திடீரென பூபாலனுக்கு
விழிப்பு வந்தது. எழ முயற்சித்தான். முடியவில்லை. பத்துபேர் கைகளையும், கால்களையும்
பிடித்து அமுக்குவது போல் ஒரு உணர்ச்சி. பிரயத்தனப்பட்டு எழுந்தரித்துப் பார்த்தான்.
மருத்துமனையில் இருப்பது புரிந்தது. அருகில் யாருமில்லை. குரல் எழுப்ப யத்தனித்தும்
பலவீனமானமாகவே எழும்பியது. அப்படியே விழித்தவாறே படுத்திருந்தான். கை,காலெல்லாம் தளர்ந்து
தனக்கு நூறு வயது கூடியிருந்ததைப் போல் உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து வந்த செவிலிப்பெண்
அவன் விழித்திருந்தைக் கண்டு, வியந்து இண்டர்காமில் மருத்துவருக்கு தகவல் சொன்னாள்.
சிறிது நேரம் கழித்து
சிறு மருத்துவர்கள் குழு ஒன்று வந்தது. பூபாலனைப் பரிசோதித்த பின்னர், தங்களுக்குள்
விவாதித்துக் கொண்டார்கள். சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு, உளவியல் ஆலோசனை மருத்துவருக்கு
தகவல் தெரிவித்தார்கள்.
பூபாலன் உளவியல்
சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான். அங்குதான் அவனுக்குத் தெரியவந்தது, தான் ஒரு கோமா நோயாளியாக
40 வருடங்கள் மருத்துவமனையில் இருந்து வந்தது.
ஒரு விபத்தில் சுயநினைவை இழந்திருந்த பூபாலனுக்கு அப்போது 25 வயது. திருமணம் ஆகியிருக்கவில்லை. அவனது
பெற்றோர்களும் 25 வருடம் அவனை கோமா நிலையிலேயே பராமரித்து வந்திருக்கிறார்கள். அவர்கள்
இறப்புக்குப் பின் அவனது கேர் டேக்கராக இருந்து வருபவன் அவன் நண்பன் சிவானந்தன். மாதமொருமுறை
அவனை வந்து பார்த்து தேவையானவற்றை செய்து வருபவன். அவன் தற்போது வேறு ஊரில் வசித்து
வருவதாகவும், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். பின் அவனது பல கேள்விகள்,சந்தேகங்களுக்கு
பதிலளித்து, படிப்படியாக சாந்தப்படுத்தினார்.
அவனை கவனித்து
வந்த மருத்துவர், படிப்படியாக பேச, நடக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறினார். ஒரு
வாரம் கழித்து மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
இதற்கிடையில் சிவானந்தனும் வந்து சேர்ந்தான்.
அவனின் முதிய தோற்றத்தைக் கண்டதும் தான் பூபாலனுக்கு சமாதானம் ஆனது. ஒரு வாரம் கழித்து
பூபாலனை தன் வீட்டிற்கு அழைத்துப் போவதாகவும், ஓரிரு மாதங்களில் பூபாலனின் பழைய வீட்டிற்கு
சென்று விடலாம் என்றும் கூறினான்.
மாலை நேரங்களில்
மருத்துவமனை வளாகத்தை பூபாலன் சுற்றி வரும்போது, அது அரசு பொது மருத்துவமனை என்று அறியவந்தது.
மிக குறைவான நோயாளிகளே இருப்பதும், அவர்களும் விபத்து, வயதானதால் வரும் பிரச்சினைகள்
என்றே இருப்பதும் தெரியவந்தது. பிரசவத்துக்கு வந்தவர்களையும் பார்க்க நேர்ந்தது. கேண்டீன் என்ற ஒன்றையும் பார்க்க முடியவில்லை. பூபாலன்
நினைவு வந்த பின் மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும் சத்து மாவு உருண்டையும், நீரும்
மட்டுமே பணியாளர்கள் மூலம் கிடைத்தது.
