தெருவில்
சில பெண்கள் இருப்பார்கள்.
அவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் கண்களுக்கு மிகச் சாதாரணமாகத் தெரிவார்கள். ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ரெட்டைச்சடையில் பார்க்கும் போது மனதில் எந்த பட்டாம்பூச்சியும்
பறக்காது. ஆனாலும் அவர்கள் செட்டில் சில பையன்களுக்கு அவள்தான்
உலக அழகியாய் இருப்பாள். அதுபோலத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தில்
ராதவைப் பார்த்தபோது பெரிய அழகி என்ற எண்ணம் ஏற்படவில்லை.பெரும்பாலான
காட்சிகளில் டல் மேக்கப்புடன் தான் இருந்தார். இந்தப் படம் எங்கள்
ஊருக்கு முத்துராமன் மகன் நடிச்ச படமாம் என்ற அறிமுகத்துடனேயே வந்தது. பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தன. முக்கியமாக
“வாடி என் கப்பக்கிழங்கே” பாடல் மாணவர்களின் பேவரைட்டான
ஈவ் டீசிங் பாடலாக மாறியிருந்தது. முந்தைய தலைமுறையில் மெல்ல
நட மெல்ல நட, தெரு அண்ணன்களுக்கு ஓரம்போ ஒரம்போ மற்றும் சுராங்கனி
என்றால் எங்கள் செட்டிற்கு வாடி என் கப்பக்கிழங்கே. தொடர்ந்து
சிக்ஸர்களாக அடித்துக்கொண்டிருக்கும் ஒரு பேட்ஸ்மென்னின் இன்னொரு சிக்ஸரையும் மக்கள்
சாதாரணமாக கடந்து போவதுபோல இளையராஜாவின் சிறப்பான அலைகள் ஓய்வதில்லை பாடல்களையும் அதிகம்
சிலாகிக்காமல் எங்கள் ஊர் கடந்து சென்றது. ஆனால் வாடி என் கப்பக்
கிழங்கே மட்டும் பள்ளி மாணவர்களிடம் தங்கிவிட்டது. பள்ளி செல்லும்
குமரியின் இயல்பான எழிலுடன் இருந்த ராதாவும்.
இந்தப்
பாடலை எழுதியவர் கங்கை அமரன்.
கேரளாவின் ஸ்பெஷல்களில் ஒன்று கப்பக்கிழங்கு. ராதா
கேரளாவில் இருந்து வந்ததால் அவரை வரவேற்கும் விதமாக எழுதினேன் என்றார். கிழங்காட்டம் இருக்கு என்று ஊர்ப்பக்கம்
சொல்வார்கள், அதன் பொருள் கின்ணென்று உறுதியாக அதிகப்படியாக தொள
தொளவென சதை இல்லாமல்
இருக்கும் பெண் என்று அர்த்தம். ராதாவும் அந்தப் படத்தில் அப்படித்தான்
இருந்தார். மாநிறம் தான். ஆனால் தமிழர்களுக்கு
மிகவும் பிடித்த மாநிறம்.
பத்தாம்
வகுப்பில் சுமாராகத் தெரிந்த பெண்களே பிளஸ் டூ சமயத்தில் சற்று எழில் கூடித் தெரிவார்கள். அது தெருவில் திடீரென அதிகரிக்கும்
அடுத்த தெருப் பையன்களின் சைக்கிள் மூலமே அது நமக்கு அறியவரும். யாருக்குடா இங்க வந்து இவிங்க டாப் அடிக்கிறாங்க? என்ற
கேள்விக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பெண்ணை சுட்டிக்காட்ட அதுக்காடா? என்று குழப்பத்துடன் நடையைக் கட்டுவோம். அப்படி நடிக்க
வந்த ஒராண்டிலேயே எழில்கூடி இளஞ்ஜோடிகள், கோபுரங்கள் சாய்வதில்லை,
காதல் ஓவியம் என ஏராளமான இளைஞர்களை கவர்ந்தார். அந்தப் பெண்களே கல்லூரியில் படிக்கும்
போது எழிலுடன் சற்று ஒயிலும் கூடும். நடை,உடை,பாவனைகள் மெருகேறும். அந்த
ஒயில் அவருக்கு தூங்காதே தம்பி தூங்காதே, பாயும்புலியில் வாய்த்தது.
