October 15, 2010

கம்பெனி நடிகர்கள்

கம்பெனி நடிகர்கள் என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாய்ஸ் கம்பெனி முதலான நாடகக் கம்பெனி நடிகர்கள் தான். எம்ஜியார், சிவாஜி கணேசன் போன்றவர்கள் கூட இம்மாதிரி கம்பெனி நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான். நடிப்பில் அசத்தி மக்கள் மனதை வசீகரித்துவிட்டால் கம்பெனி நடிகர் என்னும் வட்டத்தில் இருந்து தப்பித்து ஸ்பெஷல் நாடக நடிகர், சினிமா நட்சத்திரம் என முன்னேறிவிடலாம்.

அதன் பின்னர் தமிழ்சினிமாவில் மார்டன் தியேட்டர்ஸ், ஜெமினி போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்து மாத சம்பளம் கொடுத்து வேலை வாங்கினார்கள்.

சில இயக்குநர்கள் தாங்கள் அறிமுகப்படுத்தும் நாயக/நாயகியரை சில படங்கள் வரை தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என கேட்டுக் கொள்வதும்/நிர்பந்திப்பதும் உண்டு. பாலசந்தர் நடிகர்களிடத்திலும், பாரதிராஜா நடிகைகள் இடத்திலும் இது போல ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுண்டு. எனவேதான் பாலசந்தர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், விவேக் என பலரிடம் தொடர்ந்து வேலை வாங்க முடிந்தது (விதிவிலக்காக இதில் சரிதாவையும் சேர்த்துக் கொள்ளலாம்) . பாரதிராஜாவோ ரேவதி,ராதிகா,ராதா போன்றோரை தொடர்ந்து உபயோகப் படுத்த முடிந்தது. (விதிவிலக்காக ராஜா வை சேர்த்துக் கொள்ளலாம்).

மணிரத்னம், பாலா ஆகியோரிடத்திலும் இந்தத் தொடர்ச்சியைப் பார்க்கலாம். மணிரத்னம் அரவிந்த்சாமி மற்றும் மாதவனை தொடர்ந்து பயன்படுத்தினார். பாலாவும் விக்ரம்,சூர்யா மற்றும் ஆர்யாவிடம் உரிமை எடுத்துக் கொண்டது உண்டு.

இவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள். ஆனால் நடிகர்கள் என்னும் நிலையில் இருந்து தொடர்ந்து ஒரு கம்பெனியின் எல்லாப் படங்களிலும் தலை காட்டுபவர்களை கம்பெனி நடிகர்கள் என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள். அப்படி அழைக்கப் படும் கம்பெனி நடிகர்களைப் பற்றி பார்ப்பதே இந்தப் பதிவு.


முதலில் கவிதாலயா நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இந்நிறுவனத்திற்க்கென்றே பிரத்யேக நடிகர்கள் உண்டு. அவர்களில் முக்கியமானவர் கவிதாலயா கிருஷ்ணன். எம் டெக் பட்டதாரியான (அந்தக் காலத்திலேயே!) இவர் கவிதாலயாவின் எல்லாப் படங்களிலும் இருப்பார், அது யார் நடித்ததாக இருந்தாலும் சரி, யார் இயக்கியதாக இருந்தாலும் சரி. மற்ற கம்பெனிப் படங்களில் இவர் அரிதாகவே தலை காட்டுவார். இதற்கெல்லாம் உச்சமாக இவர் கவிதாலயாவின் துணை நிறுவனமான மின்பிம்பங்களின் அனைத்து சீரியல்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜாவை விட ராஜாவின் மேல் விசுவாசம் என்பதற்கு இவர்தான் உதாரணம்.

நாசர், சார்லி போன்றவர்களும் கவிதாலயாவின் கம்பெனி நடிகர்களாக இருந்தாலும் அதை விட்டு நாசர் முழு அளவிலும், சார்லி பகுதியாகவும் தங்கள் திறமையினால் தனித்து நின்றுவிட்டார்கள்.

