October 07, 2008

தமிழ் சினிமாவில் இருதார மணம்

இரண்டு கதாநாயகிகள் என்பது தமிழ்சினிமாவில் சாதரணம் தான். இதில் ஒரு கதாநாயகி கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்டு கதானாயகனை ஒரு தலையாக காதலித்து, தியாகம் செய்வாள். மனைவி/காதலி இறந்துவிட்டதாக நினைத்து நாயகன் இன்னொரு மனைவி/காதலியை அடையும் கதைகளும் (வீரா) பல உண்டு. காமெடிக்காக இருதார மணம் புகுத்தப்படுவதும் உண்டு. தற்போது அடுத்தவருடைய மனைவி/காதலியை அடைய துடிக்கும் (வாலி) படங்களும், மனைவியை கொலை செய்யும் (ஆசை) படங்களும் வந்துவிட்டன. இதன் உச்சமாக நாயகி அக்காள் கணவனை (கலாபக் காதலன்) அடைய முயற்சிப்பதும், கொளுந்தனை (உயிர்) விரும்பி அடைய முற்படுவதும் வந்துவிட்டன. இரண்டு தார மணத்தால் முதல் மணைவி அடையும் வேதனைகளை பேசிய படங்களும் பல உள்ளன. அவற்றில் 80க்குப் பின் வந்த சிலவற்றைப் பார்ப்போம்.

கோபுரங்கள் சாய்வதில்லை

மணிவண்ணன் இயக்குனராக அறிமுகமான படம். தந்தையின் பிடிவாதத்தால் அழகில்லாத கிராம பெண்ணை (அருக்காணீ : சுஹாசினி) மணக்கும் நாயகன் (மோகன்) பின்னர் பணிபுரியும் இடத்தில் சந்திக்கும் ராதாவை மணக்கிறான். அருக்காணி அந்த வீட்டிற்க்கே வேலைக்காரியாக வருகிறாள். நாயகனின் மைத்துனன் (எஸ் வி சேகர்) அவளை அழகாக மாற்றி காதலிக்க நினைக்கிறான். பல திருப்பங்கள், உணர்ச்சிகர காட்சிகளுக்குப்பின் அருக்காணியுடன் நாயகன் புது வாழ்வை துவக்குகிறான். இதில் அருக்காணியின் கொண்டை புகழ்பெற்ற ஒன்று. என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் என்ற பாடல் நன்றாக இருக்கும். பின் இதை தலைப்பாக வைத்து விஜய்காந்த், சுஹாசினி, ரேகா நடிக்க இரு தார படம் ஒன்றும் வந்தது.

ரெட்டைவால் குருவி

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இஞ்சினியர் என்ற பதம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானது இப்படத்தில் தான். தொலைக்காட்சியில் (டிடி) வேளை பார்க்கும் மோகன், சுதந்திர தினத்துக்காக சிறுவர்களை பேட்டி காணும் போது ஒரு சிறுவன் இந்த பதத்தை உபயோகிப்பான். பாலுமகேந்திரா இயக்கிய இப்படத்தில் அர்ச்சனா வேளைக்குச்செல்லும், குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் முதல்மனைவியாகவும், பாடகியான ராதிகா இரண்டாம் மனைவியாகவும் நடித்திருப்பர். ராஜ ராஜ சோழன் நான், கண்ணன் வந்து பாடுகிறான் போன்ற அருமையான பாடல்கள், வி கே ஆரின் காமெடி என கலகலப்பான படம்

சின்னவீடு

பெற்றோரின் கட்டாயத்தால், பல நடிகைகளின் கலவையாய் பெண் வேண்டும் என்ற எதிர் பார்ப்பில் இருக்கும் பாக்யராஜ் குண்டு பெண் கல்பனாவை மணம் முடிக்கிறார். வங்கி அதிகாரியான அவர் கடன் வசூலிக்கப்போய், காதலை வசூலிக்கிறார். காமம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவள் விலைமகள். இந்த பாத்திரத்தில் தான் பாவம் கொடூரன் புகழ் மாதுரி நடிக்க இருந்து அவ்வாய்ப்பு தட்டிப்போனது. பின்னாளில் அந்த பாத்திரமாக நிஜ வாழ்க்கையிலும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது துரதிர்ஷ்டமே. கணவன் ஒருகட்டத்தில் மணம் திருந்த கல்பனா வெள்ளை மனம் உள்ள மச்சான் என்று பாடி ஏற்றுக்கொள்கிறார்.

