January 05, 2009

ரஜினியை உச்சத்துக்கு கொண்டு போன 1980

1980 ஆண்டை ரஜினியின் ஆண்டு என சொல்லலாம். ரஜினி நடித்து ஏழு படங்கள் வந்தன, அதில் இரண்டு படங்கள் இன்றும் பலரால் சிலாகிக்கப் படுகின்றன. டி ராஜேந்தர் ஒரு தலை ராகம் மூலமும், வைரமுத்து நிழல்கள் மூலமாகவும் பாடலாசிரியராக அறிமுகமானார்கள். சில்க் ஸ்மிதா,மாதவி, விஜயசாந்தி,சுஹாசினி, எஸ் வி சேகர் ஆகியோர் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டில் அறிமுகமானார்கள்.


அவன் அவள் அது


சிவசங்கரி எழுதிய ஒரு நாவலை தழுவி எடுத்த படம். சிவகுமார்,லட்சுமி தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் வாடகைத்தாயாக ஸ்ரீப்ரியாவை ஏற்பாடு செய்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. மூவருக்கும் இடையே மனப் போராட்டம் ஆரம்பிக்கிறது. இந்த படம் வெளியான காலகட்டத்தில் இது புது விஷயமாக இருந்ததால் பரபரப்பாக பேசப்பட்டது (நாவல் படிப்பவர்கள் மிக குறைவுதானே?).


எமனுக்கு எமன்


சிவாஜி கணேசன் நடித்த படம். எமலோகத்தை அடிப்படையாக கொண்ட கதை. ஆயுள் முடிவதற்க்கு முன்பே சிவாஜியை எமகிங்கரர்கள் தூக்கி வந்துவிட, உண்மை தெரிந்த சிவாஜி அடிக்கும் லூட்டியே கதை. இந்த படமே எஸ் வி சேகரின் காதுல பூ நாடகம், அதிசய பிறவி, தங்கமாமா, இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களுக்கு ஊற்றுக்கண். இந்த படம் ஒரு தெலுங்கு ரீமேக் என கேள்வி.


நிழல்கள்


தொடர்ந்து ஐந்து வெற்றி படங்களைக் கொடுத்த பாரதிராஜாவுக்கு முதல் வணிக ரீதியிலான தோல்விப்படம். இந்தப் படத்தின் கதை மணிவண்ணனுடையது. இந்த தோல்வி வெறியில் அவர் எழுதிய அடுத்த கதை தான் அலைகள் ஓய்வதில்லை. இது ஒரு பொன் மாலை பொழுது என்ற பாடலின் மூலம் வைரமுத்து பாடாலாசிரியராக அறிமுகமானார். ரவி இதில் அறிமுகமானதால் நிழல்கள் ரவி. ஒளிப்பதிவாளராக இருந்த (ராபர்ட்) ராஜசேகரும் இப்படத்தில் அறிமுகமானார். இப்படம் அப்போது முக்கிய பிரச்சினையாக இருந்த வேலை இல்லா திண்டாட்டத்தை அடிப்படை கருவாக கொண்ட படம். மறக்கமுடியமா மடை திறந்து பாடலை?

வறுமையின் நிறம் சிகப்பு

இதே கருவை கொண்ட இப்படமும் இந்த ஆண்டு வெளிவந்தது. நிழல்கள் கீழ் மத்திய தர வர்க்க (கதாநாயகன்)தளத்திலும், இப்படம் மேல் நடுத்தர வர்க்க தளத்திலும் வேலையின்மையால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைத்தது. கமல்,ஸ்ரீதேவி,பூர்ணம் விஸ்வனாதன்,பிரதாப் போத்தன்,திலீப், எஸ் வி சேகர் (அறிமுகம்) ஆகியோரின் நடிப்பில் வந்த இந்தப்படம் வேலையின்மைக்கு மாற்றாக சுயதொழில் என்னும் தீர்வை சொன்னது. எம் எஸ் விஸ்வனாதன், கண்னதாசன் பாடல் வரிகளில் வந்த சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடல், கமல் ஸ்ரீதேவி கெமிஸ்டிரியால் இன்னும் அழகானது. அப்போதைய நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு கேள்விகளை செமத்தியாக கிண்டல் அடித்திருப்பார்கள் இந்தப் படத்தில்.


