May 31, 2017

சி ஏ படிப்பு

தமிழ்நாட்டில் 1940 முதல் 1960 வரை வழக்கறிஞர்களுக்கு பெருமதிப்பு இருந்தது. சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் அவர்கள் இருந்தார்கள். 60ல் இருந்து 80கள் வரை மருத்துவர்களுக்கு சமூகத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இப்போதும் அவர்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அப்போதுபோல் இருக்கிறது எனச் சொல்லமுடியாது. இப்போது, எம்.எஸ்.ஸா, எம்.சி.ஹெச்சா என்றெல்லாம் துணைக் கேள்வி கேட்கிறார்கள். அதன்பின்னர் பொறியியல், அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு காலம் வந்தது. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. அதேசமயம், சராசரி வரவேற்புடனும் இருந்திருக்கிறது. ஆனால், இன்றுவரை ஒரு துறை மட்டும் வருடத்துக்கு வருடம் பெரிய அந்தஸ்த்தோடு வளர்ந்து வருகிறதென்றால் அது C.A. முடித்த ஆடிட்டர்கள் இயங்கும் தணிக்கைத் துறைதான். அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வேலையில்லாத வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உண்டு. ஏன், போணியாகாத மருத்துவர்கள்கூட உண்டு. ஆனால், வேலையில்லாத ஆடிட்டரைப் பார்ப்பது அரிது. 100 சதவிகிதத்துக்கும் மேல் வேலை வாய்ப்புள்ள துறை. பை நிறையச் சம்பளம். இருந்தும் போதுமான அளவு ஆடிட்டர்கள் தமிழகத்தில் இல்லை.

இதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதலாவது கடினமான தேர்வு முறை.

இரண்டாவது இத்துறைபற்றி பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.

விழிப்புணர்வு இருக்கும் பெற்றோர்களிடமும், மாணவனிடமும் இந்தப் படிப்பை முடிக்க முடியுமா எனும் சந்தேகம், முடிக்காமல் விட்டுவிட்டால் வாழ்க்கை வீணாகிவிடுமே! என்ற பயம்.

அடுத்ததாக, சி.ஏ. முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஏற்படும் பொருளாதார நிர்ப்பந்தம்.

முதலில் சி.ஏ. தேர்வுபற்றி பார்ப்போம்.

சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் பவுண்டேசன் கோர்ஸ், அடுத்ததாக சி.ஏ. இண்டர் எனப்படும் தேர்வுகள், அது முடிந்ததும் மூன்று ஆண்டுகள் ஆடிட்டர் ஒருவரிடம் கட்டாயப் பயிற்சி எடுக்க வேண்டும். அதன்பின்னர், சி.ஏ. பைனல் எனப்படும் தேர்வுகள். இதைக் கடந்தபின்னர் ஆடிட்டர் என்று அழைக்கப்படுவார்கள்.

இந்த பவுண்டேசன் கோர்ஸ் என்பது பிளஸ்-டூ முடித்தவர்கள் எழுதலாம். இளங்கலைப் பட்டம் வாங்கியவர்களுக்கு இது தேவையில்லை. பி.காம்.தான் என்றில்லை. எந்த டிகிரியாக இருந்தாலும் சி.ஏ. படிக்க பதிவு செய்துகொள்ளலாம். பி.காம். படித்தவர்களுக்கு இந்தத் தேர்வுகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். சி.ஏ. இண்டரில் முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 3 பேப்பர்களும் இருக்கும். இதில், எந்த ஒரு பேப்பரில் பாஸ் செய்யாவிட்டாலும் மீண்டும் அந்த குரூப்பில் எல்லா பேப்பர்களையும் திரும்ப எழுதவேண்டும். ஒரு குரூப்பில் எல்லாவற்றிலும் பாஸ் செய்தாலும் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட சதவிகித மார்க்கையும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்பவும் எல்லா பேப்பர்களையும் எழுத வேண்டும். சி.ஏ. பைனலிலும் அப்படித்தான். அதில், முதல் பிரிவில் 4 பேப்பர்களும் இரண்டாம் பிரிவில் 4 பேப்பர்களும் இருக்கும். இந்த பைனல் தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும். தேர்வு அட்டவணையும்கூட இடையில் விடுமுறையின்றி தொடர்ந்து இருக்கும்.

பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் ரெகுலர் வகுப்புகள் இருக்கும். எனவே, தினமும் படிக்கும் வாய்ப்பு, காதில் பாடத்தைக் கேட்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், சி.ஏ.வில் நாம் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்வதுபோல தன்னிச்சையாகப் படிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டங்களும் ஒவ்வொரு ஆண்டு பார்லிமெண்ட் பட்ஜெட் தாக்கல் ஆனவுடன் அதற்கேற்ப மாறும். மேலும், இடையிலும்கூட பார்லிமெண்ட்டில் நிறைவேறும் சட்டங்களைப் பொறுத்து மாறும். பயிற்சி செய்யும் ஆடிட்டர்கள்தான் அத்தனை புத்தகங்களையும் வாங்கி அடுக்க முடியும்.

இரண்டாவதாக, பெற்றோர்களின் போதிய விழிப்பின்மை. மற்ற தொழில்நுட்பப் படிப்புகள் குறித்து அடிக்கடி செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் செய்திகள் வரும். இன்று விண்ணப்பம் வழங்கப்படுகிறது, இன்று தேர்வு என்று. ஆனால் இந்தப் படிப்புபற்றி எந்தப் பத்திரிகையிலும் செய்தி வராது. இதைப்போலவே, மத்திய அரசு நடத்தும் AIIMS போன்ற தேர்வு சென்டர்கள் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில்தான் இருக்கும். எனவே, மற்ற பள்ளி மாணவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வே இருக்காது.

