இரண்டாம் முறை பார்க்கும் படியாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் கூட வராத ஆண்டு என்றால் அது 2001 தான். இது ஏ ஆர் முருகதாஸ், கௌதம் மேனம், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு அறிமுக ஆண்டாகவும், சூர்யாவுக்கு (நந்தா) இரண்டாவது அறிமுக ஆண்டாகவும் அமைந்தது. மணிரத்னத்தின் உதவி இயக்குநர் அழகம் பெருமாள் டும் டும் டும் மூலமும், ஒளிப்பதிவாளர் ஜீவா 12பி மூலமும் இந்த ஆண்டு இயக்குநர் அவதாரமெடுத்தார்கள்.
2000 ஆண்டு முழுவதும் பொறுமை காத்த விக்ரமுக்கு இந்த ஆண்டு ஆரம்பமே பெரும் அடியாக விழுந்தது. விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தின் மூலம் தேவயானியின் கணவர் விக்ரமை மண்ணுக்கு கொண்டு வந்தார். ஆனால் காசி மற்றும் தில் மூலம் விக்ரம் நாயகன் அந்தஸ்தை இந்த ஆண்டு அடைந்தார். ரமணி என்ற பெயரில் எதிரும் புதிரும் என்று வீரப்பன் கதையை எடுத்து படம் வெளி வரும் முன் விசிடியில் 50 நாட்கள் ஓட்டி சாதனை படைத்த தரணி, தில் மூலம் விக்ரமுக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை இந்த ஆண்டு கொடுத்தார்.
வானத்தைப் போல, வல்லரசுவின் வெற்றிக்குப் பின் பெரும் சக்தியாக மாறவிருந்த விஜயகாந்தை கவிழ்த்தவர்கள் வாஞ்சி நாதனும், நரசிம்மாவும். நரசிம்மாவின் இயக்குநரும், பத்திரிக்கையாளரும், வேலாயுதத்தின் ஒரிஜினலை இயக்கியருவருமான திருப்பதிசாமி படம் முடிவதற்குள் இறந்தது பெரும் சோகம். ஆண்டின் பிர்பகுதியில் வந்த தவசி விஜயகாந்த்துக்கு ஆசுவாசம் கொடுத்தது.
விஜய்க்கு வழக்கம் போல பிரண்ட்ஸ் என்ற மலையாள ரீமேக்கின் மூலம் சுமாரான வெற்றியும், பத்ரி என்ற தெலுங்கு ரீமேக்கின் மூலம் தோல்வியும் கிடைத்தது. பிரண்ட்ஸ் மூலம் தமிழுக்கு நல்ல வசனமும், காமெடி சேனல்களுக்கு வருமானமும் கிடைத்தது.
தீனாவின் மூலம் அஜீத்துக்கு தலை என்னும் பட்டப் பெயர் கிடைத்தது. சிட்டிசன் மூலம் சுமாரான தோல்வியும், பூவெல்லாம் உன் வாசம் மூலம் படு தோல்வியும் கிடைத்தது.
கமல்ஹாசன் ஆளவந்தான் என்ற படத்தைக் கொடுத்து பலரை கடனாளியாக்கினார். தவசி வெற்றிப் படம் என்று சொல்லுமளவுக்கு ஆளவந்தானின் தோல்வி அமைந்தது.
சுந்தர் சி யும் தன் பங்குக்கு உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அழகான நாட்கள் என்று மொக்கை போட்டார். மாயன் மூலம் நாசரும் நம்மை துன்புறுத்தினார். சிங்கீதம் சீனிவாசராவும் லிட்டில் ஜான் என்று பலரை அலற வைத்தார். சேரன், பாண்டவர் பூமி மூலம் குழப்பமான கருத்தை முன் வைத்தார். 60ல் வந்திருக்க வேண்டிய அண்னன் தங்கச்சி கதையை கே எஸ் ரவிகுமார் 2001ல் சமுத்திரம் என்ற பெயரில் எடுத்தார்.
மாதவன் நடித்த மின்னலே ஓரளவுக்கு பொழுது போக்கு படமாக அமைந்தது. அந்த ஆண்டுக்கான சிறந்தவைகளாக சுஜாதா கற்றதும் பெற்றதும் இல் பட்டியலிட்டதில் இந்தப் படம் இடம் பெற்றது.
