December 20, 2011

தம்பையா

ஞாயிறு காலையில் பேப்பரைப் புரட்டிக் கொண்டே குடிக்கும் இரண்டு டம்ளர் டீ தான் அடுத்த ஆறு நாட்களுக்கான பெட்ரோல் எனக்கு. இன்றும் காலை எழுந்து பார்த்தபோது மனைவியும் குழந்தைகளும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சென்னையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடிய களைப்பு. எழுப்ப மனமில்லாமல் நானே தயாரிக்கத் தொடங்கினேன். சென்னைக்கு பிழைக்க வருபவன் பிரம்மச்சாரியாய் வந்து பல முன் தயாரிப்புகளுக்கு பின்னரே திருமணம் செய்தால்தான் இந்த ஊருக்கு ஈடு கொடுக்க முடியும். குறைந்தபட்சம் குழந்தைகளாவது சென்னையில் தான் பிறக்க வேண்டும். சிறு நகர/கிராம சூழலில் வாழப் பழகிய நாற்றுகளை பிடுங்கி வந்து சென்னையில் நட்டுப் பராமரிப்பது சிரமமே.

மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் யாரும் எழ எத்தனிக்கவில்லை. ஆறு மாதமாய் துடைக்காமல் இருந்த பைக் ஞாபகம் வர, நைந்து போயிருந்த கைலியில் ஏ4 அளவுக்கு துணியைக் கிழித்துக் கொண்டு கீழிறங்கினேன். வீட்டின் உரிமையாளர் பகுதியில் இருந்து எப்போதும் கேட்கும் இசையருவி கேட்கவில்லை. பதிலாய் சன்னமான குரலில் புதிய தலைமுறையினர் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வை அகில உலகுக்கும் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் மகன் என்றும் இல்லா அதிசயமாய் வேட்டியும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு செல்லில் பேசியபடியே நடந்து கொண்டிருந்தான்.

இப்போதுதான் கவனிக்கிறேன். உரிமையாளர் உயிரை விட்டிருந்தார். துணியை பெட்ரோல் டேங்க் பையில் சொருகிவிட்டு, செல்லில் இருந்து காதை விடுவித்திருந்தவனிடம் போய் சன்னமான குரலில் எப்போ? என்றேன்.

”ராத்திரி 10 மணிக்கு டிவி பார்த்துக்கிட்டுருக்கும் போது நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்குன்னார். கால் டாக்ஸி கூப்புடுறதுக்குள்ள உயிர் போயிடுச்சு” என்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர் குடும்பத்து ஆட்களைத் தவிர யாரும் இல்லை. என் முகக் குறிப்பை கவனித்தவன், சொந்தக் காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லிட்டேன். மயானத்துக்கு தம்பி போயிருக்கிறான். 11 மணிக்கு எடுக்கப் போறோம். எல்லாரும் பத்து பத்தரைக்குள்ள வந்துடுவாங்க என்றான்.

அடப்பாவி பத்து மணிக்கு நடந்திருக்கு. வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு கூட சொல்லலை. சொந்தத்துக்கு கூட காலையில தான் சொல்லி இருப்பான் போல. சொல்லாத இடத்துல நமக்கு என்ன வேலை என அப்படியே மெதுவாக நகர்ந்து தெரு முனை டீக்கடையை நோக்கிச் சென்றேன்.

மாஸ்டர் டீ கிளாஸில் அரை கொள்ளளவுக்கும் குறைவாக ஊற்றிக் கொண்டிருந்தார். அடப்பாவி, இதைக் குடிச்சா நாக்கு கூட நனையாதேடா என்று நினைக்கும் போது மின்னலாக தம்பையாவின் நினைவு வந்தது.

வெண்கலச் செம்பு நிறைய சின்னம்மாவிடம் காப்பி வாங்கிக் குடித்துவிட்டு தம்பையா சொன்னதுதான் இது.

தம்பையா ஞாபகம் வந்ததைத் தொடர்ந்து ஊரும், ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சம்பிரதாயங்களும் என் மனதை ஆக்ரமித்தன.