ஒரு கை ஓசை


பாக்யராஜ் தயாரித்து,இயக்கி ஊமையாக நடித்த படம். இதே ஆண்டில் இவர் இரண்டு பெண்களுக்கு கணவனாக நடித்த பாமா ருக்மணியும் வெளியானது. இதில் ஒரு மனைவியாக நடித்த பிரவீணாவையே இவர் திருமணம் செய்து கொண்டார். பிரவீணா தெலுங்கு பெண், அவருக்கு இவர் தமிழ் சொல்லிக் கொடுக்க போய் காதல் உருவாகி கல்யாணத்தில் முடிந்தது. உடல்நலமின்றி அவர் இறந்த பின் இரண்டாவதாக தன்னுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த பூர்ணிமா ஜெயராமை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்

கமல்ஹாசன்


கமலின் 50ஆவது படமாக ஐ வி சசி இயக்கத்தில் வந்த குரு நல்ல வெற்றியைப் பெற்றது. ஸ்ரீதேவி ஜோடி. ரதி,தீபா உடன் இணைந்து நடித்த உல்லாச பறவைகள் சுமார் ரகமே. வறுமையின் நிறம் சிகப்பு வெற்றி. இந்த ஆண்டில் கமல் வைத்திருந்த தொங்கு மீசை பலரை கவர்ந்தது.

ரஜினிகாந்த்

அமிதாப் நடித்து வெற்றி பெற்ற டானை அப்போதைய ரீமேக் மன்னனான பாலாஜி, தமிழில் ரஜினியை வைத்து தயாரித்தார். இது ரஜினிக்கு 50 ஆவது படம். இயக்கம் கிருஷ்ணமூர்த்தி,இசை எம் எஸ் விஸ்வனாதன். இப்பட வெற்றிக்குப் பின் இயக்குனர் பில்லா கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார். படத் தயாரிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த ஏவி எம், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் தயாரித்த படம் முரட்டுக்காளை. அதுவரை கதாநாயகனாக இருந்த ஜெய்சங்கர் இப்படத்தின் மூலம் வில்லனாக டீபுரமோட் ஆனார். ரஜினி, தயாரிப்பு நிறுவனத்திடம் அவருக்கு தக்க மரியாதையை தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது அடிக்கப்பட்ட போஸ்டர்களில் இருவருக்கும் சம முக்கியத்துவம் தரப்பட்டது. இளையராஜா இசையமைத்து மலேசியா வாசுதேவன் பாடிய பொதுவாக எம்மனசு தங்கம் அப்பொதைய ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாய் இருந்தது. எந்த பூவிலும் வாசமுண்டு, மாமே மச்சான், புது வண்ணங்கள் ஆகிய மெலடிகளும் மக்களை தாலாட்டின. ரதி,சுமலதா,சுருளிராஜன் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படம் இப்போது சுந்தர் சி, சினேகா நடிப்பில் ரீமேக் செய்யப் படுகிறது. இந்த இரண்டு படங்களும் ரஜினிக்கு மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்தன.

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி இருவேடத்தில் நடித்த ஜானி, இயல்பான நடிப்புக்காகவும், அருமையான பாடல்களுக்காகவும் நினைவு கூறப்படுகிறது. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அன்புக்கு நான் அடிமையும் நல்ல வெற்றிப் படமே. இதுதவிர பொல்லாதவன்,நான்போட்ட சவால்,காளி ஆகிய படங்களும் இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்தன.

புதுமுகங்கள்

மரோசரித்திராவில் நடித்திருந்தாலும் தமிழுக்கு புதிய தோரணங்கள் படத்தின் மூலம் இந்த ஆண்டில் அறிமுகமானார் மிஸ் இந்தியா போட்டியாளரான மாதவி. ரஜினி,கமல் ஆகியோருடன் பல படங்கள் நடித்து அமிதாப் வரை சென்றவர் பின் அமெரிக்காவில் செட்டிலானார். மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் ஒளிப்பதிவு மாணவியான சுஹாசினி நாயகியானார். இந்தப் படத்தில் சரத்பாபு இவரின் அண்ணன். அப்போதே கொடுமைக்கார அண்னியாக நடித்தவர் மெட்டி ஒலி மாமியார் சாந்தி வில்லியம்ஸ். வண்டிச்சக்கரம் படத்தில் சில்க் என்னும் கேரக்டரில் அறிமுகமான ஸ்மிதா தமிழின் ஒப்பற்ற கவர்ச்சி நடிகையாய் பரிமளித்தார். பாரதி ராஜாவின் கல்லுக்குள் ஈரம் மூலம் அறிமுகமான விஜயசாந்தி பின்னாளில் நெஞ்சில் ஈரம் இல்லாத பல தெலுங்கு வில்லன்களை புரட்டியெடுத்தார். பேசாமலே காதல் என்று காதலுக்கு புது பரிமாணத்தையும், மறக்க முடியா பாடல்களையும் கொடுத்து ஒரு தலை ராகத்தின் மூலம் அறிமுகமானார் டி ராஜேந்தர்.