மேலும், இந்தப் படிப்பைப்பற்றி பெற்றோர்கள் யாரிடம் விசாரித்தாலும் மிக எதிர்மறையாகவே பதில்வரும். ‘இத முடிக்கிறது கஷ்டம்ங்க’ என்பார்கள். எனவே, பெற்றோர்கள் மிகவும் தயங்குவார்கள். மேலும், சி.ஏ. படிப்புக்கு பதிவு செய்தவர்களில் வெற்றி சதவிகிதம் 0.1க்கும் குறைவு என்பதும் பெற்றோர்களை யோசிக்கவைக்கும். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, வெறும் கையோடு வந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு.

அடுத்ததாக, டிகிரி முடித்தவர்கள் இந்தப் படிப்பை முடிக்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். ஆடிட்டரிடம் பயிற்சிபெறும் (ஆர்டிகிள்ஷிப்) காலத்தில் இப்போதும்கூட 3000 ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படுகிறது. பொறியியல் படித்தவன் 21 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான். ஆடிட்டருக்கு 30 வயதில்தான் வருமானம். எனவே, மகனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பவர்கள் இதற்குத் தயங்குவார்கள். மேலும், குடும்பம் அவனை சப்போர்ட் செய்யாவிட்டல் தன் பொருளாதார நிலை குறித்து விரக்தியடைந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாது. இதனால், இதிலிருந்து விலகிக்கொண்டவர்களும் அதிகம்.

ஆனால், என் மகன்/மகள் இதை முடிக்கட்டும் என மன தைரியத்துடன் பி.காம். படிக்கவைத்து, ஆறு, ஏழு ஆண்டுகள் பொருளாதாரரீதியாக சப்போர்ட் செய்தால் தலைமுறைக்கும் எந்தக் கவலையும் இல்லாத ஒரு முன்னத்தி ஏர் கிடைக்கும். ஏனென்றால், ஒரு ஆடிட்டர் என்பவர் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுடனேயே எப்போதும் பழகுபவர். அவரின் சிபாரிசு எந்தக் கல்வி நிலையத்திலும், கம்பெனியிலும் எடுபடும். அந்த பழக்கவழக்கங்களின் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறையை வளர்த்துவிடலாம்.

சி.ஏ. இண்டரில் தமிழகத்தில் நிறையப்பேர் தேர்வு பெற்றுவிடுகிறார்கள். பைனலில்தான் தேர்வாக முடியாமல் தவிக்கிறார்கள். மேலும், ஆர்டிகிள்ஷிப் காலத்தின்போது ஆடிட்டரிடம் இயைந்துபோக முடியாமையும் ஒரு காரணமாக இருக்கும். ஆடிட்டரிடம் இருப்பது பண்டைய கால குருகுலவாசம் போலத்தான். இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக அமைவது ஐசிடபிள்யூ ஏ (ICWA) எனப்படும் காஸ்ட் அக்கவுண்டிங் கோர்ஸ்.

இதிலும் பவுண்டேசன், இண்டர், பைனல் என சி.ஏ. போலவே படிநிலைகள். ஆனால், ஆடிட்டரிடம் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேர்வுகளும் சி.ஏ.வோடு ஒப்பிடுகையில் சற்று எளிதாக இருக்கும்.

சி.ஏ.வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால், சி.ஏ. முடித்தவர்கள் ஒரு நிறுவனத்தின் தலை முதல் அடி வரை உள்ள செயல்பாடுகளை தணிக்கை செய்பவர்கள், அந்த நிறுவன வளர்ச்சிக்கு எப்படிச் செயல்பட வேண்டுமென யோசனை கூறுபவர்கள், வரி விதிப்பு முறைகளை ஆராய்ந்து நிறுவன வளர்ச்சிக்கு/லாபத்துக்கு ஏற்ப யோசனை சொல்பவர்கள். ஆனால், ஐசிடபிள்யூஏ முடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராஜக்ட்டுக்கு எவ்வளவு செலவாகிறது? அதற்கேற்ற லாபம் இருக்கிறதா? இல்லை நஷ்டமா? என கணக்குப் பார்ப்பவர்கள். ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள். ஆனால், இவர்கள் கணக்கை தணிக்கை செய்ய மாட்டார்கள். இவர்களுக்கும் பெரிய அளவில் டிமாண்ட் இருக்கிறது. சம்பளமும் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஆறிலக்கத்தை எட்டிவிடும்.

சி.ஏ.இண்டர் பாஸ் செய்து, பைனலில் தவறியவர்கள் சற்று முயற்சித்தால் ஐசிடபிள்யூஏ பாஸ் செய்துவிடலாம். ஓரளவுக்கு ஒரேமாதிரியான பாடத்திட்டம்தான் இருக்கும். எலுமிச்சையை குறிவைத்துத் தோற்றவர்கள் தர்ப்பூசணியை எளிதில் குறி தவறாமல் அடிக்க முடியுமல்லவா?

அப்படியும் பாஸ் செய்ய முடியவில்லையென்றால், சி.ஏ. இண்டர் பாஸ் செய்தவர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா (ICAI) “அக்கவுண்ட் டெக்னீசியன்” என்னும் சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழ் பெற்றவர்கள் எந்த நிறுவனத்திலும் அக்கவுண்டண்டாகப் பணியாற்றலாம். சி.ஏ.வை கடுமையாகப் படித்து தோல்வியடைந்தவர்கள் வங்கித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.