ஒரு
வாரம் கழித்து, மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், பேருந்தில் ஏறி சென்னையின் தெருக்களை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்த பூபாலனுக்கு இரண்டு விஷயங்கள் உறைத்தது. ஒன்று,
தான் விபத்தில் அடிபட்ட 2013க்கும் இப்போதைய 2053க்கும் தொழில்நுட்பத்தில் பெரிய வேறுபாடு
தெரியவில்லை. இன்னொன்று சென்னை நகரத்தின் வீதிகளில் ஒரு உணவகமோ ஏன் ஒரு டீக்கடை கூட கண்ணுக்கு தென்படவில்லை.
சிவானந்தனின்
ஊருக்கு வந்த பின்னரும் அவனால் வித்தியாசம்
உணரமுடிந்தது.அங்கும் உணவகங்களோ, டீக்கடைகளோ தென்படவில்லை. பத்தாண்டுகளில் எப்படி தொழில்நுட்பம் வளர்ந்தது எனப்
பார்த்தவன் பூபாலன். ஆனால் இந்த 40 ஆண்டுகள் அப்படியே தொழில்நுட்பச் சக்கரம் இயங்காமல்
போய்விட்டது போல் உணர்ந்தான். மதிய உணவு நேரம் வந்தது. தட்டில் சில சத்து மாவு உருண்டைகளை
எடுத்துக் கொண்டு வந்தார், சிவானந்தனின் மனைவி. என்னடா, சிவா, இன்னும் பத்தியம் இருக்கணும்னு
சொன்னாரா? டாக்டர்?, என வினவினான் பூபாலன்.
மௌனமாக
இருந்தான் சிவானந்தன். பின் அவர்கள் தங்கள் இளமைக்காலம், நண்பர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
மாலை ஆனது, டீ கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தான் பூபாலன். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும்
தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துதான், அந்த வீட்டில் சமையலறையே இல்லை என அவனுக்கு
உறைத்தது.
என்னடா
சிவா இது? என்று வினவினான் பூபாலன்.
”உனக்கு ஆக்ஸிடெண்ட்
ஆன சில மாசத்திலேயே ஒரு விசித்திர காய்ச்சல் திடீர்னுன்னு பரவிச்சு. எந்த மருந்துக்கும்
கட்டுப்படல. ரெண்டு மாசம் மூணு மாசம் கூட ஒரே
டெம்பரேச்சர்ல அப்படியே இருந்துச்சு. அதுக்கு விஞ்ஞானிகள் ஒரு மருந்து கண்டுபிடிச்சாங்க.
அந்த இஞ்சக்ஷன் போட்ட உடனே படிப்படியா சரியாயிடுச்சு. அப்புறம் திரும்ப இன்னொரு குரூப்புக்கு
அந்த காய்ச்சல் வந்தது. திரும்பவும் அதே இஞ்சக்ஷன். சரியாயிடுச்சு. அப்புறன் தெரிஞ்சது,
ஒவ்வொரு பிளட் குரூப்புக்கா அந்தக் காய்ச்சல் வருதுன்னு. கிட்டத்தட்ட உலகத்துல இருக்குற
எல்லா மக்களுக்கும் அந்தக் காய்ச்சல் வந்து இஞ்சக்ஷன் போட்டுக்கிட்டாங்க. அதுக்கு
மிஸ்டரி பீவர்ன்னு
பேரும் வச்சாங்க. காய்ச்சல் வராதவங்க, முன் னெச்சரிக்கையா அந்த இஞ்சக்ஷன் போட்ட பின்னாடி
காய்ச்சல் வரல்லை. அதனால அத பரிசோதிச்ச உலக சுகாதார நிறுவனம், அந்த இஞ்சக்ஷன தடுப்பு
மருந்தா அறிவிச்சு, பிறந்த குழந்தைககளுக்கும் போடச் சொல்லி பரிந்துரை பண்ணுச்சு. பிறந்து
30 நாள்ல அந்த இஞ்சக்ஷன குழந்தைகளுக்கு உலகம் பூராம் போட ஆரம்பிச்சாங்க.