ஜம்பு

வினியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையான இந்த படம் ஜெய்சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம் எனலாம். கர்ணன் இயக்கம், மாரா வசனம், சங்கர் கணேஷ் இசை, நாயகி – ஜெயமாலா. அவரது திரையுலக வாழ்க்கையில் இந்தப் படத்தை அவர் தவிர்த்திருக்கலாம் என்று நான் பலமுறை எண்ணியதுண்டு. அதற்குமுன் கர்ணனின் பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் இந்தப் படம் அளவிற்க்கு கவர்ச்சி/ஆபாச காட்சிகள் அவற்றில் இல்லை.

இந்த ஆண்டு இளையராஜா, எம் எஸ் விஸ்வனாதன், டி ராஜேந்தர் ஆகியோர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வந்தன. பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரதாப் போத்தன்,ஷோபா நடித்த மூடுபனி படத்தில் வரும் என் இனிய பொன் நிலாவே மற்றும் கரும்புவில் படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் என்று படத்துக்கு ஒரு பாடல் எடுத்து, தொகுத்து கேளுங்கள். வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.

31 comments:

Anonymous said...

ஒரு திருத்தம், "பொதுவாக எம்மனசு தங்கம்" என்ற பாடலைப் பாடியவர் மலேசியா வாசுதேவன். சரிதானே?

முரளிகண்ணன் said...

அனானி,

தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி. திருத்தி விடுகிறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
வினியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையான இந்த படம் //


என்ன ஒரு கலைநயம்....

கிரி said...

//அவருக்கு இவர் தமிழ் சொல்லிக் கொடுக்க போய் காதல் உருவாகி கல்யாணத்தில் முடிந்தது//

அது சரி..

கமல் ரஜினி இருவருக்கும் 50 வது படம் வெற்றி படம் 100 வது படம் தோல்வி படம்!!!

//வினியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையான இந்த படம்//

ஹி ஹி ஹி

//கரும்புவில் படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் //

சூப்பர் பாட்டு

நசரேயன் said...

நல்ல தொகுப்பு
தலைவர் அப்பவே ரீமேக் ஆரமிச்சுடாரா?

அத்திரி said...

இதுல எப்பவுமே ஜானி தான் டாப். பொதுவா அந்தக்கால கட்டங்களில் இரட்டை வேடம் என்றாலே கிளைமாக்ஸில் வைத்தாவது அண்ணன் தம்பின்னு கொண்டு வந்திடுவாங்க... ஆனா இந்த படம் அதுலயும் தனியா வந்தது.....

rapp said...

சூப்பர் சார்:):):) இந்த வருஷ கலெக்ஷன்ஸ் கலக்கலா இருக்கு.

அதுலயும் ரஜினி கலெக்ஷன்ஸ் சூப்பர். இத்தனைப் படங்கள் இந்த வருஷம் அவருக்கு ரிலீஸ் ஆச்சா:):):)

//கரும்புவில் படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் //

ரொம்ப நல்லப் பாட்டு, ஆனா சிலப் பாடல்களை தவறியும் பாத்துடக்கூடாதுன்னு சொல்லித்தர்ற பாட்டு:):):)

இந்த வருஷம் ஜாலியான கதாநாயகர்கள் வந்ததால, சிவாஜி சாரும், ஜெய்சங்கர் சாரும் கொஞ்சம் நார்மல் ஆனாங்க, இல்லன்னா இன்னும் எத்தன டார்ச்சர்களா கொடுத்திருப்பாங்களோ:):):)

நாடோடி இலக்கியன் said...

kalakkal vazhakkam pol.