முதலில் அந்த வீட்டுப் பெண்டிரிடம் இருந்து கேவலும், பின் விசும்பலும் கிளம்பும். அக்கம் பக்கத்துக்காரர்கள் சம்மனில்லாமல் ஆஜராவார்கள். கால் கட்டைவிரலை சேர்த்துக்கட்டு, மண்ணெண்ணெய் வாய்ல ஊத்து, சாணி, நெல்லு வச்சு விளக்குப் பொருத்து என தடாலடியாய் வேலை நடக்கும்.

பக்கத்து வீடுகளில் இருந்து மர பெஞ்ச், சேர் வகையறாக்கள் அணிவகுக்கும். வந்தவர்கள் அவற்றில் உட்காந்து கொண்டு வியூகங்களை வகுத்து கொண்டு இருப்பார்கள். வாடிப்பட்டு தப்பு செட்டுக்கு ஒரு ஆள், சங்குக்கு ஒரு ஆள், தேர் கட்ட மூங்கிலுக்கு ஒரு ஆள், தந்தி ஆபிசுக்கு ஒரு படிச்ச பையன் என திசைக்கொருவராக அம்புகளைச் செலுத்திக் கொண்டு இருப்பார்கள். இதற்கிடையே காப்பி ஒரு ரவுண்டு வந்திருக்கும். இந்த அம்புகளுக்கு முன்னால் ஒரு பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டிருக்கும். அதுதான் தம்பையா. அவனுக்குத்தான் அந்த ஊரோடு தொடர்புடைய அனைவரின் உறவுக்காரர்களும் அவர்களின் தற்போதைய வசிப்பிடங்களும் அத்துப்படி. செல் வராத காலத்தில், என்னைக்குச் செத்தாலும் தம்பையா இல்லாத நாளிலே சாகக்கூடாது என்று கூட பேசிக் கொள்வார்கள். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் என்றால் நான்கு மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து விடுவான்.

தந்தை சிறு வயதில் இறந்த காரணத்தினால் பொருளாதாரத்தில் வலுவிலந்த அவன் குடும்பத்தை அவனது காக்கா வலிப்பு நோயும் தன் பங்குக்கு சோதித்தது. 10 வயதில் எழவு சொல்ல ஆரம்பித்தவன் அம்பானி செல் வந்த போது ஆயிரத்தை தொட்டிருந்தான். சிறு வயதில் அவன் தான் எங்களுக்கு கிசு கிசுக்கள் சப்ளை செய்தவன். கோடி வீட்டு குத்தாலம்மா இறந்த செய்தியை சொன்ன உடன் அவள் மருமகள் 100 ரூபாய் சுருக்குப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் என்ற செய்தியின் பின்னர்தான் நான் மன்னர்கள் வாரிசு பிறந்த தகவலைச் சொன்ன தாதிக்கு முத்து மாலை பரிசளிப்பார்கள் என்பதையே நம்பத் தொடங்கினேன்.

சில பெண்கள் இறந்த போது மௌனமாய் அழுத சம்பந்தமில்லாத ஆண்கள், சில முதல் மரியாதைகள் என எங்கள் பதின்மத்தை தம்பையா சுவராசியப் படுத்தியிருந்தான்.

கடந்த ஆறேழு வருடங்களில் பலரும் பிழைப்புக்காக சென்னை, கோவை என புலம் பெயர்ந்திருந்தனர். ஊரில் யாராவது இறந்தால் தம்பையாதான் வழியனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறான்.

சென்ற ஆண்டு ஊர் திருவிழாவிற்கு சென்றிருந்த போது, பெரியப்பா, பாட்டி காரியத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்திருந்த தன் மச்சினனிடம் சொன்னதும் உடன் ஞாபகம் வந்தது.

”நல்ல காரியத்துக்கு தான் வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்க, கெட்ட காரியம்னா கேட்ட உடனே கெளம்பி வந்துடணும், இல்லைன்னா உன் வீட்டுக் காரியத்தை நீயே செய்யுற மாதிரி ஆயிடும்”

ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். செல்லில் இருந்து மனைவியை அழைத்து விஷயத்தைத் சொல்லி உடனே கீழே வா என்றேன். கைலியை மடித்து கட்டிக் கொண்டு அவர்கள் பகுதிக்குள் நுழைந்து நான்கு பிளாஸ்டிக் சேரை வெளியில் எடுத்துப் போட்டு சுவாதீனமாக உட்கார்ந்து கொண்டேன்.

