தமிழ்சினிமா
தொடங்கிய காலத்தில் இருந்து பல ஆண்டுகள் வரை கதாநாயகனுக்கு தேவையான முக்கிய தகுதியாக
நடனம் இருந்ததில்லை. எம்.கே.தியாகராஜா பாகவதர்,
பி யூ சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம் என ஆரம்ப காலகட்டத்தில்
பாடல்களைப் பாடுவது தகுதியாகவும், பின்னர், எம்ஜியார், சிவாஜி கணேசன், ஜெமினி
கணேசன்,எஸ் எஸ் ராஜேந்திரன் காலத்தில் நடிப்பு, தோற்றம், வாள் வீச்சு போன்ற சண்டைக்காட்சிகள் அறிந்திருத்தல்
ஆகியவை தகுதியாகவும் பார்க்கப்பட்டன. நடனத் திறமையானது ஒரு நடிகனுக்கு
தேவையான முக்கிய திறமையாக பார்க்கப்படவில்லை. கதாநாயகி ஆடும்போது
தேவையான முக பாவனைகளை காட்டினால் போதும் என்ற நிலை இருந்தது.
வைஜெயந்தி
மாலா, லலிதா-
பத்மினி –ராகினி என நன்கு நடனம் ஆடத்தெரிந்த கதாநாயகிகள்
திரையுலகில் இருந்த போது அவர்களுக்கு ஈடாக நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் அப்போது இல்லை.
சந்திரபாபு, நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள்
மட்டும் மேற்கு உலக நடன
பாதிப்பில் நடனமாடி வந்தார்கள்.
அடுத்து
வந்த கமல்ஹாசன் – ரஜினிகாந்த் காலகட்டத்தில் பொதுவாக நடனத்தை நாயகிகளுக்கும், சண்டைக்காட்சிகளை நடிகர்களுக்கும் பிரித்துக் கொடுத்திருந்தார்கள் அப்போதைய
இயக்குநர்கள். இந்தச் சூழ்நிலையில் நன்கு நடனம் ஆடத்தெரிந்த கமல்ஹாசன்
போன்றோர் கூட அதை ஒரு தனித் திறமையாக புரஜெக்ட் செய்ய முடியவில்லை. சலங்கை ஒலி போல ஓரிரு படங்களில் மட்டும் அதைக் காட்ட முடிந்தது. சுற்றியுள்ள அனைத்து நடிகர்களும் நாயகி ஆடிக் கொண்டிருக்கும் போது நடந்து கொண்டோ,உடற்பயிற்சி செய்து கொண்டோ அல்லது முகத்தால் மட்டும் நடனமாடிக் கொண்டிருக்கும்
போது, அவரும் தன் எல்லையை சுருக்கிக் கொண்டார்.
80களின் இறுதி வரை இந்தப் போக்குதான் இருந்தது. புலியூர்
சரோஜா, தாரா, கிரிஜா, கலா மாஸ்டர் போன்றவர்கள் ஹீரோயின் ஆடும் நடனத்திற்குத்தான் பெரும்பாலும் ஸ்பெசலிஸ்டாக
இருந்தார்கள். ஜோதி லட்சுமி, ஜெயமாலினி,சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ
சாந்தி என கவர்ச்சி நடனம் ஆடும் நடிகைகள் தொடர்ந்து பீல்டில் இருந்து கொண்டே இருந்தார்கள்.
சின்னா போன்ற மாஸ்டர்கள் கூட கதாநாயகிகளுக்கு நடனம் அமைக்க முயற்சி எடுத்துக்
கொண்ட அளவுக்கு நாயகர்களுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஜான் பாபு,
சுந்தரம் மாஸ்டர் மட்டும் ஓரளவு நாயகர்களுக்கும் சிரத்தை எடுத்துவந்தனர்.
இந்நிலையில்
தான் 90கள் துவங்கியது.
சுந்தரம் மாஸ்டரின் மகன்கள் பிரபுதேவாவும், ராஜு
சுந்தரமும் நடனம் அமைக்கத் தொடங்கினார்கள்.
91 ஆம் ஆண்டு வெளியான இதயம் படத்தில் “ஏப்ரல் மேயிலே பசுமையே
இல்லே” பாடலுக்கு பிரபுதேவாவும் ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
பாடலுக்கு ராஜு சுந்தரமும் ஆடியிருந்தார்கள். ஏப்ரல் மேயிலே பாடலில்
வந்த நடனம் எல்லோருக்கும் பிடித்தமானதாய், புதிதாய் இருந்த்து.
பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில்
அதுதான் அப்போது பேச்சாய் இருந்த்து.
92 ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு
வெளியான சூரியன் மற்றும் ரோஜா ஆகிய படங்கள் புதுவிதமான மூவ்மெண்ட்களோடு வந்து ரசிகர்களை
ஆச்சரியப்படுத்தின. அதிலும் குறிப்பாக சூரியனின் “லாலாக்கு டோல் டப்பி மா” பாடலில் பிரபுதேவா ஆடிய நடனம்
எல்லோரையும் கவர்ந்தது. சூரியன் படத்தின் ஹைலைட்டாக அந்த நடனம்
அமைந்தது. ரோஜாவில் ராஜு சுந்தரம் ஆடிய ருக்கு மணியே ருக்கு மணியேவுக்கும்
நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த பாடலில் பாட்டிகளை ஆட வைத்த்தாக
பலர் முகம் சுளித்தாலும் இளைஞர்கள் ஆடிய ஆட்டம்
அனைவரையும் கவர்ந்தது.
இதற்கடுத்த
வெளியான வால்டேர் வெற்றிவேலில் பிரபுதேவா ஆடிய சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
பாடலும், ஜெண்டில்மேனில்
ஆடிய சிக்கு புக்கு ரயிலேவும் தமிழ்சினிமாவின் ஆட்டத்தரத்தை ஒரு படி உயர்த்திவிட்டன.
அதன் பின்னர் தமிழ் ரசிகர்களுக்கு நடனத்தில் நளினமும், வேகமும் அத்தியாவசியமாகின.
பெண்கள்
நடனம் ஆடும் போது நளினம் தான் முக்கியம் அங்கே வேகத்துக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. அதி வேகத்துடன் ஆடினால்
சில அசைவுகள் விரசமாகக் கூட முடியும். ஆனால் ஆணின் ஆட்டத்தில்
வேகம் அதிகமாக அதிகமாக பார்ப்பவரும் எழுந்து ஆடிவிடுவார்கள். பிரபுதேவா ஆண்களின் ஆட்டத்தின் வேகத்தை கூட்டினார். பெண்களின்
ஆட்டத்
திலும் நளினம் கெடாது வேகத்தைக் கூட்டினார்.
இந்து
மற்றும் காதலன் ஆகிய படங்கள் பிரபுதேவாவின் நடனப் புகழை இன்னும் ஒரு படி உயர்த்திய
படங்கள். இந்தப்
படங்களில் கிளாசிக்கல், கானா உள்ளிட்ட எல்லா விதமான நடனங்களையும்
ஆடியிருப்பார். அப்போதைய கல்லூரி விழாக்களில் கடவுள் வாழ்த்து
கூட இருக்குமோ என்னவோ தெரியாது ஆனால் முக்காபுலா கண்டிப்பாய் இருக்கும்.
இதனால்
அதுவரை டான்ஸ் என்று பெயர்பண்ணிக்கொண்டிருந்த பல நடிகர்கள் கேலிக்குள்ளானார்கள். மிமிக்ரி செய்யும் கலைஞர்கள்
அவ்வாறு மெதுவாக ஆடுபவர்களை மேடையில் கிண்டல் செய்யத் துவங்கினார்கள். ஒரு நாயகன் வந்தால் அவனுக்கு நடனம் ஆடத் தெரியுமா என்று பார்க்கும் நிலையும்
இவர்களால் வந்தது.
90கள் ஆரம்பித்த போது இன்னொரு மாற்றமும் நடந்தது. அதுதான்
35 எம் எம்மில் படம் எடுத்துக் கொண்டிருந்த பலரும் சினிமாஸ்கோப்புக்கு
மாறினார்கள். அகன்ற திரையில் நாயகனும் நாயகியும் ஆடினால் ஏகப்பட்ட
காலியிடம் மீதமிருக்கும். நன்கு நடனம் ஆடத்தெரிந்தவர்கள் என்றால்
அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் ஆவரேஜாக ஆடினால் கூட பிரேம் நன்றாக வராது. எனவே
இடைவெளியை நிறைக்க குரூப் டான்சர்களைப் பயன்படுத்தினார்கள். 90களை குரூப் டான்சர்களின் பொற்காலம் என்று கூடச் சொல்லலாம். படத்திற்கு குறைந்தது மூன்று பாடல்களாவது குரூப் டான்சர்கள் உள்ள பாடல்களாக
அமைந்து விடும்.
