தமிழ்சினிமா ரசிகர்கள் எதை ரசிப்பார்கள் என்று எல்லோர் சிண்டையும் பிய்க்கவைத்த ஆண்டு இது என கூறலாம். எல்லாவகை படங்களும் வெற்றியும் அடைந்தன. தோல்வியும் அடைந்தன. இந்த ஆண்டில் ரஜினி,கமலைவிட விஜயகாந்தின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது எனலாம். திரைப்பட கல்லூரி மாணவர்களின் வருகை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கிராமராஜனாக கொடிகட்டிப் பறந்த ராமராஜன் நாயகனாக அறிமுகமானது, சத்யராஜுக்கு கிடைத்த ஹீரோ அந்தஸ்து, கார்த்திக்கின் புது வாழ்வு, லோ பட்ஜெட் படங்களை ஊக்கப்படுத்திய சம்சாரம் அது மின்சாரத்தின் வெற்றி என பலதரப்பட்ட ரசனை வெளிப்பட்ட ஆண்டு இது.
சம்சாரம் அது மின்சாரம்
ஏவிஎம் தயாரிப்பில், விசு இயக்கத்தில் அவரது ஆஸ்தான நடிகர்களை வைத்து 13 லட்சத்தில் (பிரிண்டிங்,விளம்பரம் உட்பட) எடுக்கப்பட்ட படம். பெரு வெற்றியடைந்து சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான குடியரசுதலைவர் தங்கப்பதக்கத்தையும் வாங்கி வந்தது. இந்தப்படத்துக்காக ஏவிஎம்மில் போடப்பட்ட செட் சம்சாரம் அது மின்சாரம் செட் என பெயர்பெற்று பட செலவை விட அதிக வருவாயை பெற்றுத்தந்தது. இப்பட வெற்றி திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன் என பல லோ பட்ஜெட் படங்களுக்கும் காரணமானது.
பாலைவன ரோஜாக்கள்
கலைஞர் கருணாநிதி பல ஆண்டுகளுக்குப் பின் வசனம் எழுதிய படம். சத்யராஜ்,பிரபு,லட்சுமி,நளினி நடிப்பில் வெளியான இப்படம் அப்போதைய எம்ஜியார் ஆட்சி பற்றிய விமர்சனத்தை மறைமுகமாக வைத்தது.
மைதிலி என்னை காதலி
கலாஷேத்ராவில் நடனம் பழகிக் கொண்டிருந்த அமலாவை நாயகியாக அறிமுகப்படுத்திய படம். டி ராஜேந்தர் கிட்டத்தட்ட கதாநாயகனாக நடித்த முதல் படம். இப்படத்தில் காதல் தோல்வியில் டிஆர் பாடும் காம்பு, பூ உவமையை விக்ரமன் தன் பூவே உனக்காக படத்துக்கு சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார். என்னாசை மைதிலியே பாடல் சிம்பு யுவன் கூட்டனியால் பின்னர் மன்மதனுக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டது.
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்படத்தின் இயக்குனர் வி அழகப்பன். இவர்கள் இந்தப் படத்திற்க்காக கதை விவாதம் செய்து வந்த அலுவலகம் பாரதிராஜாவின் வீட்டிற்க்கு எதிரில் அமைந்திருந்தது. அந்த அலுவகத்திற்க்கு வந்து போய்க் கொண்டிருந்த ராமராஜனை பாரதிராஜா கவனித்து வந்திருந்தார். ஒருமுறை அழகப்பன் பாரதிராஜவிடம் பேசும்போது தன் கதையைச் சொல்லி நாயகன் கிடைக்கவில்லை என்க, ஏன் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டு ஒரு ஆள் வந்து போறாரே அவர் இந்த கதைக்கு சரியாயிருப்பார் என்று சொல்ல அப்படி கதாநாயகனானவர்தான் ராமராஜன்.