பெற்றோர்கள் இருவரும் நல்லவேலையில் இருக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்னை இல்லை என்றால் தைரியமாக பிள்ளைகளை சி.ஏ.வுக்கு திருப்பிவிடலாம். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காது அவர்களை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருந்தால் ‘வேலை இழப்பு’ என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத பெருமைமிகு தணிக்கையாளர் சமூகத்தில் உங்கள் பிள்ளையும் ஒரு அங்கமாகலாம்.

May 25, 2017

அளவு ஜாக்கெட்

எங்கள் ஊர் ஸ்டைல்கிங் டெய்லரைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அனேகமாக எல்லா ஊரிலும் இந்தக்கதை ஏதாவது ஒரு பெயரில் புழக்கத்தில் இருக்கும். வேறொன்றுமில்லை. ஸ்டைல்கிங் டெய்லரிடம் சட்டை தைக்க அளவுகொடுத்துவிட்டு வெளியே வந்த ஒருவர் நீண்ட நாள் சொத்து தகராறில் இருந்த பங்காளியை கடை வாசலில் சந்தித்தார். வாய்த்தகராறு முற்றி, கோபத்தில் கடைக்குள் புகுந்து அங்கு இருந்த கத்திரிக்கோலை எடுத்து பங்காளியின் வயிற்றில் குத்திவிட்டார். பதினாலு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்து வெளியேவந்தவர் சட்டை தைக்க கொடுத்தது ஞாபகம் வந்து அதை கேட்கப் போனார். உடனே கடைக்காரர் அஞ்சு நிமிசம் பொறுங்கண்ணே இந்தா காஜா வச்சா முடிஞ்சுச்சு என்றாராம்.

அப்போது இருந்த பெரும்பாலான டெய்லர்கள், கஸ்டமர் நான்கைந்து முறை வந்து கேட்டால் தான் துணியை டெலிவரி கொடுக்க வேண்டும் என்ற பாலிஸியை வைத்திருந்தார்கள். தீபாவளியும், பள்ளிச்சீருடை தைக்கும் காலமும் தான் சிற்றூர்களில் பீக் பீரியட்கள், இந்த காலங்களில் இவர்களைப் பிடிக்கவே முடியாது. ஸ்கூல் திறக்கப் போகுது, யூனிபார்ம் தைக்கக் குடுத்து நாலு வாரமாச்சு என்னான்னு கேட்டு வாடா என்று வீட்டில் சொன்ன உடன் அப்படியே கிளம்பி அங்கே போய் ஒரு அட்டெண்டன்ஸை போட்டுவிட்டு, அங்கு ஒரு பாட்டையும் கேட்டுவிட்டு வரும்வழியில் அஞ்சு பைசாவுக்கு ஒரு கல்கோணாவை வாங்கி வாயில் அதக்கிக் கொண்டே வருவதை பெரும்பாலான பையன்கள் செய்திருப்பார்கள்.

தீபாவளி நேரங்களில் தான் இன்னும் விசேஷம். முதல் நாள் இரவு வரை துணியைக் கொடுத்திருக்க மாட்டார்கள். காலை நாலு மணிக்கு நல்லெண்ணெய் தேய்த்த உடம்போடு அரை ட்ராயரை மட்டும் போட்டுக்கொண்டு, குளிச்ச உடனே புதுசு போடணுமாம், சீக்கிரம் குடுங்க என்று கடைக்கு நாலுபேர் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பார்கள். இதாவது பரவாயில்லை, சில டெய்லர்கள் கல்யாணத்திற்கு தைக்க கொடுத்த துணியைக்கூட தாமதப்படுத்தி விடுவார்கள். ஊரிலேயே மண்டபம் இருந்தால் கூட பரவாயில்லை. ஒரு நச்சுப்பிடித்த ஆளை கடைக்கு அனுப்பி இரவில் கூட வாங்கிவிடலாம். வெளியூர் கோவில், மண்டபம் எனில் முதல்நாள் மதியமே கிளம்ப வேண்டி வரும். அப்போது மாப்பிள்ளை தனக்கு நம்பிக்கையான ஒரு ஆளிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து விட்டுப் போக வேண்டியிருக்கும். எப்படியாச்சும் முகூர்த்தத்துக்கு வாங்கிட்டு வந்து சேந்துற்ரா மாப்பிள்ள என்று கெஞ்சிவிட்டுப் போவார்கள்.