அடுத்ததாக சூப்பர் குட் பிலிம்ஸ். இவர்கள் குறுகிய காலத்தில் ஐம்பது படங்களை தயாரித்தவர்கள். பெரும்பாலும் லோ பட்ஜெட் படங்கள். அதனால் தான் அலுவலக நிர்வாகிகள், உதவி இயக்குநர்கள் ஆகியோரை தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வார்கள். சிங்கமுத்து, லட்சுமணன் போன்ற நடிகர்கள் இவர்களின் எல்லாப் படத்திலும் சிறு சிறு கேரக்டர்களின் வருவார்கள்.

விசுவின் படங்களில் மறைந்த கிஷ்மு (வேறு வழியில்லை, தம்பி), திலீப் போன்றோரை தொடர்ந்து பார்க்கலாம்.

ராஜ்கமல் பிலிம்ஸ்ஸை பொறுத்தவரை சந்தான பாரதி,அஜய் ரத்னம் பல படங்களில் தலை காட்டினார்கள். அதுபோல் பி வாசுவின் படங்களில் பாண்டு, மார்க்கண்டேயன் போன்றோரும், தற்போது கே எஸ் ரவிக்குமாரின் படங்களில் அனுமோகன், மனோபாலா போன்றோரையும் தொடர்ந்து பார்க்கலாம்.

இம்மாதிரியான கம்பெனி நடிகர்களின் தொடர் வாய்ப்புக்கு காரணம் என்ன?

1. முதல் காரணம் செண்டிமெண்ட். ஒரு வெற்றிப்படத்தில் ஒருவர் தலை காட்டிவிட்டால் அவர் இதிலும் இருக்கட்டுமே என்று கம்பெனி ஆட்கள் அனைவருமே நினைப்பார்கள். எடுத்துக்காட்டாக நாகராஜ சோழன் என்னும் நடிகர் ஒரு கால கட்டத்தில் நடித்த படங்கள் எல்லாமே நூறு நாட்கள். அவரை ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க பல இயக்குநர்கள் விரும்பினார்கள்.

2. ஒரு நிறுவனத்தில் இருக்கும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்பவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கவே தலைமை விரும்பும். அதுபோல் படப்பிடிப்பில், வணிகத்தில் என ஆர்வம் காட்டும் நபர்களை தொடர்ந்து சினிமாவில் உபயோகப்படுத்த நினைப்பார்கள்.

3. சில இயக்குநர்களுக்கு தங்களுக்கு கதை விவாதத்தில் உதவுபவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிடும். அதனாலேயே சில இயக்குநர்களின் படங்களில் சிலர் தொடர்ந்து தலை காட்டுவது உண்டு.

4. சில நடிகர்கள் வலுக்கட்டாயமாக சென்று தொடர்ந்து வாய்ப்புக் கேட்பதும் உண்டு. நாமளே இவனுக்கு வாய்ப்புத் தராட்டி யார் தரப்போறா? என்ற அனுதாபத்தில் அவர்களும் வாய்ப்பளிப்பதுண்டு. எங்கள் ஊரில் இருந்த துணை நடிகர் ஒருவர் தொடர்ந்து சங்கிலி முருகன் படங்களில் ஒரு சீனிலாவது நடித்து விடுவார். அதற்குக் காரணம் பட பூஜையன்றே அட்டெண்டென்ஸ் கொடுத்து விடுவதுதான்.

5. சில இயக்குநர்களுக்கு ஒன் டேக் ஆர்டிஸ்ட் எனப்படும் தப்புச் செய்யாமல் நடிக்கும் நடிகர்களைப் பிடிக்கும் நேர/பண விரயத்தைத் தடுக்க அவர்களை அழைத்து இந்த கேரக்டரைச் செய் என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால் இப்படி கம்பெனி ஆர்டிஸ்ட் என அழைக்கப் படுவதில் அவர்களுக்கு உண்மையிலே உவப்பாக இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒவ்வொருவரும் திரை உலகத்தில் நட்சத்திரமாக மின்ன வேண்டும் என்ற பெருங்கனவுடனே வந்தவர்களாய்த்தான் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கனவு கலைந்து கிடைத்த இடத்தில் அதிருப்தியுடந்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

25 comments:

நர்சிம் said...

welcome back..
//பாரதிராஜா நடிகைகள் இடத்திலும் இது போல ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுண்டு. //

raittu.

