February 22, 2020

பூபதி அண்ணன்

பூபதி அண்ணன் லாட்டரி சீட்டுக்கடை எனக்கு அறிமுகமானது சுசீலன் சார் மூலம்தான். நியூமராலஜி, ஜோசியம் போன்றவற்றில் அதீத ஈடுபாடு கொண்ட அவருக்கு ஆறாம் எண் ராசி என ஒரு ஜோசியர் மட்டையை கட்டி விட அவருக்கு ஆறாம் எண் பித்து பிடித்துவிட்டது. அப்போது ஆறாம் வகுப்பில் ஆறாம் எண் ரோல் நம்பராகக் கொண்ட என்னை, தனக்கு லாட்டரி சீட்டு வாங்கித் தரும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். பிரதி வெள்ளிக்கிழமை ராகு காலம் 10.30-12.00 முடிந்ததும் ஸ்டாப் ரூமிற்கு போக வேண்டும். அவர் என்னை கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி ஆறு ரூபாய் கொடுப்பார். ஆறு லாட்டரி சீட்டுகள் வாங்கிவர வேண்டும். லாட்டரி சீட்டு எண்ணின் கூட்டுத்தொகை ஆறாக இருக்க வேண்டும் என்பார். காலையில் இட்லி கூட எண்ணி ஆறுதான் சாப்பிடுவார் என்று பேசிக்கொள்வார்கள்.

மேகாலயா, ராயல் பூட்டான், கஞ்சன் ஜங்கா, சிக்கிம், அஸ்ஸாம் போன்ற வட கிழக்கு நாடுகளின் சீட்டுக்கள் தான் வாங்க வேண்டும் என்பார். தமிழ்நாடு ஆகாது. கேட்டால் தென் திசை என்பார். ஆனால் மற்ற சார்களோ தமிழ்நாட்டுல சீட்டுல வரி அதிகம் பிடிப்பாங்க. லட்சம் விழுந்தாலும் 65 ஆயிரம் தான் கிடைக்கும். மத்ததுல எழுவது எம்பது தேறும் என்பார்கள். முதல்முறை நான் வாங்கித்தந்த சீட்டில் அவருக்கு 50 ரூபாய் பரிசு விழுந்து விட்டது. அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. ஏஜெண்ட் கமிசன் போக 45 ரூபாய் பூபதி அண்ணன் எண்ணிக் கொடுத்தார்.

அடுத்து ஆறில் இருந்து 15 ரூபாய்க்கு சீட்டு வாங்க ஆரம்பித்தார் சுசீலன். பூபதி அண்ணனுக்கு சந்தோசம். பத்து சீட்டு வித்துட்டு வர்றவனுக்கு ஒரு ரூபா கமிசன் தர்றேண்டா. வாராவாரம் நீ அவருக்கு சீட்டு வாங்கும் போது ஒரு ரூபா நீயும் வாங்கிக்கோ என்றார். அதனால் ஆர்வமாக வெள்ளிக்கிழமை 12.03க்கு சுசீலன் சார் ரூமில் ஆஜராகி விடுவேன். அந்த சமயத்தில் தமிழக அரசின் தீபாவளி சூப்பர் பம்பர் குலுக்கல் 2 கோடி ரூபாய் பரிசு சீட்டு வெளியிடப்பட்டது. அப்போது இம்மாதிரி பெரிய தொகை பரிசு சீட்டு எனில் கூட்டணி சேர்த்து வாங்குவார்கள். யாராவது ஒருவருக்கு சுக்கிரதிசை இருந்து அவர் மூலமாவது பரிசு கிட்டட்டுமே என்று. சுசீலன் சாரும் தன் ராசிப்படி ஆறு பேர் சேர்ந்து வாங்கத் திட்டமிட்டார்.