சிந்துபைரவி

சிவகுமார் கர்னாடக சங்கீத வித்வான். மனைவி சுலோசனா கிலோ என்ன விலை. தன் சகாக்களும் மற்ற நேரங்களில் லௌகீக வாழ்க்கையில் மூழ்கி இருக்க, சங்கீதம் பற்றி பகிர ஆள் இல்லாமல் தவிக்கிறார். வருகிறார் சுஹாசினி. சங்கீதமும், ஒரு கட்டத்தில் சரீரமும் பகிரப்பட, கர்ப்பமாகிறார். தலைமறைவாகிறார். சங்கீத வித்வான் குடிகாரராகி பின்னர் திருந்த, முதல்மனைவி இருவரின் திருமணத்திற்க்கு ஏற்பாட்டை செய்ய, சுஹாசினி தனக்கு பிறந்த குழந்தையை, குழந்தையில்லா முதல் மனைவிக்கு பரிசாக கொடுத்துவிட்டு செல்கிறார். இப்படத்தில் சுஹாசினிக்கு தேசிய விருது கிடைத்தது. நானொரு சிந்து பாட்டுக்காக சித்ராவுக்கும். பாடறியேன், தண்ணித் தொட்டி, கலைவாணியே போன்ற பாடல்கள் படத்தின் பலம்.

மறுபடியும்

பாலு மகேந்திரா இயக்கம். படத்தில் நிழல்கள் ரவி இயக்குனர். ரேவதி மனைவி. ரோகிணி நடிகை. நடிகையுடன் செல்கிறார் இயக்குனர். ரேவதிக்கு ஆறுதலாய் இருக்கிறார் அரவிந்த்சுவாமி. பின்னர் கணவன் திரும்பி வர மனைவி கேட்கிறாள் “ இதே மாதிரி நான் செஞ்சிருந்தா?”. தன்னம்பிக்கையுடன், தன் மாதிரி பாதிக்கப்பட்ட வேலைக்காரியின் குழந்தையை பராமரிக்க தொடங்குகிறாள். நலம் வாழ எந்நாளும், எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு என்ற பாடல்களில் வாலி புகுந்து விளையாடியிருப்பார். “நிலவினை நம்பி இரவுகள் இல்லை, விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை” போன்ற அருமையான வரிகள். ஆசை அதிகம் வச்சு என்ற ஹிட் பாடலும் உண்டு.

சதிலீலாவதி

அதே பாலுமகேந்திரா. குண்டு கல்பனா. இம்முறை ரமேஷ் அரவிந்த். மனைவி குண்டூஸ் எனவே ஹீராவுடன். லிவிங் டுகெதர் ஆக வாழுபவர்களை கணவனின் நண்பன் கமல்ஹாசன், ஹீராவை காதலிக்கும் ராஜா இவர்களின் துணையுடன் பிரிக்கிறார். சுபம். பாட்ஷா படத்துடன் வெளியாகி ஓடியதே இப்படத்தின் சிறப்பைக் கூறும். கமலுக்கு ஜோடி கோவை சரளா. இப்படம் பின்னர் கன்னடத்தில் ராமா ஷாமா பாமா என்ற பெயரில் நன்கு ஓடியது. தமிழில் கமலுக்கு கோவை பாஷை, கன்னடத்தில் ஹூப்ளீ ஆக்செண்ட். கிரேசி மோகனின் வசனங்கள் பலம்.

டபுள்ஸ்
பாண்டியராஜன் இயக்கம், பிரபு தேவா – மீனா கணவன் மனைவி. சங்கீதா மேல் பிரபுதேவாவுக்கு கிரஷ்.

