December 28, 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

இதுவரை தமிழில் விளம்பர உலகம் தொடர்பாக வந்திருக்கும் புத்தகங்கள் எத்தனை என்று பார்த்தால் அது தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்திற்க்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களை விட குறைவாகவே இருக்கும். பெரும்பாலானோர் ஞாபகத்திற்க்கு உடனே வருவது எப்படி ஜெயித்தார்கள் என்ற ரமேஷ்பிரபாவின் புத்தகம். இது விகடன் குழும பத்திரிக்கையில் தொடராக வந்து பின் புத்தக வடிவம் பெற்ற ஒன்று. இது பெரும்பாலும் விளம்பரங்களின் வெற்றியை அலசிய ஒன்று என்று சொல்லலாம். விளம்பரத்துறையின் ஆணிவேரான ஏஜென்சிகளின் பங்கு, அவை செயல்படும் விதம், விளம்பர நுணுக்கங்கள், அடிப்படை விதிகள் ஆகியவற்றை அலசிய புத்தகம் என்று பார்த்தால் அது பிஜேபி தமிழ்நாட்டில் தனியாக நின்று ஜெயிக்கும் நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையிலேயே இருக்கும். அந்த குறையைப் போக்க வந்த புத்தகம் யுவகிருஷ்ணா எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்பது பாமக திருமங்கலத்தில் தனித்து நின்றால் ஜெயிக்காது என்பதைப் போன்ற நிதர்சனம்.

இந்த புத்தகத்தின் சிறப்பசம்மே விளம்பரத்துறையின் எந்த அம்சத்தையும் விட்டுவிடாமல் கவர் செய்திருப்பதேயாகும். முதன்முதலில் வெளியான அதிகாரபூர்வ விளம்பரம் துவங்கி எதிர்காலத்தில் எந்த மாதிரியான விளம்பர உத்திகள் நடைமுறைக்கு வரும் என்பதுவரை ஒரு முழுமையான கவரேஜ் இந்த புத்தகத்தில் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களும் தக்க உதாரணத்துடனுடம், நூலாசிரியருக்கே உரித்தான நகைச்சுவையுடனும் கொடுக்கப்பட்டுள்ளது. பியர்ஸ் சோப் பற்றிய செய்தியில், மாமனாரின் கம்பெனிக்கான மருமகனின் விளம்பரம் அதுவென்றும், அந்த வெற்றிக்காக அவருக்கு தலைதீபாவளிக்காக எக்ஸ்ட்ரா மோதிரம் கிடைத்ததா என்பது தெரியவில்லை என்று சொல்லுவது அவருக்கே உரித்தான டிரேட்மார்க். இந்திய விளம்பரத்துறையின் தந்தை ஆர் கே ஸ்வாமி என்பதில் தொடங்கி முதன்முதலில் தொலைக்காட்சியில் வண்ணத்தில் ஒளிபரப்பான விளம்பரம் பாம்பே டையிங் என்பதுவரை தகவகல்கள் கொட்டிகிடக்கின்றன இப்புத்தகத்தில். பெருவெற்றியடைந்த விளம்பரங்கள் என்று தரப்பட்டுள்ள விளம்பரங்கள் எல்லாமே மிக சுவையானவை.

அரசியல் கட்சிகளின் விளம்பர யுக்திகள் பற்றியும் நூலாசிரியர் தகவல்களை கொடுத்துள்ளார். இந்தியா ஒளிர்கிறது என்ற பிஜேபியின் விளம்பரம் உருவான விதம், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் இறுதிசெய்து வைத்துள்ள விளம்பர ஏஜென்ஸி என சுவையான தகவல்கள்களும் உண்டு. என்னை இப்புத்தகத்தில் மிகவும் கவர்ந்தபகுதிகள் என்றால் எதிர்மறை விளம்பரம், விதிவிலக்குகள் ஆகிய அத்தியாயங்கள். மிக மிக கவர்ந்த பகுதி என்றால் அது நூலாசிரியரின் கற்பனை வெளிப்படும் எதிர்காலம் என்ற அத்தியாயமே. எதிர்காலத்தில் எப்படியெல்லாம் விளம்பரம் வரும் என்று அவர் விவரித்திருப்பது இப்படியெல்லாம் நடக்குமா என்று படிக்கும் போது நினைக்க வைத்தாலும், பின்னர் யோசிக்கும்போது நடக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. பின்னினைப்பாக விளம்பரத்துறையின் பிதாமகன்கள் மற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுச்சேவை,அரசு விளம்பரங்கள், கண்காட்சி, ஈவெண்ட் மானேஜ்மெண்ட்,பிராண்டிங் என இப்புத்தகம் எதையும் விட்டு வைக்கவில்லை. இப்புத்தகத்தின் குறையாக நான் கருதுவது விளம்பரம் என்றவுடன் நம் கண்ணில் தோன்றுவது அழகு மாடல்களே. அவர்களைப்பற்றி சுப்ரமணியம் சுவாமி கட்சிக்கு இருக்கும் வாக்கு சதவீதம் அளவுக்கு கூட தகவல் இல்லை என்பது மன்னிக்க முடியாத குற்றம். சத்தியமூர்த்தி பவன் கூட்டங்களுக்கு செல்லும் காங்கிரஸ்காரர்களுக்கு இறுக்கமாக வேட்டி கட்ட தெரிவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் விளம்பர துறைக்கு வர துடிப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டியதும்.