ரஜினிகாந்த்
இந்த ஆண்டு ரஜினிக்கு சொல்லிக்கொள்ளும் படியான ஆண்டாக அமையவில்லை. நான் அடிமை இல்லை,மிஸ்டர் பாரத், விடுதலை, மாவீரன் என எல்லாப் படங்களுமே இந்தி ரீமேக். எதுவும் பெரிய வெற்றி பெறவில்லை. மிஸ்டர் பாரத்,விடுதலை ஆகியவை முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.
கமல்ஹாசன்
ஸ்ரீதர் இயக்கத்தில் பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த நானும் ஒரு தொழிலாளி, ராஜசேகர் இயக்கத்தில் ஒரு கோடியில் கண்ட கனவான விக்ரம் ஆகியவை தோல்வி அடைந்தன. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான புன்னகை மன்னன் மட்டும் வெற்றி பெற்று கமலை காப்பாற்றியது. இந்த படத்தின் இசையில் ரகுமானும் பங்கு பெற்றிருந்தார். (கமல் ரேவதி ஆடும் மியூசிகல் பிட்). அடுத்த அபூர்வசகோதரர்களில் போட்ட குள்ள வேடத்துக்கு இதில் ஒரு ஒத்திகையும் பார்த்திருப்பார்.
விஜயகாந்த்
இந்த ஆண்டு விஜயகாந்துக்கு நல்ல அறுவடை. திரைப்பட கல்லூரி மாணவர்களின் தயாரிப்பு,இயக்கத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்த ஊமைவிழிகள் நன்கு பேசப்பட்டது. ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் பாடகராக அம்மன் கோவில் கிழக்காலே, எட்டுகுழந்தைகளுக்கு அப்பாவாக தழுவாத கைகள், ஆர் சி சக்தி இயக்கத்தில் கேமராமேனாக மனக்கணக்கு (இதில் இயக்குநராக கமல் கௌரவ வேடம்). சங்கிலி முருகன் தயாரிப்பில் கரிமேடு கருவாயன் என பலதரப் பட்ட வேடங்கள், வெற்றிகள்.
கார்த்திக்
மணிரத்னம் இயக்கத்தில் மௌனராகம், ராதாரவியுடன் இணைந்து நடித்த நட்பு ஆகியவை கார்த்திக்குக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்தன. தர்மபத்தினி என்ற படத்திலும் நடித்தார்.
சத்யராஜ்
சத்யராஜுக்கும் இந்த ஆண்டு ஏற்றம் தந்த ஆண்டு. மணிவண்னன் இயக்கத்தில் முதல் வசந்தம், விடிஞ்சா கல்யாணம் ஆகிய படங்களில் நல்ல வேடம். பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள், கலைஞர் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள், பாலு ஆனந்த்தின் ரசிகன் ஒரு ரசிகை (ஏழிசை கீதமே), மந்திரப்புன்னகை என வில்லனில் இருந்து கதை நாயகனாக பின்னர் கதானாயகனாக பிரமோஷன்.
பிரபு
இவரது அண்ணன் ராம்குமார் இவர் நாயகனாக நடித்த அறுவடை நாள் படம் மூலம் இந்த ஆண்டு அறிமுகமானார். பாலைவன ரோஜாக்களில் இவர் நடிப்பு பேசப்பட்டது.
மோகன்
உயிரே உனக்காக, மெல்லத் திறந்தது கதவு போன்ற பாடல்,நகைச்சுவையால் வெற்றியடைந்த படங்களில் நடித்தார்.