இந்தவகைப் படங்களில் பெரும்பான்மை, மனைவி அழகில்லாதது (கோ. சா, சின்னவீடு, சதிலீலாவதி). சம அலைவரிசை இல்லாதது (சிந்து பைரவி). பெரிய காரணங்கள் இல்லாமல் இருப்பது (ரெ.வால்.குருவி, மறுபடியும், டபுள்ஸ்).

சுலோசனா, தன் கணவரிடம் சமையலைப்பற்றி பேச முடியவில்லையென்று மற்றொருவரிடம் பகிர்ந்தால்?, அழகில்லாதவர்கள் தங்கள் ரேஞ்சுக்கு இணைந்தால்? பெரிய இயக்குனர்களிடமும் காலம் காலமாக படிந்திருக்கும் மேல் சாவனிசம் தானே இம்மாதிரிப் படங்களுக்கு காரணம்?

சதிலீலாவதியில் பெண், தாய் என்னும் ஸ்தானத்தில் இருந்து சிந்திக்கிறாள். குழந்தைகளுக்காக போராடுகிறாள் என சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

மறுபடியும் படம் மட்டுமே பெண்ணை பெண்ணாக பார்த்தது. அவளின் தன்னம்பிக்கையை கூட்டியது. இருதாரப் படங்களிலேயே சிறந்த படமாக இதைக் கூறலாம்.

பாலச்சந்தர் தன் இருகோடுகள் காலத்தில் இருந்து, இருதார கதைகளில் பெரும்பாலும் ஆணாதிக்க சிந்தனையே கொண்டுள்ளார் இன்றுவரை. கல்கியில் கூட ஒருபெண் தாய்மை என்னும் அஸ்திரத்தை வைத்து தவறு செய்பவனை வீழ்த்துவதாக அமைத்திருப்பார். பார்த்தாலே பரவசம் இன்னும் மோசம். பாலு மகேந்திரா ரெட்டை வால் குருவிக்கு மறுபடியும் படத்தின் மூலம் பிராயச்சித்தம் செய்து கொண்டார். கே பி எப்போ?

27 comments:

அக்னி பார்வை said...

ஆணாதிக்க சினிமாக்கள், கற்பை பெண்ணுக்கு கொடுத்து, பின்பு அந்த பெண்ணையெ கவர்ச்சிப் பொருளாக காட்டும் முட்டாள் சினிமா உலகம்...
இதில் கொடுமை, அவரகள் இப்படி செய்வத்ற்க்கும் ..ஒரு காரணம் வைத்திருப்பார்கள்....

புருனோ Bruno said...

மறுபடியும் பற்றி நான் எழுதியிருந்ததையும் இங்கு சேர்க்கிறேன்

”இதே மாதிரி நான் பண்ணியிருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க” என்று பெண்ணியம் பேசிய படம்,

ஒரு தீக்குச்சியில் ஒளியில் கதாநாயகியின் அறிமுகம் அபார கற்பனை மற்றும் ஒலிப்பதிவு.

நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள் என்ற் பாடல் வரிகள் அபாரம்.

நிழல்கள் ரவியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் இந்த படத்தை தவிர்க்க முடியாது

இப்பொழுது நினைத்து பார்த்தால் வள்ளி, மறுபடியும் இரு படங்களுமே ஒரே செய்தியைத்தான் தருகின்றனவோ ??

அக்னி பார்வை said...

நாம் சீதை போல் மனைவியை தேடும் கோ(கெ)வலர்கள் தானே....


:)))

வெண்பூ said...

வழக்கம்போல் கலக்கல்.. வேறென்ன சொல்ல.. சூப்பர்.. தொடருங்கள் முரளிகண்ணன்..

thamizhparavai said...