இந்த 90களில் ரஹ்மான் அறிமுகமாகி
வேகமான பீட் உள்ள பல பாடல்களை அளித்தார். அந்த பாடல்களுக்கு நல்ல
நடனம் ஆடத்தெரிந்த நடிகர்கள்
தேவைப்பட்டார்கள். அதே போல தேவாவும் வேகமான பீட்கள் உடைய கானா
பாடல்களை தொடர்ந்து கொடுத்து வந்தார். இதற்கும் நன்றாக நடனம்
ஆடத் தெரிந்தவர்கள் தேவைப்பட்டார்கள், இதனால் நாயகனுக்கு இடது
புறத்திலும் வலது புறத்திலும் நன்கு நடனம் ஆடும் நடன உதவியாளர்கள் ஆட்த் தொடங்கினார்கள்,
இந்த காலகட்டத்தில் சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் வந்துவிட்ட படியால்
மீண்டும் மீண்டும் அந்தப் பாடல்கள் ஒளிபரப்பாகத் துவங்கின, இதனால்
மக்கள் மனதில் உதவியாளர்களின் முகம் பதியத்துவங்கியது. அந்தப்
பாட்டுல ஆடினானே அவன் தான் இதுலயும் ஆடுறான் என்றெல்லாம் பேசத் துவங்கினார்கள்.
இந்த கியுரியாசிட்டியை
அறிந்த பத்திரிக்கைகள் கூட அவர்களைப் பேட்டி எடுத்து போடத்துவங்கினார்கள்., மிஸ்டர் ரோமியோ,
ராசய்யா, நினைவிருக்கும் வரை என பிரபுதேவாவின்
நடனங்கள் தொடர்ந்து ஹிட்டாக எல்லா நடிகர்களும் நடனம் கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிலை
ஏற்பட்டது. நினைவிருக்கும் வரையில் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பாடலும், காத்தடிக்குது காத்தடிக்குது பாடலும், படச் சூழலில் கற்பனையைக் கலந்து படமாக்கப்பட்டிருந்தது.
இந்த மாற்றத்தை
பி சி ஸ்ரீராமால் ஒளிப்பதிவுத் துறைக்கு
80களின் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்துடன் ஒப்பிடலாம். பாலுமகேந்திரா, அசோக் குமார் போன்ற திறமையான கேமிராமேன்கள்
இருந்தும் ஸ்ரீராமின் வருகைக்குப் பின்னரே யார் காமிரா என்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்ட்து.
பட ஒளிப்பதிவின் தரமும் படிப்படியாக கூடியது. அதே
போலத்தான் கமல்ஹாசன் போன்றோர் இருந்தாலும் பிரபுதேவாவின் வருகைக்குப் பின்னரே நடன இயக்குநர்களும்
தமிழக வீடுகள் அறிந்த பெயரானார்கள்.
90களின் மத்தியில் இன்னொரு போக்கும் தொடங்கியது. அதுதான்
கிளைமாக்ஸுக்கு முன்னால் வரும் பாடலை வேகமான தாளக்கட்டில் வைப்பது. மெதுவான
தாளக்கட்டாய் இருந்தால் எந்தரித்து புகை பிடிக்க போய்விடுவார்கள் என இந்த தந்திரத்தைக்
கையாண்டார்கள் இயக்குநர்கள். இந்தப் பாடலை நாயகனே ஆடினால்தான்
ரசிகர்களை உட்கார வைக்க முடியும் என்ற நிலையில் நாயகனுக்கு நடனத்திறமை அவசியமாகிப்
போனது.
இந்த நடன
மறுமலர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் பதிந்த நாயகர்களில் விஜய்
முக்கியமானவர். வேகமான நடனமே அவருக்கு ஆரம்பகாலத்தில் ஒரு அடையாளத்தைத் தந்தது. இந்த மாஸ்டர்களால் நடந்த இன்னொரு மாற்றம், கவர்ச்சிப்
பாடல்களுக்கு ஆட என இருந்த நடிகைகள் குறைந்தது. 80களில் எல்லாம்
கமர்சியல் படங்களில் நிச்சயம் ஒரு கவர்ச்சி நாயகி ஆடும் பாடல் இருக்கும். படம் இரண்டாம், மூன்றாம் ரவுண்ட் ஓடும் இடங்களில் ஒட்டப்படும்
போஸ்டர்களில் அவர்களின் படமே பிரதானமாய் இருக்கும். ஆனால்
90களில் நாயகிகளே அவர்களுக்கு இணையாக கவர்ச்சியாக ஆட ஆரம்பித்ததால் கவர்ச்சி
நாயகிகளுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. ரம்பா,சிம்ரன் போன்ற நாயகிகளுக்கு இவ்வகை நடனம் மூலம் நல்ல புகழ் கிடைத்தது.
