May 05, 2016

ஸ்ரீகாந்த்

ஐபிஎல்-லில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாண்டுகளுக்கு விலக்கப்பட்டதில் அந்த அணியின் உரிமையாளர், ஸ்பான்ஸர்கள், பயிற்சியாளர்கள், வீரர்களை விட மிக அதிகமாக கவலைப்பட்ட ஓர் ஆத்மா இருக்குமென்றால் அது சென்னை நகரின் கிரிக்கெட் ரசிக ஆத்மாவாகத்தான் இருக்க முடியும். கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே இந்த விளையாட்டைப்பற்றி அதிகமான தகவல்களும், நுணுக்கங்களும் அறிந்த ஏராளமான ரசிகர்கள் ஒரு ஊரில் இருக்கிறார்களென்றால் அது சென்னையாகத்தான் இருக்கும்.

2001-ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில், பாலோஆன் வாங்கி, டெஸ்ட் மட்டுமல்லாது சீரிஸையையே இழக்கும்நிலையில், விவிஎஸ் லக்ஸ்மன் 281 ரன்களும், ராகுல் டிராவிட் 180 ரன்களும் குவித்து ஒருநாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்த நாளில்தான் சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் மகத்துவத்தை நான் புரிந்து கொண்டேன்.

அன்று வேலை நாள். இந்த அபார ஆட்டம் பற்றி கேள்விப்பட்ட, வேலைக்குச் சென்றிருந்த எல்லோரும் ஹைலைட்ஸ் பார்க்க பெரும் ஆவலுடன் இருந்தார்கள். நாங்கள் இருந்த மேன்சனில் டிவி பார்க்க பிளாக் டிக்கெட் கொடுக்கும் அளவுக்குக் கூட்டம். கிட்டத்தட்ட திருவல்லிக்கேணி மேன்சன் முழுவதும் இதே கதைதான். ஹைலைட்ஸ் முடிந்ததும் எல்லோரும் பேசிக்கொண்டே டீ குடிக்க கிளம்பினோம். அந்த ஏரியா முழுவதுமே அந்த ஆட்டத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். டீக்கடையில் இருந்த சிலர் இதற்குமுன் இதுபோல நடந்த நிகழ்வு, இம்மாதிரியான ஆட்டங்கள், லக்ஸ்மனின் ஷாட் செலக்ஷன் என சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்தநாள் வந்த எல்லா முன்னணி ஆங்கில நாளிதழ்களிலும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த பழைய ஆட்டங்கள், நுணுக்கங்கள் எல்லாம் அப்படியே பிரபல ஆட்டக்காரர்கள்/நிபுணர்கள் எழுதும் பத்திகளில் வந்திருந்தது.

இந்த 20-20 மேட்சுகளை விட்டுவிடுங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பேச நேரமிருக்காது. கூச்சலும் அதிகம் இருக்கும். போதாக்குறைக்கு இசை, நடனம் வேறு. சேப்பாக்கத்தில் ஒருநாள் ஆட்டம் பார்க்க வேண்டும். நம் கண்களை ஆட்டத்துக்கும் காதுகளை அருகில் இருப்பவர்களுக்கும் கொடுத்து விடவேண்டும். எவ்வளவு தகவல்கள் கிடைக்கும் தெரியுமா? இந்த பிளேயர், எந்த ரஞ்சி அணிக்கு ஆடினார், அவரின் பலவீனம் என்ன? பலம் என்ன? என பேசிக் கொண்டே இருப்பார்கள். உலகின் அத்தனை பிளேயர்களின் ரெக்கார்டும் அத்துபடி அவர்களுக்கு.

அதுபோக பெரும்பாலான ஐபிஎல் டீம்களில் கோச்சிங் ஸ்டாப்பாக இருப்பது சென்னை பிளேயர்கள் தான். இதன்மூலம் சென்னை கிரிக்கெட் பிளேயர்களின் கிரிக்கெட் தொடர்பான அறிவை தெரிந்து கொள்ளலாம். டெல்லி அணிக்கு சேகர், பெங்களூரு அணிக்கு பரத் அருண், மும்பை அணிக்கு ராபின் சிங், ஐதரபாத் அணிக்கு கன்சல்டண்டாக ஸ்ரீகாந்த் என தங்கள் பங்கை ஆற்றிவருகிறார்கள். ஸ்ரீதரன் ஸ்ரீராம் டெல்லி அணிக்கு முன்பு துணை கோச்சாக இருந்தார். அது மட்டுமல்ல உலகுக்கே கோச்சுகளை சப்ளை செய்யும் ஆஸ்திரேலியா அணிக்கே பங்களாதேஷ் பயணத்திற்கு கோச்சாகவும், மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணியின் இந்திய பயணத்திற்கு கோச்சாகவும் இருந்த பெருமைக்குரியவர்.

