய்திகள் குறுக்கும் நெடுக்குமாக பளிச்சிடாது. மாலை ஆறுமணி அகில இந்திய வானொலி ஆங்கிலச் செய்தி அறிக்கையில் அணி விபரத்தை அறிவிப்பார்கள். தொலைபேசி/அலைபேசிகள் அதிகமாக இல்லாத காலம் வேறு, எனவே வாய்ப்புள்ள பெரும்பாலான கிரிக்கெட் வீர்ர்களும் அந்த நேரத்தில் தங்களின் அதிர்ஷ்டத்தை தெரிந்துகொள்ள வானொலிப் பெட்டிமுன் தவம் கிடப்பார்கள்.

அப்போது டெல்லி கிரிக்கெட் மைதானத்திலும் ஒருவர் அந்த நேரத்தில் உட்கார்ந்திருப்பார். செய்திகளில் அவர் பெயர் சொல்லப்பட்டாலும் சரி இல்லாமல் போனாலும் சரி, செய்தி முடிந்ததும் இருக்கும் வெளிச்சத்தைப் பொறுத்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு கிளம்புவார். அவர்தான் மொஹிந்தர் அமர்நாத். அவர்தான் இந்தியா வென்ற 1983 உலக கோப்பை அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயகன், அடித்த 11 சதங்களில் ஒன்பதை வெளிநாட்டு மைதானங்களில் அடித்தவர், சுதந்திரத்திற்கு பின்னரான இந்திய அணியின் முதல் கேப்டன் லாலா அமர்நாத்தின் மகன்.

அப்போதைய இந்திய ஆடுகளங்களில் ஒருவரின் முட்டிக்கு மேல் பந்து எழும்பியதாக கேள்விப்பட்டாலே அந்த ஆட்டக்காரர் மிகக் குள்ளமானவர் என்று பார்க்காமலேயே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு, வீசப்படும் பந்தின் வேகத்தை உறிஞ்சிக்கொள்ளும் ஆடுகளங்கள் தான் அப்போது இருந்தன. அதற்கு நேர் எதிரானது ஆஸ்திரேலிய பெர்த் ஆடுகளம். வீசப்படும் பந்தின் வேகத்தை அதிகரிக்கும் கான்கிரீட் தளம். விக்கெட் கீப்பர்கள் எல்லாம் மற்ற மைதானங்களில் நிற்பதைவிட சற்று தூரம் தள்ளியே நிற்பார்கள். அவர்களை விடுங்கள். பீல்டர் முதல் ஸ்லிப்பில் நிற்கிறாரா இல்லை தேர்ட்மேனில் நிற்கிறாரா என குழப்பம் ஏற்படும் வகையில் தள்ளிளிளி நிற்பார்கள். இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர் என்று கபில்தேவ் ஒருவர்தான் இருந்தார். மற்றவர்கள் எல்லாமே மீடியம்தான். இப்போது போல வேகப்பந்து வீச்சிற்கு வலைப்பயிற்சி அளிக்கும் இயந்திரங்களும் கிடையாது. இந்த சூழ்நிலையில் பழகுவதால்தான் முன்னாளைய இந்திய ஆட்டக்காரர்களின் திறமை வெளிநாடுகளில் பல்லிளித்தது.

இந்த சூழ்நிலையில், அப்போதைய ஏன் இன்றுவரைக்கும் எனக்கூட சொல்லலாம். அதிவேக பந்துவீச்சாளர் என அறியப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஜெஃப் தாம்சனை பெர்த ஆடுகளத்தில் சந்தித்து தன் முதல் சதத்தை அடித்தவர் மொஹிந்தர் அமர்நாத்.