ரெடிமேட் சட்டை,பேண்ட்கள் அவ்வளவாக மார்க்கெட்டைப் பிடிக்காத 80களில் இந்த டெய்லர்கள் இப்படி ஒரு தனி ராஜாங்கமே நடத்தி வந்தார்கள். கடை வீதியில் டெய்லர் கடைகள் தான் முக்கிய லேண்ட்மார்க்காக இருக்கும். டீன் ஏஜ் மற்றும் கல்லூரி பையன்கள் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் இடங்களில் ஒன்றாகவும் டெய்லர் கடைகள் இருந்தது. கேசட் பதிவு செய்து தரும் மியூசிக்கல்ஸ், வாடகை சைக்கிள் கடை, சலூன், விளம்பர தட்டி போர்டுகள் எழுதும் கலைக்கூடங்கள், லெண்டிங் லைப்ரரி போன்ற இடங்களில் தங்கள் டேஸ்ட்க்கு ஏற்பவும், கடைக்காரருடனான கெமிஸ்டிரி மற்றும் நண்பர்கள் அமைப்பிற்கு ஏற்பவும் சேர்ந்து அரட்டை அடிப்பார்கள். கடைக்காரர்களும், புது கஸ்டமர்கள் கிடைக்க இவர்கள் பிராண்ட் அம்பாசிடர்களாக இருப்பதால் வரவேற்கவே செய்வார்கள். கூட்டமாக இருக்கும் நேரங்களில், சாப்பிடப் போகும் நேரங்களில் கூடமாட ஒத்தாசை, பாதுகாப்பு என இந்த அரட்டை செட்டால் கடைக்காரர்களுக்கும் லாபமுண்டு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே எனக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு அரட்டை குரூப்பில் சங்கமமாகி டாப் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை. பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில் லெண்டிங் லைப்ரரி மனதுக்குப் பிடித்த இடமாக இருந்தது. பெரும்பாலான நாட்கள் அங்குதான் உட்கார்ந்திருப்பேன். என் முதல் சாய்ஸ் கேசட் கடை தான். அங்கு எனக்குப் பிடிக்காத குரூப்கள் ஆக்ரமித்து இருந்தன. டெய்லர் கடை எனக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லாத இடம். இந்த நேரத்தில் தான் மதுரையில் தொழில் கற்ற ஒருவர் “ஜெண்டில்மேன் டெய்லர்ஸ்” என்ற பெயரில் கடை துவங்கினார். அட்டகாசமாக தைத்த அவர் ஓரிரு மாதங்களிலேயே பிரபலமாகி நம்பர் ஒன்அந்தஸ்தை அடைந்தார். அக்ரஹாரத்தில் பெரும் தொப்பையுடன் மத்திய முப்பதுகளில் மூல நட்சத்திரத்தால் பேச்சிலராக இருந்த ஒரு பேங்க் மேனேஜருக்கு இவர் தைத்துக் கொடுத்த பெல்ட் போடாமலேயே நிற்கும் பிட்டான பேண்டும், தொப்பை அசிங்கமாகத் தெரியாத சட்டை பிட்டிங்கும் பிடித்துப் போய்விட்டது. டெய்லரின் ராசியோ என்னவோ உடனடியாக அவருக்கு திருமணமும் நிச்சயமானது. உடனே அவர் செய்ததுதான் டாக் ஆப் தி டவுன் சரி சரி ஊரின் பேச்சானது. அதுவரை எங்கள் ஊரில் கல்யாண மாப்பிள்ளைக்கு டி டி ஆர் கோட் என அழைக்கப்படும் கோட்டையே கல்யாணத்திற்கு அணிவார்கள், கறுப்பு சுபகாரியத்திற்கு ஆகாது என்று எல்லோருமே நீல நிற கோட்தான். இவர் திரி பீஸ் கோட்,சூட் வாங்க முடிவெடுத்தார். பெரும்பாலும் ரெடிமேட் கோட் தான் வாங்குவார்கள். இவர் துணி எடுத்து தைக்கச் சொல்லி ஜெண்டில்மேன் டெய்லரிடம் ஆர்டர் கொடுத்து விட்டார். எங்கள் ஊரில் முதன் முதலில் டெய்லர் கடையில் தைக்கப்படும் கோட் சூட் என அதற்கு ஒரு அந்தஸ்தும் கிடைத்தது.

சென்னை சென்று துணி எடுத்து வந்தார்கள். டெய்லரிங் சார்ஜ் 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. மற்ற வேலைகளை எல்லாம் ஒரு வாரம் நிறுத்தி இதிலேயே கவனம் செலுத்தினார்கள், பல கேட்லாக்குகளை வேறு மதுரையில் இருந்து வாங்கி வந்தார்கள். அங்கு டாப் அடிக்கும் பையன்களும் அப்படி என்னதாண்டா ஆயிரம் ரூபாய் கூலி அளவுக்கு தைக்கப் போறாங்க என ஆவலுடன் அங்கேயே குழுமிவிட்டார்கள். சினிமா பாக்ஸ் டிக்கெட் மூன்று ரூபாய்க்கு விற்ற காலம் அல்லவா? பொதுவாக இம்மாதிரி கடைகளில் டீ வாங்கும் போது அங்கு இருப்போர்க்கும் சேர்த்துதான் வாங்குவார்கள். ஆயிரம் ரூபாய்ல பாதிகாசு டீக்கே போயிரும் போல இருக்கு என கிண்டலாக சொல்வார்கள். இம்மாதிரி கொண்டாட்டமான மனநிலை இருக்கும் இடங்களில் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அங்கு நம்மை வித்தியாசம் காட்டாது ஏற்றுக்கொள்ளும் ஆட்களும் தேவை என்பதால் பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பேன். என் நண்பன் ஒருவன் அந்த ஜெண்டில்மேன் டெய்லர் டாப் குரூப்பில் இருந்தான். அவன் அப்பப்ப இங்கிட்டு வந்துட்டுப் போடா என்பான்.

ஆண்களுக்கான டெய்லர்கள் இப்படி என்றால் பெண்களுக்கான டெய்லர்கள் ஒரு ரகம். அப்போது பெண்களுக்கான டெய்லர் என்றாலே இரண்டே வேலைகள் தான். ஜாக்கெட் தைப்பது, சேலைகளுக்கு ஓவர்லாக் அடிப்பது மட்டும். ஜாக்கெட்டும் இந்தக்காலம் போல் ஜன்னல், நிலை, வாசல்படி இத்யாதிகள், அலங்கார தோரணம் போல் கயிறுகள், ஊசி பாசி மணிகள் இல்லாமல் சாதாரணமாகத்தான் இருக்கும். அந்த டெய்லர்களும் கொஞ்சம் மந்தமான ஆட்களாகத்தான் இருப்பார்கள். அம்மாதிரி இருக்கும் ஆட்களிடம் தான் ஊர்ப் பெண்களும் ஜாக்கெட் தைக்க குடுப்பார்கள், தியேட்டரில் கூட பெண்கள் பக்கம் முறுக்கு, கடலை மிட்டாய் விற்க கொஞ்சம் விவரமில்லாத, மந்தமான பையன்களைத்தான் தியேட்டர்காரர்கள் அனுமதிப்பார்கள், ஒரு ரூபா, ரெண்டு ரூபா கணக்கில விட்டாலும் பரவாயில்லை. நம்ம சொந்தம், ஊர்கார பொண்ணுங்க வந்து போற இடம். அவங்க நிம்மதியா பார்த்துட்டுப் போகணும்யா என்பார்கள்.

