January 04, 2009

1985 ல் தமிழ்சினிமா – ஒரு பார்வை

1985 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவுக்கு பல புதுவரவுகளை தந்தது. மணிரத்னம் பகல்நிலவு படம் மூலம் தமிழில் தன் முதல் படத்தை இயக்கினார். கல்யாண அகதிகள் மூலம் நாசர் என்னும் அற்புத நடிகர் அறிமுகமானார். கன்னிராசி படத்தின் மூலம் இயக்குனராக பாண்டியராஜன், பூவே பூச்சூடவா படத்தின் மூலம் நதியா, தென்றலே என்னைத் தொடு மூலம் ஜெயஸ்ரீ, ஆண்பாவம் மூலம் சீதா என 1985 பல முகங்களை தமிழுக்கு தந்தது. சாவி என்னும் படத்தின் மூலம் அதுவரை வில்லனாக திறமை காட்டிகொண்டு இருந்த சத்யராஜ் நாயகனாக (எதிர்மறை பாத்திரம்) பதவி உயர்வு பெற்றார். சிறந்த இசை, பாடகி, நடிகைக்கான தேசிய விருதை சிந்து பைரவியும், பாடலாசிரியருக்கான விருதை முதல் மரியாதையும் தமிழுக்குப் பெற்றுத் தந்தன. இந்த ஆண்டு வெளியான சில படங்களைப் பற்றியும், சில நட்சத்திரங்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருந்தது என்பதனைப் பற்றியும் ஒரு பார்வை.

முதல் மரியாதை
சிறந்த நடிகர்,இயக்குனர்,இசை அமைப்பாளர்,பாடலாசிரியர் கூட்டணி அமைத்தால் ஆண்டின் சிறந்த படமென்ற முதல் மரியாதை கிடைக்காதா என்ன?. நவ நாகரீக மங்கையாக பாரதிராஜாவால் சிகப்பு ரோஜாக்களில் (1978) அறிமுகப்படுத்தப்பட்ட வடிவுக்கரசி, இந்தப்படத்தில் சிவாஜிக்கு இணையாக வயதான கேரக்டரில் நடிக்க வைக்கப்பட்டார். அதுவரை தமிழ்சினிமா காணாத பாத்திரப் படைப்பு அது. கவர்ச்சி பதுமையாக பலரின் கனவுகளை ஆண்டு கொண்டிருந்த ராதாவுக்கும் கனமாண பாத்திரம். ரஞ்சனி அறிமுகம். அவருடன் அறிமுகமானவர் தீபன். 87ல் எம்ஜியார் இறந்தபோது, ஜெயலலிதாவை எம்ஜியார் இருந்த வண்டியில் இருந்து தள்ளி இறக்கிவிட்டதால் புகழ் அடைந்தார். இவர் ஜானகியின் உறவினர் என்று கூறுவர். அந்த காரணத்தாலேயே 89ல் ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னத்தில் ஓட்டுகேட்டு தமிழகத்தை வலம் வந்தார். திருவையாரில் நின்ற சிவாஜிக்கு “என் மாமாவுக்கு ஓட்டு போடுங்கள்” என்று கேட்டாரா என்று தெரியவில்லை. வீராச்சாமி இப்படத்தில் பேசிய எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி இன்னும் நண்பர்கள் வட்டாரத்தில் யாராவது பீலா விடும்போது உபயோகப் படுத்தப் படுகிறது. ஐந்து நிமிட கேரக்டர் சத்யராஜுக்கு. ஒண்டேயில் 400 ரன்னை சேஸ் பண்ணும் அணியில் பெரிய ஆள் எல்லாம் 50,100 என்று அடிக்க கடைசி ஓவரில் 20 ரன் தேவைப்பட்டு 10 ஆவது ஆட்டக்காரர் அதை அடித்தால் எப்படி மறக்கப்படாமல் இருப்பாரோ அப்படிப்பட்ட அதகளத்தை பண்னியிருப்பார் சத்யராஜ். இதுவே அவருக்கு பின்னளில் கடலோர கவிதைகள்,வேதம் புதிது கிடைக்க காரணமாய் இருந்திருக்கலாம். இந்தப் படத்தில் கம்பெனி பாடல் கேசட்டில் வைரமுத்துவின் உரை இடம்பிடித்திருக்கும். பொதுவாக கேசட் பதிபவர்கள் இம்மாதிரி முற்சேர்க்கைகளை தவிர்ப்பார்கள். ஆனால் வாடிக்கையாளர்கள் அதையும் சேர்த்து பதிஞ்சு கொடுனங்கண்ணே என்று கேட்கும் அளவுக்கு அசத்தலாக இருந்தது அது. தில்,பேட்டா,ராஜா ஆகிய படங்களை இயக்கிய இந்திரகுமார், அமிதாப் சிறு இடைவேளைக்குப் பின் இந்திப் படங்களில் நடிக்க தொடங்கியபோது இக்கதையின் சாயலில் அமிதாப்,மாதுரி நடிக்க ஒரு படத்தை இயக்க நினைத்து வேலைகளை தொடங்கினார். ஆனால் அது நடக்கவில்லை.