இந்திய ஆட்டக்காரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாடச் சென்றாலே வைணவத்தின் முக்கிய தத்துவமான சரணாகதி, பாதாரவிந்தம் படிதலைத்தான் பின்பற்றுவார்கள். பந்து பிட்சின் மையத்தில் விழுந்தாலே கோவிந்தா எனச்சொல்லி உட்காந்து விடுவார்கள். ஆனால் மொஹிந்தர் அமர்நாத் அனாயாசமாக பவுன்சர்களை ஹூக் செய்து விளையாடுவார். நெஞ்சுக்கு வரும் பந்துகளை எளிதாக புல் செய்வார். அவர் நின்று கொண்டிருக்கும் ஸ்டைலைப் பார்த்தால் இவர் பந்துகளை எங்கே அடிக்கப்போகிறார் என்பது போலத்தான் தெரியும். அவ்வளவு சாத்வீகமாக பேட்டிங் கிரீஸில் நிற்பார். எல்கேஜி பையன்கள் மூக்குத்துடைக்க கர்ச்சீப்பை பாக்கெட்டின் வெளியே வைத்திருப்பது போல தன் சிகப்பு நிற கர்ச்சீப்பை பேண்ட் பாக்கெட்டில் வெளித்தெரியும் படி வைத்திருப்பார்.

80களின் ஆரம்பத்தில் அதிவேக பந்து வீச்சாளர்களாக விளங்கிய மால்கம் மார்ஷலும், இம்ரான்கானாலும் சிறந்த ஆட்டக்காரர் என புகழப்பட்டவர். தன் சகவயது ஆட்டக்காரர்களை புகழாத சுனில் கவாஸ்கராலேயே தனது சுயசரிதையில் உலகின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என புகழப்பட்டவர். அவ்வாறு வேகப்பந்தை சமாளித்து ஆடுவதாலேயே ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆடுகளங்களில் அவரல் சிறப்பாக ஆட முடிந்தது. வேகப்பந்து வீச்சை மட்டுமல்ல, சுழற்பந்துகளையும் கணித்து ஆடுவதில் வல்லவர். பொதுவாக இந்திய அணி வீர்ர்கள் என்றாலே சுழலை அனாயாசமாக ஆடத்தான் செய்வார்கள். ஆனால் மொஹிந்தர் கால்களை நேர்த்தியாக நகர்த்தி, சிறப்பாக தடுத்து ஆடுவார். கால் பட்டைகளில் பந்தைத் தடுத்தல், இறங்கி அடித்து பயம்காட்டுதல், பார்வர்ட் ஷாட் லெக், சில்லி பாயிண்ட், சில்லி மிடாபில் அருகில் நிற்கும் பீல்டர்களை பயமுறுத்துமாறு பேட்டை வீசுதல் எல்லாம் இருக்காது. சுழலை நன்கு கவனித்து, காலை முன்னரோ, பின்னரோ நகர்த்தி மட்டையின் மையக் கோட்டில் பந்து படுமாறு ஆடுவார். அதுவும் மிகவும் மென்மையாக, பந்து பிட்சைவிட்டு வெளியேறிச் செல்லாத வகையில். அடுத்த பால் போடுப்பா பார்ப்போம் என்ற செய்தி பந்துவீச்சாளருக்கு போய்ச்சேரும். அருகில் இருக்கும் பீல்டர்கள் என்ன இது நமது கைக்குகூட பந்து வரவில்லையே என அலுத்துக் கொள்வார்கள். இவ்வாறு சுழற்பந்து வீசப்பட்டால் எதிர் அணியை சோர்வடையச் செய்வதில் மொஹிந்தர் சமர்த்தர். ஆனால் அடிக்க வேண்டிய பந்துகளை விளாசி விடுவார். சுழற்பந்துகளை பிரண்ட் புட் கவர்ட்ரைவ் ஆடுவது அவருக்கு மிக எளிது.

மொஹிந்தர் மித வேகம் என்று சொல்லமுடியாத வேண்டுமென்றால் மென்வேகப்பந்து வீச்சாளர் என்று சொல்லக்கூடிய அளவில் பந்தும் வீசக்கூடியவர். 83 உலக்கோப்பையில் அரை இறுதி, இறுதிப்போட்டி ஆட்டநாயகன் விருது அவரது பந்துவீச்சுக்காகவே முக்கியமாக வழங்கப்பட்டது. அவரது பந்துவீச்சு இங்கிலாந்து,நியூசிலாந்து போன்ற ஸ்விங்கிற்கு சாதகமான பருவநிலை நிலவும் நாடுகளில் நன்கு எடுபடும். இந்தியா போன்ற நாடுகளில் அவ்வளவாக எடுபடாது. ஆனால் அவர் பேட்ஸ்மனை கணித்து அதற்கேற்றார்போல கண்ட்ரோலாக பந்து வீசக்கூடியவர். பந்தை சிறப்பாக கட் செய்யக்கூடியவர். அதனால்தான் கபில்தேவும் மூன்று ஸ்பின்னர்களுமே பந்து வீச்சாளர்களாக இருந்த, இந்தியாவில் நடந்த பல டெஸ்ட் மேட்சுகளில் மொஹிந்தர் அமர்நாத் இரண்டாவது ஓவரை வீசுவார்.