அப்புறம்
சில மாதங்கள்ல தான் தெரிய வந்தது, அந்தக் குழந்தைகளுக்கு டேஸ்டே தெரியல்லைன்னு. உப்பா
இருந்தாலும், சர்க்கரையா இருந்தாலும் எதையும் சாப்பிடுச்சுக. எந்த சாப்பாடையும் ஒதுக்கல.
ஒரு வருசம் கழிச்சு, லேஸ் வேணும், குர்குரே வேணும், நூடுல்ஸ்,சிக்கன், மட்டன், பிட்சா,பர்கர்
தான் சாப்பிடுவேன் அடம் பிடிச்சிக்கிட்டிருந்த பிள்ளைக கூட எதக் குடுத்தாலும் சாப்பிட
ஆரம்பிச்சிருச்சுங்க. உலகம் பூராம் இருந்தும் பேஸ்புக், டிவிட்டர்ல எல்லாம், என்னோட
குழந்தை மாறிட்டான். எதையும் சாப்பிடுறன்னு ஸ்டேட்டஸ் மெசேஜ்கள்.
கொஞ்சம்
கொஞ்சமா, ஜங்க் புட்டோட விற்பனை சரிய ஆரம்பிச்சுச்சு. எல்லோர் வீட்டிலேயும் பிள்ளைக
எந்த ருசியில குடுத்தாலும், ஒரே மாதிரிதானே சாப்பிடுறாங்கண்ணு சத்தான ஐயிட்டமா செஞ்சு
கொடுக்க ஆரம்பிச்சாங்க. தாங்களே அதையும் சாப்பிட ஆரம்பிச்சாங்க. சாக்லேட், பேக்கரி
ஐயிட்டம்,கே எஃப் சி, சைனீஸ், காண்டினென்டல் புட்னு எல்லாத்தோட மார்க்கட்டும் குறைய
ஆரம்பிச்சிருச்சு. பெரிய புட் செயினெல்லாம் லாபத்துல அடி வாங்குச்சு. பிள்ளைகளே ருசிச்சு
சாப்பிடலைன்னு மக்கள் தங்களுடைய ஹோட்டல் விசிட்டுகளையெல்லாம் கொறச்சிக்கிட்டாங்க.
பேச்சிலர்ஸ்,
ருசிய விட முடியாத சில குடும்பஸ்தர்கள் அப்புறம் ஆபிஸ் பார்ட்டிகள் போன்ற விழாக்கள்ல
பங்கெடுத்தவங்க தான் ருசியான சாப்பாடு சாப்பிட்டாங்க.
அதுக்கப்புறம்
சில வருஷத்துலேயே பெரியவங்களுக்கும் டேஸ்ட் பட் காலியாக ஆரம்பிச்சிச்சு. எத சாப்பிட்டாலும்
ஒரே மாதிரிதான் இருந்துச்சு. அறு சுவைங்கிறதெல்லாம் புத்தகத்துலயும் இண்டர்நெட்டுலயும்
மட்டும் பார்க்கிற வார்த்தையாச்சு. எதச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரிதானே இருக்குன்னு,
பெரிய ஹோட்டல்களுக்கு மக்கள் போகிறத நிறுத்த ஆரம்பிச்சாங்க. தினமும் மது குடிக்கிறவன்கூட,
சைட் டிஸ் டேஸ்ட் இல்லைன்னு, குடிக்கிறத குறைக்க ஆரம்பிச்சாங்க.
புட்
இண்டஸ்டிரியே ஸ்தம்பிச்சுப் போச்சு. அப்போதைய கவர்ன்மெண்ட் கொடுத்த விலையில்லா அரிசியை
வாங்கி மாட்டுக்கு போட்டவன் கூட அதைச் சமைச்சு சாப்பிட ஆரம்பிச்சான்.
அப்படியே
கொஞ்சம் கொஞ்சமா எல்லோரும் கிடைச்ச உணவ சாப்பிட ஆரம்பிச்சாங்க. தலப்பாகட்டி,சரவண பவன்,
அடையார் ஆனந்த பவன் அப்படிங்கிற பிராண்ட்டெல்லாம் காலாவதி ஆச்சு.