பூவே பூச்சூடவா

பாசில் அமெரிக்காவில் இருந்த பத்மினியை வற்புறுத்தி அழைத்து வந்து நடிக்க வைத்த படம். நதியா வளையல்,பொட்டு,ஹேர்பின் என புது பிராண்டுகளை சிறு வணிகர்கள் உருவாக்க உதவிய படம். எஸ் வி சேகர் நாந்தான் நதியாவின் முதல் ஹீரோ என பெருமைஅடித்துக் கொள்ள உதவிய படம். சித்ராவுக்கு சின்னக்குயில் சித்ரா என பட்டம் வழங்கிய படம். தூர்தர்ஷனுக்கு தீபாவளியின் போது போட ஒரு பாட்டை வழங்கிய படம். பாசிலுக்கு தமிழில் ஒரு இடம் கிடைக்க காரணமாய் இருப்த படம்.

ஆண்பாவம்

கன்னிராசியில் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜன் வாமனன் அவதாரம் எடுத்த கதையாக விஸ்வரூபம் எடுத்த படம். அவரது குருநாதர் பாக்கியராஜின் தாவணிகனவுகள், சின்னவீடு ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெறாத நிலையில் இப்படம் பெருவெற்றியைப் பெற்றது. கல்கி பத்திரிக்கை ஒரு கார்ட்டூனில் பாக்யராஜ் மிக்சியில் அரைப்பது போலவும், பாண்டியராஜன் அம்மியில் அரைப்பது போலவும் போட்டு பாராட்டியது. இப்பட வெற்றியினால் பாண்டியராஜனுக்கு இதை ஜூஹிசாவ்லாவை வைத்து இந்தியில் [சச்சா பியார்] எடுக்கும் வாய்ப்பு கிட்டியது. பல நாட்கள் தயாரிப்பில் இருந்த அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. பாண்டியராஜன் இப்படத்தில் நடிகராகவும் அறியப்பட்டு நடிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் மணிரத்னத்திடம் படம் இயக்க கேட்டு ஒரு தயாரிப்பாளர் வந்தார். இதயகோவில் தோல்வி அடைந்திருந்த நேரம் அது. மணிரத்னத்துக்கு ஆச்சரியம். காரணத்தை தயாரிப்பாளர் சொன்னார். நான் பாண்டியராஜனிடம் நடிக்க கால்ஷீட் கேட்டுப் போனேன். அவர் நீங்க இயக்குரதா இருந்தா நடிக்கிறேன்னார் என்றார். ஆனால் அது கைகூடவில்லை.

சிந்துபைரவி

தமிழுக்கு பல தேசிய விருதுகளை பெற்றுத்தந்த படம். தன் ரசனைக்கு மனைவி அமையாததால் இன்னொரு பெண்ணிடம் அதை தேடும் கர்னாடக சங்கீத வித்துவானின் கதை. பெண்ணிய நோக்கில் இப்படம் இப்போது கடுமையாக விமர்சிக்கப் படுகிறது.