இந்த ஆண்டுக்கு பின்னரே சூப்பர் செவன் என்னும் சொல் வினியோகஸ்தர்களிடம் புழக்கத்துக்கு வந்தது. அதாவது வணிக மதிப்புள்ள ஏழு கதாநாயகர்கள். இவர்களின் பட விற்பனையில் ஏதும் பிரச்சினை இருக்காது. இதில் அடுத்த ஆண்டிலேயே மோகன் போய் ராமராஜன் வந்தார். பின்னர் அந்த இடத்துக்கு சரத்குமார் வந்தார். பிரபுதேவா,அர்விந்த் சுவாமி ஆகியோரும் உள்ளே வந்து பின்னர் விரைவில் வெளியேறினர். சத்யராஜ்,கார்த்திக்,பிரபுவும் சென்றுவிட விஜய்,அஜீத்,விக்ரம், சூர்யா,விஷால் வந்தனர். இப்போது விஜயகாந்த்,சரத்குமாரும் இந்த லிஸ்டில் இல்லை. கமலும் ரஜினியும் மட்டும் அதில் இருந்து இறங்காமல் இருக்கிறார்கள். தனுஷ்,சிம்பு,விஷால் ஆகியோர் இப்போது அந்த ஏழாவது இடத்துக்கான போட்டியில் உள்ளார்கள்.
இந்த (1986) கால கட்டத்தில் இரண்டு வகையான பட்ஜெட்டும் (நல்ல மற்றும் குறைந்த), நான்கு வகையான பட ஓட்டங்களும் இருந்தன.
100 நாள் மற்றும் அதற்க்கும் மேல்
50 நாள்
நான்கு வாரம்
தோல்விப் படம்
நல்ல பட்ஜெட் படம் 50 நாள் ஓடினாலே லாபம். நாலு வாரம் ஓடினால் தலை தப்பிவிடும். லோ பட்ஜெட் படம் 50 நாள் ஓடினாலே நல்ல லாபம் கிடைக்கும். முதல் வசந்தம்.விடிஞ்சா கல்யாணம் போன்ற படங்கள் 50 நாள் ஓடினாலே வெற்றி பெற்றவையாக கருதப்பட்டன. இப்போதோ வெற்றிப் படம் அல்லது தோல்விப்படம் என்ற இரண்டே கேட்டகிரிதான் உள்ளன. கார்பொரேட் கம்பெனிகள் எல்லாவகை படங்களுக்கும் ஒரே மாதிரி திட்டமிடுவதால் (ஓவர் ஹெட், விளம்பரம் மாதிரி) அவற்றுக்கு ஏற்ப லாபம் கிடைப்பதில்லை.
33 comments:
//ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் பாடகராக அம்மன் கோவில்//
விஜயகாந்த படவரிசையில் மிக குறிப்பிட்த்தக்கதொரு தனி இடம் இந்த படத்துக்கு உண்டு!
திரைப்பட அடிமைகளில், இத்திரைப்பட ஜோடியை பார்த்து கண்வைக்காத ஆட்களே இல்லை! :)
பாடல்களும் கலக்கல்!
எனக்கு நொம்ப்ப புச்ச படம்!
//ஏன் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டு ஒரு ஆள் வந்து போறாரே அவர் இந்த கதைக்கு சரியாயிருப்பார்//
முரளி எங்கேயிருந்து இந்த செய்திகளெல்லாம் கலக்ட் பண்றீங்க.
ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு.தொடர்ந்து கலக்குங்க.
ஆயில்யன், நாடோடி இலக்கியன் தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிகள்
நல்ல அலசல் பதிவு. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
கமலின் விக்ரம் அப்படி ஒன்றும் பெரிய தோல்வி படமல்ல முரளி. இதை கமல் கல்கி பேட்டியின் போதே சொல்லியிருந்தார். என்ன்வென்றால்.. படம் ரிலீஸ் ஆகி மூன்று வாரங்களுக்குள் மூன்று கை மாறி விற்றிருக்கிறார்கள். அப்படியென்றால் மேல் லாபம், மேல் லாபம் , மேல் லாபம் என்று வாங்கிய முதல் ஆட்களூக்கு லாபம் தானே என்று.. எனவே விக்ரம் தோல்விபடமில்லை என்பது என் கருத்துமட்டுமல்ல. அதை ஒரு ஏரியாவில் விநியோகித்தவர் எனக்கு தெரிந்தவர் என்பதால் சொல்கிறேன்.
