திருமணமாகி மூன்றாண்டுகள் வரை குழந்தை இல்லாததால் என் மனைவி
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டுதல்
வைத்திருந்தார். அதன் பின் பிறந்த மகளுக்கு குல தெய்வ கோவிலில் காதுகுத்து
முடிந்ததும், இரண்டு வருடம் கழித்து நேர்த்திக்கடனுக்காக
திருப்பரங்குன்றத்தில் மொட்டை போட வேண்டியிருந்தது. மனைவியின் அண்ணனிடம்
தகவல் தெரிவித்த போது, வந்தால் செலவோ என நினைத்து நீங்களே அப்படியே போய்
பண்ணிக்குங்க என்றார். என் வீட்டாரிடம் கேட்டதற்கு, நீங்க வேண்டினது தானே,
முடியறப்போ போய் பண்ணிக்குங்க என்றனர்.
சாதாரண நிகழ்வுதான். இருந்தாலும் இது ஒரு நேர்த்திக்கடன். சொந்த பந்தம் இல்லாமல் குழந்தையை மட்டும் கூப்பிட்டுக்கொண்டு போய் மொட்டையடித்து கூட்டி வர மனதிற்கு சங்கடமாய் இருந்தது. உறவு என யாராவது உடன் வந்தால் நல்லாயிருக்கும் எனத் தோன்றியது. மனைவியோ, விடுங்க, நாம மட்டும் போயிட்டு வந்திருவோம். காதுகுத்தா இவ்வளோ பீல் பண்ணுறீங்க என சுலபமாக எடுத்துக் கொண்டார்.
அடுத்த வாரம் ஞாயிறு போகலாம் என முடிவெடுத்த போது, எனக்கு முத்து மாமாவை அழைத்தால் என்ன எனத் தோன்றியது. அவர் என் அம்மாவின் ஒன்று விட்ட அண்ணனின் மகன். ஏழெட்டு வயது தான் வித்தியாசம் இருக்கும். எங்கள் சொந்தத்தில் முதன் முறையாக அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே சொந்த பந்தம் எல்லோரின் வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார். திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்தில் நுழைந்தால், ஸ்டோர் ரூம் இன்சார்ஜ் தொடங்கி பந்தி வரை கவனம் செலுத்துவார். பெண் வீடென்றால் சீர் வரிசையை இறக்கி வைத்து விட்டுத்தான் வீடு திரும்புவார்.
எங்கள் பகுதிகளில் இறப்பை “பெரிய காரியம்” என்று தான் சொல்வார்கள். எழவு என அமங்கலமாக சொல்லக்கூடாது என்பார்கள். ஏரியாவில் எந்த பெரியகாரியமாக இருந்தாலும் முத்து மாமா அங்கே இருப்பார். தொடர்பான எல்லோருக்கும் தகவல் தெரிவிப்பது தொடங்கி, இறுதி ஊர்வல ஏற்பாடுகள், இடுகாட்டு சம்பிரதாயங்கள் என பம்பரமாய் சுழல்வார். வயதானவர்கள் கூட நாம செத்தா, நம்ம பிள்ளைகளுக்கு தகவல் போவதை விட முதலில் முத்துவிற்குத்தான் போக வேண்டும் என நினைப்பார்கள். படிப்பு முடிந்து மதுரையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், மாலை வேளை, விடுமுறை நாட்களில் எந்த காரியத்திற்கும் அழைப்பின்றி வருவார்.
அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்து அனுப்பவதில் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பார். டிசம்பர் மாதத்தில், அரையாண்டுத் தேர்வு முடிந்த உடனேயே புது மண்டபத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகளைத் தேடித்தேடி வாங்குவார்.
அப்போது தான் திருமணவார்கள் எனில் வெண்ணை உண்ணும் கிருஷ்ணர், பால முருகன், குழந்தை ஏசு என வாழ்த்து அட்டைகள் வாங்குவார். வசதி குறைவால் அவதிப்படுவோர் எனில் திருப்பதி வெங்கடாஜலபதி, மனக்கஷ்டம் உள்ளவர்களுக்கு ஊழ்வினை அறுக்கும் ஈசன், எம்ஜியார் ரசிகர்களுக்கு எம்ஜியார், சிவாஜி ரசிகர்களுக்கு சிவாஜி. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய்காந்த் என யார் யாருக்கு என்ன பிடிக்குமோ அதை ஞாபகம் வைத்து, தேடித்தேடி வாங்குவார். இயற்கை காட்சிகள், பொங்கும் பானை என அவரவர் ரசனைக்கு வாங்குவது மட்டுமின்றி, பொருத்தமான பொங்கல் வாழ்த்து வாசகங்களை அட்டையின் உள்ளே ஸ்கெட்ச்சால் அழகாக எழுதி அனுப்புவார்.
அவர் திருமண சமயம் நான் வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்கு அவ்வப்போதுதான் வருவது. பின் ஒரு சமயம், முத்தும் அப்படித்தான்யா பொண்டாட்டி வந்த உடனே மாறிட்டான் என உறவினர்கள் விசேஷங்களில் பேசிக் கொண்டனர். என்னிடம் வழக்கம் போல பரிவுடன் என்னடா மாப்பிள்ளை என்று அழைத்துப் பேசுவார். பின் ஓரிரு வருடங்கள் கழித்து திருச்சியில் வேலை கிடைத்து அங்கே சென்று விட்டார். அவ்வப்போது ஏதாவது விசேஷங்களில் சந்திப்பது உண்டு. சிறுவயதில் அவர் மீது எனக்கு ஏற்பட்ட பாசம் இன்று வரை குறைந்ததில்லை.