யார்
அதுவரை வினியோகஸ்தரர் களாயிருந்த தாணு,சேகரன் ஆகியோர் கலைப்புலி பேனரில் தயாரித்த படம். அர்ஜூன்,நளினி,செந்தில், அழிவு சக்தியாய் ஒரு புதுமுகம் நடித்த சைத்தான் – சாமி - திரில்லர் படம். இப்படம் இயக்கிய கண்ணன் பின்னாட்களில் யார் கண்ணன் என அறியப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பின் தமிழில் வந்த நல்ல க்ரிப்பான திரில்லர் படன் என்பதால் நன்கு ஓடியது.

மண்ணுக்கேத்த பொண்ணு

பி சி செண்டர்களில் இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. பாண்டியன், இளவரசி,நளினி நடித்த இப்படத்தின் இயக்குனர் ராமராஜன். இந்த படம் ராமராஜன் நளினி திருமணத்துக்கு மிக உதவிய படம். கவுண்டமணி,செந்தில்,கோவை சரளாவின் காமெடியும், இளையராஜவின் இசையும் வெற்றிக்கு உதவியது.

இந்தியில் இருந்து

கோவிந்த் நிகாலனி இயக்கி ஓம்பூரி நடிப்பில் வெளியாகி பெரும் பாராட்டுப் பெற்ற அர்த் சத்யா இங்கே தியாகராஜன் நடிப்பில் காவல் என்ற பெயரில் வந்தது. நல்ல முயற்சி. மிதுன் சக்கர வர்த்தி நடித்து வெற்றிபெற்ற டிஸ்கோ டான்ஸர் பாடும் வானம் பாடி என்ற பெயரில் ஆனந்த்பாபு,நாகேஷ்,ராஜிவ் நடிக்க பப்பிலஹரியின் இசையில் வெளிவந்து சுமாராக ஓடியது.

3டி படங்கள்
விஜயகாந்த் நடித்த அன்னைபூமி, நம்பியார் நடித்த தங்கமாமா


கமல்ஹாசன்

கமலின் நடிப்பில் அந்த ஒரு நிமிடம், உயர்ந்த உள்ளம், மங்கம்மா சபதம், ஜப்பானில் கல்யாணராமன் ஆகிய தோல்விப்படங்களும் ஒரு கைதியின் டைரி, காக்கிசட்டை ஆகிய வெற்றிப்படங்களும் வெளிவந்தன.

ரஜினிகாந்த்

பாலு மகேந்திரா இயக்கத்தில் உன் கண்ணில் நீர் வழிந்தால், 100ஆவது படமான ராகவேந்திரர் ஆகியவை தோல்வியையும், சிவாஜியுடன் இணைந்து நடித்த படிக்காதவன், எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடித்த நான் சிகப்பு மனிதன் ஆகியவை வெற்றியையும் பெற்றன.

விஜயகாந்த்

அன்னைபூமி,தண்டனை, அமுதகானம், ஈட்டி (50 வது படம்), நானே ராஜா நானே மந்திரி, சந்திரசேகர் இயக்கத்தில் நீதியின் மறுபக்கம் (மாலைக் கருக்கலில் சோலை இளங்குயில்) ஆகிய படங்களில் நடித்தார். கடைசி இரண்டு படங்கள் தப்பித்தன.

மோகன்
மணிரத்னம் இயக்கிய இதயகோயில் சுமார் ரகம் என்றாலும், ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய குங்குமசிமிழ், ரங்கராஜன் இயக்கிய உதயகீதம், ஸ்ரீதர் இயக்கிய தென்றலே என்னைத் தொடு ஆகியவை வெற்றி பெற்றன. மனோபாலா இயக்கத்தில் நடித்த பிள்ளை நிலா ஓரளவு ஓடியது.

கார்த்திக்
அலைகள் ஓய்வதில்லையில் பெரிய ரீச் அடைந்தாலும், வயது மற்றும் தோற்றம் காரணமாக நல்ல கேரக்டர்கள் கிடைக்காமல் விசு,கர்ணன் போன்றோரிடம் அடைக்கலம் புகுந்திருந்தார். அவள் சுமங்கலிதான் என்ற இந்த ஆண்டு வெளிவந்த படத்தில் சாவை நோக்கி செல்லும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து தன்னை வெளிக்காட்டினார். 83-85 இவருக்கு சோதனையான கால கட்டம். 86ல் மௌனராகம் எல்லாவற்ரையும் மாற்றிவிட்டது.