பூபதி அண்ணன் கடைக்கு 5 சீட்டுகள் மட்டுமே வாங்கி வந்தார். நம்ம ஊருல இதெல்லாம் அவ்வளவு ஓடாதப்பா என்றார். சோதனைக்கு என அதில் கூட்டுத்தொகை ஆறு வரவில்லை. இதைக் கேட்டு சுசீலன் சாருக்கு வருத்தம். நான் உடனே சார் மதுரை பஸ் ஸ்டாண்ட் கே ஏ எஸ் சேகர் கடையில் போய் வாங்கிட்டு அடுத்த பஸ் பிடிச்சு வந்துடுறேன் சார் என்றேன். இல்ல பூபதிகிட்டயே கேட்டுப்பாரு அடுத்தவாரம் வாங்கி வரச்சொல்லு என்றார். மதுரைக்கு வாரம் ஒருமுறைதான் கொள்முதலுக்கு போவார் பூபதி. சுசீலனின் பங்குதாரர்கள் அதுக்குள்ள நல்ல நம்பர் போயிருச்சுன்னா, இவனவே அனுப்பிடலாம் என்றார்கள். அடுத்த நாளே காலை பள்ளியில் பையை வைத்துவிட்டு பஸ் ஸ்டாண்ட் வந்து மதுரைக்கு கிளம்பினேன். வாழ்க்கையில் முதல் ஆன் டியூட்டி ஆறாம் வகுப்பில் வாய்த்தது எனக்கு.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் காலை 12 மணி அளவில் இறங்கும் போது நல்ல வெயில். இறங்கிய உடனேயே அந்தக் குரல் கேட்கத்துவங்கியது. தென்னகத்தின் கைராசி மன்னன் கே ஏ எஸ் சேகர், இதுவரை 64 பேருக்கு முதல் பரிசாக மட்டும் ஐந்து கோடிக்கு மேல் வாங்கித்தந்த கைராசி ஏஜெண்ட் என ரிக்கார்ட் செய்யப்பட்ட குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. கடைக்கு முன்னால் நல்ல கூட்டம். சின்னப் பையனாக இருந்ததால் விற்பனையாளர் கவனிக்கவில்லை. அண்ணே அன்ணே என தொடர்ந்து கத்தவும் என்ன எனக் கேட்டார். தமிழ்நாடு சூப்பர் பம்பர் குலுக்கல் 2 கோடி சீட்டு ஒன்னு வேணும் என்றதும் நூறு ரூபா டிக்கெட்டு தெரியுமா என்றார். இந்தா வச்சிருக்கேன். கூட்டுத்தொகை ஆறு வர்றது மாதிரி வேணும் என்றதும், யாரு எங்க என விசாரித்தார். பூபதி அண்ணன் ரெபரன்ஸ் எல்லாம் சொல்லவும் எடுத்துத் தந்தார். டிக்கெட் வாங்கிவிட்டு அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு சப் ஏஜெண்ட்கள். விற்பனையாளர்கள், கல்லாவில் பணம் விழுந்து கொண்டே இருந்தது.

இப்பொது நினைத்துப் பார்த்தால், எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியிருந்தார் என ஆச்சரியம் தான். மக்களுக்கு சூதாட்டம், திடீர் பணக்காரன் ஆகுதல் போன்றவற்றில் இருந்த நம்பிக்கையை நல்ல பிஸினஸ் மாடலாக மாற்றினார். தீவிர ஆசையுள்ளவர்கள் தான் கடைக்கு வருவார்கள், மற்றவர்களிடம் நாம் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என டிக்கெட்டுக்கு 10% கமிசன் கொடுத்து ஏராளமானவர்களை விற்பனையாளர் ஆக்கினார். பேருந்திற்குள் சென்று விற்பது, மாற்றுத்திறனாளிகள், பூக்கூடை பெண்டிர் என எங்கெல்லாம் மக்கள் காசை எடுப்பார்களோ அங்கே இதையும் சேர்த்து வாங்கட்டும் என நினைத்தார். அதைவிட கே ஏ எஸ் சேகர் போல ஆகிவிட வேண்டும் என ஒரு ஆசையை நூற்றுக்கணக்கானவர்களிடம் விதைத்திருந்தார். எப்போதும் பட்டு வேட்டி, லேசான மஞ்சள் நிற பட்டு சட்டை என சிரித்த முகமாக புல் மேக்கப்புடன் திரிவார்.