இந்த லெண்டிங் லைப்ரரியில் பொழுதுபோகாத நேரத்தில் உட்கார்ந்திருப்பேன் என்று சொன்னேன் அல்லவா? அதனால் எங்கள் தெருப்பெண்களுக்கு மாலைமதி, ராணிமுத்து வாங்கித்தரும் ஏஜண்டாகவும் இருந்தேன். இரண்டு தெரு தள்ளி என் ஒன்று விட்ட அத்தையின் வீடு இருந்தது. அவரின் கணவர் தாசில்தார். மூன்று பெண்கள். இரண்டிரண்டு வயது இடைவெளியில். லலிதா, பத்மினி, ராகினி என பெயர் சூட்டியிருந்தார். அந்த திருவாங்கூர் சிஸ்டர்ஸ் போல இந்த தெற்குத்தெரு சிஸ்டர்ஸும் ஊரில் பிரபலம். அவர்களும் என்னிடம்தான் புத்தகம் வாங்கித்தரச் சொல்லி கேட்பார்கள். விசேஷ காலங்களில் ஈசன் டெய்லர்கிட்ட ஜாக்கெட் கொடுத்திருக்கோம் வாங்கி வா என்பார்கள். நாலைந்து முறை அலைய வேண்டி இருக்கும். ஜெண்டில்மேன் டெய்லர் கடையில் உட்கார்ந்திருந்தா அரட்டை அடிச்சிக்கிட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கலாமே இங்க நிக்கிறோமே என துக்கமாக இருக்கும். பொதுவாக இம்மாதிரி கடைகளில் ஆட்களை அண்டவிடமாட்டார்கள். உட்கார சேர் கூட இருக்காது. நான் புலம்பியதைக் கேட்ட என் நண்பன் ஒரு யோசனை சொன்னான். டேய் நீ அடுத்த தரம் அவங்க வீட்டுக்குப் போகும் போது அளவு ஜாக்கெட் குடுத்து தைக்கிறீங்களே? மொதோ ஜாக்கெட் எப்படி தச்சீங்கன்னு கேளு. அடுத்து உன்னைய கிட்டவே சேர்க்க மாட்டாங்க, அப்புறம் இந்த லைப்ரரி,லேடீஸ் டெய்லர்லாம் விட்டுட்டு எங்க கூட டாப்புக்கு வந்திடலாம் என்றான். நானும் அதை நம்பி நடுப்பெண்ணான பத்மினியிடம் அவ்வாறு கேட்க ம்ம். எங்க அக்கா ஜாக்கெட் போட்டுப் பார்த்து அளவு சொல்லி விட்டோம் என்று இயல்பாக சொல்லிவிட்டு பேச்சை மாற்றிவிட்டார்கள்.

மாமா டெபுடி கலெக்டராகி வேறு ஊருக்கு மாற்றலாகி அவர்கள் சென்றுவிட்டார்கள். மூவருக்கும் திருமணம் முடிந்து சென்னை, பெங்களூர் என செட்டில் ஆகிவிட்டார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வீட்டில் பத்மினியை சந்தித்தேன். மகள் கல்லூரியில் படிப்பதாகவும் உன் பையன் என்ன செய்கிறான் என்று கேட்டாள். எட்டாம் வகுப்பு என்று சொல்லிவிட்டு நீண்ட நாட்களாக மனதில் தங்கியிருந்த கேள்வியைக் கேட்டேன். ஆமா, அன்னைக்கு நான் வேணுமின்னேதான் அப்படி கேட்டேன். ஏன் கோபப்படலை என்று?. ஏண்டா ஒரு பொண்ணுக்குத் தெரியாதா ஆணோட பார்வை? அதுவுமில்லாம நீ வில்லங்கமாவா கேட்ட ஏதோ வாய்ப்பாடு ஒப்பிக்கிற மாதிரி அதைக் கேட்ட. எத்தன நாள் அதை வச்சி உன்னைய கிண்டல் அடிச்சி சிரிச்சிருக்கோம் தெரியுமா எனச் சொல்லிவிட்டு கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டி நகன்றாள்.

May 19, 2017

ராதா



தெருவில் சில பெண்கள் இருப்பார்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் கண்களுக்கு மிகச் சாதாரணமாகத் தெரிவார்கள். ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ரெட்டைச்சடையில் பார்க்கும் போது மனதில் எந்த பட்டாம்பூச்சியும் பறக்காது. ஆனாலும் அவர்கள் செட்டில் சில பையன்களுக்கு அவள்தான் உலக அழகியாய் இருப்பாள். அதுபோலத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதவைப் பார்த்தபோது பெரிய அழகி என்ற எண்ணம் ஏற்படவில்லை.பெரும்பாலான காட்சிகளில் டல் மேக்கப்புடன் தான் இருந்தார். இந்தப் படம் எங்கள் ஊருக்கு முத்துராமன் மகன் நடிச்ச படமாம் என்ற அறிமுகத்துடனேயே வந்தது. பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தன. முக்கியமாகவாடி என் கப்பக்கிழங்கேபாடல் மாணவர்களின் பேவரைட்டான ஈவ் டீசிங் பாடலாக மாறியிருந்தது. முந்தைய தலைமுறையில் மெல்ல நட மெல்ல நட, தெரு அண்ணன்களுக்கு ஓரம்போ ஒரம்போ மற்றும் சுராங்கனி என்றால் எங்கள் செட்டிற்கு வாடி என் கப்பக்கிழங்கே. தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்துக்கொண்டிருக்கும் ஒரு பேட்ஸ்மென்னின் இன்னொரு சிக்ஸரையும் மக்கள் சாதாரணமாக கடந்து போவதுபோல இளையராஜாவின் சிறப்பான அலைகள் ஓய்வதில்லை பாடல்களையும் அதிகம் சிலாகிக்காமல் எங்கள் ஊர் கடந்து சென்றது. ஆனால் வாடி என் கப்பக் கிழங்கே மட்டும் பள்ளி மாணவர்களிடம் தங்கிவிட்டது. பள்ளி செல்லும் குமரியின் இயல்பான எழிலுடன் இருந்த ராதாவும்.

இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன். கேரளாவின் ஸ்பெஷல்களில் ஒன்று கப்பக்கிழங்கு. ராதா கேரளாவில் இருந்து வந்ததால் அவரை வரவேற்கும் விதமாக எழுதினேன் என்றார்.  கிழங்காட்டம் இருக்கு என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள், அதன் பொருள் கின்ணென்று உறுதியாக அதிகப்படியாக தொள தொளவென  சதை இல்லாமல் இருக்கும் பெண் என்று அர்த்தம். ராதாவும் அந்தப் படத்தில் அப்படித்தான் இருந்தார். மாநிறம் தான். ஆனால் தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மாநிறம்.
பத்தாம் வகுப்பில் சுமாராகத் தெரிந்த பெண்களே பிளஸ் டூ சமயத்தில் சற்று எழில் கூடித் தெரிவார்கள். அது தெருவில் திடீரென அதிகரிக்கும் அடுத்த தெருப் பையன்களின் சைக்கிள் மூலமே அது நமக்கு அறியவரும். யாருக்குடா இங்க வந்து இவிங்க டாப் அடிக்கிறாங்க? என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பெண்ணை சுட்டிக்காட்ட அதுக்காடா? என்று குழப்பத்துடன் நடையைக் கட்டுவோம். அப்படி நடிக்க வந்த ஒராண்டிலேயே எழில்கூடி இளஞ்ஜோடிகள், கோபுரங்கள் சாய்வதில்லை, காதல் ஓவியம் என ஏராளமான இளைஞர்களை கவர்ந்தார்.  அந்தப் பெண்களே கல்லூரியில் படிக்கும் போது எழிலுடன் சற்று ஒயிலும் கூடும். நடை,உடை,பாவனைகள் மெருகேறும். அந்த ஒயில் அவருக்கு தூங்காதே தம்பி தூங்காதே, பாயும்புலியில் வாய்த்தது. அந்த ஒயிலில் ஒரு கூட்டம் மயங்கியது

தெருவில் பள்ளி யூனிபார்ம், கல்லூரியில் படிக்கும் போது கன்வென்ஷனல் சுடிதாரிலேயே கண்கள் பார்த்து பழகிய பெண்ணுக்கு திடீரென கல்யாணம் என்பார்கள், வேண்டா வெறுப்பாய் அம்மாவை அழைத்துக் கொண்டு போகும் டூட்டியால் மண்டபத்திற்குப் போனால் மிதமாய் எடை கூடி, பளபளப்பு வலுவாகவே கூடி அந்தப் பெண் சேலையில் தேவதை போல் மணமேடை ஏறுவாள். அடடா மிஸ் பன்ணிட்டோமே எனத்தோன்றும். அதே போல் அழகுடன் ஆனந்த் படத்தில் இருப்பார். சி வி ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் ராதா சேலையில்  வரும் காட்சிகள் எல்லாம் ஒரு தேர்ந்த ஓவியர் தன்னை மிகவும் கவர்ந்த பெண்ணை தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்து வரைந்த ஓவியமாகவே தோன்றும். எங்கள் ஊர் திருவிழாவின் போது தியேட்டர்களில் நடுநிசிக் காட்சியாக அந்த ஆண்டில் ஓடிய மிகப்பெரும் வெற்றிப்படத்தை மீண்டும் திரையிடும் வழக்கம் இருந்தது. ஆனந்த் ஒரு தோல்விப்படம். ஆனாலும் அந்த திரைப்படத்தை அந்த ஆண்டு ஒரு முக்கிய தியேட்டரில் வெளியிட்டார்கள். காரணம் அந்த தியேட்டர் ஓனர் ராதா ரசிகர். பிரபு ஹீரோவாக நடித்த அந்தப்படத்திற்கு வந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டுசங்கிலிபிரபு ரசிகர் மன்ற நிர்வாகியே மிரண்டு போனார்.   

