October 31, 2016

இயக்குநர் மனோபாலா

”நான் உங்கள் ரசிகன்” என்று ஒரு படம் 1985ஆம் ஆண்டு வெளியானது. அந்த ஆண்டு வெளியான சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளிலும் சரி, மற்ற பல்சுவை வார இதழ்களிலும் சரி அந்தப் படத்தின் ஸ்டில்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் அந்தப் படத்திற்கு செய்யப்பட்ட விளம்பரம் அதிகம். தன் முதல் படமான கார்த்திக்,சுஹாசினி நடிப்பில் வெளியான ஆகாய கங்கை சரியாக கவனிக்கப் படாததால் மூன்றாண்டுகள் கழித்து கிடைத்த வாய்ப்பில் வெற்றி பெற கடுமையாக முயற்சிகள் எடுத்திருந்தார் அப்படத்தின் இயக்குநர் மனோ பாலா. அந்தப் படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுத்தரவில்லை என்றாலும் ஒரு இயக்குநராக பலரின் நம்பிக்கையை பெற்றுத்தந்து தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது.

அதற்கு அடுத்து அவர் இயக்கிய ”பிள்ளை நிலா” பெரிய வெற்றி பெற்றது. ஒரு வகையில் தமிழில் முண்ணனியில் இருந்த நடிகர்,நடிகைகள் நடித்து வெளியான முதல் பேய்ப்படம் இது என்றும் சொல்லலாம். அப்போது மார்க்கெட்டில் நல்ல நிலைமையில் இருந்த மோகன், ராதிகா மற்றும் நளினி இணைந்து நடித்த படம். அதற்கு முந்தைய பேய்ப்படங்கள் எல்லாம் சிறிய நடிகர்கள் அல்லது மார்க்கெட் இழந்த நடிகர்களே நடித்து வந்தார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து மோகன், விஷ்ணுவர்த்தன், விஜய்காந்த் ஏன் ரஜினிகாந்த் படத்தையே இயக்கும் வாய்ப்பு வந்தது.

மனோ பாலாவின் படங்கள் எல்லாவற்றிலும் பெண் கேரக்டர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அவரின் கதாநாயகிகள் கவர்ச்சியாகவும் இருக்க மாட்டார்கள். நன்கு நடிக்கத் தெரிந்தவர்களை மட்டுமே அவர் நாயகியாக தேர்ந்தெடுப்பார். ராதிகா,சுஹாசினி,பானுபிரியா, சுகன்யா என அவரின் நாயகிகள் எல்லாமே நன்றாக நடிக்கக் கூடியவர்கள் தான்.

80களில் இருந்த நாயக பிம்பம் சாராமல் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையம்சம் உடைய படங்களை இயக்கியவர்களில் மனோ பாலாவும் ஒருவர். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர் சி சக்தி போன்ற இயக்குநர்கள் இந்தக் காலகட்டத்தில் முக்கியமானவர்கள். விசு,ரங்கராஜன் போன்ற இயக்குநர்கள் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களை எடுத்திருந்தாலும் அதில் பாரம்பரிய குடும்ப அமைப்பைக் கட்டிக்காக்கும் பெண் கதாபாத்திரங்களையே அமைத்திருப்பார்கள்.

மனோபாலா பா வரிசை இயக்குநர்கள் மற்றும் ஆர் சி சக்தியைப் போல புதுமைப் பெண்களை திரையில் உலவ விட்டவர். மனோ பாலாவின் குருவான பாரதிராஜா, கிராமத்து தைரியசாலி பெண்களை காட்டினார் என்றால், பாலசந்தர் நகரத்து நடுத்தர வர்க்க குடும்பத்து பெண்களின் முற்போக்கு வடிவங்களைக் காட்டினார். தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எப்படி தங்களின் தியாக மனப்பான்மையால், திட மனதால் உழைப்பால், எதிர்கொள்கிறார்கள் என்பது பாலசந்தரின் கதையுலகமாக இருந்தது. அவர் எடுத்த கிராமிய அரசியல் படங்களான தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களில் கூட பெண் கதாபாத்திரத்துக்குத் தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்றாலும் அவை உழைப்பு, தியாகம், மன உறுதியால் பிரச்சினைகளை சமாளிப்பது போலவேதான் கதை இருக்கும்.

