June 24, 2008

தமிழ்சினிமாவில் இயக்குநர்களின் பொற்காலம் எவ்வளவு?

தமிழ்நாட்டு இயக்குநர்கள் பலரின் சிறந்த படங்கள் எல்லாமே அவர்கள் துறைக்கு வந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்டவையாக இருக்கும். ( கல்யான சாப்பாடு இயக்குநர்களான எஸ் பி முத்துராமன்,பி வாசு,கே எஸ் ரவிக்குமார், ஷங்கர், ஹரி போன்றவர்கள் பட்டியலில் இல்லை) உதாரணமாக

ஸ்ரீதர் – காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம்
பாலசந்தர் – எதிர் நீச்சல், பாமா விஜயம், அவள் ஒரு தொடர்கதை (எல்லா மெகா சீரியலுக்கும் இப்படம்தான் ஆணிவேர்)
மகேந்திரன் – உதிரிப்பூக்கள்,முள்ளும் மலரும்
பாரதிராஜா – பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள்
பாக்யராஜ் - இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள்
டி ராஜேந்தர் – ஒரு தலை ராகம், இரயில் பயணங்களில்
மணிரத்னம் – மௌனராகம், நாயகன்

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப்பின் எடுக்கப்பட்ட இவர்களது படங்கள் முந்தைய படங்களைப்போல் சிறப்பாக இல்லை. இவை காரணமாக இருக்குமா?

1) துறைக்கு வராததற்கு முன் சமூகத்துடன் இணைந்து பழகி தங்களை பாதித்த, தாங்கள் உணர்ந்த சம்பவங்களுடன் படம் எடுத்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மக்களுடன் பழகாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது.

2) வாய்ப்பு கிடைக்கும்வரை தங்கள் கதைகளை அசை போட்டு அசை போட்டு மெருகேற்றியவர்கள், அதன்பின் தொடரும் வாய்ப்புகளால் அதற்குரிய நேரம், சிரத்தை எடுத்துக்கொள்ளாதது

3) மாறும் மக்கள் ரசனை, புதிய தொழில்நுட்பங்களை (மணிரத்னம் இதில் விதிவிலக்கு) கணக்கில் எடுத்துக்கொள்ளாதது

4) சாச்சுரேஷன்?

5) தொடர் வாசிப்புகள், தேடல்களை குறைத்துக்கொள்வது.


இப்பொழுது உள்ள பாலா, அமீர், மிஷ்கின் போன்றோர் தங்கள் வசந்த காலத்தில் உள்ளார்கள். இவர்களும் நீர்த்துப் போவார்களா இல்லை காலத்தை வெல்வார்களா?

காலத்தை வென்று சிறந்த படங்களை இவர்கள் தொடர்ந்து தர வாழ்த்துவோம்

27 comments:

வெட்டிப்பயல் said...

//1) துறைக்கு வராததற்கு முன் சமூகத்துடன் இணைந்து பழகி தங்களை பாதித்த, தாங்கள் உணர்ந்த சம்பவங்களுடன் படம் எடுத்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மக்களுடன் பழகாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது.//

இது ஒரு முக்கியமான காரணம்...

Athisha said...

\\துறைக்கு வராததற்கு முன் சமூகத்துடன் இணைந்து பழகி தங்களை பாதித்த, தாங்கள் உணர்ந்த சம்பவங்களுடன் படம் எடுத்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மக்களுடன் பழகாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது.
\\

இந்த கருத்து முற்றிலும் உண்மை

பணம் வந்த பிறகு அவர்களது வாழ்க்கை முறையும் அவர்களது பழக்கவழக்கங்களின் மாற்றமே முக்கியமாக படுகிறது

thamizhparavai said...

பாரதிராஜாவின் "முதல் மரியாதை" விடப்பட்டுள்ளது.
//துறைக்கு வராததற்கு முன் சமூகத்துடன் இணைந்து பழகி தங்களை பாதித்த, தாங்கள் உணர்ந்த சம்பவங்களுடன் படம் எடுத்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் மக்களுடன் பழகாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது.//
இயக்குனர் ராமின் வலையலக வருகை ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

