April 18, 2013

பாக்யராஜும் வலுவான துணை பாத்திரங்களும்


பாக்யராஜ் இயக்கி, அவரே நடித்து வெற்றி பெற்ற படங்களைப் பார்த்தால் எல்லாமே ஸ்கிரிப்ட் ஓரியண்டட் படங்களாகத்தான் இருக்கும். இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு என எந்தப் படங்களுக்குமே எஸ்டாபிளிஷ்ட் ஹீரோவின் தேவை இருக்காது. ஒரு புதுமுகம் அந்த ரோலில் நடித்திருந்தாலும் படம் எடுபட்டிருக்கும். ஆனால் அதே காலகட்டத்தில் வெளியான பில்லா, மூன்றாம் பிறை போன்ற படங்கள் எல்லாம் பெர்பார்மன்ஸ் ஓரியண்டட் ஸ்கிரிப்ட் வகையைச் சார்ந்தவை. அதனால் தான் பில்லாவை, விமலை வைத்து ரீமேக் செய்யாமல் அஜீத்தை வைத்து ரீமேக் செய்தார்கள். மூன்றாப் பிறையை ரீமேக் செய்யவேண்டுமெனில் அட்லீஸ்ட் சூர்யாவாவது இப்போது தேவை.

ஆனால் அதே பாக்யராஜ், எப்போது தன் ஸ்கிரிப்டிலும் ஒரு ஹீரோவிற்கான தேவையை நுழைத்தாரோ அப்போதே அவர் படங்கள் தோல்வியடையத் துவங்கிவிட்டன. ஏனென்றால் அந்த ஹீரோவிற்கான ஜஸ்டிபிகேஷனை அவரால் செய்யமுடியவில்லை. மக்கள் அவரை எல்லாக் காலத்திலும் பாக்யராஜாகவே பார்க்கிறார்கள். ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தை எடுத்துக் கொண்டால், அதில் ஒரு ராஜகுமாரி நல்ல குணமுள்ள பாக்யராஜை காதலிக்கும் கதை. என்னதான் குணமானவராய் இருந்தாலும் ஒரு மினிமம் பர்சனாலிட்டி அந்தக் கதைக்கு தேவைப்பட்டது.அந்த வேடத்தில் கார்த்திக் போன்ற ஹீரோ நடித்திருந்தால் படம் தப்பித்து இருக்கும்.

மேலும் அவர் படங்கள் பின்னாட்களில் தோல்வி அடைய முக்கிய காரணம், தன் பழைய படங்களைப் போல வலுவான துணைப் பாத்திரங்களை உருவாக்காததே.

கல்லாப் பெட்டி சிங்காரம், குமரி முத்து, குலதெய்வம் ராஜகோபால், ஹாஜா ஷெரிஃப், இடிச்சபுளி செல்வராஜ், மண்ணாங்கட்டி சுப்ரமணியம், செம்புலி ஜெகன், முன்னர் மதிமுகவில் பேச்சாளராய் இருந்து தற்போது அதிமுகவில் இருக்கும் எங்க சின்ன ராசா சரஸ்வதி, இன்று போய் நாளை வா ஹிந்தி வாத்தியார், சுந்தர காண்டம் படத்தில் சம்முவமணி என அழைக்கும் பாக்யராஜின் கிளாஸ்மேட் என பல நடிகர்களுக்கும் அவர்கள் கேரியரிலேயே சிறந்த மூன்று படங்களைச் சொல்லுங்கள் என்றால் அதில் நிச்சயம் ஒரு பாக்யராஜின் படம் இடம் பிடித்துவிடும்.

இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் முதலில் படைக்கப்பட்ட கேரக்டரின் எதார்த்த தன்மை, இரண்டாவது பாக்யராஜ் அமைக்கும் காட்சிகளின் பலம், இதில் பலம் என்பது திரைக்கதை அமைப்பையும் சேர்ந்தது.