அந்த ஒயிலில் ஒரு கூட்டம் மயங்கியது.
தெருவில்
பள்ளி யூனிபார்ம், கல்லூரியில் படிக்கும் போது கன்வென்ஷனல் சுடிதாரிலேயே கண்கள் பார்த்து பழகிய
பெண்ணுக்கு திடீரென கல்யாணம் என்பார்கள், வேண்டா வெறுப்பாய் அம்மாவை
அழைத்துக் கொண்டு போகும் டூட்டியால் மண்டபத்திற்குப் போனால் மிதமாய் எடை கூடி,
பளபளப்பு வலுவாகவே கூடி அந்தப் பெண் சேலையில் தேவதை போல் மணமேடை ஏறுவாள்.
அடடா மிஸ் பன்ணிட்டோமே எனத்தோன்றும். அதே போல்
அழகுடன் ஆனந்த் படத்தில் இருப்பார். சி வி ராஜேந்திரன் இயக்கிய
இந்தப் படத்தில் ராதா சேலையில் வரும் காட்சிகள் எல்லாம் ஒரு தேர்ந்த ஓவியர் தன்னை மிகவும் கவர்ந்த பெண்ணை
தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்து வரைந்த ஓவியமாகவே தோன்றும். எங்கள் ஊர் திருவிழாவின் போது தியேட்டர்களில் நடுநிசிக் காட்சியாக அந்த ஆண்டில்
ஓடிய மிகப்பெரும் வெற்றிப்படத்தை மீண்டும் திரையிடும் வழக்கம் இருந்தது. ஆனந்த் ஒரு தோல்விப்படம். ஆனாலும் அந்த திரைப்படத்தை
அந்த ஆண்டு ஒரு முக்கிய தியேட்டரில் வெளியிட்டார்கள். காரணம்
அந்த தியேட்டர் ஓனர் ராதா ரசிகர். பிரபு ஹீரோவாக நடித்த அந்தப்படத்திற்கு
வந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டு ”சங்கிலி” பிரபு ரசிகர் மன்ற நிர்வாகியே மிரண்டு போனார்.
திருமணம்
முடிந்து முதல் வருடம் ஊர் திருவிழாவிற்கு வரும் பெண்கள் இன்னும் மெருகேறி இருப்பார்கள். கொஞ்சம் நாணம் குறைந்து
வீதிகளில் வலம் வருவார்கள். மாலை வேளைகளில் சர்வ அலங்காரத்துடன்
தம்பி, தங்கைகள் உடன்வர திருவிழா கடைகளை அலசுவார்கள்,
அத்தகைய தோற்றத்தில் ராதா இருந்தது எங்க சின்ன ராசா படத்தில்.
எங்க சின்ன
ராசா என்றதுமே பழனி அண்ணன் தான் நினைவுக்கு வருவார். அதிதீவிர திமுககாரர். எங்கள் வார்டின் பூத் ஏஜெண்ட். பாக்யராஜ் அதிமுக அனுதாபி
என்பதால் பாக்யராஜின் படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பார். என்னய்யா இவன் மிமின்னு பேசிக்கிட்டு
இருக்கான் என்பார். அப்போது டி ராஜேந்தர் திமுக அனுதாபி என்பதால்
அவரின் படமான உறவைக் காத்த கிளியை கூட நாலைந்து முறை பார்த்தவர். பாக்யராஜ் பட போஸ்டரை பார்ப்பது கூட
கட்சிக்கு விரோதமான அணுகுமுறை என்ற கருத்தியல் கொண்டவர். அவரை
அசைத்துப் பார்த்தது ராதா தான். வழக்கம் போல பாக்யராஜின் போஸ்டர்
என்று தலையை திருப்பி புறமுகம் காட்ட முயன்றவரின் கண்ணில் ஒரு மின்னல் போல ராதாவின்
அதிலட்சண முகம் படர பாக்யராஜ் படமாக இருந்தாலும் பரவாயில்லை என பார்க்கத் துணிந்தார்.