பிரபு
கன்னிராசி,அடுத்தாத்து ஆல்பட் என சொற்ப படங்களே.

அறிமுக இயக்குனர்கள்

நானே ராஜா நானே மந்திரி மூலம் வித்தியாசமான வேடத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்து பாலு ஆனந்த் இயக்குனராக அறிமுகமானார். மீண்டும் ஒரு காதல் கதை மூலம் பிரதாப் போத்தன் இயக்குனராகவும், பின்னர் ராதிகாவின் கணவராகவும், அதன்பின் முன்னால் கணவராகவும் பதவி உயர்வு பெற்றார்.விஜயசிங்கம் கவுண்டமணியை நாயகனாக்கி பணம் பத்தும் செய்யும் என்ற காம்ச்டிப் படத்தை இயக்கினார். ராம நாராயனின் உதவியாளர் சோழராஜன் நாகம் என்னும் படத்தை இயக்கி வெற்றிபெற்றார். மனோபாலா, பிள்ளை நிலா மூலம் இயக்குனரானார்.

.

இப்படி 85ல் எத்தனை படங்கள் வந்திருந்தாலும், இதில் எதை ரீ ரிலிஸ் பண்ணினாலும் படம் ஒடாது. ஆனால் ஒரு படம் மட்டும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகி கல்லா கட்டி வருகிறது சி செண்டர்களில். அதுதான் மாதவி இரு வேடத்தில் நடித்த ஜான்ஸி. டாக்டர் ராஜ சேகர் எதிர் நாயகனாக நடிக்க கர்ணன் இயக்கிய படம். சன் தொலைக்காட்சி மிட்னைட் மசாலா தொடங்கிய போது இப்படத்தின் பாடல் ஒன்று தொடர்ந்து இடம் பெற்று வாலிப வயோதிக அன்பர்களை குஷிப்படுத்தியது.

கதாநாயகர்களின் சில படங்கள் ஓடினாலும் பல படங்கள் சொதப்பின. ஆனால் ஒரு கதாநாயகன் மட்டும் வெற்றியை மட்டுமே தந்தார். அவர்தான் இளையராஜா.

முதல் மரியாதை,சிந்து பைரவி. இதயகோயில், பகல்நிலவு ,கீதாஞ்சலி, உதய கீதம் (300 வது படம்), குங்கும சிமிழ், தென்றலே என்னை தொடு, ஒரு கைதியின் டைரி,ஆண்பாவம்,பூவே பூச்சூடவா போதுமா, இல்லை?

21 comments:

நாடோடி இலக்கியன் said...

அசத்தல் பதிவு முரளி.

நாடோடி இலக்கியன் said...

//ஒண்டேயில் 400 ரன்னை சேஸ் பண்ணும் அணியில் பெரிய ஆள் எல்லாம் 50,100 என்று அடிக்க கடைசி ஓவரில் 20 ரன் தேவைப்பட்டு 10 ஆவது ஆட்டக்காரர் அதை அடித்தால் எப்படி மறக்கப்படாமல் இருப்பாரோ அப்படிப்பட்ட அதகளத்தை பண்னியிருப்பார் சத்யராஜ்.//

இது கலக்கல்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முதல் மரியாதை கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜியின் நடிப்பு சுந்தரசோழன் மந்தாகினி சந்திப்பினைக் கன்முன்னே கொண்டுவரும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//காரணத்தை தயாரிப்பாளர் சொன்னார். //


அற்புதம்.

கானா பிரபா said...

அருமை அருமை

Anonymous said...

எங்கிருந்துதான் இவ்வளவு விவரங்கள் பிடிக்கறீங்களோ, கலக்கல்

Cable சங்கர் said...

நல்ல பதிவு முரளிகண்ணன். நன்றாக தகவல்களை கலெக்ட் செய்துள்ளீர்கள்..

அரவிந்த் said...

ஆஹா!! அற்புதம்... கலக்கல்..