நூலை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்

நூலின் பெயர் : விளம்பர உலகம்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா
பக்கங்கள் : 152
விலை : ரூ 70.

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701

ரகுவம்சம் – அ வெ சுப்பிரமணியன்



ராமாயனம்,மஹாபாரதம் என்ற இரண்டு பெயர்ச்சொற்களை கேட்காமல் நம் நாட்டில் யாரும் பள்ளிப் படிப்பை கடக்க முடியாது. செவி வழியாகவும், நாடகங்கள் மூலமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களிடம் இந்த காப்பியங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. 75 ஆண்டுகளாக திரைப்படங்கள் மூலமாகவும் இவை ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. சினிமா எடுக்கப்பட்ட முதல் பத்தாண்டுகளில் ராமாயன,மஹாபாரத உப கதைகள் பெரும் இடத்தைப் பிடித்திருந்தன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின் இந்த இரண்டு காப்பியங்களின் சிறு சிறு உப கதைகளும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காட்சி வடிவிலும் சென்றடைந்தன. இரண்டு காப்பியங்களும் விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்பட்டவையாக உள்ளதால் மத ரீதியாகவும் இதை படிப்பவர்கள் தங்கள் சுற்றத்தால் உற்சாகப்படுத்தப் பட்டார்கள்.

இந்த இரண்டு காப்பியங்களில் எது சிறந்தது என்று கேட்டால் பலரிடம் உடனே வரும் பதில் மஹாபாரதம் தான். ராமாயனத்தை விட அதிகமான கிளைக்கதைகளும், கதாபாத்திரங்களும், சுவையான சம்பவங்களும் மஹாபாரதத்தில் தான் அதிகம். ஆனால் இலக்கியசுவை என்று பார்த்தால் கம்பர் எழுதிய ராமாயனத்தின் அருகில் கூட மஹாபாரதத்தால் வர முடியாது. எந்த இலக்கியத்தையுமே அது உருவாகிய மொழியில் படித்தால் தனிச் சிறப்பாக இருக்கும். கிரேக்க காப்பியங்களான இலியட்,ஒடிஸி போன்றவற்றை ஆங்கிலத்தில் படிப்பதைவிட கிரேக்க மொழியில் படித்தால் இன்னும் அதன் இலக்கிய செழுமை புலப்படும்.

மகாகவி காளிதாஸ் எழுதிய சாகுந்தலம்,மாளவீகம், விக்கிரமன்ஊர்வசி ஆகிய காவியங்களையும் ரகுவம்சம் ,குமார சம்பவம் போன்ற பாடல் வடிவில் எழுதப்பட்ட புராணங்களையும், மேகதூதம் போன்றவற்றையும் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் அதை ருசிக்க வேண்டுமென ஆவல் எழுவதுண்டு. இவற்றில் எதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தேன், ஆனால் வர்ணனைகளைப் படித்ததில்லை. நியு ஹொரைசன் மீடியாவின் ஒரு அங்கமான வரம் பிரிவு வெளியிட்டிருக்கும் ரகுவம்சம் மிக எளிய நடையில் அந்த வர்ணனைகளைத் தருகிறது.

ராமன், அவனுக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள், அவன் பின் ஆண்டவர்கள் ஆகியோரது சிறப்புகளை சொல்வதே இந்த ரகுவம்ச காவியம். ரகு வம்சத்தின் முதல் மன்னர் வைவஸ்த மனு, கடைசி மன்னர் அக்கினிவர்ணன். முக்கியமாக திலீபன்,ரகு,அஜன், தசரதன் மற்றும் ராமன் ஆகிய மன்னர்களைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.

இந்த ரகுவம்ச புத்தகத்தின் சிறப்பே இதன் வர்ணனைகள்தான். பல இடங்களில் வர்ணனைகள் நம் கற்பனைகளுக்கு அப்பால் செல்கின்றன. திலீபன் குழந்தைவரம் வேண்டி தன் மனைவி சுதட்சிணையுடன் வசிஷ்டர் ஆசிரமத்தில் தங்கி நந்தினி பசுவுக்கு பணிவிடை செய்தல், திலீபன் மகன் ரகு திக்விஜயம் செய்தல், ரகுவின் மகன் அஜனின் அழகை காண இளம்பெண்கள் ஓடி வருதல், அஜனின் மகன் தசரதன் வேட்டையாட செல்லுதல், புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது கீழே காணும் காட்சியை ராமன், சீதாவுக்கு விளக்கிக் கொண்டு வரும் காட்சி ஆகியவை வர்ணனைகளின் உச்சம் என சொல்லலாம்.