கல்லூரி மாணவர்கள் கட் அடித்து காலைக்காட்சி போக வாய்ப்பாக வந்த படம் தான் சாக்லெட். மல மல என்று மும்தாஜ் ஆடியதில் அப்பட நாயகிக்கு கால் இஞ்சி ஜல்லி கூட கிடைக்கவில்லை.
குழந்தை தொழிலாளர் பிரச்சினையை வைத்து புது இயக்குநர் ஜானகி இயக்கிய குட்டி கவனிக்க வைத்த திரைப்படம்.
ரஜினி பாபாவுக்காக கடும் ஆராய்ச்சியை இந்த ஆண்டில் தான் மேற்கொண்டு இருந்தார்.
விவேக் (மின்னலே, மஜ்னு), வடிவேல் (பிரண்ட்ஸ், தவசி) மூலம் காமெடி சேனல்களுக்கு நல்ல வருமானம், மற்றும் ஹாரிஸின் நல்ல பாடல்கள் (மின்னலே, மஜ்னு, 12பி) தான் இந்த ஆண்டின் சிறப்பு என்றால் எவ்வளவு வறட்சியான ஆண்டு இது?
6 comments:
2001 எனக்கு கல்லூரியின் முதல் ஆண்டு. நீங்கள் பட்டியலிட்டு உள்ள பல படங்களை நண்பர்களோடு பார்த்தது கண் முன் நிழலாடுகிறது. நன்றி..முரளி
செல்வம், படமெல்லாம் இப்போவும் நிறைய ரிலீஸ் ஆவுது. விமர்சனம் எழுதுங்களேன்
நல்ல பகிர்வு
இந்த வருசம்தான் நிறைய படம் பார்த்து கெட்டுப் போன வருசமா இருக்கும். ஏதோ ஒரு தாயாரிப்பாளர் சும்மாதான் கூட்டிட்டு போயிருப்பாரு. என் புருசன் குழந்தை மாதிரிதான் இந்த வருசத்துலேயே செம மொக்கைப்படம்னு நினைக்கிறேன்.
2001 வருஷம் ரொம்ப மோசம் அண்ணா... எல்லாருமே தீபாவளி படங்கள நம்பி தான் இருந்தாங்க.. முக்கியமா ‘ஆளவந்தான்’. ஆனா சும்மா செம சொதப்பல்-ல எல்லாமே காலி...
கிட்டதிட்ட 2002-ல ரன் படம் வர வரைக்குமே தமிழ் படங்கள் மொக்கை, சூர மொக்கை-னு ரெண்டு பிரிவு-ல தான் வந்தது-னு நினைக்கிறேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ - விதிவிலக்கு.
விஜயோட ‘ஷாஜகான்’ படத்த விட்டுடீங்களே அண்ணா... அதுவும் மிகவும் எதிர்ப்பார்ப்போட வந்து காலியாச்சு. ஆனா பாட்டெல்லாம் நல்லா இருக்கும்.
---------------------------------
2000-லயும் விஜயோட ‘ப்ரியமானவளே’ படத்த விட்டுடீங்க. அது கொஞ்சம் நல்லா போச்சு-னு நினைக்கிறேன்.
----------------------------------
செகண்ட் ஷோ எடுக்க போறத நானும் படிச்சேன் அண்ணா... எடுத்துடுவாங்க-னு தான் தோணுது. முன்ன செகண்ட் ரிலீஸ் படத்துக்கு கூட இரவு காட்சி-ல கூட்டம் சேரும். இப்ப தான் கேபிள் டிவி, கே டிவி-னு டிவி-லயே படம் போட்டுடுறாங்களே.. அப்புறம் எங்க தியேட்டருக்கு போறது :(
---------------------------------
அண்ணன அப்பப்ப நட்சத்திர பதிவரா ஆக்குங்கப்பா... அப்ப தான் பதிவு போடுறாரு :)
அடிக்கடி எழுதுங்கண்ணா.. :)
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி இளா, என் புருசன் குழந்தை மாதிரி கூட காமெடி இருந்தனால ரொம்ப மொக்கை இல்லை. ஆனா சில படங்கள் அப்பப்பா.
நல்ல வருஷத்துல யாரும் உங்களை படத்துக்கு கூட்டிட்டுப் போகாதது வருத்தமே
நன்றி கனகு. 2000ல பிரியமானவளே படத்தை ரீமேக் லிஸ்ட்ல சேர்க்கணும்னு நினைச்சு விட்டுட்டேன். இப்போ சேர்த்துடறேன். நன்றி
Post a Comment