
ராமாயனம்,மஹாபாரதம் என்ற இரண்டு பெயர்ச்சொற்களை கேட்காமல் நம் நாட்டில் யாரும் பள்ளிப் படிப்பை கடக்க முடியாது. செவி வழியாகவும், நாடகங்கள் மூலமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களிடம் இந்த காப்பியங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. 75 ஆண்டுகளாக திரைப்படங்கள் மூலமாகவும் இவை ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. சினிமா எடுக்கப்பட்ட முதல் பத்தாண்டுகளில் ராமாயன,மஹாபாரத உப கதைகள் பெரும் இடத்தைப் பிடித்திருந்தன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின் இந்த இரண்டு காப்பியங்களின் சிறு சிறு உப கதைகளும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காட்சி வடிவிலும் சென்றடைந்தன. இரண்டு காப்பியங்களும் விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்பட்டவையாக உள்ளதால் மத ரீதியாகவும் இதை படிப்பவர்கள் தங்கள் சுற்றத்தால் உற்சாகப்படுத்தப் பட்டார்கள்.
இந்த இரண்டு காப்பியங்களில் எது சிறந்தது என்று கேட்டால் பலரிடம் உடனே வரும் பதில் மஹாபாரதம் தான். ராமாயனத்தை விட அதிகமான கிளைக்கதைகளும், கதாபாத்திரங்களும், சுவையான சம்பவங்களும் மஹாபாரதத்தில் தான் அதிகம். ஆனால் இலக்கியசுவை என்று பார்த்தால் கம்பர் எழுதிய ராமாயனத்தின் அருகில் கூட மஹாபாரதத்தால் வர முடியாது. எந்த இலக்கியத்தையுமே அது உருவாகிய மொழியில் படித்தால் தனிச் சிறப்பாக இருக்கும். கிரேக்க காப்பியங்களான இலியட்,ஒடிஸி போன்றவற்றை ஆங்கிலத்தில் படிப்பதைவிட கிரேக்க மொழியில் படித்தால் இன்னும் அதன் இலக்கிய செழுமை புலப்படும்.
மகாகவி காளிதாஸ் எழுதிய சாகுந்தலம்,மாளவீகம், விக்கிரமன்ஊர்வசி ஆகிய காவியங்களையும் ரகுவம்சம் ,குமார சம்பவம் போன்ற பாடல் வடிவில் எழுதப்பட்ட புராணங்களையும், மேகதூதம் போன்றவற்றையும் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் அதை ருசிக்க வேண்டுமென ஆவல் எழுவதுண்டு. இவற்றில் எதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தேன், ஆனால் வர்ணனைகளைப் படித்ததில்லை. நியு ஹொரைசன் மீடியாவின் ஒரு அங்கமான வரம் பிரிவு வெளியிட்டிருக்கும் ரகுவம்சம் மிக எளிய நடையில் அந்த வர்ணனைகளைத் தருகிறது.
ராமன், அவனுக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள், அவன் பின் ஆண்டவர்கள் ஆகியோரது சிறப்புகளை சொல்வதே இந்த ரகுவம்ச காவியம். ரகு வம்சத்தின் முதல் மன்னர் வைவஸ்த மனு, கடைசி மன்னர் அக்கினிவர்ணன். முக்கியமாக திலீபன்,ரகு,அஜன், தசரதன் மற்றும் ராமன் ஆகிய மன்னர்களைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.
இந்த ரகுவம்ச புத்தகத்தின் சிறப்பே இதன் வர்ணனைகள்தான். பல இடங்களில் வர்ணனைகள் நம் கற்பனைகளுக்கு அப்பால் செல்கின்றன. திலீபன் குழந்தைவரம் வேண்டி தன் மனைவி சுதட்சிணையுடன் வசிஷ்டர் ஆசிரமத்தில் தங்கி நந்தினி பசுவுக்கு பணிவிடை செய்தல், திலீபன் மகன் ரகு திக்விஜயம் செய்தல், ரகுவின் மகன் அஜனின் அழகை காண இளம்பெண்கள் ஓடி வருதல், அஜனின் மகன் தசரதன் வேட்டையாட செல்லுதல், புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது கீழே காணும் காட்சியை ராமன், சீதாவுக்கு விளக்கிக் கொண்டு வரும் காட்சி ஆகியவை வர்ணனைகளின் உச்சம் என சொல்லலாம்.