கொண்டைச் சேவல் கூவும் நேரம் என்ற பாட்டில் மயிலை ஒத்த அசைவுகளுடன் ராதா
ஆட கிறங்கிப் போனார். படத்தை தியேட்டரில் இருந்து தூக்கும் வரை
தினமும் அவர் படத்துக்கு போனதை வைத்து எங்கே அவர் அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற பயம்
கட்சிக்காரர்களுக்கே வந்தது.
தொடர்ந்து
வந்த சில ஆண்டுகள் அந்த தோற்றத்திலேயே தமிழக ரசிகனுக்கு அருள் பாலித்தாள் அந்த அழகு
தேவதை. உழவன்
மகன், அம்மன் கோயில் கிழக்காலே, காதல் பரிசு,
ஜல்லிக்கட்டு, அண்ணா நகர் முதல் தெரு, பிக்பாக்கெட், ராஜாதி ராஜா எல்லாம் ராதா உச்சக்கட்ட அழகோடு
இருந்த காலத்தில் வெளியான படங்கள்.
ஒரு விஷயத்தில்
ஒரு மனத்தடை இருந்தால் அதை இன்னொருவர் செய்யும் போது அது விலகும். இது உடை விஷயத்தில் மிகப்பொருந்தும்.
எங்கள் ஏரியா திருமணங்களில் முதல்நாள் மணமகனுக்கு பேண்ட்,சர்ட் முகூர்த்த நேரத்தில் வேட்டி, தாலி கட்டி முடித்து
பரிசுப் பொருட்கள் (மொய்
கவர் தான்) வாங்கும் போது கோட் சூட் என்பது வழக்கம். மென்பொருள் நிறுவனங்களில் ஊர்க்காரர்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர்
அங்கு நடக்கும் திருமணங்களில் ஷெர்வாணி, குர்தா, ஆப் பிளேசர் என வெரைட்டியாக மணமகன்
ஆடை அணிவதைப் பார்த்து ஆசை கொண்டனர். ஆனால் அதைப் போட்டுவந்தால்
என்னடா குடுகுடுப்பைக்காரன் மாதிரி இருக்கே என கலாய்த்து விடுவார்களோ என பயந்து ஆசையை
அடக்கிக் கொண்டனர். வசதியான அத்தை, தனக்குப்
பெண் கொடுக்காததால் வீம்புக்கு நிறைய செலவு செய்து கல்யாணம் செய்த மேலத்தெரு ரமேஷ்
செலவோடு செலவாக ஒரு ஷெர்வாணியையும் இறக்கினார். நல்லாத்தான இருக்கு
என அதை சமூகம் ஏற்றுக்கொண்டது. இப்போது முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு
ஷெர்வாணி என்பது சம்பிரதாய உடை அளவிற்குப் போய்விட்டது.
அதுபோலத்தான்
இந்த சுடிதாரையும் அணிய தமிழகத்துப் பெண்கள் தயக்கம் காட்டி வந்தனர். காதலிக்க நேரமில்லை காஞ்சனா
முதற்கொண்டு, ஜெயலலிதா ஏன் ஸ்ரீதேவி வரை சல்வார் கம்மீஸில் வலம்
வந்தாலும் பெரும்பாலான தமிழ்ப்பெண்கள் சுடிதார் அணிய தயக்கம் காட்டினர். பப் கை வைத்த ஜாக்கெட், பன் கொண்டை என நடிகைகளிடம் இருந்து
பல பேஷன்களை ஏற்றுக்கொண்டவர்கள் சுடிதார் விஷயத்தில் மட்டும் தயக்கம் காட்டிக்கொண்டே
இருந்தார்கள். ராதா இதயகோவில், அண்ணா நகர்
முதல் தெருவில் அணிந்த சுடிதார்கள் பாந்தமாக இருப்பதைப் பார்த்து பலரும் முயற்சி செய்தார்கள்.