திருமணம் முடிந்து முதல் வருடம் ஊர் திருவிழாவிற்கு வரும் பெண்கள் இன்னும் மெருகேறி இருப்பார்கள். கொஞ்சம் நாணம் குறைந்து வீதிகளில் வலம் வருவார்கள். மாலை வேளைகளில் சர்வ அலங்காரத்துடன் தம்பி, தங்கைகள் உடன்வர திருவிழா கடைகளை அலசுவார்கள், அத்தகைய தோற்றத்தில் ராதா இருந்தது எங்க சின்ன ராசா படத்தில்.
எங்க சின்ன ராசா என்றதுமே பழனி அண்ணன் தான் நினைவுக்கு வருவார். அதிதீவிர திமுககாரர். எங்கள் வார்டின் பூத் ஏஜெண்ட். பாக்யராஜ் அதிமுக அனுதாபி என்பதால் பாக்யராஜின் படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பார்.  என்னய்யா இவன் மிமின்னு பேசிக்கிட்டு இருக்கான் என்பார். அப்போது டி ராஜேந்தர் திமுக அனுதாபி என்பதால் அவரின் படமான உறவைக் காத்த கிளியை கூட நாலைந்து முறை பார்த்தவர். பாக்யராஜ் பட  போஸ்டரை பார்ப்பது கூட கட்சிக்கு விரோதமான அணுகுமுறை என்ற கருத்தியல் கொண்டவர். அவரை அசைத்துப் பார்த்தது ராதா தான். வழக்கம் போல பாக்யராஜின் போஸ்டர் என்று தலையை திருப்பி புறமுகம் காட்ட முயன்றவரின் கண்ணில் ஒரு மின்னல் போல ராதாவின் அதிலட்சண முகம் படர பாக்யராஜ் படமாக இருந்தாலும் பரவாயில்லை என பார்க்கத் துணிந்தார். கொண்டைச் சேவல் கூவும் நேரம் என்ற பாட்டில் மயிலை ஒத்த அசைவுகளுடன் ராதா ஆட கிறங்கிப் போனார். படத்தை தியேட்டரில் இருந்து தூக்கும் வரை தினமும் அவர் படத்துக்கு போனதை வைத்து எங்கே அவர் அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற பயம் கட்சிக்காரர்களுக்கே வந்தது

தொடர்ந்து வந்த சில ஆண்டுகள் அந்த தோற்றத்திலேயே தமிழக ரசிகனுக்கு அருள் பாலித்தாள் அந்த அழகு தேவதை. உழவன் மகன், அம்மன் கோயில் கிழக்காலே, காதல் பரிசு, ஜல்லிக்கட்டு, அண்ணா நகர் முதல் தெரு, பிக்பாக்கெட், ராஜாதி ராஜா எல்லாம் ராதா உச்சக்கட்ட அழகோடு இருந்த காலத்தில் வெளியான படங்கள்

ஒரு விஷயத்தில் ஒரு மனத்தடை இருந்தால் அதை இன்னொருவர் செய்யும் போது அது விலகும். இது உடை விஷயத்தில் மிகப்பொருந்தும். எங்கள் ஏரியா திருமணங்களில் முதல்நாள் மணமகனுக்கு பேண்ட்,சர்ட் முகூர்த்த நேரத்தில் வேட்டி, தாலி கட்டி முடித்து  பரிசுப் பொருட்கள் (மொய் கவர் தான்) வாங்கும் போது கோட் சூட் என்பது வழக்கம். மென்பொருள் நிறுவனங்களில் ஊர்க்காரர்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர் அங்கு நடக்கும் திருமணங்களில் ஷெர்வாணி, குர்தா, ஆப் பிளேசர்  என வெரைட்டியாக மணமகன் ஆடை அணிவதைப் பார்த்து ஆசை கொண்டனர். ஆனால் அதைப் போட்டுவந்தால் என்னடா குடுகுடுப்பைக்காரன் மாதிரி இருக்கே என கலாய்த்து விடுவார்களோ என பயந்து ஆசையை அடக்கிக் கொண்டனர். வசதியான அத்தை, தனக்குப் பெண் கொடுக்காததால் வீம்புக்கு நிறைய செலவு செய்து கல்யாணம் செய்த மேலத்தெரு ரமேஷ் செலவோடு செலவாக ஒரு ஷெர்வாணியையும் இறக்கினார். நல்லாத்தான இருக்கு என அதை சமூகம் ஏற்றுக்கொண்டது. இப்போது முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு ஷெர்வாணி என்பது சம்பிரதாய உடை அளவிற்குப் போய்விட்டது.
அதுபோலத்தான் இந்த சுடிதாரையும் அணிய தமிழகத்துப் பெண்கள் தயக்கம் காட்டி வந்தனர். காதலிக்க நேரமில்லை காஞ்சனா முதற்கொண்டு, ஜெயலலிதா ஏன் ஸ்ரீதேவி வரை சல்வார் கம்மீஸில் வலம் வந்தாலும் பெரும்பாலான தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணிய தயக்கம் காட்டினர். பப் கை வைத்த ஜாக்கெட், பன் கொண்டை என நடிகைகளிடம் இருந்து பல பேஷன்களை ஏற்றுக்கொண்டவர்கள் சுடிதார் விஷயத்தில் மட்டும் தயக்கம் காட்டிக்கொண்டே இருந்தார்கள். ராதா இதயகோவில், அண்ணா நகர் முதல் தெருவில் அணிந்த சுடிதார்கள் பாந்தமாக இருப்பதைப் பார்த்து பலரும் முயற்சி செய்தார்கள். தமிழ் பெண்களின் சுடிதார் மீதான மனத்தடையை நீக்கியதில் ராதாவுக்கும் ஒரு பங்குண்டு.

சிவாஜி கணேசன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், பாக்யராஜ், டி ராஜேந்தர் என அனைத்து முண்ணனி நாயகர்களுடனும் ராதா நடித்தார். ஏன் எஸ் பி பாலசுப்பிரமணியம், நிழல்கள் ரவியுடனும் நாயகியாக நடித்தார். யாருடன் அவர் நடித்தாலும் வித்தியாசமாகத் தெரியவில்லை. எந்த நாயகருடன் இணையாக நடித்தாலும் பொருந்திப்போகும் உயரம்,உடல் அமைப்பு மட்டுமில்லாமல் நடிப்பும் இருந்ததால் எல்லோருடனும் ஈடுகொடுத்து நடித்தார்.