பாலு மகேந்திராவின் கதைகளில் இருக்கும் பெண்கள் இயல்பான ஆசைகளுடன் இருந்து, அதன் மூலம் வரும் கஷ்டங்களை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். வீடு, சந்தியாராகம் போன்றவற்றில் நடுத்தர வர்க்க குடும்பத்து பிரச்சினைகள் பேசப்பட்டிருக்கும், ரெட்டை வால் குருவி, மறுபடியும், சதிலீலாவதியில் இரண்டு மனைவிகள் கதை சொல்லப்பட்டு, அதில் அவர்கள் எடுக்கும் தைரியமான முடிவுகள் சொல்லப்பட்டிருக்கும். ஆர் சி சக்தியின் படங்களிலும் பெரும்பாலும் நடுத்தர வர்க்க சிக்கல்களே அலசப்பட்டிருக்கும். மனக்கணக்கு, கூட்டுப் புழுக்கள், பத்தினிப் பெண் என நடுத்தர வர்க்க இயலாமையைச் சுற்றி அவரின் கதைகள் பின்னப்பட்டிருக்கும். சிறை மட்டும் விதிவிலக்கு. அதில் மானபங்கம் செய்யப்பட்ட பெண், கணவன் வீட்டின் நடவடிக்கைகள் பொறுக்க மாட்டாமல் மான பங்கம் செய்தவன் வீட்டில் அடைக்கலம் புகுவாள்.

மனோ பாலாவின் பெண் கதாபாத்திரங்கள் இன்னும் சற்று தைரியசாலிகள். கர்ப்பமான மனைவி இருப்பவனை காதலித்து, அது நிறைவேறாமல் இறக்கும் கதாநாயகி பிள்ளைநிலாவில். கருணாநிதி கதையில் வெளியான தென்றல் சுடும் படத்தில் அப்பாவியாக இருந்து, காதலித்து ஏமாற்றப்பட்டு, இறந்ததாக கருதப்பட்டு தப்பித்து பின்னர் மாடல் அழகியாக வந்து ஏமாற்றியவனை பழிவாங்கும் நாயகி. இந்த இரண்டு படங்களிலும் ராதிகா தான் நாயகி.

மனோபாலாவின் அதிக படங்களில் நாயகியாய் நடித்தவர் ராதிகா. மனோ பாலா விஜயகாந்தை வைத்து இயக்கிய சிறைப் பறவை, ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஊர்காவலன் ஆகிய படங்களிலும் ராதிகாதான் நாயகி.

அனந்து அவர்களின் கதையில் மனோபாலா இயக்கிய படம் நந்தினி. ராதிகாவிற்கு அடுத்து மனோபாலா இயக்கத்தில் அதிகப்படங்களில் நடித்தவர் சுஹாசினி. தன் தாய்க்கு இன்னொருவருடன் இருக்கும் நட்பை சந்தேகித்து, பின் அது தவறென மகள் உணரும் கதை. அந்த சிக்கலான தாய் கதாபாத்திரத்தில் சுஹாசினி நடித்திருந்தார். அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான அன்னை, தத்தெடுத்து வளர்ப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லியது. விதவைப் பெண் ஒருவர், வருடத்தில் ஒரு மாதம் மட்டும் ஒரு குழந்தையை எடுத்து வந்து தன் திருப்திக்காக வளர்ப்பதும், அதனால் அந்த அனாதைக் குழந்தைக்கு ஏற்படும் அசௌகர்யங்கள் என வித்தியாச கதைக்களம்.

சன் டிவி டெலிபிலிம் எடுக்க ஆரம்பித்த போது, மனோ பாலா – ராதிகா காம்பினேசனில் சிறகுகள் என்னும் படத்தை தயாரித்தார்கள், அதில் விக்ரமும் நடித்திருந்தார். தன் கணவனால் புறக்கணிக்கப்படும் பெண், தன் திறமையால் வெகுவாக முன்னேறும் கதாபாத்திரம் ராதிகாவுக்கு. இப்போது ஒலிபரப்பாகும் ஏராளமான தமிழ் சீரியல்களின் மையக்கருத்தாக இந்தப் பட கதை இருக்கிறது.

