April 26, 2016

பிரசாந்த்

வைகாசி பொறந்தாச்சுவில் பிரசாந்த் அறிமுகமான போது அவருக்கு 50,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இது எந்த அறிமுக நாயகருக்கும் கொடுக்கப்படாத சம்பளம் என்று இண்டஸ்டிரியில் பேசிக்கொண்டார்கள். அலைகள் ஓய்வதில்லையின் இன்னொரு வடிவமான இந்தப் படம் தேவாவின் பாடல்கள், ஜனகராஜின் காமெடி துணை நிற்க பல தியேட்டர்களில் 200 நாட்களைக் கண்டது. அதன்பின்னர் தொடர்ந்து அவருடைய தலைமுறை நடிகர்களில் பல முதல்களை பிரசாந்த் கண்டு கொண்டே வந்தார்.

மணிரத்னம்,பாலுமகேந்திரா,ஷங்கர் என பெரிய இயக்குநர்களின் படங்களில் முதலில் நடித்த இளைய தலைமுறை நடிகர், உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த முதல் தமிழ் நடிகர் (இன்று வரைக்கும் பார்த்தால் கூட மூன்றோ நான்கோ பேர்தான் வருவார்கள்), இணைய தளத்தை பயன்படுத்தி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்த நடிகர், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்திய நடிகர் என்று 90ல் அறிமுகமான பிரசாந்த் 2000 வரை செய்திகளில் இருந்து வந்தார்.

செம்பருத்தி படம் வெளியான நேரத்தில் எல்லாம் பிரசாந்துக்கு பெரிய கிரேஸ் ரசிகர்,ரசிகைகளிடம் இருந்தது. பாலுமகேந்திராவின் வண்ண வண்ன பூக்கள் படத்திலும் செம்பருத்தியிலும் பிரசாந்த் அணிந்து நடித்திருந்த டி சர்ட்கள் இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலம். 90களில் ஆசை,காதல் கோட்டை மூலம் அஜீத்தும் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை மூலம் விஜய்யும் தலையெடுக்கும் வரை அரவிந்த்சாமி,பிரபுதேவா மற்றும் பிரசாந்த் தான் இளைய தலைமுறையின் நாயகர்களாக இருந்து வந்தார்கள். அதில் அரவிந்த்சாமியை ஒரு மேனேஜர் போலவே பார்த்தது ரசிகர் சமூகம். பிரபுதேவாவை ஒரு நாயகனாக பார்த்ததை விட டான்ஸராகத்தான் ரசிகர்கள் பார்த்தார்கள். எனவே அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டாராகும் வாய்ப்பு ஒரு கட்டத்தில் பிரசாந்துக்கும் இருந்தது.

நடனமும் ஆடக்கூடியவர், சண்டைக் காட்சிகளும், நாலு பேரை அடித்தால் நம்பும்படி இருக்கும். நிறம், முக அமைப்பு ஒக்கே என இருந்தாலும், ஒரு ஆங்கிரி யங் மேன் என இளைஞர்களுக்கு பிடிக்கக் கூடிய நடிகராய் பிரசாந்தால் மாறமுடியவில்லை. இளைஞர்களைக் கவரும் பாடி லாங்குவேஜும், குரலும் அவரிடம் இல்லை. ஆணழகன் படத்தில் பெண்வேடம் போட்டது போல் சவாலான வேடங்களை அவர் ஏற்று நடித்தாலும், மற்ற வேடங்களில் அவரால் பெரிய வித்தியாசம் காட்ட முடியவில்லை.

ஜீன்ஸ், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர் என அவ்வப்போது ஹிட்டுகளை கொடுத்து வந்தாலும் பிரசாந்துக்கு என ஒரு ஓப்பனிங் அமையவேயில்லை. இயக்குநர்களைப் பொருத்தே அவருடைய ஓப்பனிங் அமைந்தது. அஜீத், விஜய்க்கு அடுத்து மூன்றாவது பிரசாந்த் என்று ஒரு வரிசை வந்தது. அதுவும் சூர்யாவின் வெற்றிக்குப் பின்னால் இல்லாமல் போனது.

பிரசாந்துக்கு இருந்த தலையாய பிரச்சினைகளில் ஒன்று பப்ளியாக இருப்பது. சாக்லேட் பாய் ஹீரோவை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. ரசிகைகளுக்குப் பிடித்தாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மாறிவிடுவார்கள். ஒடுக்கு கன்னம், கறுப்பு அல்லது மாநிறம், மீசை இவையெல்லாம் தமிழ் ரசிகர்கள் ஒருவரை ஹீரோவாக ஆராதிக்க தேவை. எம்ஜியார் கூட முதலில் கறுப்பு வெள்ளைப் படங்களில் நடித்து ஓரளவு மக்கள் மனதில் செட்டில் ஆன பின்னர்தான் கலர் படங்களில் நடித்தார். அவர் சின்ன வயதில் கலர் படத்தில் நடித்திருந்தால் இவ்வளவு பெரிய ஹீரோவாக ஆகியிருக்க மாட்டார் எனச் சொல்வார்கள். எவ்வளவோ திறமைகள் இருந்தும் கமல்ஹாசன் இன்றுவரை போராட வேண்டி இருக்கிறது. சிவப்பாக இருந்து ரசிகர் மனம் கவர்ந்த இன்னொருவரான அஜீத்தை எடுத்துக் கொண்டால், அவரும் கூட அழகாயிருந்த போது கூட இவ்வளவு கிரேஸ் இல்லை. சற்று குண்டாகி, நரை விழுந்து அழகு சற்று குறைந்த பின்னால் தான் அவர் பின்னால் பெரும் கூட்டம் கூடியது.