//டி ராஜேந்தர் கிட்டத்தட்ட கதாநாயகனாக நடித்த முதல் படம்//
யாருடா அடிச்சா..?
எவண்டா அடிச்சான்..?
என் பேரைச் சொல்லியுமாடா அடிச்சான்...?
என்று சொல்லிக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வருவாரே... தூய வெள்ளை பேண்ட் சட்டையுடன், கையில் சங்கிலியுடன்..
இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்தமாதிரி ஓப்பனிங் உலகில் எந்த ஹீரோவுக்கும் கிடைத்திருக்காது. அந்த ஒரு காட்சியை வைத்துக் கொண்டே 50வருடங்கள் ஓட்டலாம்.
//அந்த ஏழாவது இடத்துக்கான போட்டியில் உள்ளார்கள்.//
வடிவேலுவும் இருக்கிறாராமே....
//இந்த படத்தின் இசையில் ரகுமானும் பங்கு பெற்றிருந்தார்//
உண்மை என்னவென்றால் அதற்கு முன்னரிருந்தே தளபதி வரை இளையராஜாவின் இசைகோர்ப்பில் ரஹ்மானின் பங்கு இருக்கிறது
--
எஸ்.ஏ.ராஜ்குமாரிடமும் ரஹ்மான் பணியாற்றியுள்ளார்
--
எப்படி முதன் முதலில் MIDI மூலம் இசையமைக்கப்பட்டது புன்னகை மன்னனின் தீம் இசையோ அதே போல் முதலில் தானியங்கு தாளம் உபயோகித்ததும் ரஹ்மான் தான். எஸ்.ஏ.ராஜ்குமார் படத்தில்.
எந்த படம் என்று ஞாபகம் இல்லை
(சின்ன பூவே மெல்ல பேசு இசை யார் என்று தெரியுமா)
உங்கள் வலைப்பதிவு மிக அருமை, சினிமா பற்றிய அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டேன், மிகவும் நன்றாக இருக்கிறது, தங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றி
//கரிமேடு கருவாயன்// Thiyagarajan??
"எம்ஜியார் ஆட்சி பற்றிய விமர்சனத்தை மறைமுகமாக வைத்தது"
- மறைமுகமாக அல்ல நேரடியாகவே
"டிஆர் பாடும் காம்பு, பூ உவமையை விக்ரமன் தன் பூவே உனக்காக படத்துக்கு சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார்"
- கிட்டதட்ட இதே உவமையை நெஞ்சில் ஒரு ஆலயம் எனும் படத்தில் சொன்னது நீ தானா எனும் பாடலில் (கதைக்கு பொருந்தாமல் தவறாக) கண்ணதாசன் பயன்படுத்தியது.
(ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா என்ற வரிகளை தான் சொல்கிறேன்)
"என்று சொல்லிக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வருவாரே... தூய வெள்ளை பேண்ட் சட்டையுடன், கையில் சங்கிலியுடன்.."
- அன்பு சுரேஷ், நீங்கள் சொல்லும் இந்த காட்சி மைதிலி என்னை காதலி படத்தில் அல்ல, இந்த காட்சி உயிருள்ளவரை உஷா எனும் படத்தில் வருவது
\\//கரிமேடு கருவாயன்// Thiyagarajan??\\
தியாகராஜன் - மலையூர் மம்பட்டியான்,
விஜயகாந்த்- கரிமேடு கருவாயன்.
கடையம் ஆனந்த் தங்கள் வருகைக்கு நன்றி
சங்கர் சார், தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சுரேஷ் - நம்ம நாகூர் இஸ்மாயில் கமெண்டில் சரியான படத்தை சொல்லிவிட்டார்.
ராம்குமார் தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிகள்
நாகூர் இஸ்மாயில், தங்கள் வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றிகள்
புருனோ
சின்ன் பூவே மெல்ல பேசு நம்ம எஸ் ஏ ராஜ்குமார் தான். அதில ரஹ்மானின் பங்கு ஏதும் இருக்கிறதா?