இந்த நடனங்கள்
சமூகத்தில் எல்லாப் பகுதியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். கல்லூரி கலைவிழாக்களில்
போக் டான்ஸ், வெஸ்டர்ன் டான்ஸ் போன்றவை மிக முக்கியம் என்ற நிலை
ஏற்பட்ட்து. அதற்கு முன் நாடகம்,இசை நிகழ்ச்சி,
பட்டி ம்ன்றம், வழக்காடு மன்றம்,கரகாட்டம் என இருந்த கோவில் திருவிழாக்களில் ஆட்லும் பாடலும் நிகழ்ச்சி அத்தியாவசியமான
ஒன்றாயிற்று. திருவிழாக்களின் ஹைலைட்டே ஆடல் பாடல் நிகழ்ச்சிதான்
என மாறியது. நாயகர்களைப் போல வேடமிட்டு அவர்களின் மேனரிசங்களோடு
ஆடினாலும், நல்ல நடனங்களை ஆட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இந்த நடன
மறுமலர்ச்சியால் பல பாதிப்புகளும் உண்டு.
முந்தைய கால கட்டப் படங்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் ஆடும் போது சிறு
இடைவெளி இருக்கும். 90களுக்குப் பிறகு அது வெகுவாக குறைந்தது.
ஏன் இல்லாமல் கூடப் போனது. அங்கங்கள் உரசுதல் போன்றவை
மட்டுமல்லாது ஏராளமான விரசமான அசைவுகளும் புகுத்தப்பட்டன. தொலைக்காட்சியில்
சத்தமில்லாமல் இந்த நடனங்களைப் பார்க்கும் போது விரசம் அதிகரித்துத் தோன்றும்.
தொடர்ச்சியாக இந்நடனங்களைப் பார்க்கும் சமுதாயத்தில் கலாச்சார மதிப்பீடு
சற்று குறைந்து விடுகிறது. உதாரணத்திற்கு ஆண்/பெண்களின் பின்புறத்தை பார்வையாளனை நோக்கி ஆபாசமாக அசைக்கும் நடனங்கள் அதிகரித்துக்
கொண்டே வருகின்றன.
பிரபுதேவா, ராஜு சுந்தரத்தின் உதவியாளர்களான
திணேஷ், ஏபெல். ஜான் மட்டுமல்லாது ராகவேந்திரா லாரன்ஸ், கல்யாண் என தொடர்ச்சியாக புது நடன இயக்குநர்கள் தொடர்ந்து அறிமுகமாகி,
அதை ஒரு பாரம்பரியமாகவே ஆக்கிவிட்டார்கள். தற்போது
தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நடனத்தின் அடிப்படையிலான ரியாலிட்டி ஷோக்களுக்கும்
இந்த 90களில் நடனத்துறையில் ஏற்பட்ட மாற்றமும்தான் காரணம்.
2 comments:
தமிழ் சினிமாவில் நடனம் குறீத்த அலசல் அருமை!உண்மையில் பிரபுதேவா இந்த நடன மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பது மிகவும் பொருந்தும்.
***உதாரணத்திற்கு ஆண்/பெண்களின் பின்புறத்தை பார்வையாளனை நோக்கி ஆபாசமாக அசைக்கும் நடனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.***
பொதுவாக பெண்கள் (நடனத்தின் போதோ இல்லைனா "நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குதுனு நடக்கும்போதுகூட) பின்பறத்தை ஆண்கள் பார்த்து ரசிப்பதுதான் நம்ம பழைய கலாச்சாரம். இப்போ ஆண்கள் பின்புறத்தை பெண்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்களோ? பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கணும்னா இப்படியெல்லாம் செய்யணும் போல! எல்லாத்துலயும் நாங்க உங்களுக்கு சமம்னு காட்டுவது எப்படி?!
கலாச்சாரம் நாறிக்கொண்டு போகும்போதமிந்தக் காமெண்ட்க்கும் வருண் அசிங்கமா காமெண்ட் எழுதுறான்னு எவனாவது சொன்னான்னா அவனை என்ன செய்யலாம்? கண்ட துண்டமா வெட்ட வேணாம், அவனை? :)
Post a Comment