இவ்வளவு இருந்தும் பெரும் சோகம் என்னவென்றால், சுதந்திரத்துக்குப் பின் சில ஆட்டக்காரர்கள் மட்டுமே இந்திய அணியில் தொடர்ச்சியாக ஆடும் வாய்ப்பை தமிழ்நாட்டின் சார்பில் பெற்றிருக்கிறார்கள். தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் வெங்கட்ராகவன், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த், ஆல்ரவுண்டர் ராபின்சிங், இப்போது அஸ்வின். லெக் ஸ்பின்னர் சிவராமகிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன், குமரன் என அவ்வப்போது இடம்பெற்று காணாமல் போனவர்களும் அதிகம்.

இவர்களில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஸ்ரீகாந்த் தனிரகம். பெரும்பாலானோர் ஆரம்ப ஓவர்களில் அதிரடியாக ஆடுவதை ஜெயசூர்யா - கலுவித்தரன இணை தொடங்கியதாகவே நினைப்பார்கள். அது 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இலங்கை கேப்டன் ரணதுங்காவால் கட்டமைக்கப்பட்டது. கீழ்வரிசை ஆட்டக்காரரான ஜெயசூர்யாவை ஓப்பனிங் இறங்கி ஆட வைத்தார். அது 96 உலகக் கோப்பையில் வெற்றிகரமான வியூகமானது. ஆனால், அதற்கு முன்னரே 92 உலகக் கோப்பையில் நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோ, மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் கிரேட் பாட்சை அதுபோல ஆட வைத்திருந்தார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருந்தார். நம் ஸ்ரீகாந்த் தான் இதற்கு முன்னோடி. அவர் 80-களிலேயே இந்தமுறையில் ஆடிவந்தார். அதை அப்போது ‘ஓவர் தி ஹெட்ஸ்’ ஆடுதல் என்று அழைப்பார்கள். ஓரிருவரைத் தவிர எல்லோரும் உள்வட்டத்தில் நிற்கும்போது, ஸ்ரீகாந்த் பந்துகளை அவர்களின் தலைக்கு மேல் அடித்து ஆடுவார்.

90-களில் எப்படி சச்சின் அவுட்டானால் டிவியை அணைத்து விடுவார்களோ, அதுபோல 80-களில் ஸ்ரீகாந்த் அவுட்டானால் பார்த்துக்கொண்டிருப்பவர்களில் முக்கால் வாசிப்பேர் எழுந்து வெளியே சென்று விடுவார்கள். அப்போது அவர்தான் பேட்டிங்கில் ஒரே எண்டர்டெயினர். அடுத்து மொஹிந்தர் அமர்நாத், திலீப் வெங்சர்க்கார், அசாருதீன், ரவிசாஸ்திரி என நிதானமான ஆட்டக்காரர்கள் வந்துவிடுவார்கள். கபில்தேவ் வேண்டுமானால் மக்கள் ரசிக்கும்படி அடித்து ஆடுவார். எனவே ஸ்ரீகாந்த் அவுட்டானால் டிவி ரூம் காலியாகிவிடும். சச்சின் தன் முதல் சில மேட்சுகளில் அடித்து ஆடும்போது அவரை அடுத்த ஸ்ரீகாந்த் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். ஆஸ்திரேலிய பெர்த்தில் சச்சின் சதம் அடித்த பின்னர்தான் அடுத்த ரிச்சர்ட்ஸ், அடுத்த பிராட்மென் என படிப்படியாக நகர்ந்தார்.