மனைவியிடம் இது பற்றி ஆலோசித்தேன். இப்படி அவர மட்டும் கூப்பிட்டா மத்தவங்க என்ன நினைப்பாங்க? என்றார். நம் இருவர் வீட்டிலுமே வரத் தயங்குகிறார்கள். மற்றவர்களா எடுத்தேறி வரப்போகிறார்கள்? அவர் சும்மா எதார்த்தமா கோவிலுக்கு வந்தார்னு கூட சொல்லிக்கிடலாமே என்று வாதித்து விட்டு, எனக்குத் தெரிஞ்சு அவர் நல்ல மனுசன், அவர் ஆசிர்வாதம் என் பிள்ளைக்கு வேணும்னு ஆசைப்படுகிறேன் என்றேன். இன்னும் சொல்லப்போனா அவர் வருவாரான்னு கூடத் தெரியலை. என் மனத் திருப்திக்கு அவரப் போய் கூப்பிடுகிறேன் என மனைவியை ஓரளவு சமாதானப்படுத்திவிட்டு திருச்சிக்கு பஸ் ஏறினேன்.
அவர் வீட்டிற்குச் சென்றதும் மிக சந்தோசமாக வரவேற்றார், வாடா மாப்பிள்ளை என்னடா விசேஷம் என்றார். வாங்கிச் சென்ற பழம், ஸ்வீட்களை அக்காவிடம் கொடுத்து விட்டு நல்லா இருக்கீங்களாக்கா என்று கேட்டுவிட்டு விஷயத்தைச் சொன்னேன். நிச்சயம் வர்றேண்டா, மூத்த பொண்ணு பிளஸ் 2. அதனால இவ இங்க பிள்ளைகளை பார்த்திக்கிரணும் நான் வந்துடுறேன் என்றார். சிற்றுண்டி முடிந்ததும், நான் ட்ராப் பண்றேன் என பைக்கில் அழைத்து வந்தார். பேருந்து நிலையத்திற்கு சற்று முன்னர் ஒரு கடையில் நிப்பாட்டி, இருடா, டீ சாப்பிட்டு போகலாம் என்றார்.
டீ குடிக்கும் போது, மாமா தப்பா நினைக்காட்டி ஒன்னு கேட்கவா என்றேன். சொல்றா என்றார். நீங்க, எல்லா காரியத்தையும் எடுத்துச் செய்வீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் அப்படியே விட்டுட்டீங்க. என்னாச்சு மாமா? என்றேன்.
மாப்ள, நான் எல்லார் விசேஷத்துக்கும் என்னால முடிஞ்சத செஞ்சேன். என் கல்யாணத்துக்கு அப்படி வந்து நிறைவா இருப்பாங்கன்னு பார்த்தேன். வந்தவங்க யாரும் ஒரு துரும்ப கூட தூக்கி வைக்கல. சரி பெரியவங்கன்னு பார்த்தா, நிறையப் பேர் வரவேயில்லை. வந்தவங்க கிட்ட மொய் கொடுத்து விட்டாங்க. சரி பரவாயில்லை அவங்களுக்கு என்ன வேலையோ, வேர விசேசமோ, சூழ்நிலையோன்னு விட்டுட்டேன். அடுத்து என் மனைவி பிரசவம், அப்புறம் காதுகுத்து எதுக்குமே யாரும் என்னன்னு கூட கேட்கலை. சொந்த பந்தம், கூப்பிடாம வந்து வேலை செய்யுறவனை வேலைக்காரனாத்தான் பார்க்குது. தனக்கு சமமா பார்க்கிறதில்லை.
என்னைய நம்பி ஒருத்தி வந்திருக்கா, அது போக என்னை நம்பியே ரெண்டு பிள்ளைக இருக்கு. அவங்களுக்கு ஒரு மரியாதை வேணும். அது நான் இப்படி எல்லோர்கிட்டயும் மனசு கோணாம நடந்து, இறங்கிப் போய் வேலை செய்யுறதுனால கிடைக்காம போகுதுங்கிறப்ப அத நான் ஏன் செய்யணும்?
எல்லார்கிட்டயும் தான் எல்லார் நம்பரும் இருக்கு. நான் யாருக்காவது போன் பண்ணினா என்னப்பா எங்களையெல்லாம் மறந்துட்டியா முன்ன மாதிரி இல்லங்கிறாங்க. ஏன் நீங்களா ஒரு தடவயாச்சும் என் கூட பேசக்கூடாதா? ஒரு பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லக்கூடாதா?
அவங்க மதிச்சாங்கன்னா நாம எறங்கிப் போகுறது தப்பில்ல. இல்லைன்னா சொந்தத்துக்கிட்ட கொஞ்சமாச்சும் கெத்தாத்தான் நடந்துக்கிடணும். மனைவி, பிள்ளைகளோட மரியாதை நாம கெத்தா இருக்கிறதுல தான் இருக்கு.
உனக்குத் தெரியும்லடா, எத்தனை வாழ்த்து எவ்வளோ பேருக்கு அனுப்பியிருப்பேன் பொங்கலுக்கு? அப்ப எனக்கு ஒன்னு கூட வந்ததில்லைடா. அட ஒரு நன்றி கார்டு. அப்ப நாலணா ஸ்டாம்ப் சேர்தே எட்டணா தான் வரும். அதக்கூட ஒருத்தனும் வாங்கி அனுப்பினதில்ல எனக்கு என பொரிந்து தள்ளி முடித்தார்.
பஸ்ஸில் திரும்பி வரும் போது முத்து மாமாவின் வேதனை மனதை சங்கடப்படுத்திக் கொண்டேயிருந்தது. எல்லோருக்கும் நல்ல பிள்ளையாகிறேன் என மனைவி, மகளை நானும் விட்டுக் கொடுக்கிறேனோ என்ற எண்ணமும்.

No comments:
Post a Comment