பாலா,அமீர்,மிஷ்கின் மூவருமே தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்வதில் கடுமையாக முயன்று வருகின்றனர்.
"இரண்டு பேர் ஒரு திண்ணையில பேசுறதையே, நல்லவிதமா படமாக்கி பிரமாதப்படுத்திருவேன்"-ன்னு பாலா சொல்றார்.இது தன் திறமையில உள்ள தன்னம்பிக்கை.
ஆனா சரக்கு இருக்கிற ஷங்கர் போன்றோரோ ,தங்களை நம்பாம, வெறும் 'ஜிம்மிக்ஸ்'-ஐ மட்டுமே பெருசா நம்புறாரு..
சேரன் நடிக்கிறதை விட்டுட்டு, இய்க்கத்தை மட்டும் பார்க்கலாம்.
தங்கர் பச்சான் பேச்சைக் குறைக்கலாம்.
வெங்கட் பிரபுவோட சென்னை 28. புதிய அனுபவம்..அவர் மேல நம்பிக்கையைத் தோற்றுவிக்குது.
சசி கம்ர்ஷியலாக் கூட நல்லா பன்றாரு.
மணிரத்னத்தை விடுங்க..அவருக்கு காசுதான் முக்கியம்..தொழில்னுட்பத்தை வைச்சு நல்லா ஏமாத்தத் தெரியும்.(இப்போதைக்கு ஹிந்தியை விட்டு வர மாட்டாரு)

M.Rishan Shareef said...

அன்பின் முரளிகண்ணன்,
நீங்கள் சொல்லும் காரணங்கள் சரிதான்.
இன்னும் சிலர் புகழ்வட்டம் சேரும் போது பாதை தவறி விடுகிறார்கள்.
அதுவும் ஒரு காரணம்தான்.

M.Rishan Shareef said...

இன்னும் சில இயக்குனர்கள் சில பிரபல நாயகர்களுக்காக தங்கள் கதையை, கதைப் போக்கை மாற்றிக் கொள்வார்கள்.இது பெரும்பாலும் தோல்வியில் முடியும்.
சமீபத்திய உதாரணம் 'குருவி'.

கோவி.கண்ணன் said...

முரளி,

இயக்குனர்கள் சாதிக்கும் வயது 30 - 35 தான், புதிய சிந்தனைகள், புத்துணர்வு...சாதிக்க வேண்டும் என்ற வெறி இவையெல்லாம் சேர்ந்து இருக்கும். அந்த காலகட்டத்திற்குள் 2 - 3 படங்களைத் தருவார்கள். அதன் பிறகு அலைகள் போலத்தான் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும், இப்ப ஷங்கர் எப்படி ஹிட் ஆகிறார் ? அவர் எடுப்பது பொழுது போக்குப் படம் தான், சிறந்த படம் என்ற வகைக்குள் வருகிறது. 20க்கும் மேற்பட்ட இளம் உதவி இயக்குனர்களை உதவிக்கு வைத்திருக்கிறார். அவர்களின் சிந்தனைகளை தொகுத்து படமாக்குகிறார்.

முரளிகண்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாஜி மற்றும் அதிஷா

முரளிகண்ணன் said...

தமிழ்பறவை, புதிய இயக்குநர்கள் பற்றிய உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிகச்சரி. ராம்,வெங்கட்பிரபு போன்றோரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார்கள். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தமிழுக்கு அவர்கள் தரவேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் அவா.

முரளிகண்ணன் said...

அன்பின் ரிஷான் ஷெரிப்
\\சில இயக்குனர்கள் சில பிரபல நாயகர்களுக்காக தங்கள் கதையை, கதைப் போக்கை மாற்றிக் கொள்வார்கள்\\
ஆமோதிக்கிறேன்

Samuthra Senthil said...

//இப்பொழுது உள்ள பாலா, அமீர், மிஷ்கின் போன்றோர் தங்கள் வசந்த காலத்தில் உள்ளார்கள். இவர்களும் நீர்த்துப் போவார்களா இல்லை காலத்தை வெல்வார்களா?//


அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்தால்தான் இயக்குனர்களுக்கு வசந்தகாலம். வாய்ப்புகள் குவியும். வேண்டாம் என்று குப்பையில் போட்ட கதைகூட படச்சுருளாக மாற வழி பிறக்கும். ஒரு படம் பிளாப் என்றாலே அந்த இயக்குனரின் மவுசு குறைந்து விடும். நல்ல கதையாக இருந்தாலும் பணம்போட தயாரிப்பாளர் தயங்குவார்கள். இதுதான் உலக சினிமாவின் நியதி. அதேநேரத்தில் ஒருசில படங்கள் நல்ல கதைக்கரு (கற்றது தமிழ் படம்போல) கொண்டாதாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவு ஒடாது. அப்படிப்பட்ட நேரங்களில் அந்த நல்ல கதைக்கரு படத்தை எடுக்க இயக்குனர் பட்ட பாட்டுக்கு என்றாவது ஒரு நாள் வசந்தகாலம் வாயிலைத் தட்டும்.