ஊருக்குள்ள மார்க்கெட் ஏரியால பத்துக்கு பத்து இடத்துல கடை போடு. பெருமாள் படத்தோட ஒரு அஞ்சு சாமி போட்டோ, டிக்கெட் வைக்க ஒரு ஆறுக்கு மூணு மர டேபிள், அது சரிவா இருக்கணும். கூடவே ஒரு மாருதி ஆம்னி. தவணைக்கு வாங்கீரணும் என கனவோடு பலரை அலைய வைத்தார். சுற்றுப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் அந்த மாருதி ஆம்னியில் போய்த்தான் டிக்கெட் விற்பார்கள். பூபதி அன்ணனும் அந்தக் கூட்டத்தில் ஒருவர். அவருக்கும் கே ஏ எஸ் சேகர் போல ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. திருச்சியில கே ஏ எஸ் ராமதாஸ், கோயம்புத்தூர் பக்கம் ஏதோ மணிங்கிறாங்க. அது மாதிரி ஆகணும் என்பார்.

டிக்கெட் வாங்கி பள்ளிக்குத் திரும்பி, சுசீலன் சாரிடம் கொடுத்தாயிற்று. பசங்களுக்கு விசயம் தெரிந்து விட்டது. அடுத்த நாள் காலை செல்வி அத்தை கடைக்கு ஆப்பம் வாங்கப் போன போது, உடனிருந்தவன், என்னடா மதுரைக்கு தனியாப் போய் டிக்கெட்லாம் வாங்கிட்டு வந்தியாமே என்று கேட்டான். செல்வி அத்தைக்கு ஆச்சரியம். என் தந்தையின் ஒன்று விட்ட அக்காள் அவர். காலை பனியாரமும், வெல்ல ஆப்பமும் மதியம் வடையும் சுட்டு விற்பவர். அவருக்கு திருமண வயதில் ஒரு பெண். ஒரு மூணு பவுன் இருந்தாப் போதும் இவள தள்ளி விட்டுடலாம் என அங்கலாய்த்துக் கொண்டேயிருப்பார். சில சீட்டுகளும் கட்டி வந்தார். அவருக்கு ஒரு ஆசை. லாட்டரியில ஏதாச்சும் விழுந்தா இவளைக் கரையேத்திடலாம் என்பார். நான் ஏந்த்தை, அதெல்லாம் ஆயிரத்துல ஒருத்தருக்கு அடிக்கும். இந்த வாத்தியாருங்க ஜாலிக்கு வாங்கிப் பார்க்கிறாங்க உங்களுக்கெதுக்கு என்றேன்? ஒரு ரூபாய்க்கு மட்டும் அப்பப்போ வாங்கிக் கொடுடா என்றார்கள்.

தெரிந்த சர்க்கிளில் யாராவது ஒருவருக்கு விழும் ஒரு லட்ச ரூபாய் ஆயிரக்கணக்கானவர்களை இந்த சுழலுக்குள் இழுத்து விடுகிறது. பெரும்பாலும் தின ஊதியக்காரர்கள்தான், பூ கட்டி விற்பவர்கள், இட்லி,பனியாரக்கடைக்காரர்கள், சுமை தூக்கிகள், பார வண்டி இழுப்பவர்கள், கொத்தனார், சிற்றாள் என பாரபட்சமில்லாமல் அப்போது லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு தடவ நமக்கு விழுந்திட்டா நம்ம வாழ்க்கையே மாறிப்போகுமே என பலியாகிக் கொண்டிருந்தார்கள். காலை ரிசல்ட் பேப்பர் வரும் முன்னரே காத்திருந்து, அந்த ரிசல்டைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் எனும் அளவிற்கு நிறையப் பேரை இந்த பைத்தியம் பிடித்து இருந்தது.