கனவுக்கன்னி என்பது மாஸ் ஹீரோவுக்கு இணையான ஒரு பதம். பெரும்பாலான ஆண்களுக்குப் பிடிக்கவேண்டும். ஸ்ரீதேவிக்குப் பின் அந்த கனவுக்கன்னி அந்தஸ்து ராதாவுக்கு வந்தது. அப்போது மாதவி போட்டியில் இருந்தாலும் அவரை மீறி பலரின் மனங்களில் இடம்பிடித்தார் ராதா. அடுத்து ராதாவின் சகோதரி அம்பிகா, ரேவதி, நதியா என மக்களுக்குப் பிடித்த நடிகைகள் வந்துகொண்டேயிருந்தாலும் கனவுக்கன்னியாக ராதாவே நிலைபெற்றிருந்தார். தர்மத்தின் தலைவனில் அறிமுகமாயிருந்தாலும் வருஷம் 16 மூலமாகவே அந்த கனவுக்கன்னி அந்தஸ்து குஷ்பூவுக்கு இடம்மாறியது

நம்மை ஒருமுறையாவது பார்ப்பாளா என்று நாம் பார்த்து ஏங்கிய பெண் மிகச் சுமாரான அழகுடையவனை திருமணம் செய்துகொண்டால் ஒரு மென்சோகம் நம்மைத்தாக்குமே அதுபோலவே 90கள் ஆரம்பித்த உடன் ராதா, டி ராஜேந்தர், எஸ் பி பாலசுப்பிரமணியம் இவர்களுடன் நடிக்க ஆரம்பித்ததும் ராதா ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மனைவி ஒரு மாணிக்கம் படத்தில் மலையாள நடிகர் முகேஷின் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் அர்ஜூன் இருந்தும்

இந்த சமயத்தில் குஷ்பு, ரூபிணி, கௌதமி, பானுபிரியா போன்றோர் தமிழக இளைஞர்களின் மனங்களை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள். 91ல் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை ராதா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வந்தது. அதன்பின்னர் ராதா பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒருதலையாய் காதலித்த பெண் திருமணம் செய்து கொண்டு தூரதேசம் சென்றதைப் போலவே பல ராதா ரசிகர்களும் இந்நிகழ்வை எடுத்துக்கொண்டார்கள்

பின் ராதா மகள்கள் கார்த்திகா, துளசி நடிக்க வந்தபோது கூட யாரோ எவரோ என்றே பல ராதா ரசிகர்களும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக ராதா இப்போது இருக்கிறார் என்ற செய்திகள் வந்தது. மறந்தும் கூட அந்த சேனல் பக்கம் செல்லவில்லை. சமீபமாக இன்னும் நிறையப்பேர் அதுபோலவே இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். தேவதையாய் கண்ட பெண்ணை சராசரி பெண்ணாக மீண்டும் பார்க்க யார்தான் துணிவார்?  

January 15, 2017

அங்கீகாரம்

திங்கட் கிழமை காலை வேளையில் முடி திருத்தம் செய்யப் போவது

தீபாவளி, பொங்கலுக்கு புதுப் படங்கள் வெளியாவதற்கு முதல் நாள் திரையிடப்பட்டிருக்கும் ஓடித் தேய்ந்த படத்தை மதியக் காட்சி பார்ப்பது

பரபரப்பான உணவகம், தேநீர் விடுதி தவிர்த்து, அதன் அருகேயிருக்கும் ஆளரவமில்லா கடையைத் தேர்ந்தெடுப்பது

உறவிலும் நட்பிலும் பெரிய முக்கியத்துவம் பெறாதவர் விசேஷங்களுக்கு முன்னரே செல்வது
கைராசியான மருத்துவரை தவிர்ப்பது

அமாவாசை, செவ்வாய்கிழமைகளில் அசைவம் வாங்கச் செல்வது

என நீளும் என் பழக்கங்கள்

யோசித்துப் பார்த்தால் ஊரில் சிறு வயதில் எல்லோரும் விரும்பிக் குளிக்கும் படித்துறையை விட்டு ஆழமில்லா, நீர் போக்கும் குறைவான ஆற்றுக்கரையிலேயே குளித்திருக்கிறேன்.

யாரும் விரும்பிச் சேராத டியூசனில் சேர்ந்திருக்கிறேன்

அந்த வரிசையில் இப்போது ஞாயிறு அன்று பணிக்குச் செல்வதும் சேர்ந்து விட்டது

ஞாயிறன்று பணிக்கு வருபவரின் மீது எந்த மேலாளரும் கடுஞ்சொற்களை பிரயோகிப்பதில்லை

வார நாட்களில் பயமுறுத்தும் எந்த கோப்பும் ஞாயிற்றுக்கிழமைகளில் மென்மையாகவே நடந்து கொள்கிறது

குறைவாகச் சமைப்பதால் நன்றாகச் சமைக்கும் அலுவலக உணவகத்தின் சமையல்காரர் வாஞ்சையுடன் பரிமாறுவார். யாரிடமும் பகிரமுடியாமல் இருப்பவற்றை இறக்கி வைப்பார்.

மற்ற நாட்களில் எடுக்கவே அச்சமூட்டும் அலுவலகத் தொலைபேசி கூட கனிவாகவே பேசுகிறது

நேரடிப் போட்டியில் இந்த இடங்களிலெல்லாம் உனக்கு அங்கீகாரம் கிடைக்காது என்பதால்தானே இந்த பழக்கமெல்லாம்? என புத்தி கேட்கிறது

அங்கீகாரம் வேண்டா மனது மனிதனின் மனதல்லவே என பதிலளிக்கிறது மனது