விஸ்வரூபத்தை எதிர்நோக்கி

மோசர்பியர் ஷோ ரூமில் கிட்டத்தட்ட எல்லா தமிழ்படங்களின் சி டி யும் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்ற நான் நீண்ட நேரமாக துழாவிக் கொண்டேயிருந்ததைப் பார்த்த விற்பனை உதவியாளர் அருகில் வந்து ”என்ன படம் சார் வேண்டும்?” எனக் கேட்டார். “மங்கம்மா சபதம்” என்ற பதிலைக் கேட்ட அடுத்த நொடியிலேயே அதை எடுத்துக் கொடுத்தார்.

சிரித்தபடியே, இந்த பழைய சபதம் இல்லைங்க, கமல்ஹாசன் நடித்த படம் வேண்டும் என்றேன்.

“இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி பஜார்ல வேலை பார்த்தேன். 15 வருஷத்துல யாருமே இந்தப் படத்தை எங்கிட்ட கேட்டதில்லை” என்றார்.

இப்படி கமலின் மசாலா படங்களிலேயே மட்டமான மசாலாவைகூட நான்கைந்து முறை பார்த்த ரசிகன் நான். பார்த்தாலே பரவசம் படத்தை பிறழ் மனநிலை உள்ளவர்களால் மட்டுமே இரண்டாவது முறை பார்க்க முடியும். அதைக்கூட கமலின் சிறப்புத் தோற்றத்துக்காக மூன்று முறை பார்த்தவன் நான்.

ஆனால் என்ன சொல்லுங்கள், இந்த விஷயத்தில் ரஜினி ரசிகர்களை மட்டும் அடித்துக் கொள்ளவே முடியாது. நாட்டுக் கொரு நல்லவன் படத்தை நான்கு முறை தொடர்ந்து பார்த்தவர்கள், ரா ஒன்னில் ரஜினி இருக்கிறார் என்றதுமே முதல் காட்சிக்கே ஓடிப் போய் நரகாசுரனின் ஆதரவாளராக மாறியவர்கள் என அவர்களின் டிராக் ரெக்கார்ட் அமோகம்.

இப்போது கூட பாருங்கள், கோச்சடையான் என்ற பெயரை அதிகார பூர்வமாக ரஜினி ஓகே செய்தாரா என்பது கூட தெரியாது. ஆனால் மதுரை கோச்சடைப் பகுதியில் வாழும் ரஜினி ரசிகர்கள் ஆடித் தீர்த்து விட்டார்கள்.

விருமாண்டி படம் வெளியான அன்று, வெளி மாநில தலைநகரம் ஒன்றில் இருந்தேன். படம் பார்க்க வழி இல்லாததால் அன்று இரவு இணையத்தில் ஏதாவது விமர்சனம் வந்திருக்கிறதா என தேடிய போது, தமிழில் விமர்சனம் வெளியாயிருந்ததைப் பார்த்தே இணைய தமிழ் உலகத்துக்கு வந்தேன்.

முதலில் நான் அறிந்து கொண்டது, ரஜினியின் ஆதரவுப்படை இங்கே மிக அதிகம் என்பது. இரண்டாவது கமலைப் பற்றி தொடர்ந்து எழுப்பப்பட்ட காப்பியடித்தல், எதார்த்தமின்மை (திரையுலகிலும், பொது வெளியிலும்] சார்ந்த குற்றச்சாட்டுகள்.

ஹேராம், அன்பே சிவம் படங்களைப் பார்த்த பின்னர், முன்னை விட அதிகமாக என்னுள் விஸ்வரூபம் எடுத்திருந்த கமலின் பிம்பம் லேசாக கலையத் தொடங்குவதைப் போல எனக்குத் தோன்றியது.

தொடர்ந்து அது போலவே கசப்பான உணர்வுகள். தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் தமிழ்மணம் முழுப்பக்கத்திலும் அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளே நிறைந்திருந்தன. அதில் பாதிக்கும் மேலே படத்தின் உள்ளடக்கத்தை விமர்சித்தே இருந்தன. உன்னைப் போல் ஒருவனுக்கு வந்த விமர்சனங்களும் அப்படியே.