//அவர்களில் முக்கியமானவர் கவிதாலயா கிருஷ்ணன். எம் டெக் பட்டதாரியான (அந்தக் காலத்திலேயே!) இவர் கவிதாலயாவின் எல்லாப் படங்களிலும் இருப்பார், அது யார் நடித்ததாக இருந்தாலும் சரி, யார் இயக்கியதாக இருந்தாலும் சரி//

கரெக்ட்.

//விசுவின் படங்களில் மறைந்த கிஷ்மு (வேறு வழியில்லை, தம்பி),//

கிஷ்மு இறந்த பின்னர் விசுவால் திரைக்கதையில் வெற்றிபெற முடியவில்லை, அனந்து-பாலச்சந்தர் போல.

கலக்கல் இன்ஃபோஸ்.

நன்றி

நையாண்டி நைனா said...

Ok.... Nice

முரளிகண்ணன் said...

நன்றி தலைவரே. புரபைல் படம் நச்சென்றிருக்கிறது

முரளிகண்ணன் said...

நன்றி நையாண்டி நைனா

Indian said...

//மார்க்கண்டேயன்//

maarthaandan/m?

கோபிநாத் said...

முதல்ல ஒரு வாங்க அண்ணே...;))

கலக்கல் பதிவு ;)

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாங்க நண்பா முரளி.. எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சி..

அனைத்தும் புதிய அறிந்திராத தகவல்கள்.. கலக்குங்க முரளி.. பகிர்வுக்கு நன்றி..

IKrishs said...
This comment has been removed by the author.
IKrishs said...

Welcome back!

ரகுமான் ,ரமேஷ் அரவிந்த் ,பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் K.பாலச்சந்தர் காக சீரியல் என்றாலும் கூட நடித்தவர்கள் என்பதும் நினைவுக்கு வருகிறது . .. (கையளவு மனசு ,காதல் பகடை ,சஹானா )
பாரதி ராஜாவுக்காக ராதிகா பல படங்களில் நாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார் (ராதா - முதல் மரியாதை,ரஞ்சனி-கடலோர கவிதைகள்,
ராஜ ஸ்ரீ - கருத்தம்மா )
இந்த combination கள் கூட நினைவுக்கு வந்தது ...
பாலசந்தர் - சவுகார் ஜானகி ,ரேணுகா ,கீதா

K.S ரவிக்குமார் - சுஜாதா , R.சுந்தர்ராஜன் ,பாண்டு

ஷங்கர் - ஓமக்குச்சி நரசிம்மன்

15/10/10 21:51

கார்க்கிபவா said...

எப்படித்தான் யோசிப்பிஙக்ளோ!!!

இனியா said...

welcome back mu.ka

புருனோ Bruno said...

வழக்கம் போல் கலக்கல்

shortfilmindia.com said...

ம்.. ரைட்டு.. ஸ்ட்டார்ட் மிசிக்
கேபிள் சங்கர்

உண்மைத்தமிழன் said...

அன்பின் பேராசிரியரே நலமா..?

பாரதிராஜா தான் அறிமுகப்படுத்திய ஹீரோயின்களிடம் அந்தப் படம் முடிகின்ற வரையிலும் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்கிற நிபந்தனையைத்தான் போட்டிருந்தார்.

இதனால் புது ஹீரோயின் மேல் எதிர்பார்ப்பு கூடும் என்பது அவர்களது எண்ணம். அப்போதெல்லாம் படங்கள் அதிகபட்சம் 8 மாதங்களில் முடிந்துவிட்டது என்பதால் ராதிகாவுக்கும், ரதிக்கும், அருணாவுக்கும், விஜயசாந்திக்கும் பிரச்சினையில்லை.