இந்த வம்சத்திற்க்கு ரகுவம்சம் என பெயர் வர, சிறப்பாக ஆட்சி செய்த ரகு காரணம் என இங்கு சொல்லப்படுகிறது. ஆனால் சூரியவம்சத்தை சார்ந்த அரசவம்சம் என்பதால் இப்பெயர் என கர்ணபரம்பரையாக ஒரு செய்தி நம்மிடையே புழங்கி வருகிறது. எது சரி என்பது தெரியவில்லை. நாம் அதிகம் கேள்விப்பட்டிராத குசன்,அதிதி,நிஷிதன் ஆகியோரைப் பற்றியும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் மிக குறைந்த அளவே.
இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் இதில் சொல்லப்பட்டுள்ள உவமைகளே. இந்துமதியின் சுயம்வரத்திற்க்கு அஜன் செல்லுகிறான். நகர மக்கள் அனைவரும் அங்கு வந்திருக்கும் மற்ற அரசர்களை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள். அஜன் உள்ளே நுழைந்ததும் அனைவரின் கண்களும் அவனையே நோக்குகின்றன. எப்படி இருந்தது என்றால் ”காட்டிலிருந்து மதநீரை பெருகவிட்டுக் கொண்டுவரும் யானையைக் கண்டதும், வண்டுகள் பூக்களை எல்லாம் விட்டு விட்டு யானையிடம் செல்வது போல”
ரகுவின் திக்விஜயத்தில் ஒரு காட்சி “ கலிங்க நாட்டை வெற்றிகொண்டபின் ரகுவின் படை காவிரியாற்றின் கரையை அடைந்தது. அஙு சில நாட்கள் டரகு தன் படையுடன் தங்கியிருந்தான். மதநீர் பெருகும் யானைகள் அந்த நதியில் குளித்ததால், அவற்றின் மதநீர் பெருமளவில் ஆற்றின் நீருடன் கலந்துவிட்டது. இதன் விளைவு என்ன தெரியுமா? கடலரசனுக்கு ஆறுகள் எல்லாம் மனைவிகள் ஆகும். காவிரி ஆறு யானைகளின் மதநீருடன் கலந்த கலப்பினால், கடலரசனுக்கு மனைவியின் கற்பு ஒழுக்கத்தின்மீதே சந்தேகம் எழுந்துவிட்டதாம்”
தசரதன் வேட்டையில் ஒரு காட்சி, “ அவன் கையில் ஏந்தியிருந்த வில் அம்பைப் பார்த்து மிரண்டன மான்கள். அவைகளின் அழகிய கண்கள் சஞ்சலமாக அங்குமிங்கும் உருட்டி விழித்த காட்சி, தசரதனுக்கு தன் அந்தப்புற பென்களை ஞாபகம் ஊட்டியதால் அவற்றை கொல்லாமல் விட்டுவிட்டான்”
ரகுவம்சத்தை தமிழில் இங்கு மொழிபெயர்த்திருப்பவர் அ வெ சுப்பிரமணியன். மிக மிக சரளமான நடை. சமஸ்கிருதமும், தமிழும் இவருக்கு இரு கண்கள் என்கிறார்கள். இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு அதில் எந்த சந்தேகமும் வராது. ரகுவம்சத்தின் இலக்கிய செழுமையை ருசிக்க வைத்த அவருக்கு நன்றிகள்.
நூலின் பெயர் : ரகுவம்சம்
ஆசிரியர் : அ வெ சுப்பிரமணியன்
பக்கங்கள் : 136
விலை : ரூ 60.
ரகுவம்சம் ஆன்லைனில் வாங்க இங்கே கிளிக்கவும்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
நியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.
1 comment:
இந்த புத்தகமும் ’புத்கக் கடை’யில் வாங்கியது தானே?
Post a Comment