(என்ன முரளிகண்ணன் ரொம்ப நாளா ஆளையே காணும். ஊருக்கு ஏதும் போனா சொல்லிட்டு போகக்கூடாதா?)

dondu(#11168674346665545885) said...

மொக்கை பின்னூட்டத்திற்கு ரொம்பவும் மன்னிப்பு கோருகிறேன்.

கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலம் பற்றி பாடம் நடக்கும்போது, ஆசிரியர் கரும்பலகையில் "முரளி பானை செய்கிறான்" என்னும் வாக்கியத்தை எழுதி, "சோமு இது எந்தக் காலம்"? எனக் கேட்க, சோமு எழுந்து கையை கட்டிக் கொண்டு "பொற்காலம் சார்" என்கிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முரளிகண்ணன் said...

\\இயக்குனர்கள் சாதிக்கும் வயது 30 - 35 தான், புதிய சிந்தனைகள், புத்துணர்வு...சாதிக்க வேண்டும் என்ற வெறி இவையெல்லாம் சேர்ந்து இருக்கும்\\

ஆமாம் கோவி கண்ணன் அவர்களே. சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் போன்றவர்களும், பல மேலை நாட்டு இயக்குநர்களும் காலத்தைக் கடந்து சாதிக்கிறார்கள். அது நம்மில் இல்லையே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

\\ஷங்கர் 20க்கும் மேற்பட்ட இளம் உதவி இயக்குனர்களை உதவிக்கு வைத்திருக்கிறார்\\

இது போன்ற காரணங்களால் தான் அவர்களால் உன்னத படங்களை கொடுக்க முடிவதில்லை

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல அலசல் முரளி கண்ணன்.

இது இயக்குநர்களுக்கு என்று இல்லை, நடிகர்களுக்கு, ஏன் கவிஞர்களுக்கு.. பதிவர்களுக்கு கூட ஏற்படும் சிண்ட்ரோம் தான் :-)

முதல் கவிதையை மட்டும் கவிதையாக எழுதி, கவிஞன் என்று பெயர் வாங்கிவிட்டால் போதும், அப்புறம் நீ எழுதும் லாண்டரி பில்லும் கவிதைதான் என்றார் ஆசீப் மீரான் ஒரு முறை. அதேதான் இங்கேயும். முதல் படத்தில் கஷ்டப்பட்டு நிலைநிறுத்திக்கொண்டு, அப்புறம், தான் எடுப்பதுதான் படம் என்ற நிலை வந்துவிடுகிறது.

பாரதிராஜா 16 வயதினிலேவில் காட்டிய கிராமத்துக்கும், தாஜ்மஹாலில் காட்டிய கிராமத்துக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் சொன்ன முதல் பாயிண்ட் தான்.

அதையும் மீறி சிலர் அப்டேட்டட் ஆக இருக்கிறார்கள் என்றால், நிஜமான ஆர்வமும், அவர்களின் உதவியாளர்களும்தான் காரணமாக இருக்கமுடியும். (எ கா: கமல்)

புருனோ Bruno said...

//1) சமூகத்துடன் இணைந்து பழகி

2) கதைகளை அசை போட்டு அசை போட்டு மெருகேற்றியவர்கள்,

3) மாறும் மக்கள் ரசனை, புதிய தொழில்நுட்பங்களை

4) சாச்சுரேஷன்?

5) தொடர் வாசிப்புகள், தேடல்களை குறைத்துக்கொள்வது.//

இதை விட மற்றுமொரு விஷயம் உள்ளது.

கலைத்துறையினர் அனைவருக்கும் உச்சம் “peak" என்று ஒன்று இருக்கும்.

அதன் பின் இறங்குமுகம் தான்.

சிலரின் இறங்கு முகம் கூட அடுத்தவரின் உச்சத்தை விட அதிகமாக இருக்கும்

உதாரணமாக சச்சின் தற்பொழுது தனது விளையாட்டு திறமையின் இறங்குமுகத்தில் தான் இருக்கிறார். ஆனால் அவரை விட (அவரின் தற்பொழுது திறனை விட) அதிக திறன் கொண்டவர் யாரும் இல்லை என்பதால் தான் அவர் அடித்தால் தான் வெற்றி என்று இருக்கிறது

இளையராஜாவின் உச்ச காலம் (புது புது அர்த்தங்கள், தளபதி) முடிந்து அவரது இறங்கு முகம் துவங்கிய காலகட்டத்தில் ஏ.ஆர்.ஆர் உச்சத்திற்கு சென்று விட்டார்.