இந்த வம்சத்திற்க்கு ரகுவம்சம் என பெயர் வர, சிறப்பாக ஆட்சி செய்த ரகு காரணம் என இங்கு சொல்லப்படுகிறது. ஆனால் சூரியவம்சத்தை சார்ந்த அரசவம்சம் என்பதால் இப்பெயர் என கர்ணபரம்பரையாக ஒரு செய்தி நம்மிடையே புழங்கி வருகிறது. எது சரி என்பது தெரியவில்லை. நாம் அதிகம் கேள்விப்பட்டிராத குசன்,அதிதி,நிஷிதன் ஆகியோரைப் பற்றியும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் மிக குறைந்த அளவே.
இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் இதில் சொல்லப்பட்டுள்ள உவமைகளே. இந்துமதியின் சுயம்வரத்திற்க்கு அஜன் செல்லுகிறான். நகர மக்கள் அனைவரும் அங்கு வந்திருக்கும் மற்ற அரசர்களை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள். அஜன் உள்ளே நுழைந்ததும் அனைவரின் கண்களும் அவனையே நோக்குகின்றன. எப்படி இருந்தது என்றால் ”காட்டிலிருந்து மதநீரை பெருகவிட்டுக் கொண்டுவரும் யானையைக் கண்டதும், வண்டுகள் பூக்களை எல்லாம் விட்டு விட்டு யானையிடம் செல்வது போல”

ரகுவின் திக்விஜயத்தில் ஒரு காட்சி “ கலிங்க நாட்டை வெற்றிகொண்டபின் ரகுவின் படை காவிரியாற்றின் கரையை அடைந்தது. அஙு சில நாட்கள் டரகு தன் படையுடன் தங்கியிருந்தான். மதநீர் பெருகும் யானைகள் அந்த நதியில் குளித்ததால், அவற்றின் மதநீர் பெருமளவில் ஆற்றின் நீருடன் கலந்துவிட்டது. இதன் விளைவு என்ன தெரியுமா? கடலரசனுக்கு ஆறுகள் எல்லாம் மனைவிகள் ஆகும். காவிரி ஆறு யானைகளின் மதநீருடன் கலந்த கலப்பினால், கடலரசனுக்கு மனைவியின் கற்பு ஒழுக்கத்தின்மீதே சந்தேகம் எழுந்துவிட்டதாம்”

தசரதன் வேட்டையில் ஒரு காட்சி, “ அவன் கையில் ஏந்தியிருந்த வில் அம்பைப் பார்த்து மிரண்டன மான்கள். அவைகளின் அழகிய கண்கள் சஞ்சலமாக அங்குமிங்கும் உருட்டி விழித்த காட்சி, தசரதனுக்கு தன் அந்தப்புற பென்களை ஞாபகம் ஊட்டியதால் அவற்றை கொல்லாமல் விட்டுவிட்டான்”

ரகுவம்சத்தை தமிழில் இங்கு மொழிபெயர்த்திருப்பவர் அ வெ சுப்பிரமணியன். மிக மிக சரளமான நடை. சமஸ்கிருதமும், தமிழும் இவருக்கு இரு கண்கள் என்கிறார்கள். இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு அதில் எந்த சந்தேகமும் வராது. ரகுவம்சத்தின் இலக்கிய செழுமையை ருசிக்க வைத்த அவருக்கு நன்றிகள்.

நூலின் பெயர் : ரகுவம்சம்

ஆசிரியர் : அ வெ சுப்பிரமணியன்

பக்கங்கள் : 136

விலை : ரூ 60.

ரகுவம்சம் ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல் : 044-43009701


நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.

December 26, 2008

27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல்

பதிவர் சந்திப்பு அழைப்பிதழ்

நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை

இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர்

மாலை 5 மணி

கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர அறிமுகம்

மாலை 5.15மணி

மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே கலந்துரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன், கேபிள் சங்கர், அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்

மாலை 5.45மணி

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக்கிலுக், ஜியோவ்ராம் சுந்தர் மற்றும் பல பதிவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
இரவு 7.00 மணி

ஏதாவதுசெய்யனும் பாஸு என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தை நர்சிம் தொடங்கி வைத்து பேசுவார்.

இரவு 7.30 மணி
ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ளல்.

இரவு 7.45 மணி
பூங்கா அருகில் உள்ள தேநீர்க்கடையில் பிஸ்கட்,தேநீர் அருந்தும் வைபவம். பின்னர் அதிஷா,அக்னிபார்வை,ஸ்ரீ போன்ற துடிப்பான பதிவர்கள் ஆரம்பித்து வைக்கும் கும்மி. கொலைவெறியுடன் எல்லா விஷயங்களும் கும்மப்படும்.


இரவு 8.30 மணி


அவுங்கவுங்க வீட்டுக்கு அவரைக்காயும் சோத்துக்கு


சந்திப்பில் கலந்துகொள்ள சென்னை வாழ் முன்னாள்,இன்னாள், வருங்கால பதிவர்கள், வாசகர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி சென்னை பதிவர்கள் சார்பாக அழைக்கிறோம்.

சந்திப்புக்கு அமைப்பாளர்/ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் கிடையாது. வருபவர்கள் அனைவரும் அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர்களே.

மேலதிக விபரங்களுக்கு சந்திப்பு பற்றிய அதிஷாவின் பதிவு