ஸ்ரீகாந்த் ஸ்கொயர் கட் அடிப்பதில் கில்லாடி. கவர் ட்ரைவ், ஸ்ட்ரெயிட் ட்ரைவ், மிட் விக்கெட் திசையில் அடிக்கப்படும் புல் எல்லாம் சிறப்பாக ஆடுவார். அவரது பலமே அற்புதமான கண் மற்றும் கை ஒருங்கிணைப்புத்தான். ஆட்டத்தில் பெரிய டெக்னிக் எல்லாம் இருக்காது. ஆப் ஸ்டம்புக்கு சற்று தள்ளி விழுந்து அவுட்ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு திணறுவார். அதேபோல ஷாட் செலெக்ஷன் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவையில்லாத பந்துகளில் கூட அவுட்டாகி வெளியே சென்றுவிடுவார். சேவாக்கை ஸ்ரீகாந்தின் வாரிசு என்று கூடச் சொல்லலாம். ஸ்பின்னரை நன்கு ஆடக்கூடியவர் ஸ்ரீகாந்த். சென்னையில் விளையாட்டாகச் சொல்வார்கள், ‘இங்க ஒரு தாத்தா கூட வாக்கிங் ஸ்டிக்கால ஸ்பின்னரை ஆடிவிடுவார்’ என்று. சென்னைக்காரர் ஸ்ரீகாந்த் ஆடாமல் இருப்பாரா? 87 உலகக்கோப்பை பைனலில் கேட்டிங் ரிவர்ஸ் ஸ்விப் ஆடி அவுட் ஆகி கோப்பையை இழந்து புகழ்பெறுவதற்கு முன்னரே, அந்தத் தொடரில் நியுசிலாந்து ஸ்பின்னர் தீபக் பட்டேலுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் எல்லாம் ஆடியவர் ஸ்ரீகாந்த். ஆனால், ஸ்பின்னர்கள் வரும்போது பெரும்பாலான மேட்சுகளில் அவர் இருக்கமாட்டார்.

களத்தில் ரிலாக்ஸாக இருக்கமாட்டார் ஸ்ரீகாந்த். தடுத்தாடுவதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. ஸ்ட்ரைக் ரொட்டேட் ஆகிக்கொண்டே இருந்தால்தான் அவரும் ரிதத்துடன் விளையாடுவார். பந்து வீச்சுக்கு இடையிலும் கூட ஸ்கொயர் லெக் திசையை நோக்கி நடப்பதும் திரும்புவதுமாக இருப்பார்.
பேட்ஸ்மென்களின் சொர்க்கமான இந்தியாவில் ஒரே ஒரு டெஸ்ட் செஞ்சுரிதான் ஸ்ரீகாந்த் அடித்திருக்கிறார் என்றால் அவரின் பொறுமையை நாம் அறிந்து கொள்ளலாம். இன்னொரு சதம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில். அப்போதைய கிரிக்கெட் பீல்டிங் தரத்துக்கு அவர் ஒரு நல்ல பீல்டர், பார்வர்ட் ஷாட் லெக்கில் நின்று பல நல்ல கேட்சுகளைப் பிடித்துள்ளார். அவ்வப்போது பந்து வீசி விக்கெட் எடுக்கவும் செய்வார்.

இந்தியா வென்ற 83 உலகக் கோப்பையிலும் சரி, 85 உலகத் தொடர் கோப்பையிலும் சரி அவரின் சிறப்பான பங்கு இருந்தது. 1987 உலகக் கோப்பை போட்டியில், 83-ல் பெற்ற கோப்பையை தக்கவைக்க வேண்டுமென்ற முனைப்புடனும், சொந்த நாட்டில் விளையாடும் அனுகூலத்துடனும் விளையாடிய இந்திய அணி, செமி பைனலில் இங்கிலாந்துடன் தோல்வி அடைந்ததும் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கபில்தேவ் நீக்கப்பட்டார். மும்பையின் திலீப் வெங்சர்க்கார் அணித் தலைவரானார். அவரும் ஓரிரு வருடங்கள்தான் நீடித்தார். அதன்பின் அந்தப் பொறுப்பு ஸ்ரீகாந்த்துக்கு வந்து சேர்ந்தது.