தமிழ் பெண்களின் சுடிதார் மீதான மனத்தடையை நீக்கியதில் ராதாவுக்கும்
ஒரு பங்குண்டு.
சிவாஜி
கணேசன், சிவகுமார்,
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு,
கார்த்திக், மோகன், பாக்யராஜ்,
டி ராஜேந்தர் என அனைத்து முண்ணனி நாயகர்களுடனும் ராதா நடித்தார்.
ஏன் எஸ் பி பாலசுப்பிரமணியம், நிழல்கள் ரவியுடனும்
நாயகியாக நடித்தார். யாருடன் அவர் நடித்தாலும் வித்தியாசமாகத்
தெரியவில்லை. எந்த நாயகருடன் இணையாக நடித்தாலும் பொருந்திப்போகும்
உயரம்,உடல் அமைப்பு மட்டுமில்லாமல் நடிப்பும் இருந்ததால் எல்லோருடனும்
ஈடுகொடுத்து நடித்தார்.
கனவுக்கன்னி
என்பது மாஸ் ஹீரோவுக்கு இணையான ஒரு பதம்.
பெரும்பாலான ஆண்களுக்குப் பிடிக்கவேண்டும். ஸ்ரீதேவிக்குப்
பின் அந்த கனவுக்கன்னி அந்தஸ்து ராதாவுக்கு வந்தது. அப்போது மாதவி
போட்டியில் இருந்தாலும் அவரை மீறி பலரின் மனங்களில் இடம்பிடித்தார் ராதா. அடுத்து ராதாவின் சகோதரி அம்பிகா, ரேவதி, நதியா என மக்களுக்குப் பிடித்த நடிகைகள் வந்துகொண்டேயிருந்தாலும் கனவுக்கன்னியாக
ராதாவே நிலைபெற்றிருந்தார். தர்மத்தின் தலைவனில் அறிமுகமாயிருந்தாலும்
வருஷம் 16 மூலமாகவே அந்த கனவுக்கன்னி அந்தஸ்து குஷ்பூவுக்கு இடம்மாறியது.
நம்மை
ஒருமுறையாவது பார்ப்பாளா என்று நாம் பார்த்து ஏங்கிய பெண் மிகச் சுமாரான அழகுடையவனை
திருமணம் செய்துகொண்டால் ஒரு மென்சோகம் நம்மைத்தாக்குமே அதுபோலவே 90கள் ஆரம்பித்த உடன் ராதா,
டி ராஜேந்தர், எஸ் பி பாலசுப்பிரமணியம் இவர்களுடன்
நடிக்க ஆரம்பித்ததும் ராதா ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மனைவி ஒரு
மாணிக்கம் படத்தில் மலையாள நடிகர் முகேஷின் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் அர்ஜூன் இருந்தும்.
இந்த சமயத்தில்
குஷ்பு, ரூபிணி,
கௌதமி, பானுபிரியா போன்றோர் தமிழக இளைஞர்களின்
மனங்களை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள். 91ல் மும்பையைச் சேர்ந்த
தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை ராதா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி வந்தது.
அதன்பின்னர் ராதா பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒருதலையாய் காதலித்த பெண் திருமணம் செய்து கொண்டு தூரதேசம் சென்றதைப் போலவே
பல ராதா ரசிகர்களும் இந்நிகழ்வை எடுத்துக்கொண்டார்கள்.
பின் ராதா
மகள்கள் கார்த்திகா, துளசி நடிக்க வந்தபோது கூட யாரோ எவரோ என்றே பல ராதா ரசிகர்களும் அவர்களை கண்டுகொள்ளவில்லை.
சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக ராதா இப்போது இருக்கிறார் என்ற
செய்திகள் வந்தது. மறந்தும் கூட அந்த சேனல் பக்கம் செல்லவில்லை.