தடுப்பூசி
போட்டு வளர்ந்த ஜெனரேஷன் சிகரெட், மது பக்கமே போகலை. ஹோட்டல், டீக்கடைகள் இல்லாததால,
அது தொடர்பான தொழில்களும் நடக்கலை. அதனால அரசாங்கத்துக்கு வரியெல்லாம் குறைஞ்சிடுச்சு.
அரசாங்கமே மக்களுக்கான உணவை, சத்து மாவு மாதிரி
செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஒரே மாதிரி உருண்டை, வயசு கூட கூட எண்ணிக்கை கூடும்.
அப்புறம் 50 வயசுக்கு அப்புறம் எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வரும்.
வீட்டில
சமையல் அறை, தேவையே இல்லாம போயிடுச்சு. ஒவ்வொரு உணவுக்கும், ருசிக்கும், நம்ம கோபம்,
இச்சைகளை தூண்டுற சக்தி உண்டு. ஆனா இந்த மாவு உருண்டைய சாப்பிடுறவனுக்கு பெரிய இச்சைகள்
வர வாய்ப்பில்லாம போயிடுச்சு.பெரிசா
சாதிக்கணும்கிற வெறி, நிறைய சம்பாதிக்கணும்கிற வெறி எல்லாம் குறைஞ்சிடுச்சு. சாப்பாட்டுக்கு
பெரிய பிரச்சினை இல்லைன்ன உடனே அவன் அவன் தனக்கு பிடிச்சத மட்டும் செஞ்சான். சிலர்
சோம்பேறி ஆனான்.
அதனால
பெரிய கண்டுபிடிப்பு எல்லாம் அப்புறம் நடக்கவே இல்லை. ஒரே மாதிரி வாழ்க்கை ஓடிக்கிட்டி
இருக்கு.இதுக்கெல்லாம்
அந்த இஞ்சக்ஷன்தான் காரணம்னு, ஒரு குழு போராடி, பிறக்கிற குழந்தைகளுக்கு அதைப் போடக்கூடாதுன்னு
முயற்சி பண்ணாங்க. இஞ்சக்ஷன் போடாத குழந்தைகளுக்கு அந்த காய்ச்சல் வரவும், எல்லோரும்
பின் வாங்கிட்டாங்க.
என்று
சிவானந்தன் சொல்லி முடித்தான்.
தலை
சுற்றியது பூபாலனுக்கு. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்தான். அவனுடைய சுவை மொட்டுக்கள்
இரண்டு நாட்களாக தூண்டப்பட்டு இருந்து வந்தது. குறிப்பிட்ட ரத்த பிரிவிற்கான காய்ச்சல்
வந்தபோது, அவன் ஐ சி யூவில் இருந்திருக்கிறான். காய்ச்சல் தாக்கவில்லை. அந்த இஞ்சக்ஷனும்
அவனுக்கு போடப் படாமல் விட்டுப் போய் இருந்திருக்கிறது.
சில
நாட்களுக்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ருசியில்லா உருண்டை அவன் தொண்டையில்
இறங்கவில்லை. எங்காவது சாப்பாடு கிடைக்குமா? என அலைய ஆரம்பித்தான். சாப்பாடு கூட வேண்டாம்,
ஒரு டம்ளர் டீ குடித்தால் கூட போதும் என்றானது அவனுக்கு. டீ என்றால் அப்படி ஒரு பிரியம்
அவனுக்கு.