D said...

ஜானி - எப்ப இந்த பேர கேட்டாலும்....அந்த வித்யாசாகர் கதாபாத்திரம்தான் ஞாபகம் வரும்....ஜானியை அடிச்சு போட்டுட்டு அர்ச்சனா வீட்டுக்கு வந்து தங்கிட்டு...மனசு கேக்காம கெளம்புவாரு.....அப்ப ரஜினி கொடுக்குர ஒரு பார்வை இருக்கு பாருங்க.....அதே இடத்துல ராஜாவும் தன் பங்குக்கு படத்தோட தீம் இசையை போட்டிருப்பாரு.....
சே....I miss that Rajni a lot....Even Kamal would haven't done tht scene so perfect....

இந்த மாதிரி ஃபீலிங்க எல்லாம் நல்லா கெளப்பி விடுறீங்க....

Good collection to remember....Hats off Murali....

SPIDEY said...

வறுமையின் நிறம் சிகப்பு இயக்குனர் யாருன்னு சொல்லலியே?

புதுகை.அப்துல்லா said...

//வறுமையின் நிறம் சிகப்பு இயக்குனர் யாருன்னு சொல்லலியே?//

பாலச்சந்தர்னு சொன்னாதான் தெரியுமா என்ன???
:))

புதுகை.அப்துல்லா said...

நீங்க ஒரு வலையுலக பிலிம்நியூஸ் ஆனந்தன் :))

anujanya said...

1980 - Rajini at his vintage best என்றால், இந்தப் பதிவில் அட்டகாசம் நீங்கள்தான் முரளி. என்ன அலசல்!

என் மேதாவித்தனத்திற்கு:

நிழல்கள் படத்தில், 'பூங்கதவே' பாட்டும் அருமை.

வ.நி.சிகப்பு படத்தில் சில வசனங்கள்: குப்பைத் தொட்டியில் விழுந்த போட்டோவைத் தேடும் கமலுக்கு ஒரு சாக்கடையில் விழுந்த ஆப்பிள் கிடைக்கிறது. 'இன்னும் தோண்டினா சோஷலிசமே கிடைக்கும்' என்று வசனம் வரும். அதே போல் கடைசி காட்சியில் நாவிதரான கமலிடம் சவரம் செய்ய வந்த தேங்காய் 'ஆமாம்; நீ என்ன ஜாதி' என்பார். கமல் கோபத்தை அடக்கிக்கொண்டு 'வெள்ளை நிறத்தில் ஒரு பூனை' என்று துவங்குவர். தேங்காய் கதை கேட்பது போல் 'சரி' என்பாரே பார்க்கலாம். கிளாஸ்.

மூடுபனி இளையராஜாவுக்கு நூறாவது படம். (முரளிக்கே film news!)

'ஜம்பு' ஜெய் வருத்தப்படவேண்டிய படம் என்றாலும், அதுதான் அவர் கடைசியாகக் கதாநாயகனாக நடித்ததா? ரௌடி ராக்கம்மா, அவர் எனக்கே சொந்தம், சக்கரவர்த்தி, இது எப்படி இருக்கு போன்ற படங்கள் எல்லாம் எப்போது வந்தன?

அனுஜன்யா

நவநீதன் said...

// நீங்க ஒரு வலையுலக பிலிம்நியூஸ் ஆனந்தன் :)) //
100% உண்மை !

முரளிகண்ணன் said...

சுரேஷ்,கிரி,நசரேயன்,அத்திரி,ராப்,நாடோடி இலக்கியன்,யொஜிம்போ,ஸ்பைடி, அப்துல்லா அண்னாச்சி, நவநீதன் தன்களின் வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி

@அனுஜன்யா

நன்றி, அருமையான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். கதாநாயக அந்தஸ்தில் இருந்து ஜெய்சங்கர் நடித்த கடைசி படமாக ஜம்புவை சொல்லலாம் என நினைக்கிறேன். படமெடுக்கப்பட்ட ஆண்டு, வெளியான தேதி இவற்றை சரிபார்த்து வரும் நாட்களில் எழுதுகிறேன்.

Anonymous said...

சுவையாக இருக்கிறது.

CA Venkatesh Krishnan said...