சமீபமாக இன்னும் நிறையப்பேர் அதுபோலவே இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன்.
தேவதையாய் கண்ட பெண்ணை சராசரி பெண்ணாக மீண்டும் பார்க்க யார்தான் துணிவார்?
4 comments:
முரளிக்கண்ணன் செம்மையா எழுதி இருக்கீங்க.. கலக்கல் :-) . ரொம்பவே ரசித்து படித்தேன்.. ராதாவின் ரசிகர் இல்லையென்றாலும்.
"பத்தாம் வகுப்பில் சுமாராகத் தெரிந்த பெண்களே பிளஸ் டூ சமயத்தில் சற்று எழில் கூடித் தெரிவார்கள்"
இது உண்மை தான்.அலைகள் ஓய்வதில்லை ரொம்ம்ம்ம்ம்ப சுமார் தான்.. ஆனால்.. அதன் பிறகு அம்மாடி..
நீங்க மெல்லத்திறந்த கதவு விட்டுட்டீங்க என்று நினைக்கிறேன். அதுல செமையா இருப்பாங்க.
"பிரபு ஹீரோவாக நடித்த அந்தப்படத்திற்கு வந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டு ”சங்கிலி” பிரபு ரசிகர் மன்ற நிர்வாகியே மிரண்டு போனார்."
ஹா ஹா ஹா
"படத்தை தியேட்டரில் இருந்து தூக்கும் வரை தினமும் அவர் படத்துக்கு போனதை வைத்து எங்கே அவர் அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற பயம் கட்சிக்காரர்களுக்கே வந்தது. "
கலக்கல்.. :-) :-)
"தமிழ் பெண்களின் சுடிதார் மீதான மனத்தடையை நீக்கியதில் ராதாவுக்கும் ஒரு பங்குண்டு."
நான் நதியா என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.
சுடிதார் என்றால் நதியா தான் என் நினைவுக்கு வருகிறார் அதன் பிறகு ரேவதி. ராதா என்றால் புடவை தான் நினைவுக்கு வருகிறது.
"அடுத்து ராதாவின் சகோதரி அம்பிகா, ரேவதி, நதியா என மக்களுக்குப் பிடித்த நடிகைகள் வந்துகொண்டேயிருந்தாலும் "
ராதா அம்பிகாவின் தங்கை தானே! எனவே.. அம்பிகா க்கு பின்னர் ராதா என்பதே சரி.
"நம்மை ஒருமுறையாவது பார்ப்பாளா என்று நாம் பார்த்து ஏங்கிய பெண் மிகச் சுமாரான அழகுடையவனை திருமணம் செய்துகொண்டால் ஒரு மென்சோகம் நம்மைத்தாக்குமே"
:-) மென் சோகமா.. பாஸ் அது ரொம்ப சோகம் ஆனால், மென்சோகம் வார்த்தை பதம் நன்றாக உள்ளது.
"தேவதையாய் கண்ட பெண்ணை சராசரி பெண்ணாக மீண்டும் பார்க்க யார்தான் துணிவார்? "
சரியா சொன்னீங்க.. அந்த நினைவிலேயே இருப்பது ஒரு சுகம் தான் :-)
சமீபத்தில் விஜய் டிவியில் எதோ நிகழ்ச்சியில் ராதாவை பார்த்து பயந்து விட்டேன்.
// படத்தை தியேட்டரில் இருந்து தூக்கும் வரை தினமும் அவர் படத்துக்கு போனதை வைத்து எங்கே அவர் அதிமுகவிற்கு மாறிவிடுவாரோ என்ற பயம் கட்சிக்காரர்களுக்கே வந்தது. //
விழுந்து விழுந்து சிரித்தேன் ..செமை முரளி
தொடர்ந்து எழுதுங்க ராசா
// தமிழ் பெண்களின் சுடிதார் மீதான மனத்தடையை நீக்கியதில் ராதாவுக்கும் ஒரு பங்குண்டு.//
சான்சே இல்ல தல...
செம ரைட் அப் முரளி
செமை
Post a Comment