வீட்டில்
காலை பல் விளக்காமல் குடித்த டீ, டீக்கடையில் மசால் வடையை கடித்துக் கொண்டு, அடுத்தவன்
கையில் இருந்த தினத்தந்தியை எட்டிப்பார்த்துக் கொண்டே குடித்த டீ, ஸ்டடி ஹாலிடேஸ்களில்
மதியம் தூங்கி, மாலை எழுந்தரித்து, விட்டத பிடிக்கணும்டா என்று சபதம் எடுத்துக் கொண்டே
குடித்த டீ, எக்ஸாம் டைமில் பிளாஸ்கில் வாங்கி வைத்து குடித்த டீ, அலுவலகத்தில் மீட்டிங்குகளில்
போது, அலங்காரக் கோப்பைகளில் பரிமாறப்பட்ட டீ எல்லாம் அவன் மூளையில் உட்கார்ந்து கொண்டு
ஆட்டிப்படைத்தது.
சிவானந்தனிடம்
டீக்காக கெஞ்சினான். ”நான் டீயை பார்த்து 20 வருடத்துக்கு மேல் இருக்கும் அதைப் பயிரிடுவதையே
நிறுத்திட்டாங்க: என்றான். மாடெல்லாம் இப்போ ஜூல தான் இருக்கு. சிங்கம் புலி மாதிரி
என்றான். அவனின் அப்போதைய நண்பர்கள் அனைவரையும்
சிவானந்தன் மூலம் அறிந்து ஒரு டீக்காக பெரு முயற்சி எடுத்தான். கிடைக்கவேயில்லை.
பால்
அதிகம் சுரக்காத பெண்களின் கைக் குழந்தைகளுக்கு மட்டும், அரசாங்க பால் பண்ணையில் இருந்து
முதல் மூன்று மாதங்களுக்கு பால் வினியோகிக்கப் படுவதாக ஒரு நண்பன் மூலம் அறிந்தான்.
அதைத
தவிர வேறு எதுவும் கிடைக்காது, என்ற நிலையில் அந்த இஞ்சக்ஷனை தயாரிக்கும் கம்பெனியின்
உயர் அலுவலரை பெரும் முயற்சிக்குப் பின் சந்தித்தான்.
மர்மக்
காய்ச்சல் பரவியதும், அதை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டபோது, அந்த
மருந்தைக் கண்டுபிடித்ததாகவும், அதன் பின் விளைவுகள் அவர்களுக்கு அப்போது தெரியவில்லை
என்றும் அவன் அறிந்து கொண்டான். மேலும் அவர்களால், சுவை மொட்டுக்களை பாதிக்கும் குறிப்பிட்ட
என்சைமை தனியே பிரித்து எடுக்க முடியவில்லை என்றும், வேறு எந்த புது காம்போசிஷனலாலும்
அந்தக் காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை என்றும் அறிந்து கொண்டான்.
முன்னிலும்
தளர்ந்த நடையுடன் வெளியே வந்தவனுக்கு மூளையில் ஒரு மின்னல் அடித்தது. இந்த ஒரு இஞ்சக்சன்
நாட்டில் என்னவெல்லாம் நல்லவற்றை ஏற்படுத்தி உள்ளது என்று.
சமையல்
என்ற ஒன்றே இல்லாததால், பெண்கள் சம உரிமையுடன் நடமாடினார்கள். அலுவலகம் சென்று வந்து
சமைக்கத் தேவையில்லை. தேவையில்லாத உணவு வகைகளை உண்டு, மக்களுக்கு, குறிப்பாக
குழந்தைகளுக்கு நோய் வருவது குறைந்துள்ளது. சமுதாய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து கொண்டே
வந்திருக்கிறது. உணவுப் பழக்கத்தின் பெயரால் மக்களை பிரிப்பது நடக்கவில்லை. சொத்து
சேர்க்கும் ஆர்வம் குறைந்து சுற்றுச்சூழல் பிழைத்துள்ளது. நாடுகளுக்கிடையே சண்டை இல்லை.
இந்தக் காய்ச்சல் வராமல் இருந்திருந்தால் 2053 இப்படியா இருந்திருக்கும்?
மீண்டும்
அரசு மருத்துவமனைக்குச் சென்று, எனக்கு மிஸ்டரி பீவர்க்கான தடுப்பூசி ஒன்று போடுங்கள்
என்று கேட்டுக் கொண்டான் பூபாலன்.