இளையராஜாவுக்கு தேசியவிருது கிடைச்சதும் 'சிந்துபைரவி' படத்துலன்னு நினைக்கிறேன்.
//பாலு மகேந்திரா ரெட்டை வால் குருவிக்கு மறுபடியும் படத்தின் மூலம் பிராயச்சித்தம் செய்து கொண்டார். கே பி எப்போ?//
இனி அவரே பிராயச்சித்தம் பண்ண நினைச்சாலும் முடியாது..
ஃபார்ம் போச்சு..
பாலு மகேந்திரா இருதாரமனைவி சப்ஜெக்ட்ல ஸ்பெஷலிஸ்ட்ன்னு சொல்லலாம் போல... மூணு படத்துல இரண்டு படத்தை நல்ல நகைச்சுவையா எடுத்திருந்தாரு...'ரெட்டைவால் குருவி' படத்தை சமீபத்துலதான் பார்க்க நேர்ந்தது. நல்லா ஜில்பான்ஸா இருந்தது.
(எனக்கொரு டவுட்டு.. பாலுமகேந்திரா படமெல்லாம் இயல்புன்னாலும், ஏன் எல்லாரும் ஒருமாதிரி ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறாங்க...?)
'கோபுரங்கள் சாய்வதில்லை' படம் ஹிந்தியில்யும் வந்ததுன்னு நினைக்கிறேன். சுஹாசினி கேரக்டர்ல ராதிகா நடிச்சிருப்பாங்க..இதே படத்துல கிருஷ்ணன் சந்திரன் பாடுன 'பூ வாடைக் காற்று' பாட்டு சூப்பரா இருக்கும்.
//வங்கி அதிகாரியான அவர் கடன் வசூலிக்கப்போய், காதலை வசூலிக்கிறார். காமம் என்றுதான் சொல்ல வேண்டும்//
நச்....

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி அக்னி பார்வை, புருனோ.

புருனோ Bruno said...

பார்த்திபன் - தேவயானி - பிரகாஷ் படம் ஒன்று (பெயர் ஞாபகம் இல்லை) - ஒரு வாரப்பத்திரிகையில் கூட தொடராக வந்தது.

அதை கூட நீங்கள் இந்த பட்டியலில் சேர்க்கலாம் !!!

rapp said...

மறுபடியும் படம், அர்த் அப்படிங்கற ஹிந்திப் படத்தோட மறுபதிப்பு. இந்தப் படம் டைரெக்டர் மகேஷ் பட் அவர்களுக்கும், நடிகை பர்வீன் பாபி அவர்களுக்கும் இருந்த உறவைப் பற்றியும் அதனால் மகேஷின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையையும் பேஸ் பண்ணி எடுத்த படம். ரோஹினியின் காரெக்டர் டிப்ரஸ்டா இருக்கும் இல்லையா, அப்படித்தான் பர்வீன் பாபியும் இருந்தார், கடைசி வரை அவர் முழுமையாக குணமடையாமல் மறைந்தார், அதுவும் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் தான் வெளியுலகுக்கு தெரிந்தது:(:(:( இந்தப் படத்திற்காக ஷபனா ஆஸ்மி தேசிய விருது(சிறந்த நடிகை) வாங்கினார்.

rapp said...

//சுலோசனா, தன் கணவரிடம் சமையலைப்பற்றி பேச முடியவில்லையென்று மற்றொருவரிடம் பகிர்ந்தால்?, அழகில்லாதவர்கள் தங்கள் ரேஞ்சுக்கு இணைந்தால்? பெரிய இயக்குனர்களிடமும் காலம் காலமாக படிந்திருக்கும் மேல் சாவனிசம் தானே இம்மாதிரிப் படங்களுக்கு காரணம்?

சதிலீலாவதியில் பெண், தாய் என்னும் ஸ்தானத்தில் இருந்து சிந்திக்கிறாள். குழந்தைகளுக்காக போராடுகிறாள் என சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

மறுபடியும் படம் மட்டுமே பெண்ணை பெண்ணாக பார்த்தது. அவளின் தன்னம்பிக்கையை கூட்டியது. இருதாரப் படங்களிலேயே சிறந்த படமாக இதைக் கூறலாம்.//

அத்தனை கருத்துக்களையும் வழிமொழிகிறேன். ரொம்ப ரொம்ப அருமையான கருத்துக்கள்

Shankar said...

நண்பரே...
புதுப் புது அர்த்தங்கள் ---விட்டுவிட்டீர்களே...

Unknown said...

முரளிகண்ணன்

கோ.சா, சின்ன வீடு,சதிலீலாவதி மூன்றிலும் கதா நாயகர்கள் செய்வது தவறு என்று தானே காட்டுகிறார்கள்? அதை நியாயப்படுத்தவில்லையே?

இந்த படங்களில் நாயகர்களை மனைவி 'திருத்தி' ஏற்றுக்கொள்ளுவது போல் காட்சி வைத்தது தான் தப்பு.அடித்து துரத்தியிருக்கவேண்டும்.மறுபடியும் படத்தில் மனைவி மறுமணம் செய்துகொள்ளுவது போல் காட்டவில்லை.தனியாகத்தான் இருப்பதாக காட்டுகிறார்கள்.அதனால் அதையும் புரட்சியாக கருத முடியாது.

கல்கியில் பைத்தியகாரத்தனமான திரைக்கதை அமைப்பு.கொடுமைக்கார கணவனை தண்டிக்க அவனோடு இன்னொருத்தி குழந்தை பெற்றுக்கொண்டு அதை முதல் மனைவியிடம் தருவதா புரட்சி?பாலச்சந்தர் தொல்லை தாங்க முடியலை சாமி..அவர் ரிடையரானதே நல்லது.

MyFriend said...

நல்ல தொகுப்பு..

இந்த சின்னத்திரை கதைகளிலும் வரும் முக்கால்வாசி கதைகளில் இந்த ரெண்டாம் தாரம் இருக்கும். பார்க்கவே வெறுப்பா இருக்கும்.

சரவணகுமரன் said...

நல்ல பதிவு.

நீங்க சொல்வது போல், பெரும்பாலான படங்களை பாலசந்தரும், பாலு மகேந்திராவும் தான் எடுத்து இருக்கிறார்கள்.

narsim said...

நாலு நாளா ஆளக்காணோமேனு பார்த்தா.. கலக்கல் பதிவோடு ஃபார்ம்க்கு வந்துட்டீங்க..

நல்ல பதிவு..

இப்பல்லாம் டி வில படம் பார்த்தா அந்த படத்தபத்தி நீங்க என்ன எழுதினீங்க அல்லது என்ன எழுதப்போறீங்கனு யோசிக்க வச்சுட்டீங்க தல..

தொடருங்கள்

நர்சிம்

கார்க்கிபவா said...

பாலசந்தர் நல்ல படைப்பாளி என்றாலும் அவர் ஒரு வித சைக்கோ என்பது என் கருத்து.. எப்படி என்று கேட்டால் உண்மைத்தமிழன் அளவுக்கு பதிவு போட வேண்டியதிருக்கும்

rapp said...

என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் இருதார மணம் பத்தின படமில்லை. கொஞ்சம் நல்ல படம்னுதான் சொல்லணும். ஒரு பெண் தன் கணவனோட பேசினாலே, சந்தேகப்படும் மனைவியப் பத்தின படம். சுஹாசினி கேரக்டர் நல்லா இருக்கும். பாடல்களும் நல்லா இருக்கும். என்ன, படத்துல எல்லா விஜயகாந்த் படங்களை மாதிரியும், குடும்ப வன்முறையை நியாயப்படுத்தி இருப்பார்கள்:(:(:(

ப்ரியன் said...

*ஒரு வீடு இரு வாசல்*

புருனோ Bruno said...

//புதுப் புது அர்த்தங்கள் ---விட்டுவிட்டீர்களே..//

ஆமாம்ல :)

---

//?பாலச்சந்தர் தொல்லை தாங்க முடியலை சாமி..அவர் ரிடையரானதே நல்லது.//

இதற்கும் முதல் கருத்திற்கும் என்ன சம்மந்தம்

--

//இந்த சின்னத்திரை கதைகளிலும் வரும் முக்கால்வாசி கதைகளில் இந்த ரெண்டாம் தாரம் இருக்கும். பார்க்கவே வெறுப்பா இருக்கும்.//

அதை ஆரம்பித்தவர்கள் யார் ??

--

//நீங்க சொல்வது போல், பெரும்பாலான படங்களை பாலசந்தரும், பாலு மகேந்திராவும் தான் எடுத்து இருக்கிறார்கள்.//

ஹும்....ஹும்....ம்ம்ம் ம்ம்ம்ம்

--

//பாலசந்தர் நல்ல படைப்பாளி என்றாலும் அவர் ஒரு வித சைக்கோ என்பது என் கருத்து.. எப்படி என்று கேட்டால் உண்மைத்தமிழன் அளவுக்கு பதிவு போட வேண்டியதிருக்கும்//

அட்ரா சக்கை !!!

--

gulf-tamilan said...

//பார்த்திபன் - தேவயானி - பிரகாஷ் படம் ஒன்று (பெயர் ஞாபகம் இல்லை) - ஒரு வாரப்பத்திரிகையில் கூட தொடராக வந்தது//
soorna muki??

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி வெண்பூ

வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி தமிழ்பறவை

வருகைக்கு நன்றி சங்கர்

செல்வன் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

ராப் தங்கள் பின்னூட்டங்கள் என் பதிவை விட நன்றாக இருக்கின்றன

புருனோ தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி மைபிரண்ட்,சரவன குமரன், நர்சிம், கார்க்கி, ப்ரியன், கல்ப் தமிழன்

Sanjai Gandhi said...

கற்பு பெண்ணுக்கு மட்டும் தான் ஆணுக்கு இல்லை என்று எப்போதோ ஆணாதிக்கவாதிங்க முடிவு பண்ணிட்டாங்க.. ஒரு ஆண் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்.. ஒரு மனைவி இருக்கும் போதே இன்னொருத்தர்... நம்ம முதல்வர் கூட உதாரணம் சொல்லலாம்.. ஆனால் அவர் மனைவிகள் யாரும் இவர் இருக்கும் போதே இன்னொரு கணவனுடன் வாழவில்லை..

ஆனால் பெண் மட்டும் கணவன் இறந்தாலும் விதவை என்ற பெயரிலேயே வாழ வேண்டும்.. இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவள் கற்பு இல்லாதவள்.. பொல்லாத உலகமடா..

ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் வாழும் பெண் பற்றிய சினிமா இருக்கா? அதை பற்றியும் பதிவிடுங்க முரளி.

Sanjai Gandhi said...

கற்பு பெண்ணுக்கு மட்டும் தான் ஆணுக்கு இல்லை என்று எப்போதோ ஆணாதிக்கவாதிங்க முடிவு பண்ணிட்டாங்க.. ஒரு ஆண் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்.. ஒரு மனைவி இருக்கும் போதே இன்னொருத்தர்... நம்ம முதல்வர் கூட உதாரணம் சொல்லலாம்.. ஆனால் அவர் மனைவிகள் யாரும் இவர் இருக்கும் போதே இன்னொரு கணவனுடன் வாழவில்லை..

ஆனால் பெண் மட்டும் கணவன் இறந்தாலும் விதவை என்ற பெயரிலேயே வாழ வேண்டும்.. இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாலும் அவள் கற்பு இல்லாதவள்.. பொல்லாத உலகமடா..

ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் வாழும் பெண் பற்றிய சினிமா இருக்கா? அதை பற்றியும் பதிவிடுங்க முரளி.

பரிசல்காரன் said...

வெண்பூவின் கருத்துக்கு ரிப்பீட்டீட்டு எஸ்கேப்பிக்கறேன்!

ரெஜோ said...

அருமையா அலசல் ..அது சரி டபுள்ஸ் எல்லாம் எங்க புடிச்சீங்க ?? ;-)

கிரி said...

சின்னவீடு சிந்து பைரவி அருமையான படங்கள்

சிவக்குமார் நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருப்பாரு