April 18, 2013

பாக்யராஜும் வலுவான துணை பாத்திரங்களும்


பாக்யராஜ் இயக்கி, அவரே நடித்து வெற்றி பெற்ற படங்களைப் பார்த்தால் எல்லாமே ஸ்கிரிப்ட் ஓரியண்டட் படங்களாகத்தான் இருக்கும். இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு என எந்தப் படங்களுக்குமே எஸ்டாபிளிஷ்ட் ஹீரோவின் தேவை இருக்காது. ஒரு புதுமுகம் அந்த ரோலில் நடித்திருந்தாலும் படம் எடுபட்டிருக்கும். ஆனால் அதே காலகட்டத்தில் வெளியான பில்லா, மூன்றாம் பிறை போன்ற படங்கள் எல்லாம் பெர்பார்மன்ஸ் ஓரியண்டட் ஸ்கிரிப்ட் வகையைச் சார்ந்தவை. அதனால் தான் பில்லாவை, விமலை வைத்து ரீமேக் செய்யாமல் அஜீத்தை வைத்து ரீமேக் செய்தார்கள். மூன்றாப் பிறையை ரீமேக் செய்யவேண்டுமெனில் அட்லீஸ்ட் சூர்யாவாவது இப்போது தேவை.

ஆனால் அதே பாக்யராஜ், எப்போது தன் ஸ்கிரிப்டிலும் ஒரு ஹீரோவிற்கான தேவையை நுழைத்தாரோ அப்போதே அவர் படங்கள் தோல்வியடையத் துவங்கிவிட்டன. ஏனென்றால் அந்த ஹீரோவிற்கான ஜஸ்டிபிகேஷனை அவரால் செய்யமுடியவில்லை. மக்கள் அவரை எல்லாக் காலத்திலும் பாக்யராஜாகவே பார்க்கிறார்கள். ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தை எடுத்துக் கொண்டால், அதில் ஒரு ராஜகுமாரி நல்ல குணமுள்ள பாக்யராஜை காதலிக்கும் கதை. என்னதான் குணமானவராய் இருந்தாலும் ஒரு மினிமம் பர்சனாலிட்டி அந்தக் கதைக்கு தேவைப்பட்டது.அந்த வேடத்தில் கார்த்திக் போன்ற ஹீரோ நடித்திருந்தால் படம் தப்பித்து இருக்கும்.

மேலும் அவர் படங்கள் பின்னாட்களில் தோல்வி அடைய முக்கிய காரணம், தன் பழைய படங்களைப் போல வலுவான துணைப் பாத்திரங்களை உருவாக்காததே.

கல்லாப் பெட்டி சிங்காரம், குமரி முத்து, குலதெய்வம் ராஜகோபால், ஹாஜா ஷெரிஃப், இடிச்சபுளி செல்வராஜ், மண்ணாங்கட்டி சுப்ரமணியம், செம்புலி ஜெகன், முன்னர் மதிமுகவில் பேச்சாளராய் இருந்து தற்போது அதிமுகவில் இருக்கும் எங்க சின்ன ராசா சரஸ்வதி, இன்று போய் நாளை வா ஹிந்தி வாத்தியார், சுந்தர காண்டம் படத்தில் சம்முவமணி என அழைக்கும் பாக்யராஜின் கிளாஸ்மேட் என பல நடிகர்களுக்கும் அவர்கள் கேரியரிலேயே சிறந்த மூன்று படங்களைச் சொல்லுங்கள் என்றால் அதில் நிச்சயம் ஒரு பாக்யராஜின் படம் இடம் பிடித்துவிடும்.
இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் முதலில் படைக்கப்பட்ட கேரக்டரின் எதார்த்த தன்மை, இரண்டாவது பாக்யராஜ் அமைக்கும் காட்சிகளின் பலம், இதில் பலம் என்பது திரைக்கதை அமைப்பையும் சேர்ந்தது.