மனோபாலாவின் பெரும்பாலான கதைகள் பெண் தன் பிரச்சினையில் இருந்து எப்படி குலைந்து போகாமல் வெகுவாக முன்னேறிக்காட்டுகிறாள் என்பதாகவே இருக்கும். இதில் இருந்து தான் அவர் தன்காலத்தில் பெண் கதாபாத்திரங்களைப் படைத்த மற்ற இயக்குநர்களில் இருந்து வேறுபடுகிறார். பாலசந்தர், பாலுமகேந்திரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் அந்த பிரச்சினை தீர்ந்தால் போதும் என்ற அளவிலேயே இயங்கும், ஆனால் மனோபாலாவின் நாயகிகள் பிரச்சினையைத் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் முன்னேறி, தன்னை வதைத்த ஆண்களை நோக்கி வெற்றிச் சிரிப்பு சிரிப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

மனோபாலா மற்ற கதைக்களங்களிலும் சிறப்பாகவே தன் திறமையைக் காட்டி இருக்கிறார். அதற்கு அவர் கருணாநிதி, அனந்து, கலைமணி, ஆபாவாணன், ஆர் பி விஸ்வம் போன்ற திறமையான கதாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியதும் ஒரு காரணம்.
அவர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த என் புருசன் தான் எனக்கு மட்டும் தான், சிறைப் பறவை ஆகியவை மக்களிடையே வரவேற்பு பெற்ற படங்கள். ரஜினிகாந்த் நடித்த ஊர்காவலன், சாமியார்கள் தங்கள் நலனுக்காக செய்யும் தகிடு தத்தங்கள் எப்படி குடும்பங்களை பாதிக்கும் என்று காட்டியது. ராம்கி நடித்த வெற்றிப்படிகள், அருண் பாண்டியன், பானுபிரியா நடித்த முற்றுகை ஆகியவை திரில்லர் வகைப் படங்கள்.

விஜயா வாஹினி பல வருடங்களுக்கு பின்னர் படத்தயாரிப்புக்கு திரும்பி வந்தபோது தயாரித்த படங்களில் மனோபாலா இயக்கத்தில் வெளியான கறுப்பு வெள்ளையும் ஒன்று. அதே ஆண்டில் சிவாஜிகணேசன், சரோஜா தேவி நடிப்பில் பாரம்பரியம் என்னும் படத்தையும் இயக்கினார். இவையிரண்டும் எண்ணிக்கையை கூட்ட மட்டுமே உதவின.

மனோபாலா இயக்கத்தைத் துறந்து நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக தற்போது அறியப்படுகிறார். ஆனால் அவரது படங்களில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. அவர் முழுநேர இயக்குநராக இருந்த 80களில் காமெடி டிராக்குகள் மிகப் பிரபலம். கவுண்டமணி-செந்தில், ஜனகராஜ், எஸ் எஸ் சந்திரன் ஆகியோர் முக்கியப்படங்களில் எல்லாம் இடம்பிடித்திருப்பார்கள், ஆனால் மனோபாலாவின் படங்களில் இந்த நகைச்சுவை டிராக்குகள் இருக்காது. கதையோடு ஒன்றிய நகைச்சுவைக் காட்சிகள் இருக்கும். அதுவும் சில காட்சிகளே இருக்கும்.