தற்பொழுது ஏ.ஆர்.ஆர் இறங்கு முகம் தான். ஆனால் யாரும் அவரை பிடிக்க முடியவில்லை. வித்யாசாகரின் உச்சம் (அன்பே சிவம், இயற்கை) முடிந்து அவரும் இறங்குகிறார்.

ஆனால் இயக்குனர்களில் போட்டி அதிகமாக இருப்பதால் இடத்தை சட்டென்று இழந்து விடுகிறார்கள். அதன் பின் அவர்களுகே தன்னம்பிக்கை போய் விடுகிறது

//மணிரத்னம் – மௌனராகம், நாயகன்//
இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால், இரு படங்களும் மேற்கூறிய படங்களுக்கு குறைந்தவை அல்ல. ஏன் மௌனராகத்தை விட அலைபாயுதே பல விதங்களில் அருமை. மௌனராகம் 1970களின் பிரச்சனை (ஒருவரை காதலித்து வேறுவரை மணப்பது) என்றால் அலைபாயுதே 2000களின் பிரச்சனை (காதலித்தவரை மணந்து அதன் பின் மணமுறிவு) !!!!

நாயகன் அந்த கால பிரச்சனை (தாதா, கடத்தல்) என்றால் ஆயுத எழுத்து 2000.

மணிரத்னத்தில் பிரச்சனை 20 வருடங்களாக படம் எடுத்தாலும் அவரது உச்சம் இன்னமும் வர வில்லை - அவ்வப்போது வரும் உயிரே, குரு போன்ற படங்கள் aberration தான் :) :) :)

இதே பிரச்சனைதான் கமலுக்கும் :) :) :)

--

அதே போல் பாலச்சந்தரின் உச்சம் புது புது அர்த்தங்கள், வானமே எல்லை என்றே நினைக்கிறேன்.

உங்கள் கருத்தென்ன ??

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி பினாத்தலார்

\\ஏன் கவிஞர்களுக்கு.. பதிவர்களுக்கு கூட ஏற்படும் சிண்ட்ரோம் தான் :-)
\\
அருமை.
\\பாரதிராஜா 16 வயதினிலேவில் காட்டிய கிராமத்துக்கும், தாஜ்மஹாலில் காட்டிய கிராமத்துக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் சொன்ன முதல் பாயிண்ட் தான்.

\\
ஆமாம்.

தருமி said...

//சரக்கு இருக்கிற ஷங்கர் போன்றோரோ //

????
:(((((((

முரளிகண்ணன் said...

\\கலைத்துறையினர் அனைவருக்கும் உச்சம் “peak" என்று ஒன்று இருக்கும்.
\\
நண்பர் புருனோ அவர்களே, இதை நாம் கடற்கரை பதிவர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த போது, நீங்கள் ஸ்பீல்பெர்க் உதாரணம் கூறினீர்கள்.

\\அவ்வப்போது வரும் உயிரே, குரு போன்ற படங்கள் aberration தான் :) :) :)

இதே பிரச்சனைதான் கமலுக்கும் :) :) :)

\\
என் கருத்து நல்ல படங்கள் வேண்டும் என்பதே

முரளிகண்ணன் said...

கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சினிமா நிருபர்.

முரளிகண்ணன் said...

வாங்க டோண்டு சார். மொக்கை பதிவென்பதால் மொக்கை பின்னூட்டமா?

லக்கிலுக் said...

நல்ல பதிவு!

எதிர்காலத்தில் சுராஜ் என்ற இயக்குனர் ரஜினி, கமல் படங்களை இயக்கும் அளவுக்கு வலிமை பெறுவார் என்று கணித்து வைத்திருக்கிறேன். பார்ப்போம்.

சரவணகுமரன் said...

//மக்களுடன் பழகாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது

படங்களை தொடர்ந்து திரை அரங்கில் பார்த்து கொண்டு வந்தாலே மக்களின் ரசனை புரிய வழியுண்டு.

நடிகர்கள் இந்த விஷயத்தில் அதிஷ்டகாரர்கள். ஓடுகிற குதிரையில் ஏறி காலத்தை கடந்து பயணிக்கலாம்.

சில இயக்குனர்களும் தாங்கள் ரசிக்கிற, தங்களால் முடியாத கதைகளை பிற இயக்குனர்களை கொண்டு தயாரிக்கிறார்கள்.

rapp said...