பாக்யராஜ் திரைப்படங்களை பார்த்தால் அதில் பல காட்சிகள் வெகு நீளமாக இருக்கும். ஆனால் நமக்கு அதன் நீளம் தெரியாத அளவு அவை சுவராசியமாக படமாக்கப்பட்டிருக்கும்.
இது நம்ம ஆளுவில் பாக்யராஜுக்கு, ஷோபனா உணவு பரிமாறும் காட்சியை எடுத்துக் கொண்டால்,குமரிமுத்துவும், மனோரமாவும் மருமகள் ஷோபனாவின் சமையலைப் பாராட்டுவதில் ஆரம்பித்து, ஷோபனா ஒவ்வொரு விலங்கும் சத்தம் போடுவதின் பிண்ணனியை விளக்கும் வரை ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கு மேல் காட்சி இருக்கும்.

எங்க சின்ன ராசாவில், ராதா தன் கணவன் சின்னராசுவை அனைவரும் ஏமாற்றுவதை அவர் விளங்கிக்கொள்ளுமாறு நடத்தும் காட்சி. தோட்ட விளைச்சல் தீக்கிரையான கள்ளக் கணக்கில் ஆரம்பிக்கும் காட்சி, குலதெய்வம் ராஜகோபால் பணத்தை மெத்தையில் ஒளித்து வைத்திருப்பது வரை நீளும். அடுத்த காட்சி அவர்களுக்கு தோட்ட வேலை ஒதுக்கீடு வரை செல்லும். ஏறத்தாழ 20 நிமிடங்கள்.
நடிப்பதற்கு இப்படி நல்ல ஸ்கோப் கொடுப்பதோடு கேரக்டரையும் நன்கு செதுக்குவதால் பாக்யராஜின் படங்களில் துணைப்பாத்திரங்கள் நன்கு எடுபட்டன.

சுவரில்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா, டார்லிங் டார்லிங் டார்லிங் மற்றும் அந்த 7 நாட்கள் இவற்றில் கல்லாப் பெட்டி சிங்காரம் நடிப்பில் நன்கு கல்லா கட்டியிருப்பார்.

எங்க சின்ன ராசா மற்றும் பவுனு பவுனு தானில் குலதெய்வம் ராஜகோபால் அசத்தியிருப்பார். எ.சி.ராசாவில் வஞ்சகமான தாய்மாமன் வேடம் பவுனு பவுனுதானில் அப்பாவி தந்தை வேடம். கே எஸ் கோபால கிருஷ்ணனுக்குப் பிறகு பாக்யராஜ் தான் ராஜகோபாலுக்கு நல்ல வேடங்கள் தந்தார்.

ஹாஜா ஷெரிஃபுக்கு இப்போது 40 வயதுக்கு மேல் இருக்கும். இன்றும் நம் மனதில் எந்தா கோபி  என விளிக்கப்படும் பிம்பமே இருகிறது. மண்ணாங்கட்டி சுப்ரமணியத்தையும், செம்புலி ஜெகனையும் வேறு எந்த கேரக்டரிலும் நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாது.
இன்று போய் நாளை வா ஹிந்தி வாத்தியாரும் அப்படியே. அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் இ போ நா வாவில் இந்தி வாத்தியாரா வருவாரே அவர்தான் என்றே அடையாளப் படுத்தப் படுகிறார்.

முன்னர் சொல்லியது போல் இந்த பாத்திரங்களின் நிலைத்தன்மைக்கு காரணம் சராசரி வாழ்க்கையில் இருந்து இந்தப் பாத்திரங்களை எடுத்ததுதான். இவை 100% நல்லவர்கள் இல்லை. தங்களுடைய சர்வைவலுக்காக சில தில்லாலங்கடி வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். வேறெந்த உயரிய லட்சியமோ அல்லது கொடூர நோக்கமோ இருக்காது.

எ.சி.ராசாவில் வரும் மண்ணாங்கட்டியும், ராசுக்குட்டியில் வரும் செம்புலி ஜெகனும் அடிப்படையில் ஒரு பண்ணையாரின் எடுபிடிகள். மண்ணாங்கட்டி முட்டாள், செம்புலி காரியக்காரன், முதலாளியை வளைத்து மடக்கும் திறமையுள்ளவன். இப்படிப்பட்ட ஆட்களை கிராமங்களில் பண்ணையாட்களாகவும், நகரங்களில் மேனேஜரின் பியூன்களாகவும் நாம் பார்த்து வருகிறோம்.