பந்துவீச்சாளர்கள் பொதுவாக பந்துவீச ஆரம்பிக்கும்போது மெதுவாக ஓட ஆரம்பித்து கிரீஸுக்கு வந்து சேரும் போது முழுவேகத்தை அடைந்து பந்தை வீசுவார்கள். சிலர் அம்பயரின் இடுப்பளவுக்கு கூட மேலெழும்பி பந்தை ஆக்ரோஷமாக வீசுவார்கள். ஆனால் மொஹிந்தரோ தலைகீழ். மெதுவாக ஓட ஆரம்பித்து, வேகத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்து, கிரீஸை நெருங்கும் போது கிட்டத்தட்ட நின்று கொண்டு பந்தை வீசுவார். முதன்முதலாக அவர் பந்தை சந்திக்கும் பேட்ஸ்மென்கள் எதற்கு இவர் ஓடிவந்தார் என ஆச்சரியப்பட்டுக் கொண்டேதான் ஆடுவார்கள்.

அந்த காலகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொண்டு பல விழுப்புண்களை வாங்கியவர் மொஹிந்தர். ரிச்சர்ட் ஹேட்லி அவர் மண்டையை உடைத்தார், இம்ரான் மயக்கமடையச் செய்தார், மார்ஷல் அவர் பல்லை உடைத்தார், தாம்சன் அவர் முகவாயை பெயர்த்தார். ஆனாலும் ஹூக் ஷாட் ஆட தயங்கியதேயில்லை மொஹிந்தர்.

இவ்வளவு சிறப்பு இருந்தும் ஒவ்வொரு முறையும் அவர் அணிக்குத் தேர்வாவது நிச்சயமில்லாமலேயே இருக்கும். 1969ல் அவர் அணிக்குத்தேர்வானார். ஆனால் சில காலம் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதே போல 80களிலும் அவருக்கு வாய்ப்பு கண்ணாமூச்சியாகவே இருந்தது. வாய்ப்பு கிடைக்காவிட்டால் உள்நாட்டுப்போட்டிகளில் சிறப்பாக ஆடி, தன் திறமையை நிரூபித்து வேறு வழியில்லாமல் தேர்வாளர்களை தன்னை தேர்ந்தெடுக்கச் செய்து விடுவார். கிரிக்கெட் குடும்ப பாரம்பரியத்தில் வந்தும் அவருக்கு காட்பாதர் யாரும் இல்லை. அதற்கு காரணம் அவர் கேட்கும் நேர்மையான, நியாயமான கேள்விகள். அந்த நேர்மைக்குப் பயந்து அவரை ஒதுக்கி வைக்கவே பார்த்தது கிரிக்கெட் வாரியம். கடைசியாக அவர் கிரிக்கெட் வாரியத்தைப் பற்றி சொன்ன ”முட்டாள்களின் கூடாரம்” என்ற வார்த்தைப் பிரயோகம் அவருக்கு கதவுகளை நிரந்தரமாக மூடியது.

இந்திய அணியின் பீனிக்ஸ் பறவை என்று வர்ணிக்கப்பட்ட மொஹிந்தரின் கிரிக்கெட் கேரியர் சொல்வது ஒன்றுதான்.
நீங்கள் பணிபுரியும் இடத்தில், உங்கள் வளைந்து போகா தன்மைக்காகவும், நேர்மையான கேள்விகளுக்காகவும் எந்த முக்கிய குழுவிலும் இடம் கிடைக்காவிட்டால் சோர்ந்து போகாதீர்கள். உங்கள் திறமையை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருங்கள். வேறு வழியில்லாமல் உங்களை அவர்கள் தேர்வு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தை உருவாக்குங்கள் என்பதுதான்.