நானும் பூபதி அண்ணன் கடையில் அவ்வப்போது கிடைக்கும் டீக்காகவும், பேன் காற்றுக்காகவும், டேப் ரிக்கார்டர் பாட்டுக்காகவும் டிக்கெட் வாங்கிக் கொடுப்பவனாக மாறியிருந்தேன்.

தமிழ்நாடு 2 கோடி குலுக்கலுக்கான நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று இரண்டு கோடி என்பது ஒர் மிகப்பெரிய பணம். முக்கிய கடைவீதியில் சென்ட் 4500 ரூபாய் விற்ற காலம் அது. இப்போது பத்து லட்சத்திற்கு மேல் கொடுத்தாலும் தரமாட்டோம் எனும் காலகட்டம். டிக்கெட் விலை நூறு ரூபாய் என்பதுதான் மக்களின் தயக்கத்துக்கு காரணமாய் இருந்தது. தீபாவளிக்கு மதுரைக்கு துணி எடுக்கப் போணோம் ஆனது ஆச்சுன்னு ஒரு டிக்கெட்ட வாங்கிட்டோம் என இரண்டு பேர் சொல்லவும் அந்த தயக்கம் குறையலாயிற்று. பூபதி அன்ணன் கூட என்னடா, நிறைய பேர் கேட்டு வர்றாங்க. பத்தா வாங்கிருக்கலாம் போலயே என சலித்துக் கொண்டார். ஆளாளுக்கு கூட்டணி போட்டு வாங்கத் துவங்கியிருந்தார்கள். செல்வி அத்தைக்கு இந்த தகவல் போயி, யார் கூடவாவது சேர்த்து வாங்குடா என் பங்குக்கு பத்து ரூபா தர்றேன் என்றார்.

எங்கள் ஊரில் முதன் முதலாக ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்தது ஆறுமுகம் என்பவருக்கு. அவர் மின்வாரியத்தில் லைன்மேனாக வேலை பார்த்து வந்தார். அந்தப் பரிசு விழுந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் புலம்பியது இது.
பரிசு விழுந்தாலும் விழுந்துச்சு. ஆள் ஆளாளுக்கு ஆஞ்சு போட்டாங்கப்பா. இங்கிட்டு எங்க அக்கா தங்கச்சிகளுக்கு எல்லாம் துணி மணி எடுத்துக்கொடுத்து, அப்புறம் சம்சாரம் வீட்டு ஆளுகளுக்கும் செய்ய வேண்டியதாப் போச்சு. ஆள் ஆளுக்கு காது குத்து, கல்யாணம்னு காசு கேட்டு வர்றாங்க. ஏஜெண்ட் கமிசன், வரி போக எழுபதாயிரம் கிட்ட தான் வந்துச்சு. எத்தனை பேருக்கு அழுகுறது. எப்பயும் அம்பத்தோரு ரூபாய்க்கு மேல மொய் வச்சதில்ல. இங்க பாரு லச்சாதிபதிய இருவது அம்பதுங்கிறான் 500, 1000னு வைக்கணும்கிறாங்க. சைக்கிள்ளதான் வேலைக்குப் போறதுதான் வசதி எல்லோரும் ஒரு டிவிஎஸ் பிப்டியாவது வாங்கக் கூடாதாங்கிறாங்க. தியேட்டருக்குப் போனா என்னயா பேக் பெஞ்சுல உட்கார்றா மாடி சோபா டிக்கெட் எடுக்க வேண்டியது தானேங்கிறாங்க.

