December 20, 2011

தம்பையா

ஞாயிறு காலையில் பேப்பரைப் புரட்டிக் கொண்டே குடிக்கும் இரண்டு டம்ளர் டீ தான் அடுத்த ஆறு நாட்களுக்கான பெட்ரோல் எனக்கு. இன்றும் காலை எழுந்து பார்த்தபோது மனைவியும் குழந்தைகளும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சென்னையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடிய களைப்பு. எழுப்ப மனமில்லாமல் நானே தயாரிக்கத் தொடங்கினேன். சென்னைக்கு பிழைக்க வருபவன் பிரம்மச்சாரியாய் வந்து பல முன் தயாரிப்புகளுக்கு பின்னரே திருமணம் செய்தால்தான் இந்த ஊருக்கு ஈடு கொடுக்க முடியும். குறைந்தபட்சம் குழந்தைகளாவது சென்னையில் தான் பிறக்க வேண்டும். சிறு நகர/கிராம சூழலில் வாழப் பழகிய நாற்றுகளை பிடுங்கி வந்து சென்னையில் நட்டுப் பராமரிப்பது சிரமமே.

மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் யாரும் எழ எத்தனிக்கவில்லை. ஆறு மாதமாய் துடைக்காமல் இருந்த பைக் ஞாபகம் வர, நைந்து போயிருந்த கைலியில் ஏ4 அளவுக்கு துணியைக் கிழித்துக் கொண்டு கீழிறங்கினேன். வீட்டின் உரிமையாளர் பகுதியில் இருந்து எப்போதும் கேட்கும் இசையருவி கேட்கவில்லை. பதிலாய் சன்னமான குரலில் புதிய தலைமுறையினர் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வை அகில உலகுக்கும் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் மகன் என்றும் இல்லா அதிசயமாய் வேட்டியும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு செல்லில் பேசியபடியே நடந்து கொண்டிருந்தான்.

இப்போதுதான் கவனிக்கிறேன். உரிமையாளர் உயிரை விட்டிருந்தார். துணியை பெட்ரோல் டேங்க் பையில் சொருகிவிட்டு, செல்லில் இருந்து காதை விடுவித்திருந்தவனிடம் போய் சன்னமான குரலில் எப்போ? என்றேன்.

”ராத்திரி 10 மணிக்கு டிவி பார்த்துக்கிட்டுருக்கும் போது நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்குன்னார். கால் டாக்ஸி கூப்புடுறதுக்குள்ள உயிர் போயிடுச்சு” என்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். அவர் குடும்பத்து ஆட்களைத் தவிர யாரும் இல்லை. என் முகக் குறிப்பை கவனித்தவன், சொந்தக் காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லிட்டேன். மயானத்துக்கு தம்பி போயிருக்கிறான். 11 மணிக்கு எடுக்கப் போறோம். எல்லாரும் பத்து பத்தரைக்குள்ள வந்துடுவாங்க என்றான்.

அடப்பாவி பத்து மணிக்கு நடந்திருக்கு. வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு கூட சொல்லலை. சொந்தத்துக்கு கூட காலையில தான் சொல்லி இருப்பான் போல. சொல்லாத இடத்துல நமக்கு என்ன வேலை என அப்படியே மெதுவாக நகர்ந்து தெரு முனை டீக்கடையை நோக்கிச் சென்றேன்.

மாஸ்டர் டீ கிளாஸில் அரை கொள்ளளவுக்கும் குறைவாக ஊற்றிக் கொண்டிருந்தார். அடப்பாவி, இதைக் குடிச்சா நாக்கு கூட நனையாதேடா என்று நினைக்கும் போது மின்னலாக தம்பையாவின் நினைவு வந்தது.

வெண்கலச் செம்பு நிறைய சின்னம்மாவிடம் காப்பி வாங்கிக் குடித்துவிட்டு தம்பையா சொன்னதுதான் இது.

தம்பையா ஞாபகம் வந்ததைத் தொடர்ந்து ஊரும், ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சம்பிரதாயங்களும் என் மனதை ஆக்ரமித்தன.

முதலில் அந்த வீட்டுப் பெண்டிரிடம் இருந்து கேவலும், பின் விசும்பலும் கிளம்பும். அக்கம் பக்கத்துக்காரர்கள் சம்மனில்லாமல் ஆஜராவார்கள். கால் கட்டைவிரலை சேர்த்துக்கட்டு, மண்ணெண்ணெய் வாய்ல ஊத்து, சாணி, நெல்லு வச்சு விளக்குப் பொருத்து என தடாலடியாய் வேலை நடக்கும்.

பக்கத்து வீடுகளில் இருந்து மர பெஞ்ச், சேர் வகையறாக்கள் அணிவகுக்கும். வந்தவர்கள் அவற்றில் உட்காந்து கொண்டு வியூகங்களை வகுத்து கொண்டு இருப்பார்கள். வாடிப்பட்டு தப்பு செட்டுக்கு ஒரு ஆள், சங்குக்கு ஒரு ஆள், தேர் கட்ட மூங்கிலுக்கு ஒரு ஆள், தந்தி ஆபிசுக்கு ஒரு படிச்ச பையன் என திசைக்கொருவராக அம்புகளைச் செலுத்திக் கொண்டு இருப்பார்கள். இதற்கிடையே காப்பி ஒரு ரவுண்டு வந்திருக்கும். இந்த அம்புகளுக்கு முன்னால் ஒரு பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டிருக்கும். அதுதான் தம்பையா. அவனுக்குத்தான் அந்த ஊரோடு தொடர்புடைய அனைவரின் உறவுக்காரர்களும் அவர்களின் தற்போதைய வசிப்பிடங்களும் அத்துப்படி. செல் வராத காலத்தில், என்னைக்குச் செத்தாலும் தம்பையா இல்லாத நாளிலே சாகக்கூடாது என்று கூட பேசிக் கொள்வார்கள். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் என்றால் நான்கு மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து விடுவான்.

தந்தை சிறு வயதில் இறந்த காரணத்தினால் பொருளாதாரத்தில் வலுவிலந்த அவன் குடும்பத்தை அவனது காக்கா வலிப்பு நோயும் தன் பங்குக்கு சோதித்தது. 10 வயதில் எழவு சொல்ல ஆரம்பித்தவன் அம்பானி செல் வந்த போது ஆயிரத்தை தொட்டிருந்தான். சிறு வயதில் அவன் தான் எங்களுக்கு கிசு கிசுக்கள் சப்ளை செய்தவன். கோடி வீட்டு குத்தாலம்மா இறந்த செய்தியை சொன்ன உடன் அவள் மருமகள் 100 ரூபாய் சுருக்குப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் என்ற செய்தியின் பின்னர்தான் நான் மன்னர்கள் வாரிசு பிறந்த தகவலைச் சொன்ன தாதிக்கு முத்து மாலை பரிசளிப்பார்கள் என்பதையே நம்பத் தொடங்கினேன்.

சில பெண்கள் இறந்த போது மௌனமாய் அழுத சம்பந்தமில்லாத ஆண்கள், சில முதல் மரியாதைகள் என எங்கள் பதின்மத்தை தம்பையா சுவராசியப் படுத்தியிருந்தான்.

கடந்த ஆறேழு வருடங்களில் பலரும் பிழைப்புக்காக சென்னை, கோவை என புலம் பெயர்ந்திருந்தனர். ஊரில் யாராவது இறந்தால் தம்பையாதான் வழியனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறான்.

சென்ற ஆண்டு ஊர் திருவிழாவிற்கு சென்றிருந்த போது, பெரியப்பா, பாட்டி காரியத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்திருந்த தன் மச்சினனிடம் சொன்னதும் உடன் ஞாபகம் வந்தது.

”நல்ல காரியத்துக்கு தான் வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்க, கெட்ட காரியம்னா கேட்ட உடனே கெளம்பி வந்துடணும், இல்லைன்னா உன் வீட்டுக் காரியத்தை நீயே செய்யுற மாதிரி ஆயிடும்”

ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். செல்லில் இருந்து மனைவியை அழைத்து விஷயத்தைத் சொல்லி உடனே கீழே வா என்றேன். கைலியை மடித்து கட்டிக் கொண்டு அவர்கள் பகுதிக்குள் நுழைந்து நான்கு பிளாஸ்டிக் சேரை வெளியில் எடுத்துப் போட்டு சுவாதீனமாக உட்கார்ந்து கொண்டேன்.

17 comments:

Balakumar Vijayaraman said...

யதார்த்தம்.

நாடோடி இலக்கியன் said...

இதே போன்று எனக்கும் ஒரு அனுபவம் உண்டு.

இந்த பதிவின் செய்தியைத் தாண்டி உங்கள் எழுத்து நடை அருமை.

ஹுஸைனம்மா said...

நிஜமா இல்லை கதையா? எதுவானாலும் மனதைத் தைக்கிறது.

//மண்ணெண்ணெய் வாய்ல ஊத்து//
இது ஏன்? புதிதாகக் கேள்விப்படுகிறேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹாய் முரளி! எப்படி இருக்கீங்க.

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு அருமையான கதையுடன் உங்களை சந்திக்கிறேன். கதை, ஒரு பீலிங்கோடு ரொம்ப யதார்த்தமா இருக்கு..

//மண்ணெண்ணெய் வாய்ல ஊத்து//

இதென்ன.. புதுசா கேள்விபடுகிறேன். எதற்காக அப்படி செய்வார்கள்?..

Vidhya Chandrasekaran said...

அருமையான ஃப்ளோ. கலக்குங்க.

கோபிநாத் said...

ஸ்டார் வாரத்தில் மட்டும் தானா இப்படி எல்லாம் ! ;-))

kanagu said...

தினமும் ஒரு பதிவு-னு அசத்துறீங்க அண்ணா :) எப்படி இருக்கீங்க???

அட்டகாசமான கதை. :) பிடித்திருந்தது :)

முரளிகண்ணன் said...

நன்றி பாலகுமார்

நன்றி நாடோடி இலக்கியன்

CS. Mohan Kumar said...

நல்லாருக்கு முரளி. Very effective !

முரளிகண்ணன் said...

நன்றி ஹுசைனம்மா

நன்றி ஸ்டார்ஜான்

மண்னெண்ணௌ தொடர்பாக

இறந்தவர்களின் உறவினர்கள் தொலை தூரத்தில் இருந்து வரவேண்டும், சடலம் எடுக்க ஒரு நாள் ஆகும் என்றால்,

இறந்தவர்களின் வாயில் புனலை வைத்து மண்ணெண்ணெய் ஊற்றுவார்கள். அதன் மூலம் வயிற்றுப் பகுதியில் உருவாகும் கிருமிகள் குறையும், சடலம் வாடை அடிக்காது என்பதால்.

CS. Mohan Kumar said...

//kanagu said...
தினமும் ஒரு பதிவு-னு அசத்துறீங்க அண்ணா :) //



ஸ்டார் வாரமுள்ள. அதான். இந்த வாரம் தாண்டியும் தொடர்ந்து வாரம் ஓரிரு பதிவாவது எழுதணும் முரளி !

முரளிகண்ணன் said...

நன்றி வித்யா

நன்றி கோபிநாத்


நன்றி கனகு

உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி

முரளிகண்ணன் said...

நன்றி மோகன்குமார்

Cable சங்கர் said...

முரளி சொன்னேனில்லை. கண்டெண்ட் ஆல்வேஸ் வின்..:)

முரளிகண்ணன் said...

நன்றி கேபிள்ஜி.

Indian said...

உடான்ஸ்தான் மேட்டரா? வாழ்த்துகள். கதை அருமை.

முரளிகண்ணன் said...

Thanks Indian