\\உதய கீதம் (300 வது படம்)\\

1985ல் 300ஆவது படம். நாயகன் (1987) 400ஆவது படம். இரண்டு வருடங்களில் 100 படமா?? ராஜா உண்மையிலேயே ராஜாதான்!!

ILA (a) இளா said...

எப்படிய்யா இப்படி.. கண்ண கட்டுது போங்க..

முரளிகண்ணன் said...

நாடோடி இலக்கியம், சுரேஷ், கானா பிரபா, சின்ன அம்மிணி, கேபிள் ஷன்கர், அர்விந்த், இளா

தங்கள் வருகைக்கும்,ஆதரவுக்கும் நன்றிகள்

நிலாக்காலம் said...

எப்பவும் போல சூப்பர்.

'யார்' படத்தில் அழிவு சக்தியாக நடித்தவர் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் சுரேஷின் நண்பர் 'சோஷியல் சர்வீஸ்' நாராயணனாக நடித்தவர்.

//ஒரு கதாநாயகன் மட்டும் வெற்றியை மட்டுமே தந்தார். அவர்தான் இளையராஜா.//

பல மொக்கைப் படங்களையும் நாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்கக் காரணம் இசைஞானி மட்டுமே.

Unknown said...

அப்போ எனக்கு ஏழு வயசுங்கண்ணா... இம்புட்டு விசயம் நடந்திருக்கா... கன்டினியூ..கன்டினியூ...

கோபிநாத் said...

\\கதாநாயகர்களின் சில படங்கள் ஓடினாலும் பல படங்கள் சொதப்பின. ஆனால் ஒரு கதாநாயகன் மட்டும் வெற்றியை மட்டுமே தந்தார். அவர்தான் இளையராஜா.\\

ஆகா..ஆகா..எப்படி தான் படத்துக்கு படம் வித்தியாசமான இசையை அவரால கொடுக்க முடிஞ்சதோ!!!! ;))

கலக்கல் தொகுப்பு அண்ணாச்சி ;)

முரளிகண்ணன் said...

நிலாகாலம்,தேவ்,கோபினாத் தங்கள் வருகைக்கு நன்றி

Anonymous said...

நல்லா அலசி எழுதியிருக்கிங்க.

ராஜா பற்றிய கருத்துடன் 100% ஒப்புதல் எனக்கு.

CA Venkatesh Krishnan said...

இதுக்கு முன்னாடி 1958
இப்போ 1985.

?!?!?!?!

இந்தக் காலகட்டத்தில் வந்த பெரும்பாலான படங்கள் நன்றாகவே இருந்திருக்கின்றன. மலரும் நினைவுகளுக்கு நன்றி.

நவநீதன் said...

அண்ணே.... கலக்கிடீங்க....
உங்க சினிமா தொடர்பான பதிவ எல்லாம் திரட்டி புத்தகமாவே போடலாம்....
அந்த அளவு செய்திகள் இருக்கு....!

கிரி said...

//நானே ராஜா நானே மந்திரி மூலம் வித்தியாசமான வேடத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்து பாலு ஆனந்த் இயக்குனராக அறிமுகமானார்//

செம காமெடி படங்க :-)))

முரளிகண்ணன் said...

வடகரை வேலன், இளைய பல்லவன், நவநீதன், கிரி தங்கள் வருகைக்கு நன்றி

அத்திரி said...

சிவாஜி மிகவும் இயல்பாக நடித்த படம் முதல் மரியாதை.... ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருப்பார்..

ஆண்பாவம், தென்றலே என்னைத் தொடு படங்களின் அனைத்துப்பாடல்களும் அருமையாக இருக்கும்.

நல்லாவே அலசியிருக்கீங்க

rapp said...

இத்தனைப் படங்களில் என்னைப் பொருத்தவரைக்கும் ஆண்பாவம்தான் டாப்:):):) சாதாரண மனுஷங்களுக்கு எடுக்கப்படற சாதாரணப் படங்கள இவ்ளோ கலகலப்பா கொண்டுபோய், கலக்கலா முடிச்சிருப்பாங்க. கிளைமேக்சும் சூப்பர்:):):)