பக்கத்துல எந்த கும்பாபிஷேகம் நடந்தாலும் ஒரு மஞ்ச நோட்டீஸ அடிச்சு, ரசீது புக்கோட தேடி வந்துடறாங்க. ஏ ஈ கூட என்னா ஆறுமுகம், லட்சாதிபதி ஆயிட்டேன்னு மதிக்க மாட்டேங்கிறய்யான்னு கேட்கிறாரு. அதெல்லாம் கூட போகட்டும், போன தீபாவளிக்கு கடைகள்ள வசூல் பண்ணின லைன்மேன் காசுல பங்கு தராம, அவருக்கு என்னயா லச்சாதிபதின்னு எனக்கு கொடுக்காம அவங்களே பங்கு போட்டுக்கிட்டாங்க என்று அழுகாத குறை.

எழுபதுகளில் ஒரு லட்சத்திற்கு இதைவிட மதிப்பதிகம். இந்தியாவில் முதன் முதலில் லாட்டரிசீட்டில் ஒரு லட்சம் பரிசு பெற்றவரின் வாழ்க்கை எப்படி மாறியிருந்தது என்பதைப் பற்றி எண்பதுகளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. பரிசு பெற்றவர் சமையல் கலைஞர். வென்றதும் அவருக்கு தலை கால் புரியவில்லை. நண்பர்களோடு ஒரே கூத்து. செகண்ட் ஷோ முடிந்ததும், நண்பர்களுக்காக தனி ஷோ எல்லாம் தியேட்டரில் ஓட்டச் சொல்லி பார்த்திருக்கிறார். ராசுக்குட்டி பட தியேட்டர் சீனெல்லாம் இதைக் கேள்விப்பட்டு எடுத்திருப்பார்களோ என நினைத்ததுண்டு. ஆனால் ஒரு வருடத்திலேயே எல்லாவற்றையும் தொலைத்து ஓட்டாண்டியாகி அவர் நின்றார் எனக் கட்டுரை முடியும்.

நானெல்லாம் ஒரு லாட்டரி அடிச்சாப் போதும் அதை வச்சு கருத்தாப் பொழைச்சுக்கிருவேன்னு எல்லோரும் மனதில் நினைப்பார்கள். அதுவே அவர்களை லாட்டரி வாங்கச் சொல்லி நகர்த்தும் சக்தி. நான் தொடர்ந்து செல்வி அத்தைக்காக கேட்டுக் கொண்டதற்கிணங்க, மூன்று பேர் சேர்ந்து கூட்டணியில் டிக்கெட் வாங்க வந்தவர்களிடம், மூணு ராசியில்லை, இன்னொரு பங்கா பத்து ரூபா ஒருத்தவங்க போடட்டும் எனச் சொல்லி செல்வி அத்தையை ஒரு பங்குதாரர் ஆக்கினார் அண்ணன். அத்தைக்கோ ஒரே பூரிப்பு. ஏதோ பரிசே விழுந்துவிட்டது போல உற்சாகமானார். எப்போதும் துயர வடிவாய் உட்கார்ந்திருப்பவர் முக மலர்ச்சியோடு இருந்தார். ஒருவனிடம் ஒன்று கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே அவனின் நடவடிக்கைகளை எவ்வளவு மாற்றுகிறது என கண்கூடாக கண்டேன். எவ்வளவு கஷ்டத்தில் இருப்பவர்களும் கையில் ஒரு லாட்டரி இருந்தால், ரிசல்ட் வரும் வரை நம்ம கஷ்டம் அடுத்த வாரம் தீர்ந்திடும் என்ற மோடிலேயே வலம் வருவார்கள்.

தீபாவளி குலுக்கல் நாள் நெருங்கியது. பூபதி அண்ணன், எனக்குத் தெரிஞ்சு 15 சீட்டுக்கிட்ட நம்ம ஊர்ல வாங்கியிருக்காங்க. அதுபோக மதுரையில தனியாப் போயி வாங்கினதும் இருக்கு. நம்ம கிட்ட வாங்கினதுல பர்ஸ்ட் பிரைஸ் கூட வேணாம், செக்ண்ட், தேர்ட் பிரைஸ் இல்லாட்டி இருபது ஒரு லட்ச ரூபா பரிசு இருக்கு அதுல ஒன்னு விழுந்தாக்கூட போதும் கைராசி ஏஜெண்ட்னு போர்டு வச்சிரலாம் என்பார். இப்போதைய நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஏங்குவது போல அப்போது லாட்டரி விற்பனையாளர்கள் கைராசி ஏஜெண்ட் பட்டத்துக்கு ஏங்குவார்கள்.