// Cable Sankar said...
கமலின் விக்ரம் அப்படி ஒன்றும் பெரிய தோல்வி படமல்//
ஆனால் சுஜாதா இதை ஒரு தோல்விப் படமென்றே குறிப்பிட்டு இருக்கிறார்.. அந்த நாவலைப் படித்த பின் எனக்கு ஒரு சந்தேகம்.. இது படமாக்க வேண்டுமென்ற எண்ணத்துடனே எழுதப்பட்ட நாவலா ,அல்லது நாவலை அப்படியே மாற்றாமல் படமாக்கினார்களா?
//
என வில்லனில் இருந்து கதை நாயகனாக பின்னர் கதானாயகனாக பிரமோஷன்.
//
நச்
அம்மன் கோவில் கிழக்காலே விஜயகாந்தின் மாஸ்டர் பீஸ். இந்தப் படத்தின் ஷூட்டிங் காஞ்சிபுரத்தில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
//மிஸ்டர் பாரத்,விடுதலை ஆகியவை முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.
//
என்னங்க இப்படி சொல்லீட்டீங்க, மிஸ்டர் பாரத் தமிழ் நாட்டில் பரவலாக ஓடி குறிப்பாக பி ஆண்ட் சியில் நல்ல வசூல் பெற்று தந்த வெற்றி படம்னு தான் நான் கேள்வி பட்டிருக்கிறேன்.
//அந்த அலுவகத்திற்க்கு வந்து போய்க் கொண்டிருந்த ராமராஜனை பாரதிராஜா கவனித்து வந்திருந்தார்.//
அழகப்பன்? கவனித்து வந்திருந்தார்.
அந்த புன்னகை மன்னன் Theme music AR ரெஹ்மான் பண்ணியதா ரொம்ப ஆச்சர்யமான தகவல். இந்த செய்தியை படிக்கும் போதே அந்த Music காதுக்குள் கேட்கிறது.
\\இது படமாக்க வேண்டுமென்ற எண்ணத்துடனே எழுதப்பட்ட நாவலா ,அல்லது நாவலை அப்படியே மாற்றாமல் படமாக்கினார்களா\\
கார்க்கி, அது படமாக்கப் படுவதற்காகாவே எழுதப்பட்ட நாவல். குமுதத்தில் தொடராகவும் வந்தது. அந்த நாவலை திரையில் ரீ புரொடுயுஸ் பண்ணுவதில் இருந்த சிக்கல்களை பெரிதும் பேசிய புத்தகமே கமல் எழுதிய ஒரு கோடி ரூபாய் கனவு என்னும் புத்தகம்.
சுஜாதா இது போல மணிரத்னத்துக்கு கன்னத்தில் முத்தமிட்டாலுக்கும் ஒரு நாவல் எழுதி கொடுத்தார்.
//சுஜாதா இது போல மணிரத்னத்துக்கு கன்னத்தில் முத்தமிட்டாலுக்கும் ஒரு நாவல் எழுதி கொடுத்தா//
அது நாவலில்லை.. சிறுகதை. விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலலிலும் படத்திலும் வரும் சில காட்சிகள் அந்த சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டவை. வெளியேற்றம் என்ற அந்த சிறுகதை சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தில் பிண்ணிணைப்பாக கொடுக்கப் பட்டிருக்கிறது. படத்தின் மையக்கருவிற்கும் அந்த சிறுகதைக்கும் சம்பந்தமில்லை.
வழக்கம் போல நல்ல தொகுப்பு....
///- கிட்டதட்ட இதே உவமையை நெஞ்சில் ஒரு ஆலயம் எனும் படத்தில் சொன்னது நீ தானா எனும் பாடலில் (கதைக்கு பொருந்தாமல் தவறாக) கண்ணதாசன் பயன்படுத்தியது.
(ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா என்ற வரிகளை தான் சொல்கிறேன்)
அந்த கதைக்கு பொருத்தமான வரிகள் ஐயா.....
கதைப்படி முத்துராமன் இறக்கப் போவதால் தேவிகாவை கல்யாண்குமாருக்கு மணமுடிக்க நினைப்பார் முத்துராமன்....அந்த இடத்தில் அதை தெரிந்த தேவிகா பாடும் பாடல் இது.......
சுசீலாவின் குரலில் நான் கேட்கும் போதெல்லாம் கலங்கும் பாடல்......
பாராட்டுக்கள்...
சிறந்த அலசல் பதிவு...
நான்கு நாட்களாக இருக்கும் காய்ச்சல் இந்த பதிவை பார்த்தவுடன் போயேபோச்சு.. இட்ஸ் கான்..
நல்ல பதிவு முரளி.. மிக நுணுக்கமான மேட்டர்களையும் அந்த வருடத்தின் அலசலும் அருமை..
கவர்ந்த பதிவு..களில் இதுவும் ஒன்று..
தொடருங்கள்...
அதனால் தான் சொல்றேன் விஜய்காந்த் தான் அடுத்த முதல்வர்!!!
//ஒரு கோடி ரூபாய் கனவு
நல்ல பதிவு... கமல் எழுதிய இந்த புத்தகம் பற்றி ஏதும் தகவல் தெரியுமா??
பதிவும் அருமை...
பின்னூட்டங்களும் அருமை...
பின்னூட்டங்களை படித்தாலே அது தனி பதிவு போல இருக்கிறது....
//13 லட்சத்தில் (பிரிண்டிங்,விளம்பரம் உட்பட) எடுக்கப்பட்ட படம்//
அவ்வ்வ்வ்
எனக்கு விக்ரம் ரொம்ப பிடித்த படம்.. இப்ப கூட டிவி ல கண்ட படத்தையும் திரும்ப திரும்ப போடுறாங்க.. இந்த படத்தை போட மாட்டேங்குறாங்க. இதுல கமல் சத்யராஜ் கலக்கி இருப்பாங்க ..ஏஞ்சோடி! மீண்டும் மீண்டும் வா மற்றும் வனிதாமணி! போன்ற பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஏஞ்சோடி! பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சளைக்காது..
//(கமல் ரேவதி ஆடும் மியூசிகல் பிட்).//
எப்பக் கேட்டாலும் மனசுக்குள் பட்டாம் பூச்சிதான்
முதல் வசந்தம் படத்தில் சத்யராஜின் நடிப்பு படு அமர்க்களமா இருக்கும்...
என்னது மிஸ்டர் பாரத்,விக்ரம் தோல்வி படங்களா??? அவ்வ்
இந்த கலெக்ஷன்சை எல்லாம் பாத்தா கடுப்பா இருக்கு. இப்போல்லாம் வருஷத்துக்கு அஞ்சு ஆறு படம்கூட கலகலன்னு வர்றதில்லை. படங்கள் நல்லா இல்லன்னாக் கூட பாடல்களே போதும் போலருக்கு. supero super:):):)
அந்த புன்னகை மன்னன் Theme music AR ரெஹ்மான் பண்ணியதா ரொம்ப ஆச்சர்யமான தகவல். இந்த செய்தியை படிக்கும் போதே அந்த Music காதுக்குள் கேட்கிறது.//
பாடலை compose அண்ட் arrange பண்ணியதெல்லாம் இசைஞானி தான். அவர் கொடுத்த நோட்ஸை வசித்தது மட்டுமே ரகுமான். இது தான் நான் கேள்விப்பட்ட உண்மை. இது தெரியாமல் இப்போல்லம் எல்லோரும் புன்னகை மன்னனுக்கு இசையே ரகுமான் என்பதுபோல் திரித்துவிட தொடங்கிவிட்டார்கள்.
Post a Comment