இந்த இடைப்பட்ட காலத்தில் பாலா, அமீர், சசிகுமார், வெற்றி மாறன், செல்வராகவன், ஜனநாதன், சீனு ராமசாமி, சற்குணம் என பல புதிய இயக்குநர்களின் படங்கள் வெகுவாக சிலாகிக்கப்பட்டன. என்னடா இது புதிதாக வந்தவர்கள் எல்லாம் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்க இவர் ஒன்று, இரண்டுக்கே தடவிக் கொண்டிருக்கிறாரே என்று கோபம் கூட வந்தது.


இந்த ஆறு ஏழு மாதங்களில் மீண்டும் ஒரு மன மாற்றம். பாலா, செல்வராகவன்,சசிகுமார் மற்றும் சற்குணம் ஆகியோரின் சமீபத்திய படங்கள் ஒரு செய்தியைச் சொன்னது. இரண்டு, மூன்று நல்ல படங்களை மட்டுமே இவர்களால் கொடுக்க முடியும். அதற்கு மேல் எல்லாமே ரீமிக்ஸ் தான் செய்ய முடியும் என்பதுதான் அது.


இந்த அளவுகோலில் கமலை நிறுத்திப் பார்த்தால் கமலின் மீது வந்த கோபம் குறைந்தது.

கமல் 30 வருடங்களுக்கும் மேலாக துறையின் ரசனை மாற்றங்களை சமாளித்து தன் இருப்பை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். மாற்று முயற்சிகளை யாருமே யோசிக்காத சூழ்நிலையில் [ 80-99 ஆண்டுகளில், முக்கியமாக நடிகர்களில்] அதை முன்னெடுத்துச் சென்றது கமல் தானே.

அவர் உலக தரத்தை நோக்கி தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் ராஜபாட்டையை போடாமல் இருந்திருக்கலாம். வழியே புலப்படாத காட்டில் ஒற்றையடிப் பாதையை போட்டவர் அவர்தான். இப்போது கட்டமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாதைக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.


தமிழ்சினிமாவில் தரமான ஐந்து படங்களைக் கொடுத்தவர்கள் என்று எண்ணினால் எத்தனை பேர் அந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரியாது. ஆனால் கமலின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும்.

கமல் அவர்களே, உங்களிடம் இருந்து அன்பே சிவத்திற்க்கு பின்னால் எதுவும் தமிழுக்கு கிடைக்கவில்லை. விஸ்வரூபம் பற்றிய செய்திகள் நம்பிக்கை தரும்படி இருந்தன. ஆனால் இப்போதோ, கதக் எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்வதாக வந்த செய்திகள் கத்தக் என்று நெஞ்சில் குத்தியதைப் போல் இருக்கிறது. மீண்டும் ஒரு ஆளவந்தானை சந்திக்கும் திறன் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் வயதாகி விட்டது. குடும்பம் குட்டி இருக்கிறது.


ஒரு நல்ல படம் குடு தலைவா, இப்போது சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் என் குழந்தைகளிடம் பெருமையாக நான் உன்னை அறிமுகம் செய்து வைக்க.

December 19, 2011

இம்முறையாவது கிடைக்குமா?

91ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட சுற்றுப்பயனம் கிளம்பிய போது, நிச்சயம் வெல்வோம் என்று அசார் நம்பியிருப்பாரோ இல்லையோ நான் நம்பினேன். மஞ்ச்ரேக்கர், டெண்டுல்கர் ஆகியோரின் மீது அப்படியொரு அபார நம்பிக்கை. ஆனால் ஆஸி அணியினர், சிட்னியைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நம்மை சட்னியாக்கினார்கள். பிரிவுத்துயர் எங்களை வாட்டுகிறது என அசாருதீன் காலம் எழுதும் அளவுக்கு கும்மாங்குத்து குத்தினார்கள்.

பின்னர் சச்சின் தலைமையில் அணி செல்லும் போது அவர்களே ஐந்து நிச்சயம், நான்கு லட்சியம் என்று தான் கிளம்பினார்கள். பின்னர் கங்குலி தலைமையில் செல்லும் போது சச்சின்,ட்ராவிட், லட்சுமண் மற்றும் சேவாக்கின் பேட்டிங்கால் தொடர் வெற்றிக்கு அருகில் சென்றோம். ஆனால் ஸ்டீவ் வாக்கின் கடைசிப் போட்டி, ஓய்வு என்று செண்டிமெண்ட் அலை அதை நமக்கு மறுதலித்தது.

கும்பிளேவின் தலைமையில் செல்லும் போது முந்தைய அனுபவங்களால் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கோட்டையான பெர்த்தில் வெற்றி பெற்ற போது எனக்குக் கிடைத்த மகிழ்சிக்கு அளவேயில்லை. 20-20 கோப்பையை அணி வென்ற போது கூட அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்ததில்லை.

தற்போது மீண்டும் நாம் அங்கே. இப்போது அணியின் மீது காரண காரியத்தோடு நம்பிக்கை வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள். அதில் முக்கிய காரணம் துவக்க ஆட்டக்காரர்கள்.


எந்த அணி உலக டெஸ்ட் அரங்கில் கோலோச்சும் போதும் அந்த அணியில் வலுவான துவக்க ஆட்டக்காரர்கள் இருப்பார்கள், இருக்க வேண்டும். துவக்க ஆட்டக்காரர்கள் உள்ளே நுழையும் போது பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். பந்தும் வித்தை காட்ட தயாராக இருக்கும். முதலில் பேட் செய்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவித்திருந்தால் இன்னும் கடினம். பீல்ட் செய்த களைப்போடு உள்ளே வரவேண்டும். எதிர் அணியோ குதூகல மனநிலையில் உள்ளே வருவார்கள். தம் அணியினருக்கும் போதிய ஓய்வு கொடுக்க வேண்டும், எதிர் அணியினரையும் களைப்படைய வைக்க வேண்டும் என துவக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பு அதிகம்.


மேற்கிந்திய தீவு அணியினருக்கு கிரினீட்ஜும், ஹெய்ன்ஸும் இருந்த வரையில் சரிவு ஆரம்பிக்கவில்லை. கிரினீட்ஜுக்குப் பின் பில் சிம்மன்ஸ் உள்ளே வந்தபோதுதான் செங்கல் உருவப்பட்டது. ஏன் நம் அணியினரே சேவாக் காம்பிர் இணை அபாரமாக ஆடிய பின்னர்தானே நம்பர் 1 நிலையை அடைந்தார்கள்.

86ல் இருந்தே ஆஸி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் விஷயத்தில் யோகம்தான். டேவிட் பூன் – ஜெஃப் மார்ஸ், மார்க் டெய்லர்-மைக்கேல் ஸ்லாடர், மேத்யூ ஹைடென் – ஜஸ்டின் லாங்கர் என எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடுபவர்கள் வாய்த்தார்கள். இவர்களால் தான் ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் மஞ்சள் குளித்து வந்தார்கள்.

தற்போதைய ஆஸி அணி சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. ஷேன் வாட்சன் அவ்வளவு சிறப்பான டெக்னிக் கொண்டவரல்ல மேலும் காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார். பிலிப் ஹுயுஸ், நியூஸிக்கு எதிரே ஆடிய ஆட்டத்தைப் பார்த்த பின்னர் அவர் உள்ளே வர வாய்ப்பே இல்லை எனத் தோன்றுகிறது. வார்னர் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். ஆள் கிடைக்காத காரணத்தால் சிமன் கடிச்சைப் பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். நல்ல துவக்க ஜோடி அமையவில்லையென்றால் ஆஸி அணியின் பேட்டிங் ஆர்டரை நம்மாட்கள் கலகலக்க வைத்து விடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. (ஜாகிர், இஷாந்த புல் பிட்னஸ்ஸில் இருந்தால்).

நமது துவக்க ஜோடி தற்போது சரியான பார்மில் உள்ளது. சேவக்கை வீழ்த்த மைக் ஆர்தர் பல வியூகங்கள் அமைக்கிறாராம். அவருக்கு தெரியாது சேவாக்குக்கு வியூகங்கள் தேவை இல்லை என்பது. உலக பேட்ஸ்மென்களிலேயே எளிதாக அவுட்டாக்க முடிபவரும் அவர்தான், எளிதாய் அடக்க முடியாதவரும் அவர்தான் என்பது. மூன்றாவது முச்சதம் ஆஸி மண்ணில்தான் என்று முடிவாகிவிட்டது. (ரொம்பத்தான் ஆசைப்படுறமோ?) . கவுதமும் கைகொடுத்தால் இம்முறை ஜெயம் நமக்கே.