அந்த நாளும் வந்தது. ஊரில் யாருக்கும் கடைசி பரிசான 500 ரூபாய் கூட விழவில்லை. சுசீலன் சார், மதுரைக்குப் போயி வாங்கிட்டு வந்ததுக்காச்சும் ஒரு சின்ன பரிசாவது விழுந்திருக்கலாம் என அங்கலாய்த்துக் கொண்டார். செல்வி அத்தை கடைப்பக்கமே நான் ஒரு வாரத்திற்குப் போகவில்லை. பூபதி அண்ணனும் இப்பத்தான் வளர்ந்து வர்றோம். இப்படி கால வாரி விட்டுருச்சே என புலம்பினார்.

ஒரு வாரம் தான். எல்லோரும் தத்தம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்கள். அடுத்து என்ன குலுக்கல், எப்படி இருக்கும்? என பேச்சுக்கள் ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் ஒரு நம்பர் லாட்டரி வந்தது. கடைசி எண்ணுக்கு பரிசு விழுந்தால் ஒரு தொகை. கடைசி இரண்டு எண் எனில் ஒரு தொகை, ஆறு எண்ணும் சரியாக இருந்தால் முதல் பரிசு என்று வந்த லாட்டரியை பலருக்கும் பிடித்துப் போய் விட்டது. ஐம்பது பைசாதான் ஒரு டிக்கெட். பத்து டிக்கெட் வாங்கினால் எப்படியும் ஒரு டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துவிடும். ஒரு எண் மட்டும் சரியாக இருந்துவிட்டாலே கடைசிப் பரிசான ஐந்து ரூபாய் கிடைத்து விடும். பாதிக்காசு வந்து விட்டதே என ஆறுதல் பட்டுக் கொள்வார்கள்.

இந்த லாட்டரி டிக்கெட் குலுக்கலை அந்தந்த மாநிலங்களில் இருந்து உரிமை பெற்று தலைமை ஏஜெண்டே நடத்திக் கொள்ளலாம் என்பது லாட்டரி வியாபாரிகளுக்கு வசதியாகப் போயிற்று. ஏராளமான சீரியல்களில் அச்சடித்து விற்கத் துவங்கினார்கள். விற்பதில் 12% சீட்டுகள் அளவுக்குத்தான் பரிசு கிடைக்கும். அது விற்கும் லாட்டரி சீட்டு மதிப்பில் 20% அளவுக்குத்தான் வரும். எனவே ஏஜெண்டுகளுக்கு அதிக கமிசன் கொடுத்து விற்கலானார்கள்.

பூபதி அண்ணனுக்கு இந்த ஒரு நம்பர் லாட்டரியில் தான் லாட்டரி அடித்தது. விற்பனை அதிகரிக்க கமிசனும் அதிகரித்தது. தெருவின் முதல் பிளாக் அண்ட் ஒயிட் டிவி, கிரைண்டர் இறுதியாக டி வி எஸ் 50 என பல முதல்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.

