August 09, 2021

அண்ணாமலை

90களில் ரஜினிகாந்தின் தளபதியும், மன்னனும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றதும், தளபதிக்கு அடுத்து பெரிய ஆளு மன்னன், அப்போ மன்னனுக்கு அடுத்த படம் சக்கரவர்த்தியான்னு? எல்லோரும் கேட்ட போது, இல்லை அதுக்கும் மேல அப்படின்னு கடவுளின் பெயரை டைட்டிலாகக் கொண்டு வந்த படம் தான் அண்ணாமலை. பாலசந்தரின் மூலம் அறிமுகமானதால் ரஜினிக்கு அவரின் மீது பெரும் மதிப்பு. ஒரு கட்டத்தில் ரஜினி மிகப்பெரிய வியாபார அந்தஸ்துள்ள நடிகரான பின்னர் பாலசந்தர் அவரை இயக்குவதை நிறுத்தினார். பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த படம் தில்லு முல்லு தான். அதற்குப்பின் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிற்கு அவ்வப்போது படங்கள் நடித்துக் கொடுப்பார் ரஜினிகாந்த். வேலைக்காரன், சிவா ஆகிய படங்களை 1980களில் அப்படி நடித்துக் கொடுத்தார். அதுபோல 1992ல் அறிவிக்கப்பட்ட படம் அண்ணாமலை. கே பாலசந்தரின் சிஷ்யரான வசந்த் இயக்கிய கேளடி கண்மணி பெரிய வெற்றி. ஆனால் அதன்பின் வந்த நீ பாதி நான் பாதி சரியாகப் போகவில்லை. ஆனாலும் அவரின் மீதான நம்பிக்கையால் பாலசந்தர், வசந்த் இயக்கத்தில் படத்தை தயாரிக்க நினைத்தார். இளையராஜா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்போது பாலசந்தரின் படங்களுக்கு மரகதமணி இசை அமைத்து வந்தார். வைகாசி பொறந்தாச்சு பட வெற்றிக்குப் பின்னர் இசை அமைப்பாளர் தேவாவிற்கு நல்ல பெயர் ஏற்பட்டது. அவரை அண்ணாமலைக்கு அழைத்து வந்தார்கள். இந்நிலையில் வசந்த் தன் சுதந்திரம் குறித்து சந்தேகம் கொண்டு படத்தில் இருந்து விலக, பாலசந்தரின் மற்றொரு சிஷ்யரான சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு இயக்குநரானார். அவர் ராகேஷ் ரோஷனின் குத்கர்ஸை தழுவி ரஜினிகாந்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்தார். 91ல் ஆட்சிக்கு வந்திருந்த அதிமுக அரசின் முதல்வர் ஜெயலலிதாவும்,ரஜினிகாந்தும் ஒரே ஏரியாவில் இருந்ததால் பாதுகாப்பு சோதனைகளுக்காக ரஜினியின் கார் செக்போஸ்டில் நிறுத்தப்பட, அதை சில பத்திரிக்கைகள் பெரிது படுத்தின. மேலும் அப்போது சென்னை மாநகர சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என ஒரு சட்டமும் அமலுக்கு வந்திருந்தது. அதற்கு முந்தைய சில பிரச்சினைகளால் ரஜினிக்கு ரெட் கார்ட் போடப்போவதாக விநியோகஸ்தர்களும் அப்போது சொல்லி வந்தார்கள். ஆனால் தளபதி, மன்னன் படங்களின் வெற்றி ரஜினி படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இந்த நிலையில் இந்தக்கால பர்ஸ்ட் லுக்,மோஷன் போஸ்டர்,டீசர் உத்திகளுக்கு முன்னோடியாக ஒரு விளம்பர யுக்தியை கவிதாலயா நிறுவனம் கையாண்டது. அதுதான் அப்போது தமிழக மக்கள் பார்ப்பதற்கு இருந்த ஒரே தொலைக்காட்சி சானலான தூர்தர்ஷனில் சிறு விளம்பரம் வெளியிடுவது. அதற்கு முன்னர் வாராவாரம் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் தங்கள் புதுப்பட பாடல்களை பணம் கொடுத்து ஒளிபரப்பி விளம்பரம் தேடினார்கள் தயாரிப்பாளர்கள். கவிதாலயா நிறுவனம் எப்படி வானொலியில் விளம்பரம் போடுவார்களோ அது போல இங்கும் செய்யலாம் என ஒரு குறு விளம்பரத்தை தயாரித்தது. “வணக்கம், நான் தான் அண்ணாமலை” என ரஜினி நீதிமன்ற குற்றவாளி கூண்டில் இருந்து சொல்லும் சில வினாடி காட்சி அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது (இந்தக் காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒன்று). இது மக்களிடையே பெரிய ஆர்வத்தைத் தூண்டியது. படம், பண்டிகை விசேசம் ஏதும் இல்லாத ஒரு ஜூன் மாத நாளில் வெளியானது. ரஜினி படம் வெளியாகும் நாளே விசேஷம் தானே?. முதல் காட்சி பார்த்தபோது, தளபதி, மன்னனோடு ஒப்பிட்டால் அவ்வளவு விசேஷமில்லையே என்று தோன்றியது. ஆனால் சில நாட்களிலேயே படத்திற்கு வந்த கூட்டம் ஆச்சரியப்படும் படி இருந்தது. ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக வந்தார்கள். சொல்லப்போனால் இந்தப் படத்துக்குப் பின்னர் ரஜினி ரசிகர் வேறு, பொது மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தப் படம் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. ரஜினியின் வளர்ச்சி ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை, அதனால் இடையூறு செய்கிறார் என்ற செய்தி பத்திரிக்கைகள் மூலம் ரஜினி ரசிகர்களின் மனதில் அப்போது ஆழமாகப் பதிந்திருந்தது. அதனால் ரஜினி ரசிகர்கள் இந்தப்படத்திற்கு பெரிய ஆதரவு கொடுத்தார்கள். அதற்கேற்றார்போல சில வசனங்களும் படத்தில் வைத்திருந்தார்கள். பொதுமக்களுக்கோ, நம்மை ஏமாற்றியவர்களை நாம் நன்கு வாழ்ந்து பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே போல நம் எதிரிகள் உதவி கேட்டாலும் காலரைத் தூக்கிக்கொண்டு உதவவேண்டும் என்ற ஆழ்மன ஆசை இருக்கும். இதற்கு தீனி போட்டது போல் இந்தப்படம் அமைந்திருந்தது. அதற்கடுத்து வந்த எல்லா ரஜினி படங்களுமே ஏறக்குறைய இதே டெம்பிளேட்டில்தான் அமைந்தன. ரஜினிக்கு என்று இந்த ஏரியாவில் ஒரு தொகை வசூலாகும் என்ற கணக்கு இருக்குமே, அந்தக் கணக்கை உடைத்து புதுக்கணக்கு எழுத வைத்தது அண்ணாமலை. எந்த விநியோகஸ்தரும் எதிர்பார்க்காத லாபத்தை தந்தது. அண்ணாமலைக்குப் பின் ரஜினி இந்த 29 வருடங்களில் நாயகனாக 20 படங்கள் தான் நடித்திருப்பார். ஆனால் ரஜினி அறிமுகமானதில் இருந்து அண்ணாமலை வரை இருந்த 17 வருடங்களில் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்திருப்பார். இதே போலத்தான் முரட்டுக்காளை படமும். அதற்கு முந்தைய ஐந்து வருடங்களில் ரஜினி ஐம்பது படங்களுக்கு மேல் நடித்தார். ஆனால் முரட்டுக்காளைக்குப் பின்னர் அவர் வருடத்துக்கு சராசரியாக ஐந்து அல்லது ஆறு படங்களில் மட்டுமே நடித்தார். அந்த அளவுக்கு அவர் படங்களின் மேல் எதிர்பார்ப்பு ஏற்பட பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியதாகிவிட்டது. அண்ணாமலைக்குப் பின்னர் இன்னும் புதுப்புது ஏரியாக்களில் ரசிகர்கள் பெருகியவண்ணம் இருந்தார்களே தவிர குறையவே இல்லை. பாட்ஷா,படையப்பா எல்லாம் அதனுடைய கண்டெண்ட் வேல்யூவால் ரிப்பீட் ஆடியன்ஸ் பெற்று வசூல் சாதனை புரிந்த படங்கள். 2000க்குப் பின் சிவாஜி,எந்திரன் என உலகம் முழுவதும் வசூல் பெருகினாலும் அது எல்லாவற்றுக்குமே ஒரு ஆரம்பப் புள்ளி அண்ணாமலை தான். முரட்டுக்காளைக்குப் பின்னர் ரஜினிக்காகவே விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டார்கள் என்றால், அண்ணாமலைக்குப் பின்னர் திரையுலகமே, தங்கள் படங்களின் வெளியீட்டுத் திட்டங்களை ரஜினிக்காக வகுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. ரஜினி எண்பதுகளில் தன்னை ராகவேந்திரர் பக்தனாக அடையாளப் படுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் ராகவேந்திரர் படம் பதிந்த செப்புக் காப்பை அணியத் துவங்கினார்கள். நிறையப் பேர் ராகவேந்திரர் பக்தர்களானார்கள். திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மீக ஸ்தலம் என்றாலும் பொதுவாக வட மாவட்டத்தினர் மட்டுமே அங்கு குவிவார்கள். ஆனால் இளையராஜா சில திருப்பணிகள் அங்கே செய்து அது பற்றி தொடர்ச்சியாக செய்திகள் வந்தது, ரஜினிகாந்தின் அண்ணாமலை படம், அதைத் தொடர்ந்து அவரும் அண்ணாமலை பற்றி பேசியது, தமிழகம் முழுவதும் அண்ணாமலையாருக்கு பக்தர்களை கூட்டியது எனலாம். 1990க்கு முன் அண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த கூட்டம், 1990க்குப் பின் அங்கே வரும் கூட்டம் பற்றிய ஒப்பீட்டை திருவண்ணாமலையினர்தான் சொல்ல வேண்டும்.

No comments: