மோசர்பியர் ஷோ ரூமில் கிட்டத்தட்ட எல்லா தமிழ்படங்களின் சி டி யும் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்ற நான் நீண்ட நேரமாக துழாவிக் கொண்டேயிருந்ததைப் பார்த்த விற்பனை உதவியாளர் அருகில் வந்து ”என்ன படம் சார் வேண்டும்?” எனக் கேட்டார். “மங்கம்மா சபதம்” என்ற பதிலைக் கேட்ட அடுத்த நொடியிலேயே அதை எடுத்துக் கொடுத்தார்.
சிரித்தபடியே, இந்த பழைய சபதம் இல்லைங்க, கமல்ஹாசன் நடித்த படம் வேண்டும் என்றேன்.
“இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி பஜார்ல வேலை பார்த்தேன். 15 வருஷத்துல யாருமே இந்தப் படத்தை எங்கிட்ட கேட்டதில்லை” என்றார்.
இப்படி கமலின் மசாலா படங்களிலேயே மட்டமான மசாலாவைகூட நான்கைந்து முறை பார்த்த ரசிகன் நான். பார்த்தாலே பரவசம் படத்தை பிறழ் மனநிலை உள்ளவர்களால் மட்டுமே இரண்டாவது முறை பார்க்க முடியும். அதைக்கூட கமலின் சிறப்புத் தோற்றத்துக்காக மூன்று முறை பார்த்தவன் நான்.
ஆனால் என்ன சொல்லுங்கள், இந்த விஷயத்தில் ரஜினி ரசிகர்களை மட்டும் அடித்துக் கொள்ளவே முடியாது. நாட்டுக் கொரு நல்லவன் படத்தை நான்கு முறை தொடர்ந்து பார்த்தவர்கள், ரா ஒன்னில் ரஜினி இருக்கிறார் என்றதுமே முதல் காட்சிக்கே ஓடிப் போய் நரகாசுரனின் ஆதரவாளராக மாறியவர்கள் என அவர்களின் டிராக் ரெக்கார்ட் அமோகம்.
இப்போது கூட பாருங்கள், கோச்சடையான் என்ற பெயரை அதிகார பூர்வமாக ரஜினி ஓகே செய்தாரா என்பது கூட தெரியாது. ஆனால் மதுரை கோச்சடைப் பகுதியில் வாழும் ரஜினி ரசிகர்கள் ஆடித் தீர்த்து விட்டார்கள்.
விருமாண்டி படம் வெளியான அன்று, வெளி மாநில தலைநகரம் ஒன்றில் இருந்தேன். படம் பார்க்க வழி இல்லாததால் அன்று இரவு இணையத்தில் ஏதாவது விமர்சனம் வந்திருக்கிறதா என தேடிய போது, தமிழில் விமர்சனம் வெளியாயிருந்ததைப் பார்த்தே இணைய தமிழ் உலகத்துக்கு வந்தேன்.
முதலில் நான் அறிந்து கொண்டது, ரஜினியின் ஆதரவுப்படை இங்கே மிக அதிகம் என்பது. இரண்டாவது கமலைப் பற்றி தொடர்ந்து எழுப்பப்பட்ட காப்பியடித்தல், எதார்த்தமின்மை (திரையுலகிலும், பொது வெளியிலும்] சார்ந்த குற்றச்சாட்டுகள்.
ஹேராம், அன்பே சிவம் படங்களைப் பார்த்த பின்னர், முன்னை விட அதிகமாக என்னுள் விஸ்வரூபம் எடுத்திருந்த கமலின் பிம்பம் லேசாக கலையத் தொடங்குவதைப் போல எனக்குத் தோன்றியது.
தொடர்ந்து அது போலவே கசப்பான உணர்வுகள். தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் தமிழ்மணம் முழுப்பக்கத்திலும் அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளே நிறைந்திருந்தன. அதில் பாதிக்கும் மேலே படத்தின் உள்ளடக்கத்தை விமர்சித்தே இருந்தன. உன்னைப் போல் ஒருவனுக்கு வந்த விமர்சனங்களும் அப்படியே.
இந்த இடைப்பட்ட காலத்தில் பாலா, அமீர், சசிகுமார், வெற்றி மாறன், செல்வராகவன், ஜனநாதன், சீனு ராமசாமி, சற்குணம் என பல புதிய இயக்குநர்களின் படங்கள் வெகுவாக சிலாகிக்கப்பட்டன. என்னடா இது புதிதாக வந்தவர்கள் எல்லாம் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்க இவர் ஒன்று, இரண்டுக்கே தடவிக் கொண்டிருக்கிறாரே என்று கோபம் கூட வந்தது.
இந்த ஆறு ஏழு மாதங்களில் மீண்டும் ஒரு மன மாற்றம். பாலா, செல்வராகவன்,சசிகுமார் மற்றும் சற்குணம் ஆகியோரின் சமீபத்திய படங்கள் ஒரு செய்தியைச் சொன்னது. இரண்டு, மூன்று நல்ல படங்களை மட்டுமே இவர்களால் கொடுக்க முடியும். அதற்கு மேல் எல்லாமே ரீமிக்ஸ் தான் செய்ய முடியும் என்பதுதான் அது.
இந்த அளவுகோலில் கமலை நிறுத்திப் பார்த்தால் கமலின் மீது வந்த கோபம் குறைந்தது.
கமல் 30 வருடங்களுக்கும் மேலாக துறையின் ரசனை மாற்றங்களை சமாளித்து தன் இருப்பை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். மாற்று முயற்சிகளை யாருமே யோசிக்காத சூழ்நிலையில் [ 80-99 ஆண்டுகளில், முக்கியமாக நடிகர்களில்] அதை முன்னெடுத்துச் சென்றது கமல் தானே.
அவர் உலக தரத்தை நோக்கி தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் ராஜபாட்டையை போடாமல் இருந்திருக்கலாம். வழியே புலப்படாத காட்டில் ஒற்றையடிப் பாதையை போட்டவர் அவர்தான். இப்போது கட்டமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாதைக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.
தமிழ்சினிமாவில் தரமான ஐந்து படங்களைக் கொடுத்தவர்கள் என்று எண்ணினால் எத்தனை பேர் அந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரியாது. ஆனால் கமலின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும்.
கமல் அவர்களே, உங்களிடம் இருந்து அன்பே சிவத்திற்க்கு பின்னால் எதுவும் தமிழுக்கு கிடைக்கவில்லை. விஸ்வரூபம் பற்றிய செய்திகள் நம்பிக்கை தரும்படி இருந்தன. ஆனால் இப்போதோ, கதக் எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்வதாக வந்த செய்திகள் கத்தக் என்று நெஞ்சில் குத்தியதைப் போல் இருக்கிறது. மீண்டும் ஒரு ஆளவந்தானை சந்திக்கும் திறன் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் வயதாகி விட்டது. குடும்பம் குட்டி இருக்கிறது.
ஒரு நல்ல படம் குடு தலைவா, இப்போது சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் என் குழந்தைகளிடம் பெருமையாக நான் உன்னை அறிமுகம் செய்து வைக்க.
14 comments:
நல்ல அலசல்.
எனக்கும் கமலை ஒரு காலத்தில் பிடித்தது. அவர் டைரக்ஷன் செய்கிறார் என்றால் பயமாய் தான் இருக்கு
\\அவர் உலக தரத்தை நோக்கி தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் ராஜபாட்டையை போடாமல் இருந்திருக்கலாம். வழியே புலப்படாத காட்டில் ஒற்றையடிப் பாதையை போட்டவர் அவர்தான். இப்போது கட்டமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாதைக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.\\
சூப்பரு ;-))
எங்களுக்கும் வயதாகி விட்டது. குடும்பம் குட்டி இருக்கிறது.
ஒரு நல்ல படம் குடு தலைவா, இப்போது சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் என் குழந்தைகளிடம் பெருமையாக நான் உன்னை அறிமுகம் செய்து வைக்க.
//
வரிக்கு வரி ரிப்பீட்டு.
நன்றி மோகன் குமார்
நன்றி கோபிநாத்
நன்றி அப்துல்லா அண்ணே
முரளி கையை கொடுங்கள். இங்கே கமல் ரசிகர்கள் இல்லாமல் இல்லை. ஜோ போன்றவர்கள் தீவிர ரசிகர்கள். நானும் கமலின் ரசிகனே.
இங்கே நான் சொல்ல வந்தது ஒன்றுதான். இனி கமலிடம் அன்பே சிவத்தை போன்ற படங்களை எதிர் பார்க்க முடியாது. Peer pressure நிச்சயம் அவருக்கு இருக்கும். ரஜினி நூறு கோடியில் எந்திரனில் சிக்ஸர் அடிக்கும் பொழுது கமலிடம் சிறு முதலீட்டு படங்கள் எப்படி எதிர் பார்க்க முடியும்? கமலும் கோடிகள் விளையாட்டே விளையாட முயற்சி செய்கிறார். செய்வார்.
மற்றொன்றை கவனித்தீர்களா? அவருக்கு ஜால்ரா போடும் இயக்குனர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொள்கிறார். சேரன், மிஷ்கின், அமீர், செல்வா, பாலா, சசிகுமார் அனைவரும் கமலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு பேட்டிகளை கொடுக்கிறார்கள். ஆனால் அவரை வைத்து படங்கள் எடுக்க துணிவதில்லை.
நசுரிதீன்ஷாவிடம் உன்னை போல் ஒருவனில் கமல் வெட்னெஸ்டே படத்தில் அவர் நடித்த பாத்திரத்தை செய்கிறார் என்று கூறி கருத்து கேட்டதற்கு அவர் "என்னுடையது மட்டுமா? அவர் நினைத்தால் படத்தின் அத்தனை பாத்திரங்களையும் அவரே செய்து விட முடியுமே." என்று ஸர்காஸத்துடன் பதில் அளித்தார். கமலின் கேலிபருக்கு இதெல்லாம் அசிங்கம் இல்லையா?
அமிதாபை பாருங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று தேசிய விருதுகளை குவிக்கிறார். நம்மவரை நினைத்தால் பெருமூச்சு தான் வருகிறது. பாவம் அடுத்து எந்த தயாரிப்பாளர் தலையில் துண்டோ?
\\பார்த்தாலே பரவசம் படத்தை பிறழ் மனநிலை உள்ளவர்களால் மட்டுமே இரண்டாவது முறை பார்க்க முடியும். \\
விவிசி:))
நன்றி சத்யபிரியன்
கமலின் ரசிகனாக உங்கள் கருத்துடன் 100% ஒத்துப் போகிறேன்
நன்றி வித்யா
விருமாண்டி கூட ஒக்கே. தசவதாரம் பெரிய லெட் டவுன். க்ளாசிக் படம் கூட வேண்டாம் மன்மதன் அம்பு மாதிரி படம் நடிக்காமல் இருந்தால் கூட போதும். பஞ்சதந்திரம் மாதிரி ஒரு படம் கொடுத்தால் கூட மகிழ்ச்சியே. சலங்கை ஒலி, மகாநதி குணா, நாயகன் படங்களை பார்க்கும் பொழுது ஏனோ தெரியலை இப்ப இருக்கிற கமல் மேல் கோவம் கோவமாக வருது. அப்புறம் பாலாவை பற்றிய கருத்தில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. ஒரு முறை சறுக்கிவிட்டார் அவ்வளவு தான். சமரசம் செய்யாமல், நினைத்ததை மட்டும் எடுக்கும் தைரியம் பாலாவிடம் மட்டுமே உள்ளது.
விருமாண்டி கூட ஒக்கே. தசவதாரம் பெரிய லெட் டவுன். க்ளாசிக் படம் கூட வேண்டாம் மன்மதன் அம்பு மாதிரி படம் நடிக்காமல் இருந்தால் கூட போதும். பஞ்சதந்திரம் மாதிரி ஒரு படம் கொடுத்தால் கூட மகிழ்ச்சியே. சலங்கை ஒலி, மகாநதி குணா, நாயகன் படங்களை பார்க்கும் பொழுது ஏனோ தெரியலை இப்ப இருக்கிற கமல் மேல் கோவம் கோவமாக வருது. அப்புறம் பாலாவை பற்றிய கருத்தில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. ஒரு முறை சறுக்கிவிட்டார் அவ்வளவு தான். சமரசம் செய்யாமல், நினைத்ததை மட்டும் எடுக்கும் தைரியம் பாலாவிடம் மட்டுமே உள்ளது.
நன்றி தமிழ்டுமில்
எனக்கு மிகப் பிடித்த நடிகர் கமல் தான். ரொம்ப அருமையா சொல்லியிருக்கிங்க.
அருமையான பதிவு பாஸ்.
கடைசியா ஒரு கமல் படம் பார்த்த திருப்தி தந்தது, விருமாண்டி.மும்பை எக்ஸ்பிரஸ் கூட் ஓகே. மத்ததெல்லாம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... எப்படிப்பட்ட படம் குடுக்க வேண்டிய ஆள்.ஜால்ரா அடிக்கறவங்கள மட்டுமே கூட வெச்சிருக்கறாரு போல.டிவி நிகழ்ச்சில வாலி மாறி ஆட்கள் அடிக்கும் ஜால்ராவை பார்த்தாலே காண்டாவுது.தனியா இவங்கல்லாம் நல்லதா சொல்ல போறாங்க.
இருந்தாலும் விஸ்வரூபம் மேலே ரொம்ப எதிர்பார்ப்பு வெச்சிருக்கிறேன். கமல் இயக்கம் மேல இன்னும் நம்பிக்கை இருக்கு. வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் படங்களை அவரும் கவனிச்சுட்டு இருப்பாரு. கண்டிப்பா நல்ல படமா இருக்கும்.
நன்றி ஜோசப் பால்ராஜ்
நன்றி தீபக். விஸ்வரூபம் நல்ல அனுபவத்தைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது
Post a Comment