அதனால் பிரசாந்தால் நிறைய ரசிகர்களை கவர முடியவில்லை. மேலும் ஏற்று நடிக்கும் வேடங்களும், ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் வரும் வரை ஏழைப் பங்காளன் ரோல்களாக இருக்க வேண்டும். பணக்கார ரோல்களில் நடித்தால் சட்டென்று ரசிகர்களிடம் இருந்து அன்னியப்பட்டு போய்விடுவார்கள். பிரசாந்த் தன் பெரும்பாலான படங்களில் மல்டி மில்லியனராக நடித்ததும் ரசிகர்களிடம் இருந்து அவர் அன்னியப்பட ஒரு காரணம்.

மக்கள் தொடர்பிலும் பெரிதாக கோட்டை விட்டனர் பிரசாந்தும் அவர் தந்தை தியாகராஜனும். பிரசாந்த் மட்டுமல்ல அரவிந்த்சாமி,பிரபுதேவா போன்றோரும் கூட. ஆரம்ப காலத்தில் பிரசாந்துக்கு கிடைத்த தொலைக்காட்சி பேட்டி வாய்ப்பையெல்லாம் படு செயற்கையாகப் பேசி இமேஜைக் குறைத்துக்கொண்டார். ஆனால் இவர்களுக்குப் பின் வந்த விஜய், தன் தந்தையின் வழிகாட்டுதல் படி அரிசி மூட்டை வழங்குதல், ரிக்ஷா காரர்களுக்கு உடை வழங்குதல் என ஏழைப்பங்காளன் இமேஜை திட்டமிட்டு வளர்த்தார். தொடக்கத்தில் இதில் தவறு செய்து கொண்டிருந்த அஜீத்தும் பின்னர் பக்காவான பி ஆர் ஓ டீமுடன் களமிறங்கினார். ஆனால் பிரசாந்த் தன் திருமணம் தோல்வி அடைந்ததைக் கூட மீடியாவில் சரிவர ஹேண்டில் செய்யாமல் தோல்வி அடைந்தார்.

இன்னொரு விஷயம் ஜாதி. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவரை தமிழகம் முழுவதும் சேர்ந்து ஆராதிக்க அவர் இந்த மாநிலத்தைச் சாராதவராக இருக்க வேண்டும் அல்லது சிறுபான்மை மதமாய்/ஜாதியாய் இருக்க வேண்டும். முக்கியமாக என்ன ஜாதி என்றே தெரியாமல் இருத்தல் சிறப்பு. ஆதிக்க ஜாதியாய் இருந்தாலும் முழு ஆதரவு கிட்டாது, தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்தால் இன்னும் மோசம். எப்படித்தான் அந்த செய்தி பரவுமோ எனத் தெரியாது, சுத்தமாக ஒதுக்கி விடுவார்கள் ஆதிக்க ஜாதி ரசிகர்கள். எனவே ஓப்பனிங் என்பது மிகக் குறைவாகவே இருக்கும். படம் நன்றாக இருந்தால்தான் அவர்கள் படம் பிழைக்கும்.

சிவப்பு நிறம், பணக்கார களை, தவறான மக்கள் தொடர்பு, ஜாதி மட்டுமே பிரசாந்தின் வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் கிடையாது. அவை ஒரு சில காரணிகளே. அவர் ஏற்று நடித்த வேடங்களில் நல்ல நடிப்புத்திறமையைக் காட்டி தன்னை ஒரு நல்ல நடிகனாக நிலைப்படுத்தி இருந்தால் நல்ல உயரங்களுக்குச் சென்றிருப்பார்.

3 comments:

ROBOT said...

//அஜீத், விஜய்க்கு அடுத்து மூன்றாவது பிரசாந்த் என்று ஒரு வரிசை வந்தது. அதுவும் சூர்யாவின் வெற்றிக்குப் பின்னால் இல்லாமல் போனது. //

True but u left vikram in this :)

க கந்தசாமி said...

இவரால் ஒரு மாஸ் ஹீரோ ஆகவே முடியவில்லை

குட்டிபிசாசு said...

முரளி,

அஜித், விஜய் விட ஒப்பீட்டளவில் பிரசாந்த் நல்ல நடிகர். அவரால் மக்கள் மனதில் இடம்பெற முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சில: பிராசாந்திடம் அளவுக்கதிகமான பெண்தன்மை உண்டு. அவருடைய நடை,உடை,பாவனை அப்படித்தான் இருக்கும். பரதம் பயின்றதால் அவ்வாறு இருக்கலாம் என ஒரு கருத்து உண்டு. தவறான பழக்கவழக்கங்கள், போதையஸ்து இத்யாதி.

நீங்கள் சொன்ன ஒரு காரணத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு சோப்பு டப்பா, பக்கெட் இப்படி எதையாவது கொடுத்து ஒரு பரோபகாரி இமேஜ் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் படித்தவன் கூட வாயிற்கு வந்தது போல பேசுவான்.

ரஜினியை மனதில் வைத்துக்கொண்டு நீங்களாக சில மாஸ் கதாநாயக லட்சணங்களை சொல்கிறீர்கள். ஒப்புக்கொள்வது போல் இல்லை.

உண்மையில் எம்.ஜி.ஆரைவிட எண்ணிக்கை அடிப்படையில் அதிக வெற்றிகள் கொடுத்தவர் சிவாஜி. ஆனால் அவர் கதாநாயக இமேஜ் வைத்துக்கொள்ளவில்லை. தன்னுடைய மூன்றாவது படத்திலேயே மூன்று பெண்களுக்கு தந்தையாக நடித்தார்.