1990 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான மல்லு வேட்டி மைனர் நகைச்சுவைக்கும் சற்று முக்கியத்துவம் கொடுத்து மனோபாலா இயக்கிய படம். சத்யராஜ், அவரது தந்தையின் சின்ன வீடுகளுக்கெல்லாம் பென்சன் அனுப்பும் குணமுள்ள மைனர். பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் மைனராக இருந்தாலும் அவருக்கும் ஒரு பெண்ணிடம் காதல் வருகிறது. ஆனால் சந்தர்ப்பத்தால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். காதலித்த பெண்ணால் வரும் பிரச்சினைகள், அதற்கான தீர்வு என வித்தியாசமான ஒரு கதை. காதலியாக ஷோபனா, சந்தர்ப்ப வசத்தால் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணாக சீதா என இருவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். சத்யராஜ் மைனர் வேடத்தில் அதகளப்படுத்தி இருப்பார்.
இப்போது ட்ரெண்டாக இருக்கும் பேய் பிளஸ் நகைச்சுவை பார்முலாவையும் முதலில் கொண்டுவந்தவர் மனோ பாலாதான். ஜெயராமை வைத்து அவர் இயக்கிய நைனா திரைப்படத்தில் தான் இந்த கான்செப்ட் தமிழ் சினிமாவில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது, கொலைக் குற்றவாளியாய் சித்தரிக்கப்பட்ட தன் மகனுக்கு ஆவியாய் வந்து உதவும் தந்தையின் கதை. இதில் ஏமாற்றுக்கார மீடியமாக வடிவேலு. படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தற்போது வெளியாகும் ஏராளமான நகைச்சுவைப் பேய் படங்களுக்கு முன்னோடியாக இருந்தது.

90களுக்குப் பின்னர் பிறந்த யாருமே மனோபாலாவை ஒரு இயக்குநராக நினைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் ஏராளமான படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ஆண்டுக்கு குறைந்தது 15 படங்களிலாவது தலையைக் காட்டி விடுகிறார்.
அவர் காலத்து இயக்குநர்கள் எல்லாமே தங்களுக்கு என்று ஒரு தனி பாணியை வைத்திருந்தார்கள். அந்த பாணி படங்களினாலேயே அவர்கள் அறியப்பட்டார்கள். ஆனால் மனோபாலா கதையின் தன்மைக்கேற்ப தன் படங்களை இயக்கினார். அதனால் தான் அவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். இது ஒருவகையில் நல்ல விஷயம் என்றாலும் தனித்தன்மை இல்லாத இயக்குநர் என்பது போல மக்களால் உணரப்படுகிறது. மேலும் அவர் இயக்கிய படங்களில், அப்போதைய பெரு வெற்றிக்கான அளவுகோலான சில்வர் ஜூபிளி படங்கள் ஏதுமில்லை.
ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய ஊர்காவலனும் சரி, பிள்ளை நிலா, தென்றல் சுடும் போன்ற படங்களும் சரி 100 நாட்களை மட்டுமே கண்டவை. மற்ற படங்கள் எல்லாம் சராசரியான 50 நாள் படங்கள்.

மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவில் ஒருவரை சிறந்த இயக்குநர் எனலாம். ஆனால் அதிலும் மனோபாலாவின் திரைப்படங்கள் படைப்பு ரீதியாக பெரிய பாதிப்பை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. தற்போது அவர் நடிக்கும் படங்களிலும் கூட சிறு சிறு வேடங்களிலேயே திருப்தி அடைந்து கொள்கிறார். தன் நடிப்புத்திறனை நிரூபிக்க பெரிய முயற்சி ஏதும் எடுப்பதில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனோபாலா, வினோத் இயக்கத்தில் தயாரித்த சதுரங்க வேட்டை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோபாலாவிற்கு இருக்கும் அனுபவம் மற்றும் கதையறிவைக் கொண்டு இனி சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து குறு முதலீட்டுப்படங்களைத் தயாரிக்கலாம். சிறந்த வேடங்களைத் தேர்ந்த்தெடுத்து நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராகப் பெயர் பெறலாம். சராசரியான இயக்குநர் ஆனால் வித்தியாச கதைக்களங்களை இயக்கியவர் என்ற பெயரை அவர் மாற்ற பெரிய மனதுடன் இனி செயல்பட வேண்டும்.

2 comments:

Nat Chander said...

manobala is the jack of all trades in tamil film world...
he acts well in comedy roles also...
yes he knows how to survive in films..

Pararajasingham Balakumar said...

நான் உங்கள்ரசிகனுக்கு முன்பே பிள்ளை நிலா வெளிவந்து வெற்றி பெற்றிருந்தது.
பிள்ளை நிலா 1985 இலும் , நான் உங்கள் ரசிகன் 1987 இலும் வெளி வந்திருந்தது.