அப்போதைய இளையராஜாவின் ஒவ்வொரு பாடலிலும் (முதலில் வரும் இசை, இடையில் வரும் இசை) ஒரு புதுமை இருக்கும். இப்போது கேட்டாலும் 'சின்டிலேடிங்' எஃபெக்ட் !. அந்த 'வெரைட்டி' & 'வேனிடி' ராஜா இப்போ எங்கே இருக்கிறார்? :((

Anonymous said...

S.Ve. Sekhar appeared in 'Ninaithale Inikkum' even before VNS. All 4 songs in Nizhalgal were super hits. One of them (dhoorathil naan kanda un mugam) did not figure in the movie.

Gayathri & Murattukkalai - a reversal of roles for Rajini and Jai. Are there any other such instances?

Guru & Kali (Rajini) were released on the same day. Both were directed by I.V Sasi. Guru did better than Kali.

வெண்பூ said...

முரளி,

நிழல்கள் படத்தோட "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாட்டை மறந்துட்டீங்களே? அதுதானே வைரமுத்துவோட முதல் பாடல்?

Anonymous said...

நல்ல தொகுப்பு. சுவையான தகவல்கள். சுப்பிரமணியபுரம் படம் பார்த்ததுபோல் இருந்தது ;)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

//இந்த படமே எஸ் வி சேகரின் காதுல பூ நாடகம், அதிசய பிறவி, தங்கமாமா, இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களுக்கு ஊற்றுக்கண். இந்த படம் ஒரு தெலுங்கு ரீமேக் என கேள்வி.//

தங்கவேலு, பானுமதி நடித்த 'ரம்பையின் காதல்' படம் பார்த்திருக்கிறீர்களா? அதன் ரீமேக்-தான் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்'. சிறிய நகைச்சுவைத் துணுக்குக் காட்சிகள் கூட அப்படியே இருந்தன. இது எங்குமே இயக்குனரால் கூறப்படவில்லை என்று நினைக்கிறேன். எண்ணமும், இயக்கமும் என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். :(

SVenkat said...

நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி முரளி

ஆளவந்தான் said...

//
பிரவீணா தெலுங்கு பெண், அவருக்கு இவர் தமிழ் சொல்லிக் கொடுக்க போய் காதல் உருவாகி கல்யாணத்தில் முடிந்தது. உடல்நலமின்றி அவர் இறந்த பின் இரண்டாவதாக தன்னுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த பூர்ணிமா ஜெயராமை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்
//

வேறு மாதிரியான வதந்திதான் கேள்வி பட்டிருகேன்.

ஷாஜி said...

'எமனுக்கு எமன்' - படத்தின் கதை சமிபத்தில் 'எமதொங்கா' என் தெலுங்கில் ஜுனியர் NTR நடிப்பில் 2007-இல் ரிலிசாகி சக்க பொடு போட்டது..

ஷாஜி said...

// நீங்க ஒரு வலையுலக பிலிம்நியூஸ் ஆனந்தன் :)) //

--நானும் அதை வழி மொழிகிறேன்...

ஷாஜி said...

//ஜம்பு//
--- இந்த படத்தின் கவர்ச்சி காட்சிகளைப் பார்க்க காலேஜ் கட் அடிச்ச நியாபகம் வருது...

Anonymous said...

Yemanukku Yeman is not original or a remake of a telugu film. It is a copy of Warren Beatty's (few years ago he was awarded life time achievement award - OScar) Waiting for the Heaven (1975). Of course, this itself a remake of another film in 1950s I heard...

Anonymous said...

Poongathave Song is nizhalgal was the first song for Deepan Chakravarthy & Uma Ramanan

கானா பிரபா said...

வணக்கம் முரளிக்கண்ணன்

வழக்கம் போல ரசித்துப் படித்தேன், எல்லாமே சுவையான தகவல்கள்.

அவன் அவள் அது படம் சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலாகிறது நாவலின் கதை.

Anonymous said...

Avan Aval Athu had a beautiful song by Vani jayaram - Illam Sangeetham Adhu Yellam Santhosham

Jayaprakash Sampath said...

//ஜெய்சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம் எனலாம்.//

முரளி, ஒரு திருத்தம். ஜெய்சங்கர் நாயகனாகவும், சீமா நாயகியாகவும் நடித்த கைவரிசை என்ற படம் 1983 இலே வெளியானது.