என்னை பொருத்தவரைக்கும் நீங்கள் நாலாவதாக சொன்ன காரணத்தைதான் முதன்மையான ஒன்று என நான் நம்புகிறேன். இந்த காரணத்தால் தான் இசை அமைப்பாளர்கள் கூட மெல்லப் பலமிழக்கிறார்கள். மற்றுமொரு காரணம் சினிமாவை பொறுத்த வரை ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், எடிட்டர்,திரைக்கதையாசிரியர் என நிறையப் பேர் படைப்பாளிகள் வட்டத்திலிருந்தாலும், இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும்தான் அந்த சினிமாவின் வியாபாரத்தன்மையையும், வெற்றியையும் பெரிதும் தீர்மானிக்கும் (வெளிப்பார்வைக்கு) படைப்பாளிகளாகிறார்கள் என்று தோன்றுகிறது. இதனால் ஏற்படும் stress மற்றும் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள், இவையெல்லாம் சேர்ந்து இவர்களை மற்ற படைப்பாளிகளை விடவும் சீக்கிரமாக அயர்ச்சி கொள்ளச்செய்கிறது.

ஆ.கோகுலன் said...

உங்கள் 05 காரணங்களுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை முரளிகண்ணன்..
பினாத்தல் சுரேஷ் மற்றும் புருனே ஆகியோர் தங்கள் சிலாகிப்பான கருத்தின் மூலம் உங்கள் பதிவிற்கு வலுச்சேர்க்கிறார்கள் :)

// புருனோ Bruno said...

மணிரத்னத்தில் பிரச்சனை 20 வருடங்களாக படம் எடுத்தாலும் அவரது உச்சம் இன்னமும் வர வில்லை - அவ்வப்போது வரும் உயிரே, குரு போன்ற படங்கள் aberration தான் :) :) :)

இதே பிரச்சனைதான் கமலுக்கும் :) :) :) //


ஆச்சரியமான உண்மை..!! :)

அலசலுக்கு நன்றி.

கிரி said...

நான் கருதும் காரணம் உங்க காரணங்களுடன் சேர்த்து

1. அவர்களிடம் இருந்த சரக்கு தீர்ந்து விட்டது.

2. காலத்திற்கு ஏற்ப மாறாமல் இன்னும் பழைய முறையிலேயே இருப்பது.

3. வயதாகி விட்டதால் இந்த காலத்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை, மேல் தட்டு மக்களோடையே அவர்கள் சந்திப்பு முடிந்து விடுகிறது

4. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நல்ல தருணம், அதை கடந்து விட்டதும் காரணமாகவும் இருக்கலாம். என்னதான் தலைகீழாக நின்றாலும் நேரம் சரி இல்லை என்றால் ஒன்று செய்ய முடியாது.

//காலத்தை வென்று சிறந்த படங்களை இவர்கள் தொடர்ந்து தர வாழ்த்துவோம்//

வழிமொழிகிறேன் :-)

ராமலக்ஷ்மி said...

அழகாக ஆராய்ந்து நீங்கள் எடுத்துக் கூறியிருக்கும் காரணங்களை இயக்குநர்கள் கருத்தில் கொண்டால் கற்காலமாகி(காலாவதியாகி)ப் போன பொற்காலத்துக்கு மீண்டும் திரும்பலாம்.

Jackiesekar said...

5) தொடர் வாசிப்புகள், தேடல்களை குறைத்துக்கொள்வது. இதுதான் தலைவரே நம்ம பசங்களோட பிரச்சனையே.. இரண்டு வெற்றி படம் கொடுத்ததும் தான் மிகப்பெரிய அறிவாளியாக நினைத்து கொள்வதே (உம்) கண்ணெதிரே தோன்றினால் ரவிச்சந்திரன்

துளசி கோபால் said...

பல கனவுகளோடு முதல் ரெண்டு படம் எடுத்து வெற்றி கிடைச்சதும்,
கனவுகளை விட்டுட்டு 'மக்கள் விரும்புகிறார்கள்'ன்னு சொல்லி கண்டதையும் எடுத்தா இப்படித்தான் ஆகும்.

எனக்கும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

நெசமாவா மக்கள் விரும்பறாங்க? அவுங்க போய் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் கேப்பாங்களாமா?

5 பாட்டு, 6 ஃபைட் வேணும். இல்லேன்னா விரும்ப மாட்டோமுன்னு!!!