
கமலின் தீவிர ரசிகனான எனக்கு ராமராஜன் படங்களை சுத்தமாகப் பிடிக்காது. அவர் படங்களுக்கு செல்வோரை நக்கல் செய்வது எனக்கு ஒரு பொழுது போக்கு. ஒருமுறை “என்னப் பெத்த ராசா” என்ற படத்துக்கு நண்பன் அழைத்த போது நூறு ரூபாயும்,ஒரு கர்ச்சீப்பும், பஞ்சும் கொடுத்தாலும் வரமாட்டேன் என்று மறுத்திருக்கிறேன். அப்போது அவர் படங்களைப் பற்றிய பொதுவான விமர்சனம்
1. ஸ்டில்களில் இணைந்து நடிப்போர் இல்லாமல் இருந்தால் எந்தப்படம் என்று கண்டுபிடுக்க முடியாது
2. எல்லா வகை காட்சிக்கும் ஒரேமாதிரி நடிப்பு வசன உச்சரிப்பு
3. காமெடி மற்றும் பாட்டு இல்லாவிட்டால் படம் ஓடாது
(யோசித்துப் பார்த்தால் இது விஐய் படத்துக்கும் பொருந்தும்)
ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளாலும் பேருந்து பயணங்களாலும் பத்து பதினைந்து ராமராஜன் படங்களைப் பார்க்கும் அவல நிலைக்கு ஆளானேன்.
சுகுணா திவாகர் தன் பதிவொன்றில் ராமராஜன் படங்கள் ஆபத்தில்லாத கிராமப் படங்கள் ஏனெனில் அவை நிலப்பிரபுத்துவ கூறை முன்நிறுத்தாதவை என்று கூறியிருந்தார். அதைப்படித்தபின் படங்கள் அனைத்தையும் மீள்பார்வை செய்து பார்த்தேன். அப்பட்டமான உண்மை.
1.கதையின் நாயகன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனாகவே காட்டப்படுகிறான். (என்னப் பெத்த ராசா, தங்கமான ராசா, கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், ஊருவிட்டு ஊரு வந்து,நம்ம ஊரு நல்ல ஊரு, எங்க ஊரு பாட்டுக்காரன்..........). செயற்கரிய செயல்களை செய்வதில்லை. சிறிது புத்திசாலித்தனம்,நேர்மை ஆகியவற்றால் மக்களை கவர்கிறான். இந்த கதாநாயக தன்மையால் கிராமப்புற இளைஞர்கள் தங்களை அவரிடம் அடையாளம் கண்டார்கள். ஓ இதுமாதிரி இருந்தால் நம்மையும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளோடியது.
ஆனால் அவரை அடுத்து வந்த கே.எஸ். ரவிக்குமார் தன் படங்களில் (ஊர்மரியாதை, நாட்டாமை, நட்புக்காக,சமுத்திரம் ) நிலப்பிரபுத்துவ கூறை முன்நிறுத்தினார். ஊர் பெரியவர் தெய்வம் மற்றவர்கள் ஏப்ப சாப்பை என்பது போல கதையமைப்பு இருக்கும். ஆர்.வி.உதயகுமார் (சின்னகவுண்டர், எஜமான்,ராஜகுமாரன்) பின்னர் வெளிவந்த சில பிரபு,சத்யராஜ்,சரத்குமார் படங்களும் இவ்வகையே. அவற்றில் எல்லாம் கதாநாயர்கள் நம்ப முடியாத பலம், நேர்மை, வள்ளல் தன்மையுடன் இருப்பார்கள். அவ்வகைப் படங்களில் கிராமப்புற ரசிகர்களால் தங்கள் சுயத்தை அடையாளம் காண முடியவில்லை. எனவேதான் இன்னமும் ராமராஜன் படங்கள் பி சி சென்டர்களில் ஓடுகின்றன.
2. கதாநாயகிகளும் கூடியவரையில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணாகவே காட்டப்படுகிறாள். ஆளை மயக்கும் அழகுடன் இருப்பதில்லை. இது கிராமப் புற பெண்கள் தங்களை அடையாளப்படுத்த.
3.பெண்களை மட்டம் தட்டி பேசும் காட்சிகள் குறைவு. ரஜினி (படையப்பா,மன்னன்) விஐய்(சிவகாசி,குருவி) இதில் படு மோசம்.
இப்போது வரும் பல மொக்கைப்படங்களுக்கு ராமராஜன் படங்கள் எவ்வளோவோ பரவாயில்லை.