பாக்யராஜ் திரைப்படங்களை பார்த்தால் அதில் பல காட்சிகள் வெகு நீளமாக இருக்கும். ஆனால் நமக்கு அதன் நீளம் தெரியாத அளவு அவை சுவராசியமாக படமாக்கப்பட்டிருக்கும்.
இது நம்ம ஆளுவில் பாக்யராஜுக்கு, ஷோபனா உணவு பரிமாறும் காட்சியை எடுத்துக் கொண்டால்,குமரிமுத்துவும், மனோரமாவும் மருமகள் ஷோபனாவின் சமையலைப் பாராட்டுவதில் ஆரம்பித்து, ஷோபனா ஒவ்வொரு விலங்கும் சத்தம் போடுவதின் பிண்ணனியை விளக்கும் வரை ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கு மேல் காட்சி இருக்கும்.

எங்க சின்ன ராசாவில், ராதா தன் கணவன் சின்னராசுவை அனைவரும் ஏமாற்றுவதை அவர் விளங்கிக்கொள்ளுமாறு நடத்தும் காட்சி. தோட்ட விளைச்சல் தீக்கிரையான கள்ளக் கணக்கில் ஆரம்பிக்கும் காட்சி, குலதெய்வம் ராஜகோபால் பணத்தை மெத்தையில் ஒளித்து வைத்திருப்பது வரை நீளும். அடுத்த காட்சி அவர்களுக்கு தோட்ட வேலை ஒதுக்கீடு வரை செல்லும். ஏறத்தாழ 20 நிமிடங்கள். 


நடிப்பதற்கு இப்படி நல்ல ஸ்கோப் கொடுப்பதோடு கேரக்டரையும் நன்கு செதுக்குவதால் பாக்யராஜின் படங்களில் துணைப்பாத்திரங்கள் நன்கு எடுபட்டன.

சுவரில்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா, டார்லிங் டார்லிங் டார்லிங் மற்றும் அந்த 7 நாட்கள் இவற்றில் கல்லாப் பெட்டி சிங்காரம் நடிப்பில் நன்கு கல்லா கட்டியிருப்பார்.

எங்க சின்ன ராசா மற்றும் பவுனு பவுனு தானில் குலதெய்வம் ராஜகோபால் அசத்தியிருப்பார். எ.சி.ராசாவில் வஞ்சகமான தாய்மாமன் வேடம் பவுனு பவுனுதானில் அப்பாவி தந்தை வேடம். கே எஸ் கோபால கிருஷ்ணனுக்குப் பிறகு பாக்யராஜ் தான் ராஜகோபாலுக்கு நல்ல வேடங்கள் தந்தார்.

ஹாஜா ஷெரிஃபுக்கு இப்போது 40 வயதுக்கு மேல் இருக்கும். இன்றும் நம் மனதில் எந்தா கோபி  என விளிக்கப்படும் பிம்பமே இருகிறது. மண்ணாங்கட்டி சுப்ரமணியத்தையும், செம்புலி ஜெகனையும் வேறு எந்த கேரக்டரிலும் நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாது.
இன்று போய் நாளை வா ஹிந்தி வாத்தியாரும் அப்படியே. அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் இ போ நா வாவில் இந்தி வாத்தியாரா வருவாரே அவர்தான் என்றே அடையாளப் படுத்தப் படுகிறார்.

முன்னர் சொல்லியது போல் இந்த பாத்திரங்களின் நிலைத்தன்மைக்கு காரணம் சராசரி வாழ்க்கையில் இருந்து இந்தப் பாத்திரங்களை எடுத்ததுதான். இவை 100% நல்லவர்கள் இல்லை. தங்களுடைய சர்வைவலுக்காக சில தில்லாலங்கடி வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். வேறெந்த உயரிய லட்சியமோ அல்லது கொடூர நோக்கமோ இருக்காது.

எ.சி.ராசாவில் வரும் மண்ணாங்கட்டியும், ராசுக்குட்டியில் வரும் செம்புலி ஜெகனும் அடிப்படையில் ஒரு பண்ணையாரின் எடுபிடிகள். மண்ணாங்கட்டி முட்டாள், செம்புலி காரியக்காரன், முதலாளியை வளைத்து மடக்கும் திறமையுள்ளவன். இப்படிப்பட்ட ஆட்களை கிராமங்களில் பண்ணையாட்களாகவும், நகரங்களில் மேனேஜரின் பியூன்களாகவும் நாம் பார்த்து வருகிறோம்.

இப்போது பாக்யராஜின் மிகப்பெரிய தோல்விப் படமான ஞானப்பழம் படத்தை எடுத்துக் கொண்டால், அதில் பாக்யராஜின் தந்தை ஒரு கிரிமினலான அமைச்சர். கிரிமினல் அமைச்சர் என்பது யதார்த்த பாத்திரம் என்றாலும், மக்களால் ஒன்ற முடியாத அளவுக்கு படைக்கப்பட்டிருக்கும். பாக்யராஜின் மச்சினனாக கவுண்டமணி. மிகப் பெரிய கோடீஸ்வரர், அவருக்கு சுகன்யா தங்கை என நம்ப முடியாத பாத்திரமாக அது இருக்கும்.

வீட்ல விசேஷங்க படத்தில், மருத்துவர் ஜனகராஜ், சக பிரஸ் முதலாளி விஜி போன்றோரின் கேரக்டர்கள் சரியாக வரையறுக்கப்பட்டிருக்காது.
தன் மகன் சாந்தனுவை வைத்து அவர் இயக்கிய சித்து பிளஸ் 2 வில் கதாநாயகியின் அப்பா, வீட்டு வேலைக்காரி பாத்திரங்களும் அப்படியே.

இப்பொழுது கூட சின்ன பட்ஜெட்டில், அவரின் எதார்த்த கதை அமைப்புடன், வலுவான துணை கதாபாத்திரங்களுடன் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்காவெல்லாம் ஓடும் போது அவர் படம் ஓடாதா? என்ன?.

April 15, 2013

தமிழ்நாட்டு கான்ஸ்டபிள்கள்


தமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள்ளி செல்லும் காலத்தில், ஏதாவது ஒரு கட்டத்தில் பெரும்பாலான பையன்களின் கனவாக போலிஸ் வேலை இருக்கும். சினிமாக்களாலோ அல்லது குடும்பம், நட்பு, உறவுகளாலோ அந்த பிம்பம் அவன் மனதில் உருவாக்கப்பட்டு இருக்கும். அந்தக் கனவுடன் இருக்கும் போது, யாராவது ஒரு நடிகர் போலிஸ் வேடத்தில் கலக்கினால் அந்த நடிகரின் ரசிகராக அவன் மாறவும் வாய்ப்பு அதிகம்.

அதிகாரியாகத்தான் அவன் விரும்புவானே அன்றி, எந்தப் பையனும் கான்ஸ்டபிளாக விரும்ப மாட்டான். திரைப்படங்களில் கூட நாயகன் பெரும்பாலும் மினிமம் சப் இன்ஸ்பெக்டர் ரோலில் தான் இருப்பார். மருதமலை போன்ற படங்களில் ஹீரோ கான்ஸ்டபிளாக வந்தாலும், அவர் சப் இன்ஸ்பெக்டர் எக்ஸாம் எழுதியிருப்பார்.

மலைக்கள்ளன் காலம் தொடங்கி தங்கப்பதக்கம், வாழ்க்கைச்சக்கரம், உள்ளே வெளியே, சிங்கம் வரை ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழ்சினிமாவில் ஏட்டுகளுக்கும், கான்ஸ்டபிளுக்கும் காமெடி, குணச்சித்திர வேடங்களே வழங்கப்படுகின்றன. அதிலும் நேர்மையாக இருந்தால் அவரை காலி செய்து விடுவதாகவே காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.  இதனால் எந்த பையனும் கனவிலும் கூட கான்ஸ்டபிள் வேலைக்கு ஆசைப்படுவதில்லை.

தற்போது தமிழ்நாட்டில் கான்ஸ்டபிள் வேலை என்பது நிச்சயம் மரியாதைக்குரியது அல்ல, நாம் ஏதாவது சிக்கலில் மாட்டாத வரை. நாம் சிக்கலில் இருக்கும் போது கான்ஸ்டபிளும் கமிஷனராகத்தான் நம் கண்ணுக்கு தெரிவார்.

வாழ்க்கைச் சக்கரம் படத்தில் கவுண்டமணி சொல்வார், “ அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் மட்டும் வாங்கினால் லத்தியைக் கூட தூக்க முடியாது” என்று. அது இன்றளவும் உண்மை. கான்ஸ்டபிளுக்கு 10ஆம் வகுப்பு தகுதியாக இருப்பதால், அவர்களுக்கு கிரேட் பே மிகவும் குறைவு. ரேஷனில் சிறப்பு ஒதுக்கீடு, போலிஸ் கேண்டின் ஆகியவை இருந்தாலும் அரசு சம்பளத்தில் ஒருவர் மட்டும் வேலை பார்த்து குடும்பத்தை மரியாதையாக நடத்த முடியாது.

திரைப்படங்களில் எல்லாம் காட்டுவது போல செலக்‌ஷன் முடிந்த உடன் நேரடியாக போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து விட முடியாது. அதெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்னர். அப்பொதெல்லாம் ட்ரைனிங் முடிந்த உடன் போலிஸ் வாகனத்தில் அழைத்து வந்து ஸ்டேஷனில் விட்டுச் செல்வார்கள். இப்போது முதலில் ஒரு ஆண்டு ட்ரைனிங். பின்னர் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஏதாவது ஒரு பட்டாலியனில் பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 23 இடங்களில் இது போன்ற பட்டாலியன்கள் உள்ளன. பின்னர்  மூன்று ஆண்டுகள் ஆயுதப் படை பிரிவு. சில பிரைட்டான கேண்டிடேட்களை ட்ரைனிங் முடிந்ததும் நேரடியாக ஆயுதப் படை பிரிவுக்கு ரெக்ரூட் செய்வதும் உண்டு. அதன்பின் காவல் நிலையங்களில் உண்டாகும்  காலியிடங்களுக்கு ஏற்ப கான்ஸ்டபிளாக போஸ்டிங் போடப்படுவார்கள்.

எனவே சாதாரணமாக ஒருவர் கான்ஸ்டபிளாக ஏழாண்டுகள் பிடிக்கும். பின்னர் ஹெட் கான்ஸ்டபிள் ஆகி, சிறப்பு எஸ் ஐ ஆக மாறி எஸ் ஐ ஆவதற்குள் ரிட்டயர்மெண்ட்டே ஆகிவிடும்.

இந்த காலகட்டத்தில் எது கடினமான கால கட்டம் என்றால், மிளகாய் எந்த இடத்தில் உறைக்கும் என்று கேட்பதைப்போல.
ட்ரைனிங்கில் கலோக்கியலாகச் சொல்வதென்றால் நுங்கைப் பிதுக்கி விடுவார்கள். போலிஸ் பயிற்சி கல்லூரி என்பதே தண்டணை போஸ்டிங் என்பதால் உயர் அதிகாரியில் இருந்து கடைநிலை வரை கர்புர் என்றே இருப்பார்கள். முதலில் சிறப்பாக பெர்பார்ம் பண்ணி பின்னர் நொண்டியடித்தால் டார்ச்சர் செய்து விடுவார்கள். இங்கு ஆரம்பத்தில் மங்குனி போல் இருப்பதே சாலச் சிறந்தது.

அடுத்த கட்டம், பட்டாலியன். இவர்களின் வேலை எங்காவது ஜாதி, மதக் கலவரம் நடந்தால் பந்தோபஸ்துக்குப் போவது, முதல் அமைச்சர், கவர்னர், பிரதமர் விசிட்டின் போது பந்தோபஸ்து, ஏதாவது சிலைகள் தாக்கப்பட்டால் பல நாட்கள் அந்த ஏரியாவில் தேவுடு காப்பது, சித்திரை, வைகாசி கிராமத் திருவிழா பந்தோபஸ்து, எலெக்சன் டியூட்டி போன்றவை.

இங்குதான் இவர்களின் கெட்டகாலம் கொடிகட்டிப் பறக்கும். இயற்கை அழைப்புக்கு கூட ஒதுங்க முடியாது. அந்த நேரத்தில் வரும் உயர் அதிகாரி சார்ஜ் மெமோ கொடுத்துவிட்டால் எஸ் ஐ ஆவது சிரமமாகி விடும். எனவே ஐம்புலன்களையும் மட்டுமல்ல சில துவாரங்களையும் அடக்கியே வாழப் பழக வேண்டும்.

இன்னொரு பிரச்சினை,  உள்ளாடை அணிந்து, இறுக்கமான பேண்ட் அணிந்து, இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கடுமையான வெயிலில் பணிபுரிவதால்  இவர்களுக்கு தொடை இடுக்கில்வேர்வை தங்கி படை வந்துவிடும். உடை மாற்ற நேரம் கிடைக்காது. உடையும் கொண்டு செல்ல முடியாது. படைப்பிரிவு என்று அந்தக் காலத்தில் அனுபவித்து தான் பெயர் வைத்திருப்பார்கள் போலும்.  கேண்டிட் பவுடர், லிச்சென்ஷா போன்றவை இல்லாமல் காலம் தள்ள முடியாது. மேலும் இவர்களுக்கு ஒதுக்கப்படும் கழிவறைகளும் அவ்வளவு சுத்தமாய் இராது. எனவே இன்ஃபெக்‌ஷனும் எளிதில் வந்து விடும்.

ஆண்களுக்கே இப்படியென்றால் பெண்களுக்கு எப்படி இருக்கும்?. அவர்களால் சிறுநீரை பல மணி நேரம் அடக்க முடியும். ஆனால் அவர்களின் சிறுநீர்பாதை ஆணை விட சிறியது என்பதால் இன்பெக்‌ஷனுக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

பெரும்பாலான கான்ஸ்டபிள்கள் காலைக் கடனை அடக்கி அடக்கி பழகுவதால் அவர்களுக்கு இயற்கை அழைப்பு செயற்கை அழைப்பாகவே மாறிவிடும். இரவில் நான்கு வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். பின்னர் காலை எழுந்ததும் பல் விளக்கி, நிறையத் தண்ணீர் குடித்து, சிலபல டம்ளர்கள் தேநீர் குடித்தால்தான் அவர்களுக்கு சுமுகமாகப் போகும்.

ஒருவழியாய் கான்ஸ்டபிள் ஆகி ஸ்டேஷனில் நுழைந்தவுடன் அல்லறை சில்லறை வேலைகளை ஒதுக்குவார்கள். இரவு பாரா, கோர்ட் டூட்டி என பார்த்து, பழகவேண்டும். பின்னர் எஃப் ஐ ஆர் எழுதுவது. இது ஒரு கலை. சிலருக்கு இதைப் போன்ற டாக்குமெண்டுகள் எழுதுவது நன்றாக வரும். அவர்கள் ஸ்டேசனின் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள். இப்போது உள்ளவர்கள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பது பொதுவான கருத்து. எனவே சில இடங்களில்  ரிட்டயரான எஸ் ஐக்கள் ஸ்டேஷன் டாக்குமெண்டுகள் எழுதிக் கொடுத்து வருகிறார்கள். சிக்கலான கேஸ்களுக்கு கேஸ் டயரிகளை ரிட்டயரான டி எஸ் பிக்கள் வந்து எழுதிக் கொடுக்கிறார்கள் என்பதில் இருந்தே இந்த துறையில் நிலவும் திறமைப் பற்றாக்குறையை அறியலாம்.

இந்தக் கான்ஸ்டபிள்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை “நல்லதுங்க அய்யா”. தங்களை விட ஒரு படி மேலான அதிகாரிகளிடம் இவர்கள் இந்த வார்த்தையைத்தான் உச்சரிக்க வேண்டும். சார் என்று அழைத்தால் கூட அவ்வளவுதான். அதிகாரிகள் சவட்டி எடுத்து விடுவார்கள். நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, மன அழுத்தத்தின் காரணமாக மது அருந்துவது, இரவு நேரத்தில் நிறைய சாப்பிடுவது போன்ற காரணங்களால் தொப்பை இவர்களுக்கு சீக்கிரம் வந்துவிடும். இலவச இணைப்பாக சுகர், பிபி. எப்பொழுதாவது அப்பிராணிகள் சிக்கும்போது போலிஸ் வெளுத்து வாங்க ஒரு முக்கிய காரணம் அவர்களின் மன அழுத்தமே.

நேர்மையாக இருந்தால் பந்தாடப்பட்டு பைத்தியக்கார பட்டம் கிடைக்கும். லஞ்சம் வாங்க பழகிவிட்டால் ஒக்கே. சிலர் இரண்டுக்கும் இடையில் இருப்பார்கள். அவர்கள் மங்குனி/மசையாக இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். கொடுக்கும் வேலைகளை உடனே ஏற்றுக் கொண்டு சொதப்பிக் கொண்டேயிருந்தால் அவர்களின் ஸ்கீம் ஆஃப் திங்ஸில் சொதப்பல் கேஸை சேர்க்க மாட்டார்கள். தப்பித்துக் கொள்ளலாம்.
போலிஸுக்கு ஜாக்பாட் என்பது திருட்டு கேஸ் பிடிபடுவது, பெண்களின் அனாதைப்பிணங்கள் சிக்குவது போன்றவை. கள்ளக் காதலில் ஓடி வரும் பெண்கள் நிறைய நகை போட்டிருப்பார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டு கண்காணாத இடங்களில் கிடந்தால் கிடைக்கும் நகைகளை ஸ்டேஷனில் பங்கிட்டுக் கொள்வார்கள். தற்காலத்தில் இம்மாதிரி சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஒரு கான்ஸ்டபிள் இப்படி 50 பவுனுக்கு மேற்பட்ட நகையுடன் பிணத்தைக் கண்டவர், அதை ஓப்பன் மைக்கில் சொல்லிவிட்டார். சரகத்தில் உள்ள அனைத்து ஸ்டேசனுக்கும் விஷயம் பரவிவிட்டது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எஸ் ஐ கொதித்துப் போய்விட்டார். அவனே கூட வச்சிக்கிட்டு போயிருக்கலாமே. யாருக்கும் பிரயோஜனம் இல்லாம பண்ணிட்டானே என பல நாள் புலம்பிக் கொண்டேயிருந்தார்.

போக்குவரத்து பிரிவு இன்னும் மோசம். வெயிலில் காய வேண்டும். சிறைத்துறை தனி ரெக்ரூட்மெண்ட். கியூ பிராஞ்ச், புட் செல், மதுவிலக்கு பிரிவு, சிபிசிஐடி பிரிவு ஆகியவற்றில் மேலதிகாரியை அனுசரித்துக் கொண்டால் எளிதில் காலம் தள்ளி விடலாம். சைபர் கிரைமில் தற்போது அதிகாரிகளாகத்தான் உள்ளார்கள். கான்ஸ்டபிள் ஆகி இணையதள கண்காணிப்பு பணி என்றால் குஜாலாக இருக்கும்.

ஆனால் லா அண்ட் ஆர்டரில் நேர்மையாக இருக்கும் அதிகாரி அல்லது கான்ஸ்டபிள் என்பது கனவுதான். நானும் பள்ளியில் படிக்கும் போது, என்பீல்ட் புல்லட்டில் போய் சமூக விரோதிகளை அடித்து உதைப்பது போல் கனவு கண்டேன். பொதுவாக கனவு நிறைவேறாமல் போனால் துக்கமாய் இருக்கும். ஆனால் இந்த கனவு நிறைவேறாததில் ஆனந்தமே.

February 21, 2013

கமலின் சண்டை காட்சிகள்


தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கமல்ஹாசன் என்றாலே நல்ல நடிகர், காதல் காட்சிகளில் கலக்குபவர், நன்றாக நடம் ஆடக்கூடியவர், காமெடி படங்களிலும் வல்லவர் என்ற பிம்பமே தோன்றும். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தவர் என்று பார்த்தால் அதிலும் கமலே நம் நினைவுக்கு வருவார்.

கமல் படம் என்று நான் தெரிந்து பார்த்த சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை ஏராளமான சண்டை காட்சிகள் நினைவுக்கு வந்து போகின்றன.


சகல கலா வல்லவனில் ஒரு சகதி சண்டை, சிலம்பு சண்டை, கார் சேஸிங் என மசாலா படங்களுக்குரிய சண்டைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதன் பின் வந்த காக்கிச் சட்டையில் ட்ரைலர் லாரியில் நடக்கும் சண்டைக்காட்சி மறக்க முடியாத ஒன்று. அப்படம் வந்து சில ஆண்டுகள் வரை ட்ரைலர் லாரியை அடையாளம் சொல்ல காக்கிச்சட்டை படத்துல வர்ற லாரி என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ராம் லட்சுமண் படத்தில் வரும் சிலம்பு, ஜூடோ, கராத்தே சண்டை, தூங்காதே தம்பி தூங்காதேயில் உட்காரும் பெஞ்ச் வைத்து போடும் சண்டை என மசாலா சண்டைகள் நிறைய இருக்கும். பெரும்பாலும் இவையெல்லாமே ஆங்கில, சீன படங்களின் பாதிப்பிலேயே இருக்கும்.


ஒரு கைதியின் டைரி படத்தில் புது ரோசாப் பூவு பாடலில்  கமலுக்கு சற்று உயரத்தில் ஒரு கூண்டினுள் நின்று நடிகை ஆடிக்கொண்டு இருப்பார். படப்பிடிப்பில் திடீரென கூண்டு அறுந்து கமலின் வயிற்றின் மீது நடிகை கூண்டோடு விழுந்தார். அனைவரும் பதறி விட்டனர். ஆனால் கமல் தன் மூச்சை இழுத்துப் பிடித்து வயிற்றைக் கல்லாக்கியதால் தப்பித்தார். இதன் பின்னரே கமல் தன் ஸ்டண்ட் யூனியன் ஆட்களுக்கு இன்சூரண்ஸ் எடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்தார். புன்னகை  மன்னன் படத்தில் தற்கொலை செய்ய குதித்து மரத்தில் தொங்கும் காட்சி போல பல ரிஸ்கான காட்சிகளில் அக்காலத்தில் நடித்து வந்தார்.
நாயகன் படமே சண்டைக் காட்சிகளிலும் கமலுக்கு திருப்பத்தை தந்தது எனலாம். அதன் பின்னரே அவர் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளின் பக்கம் திரும்பினார். ரத்தத்திற்குப் பதில் சிகப்பு சாயம் ஊற்றுவதை நிறுத்தினார். காயங்கள் காயம் போலவெ தெரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த சத்யா படத்தில் சண்டிக் காட்சிகளில் சூப்பர் ஹீரோத்தனம் இல்லாமல் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளே இடம் பிடித்தன. பாலத்தின் மீதேறி தப்பி ஓடும் கமலின் நண்பனை காலில் வெட்டும் காட்சிகள் அப்போது தமிழுக்குப் புதிது.
தேவர்மகனில் இன்னும் மெருகேறியது சண்டைக் காட்சிகள்.

 சிலம்பு குச்சியில் சுண்ணாம்பு தடவி பொட்டு வைப்பது, நாசருடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை என சிறப்பாக அமைந்தது. மகாநதி படத்தில் கையை வெட்டிக் கொள்ளும் காட்சி லாஜிக்கலாக அமைந்தது.

குருதிப்புனலின் ரயிலின் முன் தாவும் காட்சி, சில துப்பாக்கிச் சூடு காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். இந்தியனில் சுதந்திர போராட்ட வீரனின் சண்டைக் காட்சிக்கும், மகல் கமலின் சண்டைக் காட்சிக்கும் பெரிய வேறுபாடு இருக்கும். பெரியவராக வர்மக்கலை உபயோகித்து போடும் சண்டைகளும் செம ஸ்டைலாக இருக்கும். (நெடு முடி வேணுவை தாக்கி தப்பிக்கும் காட்சி).


அதன்பின் எடுத்து கைவிடப்பட்ட  மருதநாயக ட்ரெயிலரிலேயே நான்கைந்து சண்டைக் காட்சிகள் இருக்கும். வேலால் ஒருவர் குத்த வரும் போது, அடுத்துப் போட்டு விட்டு எருமை மாட்டில் ஏறி தப்பிப்பது, அருவியின் மீதிருந்து பெரிய பாறையை உருட்டி விட்டு பலரை கொள்வது என. அந்த ட்ரெய்லரில் குதிரையின் கண்களில் கூட ஒரு கோபம் இருக்கும். காட்சி எடுக்கும் முன்னர் அக்குதிரையை சீண்டுவாராம் கமல்.

பின் வந்த ஆளவந்தானிலும் திரில்லுக்கு குறைவில்லை. சிறை கான்கீரீட்டை பல்லாலேயே கடித்து, சகோதரனின் தம்பி மனைவி மீது ஆக்ரோஷமாக துப்புவது. சகோதரனைக் கொல்ல துரத்துவது என. 

பின் வந்த பம்மல் கே சம்பந்தத்தில் ஸ்டண்ட் யூனியன் ஆளாகவே நடித்தார்.
விருமாண்டியில் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் காட்சி, ஓடும் வண்டியில் இணைக்கப்பட்ட ட்டையில் புல் அப்ஸ் எடுப்பு, சுற்றி உடை வைப்பு, கொத்தாளத் தேவர் வீட்டில் அரிவாள் எரியும் காட்சி, நல்லம நாயக்கர் தோட்டத்து ஆட்களை கொல்ல வரும் காட்சி என பல சிறப்பான காட்சிகள் உண்டு. காரில் வரும் போதே ஜன்னல் வழியாக அரிவாள் வீசுவது என கமலின் டைரக்டர் டச் அதில் தெரியும். கிளைமாக்ஸான சிறைக் கலவரம் காட்சியும் மறக்க முடியாத சண்டைக் காட்சி.


தசாவதாரத்தில் நம்பி போடும் பழங்கால சண்டை, பிளட்சரின் வெறித்தன சண்டை, ஜப்பானிய கமலின் குங்பூ சண்டை என வித்தியாச சண்டை காட்சிகள். அதிலும் பிளட்சரின் ஆரம்ப சண்டைக் காட்சியும், சிதம்பர சண்டைக் காட்சியும் விறு விறுப்பாக இருக்கும்.
இப்போது விஸ்வரூபத்திலும் சண்டை காட்சிகள் வித்தியாசமாக அமைந்துள்ளன. கார் வரும் போது ஜன்னல் கண்ணாடியை சுட்டு, காரினுள் குதிப்பது, கண்ணிமைக்கும் நேரத்தில் பலரை அடுத்து வீழ்த்துவது என.

கமல் தனக்கென சண்டைக் காட்சிகளில் ஒரு பாணியை வைத்துக் கொள்ளாமல் கேரக்டரின் குண நலனுக்கு ஏற்ப சண்டை போடுவதாலேயே இத்தனை வித சண்டைக்காட்சிகளை கொடுக்க முடிந்தது. மேலும் அவர் சேகரிக்கும் வித வித பொருட்களும் சண்டைக் காட்சிகளை உயிர்ப்புடன் வைக்கின்றன. கலைஞனில் ஸ்டிலட்டோ, விஸ்வரூபத்தில் மூன்றாய் பிரியும் கத்தி, நாயகனில் நிஜ துப்பாக்கி என சண்டைக்காட்சிகளுக்கு வலு சேர்க்க முடிகிறது.