ஸ்ரீகாந்த்துக்கு முதல் சோதனையாக வந்தது பாகிஸ்தான் சுற்றுப்பயணம். இம்ரான், வாசிம், வக்கார் யூனுஸ் என பந்து வீச்சாளர்களும், மியாண்டட், சலிம் மாலிக், இஜாஸ், ரமீஸ் என பேட்ஸ்மென்களும் நல்ல பார்மில் இருந்த அணி. இந்திய அணியில் 16 வயது நிரம்பியிருந்த சச்சின் ஆச்சர்யகரமாக சேர்க்கப்பட்டிருந்தார். நல்ல பவுலர்களும் இல்லை. மனோஜ் பிரபாகர்தான் முக்கிய பந்து வீச்சாளராக அந்த அணியில் ஆடினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த டீமை வைத்துக் கொண்டு டெஸ்ட் தொடரை இழக்காமல் நாடு திரும்பினார் ஸ்ரீகாந்த். இது அந்தக் காலத்தில் பெரும் சாதனையாகக் கருதப்பட்டது.

அதற்குப் பின் பெரிய காரணம் ஏதுமின்றி ஸ்ரீகாந்த் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அசாருதீன் கேப்டன் ஆக்கப்பட்டார். அதன்பின் இரண்டாண்டுகள் ஆடி ஸ்ரீகாந்த் ஓய்வு பெற்றுக்கொண்டார். பின் இந்திய அணியின் செலக்டராக, மேனேஜராக பல பொறுப்புகள் வகித்து, தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
ஸ்ரீகாந்த் ஆடிய காலகட்டத்தில் தொடக்க ஆட்டக்காரருக்கு அவ்வளவு போட்டி கிடையாது. மத்திய வரிசையில் இடம்பிடிக்க பெரிய போட்டியே இருக்கும். தொடக்க ஆட்டத்தில் கவாஸ்கருக்கு ஓரிடம் நிரந்தரம். இன்னொரு ஆட்டக்காரருக்கு பெரிய போட்டி இல்லாமல் இருந்தது. சித்து, ராமன் லம்பா ஆகியோர் 80-களின் பிற்பகுதியில்தான் வந்தார்கள் என்றாலும் அவர்களும் மூன்றாம் இடத்துக்கும் கருத்தில் கொள்ளப்பட்டார்கள். இவ்வளவு ஏன் கவாஸ்கர் 87-ல் ஓய்வு பெற்றதும் தொடக்க ஆட்டக்காரருக்கு ஆள் இல்லாமல் அருண்லாலை எல்லாம் இறக்கிப் பார்த்தார்கள். அதன் பின்னரும்கூட பல ஆண்டுகள் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் நமக்கு அமையவே இல்லை. சேவாக் கூட மத்திய வரிசை ஆட்டக்காரராக நுழைந்து, பின் தொடக்க ஆட்டக்காரர் ஆனவர்தானே? ஏன், இன்றும் கூட டெஸ்ட்மேட்சுகளில் பலமான தொடக்க ஜோடி நமக்கு இல்லையே?

ஸ்ரீகாந்த்துக்குக் கிடைத்ததெல்லாம் அருமையான வாய்ப்புகள். இப்போது போல தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறும் காலமல்ல. இப்போது ஒரு பேட்ஸ்மெனின் டெக்னிக் தவறாக இருந்தால் அதை திருத்தக்கூட நேரமில்லாமல் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால், அப்போது போட்டித் தொடர்களுக்கு இடையே நல்ல இடைவெளி இருக்கும். ஸ்ரீகாந்த் தன் பலவீனங்களை திருத்த முயற்சி எடுத்ததே இல்லை. சில நடிகர்கள் நடிக்க வந்தது முதல் மார்க்கெட் அவுட்டாகும் வரை நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதைப் போல ஆரம்பக் காலத்தில் இருந்த திறமையுடனேயே ஓய்வுபெறும் வரையில் இருந்தார்.

சென்னைக்காரர், ஆகையால் அவருக்கு நல்ல கிரிக்கெட் மூளை. தேர்வாளராக, மேனேஜராக அதை அவர் நிரூபித்துள்ளார். நல்ல கவனிப்பாளர். பல பேட்டிகளில் அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் பின்னர் நடந்துள்ளன. தன் இடத்துக்குப் பெரிய போட்டி இல்லாததாலோ என்னவோ தன் ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் அவர் பெரிய கவனம் எடுத்துக் கொள்ளவில்லை போலும்.

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்! அருமையான அலசல்!