இப்போது பாக்யராஜின் மிகப்பெரிய தோல்விப் படமான ஞானப்பழம் படத்தை எடுத்துக் கொண்டால், அதில் பாக்யராஜின் தந்தை ஒரு கிரிமினலான அமைச்சர். கிரிமினல் அமைச்சர் என்பது யதார்த்த பாத்திரம் என்றாலும், மக்களால் ஒன்ற முடியாத அளவுக்கு படைக்கப்பட்டிருக்கும். பாக்யராஜின் மச்சினனாக கவுண்டமணி. மிகப் பெரிய கோடீஸ்வரர், அவருக்கு சுகன்யா தங்கை என நம்ப முடியாத பாத்திரமாக அது இருக்கும்.

வீட்ல விசேஷங்க படத்தில், மருத்துவர் ஜனகராஜ், சக பிரஸ் முதலாளி விஜி போன்றோரின் கேரக்டர்கள் சரியாக வரையறுக்கப்பட்டிருக்காது.
தன் மகன் சாந்தனுவை வைத்து அவர் இயக்கிய சித்து பிளஸ் 2 வில் கதாநாயகியின் அப்பா, வீட்டு வேலைக்காரி பாத்திரங்களும் அப்படியே.

இப்பொழுது கூட சின்ன பட்ஜெட்டில், அவரின் எதார்த்த கதை அமைப்புடன், வலுவான துணை கதாபாத்திரங்களுடன் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்காவெல்லாம் ஓடும் போது அவர் படம் ஓடாதா? என்ன?.

14 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சொக்கத்தங்கத்த விட்டுடீங்கலென்ன

முரளிகண்ணன் said...

ஆமாம். அதிலும் பிரகாஷ்ராஜ், கவுண்டமணி மாதிரி ஆட்களை வைத்துக் கொண்டு சறுக்கியிருப்பார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிரகாஷ்ராஜ் ஒட்டு மீசை செம காமடி படம் நல்ல படம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விடியும் வரை காத்திரு ரொம்ப நல்ல படம்தான் அதிலும் அப்பாவியா இருந்துகொண்டு கிரிமினல் வேலை செய்வார்

முரளிகண்ணன் said...

ஆமாம் அவரின் ஆரம்ப கால படங்கள் எல்லாமே சூப்பர்தான். அதில் ஹீரோயிசம் இருக்காது. விடியும் வரை காத்திருவில் எந்த நடிகரும் நடிக்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

திரைக்கதை அமைப்பதில் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்பதை மீண்டும் அவர் நிரூபிக்க காத்திருப்போம்...

முரளிகண்ணன் said...

நன்றி தனபாலன்

அமுதா கிருஷ்ணா said...

புத்திசாலிதனமாக ஹீரோ அல்லது ஹீரோயின் அவருடைய படங்களில் இருப்பார்கள்.நீங்கள் சொன்ன மாதிரி மிக நீளமான காட்சிகள் கொஞ்சமும் போராடிக்காது.

கண்ணா.. said...

செல அலசல்ண்ணே தூள்

கண்ணா.. said...
This comment has been removed by the author.
SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்கள் சொன்ன வலுவான துணைப் பாத்திரங்கள் உருவான காலகட்டத்தில் அவரது துணை இயக்குநர்களும் நல்ல வலுவானவர்களாக இருந்தார்கள். எதிர்காலத்தில் நல்ல இயக்குநர்களாக உருவெடுத்து இருக்கிறார்கள். ஞானப் பழத்திற்குப் பிறகு வலுவான துணைப் பாத்திரங்களும் இல்லை. வலுவான துணை இயக்குநர்களும் இல்லை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிவப்பு ரோஜாக்களில் அந்த சர்வர் ஒரு முழி முழிப்பாரே.., அதை அந்த நபர் மட்டுமே செய்ய முடியும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இன்று போய் நாளை வா படத்தை அவரது மகனுக்காக ரீமேக் செய்ய நினைத்தாராம். அவர் ரீமேக் செய்திருந்தால் கதை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் விரைவில் எதிர்பாருங்கள். ( தமிழ் மணம் சேர்க்குமா என்று தெரியவில்லை, சந்தனு நடித்த சில காட்சிகளின் அடிப்படையில் உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன் )

முரளிகண்ணன் said...

கருத்துகளுக்கு நன்றி டாக்டர். விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்