முதலாளிகள் என்பவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்காக யோசித்துக் கொண்டேயிருப்பவர்கள். எப்படி தங்கள் முதலீட்டைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே முதலாளியாய் இருக்க முடியும். லாட்டரி தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களின் அடுத்த முன்னேற்றத்திற்கு யோசித்து அறிமுகப்படுத்தியதுதான் சுரண்டல் லாட்டரி. லாட்டரி சீட்டு வாங்கிவிட்டு எதற்கு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும்? காசு கொடுத்து வாங்கிய உடனேயே ரிசல்ட் பார்க்கலாம் என்று அறிவித்து களத்தில் இறங்கினார்கள். மக்களுக்கும் அது பிடித்துப் போயிற்று. லக்கி நம்பர் பார்த்து சீட்ட வாங்கி, அதப் பத்திரமா வச்சிருந்து ரிசல்ட் பார்க்கிறதுக்கு, காச கொடுத்தமா, சுரண்டுனமான்னு போயிடலாம் என நினைத்தனர்.

ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. விட்டத பிடிக்கணும் என்ற சொல் அவர்களை ஆட்டுவித்தது. ஒரு ரூபாய் கொடுத்து, சுரண்டி விழுகவில்லை என்றதும் அடுத்த சீட்டு அடுத்த சீட்டு என்று காசு தீரும்வரை போனார்கள். ஐந்து செண்டிமீட்டருக்கு ஐந்து செண்டிமீட்டர் இருக்கும் அந்த சதுர சீட்டு, பலருக்கு சவப்பெட்டி ஆனது. பாக்கெட்டில் மடித்து வைத்த சீட்டோடு ஒரு ஹேண்ட் பேகில் சீட்டுக்களோடு விற்பனையாளர்கள் வலம் வரத் தொடங்கினார்கள். பஸ் ஸ்டாண்ட், கடை வீதியில் மட்டும் இருந்த அவர்கள் திரையரங்கம், தொழிலகங்கள் அருகிலும் நடமாடத் தொடங்கினார்கள். வார சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அவர்களது இலக்கு. எங்கு வாரச்சம்பளம் கொடுத்தாலும் அங்கே பேக்குடன் சென்று விடுவார்கள்.

கட்டிடத் தொழிலாளிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அந்த இடத்திற்கே சென்று சுரண்டிவிடுவார்கள். கிட்டத்தட்ட குடிபோதைக்கு நிகரான போதை. எப்படி 20-20 வந்ததும் டெஸ்ட் மேட்ச் பிளேயர்களின் மவுசு குறைந்து அதிரடி ஆட்டக்காரர்களுக்கு மவுசு ஏறியதோ அதுபோல கே ஏ எஸ் சேகர், கே ஏ எஸ் ராமதாஸ், மணி, கனி என கோலோச்சியவர்கள் அமுங்கிப் போய் மார்ட்டின் போன்றவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். பல குடும்பங்கள் தெருவுக்கு வந்தன.

2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு லாட்டரிக்கு தமிழகத்தில் தடை விதித்தது. 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலானவர்கள் வேறு தொழிலுக்குப் போய்விட்டார்கள். சிலர் மட்டும் கள்ளத்தனமாக கேரளா லாட்டரிகளை இங்கே தருவித்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பூபதி அண்ணனை சமீபத்தில் சந்தித்தேன். அந்த கடையில் முதலில் பி சி ஓ, அப்புறம் ஜெராக்ஸ் அப்புறம் மொபைல் ரீ சார்ஜ் என வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறார். சுசீலன் சார் ரிட்டயர்ட் ஆனபிறகு உள்ளூர் கிளப்பில் அளவாக சூதாடிக் கோண்டிருக்கிறாராம். செல்வி அத்தை, மகளுக்கு தக்கி முக்கி திருமணம் செய்து கொடுத்து விட்டார். அந்த தெரு வழி போனால், மருமகனுக்கு சூடா ரெண்டு ஆப்பம் கொடு என இப்போது கடையைப் பார்த்துக்கொண்டிருக்கும் மகளிடம் சொல்வார்.

அத்தை, உனக்கு ஒரு முறை 100 ரூபா பரிசு விழுந்துச்சு, விழுகலைன்னு ஏமாத்தி நானே செலவழிச்சுட்டேன் என்று சொல்ல வேண்டும் என நினைப்பேன். தயக்கத்துடன் வந்து விடுவேன்.

No comments: