October 12, 2008

தமிழ்சினிமாவில் குழந்தை தொழிலாளர் சித்தரிப்பு

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை கதைகருவாக கொண்ட படங்கள் தமிழ்சினிமாவில் மிக குறைவு. அப்படங்களையும், இப்பிரச்சினையை அடிநாதமாக கொண்டு வெளிவந்த சில படங்களையும் பார்ப்போம்.

குட்டி

ஜானகி விஸ்வனாதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், சிறு குழந்தைகளை வீட்டு வேளைக்கு வைப்பதை பற்றி பேசியது. கிராமத்தில் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வறுமையில் வாடும் நாசர் தன் மகளை படிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் சென்னையில் உள்ள ஒரு வீட்டிற்க்கு பணிக்கு அனுப்புகிறார். அவ்வீட்டில் உள்ள இளம் தம்பதியர் (ரமேஷ் அர்விந்த்- கௌசல்யா) ஓரளவு நடத்தினாலும், பெரியவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள். கடைக்கார அண்ணாச்சி (விவேக்) மூலம் வீட்டிற்க்கு செய்தி அனுப்புகிறாள் குட்டி. என்ன நட்க்கிறது?

இப்படத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என ஒரு அலுவகத்தில் விவாதித்துக்கொன்டிருக்கும் போது டீக்கடை சிறுவன் டீ கொண்டு வரும் காட்சி இயக்குனரின் திறமைக்கு சான்று. நாசர் தன் மகளுக்கு மண் பொம்மை செய்து தரும் காட்சியில் நம்மையறியாமல் நம் கண்ணில் தண்ணீர்.

கருவேலம் பூக்கள்

கரிசல் குளம் என்னும் ஊரில் குழந்தைகளை தீப்பெட்டி/பட்டாசு தொழிலுக்கு அனுப்பிவிட்டு தகப்பன்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். இளம் பெண்களையும் அனுப்புகிறார்கள் வேளைக்கு. நாசர்,ராதிகா தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என உறுதியாக இருக்கிறார்கள். படிக்க வைக்க துடிக்கிறார்கள். அந்த நிலை தொடர்ந்ததா?. சார்லீ வேளைக்கு ஆள் பிடிக்கும் தரகர். அவர் ஊர் ஆண்களை மூளைச்சலவை செய்யும் காட்சியும், குழந்தைகள்/பெண்கள் காலை 5 மணிக்கு தூக்ககலக்கத்தில் பேருந்தில் ஏறிச்செல்லும் காட்சியும் இயக்குனர் பூமணியின் திறமைக்கு சான்று. என் எப் டி சி ஆதரவில் தயாரிக்கப்பட்ட படம் இது.

திருமதி பழனிச்சாமி

ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சத்யராஜ்,கவுண்டமணி,சுகன்யா நடித்து வெளியான இந்தப்படம், நகைச்சுவைக்காக மனதில் நின்றாலும் படத்தின் அடிநாதம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பே. இதிலும் பட்டாசு தொழில். அதனால் குடும்பத்தை இழக்கும் சத்யராஜ், அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டீச்சரை மணக்க நினைக்கிறார். இடைவேளை வரை பெண்தேடும் கலாட்டாதான். பின்னர் தான் படம் ஆரம்பிக்கும். பல சோதனைகளை கடந்து குழந்தைகளுக்கு கல்வி தருகிறார்கள். பாலசந்தர் இயக்கிய உன்னால் முடியும் தம்பியிலும் தீப்பெட்டி முதலாழிகள் படிப்புக்கு தடை போடும் காட்சி உண்டு.

திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் நடக்கும் கொத்தடிமை முறை திரைப்படங்களில் பதிவு செய்யப்படவில்லை. மேற்கு மண்டலத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் அதை செய்வார் என எதிர்பார்க்கலாம்.

காதல் கொண்டேன்

செல்வராகவனின் அபிசியல் முதல் படமான இதில் குணா டைப் காதல் சொல்லப்பட்டாலும், குழந்தை தொழிலாளர் பிரச்சினை சிறப்பாக எடுத்தாளப் பட்டிருந்தது. மார்பிள் கல் வேளை செய்யும் குழந்தைகள், அவர்களின் துயரங்கள் மட்டுமில்லாது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையையும் பேசியது. இப்பிரச்சினையை தமிழ்சினிமாவில் பேசிய முதல் படம் இதுவே.

நிலாக்காலம்

இந்தியன் பட இணை இயக்குனர் ஏ ஆர் காந்திகிருஷ்னா முதலில் எஞ்சினியர் (அர்விந் சுவாமி, மாதுரி தீட்சித் நடிக்க) என்னும் படத்தை இயக்கவிருந்தார். பலகாரணங்களால் அப்படம் கைவிடப்பட இப்படத்தை எடுத்தார். வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் மீதான அக்கறையின்மையை இப்படம் பேசியது. ஆனால் இதில் ஒரு முக்கிய பாத்திரம் மெக்கானிக் ஷெட்டில் வேலைபார்க்கும் ஒரு சிறுவன். அவன் மூலமாக குழந்தை தொழிலாளர் பிரச்சினை சொல்லப்பட்டது. காதல் படத்திலும் மெக்கானிக் ஷெட்டில் சிறுவன் வேலை பார்ப்பது காட்டப்பட்டுள்ளது, அது சகஜம் எனும் தொனியில். பிரச்சினையை சொல்லாவிட்டலும் பரவாயில்லை ஆனால் அது சகஜம் என காட்டுவது ஆபத்தே.

வில்லன்

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத் நடித்த இப்படத்தில் குழந்தைகளை ஊனமுற்றவர்களாக மாற்றி பிச்சை எடுக்க வைக்கும் கொடூரம் சொல்லப்பட்டது. காதலர் தினம் படத்தில் ஒரு குழந்தை படிக்க மற்றோரு குழந்தையை பிச்சை எடுக்க வைப்பது சொல்லப்பட்டது. காதலா காதலா, மற்றும் விவேக்கின் பல படங்களில் இது நகைச்சுவைக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

சினிமாவில் குழந்தைகள் நடிப்பது பற்றி அவ்வை சண்முகியில் சொல்லப்பட்டுள்ளது. சூப்பர் குடும்பம் போன்ற படங்களில் நகைச்சுவைக்காக இவ்விஷயம் எடுத்தாளப்பட்டுள்ளது.

பல திரைப்படங்களில் டீக்கடையில் சிறுவர்கள் வேலை பார்ப்பது சகஜம் என காட்டப்படுகிறது. சிவாஜி திரைப்படத்தில் கட்டிட வேலையில் சிறுவன் ஈடுபடுவது சொல்லப்பட்டு அது கண்டிக்கப்பட்டது. அதே வேளையில் ரஜினி, சுமன் இடையேயான பஜ்ஜி காட்சியில் சிறுவன் டீ கொடுப்பது இயல்பாக காட்டப்பட்டுள்ளது.

இம்மாதிரி பெரிய நடிகர்/இயக்குனர் படங்களில் பல காட்சிகளில் குழந்தை தொழிலாளர் இயல்பே என காட்டப்படுகிறது. இது சமூகத்தில் தவறான கருத்தை விதைக்கிறது. பிரச்சாரபடம் எடுக்க வேண்டாம், இது இயல்பு என சித்தரிக்காமல் இருந்தாலே போதும். முடிந்தால் சில காட்சிகளில் இதை கண்டியுங்கள். (சிவாஜி போல).

17 comments:

சுரேகா.. said...

வணக்கங்க!

தமிழ் சினிமா பற்றி ஆய்வுகளோடு சிறப்பாக
எழுதும் உங்களுக்கு ஒரு சின்ன அங்கீகாரம்
இங்கு காத்திருக்கிறது.

http://blogintamil.blogspot.com

MyFriend said...

குட்டி - அருமையான கதை.

அத்திரி said...

குழந்தை தொழிலாளர்களின் மறுபக்கத்தை காட்டிய படம் என்றால் கருவேலம் பூக்கள் தான். சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டி சுற்றுப்புறங்களில் நடப்பதை அப்படியே தோலுரித்துக்காட்டியது. சும்ங்கலித்திட்டம் தற்போது தென் மாவட்டங்களிலும் முக்கியமாக ராஜபாளையம் பகுதிகளில் அதிகம். மற்றபடி தமிழ்ப்படங்ளில் குழந்தை தொழிலாளர்கள் ஊறுகாய் போலத்தான் கதையின் போக்கிற்கு பயன் பட்டு வருகிறது. நல்ல பதிவு . எங்கிருந்துதான் எடுக்கிறீங்களோ?

புருனோ Bruno said...

அது சரி,

அஞ்சலி குழந்தை தொழிலாளிகளை வைத்து எடுக்கப்பட்ட படமா

--

சிம்பு, வருண், பேபி ஷாலினி அனைவரும் குழந்தை தொழிலாளி என்ற வட்டத்திற்குள் வருவார்களா

--

ஒரு பத்திரிகை விளம்பரத்தில் தலைமுறையாக வைத்தியம் பார்க்கும் குடும்பம் என்று ஒரு சிறுவனின் புகைப்படத்தை போடுகிறார்கள். அவன் குழந்தை தொழிலாளி

முரளிகண்ணன் said...

சுரேகா, வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்க்கு மிக நன்றிகள்

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி மைபிரண்ட்,அத்திரி,புருனோ

நிலாக்காலம் said...

'கல்லூரி' படத்தில் நாயகனின் தங்கை ஒரு கல் குவாரியில் வேலை செய்வாள். அண்ணனைப் படிக்க வைப்பதற்காகத் தான் வேலைக்கு அனுப்பப்பட்டதாகச் சொல்வாள்.

thamizhparavai said...

//பிரச்சாரபடம் எடுக்க வேண்டாம், இது இயல்பு என சித்தரிக்காமல் இருந்தாலே போதும். முடிந்தால் சில காட்சிகளில் இதை கண்டியுங்கள். (சிவாஜி போல).
//
நல்ல கருத்து முரளிகண்ணன்.

'குட்டி' படத்தின் இறுதிக்காட்சியில் போகப்போகும் இடம் பற்றி ஒன்றுமறியாமல் ஜெனிஃபர் அமர்ந்திருக்கையில் பின்னணியில் ராஜாவின் குரலில் வரும் 'தங்கச்சி,தங்கச்சி எங்க போற தங்கச்சி' பாடல், கண்ணீரை வெளிக்கொணர்ந்து விட்டது.
'நிலாக்காலம்' படத்தின் இறுதிக்காட்சியும் என்னைக்கண்கலங்க வைத்த ஒன்று.இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அச்சிறுவனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.குழந்தைத் தொழில் அங்கீகரிப்பிற்கு உச்ச விருதென இதைக் கருதலாமா...?!
(பதிவிற்குச் சம்பந்தமில்லாத செய்தி.. இப்படத்தில் வரும் 'ஆத்தங்கரையில் கூத்து நடக்குது..தை தை தை என விளையாடு' இனிதாக இருக்கும். படக்காட்சியும் கூட.இசை பிரவீன்மணி)

narsim said...

//பிரச்சாரபடம் எடுக்க வேண்டாம், இது இயல்பு என சித்தரிக்காமல் இருந்தாலே போதும். முடிந்தால் சில காட்சிகளில் இதை கண்டியுங்கள். (சிவாஜி போல).//

"முத்தாய்ப்பு" என்பதற்கு உதாரணம் இந்த வரிகள்..

தொடர்ந்து கலக்குங்க..

நர்சிம்

அக்னி பார்வை said...

தல,
சினிமா துறையிலும் குழந்தை தொழிளாலர்கள் உண்டு,அவர்கள் எப்படி நடத்தபடுவர்கள்? நட்சத்திரக் குழந்தைகளை விடுங்கள், துனண நடிகக் குழந்தைகள் நிலை?...
குட்டி மாதிரி படஙகள் இன்னும் வர வேண்டும்..

பகிர்தலுக்கு நன்றி
அக்னி

rapp said...

நிலாக்காலம் படத்துல நடிச்ச குழந்தை நட்சத்திரத்திற்கு தேசிய விருது கெடச்சப்போ, ஆனந்த விகடன்ல அந்த சிறுவனின் பெட்டி வந்திருந்தது. சினிமாவில் வசதியானக் குழந்தை நட்சத்திரங்களையும் இவர்களையும் எப்படி வேறுபடுத்தி ட்ரீட் பண்ணுவாங்கன்னு கூறியிருந்ததைப் படிச்சப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு:(:(:(

rapp said...

குட்டி படமும், கருவேலம்பூக்கள் படமும் அவ்ளோ தெளிவா எடுத்துக்கிட்டு போயிருப்பாங்க. சுவேதாவுக்கு குட்டி படத்திற்காக பல விருதுகள் கெடச்சுது.

//பிரச்சாரபடம் எடுக்க வேண்டாம், இது இயல்பு என சித்தரிக்காமல் இருந்தாலே போதும். முடிந்தால் சில காட்சிகளில் இதை கண்டியுங்கள்//

சூப்பர்

முரளிகண்ணன் said...

nilakkaalam,thamizparavai,narsim,

agni paarvai, rapp

I thank everyone for your valuable comments

மாயா said...

திரைப்படங்களில் குழந்தைத்தொழிலாளர்களாக நடிக்கும் குழந்தைகள் கூட நிஜமான
குழந்தைத்தொழிலாளர் தானே ?
இல்லை குழந்தை நட்சத்திரமா ?

அதை யார் எங்கு போய் சொல்லியழுவது ?

இந்தப்பதிவை முடியுமானவர்கள் வாசிக்கவும்
http://palipedam.blogspot.com/2008/02/blog-post_25.html

நன்றிகளுடன்
மாயா

மாயா said...

உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறதா ?

அருண்மொழிவர்மன் said...

முதல் முதலில் வந்து வைத்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள். மேலும், நீங்கள் சினிமா பற்றி எழுதும் பதிவுகளின் தீவிர ரசிகன் நான். ஆனால் சற்று விரிவாக எழுதலாம் என்பது எனது எண்ணம்

கிரி said...

//சிவாஜி திரைப்படத்தில் கட்டிட வேலையில் சிறுவன் ஈடுபடுவது சொல்லப்பட்டு அது கண்டிக்கப்பட்டது. அதே வேளையில் ரஜினி, சுமன் இடையேயான பஜ்ஜி காட்சியில் சிறுவன் டீ கொடுப்பது இயல்பாக காட்டப்பட்டுள்ளது.//

அதற்காக காட்சிக்கு காட்சி விளக்கம் கொடுக்க முடியுமா முரளிகண்ணன்!