இது போன்று முதல் பிரச்சினை துவங்கியது ரஞ்சிதாவுக்குத்தான். நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதற்குள்ளாக மலையாளத்திலும், தெலுங்கிலும் அழைப்பு மேல் அழைப்பு வந்தும் அவரால் நடிக்க முடியவில்லை. நாடோடித் தென்றல் படமும் இழுத்த காரணத்தினால் அவரும் பிரச்சினைக்குள்ளானார்..

கடைசியாக கண்களால் கைது செய் படத்தில் பிரியாமணிகூட இந்த ஒப்பந்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

கவிதாலயா நிறுவனம் இதுபோல் யாருடனும் ஒப்பந்தம் போட்டு நடிக்க வைக்க மாட்டார்கள்.

பாலசந்தர் மீது மற்றவர்கள் வைத்திருந்த குரு பாசத்தினால்தான் அவர் அழைத்தபோதெல்லாம் மற்றவர்களின் படங்களுக்கு டேக்கா கொடுத்தும், அட்ஜஸ்ட் செய்து கொண்டும் ஓடி வந்து நடித்துக் கொடுத்தார்கள் அவருடைய சீடர்கள்..!

ஆனாலும் இதே கவிதாலயாவுக்கு நம்ம சிம்ரன் அக்கா பார்த்தாலே பரவசம் படத்தில் கொடுத்த டேக்காவும், ஓடி, ஒளிந்த காட்சியும், சினேகாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஏர்போர்ட்டில் இருந்து கிட்டத்தட்ட கடத்திக் கொண்டு வந்த விஷயமும் பப்பரப்பா சீன்ஸ்..!

இதுக்குத்தான் ஒப்பந்தம் போடணும்னு சொல்றது..!

கவிதாலயா கிருஷ்ணனுக்கு பெயரிலேயே கவிதாலயா இருப்பதால் அவருக்கென்று ஒரு வேடம் நிச்சயமாக இருந்தது.. இதற்கு இன்னுமொரு காரணம்.. கடைசியாக பணம் வாங்கிக் கொள்வது எப்போதும் கிருஷ்ணன்தான். இதுபோல் எந்த இளிச்சவாயன் கிடைப்பான்..?

உண்மையில் இது மாதிரியான கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஒப்பந்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நடிகைகள்தான் என்பதுதான் சுவாரஸ்யம்.

வி.என்.ஜானகியில் இருந்து தற்போதைய சிந்துசமவெளி ஹீரோயின்வரை இந்த நிர்ப்பந்தத்தில் சிக்கித் தவித்தார்கள்..!

வடகரை வேலன் said...

நல்ல அலசல் முரளி.

நலமா?

முரளிகண்ணன் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் பின்னுட்டங்களே வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஆறுதல் தருகின்றன.

Busy said...

Welcome Back with the Good Post !!

முரளிகண்ணன் said...

thank you Busy

நளினா லாவண்யா said...

vow!!!!!

முரளிகண்ணன் said...

நன்றி நளினா லாவண்யா

butterfly Surya said...

அன்பின் முரளி, வெல்கம்.

வீட்டில் அனைவரும் நலமா..?

பதிவை படித்ததும் உங்களை பார்த்தது போன்ற அளவற்ற மகிழ்சி. அருமை. தொடருங்கள்.

Gnana Prakash said...

அருமை நண்பரே

முரளிகண்ணன் said...

நன்றி பட்டர்ஃப்ளை சூர்யா. மிக்க மகிழ்ச்சி

நன்றி ஞான பிரகாஷ். தங்களின் வருகைக்கு நன்றி.

Prasanna Rajan said...

நீங்கள் சொல்வது போல் மாதவன், அரவிந்தசாமி இருவரும் கம்பெனி நடிகர்கள் தான். அவர்கள் இருவரும் அறிமுக படுத்த பட்ட போது, முறையே ஆலயம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தாரால் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் இடப்பட்டனர்...

முரளிகண்ணன் said...

நன்றி பிரசன்னராஜன்.